- அராப்பள்ளி மேவு மவனின்று வாழ்த்தும்
- சிராப்பள்ளி ஞானத் தெளிவே - இராப்பள்ளி
- அருகாவூர் சூழ்ந்தே அழகுபெற வோங்கும்
- கருகாவூர் இன்பக் கதியே - முருகார்ந்த
- அர்த்தமா நீக்கரிய வாதார மாகிநின்ற
- வர்த்தமா நேச்சரத்து வாய்ந்தவனே - மித்தையுற்ற
- அரிதாகி அரியதினும் அரிய தாகி
- அநாதியாய் ஆதியாய் அருள தாகிப்
- பெரிதாகிப் பெரியதினும் பெரிய தாகிப்
- பேதமாய் அபேதமாய்ப் பிறங்கா நின்ற
- கரிதாகி வெளிதாகிக் கலைக ளாகிக்
- கலைகடந்த பொருளாகிக் கரணா தீதத்
- தெரிதான வெளிநடுவில் அருளாம் வண்மைச்
- செழுங்கிரணச் சுடராகித் திகழுந் தேவே.
- அருளருவி வழிந்துவழிந் தொழுக ஓங்கும்
- ஆனந்தத் தனிமலையே அமல வேதப்
- பொருளளவு நிறைந்தவற்றின் மேலும் ஓங்கிப்
- பொலிகின்ற பரம்பொருளே புரண மாகி
- இருளறுசிற் பிரகாச மயமாஞ் சுத்த
- ஏகாந்தப் பெருவெளிக்குள் இருந்த வாழ்வே
- தெருளளவும் உளமுழுதுங் கலந்து கொண்டு
- தித்திக்குஞ் செழுந்தேனே தேவ தேவே.
- அருமறையா கமங்கள்முதல் நடுவீ றெல்லாம்
- அமைந்தமைந்து மற்றவைக்கும் அப்பா லாகிக்
- கருமறைந்த உயிர்கள்தொறுங் கலந்து மேவிக்
- கலவாமல் பன்னெறியும் கடந்து ஞானத்
- திருமணிமன் றகத்தின்ப உருவாய் என்றும்
- திகழ்கருணை நடம்புரியும் சிவமே மோனப்
- பெருமலையே பரமஇன்ப நிலையே முக்கட்
- பெருமானே எத்திறத்தும் பெரிய தேவே.
- அருள்வெளியில் ஆனந்த வடிவி னால்நின்
- றாடுகின்ற பெருவாழ்வே அரசே இந்த
- மருள்வலையில் அகப்பட்ட மனத்தால் அந்தோ
- மதிகலங்கி மெய்ந்நிலைக்கோர் வழிகா ணாதே
- இருள்நெறியில் கோலிழந்த குருட்டூ மன்போல்
- எண்ணாதெல் லாம்எண்ணி ஏங்கி ஏங்கி
- உருள்சகடக் கால்போலுஞ் சுழலா நின்றேன்
- உய்யும்வகை அறியேனிவ் வொதிய னேனே.
- அருளுடைய பரம்பொருளே மன்றி லாடும்
- ஆனந்தப் பெருவாழ்வே அன்பு ளோர்தம்
- தெருளுடைய உளமுழுதும் கோயில் கொண்ட
- சிவமேமெய் அறிவுருவாம் தெய்வ மேஇம்
- மருளுடைய மனப்பேதை நாயி னேன்செய்
- வன்பிழையைச் சிறிதேனும் மதித்தி யாயில்
- இருளுடைய பவக்கடல்விட் டேறேன் என்னை
- ஏற்றுவதற் கெண்ணுகஎன் இன்பத் தேவே.
- அருளறி யாச்சிறு தேவருந் தம்மை அடுத்தவர்கட்
- கிருளறி யாவிளக் கென்றாலும் நெஞ்சம் இரங்குகின்றார்
- மருளறி யாப்பெருந் தேவேநின் தன்னடி வந்தடுத்தேன்
- தெருளறி யாச்சிறி யேன்ஆயி னுஞ்செய்க சீரருளே.
- அரும்பொரு ளேஎன் அரசேஎன் ஆருயிர்க் காகவந்த
- பெரும்பொரு ளேஅருட் பேறே சிவானந்தம் பெற்றவர்பால்
- வரும்பொரு ளேமுக்கண் மாமணி யேநின் வழியருளால்
- தரும்பொரு ளேபொருள் என்றுவந் தேன்எனைத் தாங்கிக்கொள்ளே.
- அருட்கட லேஅக் கடலமு தேஅவ் வமுதத்துற்ற
- தெருட்சுவை யேஅச் சுவைப்பய னேமறைச் சென்னிநின்ற
- பொருட்பத மேஅப் பதத்தர சேநின் புகழ்நினையா
- இருட்குண மாயை மனத்தே னையும்உவந் தேன்றுகொள்ளே.
- அருள்அர சேஅருட் குன்றேமன் றாடும் அருளிறையே
- அருள்அமு தேஅருட் பேறே நிறைந்த அருட்கடலே
- அருள்அணி யேஅருட் கண்ணேவிண் ணோங்கும் அருள்ஒளியே
- அருள்அற மேஅருட் பண்பேமுக் கண்கொள் அருட்சிவமே.
- அருள்செய் நீறிடார் அமுதுனக் கிடினும்
- அம்ம லத்தினை அருந்துதல் ஒழிக
- தெருள்கொள் நீறிடும் செல்வர்கூழ் இடினும்
- சேர்ந்து வாழ்த்திஅத் திருஅமு துண்க
- இருள்செய் துன்பநீத் தென்னுடை நாவே
- இன்ப நல்அமு தினிதிருந் தருந்தி
- மருள்செய் யானையின் தோலுடுத் தென்னுள்
- வதியும் ஈசன்பால் வாழுதற் பொருட்டே.
- அருள்பழுக்கும் கற்பகமே அரசே முக்கண்
- ஆரமுதே நினைப்புகழேன் அந்தோ வஞ்ச
- மருள்பழுக்கும் நெஞ்சகத்தேன் வாளா நாளை
- வாதமிட்டுக் கழிக்கின்றேன் மதியி லேனை
- வெருள்பழுக்கும் கடுங்காட்டில் விடினும் ஆற்று
- வெள்ளத்தில் அடித்தேக விடினும் பொல்லா
- இருள்பழுக்கும் பிலஞ்சேர விடினும் அன்றி
- என்செயினும் போதாதே எந்தாய் எந்தாய்.
- அரியது நினது திருவருள் ஒன்றே அவ்வருள் அடைதலே எவைக்கும்
- பெரியதோர் பேறென் றுணர்ந்திலேன் முருட்டுப் பேய்களை ஆயிரம்கூட்டிச்
- சரிஎனச் சொலினும் போதுறா மடமைத் தையலார் மையலில் அழுந்திப்
- பிரியமுற் றலைந்தேன் ஏழைநான் ஒற்றிப் பெருமநின் அருளெனக் குண்டே.
- அருள்வதுன் இயற்கை உலகெலாம் அறியும் ஐயவோ நான்அதை அறிந்தும்
- மருள்வதென் இயற்கை என்செய்வேன் இதனை மனங்கொளா தருள்அரு ளாயேல்
- தெருள்வதொன் றின்றி மங்கையர் கொங்கைத் திடர்மலைச் சிகரத்தில் ஏறி
- உருள்வதும் அல்குல் படுகுழி விழுந்தங் குலைவதும் அன்றிஒன் றுண்டோ.
