- அன்பள்ளி யோங்கு மறிவுடையோர் வாழ்த்துஞ்செம்
- பொன்பள்ளி வாழ்ஞான போதமே - இன்புள்ளித்
- அன்புமிகுந் தொண்டர்குழு ஆயும்வலி தாயத்தில்
- இன்பமிகு ஞான இலக்கணமே - துன்பமற
- அன்புடைய தாயர்களோ ராயிரம்பே ரானாலும்
- அன்புடையாய் நின்னைப்போ லாவாரோ - இன்பமுடன்
- அன்றொருநாள் நம்பசிகண் டந்தோ தரியாது
- நன்றிரவில்சோறளித்த நற்றாய்காண் - என்றுமருட்
- அன்புடையார் யாரினும்பேர் அன்புடையான் நம்பெருமான்
- நின்புடையான் நித்தம் நிகழ்த்துகின்றேன் - உன்புடையோர்
- அன்பவன்மேல் கொண்ட தறியேன் புறச்சமயத்
- தின்புடையா ரேனும் இணங்குவரே - அன்புடனே
- அன்ன நடைஎன்பாய் அஃதன் றருந்துகின்ற
- அன்னநடை என்பார்க்கென் ஆற்றுதியே - அன்னவரை
- அன்புடையார் இன்சொல் அமுதேறு நின்செவிக்கே
- இன்புடையாய் என்பொய்யும் ஏற்குங்கொல் - துன்புடையேன்
- பொய்யுடையேன் ஆயினுநின் பொன்னருளை வேண்டுமொரு
- மெய்யுடையேன் என்கோ விரைந்து.
- அன்னையினும் பெரிதினிய கருணை ஊட்டும்
- ஆரமுதே என்னுறவே அரசே இந்த
- மன்னுலகில் அடியேனை என்னே துன்ப
- வலையிலகப் படஇயற்றி மறைந்தாய் அந்தோ
- பொன்னைமதித் திடுகின்றோர் மருங்கே சூழ்ந்து
- போனகமும் பொய்யுறவும் பொருந்தல் ஆற்றேன்
- என்னைஉளங் கொள்ளுதியோ கொள்கி லாயோ
- என்செய்வேன் என்செய்வேன் என்செய் வேனே.
- அன்பர்திரு வுளங்கோயி லாகக்கொண்டே
- அற்புதச்சிற் சபையோங்கும் அரசே இங்கு
- வன்பரிடைச் சிறியேனை மயங்க வைத்து
- மறைந்தனையே ஆனந்த வடிவோய் நின்னைத்
- துன்பவடி வுடைப்பிறரில் பிரித்து மேலோர்
- துரியவடி வினனென்று சொன்ன வெல்லாம்
- இன்பவடி வடைந்தன்றே எந்தாய் அந்தோ
- என்னளவென் சொல்கேனிவ் வேழை யேனே.
- அன்பாலென் தன்னைஇங் காளுடை யாய்இவ் வடியவனேன்
- நின்பாலென் துன்ப நெறிப்பால் அகற்றென்று நின்றதல்லால்
- துன்பால் இடரைப் பிறர்பால் அடுத்தொன்று சொன்னதுண்டோ
- என்பால் இரங்கிலை என்பாற் கடல்பிள்ளைக் கீந்தவனே.
- அன்பரி தாமனத் தேழையன் யான்துய ரால்மெலிந்தே
- இன்பரி தாமிச் சிறுநடை வாழ்க்கையில் ஏங்குகின்றேன்
- என்பரி தாப நிலைநீ அறிந்தும் இரங்கிலையேல்
- வன்பரி தாந்தண் அருட்கட லேஎன்ன வாழ்வெனக்கே.
- அனம்பொறுத் தான்புகழ் ஒற்றிநின் நாயகன் அங்குமிழித்
- தனம்பொறுத் தாள்ஒரு மாற்றாளைத் தன்முடி தன்னில்வைத்தே
- தினம்பொறுத் தான்அது கண்டும் சினமின்றிச் சேர்ந்தநின்போல்
- மனம்பொறுத் தார்எவர் கண்டாய் வடிவுடை மாணிக்கமே.
- அன்பர்பால் நீங்காஎன் அம்மையே தாமரைமேற்
- பொன்பொருவு மேனி அயன்பூவின்-மன்பெரிய
- வாக்கிறைவி நின்தாள் மலர்ச்சரணம் போந்தேனைக்
- காக்கக் கடனுனக்கே காண்.
