- உருவாய் உருவில் உருவாய் உருவுள்
- அருவாய் அருவில் அருவாய் - உருஅருவாய்
- உருவாய் உருவில் உருவாகி ஓங்கி
- அருவாய் அருவில் அருவாய் - ஒருவாமல்
- நின்றாயே நின்ற நினைக்காண்ப தெவ்வாறோ
- என்தாயே என்தந்தை யே.
- உருவாகி உருவினில்உள் உருவ மாகி
- உருவத்தில் உருவாகி உருவுள் ஒன்றாய்
- அருவாகி அருவினில்உள் அருவ மாகி
- அருவத்தில் அருவாகி அருவுள் ஒன்றாய்க்
- குருவாகிச் சத்துவசிற் குணத்த தாகிக்
- குணரகிதப் பொருளாகிக் குலவா நின்ற
- மருவாகி மலராகி வல்லி யாகி
- மகத்துவமாய் அணுத்துவமாய் வயங்குந் தேவே.
- உருநான்கும் அருநான்கும் நடுவே நின்ற
- உருஅருவ மொன்றும்இவை உடன்மேல் உற்ற
- ஒருநான்கும் இவைகடந்த ஒன்று மாய்அவ்
- வொன்றினடு வாய்நடுவுள் ஒன்றாய் நின்றே
- இருநான்கும் அமைந்தவரை நான்கி னோடும்
- எண்ணான்கின் மேலிருத்தும் இறையே மாயைக்
- கருநான்கும் பொருணான்கும் காட்டு முக்கட்
- கடவுளே கடவுளர்கள் கருதுந் தேவே.
- உருத்திரர்நா ரணர்பிரமர் விண்ணோர் வேந்தர்
- உறுகருடர் காந்தருவர் இயக்கர் பூதர்
- மருத்துவர்யோ கியர்சித்தர் முனிவர் மற்றை
- வானவர்கள் முதலோர்தம் மனத்தால் தேடிக்
- கருத்தழிந்து தனித்தனியே சென்று வேதங்
- களைவினவ மற்றவையுங் காணேம் என்று
- வருத்தமுற்றாங் கவரோடு புலம்ப நின்ற
- வஞ்சவெளி யேஇன்ப மயமாம் தேவே.
- உருவத்தி லேசிறி யேனாகி யூகத்தி லொன்றுமின்றித்
- தெருவத்தி லேசிறு கால்வீசி யாடிடச் சென்றஅந்தப்
- பருவத்தி லேநல் அறிவளித் தேஉனைப் பாடச்செய்தாய்
- அருவத்தி லேஉரு வானோய்நின் தண்ணளி யார்க்குளதே.
- உருமத்தி லேபட்ட புன்புழுப் போல்இவ் உலகநடைக்
- கருமத்தி லேபட்ட என்மனந் தான்நின் கழலடையும்
- தருமத்தி லேபட்ட தின்றேஎன் றெண்ணுந் தனையுமந்தோ
- மருமத்தி லேபட்ட வாளியைப் போன்று வருத்துவதே.
- உரைத்தார் சிலர்சின் னாள்கழிய உறுவேம் என்ன உரைத்தவரே
- நரைத்தார் இறந்தார் அவர்தம்மை நான்கண் டிருந்தும் நாணாமே
- விரைத்தாள் மலரைப் பெறலாம்என் றெண்ணி வீணே இளைக்கின்றேன்
- திரைத்தாழ் கடலிற் பெரும்பிழையே செய்தேன் என்ன செய்வேனே.
- உரப்பார் மிசையில் பூச்சூட ஒட்டார் சடைமேல் ஒருபெண்ணைக்
- கரப்பார் மலர்தூ வியமதனைக் கண்ணால் சுட்டார் கல்எறிந்தோன்
- வரப்பார் மிசைக்கண் வாழ்ந்திருக்க வைத்தார் பலிக்கு மனைதொறும்போய்
- இரப்பார் அன்றோ மகளேநீ ஏதுக் கவரை விழைந்தனையே.
- உருவம்ஒரு நான்காகி அருவமும்அவ் வளவாய்
- உருஅருஒன் றாகிஇவை ஒன்பானுங் கடந்து
- துருவமுடி யாப்பரம துரியநடு விருந்த
- சொருபஅனு பவமயமாந் துணையடிகள் வருந்தத்
- தெருவமிசை நடந்துசிறு செம்பரற்கல் உறுத்தச்
- சிறியேன்பால் அடைந்தெனது செங்கையில்ஒன் றளித்தாய்
- மருவஇனி யாய்மன்றில் நடம்புரிவாய் கருணை
- மாகடலே நின்பெருமை வழுத்தமுடி யாதே.