- அருமருந் தனையாய் நின்திரு முன்போந் தரகர எனத்தொழல் மறந்தே
- இருளுறும் மனத்தேன் மலத்தினும் இழிந்த இயல்புற உண்டனன் அதனால்
- கருமருந் தனைய அஞ்செழுத் தோதும் கருத்தர்போல் திருத்தம தாகத்
- தருமநின் றோங்கும் ஒற்றியில் உன்னால் தண்டிக்கப் பட்டனன் அன்றே.
- அரந்தை யோடொரு வழிச்செல்வோன் தனைஓர்
- ஆற்று வெள்ளம்ஈர்த் தலைத்திட அவனும்
- பரந்த நீரிடை நின்றழு வானேல்
- பகைவர் ஆயினும் பார்த்திருப் பாரோ
- கரந்தை அஞ்சடை அண்ணல்நீர் அடியேன்
- கலங்கக் கண்டிருக் கின்றது கடனோ
- நரந்த மார்பொழில் ஒற்றியூர் உடையீர்
- ஞான நாடகம் நவிற்றுகின் றீரே.
- அரக்கன் அல்லன்யான் அரக்கனே எனினும்
- அரக்க னுக்கும்முன் அருள்அளித் தனையே
- புரக்க என்னைநின் அருட்கடன் என்றே
- போற்று கின்றனன் புலையரிற் புலையேன்
- உரக்க இங்கிழைத் திடும்பிழை எல்லாம்
- உன்னல் ஐயநீ உன்னிஎன் அளவில்
- இரக்கம் நின்திரு உளத்திலை யானால்
- என்செய் கேன்நர கிடைஇடும் போதே.
- அருள்பவன் நின்னை அல்லதை இங்கும்
- அங்கும்மற் றெங்கும்இன் றதுபோல்
- மருள்பவன் என்னை அல்லதை மண்ணும்
- வானமும் தேடினும் இன்றே
- இருள்பவம் உடையேன் என்செய்கேன் நின்தாள்
- இணைதுணை எனநினைந் துற்றேன்
- மருள்பவத் தொடும்என் துயர்அறுத் தாள்வாய்
- வாழிய அருட்பெருந் துறையே.
- அருள்பழுத் தோங்கும் ஆனந்தத் தருவே அற்புத அமலநித் தியமே
- தெருள்பழுத் தோங்கும் சித்தர்தம் உரிமைச் செல்வமே அருணையந் தேவே
- இருள்பழுத் தோங்கும் நெஞ்சினேன் எனினும் என்பிழை பொறுத்துநின் கோயில்
- பொருள்பழுத்தோங்கும் சந்நிதி முன்னர்ப்போந்துனைப் போற்றுமாறருளே.
- அருட்பெருங் கடலே ஆனந்த நறவே அடிநடு அந்தமுங் கடந்த
- தெருட்பெரு மலையே திருஅணா மலையில் திகழ்சுயஞ் சோதியே சிவனே
- மருட்பெருங் கடலின் மயங்குகின் றேன்என் மயக்கெலாம் ஒழிந்துவன் பிறவி
- இருட்பெருங் கடல்விட் டேறநின் கோயிற் கெளியனேன் வரவரம் அருளே.
- அருந்தி னால்அன்ப கங்குளிர் ஆனந்த
- விருந்தி னால்மகிழ் வித்தருள் அண்ணலே
- வருந்தி நாடவ ரும்பிணி நின்அருள்
- மருந்தி னால்அன்றி மற்றொன்றில் தீருமோ.
- அருளார் அமுதப் பெருங்கட லேதில்லை அம்பலத்தில்
- பொருளார் நடம்புரி புண்ணிய னேநினைப் போற்றுகிலேன்
- இருளார் மனத்தின் இடர்உழந் தேன்இனி யாதுசெய்கேன்
- மருளார் மலக்குடில் மாய்ந்திடில் உன்அருள் வாய்ப்பதற்கே.
- அருள்தரல் வேண்டும் போற்றிஎன் அரசே
- அடியனேன் மனத்தகத் தெழுந்த
- இருள்கெடல் வேண்டும் போற்றிஎந் தாயே
- ஏழையேன் நின்றனைப் பாடும்
- தெருள்உறல் வேண்டும் போற்றிஎன் அறிவே
- சிந்தைநைந் துலகிடை மயங்கும்
- மருள்அறல் வேண்டும் போற்றிஎன் குருவே
- மதிநதி வளர்சடை மணியே.
- அருளே வடிவாய் அம்பலத்தே ஆடும் பெருமான் அடிகள்தமைத்
- தெருளே வடிவாம் அடியவர்போல் சிறியேன் கண்டேன் சீர்உற்றேன்
- மருளே வடிவேன் ஆதலினால் மறந்தே பிரிந்தே மதிகெட்டேன்
- இருளேர் மனத்தேன் அவர்தமைநான் இன்னும் ஒருகால் காண்பேனோ.
- அருள்ஓர் சிறிதும் உதவுகிலாய் அதனைப் பெறுதற் கடியேன்பால்
- தெருள்ஓர் சிறிதும் இலையேஎன் செய்கேன் எங்கள் சிவனேயோ
- மருளோர் எனினும் தமைநோக்கி வந்தார்க் களித்தல் வழக்கன்றோ
- பொருளோர் இடத்தே மிடிகொண்டோர் புகுதல் இன்று புதிதன்றே.
- அரிய பெருமான் எளியோமை ஆளும் பெருமான் யாவர்கட்கும்
- பெரிய பெருமான் சிவபெருமான் பித்தப் பெருமான் என்றுன்னை
- உரிய பெருமா தவர்பழிச்சல் உண்மை எனில்என் உடையானே
- கரிய பெருமால் உடையேற்கும் அருளல் உன்றன் கடன்அன்றே.
- அருள்பழுத் தோங்கும் கற்பகத் தருவே
- அருண்மருந் தொளிர்குணக் குன்றே
- அருள்எனும் அமுதந் தரும்ஒரு கடலே
- அருட்கிர ணங்கொளும் சுடரே
- அருள்ஒளி வீசும் அரும்பெறன் மணியே
- அருட்சுவை கனிந்தசெம் பாகே
- அருள்மணம் வீசும் ஒருதனி மலரே
- அருண்மய மாம்பர சிவமே.
- அருளார் அமுதே அரசேநின் அடியேன் கொடியேன் முறையேயோ
- இருள்சேர் மனனோ டிடர்உழந்தேன் எந்தாய் இதுதான் முறையேயோ
- மருள்சேர் மடவார் மயலாலே மாழ்கின் றேன்நான் முறையேயோ
- தெருளோர் சிறிதும் அறியாதே திகையா நின்றேன் முறையேயோ.
- அருள்அ ளித்துமெய் யன்பர் தம்மைஉள்
- ளங்கை நெல்லிபோல் ஆக்கு கின்றதும்
- பொருள்அ ளித்துநான் மறையின் அந்தமே
- புகலு கின்றதோர் புகழ்அ ளிப்பதும்
- வெருள்அ ளித்திடா விமல ஞானவான்
- வெளியி லேவெளி விரவி நிற்பதாம்
- தெருள்அ ளிப்பதும் இருள்கெ டுப்பதும்
- சிவசி தம்பரம் சிவசி தம்பரம்.
