- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- துனிநாள் அனைத்தும் தொலைத்துவிட்டேன் தூக்கம் தவிர்த்தேன் சுகம்பலிக்கும்
- கனிநாள் இதுவே என்றறிந்தேன் கருத்து மலர்ந்தேன் களிப்புற்றேன்
- தனிநா யகனே கனகசபைத் தலைவா ஞான சபாபதியே
- இனிநான் இறையும் கலக்கமுறேன் இளைக்க மாட்டேன் எனக்கருளே.
- அருளும் பொருளும் யான்பெறவே அடுத்த தருணம் இதுஎன்றே
- தெருளும் படிநின் அருள்உணர்த்தத் தெரிந்தேன் துன்பத் திகைப்பொழிந்தேன்
- மருளும் மனந்தான் என்னுடைய வசத்தே நின்று வயங்கியதால்
- இருளும் தொலைந்த தினிச்சிறிதும் இளைக்க மாட்டேன் எனக்கருளே.
- அருளே உணர்த்த அறிந்துகொண்டேன் அடுத்த தருணம் இதுஎன்றே
- இருளே தொலைந்த திடர்அனைத்தும் எனைவிட் டகன்றே ஒழிந்தனவால்
- தெருளே சிற்றம் பலத்தாடும் சிவமே எல்லாம் செய்யவல்ல
- பொருளே இனிநான் வீண்போது போக்க மாட்டேன் கண்டாயே.
- கண்டே களிக்கும் பின்பாட்டுக் காலை இதுஎன் றருள்உணர்த்தக்
- கொண்டே அறிந்து கொண்டேன்நல் குறிகள் பலவுங் கூடுகின்ற
- தொண்டே புரிவார்க் கருளும்அருட் சோதிக் கருணைப் பெருமனே
- உண்டேன் அமுதம் உண்கின்றேன் உண்பேன் துன்பை ஒழித்தேனே.
- ஒழித்தேன் அவலம் அச்சம்எலாம் ஓடத் துறந்தேன் உறுகண்எலாம்
- கழித்தேன் மரணக் களைப்பற்றேன் களித்தேன் பிறவிக் கடல்கடந்தேன்
- பழித்தேன் சிற்றம் பலம்என்னாப் பாட்டை மறந்தேன் பரம்பரத்தே
- விழித்தேன் கருத்தின் படிஎல்லாம் விளையா டுதற்கு விரைந்தேனே.
- விரைந்து விரைந்து படிகடந்தேன் மேற்பால் அமுதம் வியந்துண்டேன்
- கரைந்து கரைந்து மனம்உருகக் கண்ர் பெருகக் கருத்தலர்ந்தே
- வரைந்து ஞான மணம்பொங்க மணிமன் றரசைக் கண்டுகொண்டேன்
- திரைந்து நெகிழ்ந்த தோலுடம்பும் செழும்பொன் உடம்பாய்த் திகழ்ந்தேனே.
- தேனே கன்னல் செழும்பாகே என்ன மிகவும் தித்தித்தென்
- ஊனே புகுந்தென் உளத்தில்அமர்ந் துயிரில் கலந்த ஒருபொருளை
- வானே நிறைந்த பெருங்கருணை வாழ்வை மணிமன் றுடையானை
- நானே பாடிக் களிக்கின்றேன் நாட்டார் வாழ்த்த நானிலத்தே.
- நிலத்தே அடைந்த இடர்அனைத்தும் நிமிடத் தொழித்தே நிலைபெற்றேன்
- வலத்தே அழியா வரம்பெற்றேன் மணிமன் றேத்தும் வாழ்வடைந்தேன்
- குலத்தே சமயக் குழியிடத்தே விழுந்திவ் வுலகம் குமையாதே
- நலத்தே சுத்த சன்மார்க்கம் நாட்டா நின்றேன் நாட்டகத்தே.
- அகத்தே கறுத்துப் புறத்துவெளுத் திருந்த உலகர் அனைவரையும்
- சகத்தே திருத்திச் சன்மார்க்க சங்கத் தடைவித் திடஅவரும்
- இகத்தே பரத்தைப் பெற்றுமகிழ்ந் திடுதற் கென்றே எனைஇந்த
- உகத்தே இறைவன் வருவிக்க உற்றேன் அருளைப் பெற்றேனே.
- பெற்றேன் என்றும் இறவாமை பேதம் தவிர்ந்தே இறைவன்எனை
- உற்றே கலந்தான் நானவனை உற்றே கலந்தேன் ஒன்றானேம்
- எற்றே அடியேன் செய்ததவம் யாரே புரிந்தார் இன்னமுதம்
- துற்றே உலகீர் நீவிர்எலாம் வாழ்க வாழ்க துனிஅற்றே.