- ஆண்டாலு மன்றி அயலார்புன் கீரைமணிப்
- பூண்டாலு மென்கண் பொறுக்காது - நீண்டஎழு
- ஆண்பெண்ணாய்ப் பெண்ணாணாய் அண்மை தனைவானின்
- சேண்பண்ண வல்லவொரு சித்தனெவன் - மாண்பண்ணாப்
- ஆண்டவனென் றேத்தப்பொன் னம்பலத்தில் ஆனந்தத்
- தாண்டவம்செய் கின்ற தயாளனெவன் - காண்தகைய
- ஆணவத்தின் கூற்றை அழிக்க ஒளிர்மழுவைக்
- காணவைத்த செங்கமலக் கையழகும் - நாணமுற்றே
- ஆண்ட துண்டுநீ என்றனை அடியேன்
- ஆக்கை ஒன்றுமே அசைமடற் பனைபோல்
- நீண்ட துண்டுமற் றுன்னடிக் கன்பே
- நீண்ட தில்லைவல் நெறிசெலும் ஒழுக்கம்
- பூண்ட துண்டுநின் புனிதநல் ஒழுக்கே
- பூண்ட தில்லைஎன் புன்மையை நோக்கி
- ஈண்ட வந்தரு ளாய்எனில் அந்தோ
- என்செய் கேன்நர கிடைஇடும் போதே.
- ஆண்டநின் கருணைக் கடலிடை ஒருசிற்
- றணுத்துணைத் திவலையே எனினும்
- ஈண்டஎன் றன்மேல் தெறித்தியேல் உய்வேன்
- இல்லையேல் என்செய்கேன் எளியேன்
- நீண்டவன் அயன்மற் றேனைவா னவர்கள்
- நினைப்பரும் நிலைமையை அன்பர்
- வேண்டினும் வேண்டா விடினும்ஆங் களிக்கும்
- விமலனே விடைப்பெரு மானே.
- ஆண்டாய் எனைஏழ் பிறப்பும் உனைஅன்றி ஒன்றும்
- தீண்டா தெனதுள் ளம்என்றால் என்சிறுமை தீர்க்க
- வேண்டா தயலார் எனக்காண் பதென்மெய்ய னேபொன்
- ஆண்டான் திருஎய் தநஞ்சைக் களம்நாட்டி னோயே.
- ஆண்டவன்நீ யாகில்உனக் கடியனும்நா னாகில்
- அருளுடையாய் இன்றிரவில் அருள் இறையாய் வந்து
- நீண்டவனே முதலியரும் தீண்டரிதாம் பொருளின்
- நிலைகாட்டி அடிமுடியின் நெறிமுழுதும் காட்டி
- வீண்டவனே காலையில்நீ விழித்தவுடன் எழுந்து
- விதிமுடித்துப் புரிதிஇது விளங்கும்எனப் புகல்வாய்
- தாண்டவனே அருட்பொதுவில் தனிமுதலே கருணைத்
- தடங்கடலே நெடுந்தகையே சங்கரனே சிவனே.
- ஆண்பனைபெண் பனையாக்கி அங்கமதங் கனையாய்
- ஆக்கிஅருண் மணத்தில்ஒளி அனைவரையும் ஆக்கும்
- மாண்பனைமிக குவந்தளித்த மாகருணை மலையே
- வருத்தமெலாந் தவிர்த்தெனக்கு வாழ்வளித் வாழ்வே
- நாண்பனையுந் தந்தையும்என் நற்குருவும் ஆகி
- நாயடியேன் உள்ளகத்து நண்ணியநா யகனே
- வீண்பனைபோன் மிகநீண்டு விழற்கிறைப்பேன் எனினும்
- விருப்பமெலாம் நின்அருளின் விருப்பம்அன்றி இலையே.
- ஆண்டவநின் அருளருமை அறியாதே திரிந்தேன்
- அன்றிரவின் மறுத்தபிழை அத்தனையும் பொறுத்து
- வேண்டிஎனை அருகழைத்துத் திரும்பவும்என் கரத்தே
- மிகஅளித்த அருள்வண்ணம் வினையுடையேன் மனமும்
- காண்தகைய கண்களும்விட் டகலாதே இன்னும்
- காண்கின்ற தாயினும்என் கருத்துருகக் காணேன்
- ஈண்டுருகாக் கரடும்இதற் குருகல்அரி தலவே
- இனித்தநடம் புரிந்துமன்றில் தனித்தசிவக் கொழுந்தே.