- அருள்வடி வான மருந்து - நம்முள்
- அற்புத மாக அமர்ந்த மருந்து
- இருளற வோங்கும் மருந்து - அன்பர்க்
- கின்புரு வாக இருந்த மருந்து. - நல்ல
- அருளாலே அருளிறை அருள்கின்ற பொழுதங்
- கனுபவ மாகின்ற தென்னடி தாயே
- தெருளாலே மருளாலே தெரியாது தெரியும்
- திருநட இன்பம்என் றறியாயோ மகளே.
- அரவக் கழலார் கருங்களத்தார் அஞ்சைக் களத்தார் அரிபிரமர்
- பரவப் படுவார் திருஒற்றிப் பதியில் அமர்ந்தார் பாசுபதர்
- இரவு வருமுன் வருவாரோ என்னை அணைதற் கிசைவாரோ
- குரவ மணக்குங் குறமடவாய் குறிநீ ஒன்று கூறுவையே.
- அருள்நிறைந்த பெருந்தகையே ஆனந்த அமுதே
- அற்புதப்பொன் அம்பலத்தே ஆடுகின்ற அரசே
- தெருள்நிறைந்த சிந்தையிலே தித்திக்குந் தேனே
- செங்கனியே மதிஅணிந்த செஞ்சடைஎம் பெருமான்
- மருள்நிறைந்த மனக்கொடியேன் வஞ்சமெலாங் கண்டு
- மகிழ்ந்தினிய வாழ்வளித்த மாகருணைக் கடலே
- இருள்நிறைந்த மயக்கம்இன்னுந் தீர்த்தருளல் வேண்டும்
- என்னுடைய நாயகனே இதுதருணங் காணே.
- அரிபிரமா தியரெல்லாம் அறிந்தணுக ஒண்ணா
- அரும்பெருஞ்சீர் அடிமலர்கள் அன்றொருநாள் வருந்தக்
- கரிஇரவில் நடந்தருளி யானிருக்கு மிடத்தே
- கதவுதிறப் பித்தெனது கையில்ஒன்று கொடுத்து
- உரிமையொடு வாழ்கஎன உரைத்ததுவும் அன்றி
- உவந்தின்றை இரவினும்வந் துணர்த்தினைஎன் மீது
- பிரியமுனக் கிருந்தவண்ணம் என்புகல்வேன் பொதுவில்
- பெருநடஞ்செய் அரசேஎன் பிழைபொறுத்த குருவே.
- அருளுருவாய் ஐந்தொழிலும் நடத்துகின்ற அடிகள்
- அசைந்துவருந் திடஇரவில் யானிருக்கும் இடத்தே
- தெருளுருவின் நடந்துதெருக் கதவுதிறப் பித்துச்
- சிறியேனை அழைத்தெனது செங்கையில்ஒன் றளித்து
- மருளுருவின் மற்றவர்போல் மயங்கேல்என் மகனே
- மகிழ்ந்துதிரு அருள்வழியே வார்கஎன உரைத்தாய்
- இருளுருவின் மனக்கொடியேன் யாதுதவம் புரிந்தேன்
- எல்லாம்வல் லவனாகி இருந்தபசு பதியே.
- அருள்விளங்கும் உள்ளகத்தே அதுஅதுவாய் விளங்கும்
- அணிமலர்ச்சே வடிவருத்தம் அடையநடந் தருளிப்
- பொருள்விளங்கா நடுஇரவில் நானுறையும் இடத்தே
- போந்துதெருக் காப்பவிழ்க்கப் புரிந்தெனைஅங் கழைத்துத்
- தெருள்விளங்கும் ஒருபொருள்என் செங்கைதனில் அளித்தாய்
- சிவபெருமான் பெருங்கருணைத் திறத்தினைஎன் என்பேன்
- மருள்விளங்கி உணர்ச்சியுறத் திருமணிமன் றிடத்தே
- மன்னுயிர்க் கின்பருள வயங்குநடத் தரசே.
- அருளுதிக்குந் தருணத்தே அமுதவடி வாகி
- ஆனந்த மயமாகி அமர்ந்ததிரு வடிகள்
- இருளுதிக்கும் இரவினிடை வருந்தநடந் தருளி
- யானிருக்கும் மனைக்கதவந் திறப்பித்தங் கடைந்து
- மருளுதிக்கும் மனத்தேனை வரவழைத்து நோக்கி
- மகிழ்ந்தெனது கரத்தொன்று வழங்கியசற் குருவே
- தெருளுதிக்கும் மணிமன்றில் திருநடஞ்செய் அரசே
- சிவபெருமான் நின்கருணைத் திறத்தைவியக் கேனே .
- அருளுடைய நாயகிஎன் அம்மைஅடி யார்மேல்
- அன்புடையாள் அமுதனையாள் அற்புதப்பெண் ணரசி
- தெருளுடைய சிந்தையிலே தித்திக்கும் பதத்தாள்
- சிவகாம வல்லிபெருந் தேவிஉளங் களிப்ப
- மருளுடைய மாயையெலாந் தேயமணி மன்றின்
- மாநடஞ்செய் துரையேநின் மன்னருளின் திறத்தை
- இருளுடைய மனச்சிறியேன் பாடுகின்றேன் பருவம்
- எய்தினன்என் றறிஞரெலாம் எண்ணிமதித் திடவே.
- அருளுடையாய் அடியேன்நான் அருளருமை அறியேன்
- அறியாதே மறுத்தபிழை அத்தனையும் பொறுத்து
- மருளுடையேன் தனைஅழைத்துத் திரும்பவும்என் கரத்தே
- மகிழ்ந்தளித்த பெருங்கருணை வண்ணம்என்றன் மனமும்
- தெருளுடைய கண்களும்விட் டகலாதே இன்னும்
- தெரிகின்ற தாயினும்என் சிந்தைஉரு கிலதே
- இருளுடைய சிலையும்இதற் குருகல்அரி தலவே
- இனித்தநடம் புரிந்துமன்றில் தனித்தசிவக் கொழுந்தே.
- அரசேநின் திருவருளின் அருமைஒன்றும் அறியேன்
- அறியாதே மறுத்தபிழை அத்தனையும் பொறுத்து
- விரவும்அன்பில் எனைஅழைத்து வலியவும்என் கரத்தே
- வியந்தளித்த பெருங்கருணை விளக்கம்என்றன் மனமும்
- உரவுமலர்க் கண்களும்விட் டகலாதே இன்னும்
- ஒளிர்கின்ற தாயினும்என் உள்ளம்உரு கிலதே
- இரவுநிறத் தவரும்இதற் குருகல்அரி தலவே
- இனித்தநடம் புரிந்துமன்றில் தனித்தசிவக் கொழுந்தே.
- அருள்வழங்குந் திலகவதி அம்மை யார்பின்
- அவதரித்த மணியெசொல் லரசே ஞானத்
- தெருள்வழங்கும் சிவநெறியை விளக்க வந்த
- செழுஞ்சுடர்மா மணிவிளக்கே சிறிய னேனை
- இருள்வழங்கும் உலகியல்நின் றெடுத்து ஞான
- இன்னருள்தந் தாண்டருள்வாய் இன்றேல் அந்தோ
- மருள்வழங்கும் பவநெறியிற் சுழல்வேன் உய்யும்
- வகைஅறியேன் நின்னருட்கு மரபன் றீதே.
- அரைசே அடியர்க் கருள்குகனே அண்ணா தணிகை ஐயாவே
- விரைசேர் கடம்ப மலர்ப்புயனே வேலா யுதக்கை மேலோனே
- புரைசேர் மனத்தால் வருந்திஉன்றன் பூம்பொற் பதத்தைப் புகழ்கில்லேன்
- தரைசேர் வாழ்வில் தயங்குகின்றேன் அந்தோ நின்று தனியேனே.
