- கொந்தணவுங் கார்க்குழலார் கோலமயிற் போலுலவும்
- பந்தண நல்லூர்ப் பசுபதியே - கந்தமலர்
- கொன்செய்கை கொண்டகொடுங் கூற்றன் குறுகிலதற்
- கென்செய்வோ மென்றெண்ணி எய்க்கின்றேன் - முன்செய்வினை
- கொம்மை பெறுங்கோடா கோடியண்டம் எல்லாமோர்
- செம்மயிர்க்கால் உட்புகுத்தும் சித்தனெவன் - செம்மையிலா
- கொண்டவெலாந் தன்பால் கொடுக்குமவர் தம்மிடத்தில்
- கண்டவெலாம் கொள்ளைகொளுங் கள்வனெவன் - கொண்டுளத்தில்
- கொண்டிருந்தான் பொன்மேனிக் கோலமதை நாம்தினமுங்
- கண்டிருந்தால் அல்லலெலாம் கட்டறுங்காண் - தொண்டடைந்து
- கொவ்வை யெனஇதழைக் கொள்கின்றாய் மேல்குழம்பும்
- செவ்வை இரத்தமெனத் தேர்ந்திலையே - செவ்வியகண்
- கொண்டா ருடனுணவு கொள்கின்றாய் குக்கலுடன்
- உண்டாலும் அங்கோர் உறவுண்டே - மிண்டாகும்
- கொத்தென்ற அம்மடவார் கூட்டம் எழுமைக்கும்
- வித்தென் றறிந்துமதை விட்டிலையே - தொத்தென்று
- கொண்டியங்கு கின்றாய் குறித்தனவே பிற்குறித்துப்
- பண்டறியார் போலப் படர்கின்றாய் - பண்டறிந்து
- கொல்லா விரதமது கொள்ளாரைக் காணிலொரு
- புல்லாக எண்ணிப் புறம்பொழிக - எல்லாமும்
- கொன்செய்தாற் கேற்றிடுமென் குற்றமெலாம் ஐயஎனை
- என்செய்தால் தீர்ந்திடுமோ யானறியேன் - முன்செய்தோய்
- நின்பால் எனைக்கொடுத்தேன் நீசெய்க அன்றிஇனி
- என்பால் செயலொன் றிலை.
- கொன்னஞ்சேன் தன்பிழையைக் கூர்ந்துற்று நானினைக்கில்
- என்நெஞ்சே என்னை எரிக்குங்காண் - மன்னுஞ்சீர்
- எந்தாய்நின் சித்தத்திற் கேதாமோ நானறியேன்
- சிந்தா குலனென்செய் வேன்.
- கொடிகொண்ட ஏற்றின் நடையும் சடையும் குளிர்முகமும்
- துடிகொண்ட கையும் பொடிகொண்ட மேனியும் தோலுடையும்
- பிடிகொண்ட பாகமும் பேரருள் நோக்கமும் பெய்கழலும்
- குடிகொண்ட நன்மனம் என்மனம் போற்குறை கொள்வதின்றே.
- கொங்கிட்ட கொன்றைச் சடையும்நின் னோர்பசுங் கோமளப்பெண்
- பங்கிட்ட வெண்திரு நீற்றொளி மேனியும் பார்த்திடில்பின்
- இங்கிட்ட மாயையை எங்கிட்ட வாஎன் றிசைப்பினும்போய்ச்
- சங்கிட்ட ஓசையில் பொங்கிட்ட வாய்கொடு தாண்டிடுமே.
- கொடையா ரொற்றி வாணரிவர் கூறா மௌன ராகிநின்றார்
- தொடையா ரிதழி மதிச்சடையென் துரையே விழைவே துமக்கென்றே
- னுடையார் துன்னற் கந்தைதனை யுற்று நோக்கி நகைசெய்தே
- யிடையாக் கழுமுட் காட்டுகின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- கொடியா லெயில்சூ ழொற்றியிடங் கொண்டீ ரடிகள் குருவுருவாம்
- படியா லடியி லிருந்தமறைப் பண்பை யுரைப்பீ ரென்றேனின்
- மடியா லடியி லிருந்தமறை மாண்பை வகுத்தா யெனிலதுநா
- மிடியா துரைப்பே மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- கொன்றைச் சடையீர் கொடுங்கோளூர் குறித்தீர் வருதற் கஞ்சுவல்யா
- னொன்றப் பெருங்கோ ளென்மீது முரைப்பா ருண்டென் றுணர்ந்தென்றேன்
- நன்றப் படியேற் கோளிலியா நகரு முடையே நங்காய்நீ
- யின்றச் சுறலென் னென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- கொண்டல்நிறத் தோனும் குணிக்கரிய நின்அடிக்கே
- தொண்டறிந்து செய்யாத துட்டனேன் ஆயிடினும்
- எண்டகநின் பொன்அருளை எண்ணிஎண்ணி வாடுகின்றேன்
- தண்டலைசூழ் ஒற்றியுளாய் தயவுசற்றும் சார்ந்திலையே.
