- அம்புலியூர் சோலை யணிவயல்க ளோங்கெருக்கத்
- தம்புலியூர் வேத சமரசமே - நம்புவிடை
- அம்மதுரத் தேன்பொழியும் அச்சிறுபாக் கத்துலகர்
- தம்மதநீக் குஞ்ஞான சம்மதமே - எம்மதமும்
- அம்மூன்றி னுள்ளே அடுக்கிவரும் ஒன்றகன்ற
- மும்மூன்றின் மூன்றும் முனிந்தவராய்த் - தம்மூன்றி
- அம்பரத்தே ஆனந்த வடிவால் என்றும்
- ஆடுகின்ற மாமணியே அரசே நாயேன்
- இம்பரத்தம் எனும்உலக நடையில் அந்தோ
- இடருழந்தேன் பன்னெறியில் எனைஇ ழுத்தே
- பம்பரத்தின் ஆடியலைப் படுத்தும் இந்தப்
- பாவிமனம் எனக்குவயப் படுவ தில்லை
- கொம்பரற்ற இளங்கொடிபோல் தளர்ந்தேன் என்னைக்
- குறிக்கொள்ளக் கருதுதியோ குறித்தி டாயோ.
- அம்மா வயிற்றெரிக் காற்றேன் எனநின் றழுதலறச்
- சும்மாஅச் சேய்முகந் தாய்பார்த் திருக்கத் துணிவள்கொலோ
- இம்மா நிலத்தமு தேற்றாயி னுந்தந் திடுவள்முக்கண்
- எம்மான்இங் கேழை அழுமுகம் பார்த்தும் இரங்கிலையே.
- அம்மா லயனுங் காண்பரியீர்க் கமரும் பதிதான் யாதென்றே
- னிம்மா லுடையா யொற்றுதற்கோ ரெச்ச மதுகண் டறியென்றார்
- செம்மா லிஃதொன் றென்னென்றேன் றிருவே புரிமேற் சேர்கின்ற
- வெம்மான் மற்றொன் றென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- அம்மை யடுத்த திருமேனி யழகீ ரொற்றி யணிநகரீ
- ரும்மை யடுத்தோர் மிகவாட்ட முறுத லழகோ வென்றுரைத்தேன்
- நம்மை யடுத்தாய் நமையடுத்தோர் நம்போ லுறுவ ரன்றெனிலே
- தெம்மை யடுத்த தென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- அம்ப லத்துள்நின் றாடவல் லானே
- ஆன்இ வர்ந்துவந் தருள்புரி பவனே
- சம்பு சங்கர சிவசிவ என்போர்
- தங்கள் உள்ளகம் சார்ந்திருப் பவனே
- தும்பை வன்னியம் சடைமுடி யவனே
- தூய னேபரஞ் சோதியே எங்கள்
- செம்பொ னேசெழும் பவளமா மலையே
- திகழும் ஒற்றியூர்ச் சிவபெரு மானே.
- அமைவ றிந்திடா ஆணவப் பயலே
- அகில கோடியும் ஆட்டுகின் றவன்காண்
- எமைந டத்துவோன் ஈதுண ராமல்
- இன்று நாம்பரன் இணையடி தொழுதோம்
- கமைவின் ஏத்தினோம் அடியரும் ஆனோம்
- கனிகின் றோம்எனக் கருதிட மயக்கேல்
- உமையன் ஒற்றியூர்ச் சிவன்அருள் வாளால்
- உன்னை வெட்டுவல் உண்மைஎன் றுணரே.
- அம்மை அப்பன்என் ஆருயிர்த் துணைவன்
- அரசன் தேசிகன் அன்புடைத் தேவன்
- இம்மை யிற்பயன் அம்மையிற் பயன்மற்
- றியாவு நீஎன எண்ணிநிற் கின்றேன்
- செம்மை யிற்பெறும் அன்பருள் ளகஞ்சேர்
- செல்வ மேஎனைச் சேர்த்தரு ளாயேல்
- எம்மை யிற்பெறு வேன்சிறு நாயேன்
- என்செய் கேன்நர கிடைஇடும் போதே.
