- ஈன்றோன் தனைநாளும் எண்ணாமல் இவ்வுடம்பை
- ஈன்றோரை ஈன்றோரென் றெண்ணினையே - ஈன்றோர்கள்
- ஈனமந்தோ இவ்வுலகம் என்றருளை நாடுகின்ற
- ஞானம்வந்தால் அன்றி நலியாதால் - ஞானமது
- ஈன்றவ னேஅன்பர் இன்னுயிர்க் கின்புறும் இன்னமுதம்
- போன்றவ னேசிவ ஞானிகள் உள்ளுறும் புண்ணியனே
- ஆன்றவ னேஎம துள்ளும் புறம்பும் அறிந்துநின்ற
- சான்றவ னேசிவ னேஒற்றி மேவிய சங்கரனே.
- ஈன்று கொண்டஎன் தந்தையும் தாயும்
- யாவும் நீஎன எண்ணிய நாயேன்
- மான்று கொண்டஇவ் வஞ்சக வாழ்வின்
- மயக்கி னால்மிக வன்மைகள் செய்தேன்
- சான்று கொண்டது கண்டனை யேனும்
- தமிய னேன்மிசைத் தயவுகொண் டென்னை
- ஏன்று கொண்டரு ளாய்எனில் அந்தோ
- என்செய் கேன்நர கிடைஇடும் போதே.
- ஈனவுடற் கிச்சைவையேன் பாங்கிமா ரே - நட
- னேசர்தமை யெய்தும்வண்ணம் பாங்கிமா ரே.
- ஈனத் திவறும் மனக்கொடியோர் இடம்போய் மெலிந்து நாள்தோறும்
- ஞானத் திருத்தாள் துணைசிறிதும் நாடேன் இனிஓர் துணைகாணேன்
- தானத் தறுகண் மலைஉரியின் சட்டை புனைந்தோன் தரும்பேறே
- மோனத் தவர்த்ம் அகவிளக்கே முறையோ முறையோ முறையேயோ.
- ஈனம் பழுத்தமன வாதைஅற நின்னருளை
- எண்ணிநல் லோர்கள்ஒருபால்
- இறைவநின் தோத்திரம் இயம்பிஇரு கண்ர்
- இறைப்பஅது கண்டுநின்று
- ஞானம் பழுத்துவிழி யால்ஒழுகு கின்றநீர்
- நம்உலகில் ஒருவர்அலவே
- ஞானிஇவர் யோனிவழி தோன்றியவ ரோஎன
- நகைப்பர்சும் மாஅழுகிலோ
- ஊனம் குழுத்தகண் ணாம்என்பர் உலகத்தில்
- உயர்பெண்டு சாக்கொடுத்த
- ஒருவன்முகம் என்னஇவர் முகம்வாடு கின்றதென
- உளறுவார் வாய்அடங்க
- மானம் பழுத்திடு மருந்தருள்க தவசிகா
- மணிஉலக நாதவள்ளல்
- மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற
- வளர்வைத் தியநாதனே.
- ஈனமறுத் தென்றும் இறவாமை நல்குமென்றே
- ஞானமணி மன்றிடத்தே நண்புவைத்தேன் ஐயாவே.
- ஈனமின் றிகபரத் திரண்டின்மேற் பொருளாய்
- ஆனலின் றோங்கிய வருட்பெருஞ் ஜோதி
- ஈன்றநற் றாயினு மினிய பெருந்தய
- வான்றசிற் சபையி லருட்பெருஞ் ஜோதி
- ஈன்றநற் றாயுந் தந்தையும் குருவும்
- என்னுயிர்க் கின்பமும் பொதுவில்
- ஆன்றமெய்ப் பொருளே என்றிருக் கின்றேன்
- அன்றிவே றெண்ணிய துண்டோ
- ஊன்றிய பாதம் அறியநான் அறியேன்
- உறுகணிங் காற்றலேன் சிறிதும்
- தோன்றிஎன் உளத்தே மயக்கெலாந் தவிர்த்துத்
- நன்றருள் புரிவதுன் கடனே.
- ஈன உலகத் திடர்நீங்கி இன்புறவே
- ஞான அமுதமது நானருந்த - ஞான
- உருவே உணர்வே ஒளியே வெளியே
- திருவே கதவைத் திற.
- ஈனமெலாம் தீர்ந்தனவே இன்பமெலாம் எய்தினவே
- ஊனமெலாம் கைவிட் டொழிந்தனவே - ஞானமுளோர்
- போற்றும்சிற் றம்பலத்தும் பொன்னம்ப லத்துநடம்
- போற்றும் படிப்பெற்ற போது.
- ஈன்றாளும் எந்தையும் என்குரு வும்எனக்
- கின்பமும் ஆயினீர் வாரீர்
- அன்பருக் கன்பரே வாரீர். வாரீர்
- ஈனம் அறுத்துமெய்ஞ் ஞான விளக்கென்
- இதயத்தில் ஏற்றினீர் வாரீர்
- உதயச் சுடரினீர் வாரீர். வாரீர்