- கயவர் இல்லிடைக் கலங்கலை நெஞ்சே
- காம ஐம்புலக் கள்வரை வீட்டி
- வயம்அ ளிக்குவன் காண்டிஎன் மொழியை
- மறுத்தி டேல்இன்று வருதிஎன் னுடனே
- உயவ ளிக்குநல் ஒற்றியூர் அமர்ந்தங்
- குற்று வாழ்த்திநின் றுன்னுகின் றவர்க்குத்
- தயவ ளிக்குநம் தனிமுதல் செல்வத்
- தந்தை யார்அடிச் சரண்புக லாமே.
- கயவு செய்மத கரிஎனச் செருக்கும்
- கருத்தி னேன்மனக் கரிசினால் அடைந்த
- மயர்வு நீக்கிட வந்துநிற் கின்றேன்
- வள்ள லேஉன்றன் மனக்குறிப் பறியேன்
- உயவு வந்தருள் புரிந்திடாய் எனில்என்
- உயிர் தரித்திடா துன்அடி ஆணை
- தயவு செய்தருள் வாய்வடல் அரசே
- சத்தி யச்சபைத் தனிப்பெரும் பதியே.
- கயந்துளே உவட்டும் காஞ்சிரங் காயில்
- கடியனேன் காமமே கலந்து
- வியந்துளே மகிழும் வீணனேன் கொடிய
- வெகுளியேன் வெய்யனேன் வெறியேன்
- மயர்ந்துளேன் உலக வாழ்க்கையை மனையை
- மக்களை ஒக்கலை மதித்தே
- நயந்துளேன் எனினும் பயந்துளேன் உனையே
- நம்பினேன் கைவிடேல் எனையே.