- அனஞ்சூ ழொற்றிப் பதியுடையீ ரகில மறிய மன்றகத்தே
- மனஞ்சூழ் தகரக் கால்கொண்டீர் வனப்பா மென்றே னுலகறியத்
- தனஞ்சூ ழகத்தே யணங்கேநீ தானுந் தகரத் தலைகொண்டா
- யினஞ்சூ ழழகா மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- அன்புடன்நின் பதம்புகழாப் பாவி நாவை
- அறத்துணியேன் நின்அழகை அமர்ந்து காணாத்
- துன்புறுகண் இரண்டினையும் சூன்றேன் நின்னைத்
- தொழாக்கையை வாளதனால் துண்ட மாக்கேன்
- வன்பறநின் தனைவணங்காத் தலையை அந்தோ
- மடித்திலேன் ஒதியேபோல் வளர்ந்தேன் என்னை
- இன்பறுவல் எரியிடைவீழ்த் திடினும் அன்றி
- என்செயினும் போதாதே எந்தாய் எந்தாய்.
- அன்பர்கள் வேண்டும்அ வைஅளிப் பானை
- அம்பலத் தேநடம் ஆடுகின் றானை
- வன்பர்கள் நெஞ்சில்ம ருவல்இல் லானை
- வானவர் கோனைஎம் வாழ்முத லானைத்
- துன்பம் தவிர்த்துச்சு கங்கொடுப் பானைச்
- சோதியைச் சோதியுள் சோதியை நாளும்
- என்பணி கொண்டெனை ஏன்றுகொண் டானை
- இன்றைஇ ரவில்எ திர்ந்துகொள் வேனே.
- அன்றி னேர்கிலை நம்முடைப் பெருமான்
- அஞ்செ ழுத்தையும் அடிக்கடி மறந்தாய்
- ஒன்றி மேற்கதி உறவகை அந்தோ
- உணர்கி லாய்வயிற் றூண்பொருட் டயலோர்
- முன்றில் காத்தனை அவ்வள வேனும்
- முயன்று காத்திலை முன்னவன் கோயில்
- துன்றி நின்றநல் தொண்டர்தம் தொழும்பு
- தொடங்கு வானவர் தூயமுன் றிலையே.
- அன்றும் அறியார் மாதவரும் அயனும் மாலும் நின்நிலையை
- இன்றும் அறியார் அன்றியவர் என்றும் அறியார் என்னில்ஒரு
- நன்றும் அறியேன் நாயடியேன் நான்எப்படிதான் அறிவேனோ
- ஒன்றும் நெறிஏ தொற்றியப்பா ஒப்பார் இல்லா உத்தமனே.
- அன்றுநீ அடிமைச் சாதனம் காட்டி ஆண்டஆ ரூரனார் உன்னைச்
- சென்றுதூ தருள்என் றிரங்குதல் நோக்கிச் சென்றநின் கருணையைக் கருதி
- ஒன்றுதோ றுள்ளம் உருகுகின் றனன்காண் ஒற்றியூர் அண்ணலே உலகத்
- தென்றுமால் உழந்தேன் எனினும்நின் அடியேன் என்தனைக் கைவிடேல் இனியே.
- அன்னைபோன் றடியர்க் கருத்தியில் அருத்தும் அப்பநின் அடியினை காணா
- தென்னையோ மலம்உண் டுழன்றிடும் பன்றி என்னஉண் டுற்றனன் அதனால்
- புன்னைஅம் சடைஎம் புண்ணிய ஒளியே பூதநா யகஎன்றன் உடலம்
- தன்னைநீ அமர்ந்த ஒற்றியில் உன்னால் தண்டிக்கப் பட்டனன் அன்றே.
- அன்னையில் பெரிதும் இனியஎன் அரசே அம்பலத் தாடல்செய் அமுதே
- பொன்னைஒத் தொளிரும் புரிசடைக் கனியே போதமே ஒற்றிஎம் பொருளே
- உன்னைவிட் டயலார் உறவுகொண் டடையேன் உண்மைஎன் உள்ளம்நீ அறிவாய்
- என்னைவிட் டிடில்நான் என்செய்வேன் ஒதிபோல் இருக்கின்ற இவ்வெளி யேனே.