- அம்பலத் தாடு மருந்து - பர
- மாநந்த வெள்ளத் தழுத்து மருந்து
- எம்பல மாகு மருந்து - வேளூர்
- என்னுந் தலத்தி லிருக்கு மருந்து. - நல்ல
- அம்பலத்தில் ஆடுகின்றார் பாங்கிமா ரே - அவர்
- ஆட்டங்கண்டு நாட்டங்கொண்டேன் பாங்கிமா ரே.
- அம்பலத்தில் ஆடுகின்றார் வெண்ணிலா வே - அவர்
- ஆடுகின்ற வண்ணமென்ன வெண்ணிலா வே.
- அம்பரத்தி லாடுகின்றார் வெண்ணிலா வே - என்னை
- ஆட்டுகின்றார் இம்பரத்தே வெண்ணிலா வே.
- அம்பலத் தாடல்செய் ஐய னடி - அன்பர்
- அன்புக் கெளிதரு மெய்ய னடி
- தும்பை முடிக்கணி தூய னடி - சுயஞ்
- சோதிய டிபரஞ் சோதி யடி. - கொம்மி
- அம்பலத் தாடும் அழகனைக் காணா தருந்தவும் பொருந்துமோ என்பாள்
- கம்பமுற் றிடுவாள் கண்கள்நீர் உகுப்பாள் கைகுவிப் பாள்உளங் கனிவாள்
- வம்பணி முலைகள் இரண்டும்நோக் கிடுவாள் வள்ளலைப்பரிகிலீர் என்பாள்
- உம்பரன் தவஞ்செய் திடுமினீர் என்பாள் உயங்குவாள் மயங்குவாள் உணர்வே.
- அம்மான்நின் அருட்சத்தி அருமைஒன்றும் அறியேன்
- அன்றிரவின் மறுத்தபிழை அத்தனையும் பொறுத்து
- வெம்மாயை அகற்றிஎனை அருகழைத்தென் கரத்தே
- மிகஅளித்த பெருங்கருணை விளக்கம்என்றன் மனமும்
- மைம்மாழை விழிகளும்விட் டகலாதே இன்னும்
- வதிகின்ற தாயினும்என் வஞ்சநெஞ்சம் உருகா
- எம்மாய நெஞ்சும்இதற் குருகல்அரி தலவே
- இனித்தநடம் புரிந்துமன்றில் தனித்தசிவக் கொழுந்தே.
- அம்மாஈ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன்
- அன்பரெலாம் முயன்றுமுயன் றின்படைவான் வருந்தி
- எம்மாயென் றேத்திடவும் அவர்க்கருளான் மருளால்
- இதுநன்மை இதுதீமை என்றுநினை யாமே
- மைம்மாலிற் களிசிறந்து வல்வினையே புரியும்
- வங்சகனேன் தனைக்கருதி வந்துமகிழ் தெனக்கும்
- தம்மான முறவியந்து சம்மான மளித்தான்
- தனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே.
- அம்பொன்று செஞ்சடை அப்பரைப் போல்தன் அடியர்தம்துக்
- கம்பொன்றும் வண்ணம் கருணைசெய் தாளும் கருதுமினோ
- வம்பொன்று பூங்குழல் வல்லபை யோடு வயங்கியவெண்
- கொம்பொன்று கொண்டெமை ஆட்கொண் டருளிய குஞ்சரமே.
- அமரா வதிஇறைக் காருயிர் ஈந்த அருட்குன்றமே
- சமரா புரிக்கர சேதணி காசலத் தற்பரனே
- குமரா பரம குருவே குகாஎனக் கூவிநிற்பேன்
- எமராஜன் வந்திடுங் கால்ஐய னேஎனை ஏன்றுகொள்ளே.
- அம்பாதல் நெடுங்கண்ணார்க் கிச்சை கொள்வேன்
- அகமலர முகமலர்வோ டருள்செய் உன்றன்
- செம்பாத மலர்ஏத்தேன் இலவு காத்தேன்
- திருத்தணிகை யேநமது செல்வம் என்றே
- நம்பாத கொடியேன்நல் லோரைக் கண்டால்
- நாணிலேன் நடுங்கிலேன் நாயிற் பொல்லேன்
- எம்பாத கத்தைஎடுத் தியார்க்குச் சொல்வேன்
- ஏன்பிறந்தேன் புவிச்சுமையா இருக்கின் றேனே.