- உருஅண்டப் பெருமறைஎன் றுலகமெலாம் புகழ்கின்ற
- திருஅண்டப் பகுதிஎனும் திருஅகவல் வாய்மலர்ந்த
- குருஎன்றெப் பெருந்தவரும் கூறுகின்ற கோவேநீ
- இருஎன்ற தனிஅகவல்194 எண்ணம்எனக் கியம்புதியே.
- உருத்துள் இகலும் சூர்முதலை ஒழித்து வானத் தொண்பதியைத்
- திருத்தும் அரைசே தென்தணிகைத் தெய்வ மணியே சிவஞானம்
- அருத்தும் நினது திருவருள்கொண் டாடிப் பாடி அன்பதனால்
- கருத்துள் உருகி நின்உருவைக் கண்கள் ஆரக் கண்டிலனே.
- உரிய நாயகி யோங்கதி கைப்பதித்
- துரிய நாயகி தூயவீ ரட்டற்கே
- பிரிய நாயகி பேரருள் நாயகி
- பெரிய நாயகி பெற்றியைப் பேசுவாம்.
- உருத்தி ரன்திரு மால்அயன் ஒப்பமுக் குணமாய்
- இருத்தல் இன்றிஅக் குணங்களை என்றும்ஆண் டருளுங்
- கருத்தன் ஆகையிற் குணேசன்அக் குணவிகா ரத்திற்
- பொருத்த மின்மையன் ஆகையால் புகல்குண ரகிதன்.
- உரைமனங் கடந்த வொருபெரு வெளிமேல்
- அரைசுசெய் தோங்கு மருட்பெருஞ் ஜோதி
- உருவமு மருவமு முபயமு மாகிய
- அருணிலை தெரித்த வருட்பெருஞ் ஜோதி
- உருள்சக டாகிய வுளஞ்சலி யாவகை
- அருள்வழி நிறுத்திய வருட்பெருஞ் ஜோதி
- உருவதி னுருவும் உருவினுள் ளுருவும்
- அருளுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
- உருவதி லருவும் மருவதி லுருவும்
- அருளுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
- உரைமனங் கடந்தாங் கோங்குபொன் மலையே
- துரியமேல் வெளியிற் ஜோதிமா மலையே
- உரைவளர் கலையே கலைவளர் உரையே உரைகலை வளர்தரு பொருளே
- விரைவளர் மலரே மலர்வளர் விரையே விரைமலர் வளர்தரு நறவே
- கரைவளர் தருவே தருவளர் கரையே கரைதரு வளர்கிளர் கனியே
- பரைவளர் ஒளியே ஒளிவளர் பரையே பரையொளி வளர்சிவ பதியே.
- உரைகடந்த திருவருட்பே ரொளிவடிவைக் கலந்தே
- உவட்டாத பெரும்போகம் ஓங்கியுறும் பொருட்டே
- இரைகடந்தென் உள்ளகத்தே எழுந்துபொங்கித் ததும்பி
- என்காதல் பெருவெள்ளம் என்னைமுற்றும் விழுங்கிக்
- கரைகடந்து போனதினித் தாங்கமுடி யாது
- கண்டுகொள்வாய் நீயேஎன் கருத்தின்வண்ணம் அரசே
- திரைகடந்த குருமணியே சிவஞான மணியே
- சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.
- உருமலி உலகில் உன்னைநான் கலந்தே ஊழிதோ றூழியும் பிரியா
- தொருமையுற் றழியாப் பெருமைபெற் றடியேன் உன்னையே பாடி நின்றாடி
- இருநிலத் தோங்கிக் களிக்கவும் பிறருக்கிடுக்கணுற் றால்அவை தவிர்த்தே
- திருமணிப் பொதுவில் அன்புடையவராச் செய்யவும் இச்சைகாண்எந்தாய்.
- உருவுள மடவார் தங்களை நான்கண் ணுற்றபோ துளநடுக் குற்றேன்
- ஒருவுளத் தவரே வலிந்திட வேறோர் உவளகத் தொளித்தயல் இருந்தேன்
- கருவுளச் சண்டைக் கூக்குரல் கேட்ட காலத்தில் நான்உற்ற கலக்கம்
- திருவுளம் அறியும் உரத்தசொல் எனது செவிபுகில் கனல்புகு வதுவே.