- அரும்பாய நகைமடவார்க் காளாய் வாளா
- அலைகின்றேன் அறிவென்ப தறியேன் நின்பால்
- திரும்பாத பாதகனேன் திருஒன் றில்லேன்
- திருத்தணிகை மலைக்கேகச் சிந்தை செய்யேன்
- கரும்பாய வெறுத்துவேம் பருந்தும் பொல்லாக்
- காக்கைஒத்தேன் சற்றேனும் கனிதல் இல்லா
- இரும்பாய வன்நெஞ்சக் கள்வ னேன்யான்
- ஏன்பிறந்தேன் புவிச்சுமையா இருக்கின் றேனே.
- அருகா மலத்தின் அலைந்திரக்கம் அறியா வஞ்ச நெஞ்சகர்பால்
- உருகா வருந்தி உழன்றலைந்தேன் உன்தாள் அன்றித் துணைகாணேன்
- பெருகா தரவில் சிவன்பெறும்நற் பேறே தணிகைப் பெருவாழ்வே
- முருகா முகம்மூ விரண்டுடையாய் முறையோ முறையோ முறையேயோ.
- அரைமதிக் குறழும் ஒண்ணுதல் வாட்கண்
- அலர்முலை அணங்கனார் அல்குல்
- புரைமதித் துழலும் மனத்தினை மீட்டுன்
- பொன்னடிக் காக்கும்நாள் உளதோ
- பரைமதித் திடஞ்சேர் பராபரற் கருமைப்
- பாலனே வேலுடை யவனே
- விரைமதித் தோங்கும் மலர்ப்பொழில் தணிகை
- வெற்பினில் ஒளிரும்மெய் விளக்கே.
- அரும்பெறல் மணியை அமுதினை அன்பர்
- அன்பினுக் கெளிவரும் அரசை
- விரும்புமா தவத்தோர் உள்ளகத் தொளிரும்
- விளக்கினை அளக்கரும் பொருளைக்
- கரும்பினை என்னுட் கனிந்திடும் கனியை
- முனிந்திடா தருள்அருட் கடலைத்
- தரும்பர சிவத்துள் கிளர்ந்தொளிர் ஒளியைத்
- தணிகையில் கண்டிறைஞ் சுவனே.
- அருளார் அமுதே சரணம் சரணம்
- அழகா அமலா சரணம் சரணம்
- பொருளா எனைஆள் புனிதா சரணம்
- பொன்னே மணியே சரணம் சரணம்
- மருள்வார்க் கரியாய் சரணம் சரணம்
- மயில்வா கனனே சரணம் சரணம்
- கருணா லயனே சரணம் சரணம்
- கந்தா சரணம் சரணம் சரணம்
- அருணன் உதித்தனன் அன்பர்கள் சூழ்ந்தனர்
- ஆறுமுகத் தோரே வாரும்
- மாறில்அகத் தோரே வாரும்.
- அருளுறுங் கயமுகத் தண்ணல் பாதமும்
- பொருளுறு சண்முகப் புனிதன் தாள்களும்
- தெருளுறு சிவபிரான் செம்பொற் கஞ்சமும்
- மருளற நாடொறும் வணங்கி வாழ்த்துவாம்.
- அரங்காய மனமாயை அளக்கர் ஆழம்
- அறியாமல் காலிட்டிங் கழுந்து கின்றேன்
- இரங்காயோ சிறிதும்உயிர் இரக்கம் இல்லா
- என்மனமோ நின்மனமும் இறைவி உன்றன்
- உரங்காணும் அரசியற்கோல் கொடுங்கோல் ஆனால்
- ஓடிஎங்கே புகுந்தெவருக் குரைப்ப தம்மா
- திரங்காணாப் பிள்ளைஎனத் தாய்வி டாளே
- சிவகாம வல்லிஎனும் தெய்வத் தாயே.
- அருளே அறிவே அன்பேதெள் ளமுதே மாதர் அரசேமெய்ப்
- பொருளே தெருளே மாற்றறியாப் பொன்னே மின்னே பூங்கிளியே
- இருளேய் மனத்தில் எய்தாத இன்பப் பெருக்கே இவ்வடியேன்
- மருளே தவிர்த்த சிவகாம வல்லி நினக்கே வந்தனமே.
- அருட்பெருஞ் ஜோதி யருட்பெருஞ் சோதி
- அருட்பெருஞ் ஜோதி யருட்பெருஞ் ஜோதி
- அருட்சிவ நெறிசா ரருட்பெரு நிலைவாழ்
- அருட்சிவ பதியா மருட்பெருஞ் ஜோதி
- அருளொளி யென்றனி யறிவினில் விரித்தே
- அருணெறி விளக்கெனு மருட்பெருஞ் ஜோதி
- அருட்பேர் தரித்துல கனைத்து மலர்ந்திட
- அருட்சீ ரளித்த வருட்பெருஞ் ஜோதி
- அருவினுள் ளருவும் மருவதி லருவும்
- அருளிய லமைத்த வருட்பெருஞ் ஜோதி
- அருவினு ளருவா யருவரு வருவாய்
- உருவினுள் விளங்கு மொருபரம் பொருளே
- அருளமு தெனக்கே யளித்தரு ணெறிவாய்த்
- தெருளுற வளர்க்குஞ் சிவமே சிவமே
- அருளலா தணுவு மசைந்திடா ததனால்
- அருணலம் பரவுகென் றறைந்தமெய்ச் சிவமே
- அருளுறி னெல்லா மாகுமீ துண்மை
- அருளுற முயல்கவென் றருளிய சிவமே
- அருணெறி யொன்றே தெருணெறி மற்றெலாம்
- இருணெறி யெனவெனக் கியம்பிய சிவமே
- அருள்பெறிற் றுரும்புமோ ரைந்தொழில் புரியுந்
- தெருளிது வெனவே செப்பிய சிவமே
- அருளறி வொன்றே யறிவுமற் றெல்லாம்
- மருளறி வென்றே வகுத்தமெய்ச் சிவமே
- அருட்சுக மொன்றே யரும்பெறற் பெருஞ்சுகம்
- மருட்சுகம் பிறவென வகுத்தமெய்ச் சிவமே
- அருட்பே றதுவே யரும்பெறற் பெரும்பே
- றிருட்பே றறுக்குமென் றியம்பிய சிவமே
- அருட்டனி வல்லப மதுவே யெலாஞ்செய்
- பொருட்டனிச் சித்தெனப் புகன்றமெய்ச் சிவமே
- அருளறி யார்தமை யறியார் எம்மையும்
- பொருளறி யாரெனப் புகன்றமெய்ச் சிவமே
- அருணிலை யொன்றே யனைத்தும் பெறுநிலை
- பொருணிலை காண்கெனப் புகன்றமெய்ச் சிவமே
- அருள்வடி வதுவே யழியாத் தனிவடி
- வருள்பெற முயலுகென் றருளிய சிவமே
- அருளே நம்மிய லருளே நம்முரு
- அருளே நம்வடி வாமென்ற சிவமே
- அருளே நம்மடி யருளே நம்முடி
- அருளே நம்நடு வாமென்ற சிவமே
- அருளே நம்மறி வருளே நம்மனம்
- அருளே நங்குண மாமென்ற சிவமே
- அருளே நம்பதி யருளே நம்பதம்
- அருளே நம்மிட மாமென்ற சிவமே
- அருளே நந்துணை யருளே நந்தொழில்
- அருளே நம்விருப் பாமென்ற சிவமே
- அருளே நம்பொரு ளருளே நம்மொளி
- அருளே நாமறி வாயென்ற சிவமே
- அருளே நங்குல மருளே நம்மினம்
- அருளே நாமறி வாயென்ற சிவமே
- அருளே நஞ்சுக மருளே நம்பெயர்
- அருளே நாமறி வாயென்ற சிவமே
- அருளொளி யடைந்தனை யருளமு துண்டனை
- அருண்மதி வாழ்கவென் றருளிய சிவமே
- அருணிலை பெற்றனை யருள்வடி வுற்றனை
- அருளர சியற்றுகென் றருளிய சிவமே
- அருளமு தேமுத லைவகை யமுதமும்
- தெருளுற வெனக்கருள் செல்வனற் றாயே
- அருளொளி விளங்கிட வாணவ மெனுமோர்
- இருளற வென்னுளத் தேற்றிய விளக்கே
- அருளமு தளித்தனை யருணிலை யேற்றினை
- அருளறி வளித்தனை யருட்பெருஞ் ஜோதி
- அருட்பெருஞ் ஜோதி யருட்பெருஞ் ஜோதி
- அருட்பெருஞ் ஜோதி யருட்பெருஞ் ஜோதி
- அருட்பெரு வெளியில் அருட்பெரு உலகத்
- தருட்பெருந் தலத்துமேல் நிலையில்
- அருட்பெரும் பீடத் தருட்பெரு வடிவில்
- அருட்பெருந் திருவிலே அமர்ந்த
- அருட்பெரும் பதியே அருட்பெரு நிதியே
- அருட்பெருஞ் சித்திஎன் அமுதே
- அருட்பெருங் களிப்பே அருட்பெருஞ் சுகமே
- அருட்பெருஞ் சோதிஎன் அரசே.
