- ஒலிவடிவு நிறஞ்சுவைகள் நாற்றம் ஊற்றம்
- உறுதொழில்கள் பயன்பலவே றுளவாய் எங்கும்
- மலிவகையாய் எவ்வகையும் ஒன்றாய் ஒன்றும்
- மாட்டாதாய் எல்லாமும் வல்ல தாகிச்
- சலிவகையில் லாதமுதற் பொருளே எல்லாம்
- தன்மயமாய் விளங்குகின்ற தனியே ஆண்பெண்
- அலிவகையல் லாதவகை கடந்து நின்ற
- அருட்சிவமே சிவபோகத் தமைந்த தேவே.
- ஒல்லையே நஞ்சனைத்தும் உண்ட தயாநிதிநீ
- அல்லையோ நின்றிங் கயர்வேன்முன் வந்தொருசொல்
- சொல்லையோ ஒற்றியூர்த் தூயதிருக் கோயிலுள்நீ
- இல்லையோ ஐயா எழுத்தறியும் பெருமானே.
- ஒல்லை எயில்மூன் றெரிகொளுவ உற்று நகைத்தோன் ஒற்றியுளான்
- தில்லை நகரான் சிவபெருமான் தியாகப் பெருமான் திருப்பவனி
- கல்லை அளியும் கனியாக்கக் கண்டேன் கொண்ட களிப்பினுக்கோர்
- எல்லை அறியேன் அம்மாநான் என்ன தவந்தான் செய்தேனோ.
- ஒல்லார் புரமூன் றெரிசெய்தார் ஒற்றி அமர்ந்தார் எல்லார்க்கும்
- நல்லார் வல்லார் அவர்முன்போய் நாராய் நின்று நவிற்றுதியே
- அல்லார் குழலாள் கண்ராம் ஆற்றில் அலைந்தாள் அணங்கனையார்
- பல்லார் சூழ்ந்து பழிதூற்றப் படுத்தாள் விடுத்தாள் பாயல்என்றே.
- ஒல்லும்வகை அறியாதே உன்னருளோ டூடி
- ஊறுபுகன் றேன்துயரம் ஆறும்வகை உணரேன்
- புல்லியனேன் புகன்றபிழை பொறுத்தருளல் வேண்டும்
- பூதியணிந் தொளிர்கின்ற பொன்மேனிப் பெருமான்
- சொல்லியலும் பொருளியலும் கடந்தபர நாதத்
- துரியவெளிப் பொருளான பெரியநிலைப் பதியே
- மெல்லியல்நற் சிவகாம வல்லிகண்டு மகிழ
- விரியுமறை ஏத்தநடம் புரியும்அருள் இறையே.