- ஒன்றாய்ப் பலவாய் உயிராய் உயிர்க்குயிராய்
- நன்றாய் நவமாய் நடுநிலையாய் - நின்றோங்கும்
- ஒன்பான் வடிவாய் ஒளியெண் குணக்கடலாய்
- அன்பாய் அகநிலையாய் அற்புதமாய் - இன்பாய்
- ஒன்றிடத்தும் ஒன்றாதாய் ஒன்றுவதாய் ஆனந்தம்
- மன்றிடத்தில் என்றும் வதிவதாய் - ஒன்றியதோர்
- ஒன்றும் அறிவின் உதயாதி ஈறளவும்
- என்றும் இரண்டென்ப தில்லவராய் - மன்றவொளிர்
- ஒன்றென்ற மேலவரை ஒன்றென் றுரைத்தவர்பால்
- சென்றொன்றி நிற்கின்ற சித்தனெவன் - அன்றொருநாள்
- ஒன்றே இரண்டேமேல் ஒன்றிரண்டே என்பவற்றுள்
- சென்றே நடுநின்ற சித்தனெவன் - சென்றேறும்
- ஒன்றென் றுணர உணர்த்தி அடியருளம்
- சென்றங் கமர்ந்தருளும் தேவனெவன் - என்றென்றும்
- ஒன்றாலும் நீங்கா துகங்கள் பலபலவாய்ச்
- சென்றாலும் செல்லாநம் செல்வம்காண் - முன்தாவி
- ஒன்னார் புரம்பொடித்த உத்தமனே என்றொருகால்
- சொன்னா லுலகத் துயரறுங்காண் - எந்நாளும்
- ஒன்றைமறைக் கின்றாய்மற் றொன்றைநினைக் கின்றாயென்
- நன்றைமறைக் கின்றாய் நலிகின்றாய் - வென்றிபெறும்
- ஒன்றொருசார் நில்லென்றால் ஓடுகின்ற நீஅதனை
- என்றும் புரப்பதனுக் கென்செய்வாய் - வென்றியொடு
- ஒன்றேனும் நன்றாய் உணர்ந்திருத்தி யேலிவரை
- இன்றே துறத்தற் கிசையாயோ - நின்றோரில்
- ஒன்றெடுக்கச் சென்றுமற்றை ஒன்றெடுக்கக் காண்கின்றேன்
- இன்றடுத்த நீஎங் கிருந்தனையே - மன்றடுத்த
- ஒன்னலர்போல் கூடுவா ரோடொருநீ கூடுங்கால்
- என்னைநினை யாயென்சொ லெண்ணுதியோ - பன்னுறுநின்
- ஒன்றேஎன் ஆருயிர்க் கோருற வேஎனக் கோரமுதே
- நன்றேமுக் கண்ணுடை நாயக மேமிக்க நல்லகுணக்
- குன்றே நிறைஅருட் கோவே எனது குலதெய்வமே
- மன்றே ஒளிர்முழு மாணிக்க மேஎனை வாழ்விக்கவே.
- ஒன்றும் பெருஞ்சீ ரொற்றிநக ருடையீர் யார்க்கு முணர்வரியீ
- ரென்றும் பெரியீர் நீர்வருதற் கென்ன நிமித்த மென்றேன்யான்
- றுன்றும் விசும்பே காணென்றார் சூதா முமது சொல்லென்றே
- னின்றுன் முலைதா னென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- ஒன்னார் புரமூன் றெரிசெய்தீ ரொற்றி யுடையீ ரும்முடைய
- பொன்னார் சடைமேல் வெள்ளெருக்கம் பூவை மிலைந்தீ ரென்னென்றே
- னின்னா ரளகத் தணங்கேநீ நெட்டி மிலைந்தா யிதிலதுகீ
- ழென்னா ருலக ரென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- ஒன்றுநின் தன்மை அறிந்தில மறைகள் உள்ளம்நொந் திளைக்கின்றதின்னும்
- நன்றுநின் தன்மை நான் அறிந் தேத்தல் நாயர சாளல்போல் அன்றோ
- சென்றுநின் றடியர் உள்ளகத் தூறும் தெள்ளிய அமுதத்தின் திரட்டே
- மன்றுள்நின் றாடும் மாணிக்க மலையே வளங்கொளும் ஒற்றியூர் மணியே.
- ஒன்றுந் தெரிந்திட மாட்டாப் பருவத் துணர்வுதந்தாய்
- இன்றுந் தருதற் கிறைவா நின்உள்ளம் இயைதிகொலோ
- கன்றுங் கருத்தொடு மாழ்குகின் றேன்உன் கழல்அடிக்கே
- துன்றுங் கருத்தறி யேன்சிறி யேன்என் துணிவதுவே.