- அரங்கினிற் படைகொண் டுயிர்க்கொலை புரியும் அறக்கடை யவரினுங் கடையேன்
- இரங்கில்ஓர் சிறிதும் இரக்கம்உற் றறியேன் இயலுறு நாசியுட் கிளைத்த
- சிரங்கினிற் கொடியேன் சிவநெறி பிடியேன் சிறுநெறிச் சழக்கையே சிலுகுக்
- குரங்கெனப் பிடித்தேன் அம்பலக் கூத்தன் குறிப்பினுக் கென்கட வேனே.
- அரசர்எலாம் மதித்திடப்பே ராசையிலே அரசோ
- டால்எனவே மிகக்கிளைத்தேன் அருளறியாக் கடையேன்
- புரசமரம் போற்பருத்தேன் எட்டிஎனத் தழைத்தேன்
- புங்கெனவும் புளிஎனவும் மங்கிஉதிர் கின்றேன்
- பரசும்வகை தெரிந்துகொளேன் தெரிந்தாரைப் பணியேன்
- பசைஅறியாக் கருங்கல்மனப் பாவிகளிற் சிறந்தேன்
- விரசுநிலத் தேன்பிறந்தேன் நின்கருத்தை அறியேன்
- வியக்குமணி மன்றோங்கி விளங்குபரம் பொருளே.
- அரைசெலாம் வழங்கும் தனிஅர சதுநின்
- அருளர செனஅறிந் தனன்பின்
- உரைசெய்நின் அருள்மேல் உற்றபே ராசை
- உளம்எலாம் இடங்கொண்ட தெந்தாய்
- வரைசெயா மேன்மேல் பொங்கிவாய் ததும்பி
- வழிகின்ற தென்வசங் கடந்தே
- இரைசெய்என் ஆவி தழைக்கஅவ் வருளை
- ஈந்தருள் இற்றைஇப் போதே.
- அருளினை அளிக்கும் அப்பனே உலகில் அன்புளார் வலிந்தெனக் கீந்த
- பொருளினை வாங்கிப் போனபோ தெல்லாம் புழுங்கிய புழுக்கம்நீ அறிவாய்
- மருளும்அப் பொருளைச் சாலகத் தெறிந்து மனமிகஇளைத்ததும்பொருளால்
- இருளுரும் எனநான் உளம்நடுங் கியதும் எந்தைநின் திருவுளம் அறியும்.
- அரைசேநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
- அருட்பெருஞ்சோ தியைப்பெற்றே அகமகிழ்தல்வேண்டும்
- வரைசேர்எவ் வுலகமும்ஓர் ஒழுக்கமுறல் வேண்டும்
- மடிந்தாரை மீளவும்நான் வருவித்தல் வேண்டும்
- புரைசேரும் கொலைநெறியும் புலைநெறியும் சிறிதும்
- பொருந்தாமல் எவ்வுயிரும் புரிந்துவத்தல் வேண்டும்
- உரைசேர்மெய்த் திருவடிவில் எந்தாயும் நானும்
- ஒன்றாகி எஞ்ஞான்றும் ஓங்குதல்வேண் டுவனே.
- அருளாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
- அணுத்துணையும் சினங்காமம் அடையாமை வேண்டும்
- மருளாய உலகமெலாம் மருள்நீங்கி ஞான
- மன்றிடத்தே வள்ளல்உனை வாழ்த்தியிடல் வேண்டும்
- இருளாமை உறல்வேண்டும் எனைஅடுத்தார் சுகம்வாய்ந்
- திடல்வேண்டும் எவ்வுயிரும் இன்படைதல் வேண்டும்
- பொருளாம்ஓர் திருவடிவில் உடையாயும் நானும்
- புணர்ந்துகலந் தொன்றாகிப் பொருந்துதல்வேண் டுவனே.
- அருளே வடிவாம் அரசேநீ அருளா விடில்இவ் வடியேனுக்
- கிருளே தொலைய அருளளிப்பார் எவரே எல்லாம் வல்லோய்நின்
- பொருளேய் வடிவிற் கலைஒன்றே புறத்தும் அகத்தும் புணர்ந்தெங்குந்
- தெருளே யுறஎத் தலைவருக்குஞ் சிறந்த அருளாய்த் திகழ்வதுவே.
- அரிபிரமர் உருத்திரரும் அறிந்துகொள மாட்டா
- தலமரவும் ஈதென்ன அதிசயமோ மலத்தில்
- புரிபுழுவில் இழிந்தேனைப் பொருளாக்கி அருளாம்
- பொருள்அளிக்கப் பெற்றனன்இப் புதுமைபிறர் அறியா
- துரிமைபெற இருப்பன்என உள்இருந்த என்னை
- உலகறிய வெளியில்இழுத் தலகில்விருத் தியினால்
- வரிதலையிட் டாட்டுகின்ற விதியைநினைந் தையோ
- மனம்ஆலை பாய்வதுகாண் மன்றில் நடத் தரசே.
- அருள்விளக்கே அருட்சுடரே அருட்சோதிச் சிவமே
- அருளமுதே அருள்நிறைவே அருள்வடிவப் பொருளே
- இருள்கடிந்தென் உளமுழுதும் இடங்கொண்ட பதியே
- என்அறிவே என்உயிரே எனக்கினிய உறவே
- மருள்கடிந்த மாமணியே மாற்றறியாப் பொன்னே
- மன்றில்நடம் புரிகின்ற மணவாளா எனக்கே
- தெருள்அளித்த திருவாளா ஞானஉரு வாளா
- தெய்வநடத் தரசேநான் செய்மொழிஏற் றருளே.