- அன்ப தென்பதைக் கனவினும் காணேன்
- ஆடு கின்றனன் அன்பரைப் போல
- வன்ப வத்தையும் மாய்த்திட நினைத்தேன்
- வஞ்ச நெஞ்சினை வசப்படுக் கில்லேன்
- துன்ப வாழ்க்கையில் சுழல்கின்றேன் நின்னைத்
- தொழுது வாழ்த்திநல் சுகம்பெறு வேனே
- ஒன்ப தாகிய உருவுடைப் பெரியோய்
- ஒற்றி ஓங்கிய உத்தமப் பொருளே.
- அன்னை அப்பனும் நீஎன மகிழ்ந்தே
- அகங்கு ளிர்ந்துநான் ஆதரித் திருந்தேன்
- என்னை இப்படி இடர்கொள விடுத்தால்
- என்செய் கேன் இதை யாரொடு புகல்கேன்
- பொன்னை ஒத்தநின் அடித்துணை மலரைப்
- போற்று வார்க்குநீ புரிகுவ திதுவோ
- உன்னை எப்படி ஆயினும் மறவேன்
- உனைஅ லால்எனை உடையவர் எவரே.
- அன்பர்தம் மனத்தே இன்பமுற் றவைகள் அளித்தவர் களித்திடப் புரியும்
- பொன்பொலி மேனிக் கருணையங் கடலே பொய்யனேன் பொய்மைகண் டின்னும்
- துன்பமுற் றலையச் செய்திடேல் அருணைத் தொல்நக ரிடத்துன தெழில்கண்
- டென்புளம் உருகத் துதித்திடல் வேண்டும் இவ்வரம் எனக்கிவண் அருளே.
- அன்புற் றடியார் தொழுதேத்த அணியார் மணிப்பொன் அம்பலத்தே
- வன்புற் றழியாப் பெருங்கருணை மலையார் தலையார் மாலையினார்
- மன்புற் றரவார் கச்சிடையின் வயங்க நடஞ்செய் வதுகண்டேன்
- இன்புற் றடியேன் அவர்நடத்தை இன்னும் ஒருகால் காண்பேனோ.
- அன்னோ திருஅம் பலத்தேஎம் ஐயர் உருக்கண் டேன்அதுதான்
- பொன்னோ பவளப் பொருப்பதுவோ புதுமா ணிக்க மணித்திரளோ
- மின்னோ விளக்கோ விரிசுடரோ மேலை ஒளியோ என் உரைப்பேன்
- என்னோ அவர்தந் திருஉருவை இன்னும் ஒருகால் காண்பேனோ.
- அன்றோர் பொருளாய் அடியேனை ஆட்கொண் டருளி அறிவளித்தாய்
- இன்றோ சிறியேன் பிழைகருதி இரங்கா தகற்ற எண்ணுதியோ
- குன்றோர் அனைய குறைசெயினும் கொண்டு குலம்பே சுதல்எந்தாய்
- நன்றோ கருணைப் பெருங்கடலே ஆளாய் இந்த நாயினையே.
- அன்றும் சிறியேன் அறிவறியேன் அதுநீ அறிந்தும் அருள்செய்தாய்
- இன்றும் சிறியேன் அறிவறியேன் இதுநீ அறிந்தும் அருளாயேல்
- என்றும் ஒருதன் மையன்எங்கள் இறைவன் எனமா மறைகள்எலாம்
- தொன்று மொழிந்த தூமொழிதான் சூது மொழியோ சொல்லாயே.
- அன்னேஎன் அப்பாஎன் ஆருயிர்க்கோர் ஆதரவே
- என்னேநின் உள்ளம் இரங்கிலையே - பொன்னே
- உடையா ரிடைஎன் உளநொந்து வாடிக்
- கடையேன் படுந்துயரைக் கண்டு.
- அன்பர் இதய மலர்க்கோயில் அமர்ந்த பரமா னந்தத்தைத்
- துன்பம் அகலச் சுகமளிக்கும் தூய துணையைச் சுயஞ்சுடரை
- வன்ப ரிடத்தின் மருவாத மணியை மணியார் மிடற்றானை
- இன்ப நிறைவை இறையோனை என்னே எண்ணா திருந்தேனே.
- அன்னந டைப்பெண்க ளாரமு தே - உன்னை
- அன்பிற் புணர்ந்தவ ராரே டி
- துன்ன லுடையின ரம்பலத் தேநின்ற
- தூய திருநட ராய ரடி.