- ஒன்றாகி இரண்டாகி ஒன்றிரண்டின் நடுவே
- உற்றஅனு பவமயமாய் ஒளிர்அடிகள் வருந்த
- அன்றார நடந்திரவில் யானுறையும் இடத்தே
- அடைந்துகத வந்திறப்பித் தன்பொடெனை அழைத்து
- நன்றார எனதுகரத் தொன்றருளி இங்கே
- நண்ணநீ எண்ணியவா நடத்துகஎன் றரைத்தாய்
- இன்றார வந்ததனை உணர்த்தினைநின் அருளை
- என்புகல்வேன் மணிமன்றில் இலங்கிசற் குருவே .
- ஒன்றல இரண்டும் அலஇரண் டொன்றோ டுருஅல அருஅல உவட்ட
- நன்றல நன்றல் லாதல விந்து நாதமும் அலஇவை அனைத்தும்
- பொன்றல்என் றறிந்துட் புறத்தினும் அகண்ட பூரண மாம்சிவம் ஒன்றே
- வென்றல்என் றறிநீ என்றனை சித்தி விநாயக விக்கினேச் சுரனே.
- ஒன்றார்புரம் எரிசெய்தவர் ஒற்றித்திரு நகரார்
- மன்றார்நடம் உடையார்தரு மகனார்பசு மயில்மேல்
- நின்றார்அது கண்டேன்கலை நில்லாது கழன்ற
- தென்றாரொடு சொல்வேன்எனை யானேமறந் தேனே.
- ஒன்றோடிரண் டெனுங்கண்ணினர் உதவுந்திரு மகனார்
- என்றோடிகல் எழிலார்மயில் ஏறிஅங் குற்றார்
- நன்றோடினன் மகிழ்கூர்ந்தவர் நகைமாமுகங் கண்டேன்
- கன்றோடின பசுவாடின கலைஊடின அன்றே.
- ஒன்றிரண் டான உளவாண்டி - அந்த
- ஒன்றிரண் டாகா அளவாண்டி
- மின்திரண் டன்ன வடிவாண்டி - அந்த
- மேலவன் சீர்த்தியைப் பாடுங்கடி.
- ஒன்றும் பெருஞ்சீ ரொற்றிநக ருள்ளா ருவந்தின் றுற்றனர்யான்
- என்றும் பெரியீர் நீர்வருதற் கென்ன நிமித்த மென்றுரைத்தேன்
- துன்றும் விசும்பே யென்றனர்நான் சூதா முமது சொல்லென்றேன்
- குன்றுங் குடமு மிடையுனது கொங்கை யெனவே கூறினரே.
- ஒன்னார் புரமூன் றெரிசெய்தீ ரொற்றி யுடையீ ருவப்புடனே
- யென்னா குலத்தை யோட்டுமென்றே னிடைய ரலநா மென்றுரைத்தார்
- பொன்னாற் சடையீ ரென்றேனென் புதிய தேவி மனைவியென்றார்
- சொன்னாற் கேள்வி வியப்பென்றேன் சுத்த வியப்பொன் றென்றாரே.
- ஒன்றுடன் இரண்டெனவி தண்டைஇடும் மிண்டரொடும்
- ஒன்றல்அற நின்றநிலையே
- ஒன்றென விரண்டென வொன்றிரண் டெனவிவை
- யன்றென விளங்கிய வருட்பெருஞ் ஜோதி
- ஒன்றினி லொன்றே யொன்றிடை யாயிரம்
- அன்றற வகுத்த வருட்பெஞ் ஜோதி
- ஒன்றதி ரண்டது வொன்றினி ரண்டது
- ஒன்றினு ளொன்றது வொன்றெனு மொன்றே
- ஒன்றல ரண்டல வொன்றினி ரண்டல
- ஒன்றினு ளொன்றல வொன்றெனு மொன்றே
- ஒன்றினி லொன்றுள வொன்றினி லொன்றில
- ஒன்றற வொன்றிய வொன்றெனு மொன்றே
- ஒன்றதி லொன்றன் றுரைக்கவும் படாதாய்
- என்றுமோர் படித்தா மென்றனி யின்பே
- ஒன்றும்அலார் இரண்டும்அலார் ஒன்றிரண்டும் ஆனார்
- உருவும்அலார் அருவும்அலார் உருஅருவும் ஆனார்
- அன்றும்உளார் இன்றும்உளார் என்றும்உளார் தமக்கோர்
- ஆதியிலார் அந்தமிலார் அரும்பெருஞ்சோ தியினார்
- என்றுகனல் மதிஅகத்தும் புறத்தும்விளங் கிடுவார்
- யாவும்இலார் யாவும்உளார் யாவும்அலார் யாவும்
- ஒன்றுறுதாம் ஆகிநின்றார் திருச்சிற்றம் பலத்தே
- ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவருண்டே கண்டீர்.
