- கிரியைநெறி அகற்றிமறை முடிவில் நின்று
- கேளாமல் கேட்கின்ற கேள்வி யேசொற்
- கரியவறை விடுத்துநவ நிலைக்கு மேலே
- காணாமற் காண்கின்ற காட்சியே உள்
- அரியநிலை ஒன்றிரண்டின் நடுவே சற்றும்
- அறியாமல் அறிகின்ற அறிவே என்றும்
- உரியசதா நிலைநின்ற உணர்ச்சி மேலோர்
- உன்னாமல் உன்னுகின்ற ஒளியாம் தேவே.
- கிட்டவர வேண்டுமென்றார் பாங்கிமா ரே - நான்
- கிட்டுமுன்னே யெட்டநின்றார் பாங்கிமா ரே.
- கின்னரங்கே ளென்றிசைத்தார் பாங்கிமா ரே - நான்
- கேட்பதன்முன் சேட்படுத்தார் பாங்கிமா ரே.
- கிள்ளையைத்தூ தாவிடுத்தேன் பாங்கிமா ரே - அது
- கேட்டுவரக் காணேனையோ பாங்கிமா ரே.
- கிடைக்குள் மாழ்கியே கிலம்செய் அந்தகன்
- படைக்குள் பட்டிடும் பான்மை எய்திடேன்
- தடைக்குள் பட்டிடாத் தணிகை யான்பதத்
- தடைக்க லம்புகுந் தருள்செ ழிப்பனே.
- கிளைக்குறும் பிணிக்கோர் உறையுளாம் மடவார்
- கீழுறும் அல்குல்என் குழிவீழ்ந்
- திளைக்கும்வன் கொடிய மனத்தினை மீட்டுன்
- இணைஅடிக் காக்கும்நாள் உளதோ
- விளைக்கும்ஆ னந்த வியன்தனி வித்தே
- மெய்அடி யவர்உள விருப்பே
- திளைக்கும்மா தவத்தோர்க் கருள்செயுந் தணிகைத்
- தெய்வமே அருட்செழுந் தேனே.
- கிளைத்தஇவ் வுடம்பில் ஆசைஎள் ளளவும் கிளைத்திலேன் பசிஅற உணவு
- திளைத்திடுந் தோறும் வெறுப்பொடும் உண்டேன் இன்றுமே வெறுப்பில்உண் கின்றேன்
- தளைத்திடு முடைஊன்உடம்பொருசிறிதும்தடித்திடநினைத்திலேன் இன்றும்
- இளைத்திட விழைகின் றேன்இது நான்தான் இயம்பல்என்நீ அறிந்ததுவே.
- கிளக்கின்ற மறைஅளவை ஆகமப்பே ரளவை
- கிளந்திடுமெய்ச் சாதனமாம் அளவைஅறி வளவை
- விளக்கும்இந்த அளவைகளைக் கொண்டுநெடுங் காலம்
- மேலவர்கள் அளந்தளந்து மெலிகின்றார் ஆங்கே
- அளக்கின்ற கருவிஎலாம் தேய்ந்திடக் கண்டாரே
- அன்றிஒரு வாறேனும் அளவுகண்டார் இலையே
- துளக்கம்உறு சிற்றறிவால் ஒருவாறென் றுரைத்தேன்
- சொன்னவெளி வரையேனும் துணிந்தளக்கப் படுமோ.
- கிளைஅனந்த மறையாலும் நிச்சயிக்கக் கூடாக்
- கிளர்ஒளியார் என்அளவில் கிடைத்ததனித் தலைவர்
- அளையஎனக் குணர்த்தியதை யான்அறிவேன் உலகர்
- அறிவாரோ அவர்உரைகொண் டையமுறேல் இங்கே
- இளைவடையேன் மாளிகையை மங்கலங்கள் நிரம்ப
- இனிதுபுனைந் தலங்கரிப்பாய் காலைஇது கண்டாய்
- தளர்வறச்சிற் றம்பலத்தே நடம்புரிவார் ஆணை
- சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே.
- கிழக்குவெளுத் ததுகருணை அருட்சோதி உதயம்
- கிடைத்ததென துளக்கமலம் கிளர்ந்ததென தகத்தே
- சழக்குவெளுத் ததுசாதி ஆச்சிரமா சாரம்
- சமயமதா சாரம்எனச் சண்டையிட்ட கலக
- வழக்குவெளுத் ததுபலவாம் பொய்ந்நூல்கற் றவர்தம்
- மனம்வெளுத்து வாய்வெளுத்து வாயுறவா தித்த
- முழுக்குவெளுத் ததுசிவமே பொருள்எனும்சன் மார்க்க
- முழுநெறியில் பரநாத முரசுமுழங் கியதே.