- ஒருமாது பெற்ற மகன்பொருட் டாக உவந்துமுன்னம்
- வருமாம னாகி வழக்குரைத் தோய்என் வழக்குரைத்தற்
- கிருமா நிலத்தது போல்வேடங் கட்ட இருத்திகொலோ
- திருமால் வணங்கும் பதத்தவ யானுன் சிறுவனன்றே.
- ஒருமுடி மேல்பிறை வைத்தோய் அரிஅயன் ஒண்மறைதம்
- பெருமுடி மேலுற வேண்ட வராதுனைப் பித்தனென்ற
- மருமுடி யூரன் முடிமேல் மறுப்பவும் வந்ததவர்
- திருமுடி மேலென்ன ஆசைகண் டாய்நின் திருவடிக்கே.
- ஒருரு வாய்ஒற்றி யூர்அமர்ந் தார்நின் னுடையவர்பெண்
- சீருரு வாகுநின் மாற்றாளை நீதெளி யாத்திறத்தில்
- நீருரு வாக்கிச் சுமந்தார் அதனை நினைந்திலையே
- வாருரு வார்கொங்கை நங்காய் வடிவுடை மாணிக்கமே.
- ஒருமா முகனை யொருமாவை யூர்வா கனமா யுறநோக்கித்
- திருமான் முதலோர் சிறுமையெலாந் தீர்த்தெம் மிருகண் மணியாகிக்
- கருமா லகற்றுங் கணபதியாங் கடவு ளடியுங் களித்தவர்பின்
- வருமா கருணைக் கடற்குமர வள்ள லடியும் வணங்குவாம்.
- ஒருகை முகத்தோர்க் கையரெனு மொற்றித் தேவ ரிவர்தமைநான்
- வருகை யுவந்தீ ரென்றனைநீர் மருவி யணைதல் வேண்டுமென்றேன்
- றருகை யுடனே யகங்காரந் தனையெம் மடியார் தமைமயக்கை
- யிருகை வளைசிந் தென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- ஒருவ ரெனவா ழொற்றியுளீ ருமக்கம் மனையுண் டோவென்றே
- னிருவ ரொருபே ருடையவர்கா ணென்றா ரென்னென்றே னெம்பேர்
- மருவு மீறற் றயலகரம் வயங்கு மிகர மானதென்றே
- யிருவு மொழிதந் தருள்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- ஒருக ணப்பொழு தேனுநின் அடியை
- உள்கி டாதுளம் ஓடுகின் றதனால்
- திருக ணப்பெறும் தீயனேன் செய்யும்
- திறம்அ றிந்திலேன் செப்பலென் சிவனே
- வருக ணத்துடல் நிற்குமோ விழுமோ
- மாயு மோஎன மயங்குவேன் தன்னை
- அருக ணைத்தருள் ஒற்றியூர் இறையே
- அம்ப லத்தினின் றாடல்செய் அமுதே.
- ஒருமைப் பயனை ஒருமைநெறி உணர்ந்தார் உணர்வின் உள்ளுணர்வைப்
- பெருமைக் கதியைப் பசுபதியைப் பெரியோர் எவர்க்கும் பெரியோனை
- அருமைக் களத்தில் கருமைஅணி அம்மான் தன்னை எம்மானை
- இருமைப் பயனுந் தருவானை என்னே எண்ணா திருந்தேனே.
- ஒருநாளன் றிரவில்அடி வருந்தநடந் தடியேன்
- உற்றஇடந் தனைத்தேடிக் கதவுதிறப் பித்து
- மருநாள மலரடிஒன்றுள்ளகத்தே பெயர்த்து
- வைத்துமகிழ்ந் தெனைஅழைத்து வாங்கிதனை என்று
- தருநாளில் யான்மறுப்ப மறித்தும்வலிந் தெனது
- தடங்கைதனிற் கொடுத்திங்கே சார்கஎன உரைத்தாய்
- வருநாளில் அதனருமை அறிந்துமகிழ் கின்றேன்
- மணிமன்றுள் நடம்புரியும் மாணிக்க மணியே.
- ஒருமையிலே இருமைஎன உருக்காட்டிப் பொதுவில்
- ஒளிநடஞ்செய் தருளுகின்ற உபயபதம் வருந்த
- அருமையிலே நடந்தெளியேன் இருக்குமிடத் தடைந்தே
- அணிக்கதவந் திறப்பித்தென் அங்கையில்ஒன் றளித்துப்
- பெருமையிலே பிறங்குகநீ எனத்திருவாய் மலர்ந்த
- பெருங்கருணைக் கடலேநின் பெற்றியைஎன் என்பேன்
- கருமையிலே நெடுங்காலங் கலந்துகலக் குற்ற
- கலக்கமெலாந் தவிர்த்தெம்மைக் காத்தருளும் பதியே.
- ஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்ற
- உத்தமர்தம் உறவுவேண்டும்
- உள்ஒன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்
- உறவுகல வாமைவேண்டும்
- பெருமைபெறு நினதுபுகழ் பேசவேண் டும்பொய்மை
- பேசா திருக்க்வேண்டும்
- பெருநெறி பிடித்தொழுக வேண்டும்மத மானபேய்
- பிடியா திருக்கவேண்டும்
- மருவுபெண் ஆசையை மறக்கவே வேண்டும்உனை
- மறவா திருக்கவேண்டும்
- மதிவேண்டும் நின்கருணை நிதிவேண்டும் நோயற்ற
- வாழ்வில்நான் வாழவேண்டும்
- தருமமிகு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- ஒருவ ரெனவா ழொற்றியுளீ ருமக்கம் மனையுண் டேயென்றேன்
- இருவ ரொருபே ருடையவர்காண் என்றா ரென்னென் றேனென்பேர்
- மருவு மீறற் றயலகரம் வயங்கு மிகர மானதென்றார்
- அருவு மிடையா யென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே.
- ஒருநிலை யிதுவே வுயர்நிலை யெனுமொரு
- திருநிலை மேவிய சிவமே சிவமே
- ஒருமடந்தை வலிந்தணைந்து கலந்தகன்ற பின்னர்
- உளம்வருந்தி என்செய்தோம் என்றயர்ந்த போது
- பெருமடஞ்சேர் பிள்ளாய்என் கெட்டதொன்றும் இலைநம்
- பெருஞ்செயல்என் றெனைத்தேற்றிப் பிடித்தபெருந் தகையே
- திருமடந்தை மார்இருவர் என்எதிரே நடிக்கச்
- செய்தருளிச் சிறுமைஎலாம் தீர்த்ததனிச் சிவமே
- கருமடம்தீர்ந் தவர்எல்லாம் போற்றமணி மன்றில்
- காட்டும்நடத் தரசேஎன் பாட்டும்அணிந் தருளே.
- ஒருவா தடியேன் எண்ணியவா றெல்லாம் அருளி உளங்களித்தே
- திருவார் சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
- பெருவாழ் வடைந்தேன் பெருங்களிப்பால் பெருமான் நின்பால் வளர்கின்றேன்
- உருவார் உலகில் உனைப்பாடி ஆடும் வண்ணம் உரைத்தருளே.
- ஒருமையின் உலகெலாம் ஓங்குக எனவே
- ஊதின சின்னங்கள் ஊதின சங்கம்
- பெருமைகொள் சமரச சுத்தசன் மார்க்கப்
- பெரும்புகழ் பேசினர் பெரியவர் சூழ்ந்தார்
- அருமையும் எளிமையும் ஆகிஅன் றாகி
- அம்பலத் தேசித்தி ஆடல்செய் பதியே
- இருமையும் அளித்தஎன் அருட்பெருஞ் சோதி
- என்அர சேபள்ளி எழுந்தருள் வாயே.
- ஒருமைபெறு தோற்றம்ஒன்று தத்துவம்பல் வேறு
- ஒன்றின்இயல் ஒன்றிடத்தே உற்றிலஇங் கிவற்றை
- இருமையினும் மும்மைமுதல் எழுமையினும் கூட்டி
- இலங்கியசிற் சத்திநடு இரண்டொன்றென் னாத
- பெருமைபெற்று விளங்கஅதின் நடுஅருள்நின் றிலங்கப்
- பெரியஅருள் நடுநின்று துரியநடம் புரியும்
- அருமைஎவர் கண்டுகொள்வர் அவர்பெருமை அவரே
- அறியாரே என்னடிநீ அறைந்தவண்ணம் தோழி.
- ஒருபிரமன் அண்டங்கள் அடிமுடிப் பெருமையே
- உன்னமுடி யாஅவற்றின்
- ஓராயி ரங்கோடி மால்அண்டம் அரன்அண்டம்
- உற்றகோ டாகோடியே
- திருகலறு பலகோடி ஈசன்அண் டம்சதா
- சிவஅண்டம் எண்ணிறந்த
- திகழ்கின்ற மற்றைப் பெருஞ்சத்தி சத்தர்தம்
- சீரண்டம் என்புகலுவேன்
- உறுவும்இவ் வண்டங்கள் அத்தனையும் அருள்வெளியில்
- உறுசிறு அணுக்களாக
- ஊடசைய அவ்வெளியின் நடுநின்று நடனமிடும்
- ஒருபெருங் கருணைஅரசே
- மருவிஎனை ஆட்கொண்டு மகனாக்கி அழியா
- வரந்தந்த மெய்த்தந்தையே
- மணிமன்றின் நடுநின்ற ஒருதெய்வ மேஎலாம்
- வல்லநட ராஜபதியே.
- ஒருநா ழிகையில் யோக நிலையை உணர்த்தி மாலை யே
- யோகப் பயனை முழுதும் அளித்தாய் மறுநாள் காலை யே
- திருநாள் நிலையும் தீர்த்த நிலையும் தெய்வ நிலையு மே
- சிறியேன் அறியக் காட்டித் தெரித்தாய் வேதக் கலையு மே.
- எனக்கும் உனக்கும்
- ஒருமை நிலையில் இருமையும் தந்த
- ஒருமையி னீர்இங்கு வாரீர்
- பெருமையி னீர்இங்கு வாரீர். வாரீர்