- அமராவதி இறையோடுநல் அயனுந்திரு மாலும்
- தமராகுவர் சிவஞானமுந் தழைக்குங்கதி சாரும்
- எமராஜனை வெல்லுந்திறல் எய்தும்புகழ் எய்தும்
- குமராசிவ குருவேஎனக் குளிர்நீறணிந் திடிலே.
- அம்புவி தனிலே தந்தையர் வெறுப்ப அடிக்கடி அயலவர் உடனே
- வம்புறு சண்டை விளைக்கின்றார் சிறுவர் வள்ளலே நின்பணி விடுத்தே
- இம்பர்இவ் வுலகில் ஒருதின மேனும் ஏழையேன் பிறரொடு வெகுண்டே
- வெம்புறு சண்டை விளைத்ததுண் டேயோ மெய்யநின் ஆணைநான் அறியேன்.
- அம்மாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
- ஆணவம்ஆ தியமுழுதும் அறுத்துநிற்றல் வேண்டும்
- இம்மாலைத் தத்துவங்கள் எல்லாம்என் வசத்தே
- இயங்கிஒரு தீமையும்இல் லாதிருத்தல் வேண்டும்
- எம்மான்நான் வேண்டுதல்வேண் டாமையறல் வேண்டும்
- ஏகசிவ போகஅனு போகம்உறல் வேண்டும்
- தம்மானத் திருவடிவில் எந்தாயும் நானும்
- சார்ந்துகலந் தோங்குகின்ற தன்மையும்வேண் டுவனே.
- அமலாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
- ஆடிநிற்குஞ் சேவடியைப் பாடிநிற்க வேண்டும்
- எமனாதித் தடைஎன்றும் எய்தாமை வேண்டும்
- எல்லாம்செய் வல்லதிறன் எனக்களித்தல் வேண்டும்
- கமையாதி280 அடைந்துயிர்கள் எல்லாம்சன் மார்க்கம்
- காதலித்தே திருப்பொதுவைக் களித்தேத்தல் வேண்டும்
- விமலாதி உடையஒரு திருவடிவில் யானும்
- விமலாநீ யுங்கலந்தே விளங்குதல்வேண் டுவனே.
- அம்பலத் தாடும் அமுதமே என்கோ
- அடியனேன் ஆருயிர் என்கோ
- எம்பலத் தெல்லாம் வல்லசித் தென்கோ
- என்னிரு கண்மணி என்கோ
- நம்பிடில் அணைக்கும் நற்றுணை என்கோ
- நான்பெற்ற பெருஞ்செல்வம் என்கோ
- இம்பர்இப் பிறப்பே மெய்ப்பிறப் பாக்கி
- என்னைஆண் டருளிய நினையே.
- அம்மையே என்கோ அப்பனே என்கோ
- அருட்பெருஞ் சோதியே என்கோ
- செம்மையே எல்லாம் வல்லசித் தென்கோ
- திருச்சிற்றம் பலத்தமு தென்கோ
- தம்மையே உணர்ந்தார் உளத்தொளி என்கோ
- தமியனேன் தனித்துணை என்கோ
- இம்மையே அழியாத் திருஉரு அளித்திங்
- கென்னைஆண் டருளிய நினையே.
- அம்மதவேள் கணைஒன்றோ ஐங்கணையும் விடுத்தான்
- அருள்அடையும் ஆசையினால் ஆருயிர்தான் பொறுத்தாள்
- இம்மதமோ சிறிதும்இலாள் கலவியிலே எழுந்த
- ஏகசிவ போகவெள்ளத் திரண்டுபடாள் எனினும்
- எம்மதமோ எக்குலமோ என்றுநினைப் புளதேல்
- இவள்மதமும் இவள்குலமும் எல்லாமும் சிவமே
- சம்மதமோ தேவர்திரு வாய்மலர வேண்டும்
- சபையில்நடம் புரிகின்ற தனிப்பெரிய துரையே.
