- ஆயுங் குரங்கணின்முட் டப்பெயர்கொண் டோங்குபுகழ்
- ஏயுந் தலம்வா ழியன்மொழியே - தோயுமன
- ஆயுமுடற் கன்புடைத்தாம் ஆருயிரிற் றான்சிறந்த
- நேயம்வைத்த நம்முடைய நேசன்காண் - பேயரென
- ஆய்ந்தோர் சிலநாளில் ஆயிரம்பேர் பக்கலது
- பாய்ந்தோடிப் போவதுநீ பார்த்திலையே - ஆய்ந்தோர்சொல்
- ஆயாக் கொடியேனுக் கன்புடையாய் நீஅருளிங்
- கீயாக் குறையே இலைகண்டாய் - மாயாற்கும்
- விள்ளாத் திருவடிக்கீழ் விண்ணப்பம் யான்செய்து
- கொள்ளாக் குறையே குறை.
- ஆயிரமன்றேநூறும் அன்றேஈ ரைந்தன்றே
- ஆயிரம்பேர் எந்தைஎழுத் தைந்தேகாண் - நீஇரவும்
- எல்லு நினைத்தியென ஏத்துகினும் எந்தாய்வீண்
- செல்லுமனம் என்செய்கேன் செப்பு.
- ஆயாது நான்செயும் குற்றங் களைக்கண் டறியில்பெற்ற
- தாயாயி னும்பொறுப் பாளல ஆங்கவை சற்றலவே
- ஓயாது செய்யுந் தொறும்பொறுத் தாளும் உனைஎளியேன்
- வாயால் உரைக்கவும் மாட்டேன்அந் தோஎன்ன வன்மைஇதே.
- ஆயிரங் கார்முகில் நீர்விழி நீர்தர ஐயநின்பால்
- சேயிரங் கார்எனக் கென்றேநின் பொற்பதம் சிந்திக்கின்றேன்
- நீஇரங் காய்எனில் என்செய்கு வேன்இந் நிலத்திற்பெற்ற
- தாய்இரங் காள்என்ப துண்டோதன் பிள்ளை தளர்ச்சிகண்டே.
- ஆயும் வஞ்சக நெஞ்சன்இவ் அடியனேன் ஐயா
- நீயும் வஞ்சக நெஞ்சன்என் றால்இந்த நிலத்தே
- ஏயும் இங்கிதற் கென்செய்வேன் என்செய்வேன் எவைக்கும்
- தாயும் தந்தையும் ஆகிஉள் நிற்கின்றோய் சாற்றாய்.
- ஆயும் படிவத் தந்தணனாய் ஆரூ ரன்தன் அணிமுடிமேல்
- தோயும் கமலத் திருவடிகள் சூட்டும் அதிகைத் தொன்னகரார்
- ஏயும் பெருமை ஒற்றியுளார் இன்னும் அணையார் எனைஅளித்த
- தாயும் தமரும் நொடிக்கின்றார் சகியே இனிநான் சகியேனே.
- ஆயேன் வேதா கமங்களைநன் கறியேன் சிறியேன் அவலமிகும்
- பேயேன் எனினும் வலிந்தென்னைப் பெற்ற கருணைப் பெருமானே
- நீயே அருள நினைத்தாயேல் எல்லா நலமும் நிரம்புவன்நான்
- காயே எனினும் கனிஆகும் அன்றே நினது கருணைக்கே.
- ஆயகால் இருந்தும் நடந்திட வலியில்
- லாமையால் அழுங்குவார் எனஉண்
- மேயகால் இருந்தும் திருவருள் உறஓர்
- விருப்பிலா மையின்மிக மெலிந்தேன்
- தீயகான் விலங்கைத் தூயமா னிடஞ்செய்
- சித்தனே சத்திய சபைக்கு
- நாயகா உயிர்க்கு நயகா உனையே
- நம்பினேன் கைவிடேல் எனையே.
- ஆய்தருவே தாகமத்தின் அடிமுடிநின் றிலங்கும்
- அரியபெரும் பொருளைஅவைக் கனுபவமாம் பொருளை
- வேய்தருதத் துவப்பொருளைத் தத்துவங்கள் விளங்க
- விளங்குகின்ற பரம்பொருளைத் தத்துவங்கள் அனைத்தும்
- தோய்தரல்இல் லாததனிச் சுயஞ்சோதிப் பொருளைச்
- சுத்தசிவ மயமான சுகாதீதப் பொருளைக்
- காய்தரல்இல் லாதென்னைக் காத்தஅருட் பொருளைக்
- கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.
- ஆயாமை யாலேநீர் ஆதிஅ னாதி
- ஆகிய சோதியை அறிந்துகொள் கில்லீர்
- மாயாமை பிறவாமை வழியொன்றும் உணரீர்
- மறவாமை நினையாமை வகைசிறி தறியீர்
- காயாமை பழுக்கின்ற கருத்தையும் கருதீர்
- கண்மூடித் திரிகின்றீர் கனிவொடும் இரப்போர்க்
- கீயாமை ஒன்றையே இன்துணை என்பீர்
- எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே.
- ஆய்உரைத்த அருட்ஜோதி வருகின்ற
- தருணம்இதே அறிமின் என்றே
- வாய்உரைத்த வார்த்தைஎன்றன் வார்த்தைகள்என்
- கின்றார்இம் மனிதர்அந்தோ
- தாய்உரைத்த திருப்பொதுவில் நடம்புரிந்தென்
- உளங்கலந்த தலைவா இங்கே
- நீஉரைத்த திருவார்த்தை எனஅறியார்
- இவர்அறிவின் நிகழ்ச்சி என்னே.
- ஆயவாய நேயஞேய மாயஞாய வாதியே
- தூயவாய காயதேய தோயமேய ஜோதியே.