- கஞ்சத்தி லேர்முக மஞ்சத்தி லேர்நடைக் கன்னியர்கண்
- நஞ்சத்தி லேஅவர் வஞ்சத்தி லேபட்டு நாணுறும்புன்
- நெஞ்சத்தி லேஅதன் தஞ்சத்தி லேமுக் கணித்தஎன்போல்
- பஞ்சத்தி லேபிர பஞ்சத்தி லேஉழப் பார்எவரே.
- கஞ்ச னோர்தலை நகத்தடர்த் தவனே
- காமன் வெந்திடக் கண்விழித் தவனே
- தஞ்ச மானவர்க் கருள்செயும் பரனே
- சாமிக் கோர்திருத் தந்தையா னவனே
- நஞ்சம் ஆர்மணி கண்டனே எவைக்கும்
- நாத னேசிவ ஞானிகட் கரசே
- செஞ்சொல் மாமறை ஏத்துறும் பதனே
- திகழும் ஒற்றியூர்ச் சிவபெரு மானே.
- கஞ்சன் அங்கொரு விஞ்சனம் ஆகிக்
- காலில் போந்துமுன் காணரு முடியார்
- அஞ்ச னம்கொளும் நெடுங்கணாள் எங்கள்
- அம்மை காணநின் றாடிய பதத்தார்
- செஞ்சொன் மாதவர் புகழ்திரு வொற்றித்
- தேவர் காண்அவர் திருமுடிக் காட்ட
- மஞ்ச னங்கொடு வருதும்என் மொழியை
- மறாது நீஉடன் வருதிஎன் மனனே.
- கஞ்சனைச் சிரங்கொய் கரத்தனை மூன்று கண்ணனைக் கண்ணனைக் காத்த
- தஞ்சனை ஒற்றித் தலத்தனைச் சைவத் தலைவனைத் தாழ்ந்துநின் றேத்தா
- வஞ்சரைக் கடைய மடையரைக் காம மனத்தரைச் சினத்தரை வலிய
- நஞ்சரை இழிந்த நரகரைக் கண்டால் நடுங்குவ நடுங்குவ மனமே.
- கஞ்சமலர்த் தவிசிருந்த நான்முகனும் நெடுமாலும் கருதிப் போற்ற
- அஞ்சநடை அம்மைகண்டு களிக்கப்பொன் அம்பலத்தில் ஆடு கின்ற
- எஞ்சல்இலாப் பரம்பொருளே என்குருவே ஏழையினே னிடத்து நீயும்
- வஞ்சம்நினைத் தனையாயில் என்செய்வேன் என்செய்வேன் மதியி லேனே.
- கஞ்சன் அறியார் ஒற்றியினார் கண்மூன் றுடையார் கனவினிலும்
- வஞ்சம் அறியார் என்றனக்கு மாலைஇட்ட தொன்றல்லால்
- மஞ்சம் அதனில் என்னோடு மருவி இருக்க நான்அறியேன்
- கொஞ்சம் மதிநேர் நுதலாய்என் குறையை எவர்க்குக் கூறுவனே.
- கஞ்சன் துதிக்கும் பொருளேஎன் கண்ணே நின்னைக் கருதாத
- வஞ்சர் கொடிய முகம்பார்க்க மாட்டேன் இனிஎன் வருத்தம்அறுத்
- தஞ்சல் எனவந் தருளாயேல் ஆற்றேன் கண்டாய் அடியேனே
- செஞ்சந் தனம்சேர் தணிகைமலைத் தேனே ஞானச் செழுஞ்சுடரே.