- இல்ல மெனச்சென் றிரவா தவர்வாழும்
- வல்லமகி ழன்பர் வசித்துவமே - சொல்லரிக்குக்
- இல்லெனினுஞ் சும்மாநீ யீகின்றே னென்றொருசொல்
- சொல்லெனினுஞ் சொல்லத் துணிவுகொளேன் - நல்லையெமக்
- இல்லை யடைந்தே யிரப்பவருக் கெப்போதும்
- இல்லையென்ப தென்வாய்க் கியல்புகாண் - தொல்லுலகை
- இல்லாதாய் என்றும் இருப்பதாய் யாதொன்றும்
- கொல்லாதார்க் கின்பம் கொடுப்பதாய் - எல்லார்க்கும்
- இல்லான் எவன்யார்க்கும் ஈசன் எவன்யாவும்
- வல்லான் எவனந்தி வண்ணனெவன் - கல்லாலில்
- இல்லா நமக்குண்டோ இல்லையோ என்னுநலம்
- எல்லாம் அழியுமதற் கென்செய்வாய் - நில்லாமல்
- இல்லிக் குடமுடைந்தால் யாதாமென் றுன்னுடன்யான்
- சொல்லித் திரிந்துமெனைச் சூழ்ந்திலையே - வல்இயமன்
- இலங்கா புரத்தன் இராக்கதர் மன்னன் இராவணன்முன்
- மலங்காநின் வெள்ளி மலைக்கீ ழிருந்து வருந்தநின்சீர்
- கலங்காமல் பாடிடக் கேட்டே இரங்கிக் கருணைசெய்த
- நலங்காணின் தன்மைஇன் றென்னள வியாண்டையின் நண்ணியதே.
- இலையாற்று நீமலர்க் காலால் பணிக்குங்குற் றேவலெலாம்
- தலையால் செயும்பெண்கள் பல்லோரில் பூமகள் தன்னைத்தள்ளாய்
- நிலையால் பெரியநின் தொண்டர்தம் பக்க நிலாமையினான்
- மலையாற் கருளொற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
- இல்லை என்பதே பொருள்எனக் கொண்டோர்
- ஈன வாயிலில் இடர்ப்படு கின்றாய்
- எல்லை செல்கின்ற தெழுதிஎன் நெஞ்சே
- எழில்கொள் ஒற்றியூர் எனும்தலத் தேகித்
- தொல்லை ஓம்சிவ சண்முக சிவஓம்
- தூய என்றடி தொழுதுநாம் உற்ற
- அல்லல் ஓதுதும் ஐயுறல் என்மேல்
- ஆணை காண்அவர் அருள்பெறல் ஆமே.
- இல்லை இல்லைகாண்
- ஒல்லை ஒற்றியூர்
- எல்லை சேரவே
- அல்லல் என்பதே.-
- இல்லைஎன் பதனுக் கஞ்சிடேன் நாய்க்கும்
- இணையிலேன் இழிவினேன் துயர்க்கோர்
- எல்லைமற் றறியேன் ஒதியனேன் என்னை
- என்செய்தால் தீருமோ அறியேன்
- கல்லைவில் ஆக்கும் கருணைவா ரிதியே
- கண்ணுதல் உடையசெங் கனியே
- தில்லைவாழ் அரசே தெய்வமா மணியே
- திருவொற்றி யூர்வரும் தேவே.
- இலைவேட்ட மாதர்தம தீனநல மேவிழைந்து
- கொலைவேட் டுழலும் கொடியனேன் ஆயிடினும்
- நிலைவேட்ட நின்அருட்கே நின்றுநின்று வாடுகின்றேன்
- கலைவேட்ட வேணியனே கருணைசற்றும் கொண்டிலையே.
- இல்லை உண்டென எய்தி ஐயுறும்
- கல்லை யொத்தஎன் கன்ம நெஞ்சமே
- ஒல்லை ஒற்றியூர் உற்று வாழ்தியேல்
- நல்லை நல்லைநீ நட்பின் மேலையே.
- இல்லை என்ப திலாஅருள் வெள்ளமே
- தில்லை மன்றில் சிவபரஞ் சோதியே
- வல்லை யான்செயும் வஞ்சமெ லாம்பொறுத்
- தொல்லை இன்பம் உதவுதல் வேண்டுமே.
- இல்லையே என்பதிங் கில்லை என்றருள்
- நல்லையே நீஅருள் நயந்து நல்கினால்
- கல்லையே அனையஎன் கன்ம நெஞ்சகம்
- ஒல்லையே வஞ்சம்விட் டுவக்கும் உண்மையே.
- இலைஎ னாதணு வளவும்ஒன் றீய
- எண்ணு கின்றிலை என்பெறு வாயோ
- கொலைஇ னாதென அறிந்திலை நெஞ்சே
- கொல்லு கின்றஅக் கூற்றினும் கொடியாய்
- தலையின் மாலைதாழ் சடையுடைப் பெருமான்
- தாள்நி னைந்திலை ஊண்நினைந் துலகில்
- புலையி னார்கள்பால் போதியோ வீணில்
- போகப் போகஇப் போக்கினில் அழிந்தே.
- இலவு காக்கின்ற கிள்ளைபோல் உழன்றாய்
- என்னை நின்மதி ஏழைநீ நெஞ்சே
- பலவு வாழைமாக் கனிகனிந் திழியும்
- பணைகொள் ஒற்றியூர்க் கென்னுடன் வருதி
- நிலவு வெண்மதிச் சடையுடை அழகர்
- நிறைய மேனியில் நிகழ்ந்தநீற் றழகர்
- குலவு கின்றனர் வேண்டிய எல்லாம்
- கொடுப்பர் வாங்கிநான் கொடுப்பன்உன் தனக்கே.