- அன்னம் பாலிக்குந்தில்லைப் பொன்னம் பலத்திலாடும்
- அரசே - அரசே - அரசேயென் றலறவும் இன்னந்
- அனத்துப் படிவம் கொண்டயனும் அளவா முடியார் வடியாத
- வனத்துச் சடையார் திருஒற்றி வாணர் பவனி வரக்கண்டேன்
- மனத்துக் கடங்கா தாகில்அதை வாய்கொண் டுரைக்க வசமாமோ
- இனத்துக் குவப்பாம் அவரழகை என்னென் றுரைப்ப தேந்திழையே.
- அன்பர்உளக் கோயிலிலே அமர்ந்தருளும் பதியே
- அம்பலத்தில் ஆடுகின்ற ஆனந்த நிதியே
- வன்பர்உளத் தேமறைந்து வழங்கும்ஒளி மணியே
- மறைமுடிஆ கமமுடியின் வயங்குநிறை மதியே
- என்பருவங் குறியாமல் என்னைவலிந் தாட்கொண்
- டின்பநிலை தனைஅளித்த என்னறிவுக் கறிவே
- முன்பருவம் பின்பருவங் கண்டருளிச் செய்யும்
- முறைமைநின தருள்நெறிக்கு மொழிதல்அறிந் திலனே.
- அன்றொருநாள் இரவிடைவந் தணிக்கவந் திறப்பித்
- தருண்மலர்ச்சே வடிவாயிற் படிப்புறத்தும் அகத்தும்
- மன்றவைத்துக் கொண்டென்னை வரவழைத்து மகனே
- வருந்தாதே இங்கிதனை வாங்கிக்கொள் ளென்ன
- ஒன்றுசிறி யேன்மறுப்ப மறித்தும்வலிந் தெனது
- ஒருகைதனிற் கொடுத்திங்கே உறைதிஎன்று மறைந்தாய்
- இன்றதுதான் அனுபவித்துக் கிசைந்ததுநா யடியேன்
- என்னதவம் புரிந்தேனோ இனித்துயரொன் றிலனே.
- அன்றகத்தே அடிவருத் நடந்தென்னை அழைத்திங்
- கஞ்சாதே மகனேஎன் றளித்தனைஒன் றதனைத்
- துன்றகத்துச் சிறியேன் நான் அறியாது வறிதே
- சுழன்றதுகண் டிரங்கிமிகத் துணிந்துமகிழ் விப்பான்
- இன்றகத்தே புகுந்தருளி எனக்கதனைத் தெரிவித்
- தின்புறச்செய் தருளியநின் இரக்கம்எவர்க் குளதோ
- மன்றகத்து நடம்புரிந்து வயங்கும்ஒரு குருவே
- வல்லவரெல் லாம்வணங்கும் நல்லபரம் பொருளே.
- அன்பர்மனக் கோயிலிலே அமர்ந்தருளி விளங்கும்
- அரும்பொருளாம் உனதுமல ரடிவருந்த நடந்து
- வன்பர்களில் தலைநின்ற வஞ்சகனேன் இருந்த
- மனைக்கதவு திறப்பித்து மகிழ்ந்தெனைஅங் கழைத்துத்
- துன்பமெலாம் நீங்குகஇங் கிதுதனைவாங் குகநீ
- தொழும்பன்என்ற என்னுடைய துரையேநின் னருளை
- என்பகர்வேன் என்வியப்பேன் எங்ஙனம்நான் மறப்பேன்
- என்உயிருக் குயிராகி இலங்கிசற் குருவே.
- அன்பளிப்பு தொன்றுபின்னர் இன்பளிப்ப தொன்றென்
- றறிஞரெலாம் மதிக்கின்ற அடிமலர்கள் வருந்த
- என்பளித்த உடல்கள்தொறும் உயிர்க்குயிராய் இருக்கும்
- எம்பெருமான் நடந்தருளிக் கதவுதிறப் பித்துத்
- துன்பளிக்கும் நெஞ்சகத்தென் றனைக்கூவி அழைத்துத்
- தூயஇள நகைமுகத்தே துளும்பஎனை நோக்கி
- முன்பளித்த தென்றனது கையில்ஒன்றை அளித்தாய்
- முன்னவநின் அருட்பெருமை முன்னஅறி யேனே.