- அருளுடையார் எல்லாரும் சமரசசன் மார்க்கம்
- அடைந்தவரே ஆதலினால் அவருடனே கூடித்
- தெருளுடைய அருள்நெறியில் களித்துவிளை யாடிச்
- செழித்திடுக வாழ்கஎனச் செப்பியசற் குருவே
- பொருளுடைய பெருங்கருணைப் பூரணமெய்ச் சிவமே
- போதாந்த முதல்ஆறும் நிறைந்தொளிரும் ஒளியே
- மருளுடையார் தமக்குமருள் நீக்கமணிப் பொதுவில்
- வயங்குநடத் தரசேஎன் மாலையும்ஏற் றருளே.
- அருளரசை அருட்குருவை அருட்பெருஞ் சோதியைஎன்
- அம்மையைஎன் அப்பனைஎன் ஆண்டவனை அமுதைத்
- தெருளுறும்என் உயிரைஎன்றன் உயிர்க்குயிரை எல்லாம்
- செய்யவல்ல தனித்தலைமைச் சித்தசிகா மணியை
- மருவுபெரு வாழ்வைஎல்லா வாழ்வும்எனக் களித்த
- வாழ்முதலை மருந்தினைமா மணியைஎன்கண் மணியைக்
- கருணைநடம் புரிகின்ற கனகசபா பதியைக்
- கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.
- அருளெலாம் அளித்த அம்பலத் தமுதை
- அருட்பெருஞ் ஜோதியை அரசே
- மருளெலாம் தவிர்த்து வாழ்வித்த மருந்தை
- வள்ளலை மாணிக்க மணியைப்
- பொருளெலாம் கொடுத்தென் புந்தியில் கலந்த
- புண்ணிய நிதியைமெய்ப் பொருளைத்
- தெருளெலாம் வல்ல சித்தைமெய்ஞ் ஞான
- தீபத்தைக் கண்டுகொண் டேனே.
- அருட்சோதித் தெய்வம்எனை ஆண்டுகொண்ட தெய்வம்
- அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்தத் தெய்வம்
- பொருட்சாரும் மறைகளெலாம் போற்றுகின்ற தெய்வம்
- போதாந்தத் தெய்வம்உயர் நாதாந்தத் தெய்வம்
- இருட்பாடு நீக்கிஒளி ஈந்தருளுந் தெய்வம்
- எண்ணியநான் எண்ணியவா றெனக்கருளுந் தெய்வம்
- தெருட்பாடல் உவந்தெனையும் சிவமாக்கும் தெய்வம்
- சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.
- அருள்வளர் திருச்சிற் றம்பலத் தோங்கும்
- அரும்பெருஞ் சோதியே எனது
- பொருள்வளர் அறிவுக் கறிவுதந் தென்னைப்
- புறம்விடா தாண்டமெய்ப் பொருளே
- மருவும்ஓர் நாத வெளிக்குமேல் வெளியில்
- மகிழ்ந்தர சாள்கின்ற வாழ்வே
- பருவரல் நீக்கி இனித்திட எனக்கே
- பழுத்தபே ரானந்தப் பழமே.
- அரும்பிலே மலர்வுற் றருள்மணம் வீசும்
- ஆனந்தத் தனிமலர் என்கோ
- கரும்பிலே எடுத்த சுவைத்திரள் என்கோ
- கடையனேன் உடையநெஞ் சகமாம்
- இரும்பிலே பழுத்துப் பேரொளி ததும்பி
- இலங்கும்ஓர் பசும்பொனே என்கோ
- துரும்பினேன் பெற்ற பெரும்பதம் என்கோ
- சோதியுட் சோதிநின் றனையே.
- அருட்பெருஞ் சோதி அமுதமே அமுதம்
- அளித்தெனை வளர்த்திட அருளாம்
- தெருட்பெருந் தாய்தன் கையிலே கொடுத்த
- தெய்வமே சத்தியச் சிவமே
- இருட்பெரு நிலத்தைக் கடத்திஎன் றனைமேல்
- ஏற்றிய இன்பமே எல்லாப்
- பொருட்பெரு நெறியும் காட்டிய குருவே
- பொதுநடம் புரிகின்ற பொருளே.
- அருளே பழுத்த சிவதருவில் அளிந்த பழந்தந் தடியேனைத்
- தெருளே சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
- மருளே முதலாம் தடைஎல்லாம் தீர்ந்தேன் நின்பால் வளர்கின்றேன்
- பொருளே இனிநின் தனைப்பாடி ஆடும் வண்ணம் புகலுகவே.
- அரும்பொன்அனை யார்எனது துரைவரும்ஓர் சமயம்
- அகலநின்மின் அணங்கனையீர் என்றஅத னாலோ
- இரும்புமணம் ஆனாலும் இளகிவிடுங் கண்டால்
- என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
- கரும்பனையாள் பாங்கியும்நாய்க் கடுகனையாள் ஆனாள்
- களித்தென்னை வளர்த்தவளும் புளித்தின்றாள் ஒத்தாள்
- விரும்புகின்ற பெண்களெலாம் அரும்புகின்றார் அலர்தான்
- வித்தகர்என் நடராயர் சித்தம்அறிந் திலனே.
- அருளாளர் பொற்பொதுவில் அற்புதநா டகஞ்செய்
- ஆனந்த வண்ணர்எனை ஆளுடையார் சிறியேன்
- தெருளாத பருவத்தே தெருட்டிமணம் புரிந்த
- சீராளர் அவர்பெருமைத் திறத்தைஎவர் புகல்வார்
- மருளாத ஆகமங்கள் மாமறைகள் எல்லாம்
- மருண்டனவே என்னடிஎன் மனவாக்கின் அளவோ
- இருளாமை என்றுறுமோ அன்றுசிறி துரைப்பேன்
- என்னவும்நாண் ஈர்ப்பதிதற் கென்புரிவேன் தோழி.
- அருட்பெருஞ் சோதிஎன் ஆருயி ரில்கலந் தாடுகின்ற
- அருட்பெருஞ் சோதிஎன் அன்பிற் கலந்தறி வாய்விளங்கும்
- அருட்பெருஞ் சோதித்தெள் ளாரமு தாகிஉள் அண்ணிக்கின்ற
- அருட்பெருஞ் சோதிநின் ஆசைஒன் றேஎன்னுள் ஆர்கின்றதே.
- அருள்அளித்தான் அன்பளித்தான் அம்பலத்தான் உண்மைப்
- பொருள்அளித்தான் என்னுட் புணர்ந்தான் - தெருள்அளித்தான்
- எச்சோ தனையும் இயற்றாமல் ஆண்டுகொண்டான்
- அச்சோ எனக்கவன்போல் ஆர்.
- அருளோங்கு கின்ற தருட்பெருஞ் சோதி யடைந்ததென்றன்
- மருளோங்கு றாமல் தவிர்த்தது நல்ல வரமளித்தே
- பொருளோங்கி நான்அருட் பூமியில் வாழப் புரிந்ததென்றும்
- தெருளோங்க ஓங்குவ துத்தர ஞான சிதம்பரமே.
- அருணா டறியா மனக்குரங்கை அடக்கத் தெரியா ததனொடுசேர்ந்
- திருணா டனைத்தும் சுழன்றுசுழன் றிளைத்துக் களைத்தேன் எனக்கந்தோ
- தெருணா டுலகில் மரணம்உறாத் திறந்தந் தழியாத் திருஅளித்த
- கருணா நிதியே நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.