- ஆணி லேஅன்றி ஆருயிர்ப் பெண்ணிலே அலியி லேஇவ்வ டியனைப் போலவே
- காணி லேன்ஒரு பாவியை இப்பெருங் கள்ள நெஞ்சக்க டையனை மாயையாம்
- ஏணி லேஇடர் எய்தவி டுத்தியேல் என்செய் கேன்இனி இவ்வுல கத்திலே
- வீணி லே உழைப் பேன்அருள் ஐயனே விளங்கும் சித்தி விநாயக வள்ளலே.
- ஆணைஎம தாணைஎமை அன்றிஒன் றில்லைநீ
- அறிதிஎன அருளுமுதலே
- ஆணைஉன்மேல் ஆணைஉன்மேல் ஆணைஉன்மேல் ஐயா
- அரைக்கணமும் நினைப்பிரிந்தே இனித்தரிக்க மாட்டேன்
- கோணைநிலத் தவர்பேசக் கேட்டதுபோல் இன்னும்
- குறும்புமொழி செவிகள்உறக் கொண்டிடவும் மாட்டேன்
- ஊணைஉறக் கத்தையும்நான் விடுகின்றேன் நீதான்
- உவந்துவராய் எனில்என்றன் உயிரையும்விட் டிடுவேன்
- மாணைமணிப் பொதுநடஞ்செய் வள்ளால்நீ எனது
- மனம்அறிவாய் இனம்உனக்கு வகுத்துரைப்ப தென்னே.
- ஆணவமாம் இருட்டறையில் கிடந்தசிறி யேனை
- அணிமாயை விளக்கறையில் அமர்த்திஅறி வளித்து
- நீணவமாம் தத்துவப்பொன் மாடமிசை ஏற்றி
- நிறைந்தஅருள் அமுதளித்து நித்தமுற வளர்த்து
- மாணுறஎல் லாநலமும் கொடுத்துலகம் அறிய
- மணிமுடியும் சூட்டியஎன் வாழ்முதலாம் பதியே
- ஏணுறுசிற் சபைஇடத்தும் பொற்சபையின் இடத்தும்
- இலங்குநடத் தரசேஎன் இசையும்அணிந் தருளே.
- ஆணைநும் ஆணைஎன் அருட்பெருஞ் சோதி
- ஆண்டவ ரேதிரு அம்பலத் தவரே
- நாணைவிட் டுரைக்கின்ற வாறிது கண்டீர்
- நாயக ரேஉமை நான்விட மாட்டேன்
- கோணைஎன் உடல்பொருள் ஆவியும் நுமக்கே
- கொடுத்தனன் இனிஎன்மேல் குறைசொல்ல வேண்டாம்
- ஏணைநின் றெடுத்தகைப் பிள்ளைநான் அன்றோ
- எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே.
- ஆண்டவ னேதிரு அம்பலத் தேஅரு ளால்இயற்றும்
- தாண்டவ னேஎனைத் தந்தவ னேமுற்றுந் தந்தவனே
- நீண்டவ னேஉயிர்க் கெல்லாம் பொதுவினில் நின்றவனே
- வேண்ட அனேக வரங்கொடுத் தாட்கொண்ட மேலவனே.
- ஆணை ஆணைநீ அஞ்சலை அஞ்சலை
- அருள்ஒளி தருகின்றாம்
- கோணை மாநிலத் தவரெலாம் நின்னையே
- குறிக்கொள்வர் நினக்கேஎம்
- ஆணை அம்பலத் தரசையும் அளித்தனம்
- வாழ்கநீ மகனேஎன்
- றேணை பெற்றிட எனக்கருள் புரிந்தநின்
- இணைமலர்ப் பதம்போற்றி.
- ஆணவம் தீர்க்கு மருந்து - பர
- மானந்தத் தாண்டவ மாடும் மருந்து
- மாணவ வண்ண மருந்து - என்னை
- வலிய அழைத்து வளர்க்கு மருந்து. ஞான
- ஆணிப்பொன் னம்பலத் தேகண்ட காட்சிகள்
- அற்புதக் காட்சிய டி - அம்மா
- அற்புதக் காட்சிய டி.
- ஆணிப்பொன் னம்பலத் தேகண்ட காட்சிகள்
- அற்புதக் காட்சிய டி - அம்மா
- அற்புதக் காட்சிய டி.