- உரத்தொரு வருக்கங் கொருவர் பேசியபோ துள்ளகம் நடுங்கினேன் பலகால்
- கரத்தினால் உரத்துக் கதவுதட் டியபோ தையவோ கலங்கினேன் கருத்தில்
- புரத்திலே அம்மா அப்பனே ஐயோ எனப்பிறர் புகன்றசொல் புகுந்தே
- தரத்தில்என் உளத்தைக் கலக்கிய கலக்கம் தந்தைநீ அறிந்தது தானே.
- உருவாய் அருவாய் ஒளியாய் வெளியாய்
- உலவா ஒருபே ரருளா ரமுதம்
- தருவாய் இதுவே தருணம் தருணம்
- தரியேன் சிறிதுந் தரியேன் இனிநீ
- வருவாய் அலையேல் உயிர்வாழ் கலன்நான்
- மதிசேர் முடிஎம் பதியே அடியேன்
- குருவாய் முனமே மனமே இடமாக்
- குடிகொண் டவனே அபயம் அபயம்.
- உருவெளியே உருவெளிக்குள் உற்றவெளி உருவே
- உருநடுவும் வெளிநடுவும் ஒன்றான ஒன்றே
- பெருவெளியே பெருவெளியில் பெருஞ்சோதி மயமே
- பெருஞ்சோதி மயநடுவே பிறங்குதனிப் பொருளே
- மருஒழியா மலர்அகத்தே வயங்குஒளி மணியே
- மந்திரமே தந்திரமே மதிப்பரிய மருந்தே
- திருஒழியா தோங்குமணி மன்றில்நடத் தரசே
- சிறுமொழிஎன் றிகழாதே சேர்த்துமகிழ்ந் தருளே.
- உருவினதாய் அருவினதாய் உருஅருவாய் உணர்வாய்
- உள்ளதுவாய் ஒருதன்மை உடையபெரும் பதியாய்
- மருவியவே தாந்தமுதல் வகுத்திடுங்க லாந்த
- வரைஅதன்மேல் அருள்வெளியில் வயங்கியமே டையிலே
- திருவுறவே அமர்ந்தருளும் திருவடிகள் பெயர்த்தே
- சிறியேன்கண் அடைந்தருளித் திருவனைத்தும் கொடுத்தாய்
- குருவேஎன் அரசேஈ தமையாதோ அடியேன்
- குடிசையிலும் கோணாதே குலவிநுழைந் தனையே.
- உரைவளர் திருச்சிற் றம்பலத் தோங்கும்
- ஒள்ளிய தெள்ளிய ஒளியே
- வரைவளர் மருந்தே மவுனமந் திரமே
- மந்திரத் தாற்பெற்ற மணியே
- நிரைதரு சுத்த நிலைக்குமேல் நிலையில்
- நிறைந்தர சாள்கின்ற நிதியே
- பரையுறும் உளத்தே இனித்திட எனக்கே
- பழுத்தபே ரானந்தப் பழமே.
- உரத்தவான் அகத்தே உரத்தவா ஞான ஒளியினால் ஓங்கும்ஓர் சித்தி
- புரத்தவா பெரியோர் புரத்தவா குற்றம் பொறுத்தடி யேன்தனக் களித்த
- வரத்தவா உண்மை வரத்தவா ஆக மங்களும் மறைகளும் காணாத்
- தரத்தவா அறிவா தரத்தவா பொதுவில் தனித்தவா இனித்தவாழ் வருளே.
- உரைவிசுவம் உண்டவெளி உபசாந்த வெளிமேலை
- உறுமவுன வெளிவெளியின்மேல்
- ஓங்குமா மவுனவெளி யாதியுறும் அனுபவம்
- ஒருங்கநிறை உண்மைவெளியே
- திரையறு பெருங்கருணை வாரியே எல்லாஞ்செய்
- சித்தே எனக்குவாய்த்த
- செல்வமே ஒன்றான தெய்வமே உய்வகை
- தெரித்தெனை வளர்த்தசிவமே
- பரைநடு விளங்கும்ஒரு சோதியே எல்லாம்
- படைத்திடுக என்றெனக்கே
- பண்புற உரைத்தருட் பேரமுத ளித்தமெய்ப்
- பரமமே பரமஞான
- வரைநடு விளங்குசிற் சபைநடுவில் ஆனந்த
- வண்ணநட மிடுவள்ளலே
- மாறாத சன்மார்க்க நிலைநீதி யேஎலாம்
- வல்லநட ராஜபதியே.