- அன்புடையாய் அடியேன்நான் அருளருமை அறியேன்
- அறியாதே மறுத்தபிழை அத்தனையும் பொறுத்து
- வன்புடையேன் தனைஅழைத்துத் திரும்பவும்என் கரத்தே
- வலிந்தளித்த பெருங்கருணை வண்ணம்என்றன் மனமும்
- இன்புடைய கண்களும்விட் டகலாதே இன்னும்
- விளங்குகின்ற தாயினும்என் வெய்யமனம் உருகா
- என்புடைய உடலும்இதற் குருகல்அரி தலவே
- இனித்தநடம் புரிந்துமன்றில் தனித்தசிவக் கொழுந்தே.
- அன்னோஈ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன்
- அருளருமை அறிந்தவர்கள் அருளமுதம் விரும்பி
- என்னோஇங் கருளாமை என்றுகவன் றிருப்ப
- யாதுமொரு நன்றியிலேன் தீதுநெறி நடப்பேன்
- முன்னோபின் னும்அறியா மூடமனப் புலையேன்
- முழுக்கொடியேன் எனைக்கருதி முன்னர்எழுந் தருளித்
- தன்னோடும் இணைந்தவண்ணம் ஒன்றெனக்குக் கொடுத்தான்
- தனித்தசிவ காமவல்லிக் கினிந்தநடத் தவனே.
- அன்னே எனைத்தந்த அப்பாஎன் றேங்கி அலறுகின்றேன்
- என்னேஇவ் வேழைக் கிரங்காது நீட்டித் திருத்தல்எந்தாய்
- பொன்னே சுகுணப் பொருப்பே தணிகைப் பொருப்பமர்த்த
- மன்னே கலப மயில்மேல் அழகிய மாமணியே.
- அன்னே அப்பா எனநின்தாட்3 கார்வம் கூர்ந்திங் கலைகின்றேன்
- என்னே சற்றும் இரங்கிலைநீ என்நெஞ் சோநின் நல்நெஞ்சம்
- மன்னே ஒளிகொள் மாணிக்க மணியே குணப்பொன் மலையேநல்
- தென்னேர் பொழில்சூழ் திருத்தணிகைத் தேவே ஞானச் செழுஞ்சுடரே.
- அன்னைமுத லாம்பந்தத் தழுங்கி நாளும்
- அலைந்துவயி றோம்பிமனம் அயர்ந்து நாயேன்
- முன்னைவினை யாற்படும்பா டெல்லாம் சொல்லி
- முடியேன்செய் பிழைகருதி முனியேல் ஐயா
- பொன்னைநிகர் அருட்குன்றே ஒன்றே முக்கட்
- பூமணமே நறவேநற் புலவர் போற்றத்
- தன்னைநிகர் தரும்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- அன்பின் உனது திருஅடிக்கே ஆளாய்த் தொண்டொன் றாற்றாதே
- துன்பின் உடையோர் பால்அணுகிச் சோர்ந்தேன் இனிஓர் துணைகாணேன்
- என்பில் மலிந்த மாலைபுனை எம்மான் தந்த பெம்மானே
- முன்பின் நடுவாய் முளைத்தோனே முறையோ முறையோ முறையேயோ.
- அன்பிலா வஞ்சர்தம் அவலச் சூழலில்
- என்பிலாப் புழுஎன இரங்கு நெஞ்சமே
- இன்பறாச் சண்முக என்று நீறிடில்
- துன்புறாத் தனிக்கதிச் சூழல் வாய்க்குமே.
- அன்பென்ப தேசிவம் உணர்ந்திடுக எனஎனக்கு
- அறிவித்த சுத்தஅறிவே
- அன்பரின்பங் கொள்ளநட மம்பலத்தே யாடுகின்றாய்
- இன்புருவா முன்ற னிணையடிதான் நோவாதா.
- அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே
- அன்பெனும் குடில்புகும் அரசே
- அன்பெனும் வலைக்குட் படுபரம் பொருளே
- அன்பெனும் கரத்தமர் அமுதே
- அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே
- அன்பெனும் உயிர்ஒளிர் அறிவே
- அன்பெனும் அணுவுள் ளமைந்தபே ரொளியே
- அன்புரு வாம்பர சிவமே.
