- அச்சை யடுக்குந் திருவொற்றி யவர்க்கோர் பிச்சை கொடுமென்றேன்
- விச்சை யடுக்கும் படிநம்பான் மேவினோர்க்கிவ் வகில நடைப்
- பிச்சை யெடுப்பே மலதுன்போற் பிச்சை கொடுப்பே மலவென்றே
- யிச்சை யெடுப்பா யுரைக்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- அசையா தமர்ந்தும் அண்டமெலாம் அசையப் புலியூர் அம்பலத்தே
- நசையா நடிக்கும் நாதர்ஒற்றி நாட்டார் இன்னும் நண்ணிலர்நான்
- இசையால் சென்றிங் கென்னைஅணை வீர்என் றுரைப்பேன் எனில்அதற்கும்
- இசையார் ஆகில் என்செய்கேன் என்னை மடவார் இகழாரோ.
- அச்சேஈ ததிசயம்ஈ ததிசயம்ஈ புகல்வேன்
- அரிமுதலோர் நெடுங்காலம் புரிமுதல்நீத் திருந்து
- நச்சோல மிடவும்அவர்க் கருளாமல் மருளால்
- நாள்கழித்துக் கோள்கொழிக்கும் நடைநாயிற் கடையேன்
- எச்சோடும் இழிவினுக்கொள் றில்லேன்நான் பொல்லேன்
- எனைக்கருதி யானிருக்கும் இடத்திலெழுந் தருளித்
- தர்சோதி வணப்பொருள்ஒன் றெனக்களித்துக் களித்தான்
- தனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே.
- அசையும் பரிசாந் தத்துவமன் றவத்தைஅகன்ற அறிவேநீ
- ஆகும் அதனை எமதருளால் அலவாம் என்றே உலவாமல்
- இசையும் விகற்ப நிலையைஒழித் திருந்த படியே இருந்தறிகாண்
- என்றென் உணர்வைத் தெளித்தநினக் கென்னே கைம்மா றறியேனே
- நசையும் வெறுப்பும் தவிர்ந்தவர்பால் நண்ணும் துணையே நன்னெறியே
- நான்தான் என்னல் அறத்திகழ்ந்து நாளும் ஓங்கு நடுநிலையே
- திசையும் புவியும் புகழோத்தூர்ச் சீர்கொள் மதுரச் செழும்பாகே
- தேவர் புகழுஞ் சிவஞானத் தேவே ஞான சிகாமணியே.
- அசைவில வசைவுள வாருயிர்த் திரள்பல
- அசலற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- அச்சாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
- ஆறந்த நிலைகளெலாம் அறிந்தடைதல் வேண்டும்
- எச்சார்பும் ஆகிஉயிர்க் கிதம்புரிதல் வேண்டும்
- எனைஅடுத்தார் தமக்கெல்லாம் இன்புதரல் வேண்டும்
- இச்சாதி சமயவிகற் பங்களெலாம் தவிர்த்தே
- எவ்வுலகும் சன்மார்க்கப் பொதுவடைதல் வேண்டும்
- உச்சாதி அந்தமிலாத் திருவடிவில் யானும்
- உடையாயும் கலந்தோங்கும் ஒருமையும்வேண் டுவனே.
- அச்சம்நீக் கியஎன் ஆரியன் என்கோ
- அம்பலத் தெம்பிரான் என்கோ
- நிச்சலும் எனக்கே கிடைத்தவாழ் வென்கோ
- நீடும்என் நேயனே என்கோ
- பிச்சனேற் களித்த பிச்சனே என்கோ
- பெரியரிற் பெரியனே என்கோ
- இச்சகத் தழியாப் பெருநலம் அழித்திங்
- கென்னைஆண் டருளிய நினையே.
- அச்சமெலாம் தவிர்த்தருளி இச்சைஎலாம் அளித்த
- அம்மேஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே
- துச்சவுல காசாரத் துடுக்கனைத்தும் தவிர்த்தே
- சுத்தநெறி வழங்குவித்த சித்தசிகா மணியே
- உச்சநிலை நடுவிளங்கும் ஒருதலைமைப் பதியே
- உலகமெலாம் எடுத்திடினும் உலவாத நிதியே
- இச்சமயம் எழுந்தருளி இறவாத வரமும்
- எல்லாஞ்செய் வல்லசித்தின் இயற்கையுந்தந் தனையே.
- அச்சந் தவிர்த்தே அருளிற் செலுத்துகின்ற
- விச்சை அரசே விளங்கிடுக - நச்சரவம்
- ஆதிக் கொடியஉயிர் அத்தனையும் போய்ஒழிக
- நீதிக் கொடிவிளங்க நீண்டு.
- அச்சோ என்என்று புகல்வேன்என் ஆண்டவன் அம்பலத்தான்
- எச்சோ தனையும் இயற்றாதென் னுட்கலந் தின்னருளாம்
- மெய்ச்சோதி ஈந்தெனை மேனிலைக் கேற்றி விரைந்துடம்பை
- இச்சோதி ஆக்கிஅழியா நலந்தந்த விச்சையையே.
- அச்சையும் உடம்பையும் அறிவகை அறியீர்
- அம்மையும் அப்பனும் ஆர்எனத் தெரியீர்
- பச்சையும் செம்மையும் கருமையும் கூடிப்
- பலித்தநும் வாழ்க்கையில் பண்பொன்றும் இல்லீர்
- பிச்சையிட் டுண்ணவும் பின்படு கின்றீர்
- பின்படு தீமையின் முன்படு கின்றீர்
- இச்சையில் கண்மூடி எச்சகம் கண்டீர்
- எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே.
- அச்சம் தீர்த்திங் கென்னை ஆட்கொண் டருளும் அமுத னே
- அடியேன் பிழைகள் அனைத்தும் பொறுத்துள் அமர்ந்த அமுத னே
- இச்சை யாவும் முடித்துக் கொடுத்துள் இலங்கும் குரவ னே
- என்றும் இறவாக் கல்வி அடியேற் கீய்ந்த குரவ னே.
- எனக்கும் உனக்கும்
- அச்சம் தவிர்த்தென்னை ஆட்கொண் டருளிய
- அந்தண ரேஇங்கு வாரீர்
- அம்பலத் தையரே வாரீர். வாரீர்
- அச்சுதர் நான்முகர் உச்சியில் மெச்சும்
- அடிக்கம லத்தீரே வாரீர்
- நடிக்கவல் லீர்இங்கு வாரீர். வாரீர்
- அச்சம் தவிர்த்தமெய் ஜோதி - என்னை
- ஆட்கொண் டருளிய அம்பல ஜோதி
- இச்சை எலாம்தந்த ஜோதி - உயிர்க்
- கிங்குமங் கென்னாமல் எங்குமாம் ஜோதி. சிவசிவ
- அச்சம் தவிர்த்தான்என்று ஊதூது சங்கே
- அம்பல வாணன்என்று ஊதூது சங்கே
- இச்சை அளித்தான்என்று ஊதூது சங்கே
- இன்பம் கொடுத்தான்என்று ஊதூது சங்கே.