- உருவமும் அருவமும் உபயமும் உளதாய்
- உளதில தாய்ஒளிர் ஒருதனி முதலே
- கருவினில் எனக்கருள் கனிந்தளித் தவனே
- கண்ணுடை யாய்பெருங் கடவுளர் பதியே
- திருநிலை பெறஎனை வளர்க்கின்ற பரமே
- சிவகுரு துரியத்தில் தெளிஅனு பவமே
- தருவளர் பொழிவடல் சபைநிறை ஒளியே
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- உருவ ராகியும் அருவின ராகியும் உருஅரு வினராயும்
- ஒருவ ரேஉளார் கடவுள்கண் டறிமினோ உலகுளீர் உணர்வின்றி
- இருவ ராம்என்றும் மூவரே யாம்என்றும் இயலும்ஐ வர்கள்என்றும்
- எருவ ராய்உரைத் துழல்வதென் உடற்குயிர் இரண்டுமூன் றெனலாமே.
- உரையும் உற்றது ஒளியும் உற்றது உணர்வும் உற்றது உண்மையே
- பரையும் உற்றது பதியும் உற்றது பதமும் உற்றது பற்றியே
- புரையும் அற்றது குறையும் அற்றது புலையும் அற்றது புன்மைசேர்
- திரையும் அற்றது நரையும் அற்றது திரையும் அற்றவி ழுந்ததே.
- உருவும் அருவும் உபய நிலையும் உடைய நித்த னே
- உயிருள் நிறைந்த தலைவ எல்லாம் வல்ல சித்த னே
- மருவும் துரிய வரையுள் நிறைந்து வயங்கும் பரம மே
- மன்றில் பரமா னந்த நடஞ்செய் கின்ற பிரம மே.
- எனக்கும் உனக்கும்
- உருவாய் அருவாய் உருவரு வாய்அவை
- ஒன்றுமல் லீர்இங்கு வாரீர்
- என்றும்நல் லீர்இங்கு வாரீர். வாரீர்
- உருவும் உணர்வும்செய் நன்றி - அறி
- உளமும் எனக்கே உதவிய தன்றித்
- திருவும் கொடுத்தது பாரீர் - திருச்
- சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
- உரியதுரிய பெரியவெளியில் ஒளியில்ஒளிசெய் நடனனே
- பிரியஅரிய பிரியமுடைய பெரியர்இதய படனனே.
- உருவே உயிரே உணர்வே உறவே
- உரையே பொருளே ஒளியே வெளியே
- ஒன்றே என்றே நன்றே தந்தாய் அம்பர344 நம்பர னே.
- உருத்திரர்கள் ஒருகோடி நாரணர்பல் கோடி
- உறுபிரமர் பலகோடி இந்திரர்பல் கோடி
- பெருத்தமற்றைத் தேவர்களும் முனிவர்களும் பிறரும்
- பேசில்அனந் தங்கோடி ஆங்காங்கே கூடித்
- திருத்தமுறு திருச்சபையின் படிப்புறத்தே நின்று
- தியங்குகின்றார் நடங்காணும் சிந்தையராய் அந்தோ
- வருத்தமொன்றும் காணாதே நான்ஒருத்தி ஏறி
- மாநடங்காண் கின்றேன்என் மாதவந்தான் பெரிதே.
- உரியபெருந் தனித்தலைவர் ஓங்குசடாந் தத்தின்
- உட்புறத்தும் அப்புறத்தும் ஒருசெங்கோல் செலுத்தும்
- துரியர்துரி யங்கடந்த சுகசொருபர் பொதுவில்
- சுத்தநடம் புரிகின்ற சித்தர்அடிக் கழலே
- பெரியபதத் தலைவர்எலாம் நிற்குநிலை இதுஓர்
- பெண்உரைஎன் றெள்ளுதியோ கொள்ளுதியோ தோழி
- அரியபெரும் பொருள்மறைகள் ஆகமங்கள் உரைக்கும்
- ஆணையும்இங் கீதிதற்கோர் ஐயம்இலை அறியே.