- அனலினு ளனலா யனனடு வனலாய்
- அனலுற விளங்கு மருட்பெருஞ் ஜோதி
- அனலுறு மனலா யனனிலை யனலாய்
- அனலுற வயங்கு மருட்பெருஞ் ஜோதி
- அன்பினிற் கலந்தென தறிவினிற் பயின்றே
- இன்பினி லளைந்தவென் னின்னுயிர் நட்பே
- அனைத்துல கவைகளு மாங்காங் குணரினும்
- இனைத்தென வறியா வென்றனிச் சத்தே
- அன்றத னப்பா லதன்பரத் ததுதான்
- என்றிட நிறைந்த வென்றனிச் சத்தே
- அன்பையும் விளைவித் தருட்பே ரொளியால்
- இன்பையு நிறைவித் தென்னையு நின்னையும்
- அன்னையே அப்பா திருச்சிற்றம் பலத்தென் ஐயனே இவ்வுல கதிலே
- பொன்னையே உடையார் வறியவர் மடவார் புகலும்ஆடவர்இவர் களுக்குள்
- தன்னையே அறியாப் பிணியினால் ஆவி தளர்கின்றார் தருணம்ஈ தெனவே
- சொன்னபோ தெல்லாம் பயந்துநான் அடைந்த சோபத்தை நீஅறி யாயோ.
- அன்னையே என்றன் அப்பனே திருச்சிற் றம்பலத் தமுதனே எனநான்
- உன்னையே கருதி உன்பணி புரிந்திங் குலகிலே கருணைஎன் பதுதான்
- என்னையே நிலையாய் இருத்தஉள் வருந்தி இருக்கின்றேன் என்உள மெலிவும்
- மன்னும்என் உடம்பின் மெலிவும்நான் இருக்கும் வண்ணமும் திருவுளம் அறியும்.
- அன்றெனக்கு நீஉரைத்த தருணம்இது எனவே
- அறிந்திருக்கின் றேன்அடியேன் ஆயினும்என் மனந்தான்
- கன்றெனச்சென் றடிக்கடிஉட் கலங்குகின்ற252 தரசே
- கண்ணுடைய கரும்பேஎன் கவலைமனக் கலக்கம்
- பொன்றிடப்பே ரின்பவெள்ளம் பொங்கிடஇவ் வுலகில்
- புண்ணியர்கள் உளங்களிப்புப் பொருந்திவிளங் கிடநீ
- இன்றெனக்கு வெளிப்படஎன் இதயமலர் மிசைநின்
- றெழுந்தருளி அருள்வதெலாம் இனிதருள்க விரைந்தே.
- அன்பிலே பழுத்த தனிப்பழம் என்கோ
- அறிவிலே அறிவறி வென்கோ
- இன்பிலே நிறைந்த சிவபதம் என்கோ
- என்னுயிர்த் துணைப்பதி என்கோ
- வன்பிலா மனத்தே வயங்கொளி என்கோ
- மன்னும்அம் பலத்தர சென்கோ
- என்புரி அழியாப் பொன்புரி ஆக்கி
- என்னைஆண் டருளிய நினையே.
- அன்புடைய என்னறிவே அருளுடைய பொருளே
- அம்மேஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே
- துன்புடைய உலகரெலாம் சுகமுடையார் ஆகத்
- துன்மார்க்கம் தவிர்த்தருளிச் சன்மார்க்கம் வழங்க
- இன்புடைய பேரருளிங் கெனைப்பொருள்செய் தளித்த
- என்அமுதே என்உறவே எனக்கினிய துணையே
- என்புடைநீ இருக்கின்றாய் உன்புடைநான் மகிழ்ந்தே
- இருக்கின்றேன் இவ்வொருமை யார்பெறுவார் ஈண்டே.
- அனந்தமறை ஆகமங்கள் அளப்பரிய சிவமே
- அம்மேஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே
- மனந்தருவா தனைதவிர்த்தோர்321 அறிவினில்ஓர் அறிவாய்
- வயங்குகின்ற குருவேஎன் வாட்டமெலாம் தவிர்த்தே
- இனந்தழுவி என்னுளத்தே இருந்துயிரில் கலந்தென்
- எண்ணமெலாம் களித்தளித்த என்னுரிமைப் பதியே
- சினந்தவிர்ந்தெவ் வுலகமும்ஓர் சன்மார்க்கம் அடைந்தே
- சிறப்புறவைத் தருள்கின்ற சித்தசிகா மணியே.
- அன்பனே அப்பா அம்மையே அரசே
- அருட்பெருஞ் சோதியே அடியேன்
- துன்பெலாம் தொலைத்த துணைவனே ஞான
- சுகத்திலே தோற்றிய சுகமே
- இன்பனே எல்லாம் வல்லசித் தாகி
- என்னுளே இலங்கிய பொருளே
- வன்பனேன் பிழைகள் பொறுத்தருட் சோதி
- வழங்கினை வாழிநின் மாண்பே.