- இலனே மற்றோர் துணைசிறிதும் என்னே காமம் எனும்கடலில்
- மலனேன் வருந்தக் கண்டிருத்தல் மணியே அருளின் மரபன்றே
- அலனே அயலான் அடியேன்நான் ஐயாஒற்றி யப்பாநல்
- நலனேர் தில்லை அம்பலத்தில் நடிக்கும் பதமே நாடினனே.
- இலமே செறித்தார் தாயர்இனி என்செய் குவதென் றிருந்தேற்கு
- நலமே தருவார் போல்வந்தென் நலமே கொண்டு நழுவினர்காண்
- உலமே அனைய திருத்தோளார் ஒற்றித் தியாகப் பெருமானார்
- வலமே வலம்என்அ வலம்அவலம் மாதே இனிஎன் வழுத்துவதே.
- இலைக்குளநீ ரழைத்தனில் இடங்கர்உற அழைத்ததன்வாய்த்
- தலைக்குதலை மதலைஉயிர் தழைப்பஅழைத் தருளியநின்
- கலைக்கும்வட கலையின்முதற் கலைக்கும்உறு கணக்குயர்பொன்
- மலைக்கும்அணு நிலைக்கும்உறா வன்தொண்டப் பெருந்தகையே.
- இலதை நினைப்பாய் பித்தர்கள்போல் ஏங்கா நிற்பாய் தணிகையில்என்
- குலதெய் வமுமாய்க் கோவாய்சற் குருவாய் நின்ற குகன்அருளே
- நலதென் றறியாய் யான்செய்த நன்றி மறந்தாய் நாணாதென்
- வலதை அழித்தாய் வலதொடுநீ வாழ்வாய் கொல்லோ வல்நெஞ்சே.
- இலக்கம் அறியா இருவினையால் இம்மா னிடம்ஒன் றெடுத்தடியேன்
- விலக்கம் அடையா வஞ்சகர்பால் வீணாட் போக்கி மேவிமனத்
- தலக்கண் இயற்றும் பொய்வாழ்வில் அலைந்தேன் தணிகை அரசேஅக்
- கலக்கம் அகன்று நின்உருவைக் கண்கள் ஆரக் கண்டிலனே.
- இலகுபரி பூரண விலாசம்அல திலைஅண்டம்
- எங்கணும் எனச்சொல்பதியே
- இல்லைஉண் டெணும்இவ் விருமையும் கடந்தோர்
- இயற்கையின் நிறைந்தபே ரின்பே
- அல்லைஉண் டெழுந்த தனிப்பெருஞ் சுடரே
- அம்பலத் தாடல்செய் அமுதே
- வல்லைஇன் றடியேன் துயர்எலாம் தவிர்த்து
- வழங்குக நின்அருள் வழங்கல்
- நல்லைஇன் றலது நாளைஎன் றிடிலோ
- நான்உயிர் தரிக்கலன் அரசே.
- இலங்கு பொன்னணிப் பொதுநடம் புரிகின்ற இறைவஇவ் வுலகெல்லாம்
- துலங்கும் வண்ணநின் றருளுநின் திருவடித் துணைதுணை என்னாமல்
- கலங்கு நாயினேன் விண்ணப்பம் திருச்செவி கலந்தருள் செயல்வேண்டும்
- அலங்கும் இவ்வுடல் இம்மையே அழிவுறா அருள்உடல் உறுமாறே.
- இலங்குகின்ற பொதுஉண்மை இருந்தநிலை புகல்என்
- றியம்புகின்றாய் மடவாய்கேள் யான்அறியுந் தரமோ
- துலங்கும்அதை உரைத்திடவும் கேட்டிடவும் படுமோ
- சொல்அளவோ பொருள்அளவோ துன்னும்அறி வளவோ
- விலங்குகின்ற தத்துவங்கள் அத்தனையும் கடந்த
- மேனிலைஎன் றந்தமெலாம் விளம்புகின்ற தன்றி
- வலங்கொளும்அம் மேனிலையின் உண்மைஎது என்றால்
- மவுனஞ்சா திப்பதன்றி வாய்திறப்ப திலையே.
- இலங்கு கின்றசிற் றம்பலத் தருள்நடம் இடுகின்ற பெருவாழ்வே
- துலங்கு பேரருட் சோதியே சோதியுள் துலங்கிய பொருளேஎன்
- புலங்கொள் விண்ணப்பம் திருச்செவிக் கேற்றருள் புரிந்தனை இஞ்ஞான்றே
- அலங்கும் இவ்வுடல் எற்றையும் அழிவுறா அருள்வடி வாமாறே.
- இல்லாமை நீக்கிநின்றீர் ஆடவா ரீர்
- என்னைமண மாலையிட்டீர் ஆடவா ரீர்
- கொல்லாமை நெறிஎன்றீர் ஆடவா ரீர்
- குற்றமெலாங் குணங்கொண்டீர் ஆடவா ரீர்
- நல்லார்சொல் நல்லவரே ஆடவா ரீர்
- நற்றாயில் இனியவரே ஆடவா ரீர்
- எல்லாம்செய் வல்லவரே ஆடவா ரீர்
- என்னுடைய நாயகரே ஆடவா ரீர். ஆடவா ரீர்