- அம்பலத்தே நடம்புரியும் எனதுதனித் தலைவர்
- அன்புடன்என் உளங்கலந்தே அருட்பெருஞ்சோ தியினால்
- தம்பலத்தே பெரும்போகந் தந்திடுவார் இதுதான்
- சத்தியஞ்சத் தியமதனால் சார்ந்தவர்தாம் இருக்க
- எம்பலத்தே மலரணையைப் புனைகஎனப் பலகால்
- இயம்புகின்றாள் இவள்அளவில் இசைந்துநும தருளாம்
- செம்பலத்தே உறுதருணம் வாய்மலர வேண்டும்
- சிற்சபைபொற் சபைஓங்கித் திகழ்பெரிய துரையே.
- அம்பலத்தே திருநடஞ்செய் அடிமலர்என் முடிமேல்
- அணிந்திடமுன் சிலசொன்னேன் அதனாலோ அன்றி
- எம்பலத்தே எம்மிறைவன் என்னைமணம் புரிவான்
- என்றுசொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன்
- வம்பிசைத்தேன் எனஎனது பாங்கிபகை யானாள்
- வளர்த்தெடுத்த தனித்தாயும் மலர்ந்துமுகம் பாராள்
- நிம்பமரக் கனியானார் மற்றையர்கள் எல்லாம்
- நிபுணர்எங்கள் நடராயர் நினைவைஅறிந் திலனே.
- அம்புவியி லேபுவியின் அடியிலே முடியிலே
- அம்மண்ட லந்தன்னிலே
- அகலத்தி லேபுவியின் அகிலத்தி லேஅவைக்
- கானவடி வாதிதனிலே
- விம்பமுற வேநிறைந் தாங்கவை நிகழ்ந்திட
- விளக்கும்அவை அவையாகியே
- மேலும்அவை அவையாகி அவைஅவைஅ லாததொரு
- மெய்ந்நிலையும் ஆனபொருளே
- தம்பமிசை எனைஏற்றி அமுதூற்றி அழியாத்
- தலத்திலுற வைத்தஅரசே
- சாகாத வித்தைக் கிலக்கண இலக்கியம்
- தானாய்இ ருந்தபரமே
- தொம்பதமும் உடனுற்ற தற்பதமும் அசிபதச்
- சுகமும்ஒன் றானசிவமே
- சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
- சோதிநட ராஜபதியே.
- அமரரும் முனிவரும் அதிசயித் திடவே
- அருட்பெருஞ் சோதியை அன்புடன் அளித்தே
- கமமுறு சிவநெறிக் கேற்றிஎன் றனையே
- காத்தென துளத்தினில் கலந்தமெய்ப் பதியே
- எமன்எனும் அவன்இனி இலைஇலை மகனே
- எய்ப்பற வாழ்கஎன் றியம்பிய அரசே
- சமரச சன்மார்க்க சங்கத்தின் முதலே
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- அம்மை திரோதை அகன்றாள் எனைவிரும்பி
- அம்மையருட் சத்தி அடைந்தனளே - இம்மையிலே
- மாமாயை நீங்கினள்பொன் வண்ணவடி வுற்றதென்றும்
- சாமா றிலைஎனக்குத் தான்.
- அம்பலம் சேர்ந்தேன் எம்பலம் ஆர்ந்தேன்
- அப்பனைக் கண்டேன் செப்பமுட் கொண்டேன்
- உம்பர் வியப்ப இம்பர் இருந்தேன்
- ஓதா துணர்ந்தேன் மீதானம் உற்றேன்
- நம்பிடில் அணைக்கும் எம்பெரு மானை
- நாயகன் தன்னைத் தாயவன் தன்னைப்
- பம்புறப் பாடிப் படிக்கின்றேன் மேலும்
- படிப்பேன் எனக்குப் படிப்பித்த வாறே.
- அம்பலத்தே ஆடுகின்ற ஆரமுதே அரசே
- ஆனந்த மாகடலே அறிவேஎன் அன்பே
- உம்பர்கட்கே அன்றிஇந்த உலகர்கட்கும் அருள்வான்
- ஒளிர்கின்ற ஒளியேமெய் உணர்ந்தோர்தம் உறவே
- எம்பலத்தே வாகிஎனக் கெழுமையும்நற் றுணையாய்
- என்உளத்தே விளங்குகின்ற என்இறையே நினது
- செம்பதத்தே மலர்விளங்கக் கண்டுகொண்டேன் எனது
- சிறுமைஎலாம் தீர்ந்தேமெய்ச் செல்வமடைந் தேனே.