- அன்பே என்னர சே - திரு - வம்பலத் தாரமு தே
- என்பே உள்ளுரு கக் - கலந் - தென்னு ளிருந்தவ னே
- இன்பே என்னறி வே - பர - மேசிவ மேயென வே
- உன்பே ரோதுகின் றேன் - எனக் - குண்மை உரைத்தரு ளே.
- அன்னையைக்கண் டம்மாநீ அம்பலத்தென் கணவர்
- அடியவளேல் மிகவருக அல்லள்எனில் இங்கே
- என்னைஉனக் கிருக்கின்ற தேகுகஎன் றுரைப்பாள்
- இச்சைஎலாம் உம்மிடத்தே இசைந்தனள்இங் கிவளை
- முன்னையள்என் றெண்ணாதீர் தாழ்த்திருப்பீர் ஆனால்
- முடுகிஉயிர் விடுத்திடுவாள் கடுகிவரல் உளதேல்
- மன்னவரே உமதுதிரு வாய்மலர வேண்டும்
- வயங்குதிரு மணிமன்றில் வாழ்பெரிய துரையே.
- அன்னப்பார்ப் பால்365அழ காம்நிலை யூடே
- அம்பலம் செய்துநின் றாடும் அழகர்
- துன்னப்பார்த் தென்னுயிர்த் தோழியும் நானும்
- சூதாடு கின்றஅச் சூழலில் வந்தே
- உன்னைப்பார்த் துன்னுள்ளே என்னைப்பா ராதே
- ஊரைப்பார்த் தோடி உழல்கின்ற பெண்ணே
- என்னைப்பார் என்கின்றார் என்னடி அம்மா
- என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா.
- அன்னமுண அழைத்தனர்நான் ஆடும்மல ரடித்தேன்
- அருந்துகின்றேன் எனஉரைத்தேன் அதனாலோ அன்றி
- என்னுயிர்நா யகனொடுநான் அணையும்இடம் எங்கே
- என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
- துன்னுநெறிக் கொருதுணையாம் தோழிமனங் கசந்தாள்
- துணிந்தெடுத்து வளர்த்தவளும் சோர்ந்தமுகம் ஆனாள்
- நென்னல்ஒத்த பெண்களெலாங் கூடிநகைக் கின்றார்
- நிபுணர்எங்கள் நடராயர் நினைவைஅறிந் திலனே.
- அன்னையப்பன் மாவினத்தார் ஆய்குழலார் ஆசையினால்
- தென்னைஒப்ப நீண்ட சிறுநெஞ்சே - என்னைஎன்னை
- யாவகைசேர் வாயில் எயிற்றில்லை என்கிலையோ
- ஆவகைஐந் தாய்ப்பதம்ஆ றார்ந்து.
- அன்புடை மகனே மெய்யருள் திருவை
- அண்டர்கள் வியப்புற நினக்கே
- இன்புடை உரிமை மணம்புரி விப்பாம்
- இரண்டரைக் கடிகையில் விரைந்தே
- துன்புடை யவைகள் முழுவதும் தவிர்ந்தே
- தூய்மைசேர் நன்மணக் கோலம்
- பொன்புடை விளங்கப் புனைந்துகொள் என்றார்
- பொதுநடம் புரிகின்றார் தாமே.
- அன்பாடு திருப்பொதுவில் ஆடுகின்ற அடிமேல் ஆணை
- என்பாடென் றிலைஎன்னால் துரும்பும் அசைத் திடமுடியா திதுகால் தொட்டுப்
- பொன்பாடெவ் விதத்தானும் புரிந்துகொண்டு நீதானே புரத்தல் வேண்டும்
- உன்பாடு நான்உரைத்தேன் நீஇனிச்சும் மாஇருக்க ஒண்ணா தண்ணா.
- அன்பிலேன் எனினும் அறிவிலேன் எனினும்
- அன்றுவந் தாண்டனை அதனால்
- துன்பிலேன் எனஇவ் வுலகெலாம் அறியச்
- சொல்லினேன் சொல்லிய நானே
- இன்பிலேன் எனஇன் றுரைத்திடல் அழகோ
- எனைஉல கவமதித் திடில்என்
- என்பிலே கலந்தாய் நினக்கும்வந் திடுமே
- எய்துக விரைந்தென திடத்தே.