- அருளும் பொருளும் யான்பெறவே அடுத்த தருணம் இதுஎன்றே
- தெருளும் படிநின் அருள்உணர்த்தத் தெரிந்தேன் துன்பத் திகைப்பொழிந்தேன்
- மருளும் மனந்தான் என்னுடைய வசத்தே நின்று வயங்கியதால்
- இருளும் தொலைந்த தினிச்சிறிதும் இளைக்க மாட்டேன் எனக்கருளே.
- அருளே உணர்த்த அறிந்துகொண்டேன் அடுத்த தருணம் இதுஎன்றே
- இருளே தொலைந்த திடர்அனைத்தும் எனைவிட் டகன்றே ஒழிந்தனவால்
- தெருளே சிற்றம் பலத்தாடும் சிவமே எல்லாம் செய்யவல்ல
- பொருளே இனிநான் வீண்போது போக்க மாட்டேன் கண்டாயே.
- அருளோங்கு தண்ணமுதம் அன்பால் அருந்தி
- மருள்நீங்கி நான்களித்து வாழப் - பொருளாந்
- தவநேயர் போற்றும் தயாநிதியே எங்கள்
- சிவனே கதவைத் திற.
- அருட்பெருஞ் சோதி அபயம் அபயம்
- பொருட்பெருஞ் சோதிப் புணைதந் - திருட்பெருங்கார்
- அள்ளற் கடல்கடத்தி அக்கரைமேல் ஆனந்தம்
- கொள்ளற் கபயங் கொடு.
- அருள்நிலை விளங்குசிற் றம்பலம்எ னுஞ்சிவ
- சுகாதீத வெளிநடுவிலே
- அண்டபகி ரண்டகோ டிகளும் சராசரம்
- அனைத்தும்அவை ஆக்கல்முதலாம்
- பொருள்நிலைச் சத்தரொடு சத்திகள் அனந்தமும்
- பொற்பொடுவி ளங்கிஓங்கப்
- புறப்புறம் அகப்புறம் புறம்அகம் இவற்றின்மேல்
- பூரணா காரமாகித்
- தெருள்நிலைச் சச்சிதா னந்தகிர ணாதிகள்
- சிறப்பமுதல் அந்தம்இன்றித்
- திகழ்கின்ற மெய்ஞ்ஞான சித்திஅனு பவநிலை
- தெளிந்திட வயங்குசுடரே
- சுருள்நிலைக் குழலம்மை ஆனந்த வல்லிசிவ
- சுந்தரிக் கினியதுணையே
- சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
- சோதிநட ராஜபதியே.
- அருட்பெ ருந்தனிச் சோதிஅம் பலத்திலே நடிக்கும்
- பொருட்பெ ருந்திரு நடமது போற்றுவீர் புலவீர்
- மருட்பெ ரும்பகை நீக்கிமெய் வாழ்வுபெற் றிடலாம்
- தெருட்பெ ரும்பதத் தாணைஈ தறிமினோ தெளிந்தே.
- அருள்வி ளங்கிய திருச்சிற்றம் பலத்திலே அழியாப்
- பொருள்வி ளங்குதல் காண்மினோ காண்மினோ புவியீர்
- மருள்உ ளங்கொளும் வாதனை தவிர்ந்தருள் வலத்தால்
- தெருள்வி ளங்குவீர் ஞானசன் மார்க்கமே தெளிமின்.
- அருட்பெருங் கடலே என்னை ஆண்டசற் குருவே ஞானப்
- பொருட்பெருஞ் சபையில் ஆடும் பூரண வாழ்வே நாயேன்
- மருட்பெரு மாயை முற்றும் மடிந்தன வினைக ளோடே
- இருட்பெருந் தடையை நீக்கி இரவியும் எழுந்த தன்றே.
- அருட்பெருஞ் சோதி அபயம் அபயம்
- அருட்பெருஞ் சோதி அபயம் - அருட்பெருஞ்
- சோதி அபயம்சிற் சோதி அபயம்பொற்
- சோதி அபயம் துணை.
- அருளா ரமுதே என்னுடைய அன்பே என்றன் அறிவேஎன்
- பொருளாய் அகத்தும் புறத்தும்என்னைப் புணர்ந்த கருணைப் பொருப்பேமெய்த்
- தெருளாம் ஒளியே வெளியாகச் சிற்றம் பலத்தே நடிக்கின்றோய்
- இருளா யினஎல் லாம்தவிர்த்தென் எண்ணம் முடிப்பாய் இப்போதே.
- அருட்பெருஞ் சோதிஎன் அம்மையி னோடறி வானந்தமாம்
- அருட்பெருஞ் சோதிஎன் அப்பன்என் உள்ளத் தமர்ந்தன்பினால்
- அருட்பெருஞ் சோதித்தெள் ளாரமு தம்தந் தழிவற்றதோர்
- அருட்பெருஞ் சோதிச்செங் கோலும் கொடுத்தனன் அற்புதமே.
- அருட்பெருஞ் சோதிஎன் அகத்தில் ஓங்கின
- மருட்பெரும் திரைஎலாம் மடிந்து நீங்கின
- இருட்பெரு மலமுதல் யாவும் தீர்ந்தன
- தெருட்பெரும் சித்திகள் சேர்ந்த என்னையே.
- அருந்தவர் காண்டற் கரும்பெருங்கருணை
- அருட்பெருஞ் சோதிஎன் உளத்தே
- இருந்தனன் அம்மா நான்செய்த தவந்தான்
- என்னையோ என்னையோ என்றாள்
- திருந்துதெள் ளமுதுண் டழிவெலாந் தவிர்த்த
- திருவுரு அடைந்தனன் ஞான
- மருந்துமா மணியும் மந்திர நிறைவும்
- வாய்த்தன வாய்ப்பின்என் றாளே.
- அரசே உன்னை அணைக்க எனக்குள் ஆசை பொங்கு தே
- அணைப்போம் என்னும் உண்மை யால்என் ஆவி தங்கு தே
- விரைசேர் பாதம் பிடிக்க என்கை விரைந்து நீளு தே
- மேவிப் பிடித்துக் கொள்ளுந் தோறும் உவகை ஆளு தே.
- எனக்கும் உனக்கும்
- அருளார் சோதி என்னுள் விளங்க அளித்த காலத் தே
- அடியேன் குறைகள் யாவும் தவிர்ந்த திந்த ஞாலத் தே
- பொருளாய் எனையும் நினைக்க வந்த புதுமை என்னை யோ
- பொன்னென் றைய மதிப்ப துதவாத் துரும்பு தன்னை யோ.
- எனக்கும் உனக்கும்
- அருளாம் பெரிய வெளிக்குள் சோதி வடிவ னாகி யே
- அரசு செலுத்தும் தனித்த தலைமைப் பரம யோகி யே
- பொருளாய் எனையும் உளங்கொண் டளித்த புனித நாத னே
- போற்று நாத முடிவில் நடஞ்செய் கமல பாத னே.
- எனக்கும் உனக்கும்
- அருளும் பொருளும் பெற்றேன் அடிய னாகி நானு மே
- அஞ்சேன் மாயை வினைகட் கொருசிற் றளவ தேனு மே
- இருளும் நிறத்துக் கூற்றைத் துரத்தி அருள்சிற் சோதி யே
- என்றன் அகத்தும் புறத்தும் விளங்கு கின்ற தாதி யே.