- கொடிய மாதர்கள் இடையுறும் நரகக்
- குழியில் என்தனைக் கொண்டுசென் றழுத்திக்
- கடிய வஞ்சனை யால்எனைக் கலக்கம்
- கண்ட பாவியே காமவேட் டுவனே
- இடிய நெஞ்சகம் இடர்உழந் திருந்தேன்
- இன்னும் என்னைநீ ஏன்இழுக் கின்றாய்
- ஒடிவில் ஒற்றியூர்ச் சிவன்அருள் வாளால்
- உன்னை வெட்டுவல் உண்மைஎன் றுணரே.
- கொள்ளுவார் கொள்ளும் குலமணியே மால்அயனும்
- துள்ளுவார் துள்அடக்கும் தோன்றலே சூழ்ந்துநிதம்
- உள்ளுவார் உள்உறையும் ஒற்றியப்பா உன்னுடைய
- தெள்ளுவார் பூங்கழற்கென் சிந்தைவைத்து நில்லேனோ.
- கொடிய நஞ்சமு தாக்கிய உமக்கிக்
- கொடிய னேனைஆட் கொள்ளுதல் அரிதோ
- அடியர் தம்பொருட் டடிபடு வீர்எம்
- ஐய நும்மடிக் காட்பட விரைந்தேன்
- நெடிய மால்அயன் காண்கில ரேனும்
- நின்று காண்குவல் என்றுளம் துணிந்தேன்
- பொடிய நீறணி வீர்ஒற்றி உடையீர்
- பொய்யன் என்னில்யான் போம்வழி எதுவோ.
- கொடிய நெஞ்சினேன் கோபமே அடைந்தேன்
- கோடி கோடியாம் குணப்பழு துடையேன்
- கடிய வஞ்சகக் கள்வனேன் தனக்குன்
- கருணை ஈந்திடா திருந்திடில் கடையேன்
- அடியன் ஆகுவ தெவ்வணம் என்றே
- ஐய ஐயநான் அலறிடு கின்றேன்
- ஒடிய மும்மலம் ஒருங்கறுத் தவர்சேர்
- ஒற்றி மேவிய உலகுடை யோனே.
- கொடிய வஞ்சக நெஞ்சகம் எனும்ஓர்
- குரங்கிற் கென்உறு குறைபல உரைத்தும்
- கடிய தாதலின் கசிந்தில தினிஇக்
- கடைய னேன்செயக் கடவதொன் றறியேன்
- அடிய னேன்பிழை உளத்திடை நினையேல்
- அருளல் வேண்டும்என் ஆருயிர்த் துணையே
- செடிகள் நீக்கிய ஒற்றிஎம் உறவே
- செல்வ மேபர சிவபரம் பொருளே.
- கொலைஅறியாக் குணத்தோர்நின் அன்பர் எல்லாம்
- குணமேசெய் துன்னருள்தான் கூடு கின்றார்
- புலைஅறிவேன் நான்ஒருவன் பிழையே செய்து
- புலங்கெட்ட விலங்கேபோல் கலங்கு கின்றேன்
- நிலைஅறியேன் நெறியொன்றும் அறியேன் எங்கும்
- நினைஅன்றித் துணையொன்றும் அறியேன் சற்றும்
- அலைஅறியா அருட்கடல்நீ ஆள்க வீணில்
- அலைகின்றேன் என்செய்கேன் அந்தோ அந்தோ.