- அன்புடை யவரேஎல் லாம்உடை யவரே
- அருட்பெருஞ் சோதிஎன் ஆண்டவ ரேஎன்
- வன்புடை மனத்தைநன் மனமாக்கி எனது
- வசஞ்செய்வித் தருளிய மணிமன்றத் தவரே
- இன்புடை யவரேஎன் இறையவ ரேஎன்
- இருகணுள் மணிகளுள் இசைந்திருந் தவரே
- என்புடை எனைத்தூக்கி எடுத்தீர்இங் கிதனை
- எண்ணுகின் றேன்அமு துண்ணுகின் றேனே.
- அன்னே என்னை ஆண்ட தலைவ அடியன் உள்ள மே
- அமர்ந்த துணைவ எனக்குக் கிடைத்த அமுத வெள்ள மே
- பொன்னே பொன்னில் பொலிந்து நிறைந்த புனித வான மே
- புனித வானத் துள்ளே விளங்கும் பூரண ஞான மே.
- எனக்கும் உனக்கும்
- அன்றே என்னை அடியன்ஆக்கி ஆண்ட சோதி யே
- அதன்பின் பிள்ளை ஆக்கிஅருள்இங் களித்த சோதி யே
- நன்றே மீட்டும் நேயன் ஆக்கிநயந்த சோதி யே
- நானும் நீயும் ஒன்றென் றுரைத்துநல்கு சோதி யே.
- எனக்கும் உனக்கும்
- அன்புரு வானவர் இன்புற உள்ளே
- அறிவுரு வாயினீர் வாரீர்
- அருட்பெருஞ் ஜோதியீர் வாரீர். வாரீர்
- அன்பாட்டை விழைந்தவரே அணையவா ரீர்
- அருட்சோதி வடிவினரே அணையவா ரீர்
- துன்பாட்டை ஒழித்தவரே அணையவா ரீர்
- துரியநிறை பெரியவரே அணையவா ரீர்
- பின்பாட்டுக் காலையிதே அணையவா ரீர்
- பிச்சேற்று கின்றவரே அணையவா ரீர்
- என்பாட்டை ஏற்றவரே அணையவா ரீர்
- என்னுடைய நாயகரே அணையவா ரீர். அணையவா ரீர்
- அன்பர்க் கெளிய மருந்து - மற்றை
- ஐவர்க்கும் காண்டற் கரிய மருந்து
- என்பற்றில் ஓங்கு மருந்து - என்னை
- இன்ப நிலையில் இருத்து மருந்து. ஞான
- அன்றிதோ வருகின்றேன் என்று போனவர்அங்கே
- யார்செய்த தடையாலோ இருந்தார்என் கையிற்சங்கை
- இன்றுதம் கையிற்கொண்டே வந்துநிற் கின்றார்இங்கே
- இந்தக் கதவைமூடு இவர்போவ தினிஎங்கே. இவர்க்கும்
- அன்பர் செயும்பிழை ஆயிர மும்பொறுத்
- தின்ப மளிக்குநம் ஈசர் பதத்திற்கே அபயம்
- அனந்தகோ டிகுண கரகர ஜொலிதா
- அகண்டவே தசிர கரதர பலிதா.
- அனிர்த341 கோபகரு ணாம்பக நா தா
- அமிர்த ரூபதரு ணாம்புஜ பா தா.
- அன்புமுந்து சிந்தையே அம்பலங்கொள் விந்தையே
- இன்பமென்பன் எந்தையே எந்தைதந்தை தந்தையே.
- அனகவனஜ அமிதஅமிர்த அகலஅகில சரணமே
- அதுலவனத அசுதவசல அநிலவனல சரணமே.
- அன்னம்உண அழைக்கின்றாய் தோழிஇங்கே நான்தான்
- அம்பலத்தே ஆடுகின்ற அண்ணல்அடி மலர்த்தேன்
- உன்னைநினைத் துண்டேன்என் உள்ளகத்தே வாழும்
- ஒருதலைமைப் பெருந்தலைவ ருடையஅருட் புகழாம்
- இன்னமுதில் என்னுடைஅன் பென்னும்நறுங் கனியின்
- இரதமும்என் தனிக்கணவர் உருக்காட்சி எனும்ஓர்
- கன்னல்உளே தனித்தெடுத்த தேம்பாகும் கலந்தே
- களித்துண்டேன் பசிசிறிதும் கண்டிலன்உள் ளகத்தே.