- ஒன்றெனக் காணும் உணர்ச்சிஎன் றுறுமோ
- ஊழிதோ றுழிசென் றிடினும்
- என்றும்இங் கிறவா இயற்கைஎன் றுறுமோ
- இயல்அருட் சித்திகள் எனைவந்
- தொன்றல்என் றுறுமோ அனைத்தும்என் வசத்தே
- உறுதல்என் றோஎனத் துயர்ந்தேன்
- உன்திரு வுளமே அறிந்ததிவ் வனைத்தும்
- உரைப்பதென் அடிக்கடி உனக்கே.
- ஒன்றியே உணவை உண்டுடல் பருத்த
- ஊத்தையேன் நாத்தழும் புறவே
- வென்றியே உரைத்து வினைகளே விளைத்த
- வீணனேன் ஊர்தொறுஞ் சுழன்ற
- பன்றியே அனையேன் கட்டுவார் அற்ற
- பகடெனத் திரிகின்ற படிறேன்
- நன்றியே அறியேன் என்னினும் உனையே
- நம்பினேன் கைவிடேல் எனையே.
- ஒன்றே சிவம்என் றுணர்ந்திவ் வுலகமெலாம்
- நன்றே ஒருமையுற்று நண்ணியே - மன்றே
- நடம்புரியும் பாத நளினமலர்க் குள்ளம்
- இடம்புரிக வாழ்க இசைந்து.
- ஒன்றிலேன் பிறிதொன் றுன்னருட் சோதி
- ஒன்றுற ஒன்றினேன் என்றாள்
- நன்றிலேன் எனினும் நின்திரு வடியை
- நம்பினேன் நயந்தருள் என்றாள்
- குன்றிலே இருத்தற் குரியநான் துயரக்
- குழியிலே இருந்திடேன் என்றாள்
- மன்றிலே நடஞ்செய் வள்ளலே என்றாள்
- வரத்தினால் நான்பெற்ற மகளே.
- ஒன்றுகண் டேன்திரு அம்பலத் தேஒளி ஓங்குகின்ற
- நன்றுகண் டேன்உல கெல்லாம் தழைக்க நடம்புரிதல்
- இன்றுகண் டேன்என்றும் சாகா வரத்தை எனக்கருள
- மன்றுகண் டார்க்கிந்த வாழ்வுள தென்று மகிழ்ந்தனனே.
- ஒன்றே சிவம்என் றுணர்ந்தேன் உணர்ந்தாங்கு
- நின்றேமெய்ஞ் ஞான நிலைபெற்றேன் - நன்றேமெய்ச்
- சித்தியெலாம் பெற்றேன் திருஅம்ப லத்தாடி
- பத்திஎலாம் பெற்ற பலன்.
- ஒன்றுமுன் எண்பால் எண்ணிடக் கிடைத்த
- வுவைக்குமேற் றனைஅருள் ஒளியால்
- நன்றுகண் டாங்கே அருட்பெருஞ் சோதி
- நாதனைக் கண்டவன் நடிக்கும்
- மன்றுகண் டதனில் சித்தெலாம் வல்ல
- மருந்துகண் டுற்றது வடிவாய்
- நின்றுகொண் டாடுந் தருணம்இங் கிதுவே
- நெஞ்சமே அஞ்சலை நீயே.
- ஒன்றே சிவம்அதை ஒன்றுசன் மார்க்கமும்
- ஒன்றேஎன் றீர்இங்கு வாரீர்
- நன்றேநின் றீர்இங்கு வாரீர். வாரீர்
- ஒன்றில்ஒன் றான மருந்து - அந்த
- ஒன்றில் இரண்டாகி ஓங்கு மருந்து
- அன்றிமூன் றான மருந்து - நான்
- காகிஐந் தாகி அமர்ந்த மருந்து. ஞான
- ஒன்றான பூரண ஜோதி - அன்பில்
- ஒன்றாத உள்ளத்தில் ஒன்றாத ஜோதி
- என்றா ஒளிர்கின்ற ஜோதி - என்னுள்
- என்றும் விளங்கிய என்னுயிர் ஜோதி. சிவசிவ
- ஒன்றும் பதத்திற் குயர்பொரு ளாகியே
- என்றும்என் உள்ளத் தினிக்கும் பதத்திற்கே அபயம்