- அந்த மதிமுகமென் றாடுகின்றாய் ஏழ்துளைகள்
- எந்தமதிக் குண்டதனை எண்ணிலையே - நந்தெனவே
- அந்நீர்க் குரும்பை அவையென்றாய் மேலெழும்பும்
- செந்நீர்ப் புடைப்பென்பார் தேர்ந்திலையே - அந்நீரார்
- அந்தரத்தில் நின்றாய்நீ அந்தோ நினைவிடமண்
- அந்தரத்தில் நின்ற தறிந்திலையே - தந்திரத்தில்
- அந்நாள் வருமுன்னர் ஆதி அருளடையும்
- நன்னாள் அடைதற்கு நாடுதுங்காண் - என்னாநின்
- அந்தரமிங் கறிவோமற் றதனில் அண்டம்
- அடுக்கடுக்காய் அமைந்தஉள வறிவோம் ஆங்கே
- உந்துறும்பல் பிண்டநிலை அறிவோஞ் சீவன்
- உற்றநிலை அறிவோமற் றனைத்து நாட்டும்
- எந்தைநின தருள்விளையாட் டந்தோ அந்தோ
- எள்ளளவும் அறிந்திலோம் என்னே என்று
- முந்தனந்த மறைகளெலாம் வழுத்த நின்ற
- முழுமுதலே அன்பர்குறை முடிக்கும் தேவே.
- அந்நாணை யாதுநஞ் சேற்றயன் மால்மனை யாதியர்தம்
- பொன்னாணைக் காத்த அருட்கட லேபிறர் புன்மனைபோய்
- இந்நாணை யாவகை என்னாணைக் காத்தருள் ஏழைக்குநின்
- தன்னாணை ஐயநின் தாளாணை வேறு சரணில்லையே.
- அந்தோ துயரில் சுழன்றாடும் ஏழை அவலநெஞ்சம்
- சிந்தோத நீரில் சுழியோ இளையவர் செங்கைதொட்ட
- பந்தோ சிறுவர்தம் பம்பர மோகொட்டும் பஞ்சுகொலோ
- வந்தோ டுழலும் துரும்போஎன் சொல்வதெம் மாமணியே.
- அந்தரங்க சேவைசெய்ய வெண்ணிலா வே - யெங்கள்
- ஐயர்வரு வாரோசொல்லாய் வெண்ணிலா வே.
- அந்தரத்தில் ஆடுகின்றார் வெண்ணிலா வே - அவர்
- ஆடும்வகை எப்படியோ வெண்ணிலா வே.
- அந்தார் அணியும் செஞ்சடையார் அடையார் புரமூன் றவைஅனலின்
- உந்தா நின்ற வெண்ணகையார் ஒற்றித் தியாகர் பவனிஇங்கு
- வந்தார் என்றார் அந்தோநான் மகிழ்ந்து காண வருமுன்னம்
- மந்தா கினிபோல் மனம்என்னை வஞ்சித் தவர்முன் சென்றதுவே.
- அந்தோஈ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன்
- அறிவறியாச் சிறியேனை அறிவறியச் செய்தே
- இந்தோங்கு சடைமணிநின் அடிமுடியுங் காட்டி
- இதுகாட்டி அதுகாட்டி என்நிலையுங் காட்டிச்
- சந்தோட சித்தர்கள்தந் தனிச்சூதுங் காட்டி
- சாகாத நிலைகாட்டிச் சகசநிலை காட்டி
- வந்தோடு184 நிகர்மனம்போய்க் கரைந்த இடங் காட்டி
- மகிழ்வித்தாய் நின்அருளின் வண்மைஎவர்க் குளதே.
- அந்தேஈ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன்
- அறிவுடையார் ஐம்புலனும் செறிவுடையார் ஆகி
- வந்தோல மிடவும்அவர்க் கருளாமல் மருளால்
- மனஞ்சென்ற வழியெல்லாந் தினஞ்சென்ற மதியேன்
- எந்தேஎன் றுலகியம்ப விழிவழியே உழல்வேன்
- எனைக்கருதி எளியேன்நான் இருக்குமிடத் தடைந்து
- சந்தோட முறஎனக்கும் தன்வணம்ஒன் றளித்தான்
- தனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே.
- அந்தமோ டாதி இல்லதோர் பொதுவில் அரும்பெருஞ் சோதியே அடியேன்
- சொந்தமோ அறியேன் பகலிர வெல்லாம் தூக்கமே கண்டனன் தூக்கம்
- வந்தபோ தெல்லாம் பயத்தொடு படுத்தேன் மற்றுநான் எழுந்தபோதெல்லாம்
- தொந்தமாம் பயத்தால் சிவசிவ தூக்கம் தொலைவதெக் காலம்என் றெழுந்தேன்.
- அந்நாளில் அடிச்சிறியேன் அம்பலவா யிலிலே
- அருளைநினைந் தொருபுறத்தே அயர்ந்தழுது நின்றேன்
- முந்நாளில் யான்புரிந்த பெருந்தவத்தால் எனக்கு
- முகமலர்ந்து மொழிந்தஅருண் மொழியைநினைந் தந்தச்
- செந்நாளை எதிர்பார்த்தே பன்னாளும் களித்தேன்
- சிந்தைமலர்ந் திருந்தேன்அச் செல்வமிகு திருநாள்
- இந்நாளே ஆதலினால் எனக்கருள்வீர் என்றேன்
- என்பதன்முன் அளித்தீர்நும் அன்புலகில் பெரிதே.
- அந்நாள்வந் தென்றனை ஆண்டருள் செய்த
- அய்யர் அமுதர்என் அன்பர் அழகர்
- நன்னாள் கழிக்கின்ற நங்கைய ரோடு
- நான்அம் பலம்பாடி நண்ணுறும் போது
- பின்னாள்என் றெண்ணிப் பிதற்றாதே பெண்ணே
- பேரருட் சோதிப் பெருமணம் செய்நாள்
- இந்நாளே என்கின்றார் என்னடி அம்மா
- என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா.
- அந்நாளில் அம்பலத் திருவாயி லிடைஉனக்
- கன்புடன் உரைத்தபடியே
- அற்புதம்எ லாம்வல்ல நம்அருட் பேரொளி
- அளித்தனம் மகிழ்ந்துன்உள்ளே
- இந்நாள் தொடுத்துநீ எண்ணிய படிக்கே
- இயற்றிவிளை யாடிமகிழ்க
- என்றும்இற வாநிலையில் இன்பஅனு பவனாகி
- இயல்சுத்த மாதிமூன்றும்
- எந்நாளும் உன்இச்சை வழிபெற்று வாழ்கயாம்
- எய்திநின் னுட்கலந்தேம்
- இனிஎந்த ஆற்றினும் பிரிவுறேம் உண்மைஈ
- தெம்மாணை என்றகுருவே
- மன்னாகி என்பெரிய வாழ்வாகி அழியாத
- வரமாகி நின்றசிவமே
- மணிமன்றின் நடுநின்ற ஒருதெய்வ மேஎலாம்
- வல்லநட ராஜபதியே.
- அந்தண அங்கண அம்பர போகா
- அம்பல நம்பர அம்பிகை பாகா.