- ஈயெனப் பறந்தேன் எறும்பென உழன்றேன்
- எட்டியே எனமிகத் தழைத்தேன்
- பேயெனச் சுழன்றேன் பித்தனே எனவாய்ப்
- பிதற்றொடும் ஊர்தொறும் பெயர்ந்தேன்
- காயெனக் காய்த்தேன் கடையென நடந்தேன்
- கல்லெனக் கிடந்தனன் குரைக்கும்
- நாயெனத் திரிந்தேன் என்னினும் உனையே
- நம்பினேன் கைவிடேல் எனையே.
- ஈயோ டுறழும் சிறியேன் அளவில் எந்தாய்நின்
- சேயோ டுறழும் பேரருள் வண்ணத் திருவுள்ளம்
- காயோ பழமோ யாதோ அறியேன் கவல்கின்றேன்
- தீயோ டுறழும் திருவருள் வடிவச் சிவனேயோ.