- அம்மையு மாய்எனக் கப்பனு மாகிஎன்
- அன்பனு மாயினீர் வாரீர்
- அங்கண ரேஇங்கு வாரீர். வாரீர்
- அம்பர மானசி தம்பர நாடகம்
- ஆடவல் லீர்இங்கு வாரீர்
- பாடல்உ வந்தீரே298 வாரீர். வாரீர்
- அம்மையைக் கண்டேன் அவளருள் கொண்டேன்
- அமுதமும் உண்டேன டி - அம்மா
- அமுதமும் உண்டேன டி. ஆணி
- அம்பலவர் வந்தார்என்று சின்னம் பிடி
- அற்புதம்செய் கின்றார்என்று சின்னம் பிடி
- செம்பலன் அளித்தார்என்று சின்னம் பிடி
- சித்திநிலை பெற்றதென்று சின்னம் பிடி.
- அம்பலத்தில் எங்கள்ஐயர் ஆடியநல் லாட்டம்
- அன்பொடுது தித்தவருக் கானதுசொல் லாட்டம்
- வம்புசொன்ன பேர்களுக்கு வந்ததுமல் லாட்டம்
- வந்ததலை யாட்டமின்றி வந்ததுபல் லாட்டம்.
- அம்பலத் தரசே அருமருந் தே
- ஆனந்தத் தேனே அருள்விருந் தே.
- அம்பர விம்ப சிதம்பர நாதா
- அஞ்சித ரஞ்சித குஞ்சித பாதா.
- அம்பல வாசிவ மாதே வா
- வம்பல வாவிங்கு வாவா வா.
- அம்பலப் பாட்டே அருட்பாட்டு
- அல்லாத பாட்டெல்லாம் மருட்பாட்டு.
- அம்பல வாணணை நாடின னே
- அவனடி யாரொடும் கூடின னே.
- அம்பல வாணர்தம் அடியவ ரே
- அருளர சாள்மணி முடியவ ரே.
- அம்போ ருகபத அரகர கங்கர
- சம்போ சிவசிவ சிவசிவ சங்கர.
- அமலசபாபதி அபயசபாபதி அமுதசபாபதி அகிலசபாபதி
- நிமலசபாபதி நிபுணசபாபதி நிலயசபாபதி நிபிடசபாபதி.
- அம்பலத்தொருநடம் உருநடமே அருநடம் ஒருநடம் திருநடமே
- எம்பலத்தொருநடம் பெருநடமே இதன்பரத்திடுநடம் குருநடமே.
- அம்பலத்தே திருநடஞ்செய் அடிமலர்என் முடிமேல்
- அணிந்துகொண்டேன் அன்பொடும்என் ஆருயிர்க்கும் அணிந்தேன்
- எம்பரத்தே மணக்கும்அந்த மலர்மணத்தைத் தோழி
- என்உரைப்பேன் உரைக்கஎன்றால் என்னளவன் றதுவே
- வம்பிசைத்தேன் அன்றடிநீ என்அருகே இருந்துன்
- மணிநாசி அடைப்பதனைத் திறந்துமுகந் தறிகாண்
- நம்புறுபார் முதல்நாத வரையுளநாட் டவரும்
- நன்குமுகந் தனர்வியந்தார் நன்மணம்ஈ தெனவே.
- அம்மாநான் சொன்மாலை தொடுக்கின்றேன் நீதான்
- ஆர்க்கணிய என்கின்றாய் அறியாயோ தோழி
- இம்மாலை அம்பலத்தே எம்மானுக் கன்றி
- யார்க்கணிவேன் இதைஅணிவார் யாண்டைஉளார் புகல்நீ
- செம்மாப்பில் உரைத்தனைஇச் சிறுமொழிஎன் செவிக்கே
- தீநுழைந்தால் போன்றதுநின் சிந்தையும்நின் நாவும்
- பன்மாலைத் தத்துவத்தால் அன்றிரும்பொன் றாலே
- படைத்ததுனைப் பழக்கத்தால் பொறுத்தனன்என் றறியே.