- எனக்கும் உனக்கும்
- அருட்பெருஞ் சோதிஎன் ஆண்டவ ரேதிரு
- அம்பல வாணரே வாரீர்
- அன்புடை யாளரே வாரீர். வாரீர்
- அரைக்கணமும் தரியேன்நான் அணையவா ரீர்
- ஆணைஉம்மேல் ஆணைஎன்னை அணையவா ரீர்
- புரைக்கணங்கண் டறியேன்நான் அணையவா ரீர்
- பொன்மேனிப் புண்ணியரே அணையவா ரீர்
- வரைக்கணஞ்செய் வித்தவரே அணையவா ரீர்
- மன்றில்நடிக் கின்றவரே அணையவா ரீர்
- இரைக்கணவு தருணமிதே அணையவா ரீர்
- என்னுடைய நாயகரே அணையவா ரீர். அணையவா ரீர்
- அருட்பெருஞ் சோதி மருந்து - என்னை
- ஐந்தொழில் செய்தற் களித்த மருந்து
- பொருட்பெரும் போக மருந்து - என்னைப்
- புறத்தும் அகத்தும் புணர்ந்த மருந்து. ஞான
- அருட்பெருஞ் ஜோதிய தாகிய பாதம்
- அம்மையும் அப்பனும் ஆகிய பாதம்
- பொருட்பெரும் போகம் புணர்த்திய பாதம்
- பொன்வண்ண மாகிய புண்ணிய பாதம். ஆடிய
- அருட்சோதி ஆனேன்என்று அறையப்பா முரசு
- அருளாட்சி பெற்றேன்என்று அறையப்பா முரசு
- மருட்சார்பு தீர்ந்தேன்என்று அறையப்பா முரசு
- மரணந்த விர்ந்தேன்என்று அறையப்பா முரசு.
- அரிபிர மாதியர் தேடிய நாதா
- அரகர சிவசிவ ஆடிய பாதா.
- அரகர சிவசிவ மாதே வா
- அருளமு தம்தர வாவா வா.
- அருட்பொது நடமிடு தாண்டவ னே
- அருட்பெருஞ் சோதிஎன் ஆண்டவ னே.
- அருட்பெருஞ்சோதியைக் கண்டே னே
- ஆனந்தத் தெள்ளமு துண்டே னே.
- அரகர வரசுப கரகர பவபவ
- சிரபுர சுரபர சிவசிவ சிவசிவ.
- அருட்பிர காசம் பரப்பிர காசம்
- அகப்பிர காசம் சிவப்பிர காசம்.
- அரைசே குருவே அமுதே சிவமே
- அணியே மணியே அருளே பொருளே
- அந்தோ வந்தாள் எந்தாய் எந்தாய் அம்பல நம்பதி யே.
- அருவே திருவே அறிவே செறிவே
- அதுவே இதுவே அடியே முடியே
- அந்தோ வந்தாள் எந்தாய் எந்தாய் அம்பல நம்பதி யே.
- அருளுறு வெளியே வெளியுறு பொருளே
- அதுவுறு மதுவே மதுவுறு சுவையே
- மருளறு தெருளே தெருளுறு மொளியே
- மறைமுடி மணியே மறைமுடி மணியே.
- அரும்பொன்அனை யார்எனது கணவர்வரு தருணம்
- ஆயிழைஈ தாதலினால் வாயல்முகப் பெல்லாம்
- விரும்புறுதோ ரணம்கொடிகள் பழுத்தகுலை வாழை
- விரைக்கமுகு தெங்கிளநீர் எனைப்பலவும் புனைக
- கரும்புநெல்லின் முளைநிறைநீர்க் குடம்இணைந்த கயலும்
- கண்ணாடி கவரிமுதல் உண்ணாடி இடுக
- இரும்பொடுகல் ஒத்தமனங் களும்கனிய உருக்கும்
- இறைவர்திரு வரவெதிர்கொண் டேத்துவதற் கினிதே.
- அருளாளர் வருகின்ற தருணம்இது தோழி
- ஆயிரம்ஆ யிரங்கோடி அணிவிளக்கேற் றிடுக
- தெருளாய பசுநெய்யே விடுகமற்றை நெய்யேல்
- திருமேனிக் கொருமாசு செய்தாலும் செய்யும்
- இருள்ஏது காலைவிளக் கேற்றிடவேண் டுவதோ
- என்னாதே மங்கலமா ஏற்றுதலாங் கண்டாய்
- மருளேல்அங் கவர்மேனி விளக்கமதெண் கடந்த
- மதிகதிர்செங் கனல்கூடிற் றென்னினும்சா லாதே.
- அருளாளர் பொற்பொதுவில் ஆனந்த நடஞ்செய்
- ஆனந்த வண்ணர்எனை ஆளுடையார் நான்தான்
- தெருளாத பருவத்தே தெருட்டிமணம் புரிந்த
- திருவாளர் அவர்பெருமைத் திறத்தைஎவர் புகல்வார்
- மருளாத ஆகமங்கள் மாமறைகள் எல்லாம்
- மருண்டனவேல் என்னடிநம் மனவாக்கின் அளவோ
- இருளாமை என்றுறுமோ அன்றுசிறி துரைப்பாம்
- என்னவும்நாண் ஈர்ப்பதிதற் கென்புரிவேன் தோழி.
- அரசுவரு கின்றதென்றே அறைகின்றேன் நீதான்
- ஐயமுறேல் உற்றுக்கேள் அசையாது தோழி
- முரசுசங்கு வீணைமுதல் நாதஒலி மிகவும்
- முழங்குவது திருமேனி வழங்குதெய்வ மணந்தான்
- விரசஎங்கும் வீசுவது நாசிஉயிர்த் தறிக
- வீதிஎலாம் அருட்சோதி விளங்குவது காண்க
- பரசிஎதிர் கொள்ளுதும்நாம் கற்பூர விளக்குப்
- பரிந்தெடுத்தென் னுடன்வருக தெரிந்தடுத்து மகிழ்ந்தே.
- அருளுடையார் எனையுடையார் அம்பலத்தே நடிக்கும்
- அழகர்எலாம் வல்லவர்தாம் அணைந்தருளும் காலம்
- இருளுடைய இரவகத்தே எய்தாது கண்டாய்
- எதனால்என் றெண்ணுதியேல் இயம்புவன்கேள் மடவாய்
- தெருளுடைஎன் தனித்தலைவர் திருமேனிச் சோதி
- செப்புறுபார் முதல்நாத பரியந்தம் கடந்தே
- அருளுறும்ஓர் பரநாத வெளிகடந்தப் பாலும்
- அப்பாலும் விளங்குமடி அகம்புறத்தும் நிறைந்தே.
- அருட்சோதித் தலைவர்எனக் கன்புடைய கணவர்
- அழகியபொன் மேனியைநான் தழுவிநின்ற தருணம்
- இருட்சாதித் தத்துவங்கள் எல்லாம்போ யினவால்
- எங்கணும்பே ரொளிமயமாய் இருந்தனஆங் கவர்தாம்
- மருட்சாதி நீக்கிஎனைப் புணர்ந்தஒரு தருணம்
- மன்னுசிவா னந்தமயம் ஆகிநிறை வுற்றேன்
- தெருட்சார்பில் இருந்தோங்கு சமரசசன் மார்க்கத்
- திருச்சபைக்கண் உற்றேன்என் திருக்கணவ ருடனே.