- இயங்கா மனமும் கயங்கா நிலையும் இகபரத்தே
- மயங்கா அறிவும் தியங்கா நெறியும் மகிழ்ந்தருள்வாய்
- வயங்கா நிலத்தின் முயங்கா உயர்தவர் வாழ்த்துகின்ற
- புயங்கா துதித்தற் குயங்கா தவருட் புகுந்தவனே.
- இயங்காத இரவிடைஅன் றொருநாள்வந் தெளியேன்
- இருக்குமிடந் தனைத்தேடிக் கதவுதிறப் பித்துக்
- கயங்காத மலரடிகள் கவின்வாயிற் படியின்
- கடைப்புறத்தும் அகத்தும்வைத்துக் களித்தெனைஅங் கழைத்து
- மயங்காதே இங்கிதனை வாங்கிக்கொண் டுலகில்
- மகனேநீ விளையாடி வாழ்கஎன உரைத்தாய்
- புயங்காநின் அருளருமை அறியாது திரிந்தேன்
- பொய்யடியேன் அறிந்தின்று பூரித்தேன் உளமே.
- இயற்கையுண் மையதா யியற்கையின் பமுமாம்
- அயர்ப்பிலாச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி
- இயல்பினு ளியல்பா யியல்பே யியல்பா
- உயலுற விளங்கு மொருதனிப் பொருளே
- இயலரு ளொளியோ ரேகதே சத்தினாம்
- உயிரொளி காண்கவென் றுரைத்தமெய்ச் சிவமே
- இயலமு தேமுத லெழுவகை யமுதமும்
- உயலுற வெனக்கரு ளுரியநற் றாயே
- இயற்கையிலே பாசங்கள் ஒன்றும்இலார் குணங்கள்
- ஏதுமிலார் தத்துவங்கள் ஏதுமிலார் மற்றோர்
- செயற்கைஇல்லார் பிறப்பில்லார் இறப்பில்லார் யாதும்
- திரிபில்லார் களங்கம்இல்லார் தீமைஒன்றும் இல்லார்
- வியப்புறவேண் டுதல்இல்லார் வேண்டாமை இல்லார்
- மெய்யேமெய் ஆகிஎங்கும் விளங்கிஇன்ப மயமாய்
- உயத்தரும்ஓர் சுத்தசிவா னந்தசபை தனிலே
- ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவருண்டே கண்டீர்.
- இயல்வேதா கமங்கள்புரா ணங்கள்இதி காசம்
- இவைமுதலா இந்திரசா லங்கடையா உரைப்பார்
- மயல்ஒருநூல் மாத்திரந்தான் சாலம்என அறிந்தார்
- மகனேநீ நூல்அனைத்தும் சாலம்என அறிக
- செயல்அனைத்தும் அருள்ஒளியால் காண்கஎன எனக்கே
- திருவுளம்பற் றியஞான தேசிகமா மணியே
- அயல்அறியா அறிவுடையார் எல்லாரும் போற்ற
- ஆடுகின்ற அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.
- இயங்காளி புலிகரடி எனப்பெயர்கேட் டுளம்நடுங்கி இருந்தேன் ஊரில்
- சயங்காளிக் கோயிலைக்கண் டஞ்சிமனம் தழுதழுத்துத் தளர்ந்தேன் இந்தப்
- பயங்காளிப் பயல்போலப் பயந்தவர்கள் எங்குளர்காண் பதியே என்னை
- வயங்காளில் ஒருவன்என நினையேல்கைப் பிள்ளைஎன மதித்தி டாயே.
- இயற்கைஉண்மை வடிவினரே அணையவா ரீர்
- எல்லாம்செய் வல்லவரே அணையவா ரீர்
- இயற்கைவிளக் கத்தவரே அணையவா ரீர்
- எல்லார்க்கும் நல்லவரே அணையவா ரீர்
- இயற்கைஇன்ப மானவரே அணையவா ரீர்
- இறைமையெலாம் உடையவரே அணையவா ரீர்
- இயற்கைநிறை வானவரே அணையவா ரீர்
- என்னுடைய நாயகரே அணையவா ரீர். அணையவா ரீர்
- இயல்கிளர் மறையே மறைகிளர் இசையே
- இசைகிளர் துதியே துதிகிளர் இறையே
- செயல்கிளர் அடியே அடிகிளர் முடியே
- திருநட மணியே திருநட மணியே.