- கொடிய பாவியேன் படும்பரி தாபம்
- குறித்துக் கண்டும்என் குறைஅகற் றாது
- நெடிய காலமும் தாழ்த்தனை நினது
- நெஞ்சும் வஞ்சகம் நேர்ந்ததுண் டேயோ
- அடியர் தந்துயர் கண்டிடில் தரியார்
- ஐயர் என்பர்என் அளவஃ திலையோ
- ஒடிய மாதுயர் நீக்கிடாய் என்னில்
- உனைஅ லால்எனை உடையவர் எவரே.
- கொம்மிய டிப்பெண்கள் கொம்மி யடி - இரு
- கொங்கைகு லுங்கவே கொம்மி யடி.
- கொம்மிய டிப்பெண்கள் கொம்மி யடி - இரு
- கொங்கைகு லுங்கவே கொம்மி யடி.
- கொண்டு குலம்பேசுவா ருண்டோ வுலகிலெங்கள்
- குருவே - குருவே - குருவேயென் றலறவும்
- கொற்றம் உடையார் திருஒற்றிக் கோயில்உடையார் என்எதிரே
- பொற்றை மணித்தோட் புயங்காட்டிப் போனார் என்னைப் புலம்பவைத்துக்
- குற்றம் அறியேன் மனநடுக்கங் கொண்டேன் உடலங் குழைகின்றேன்
- கற்றிண் முலையாய் என்னடிநான் கனவோ நனவோ கண்டதுவே.
- கொழுதி அளிதேன் உழுதுண்ணும் கொன்றைச் சடையார் கூடலுடை
- வழுதி மருகர் திருஒற்றி வாணர் பவனி வரக்கண்டேன்
- பழுதில் அவனாந் திருமாலும் படைக்குங் கமலப் பண்ணவனும்
- எழுதி முடியா அவரழகை என்னென் றுரைப்ப தேந்திழையே.
- கொள்உண்ட வஞ்சர்தம் கூட்டுண்டு வாழ்க்கையில் குட்டுண்டுமேல்
- துள்உண்ட நோயினில் சூடுண்டு மங்கையர் தோய்வெனும்ஓர்
- கள்உண்ட நாய்க்குன் கருணைஉண் டோநற் கடல்அமுதத்
- தெள்உண்ட தேவர் புகழ்தணி காசலச் சிற்பரனே.
- கொள்ளேனோ நீஅமர்ந்த தணிகைமலைக் குறஎண்ணம் கோவே வந்தே
- அள்ளேனோ நின்அருளை அள்ளிஉண்டே ஆனந்தத் தழுந்தி ஆடித்
- துள்ளேனோ நின்தாளைத் துதியேனோ துதித்துலகத் தொடர்பை எல்லாம்
- தள்ளேனோ நின்அடிக்கீழ்ச் சாரேனோ துணைஇல்லாத் தனிய னேனே.
- கொள்ளும் பொழில்சூழ் தணிகைமலைக் கோவை நினையா தெனைநரகில்
- தள்ளும் படிக்கோ தலைப்பட்டாய் சகத்தின் மடவார் தம்மயலாம்
- கள்ளுண் டந்தோ வெறிகொண்டாய் கலைத்தாய் என்னைக் கடந்தோர்கள்
- எள்ளும் படிவந் தலைக்கின்றாய் எனக்கென் றெங்கே இருந்தாயோ.
- கொதிக்கின்ற வன்மொழியாற் கூறியதை யையோ
- மதிக்கின்ற தோறுமுள்ளே வாளிட் டறுக்குதடா.
- கொல்லா நெறியே குருவரு ணெறியெனப்
- பல்கா லெனக்குப் பகர்ந்தமெய்ச் சிவமே
- கொடிய வெம்புலிக் குணத்தினேன் உதவாக்
- கூவம் நேர்ந்துளேன் பாவமே பயின்றேன்
- கடிய நெஞ்சினேன் குங்குமம் சுமந்த
- கழுதை யேன்அவப் பொழுதையே கழிப்பேன்
- விடியு முன்னரே எழுந்திடா துறங்கும்
- வேட னேன்முழு மூடரில் பெரியேன்
- அடிய னாவதற் கென்செயக் கடவேன்
- அப்ப னேஎனை ஆண்டுகொண் டருளே.
- கொட்டிலை அடையாப் பட்டிமா டனையேன் கொட்டைகள் பரப்பிமேல் வனைந்த
- கட்டிலை விரும்பி அடிக்கடி படுத்த கடையனேன் கங்குலும் பகலும்
- அட்டிலை அடுத்த பூஞையேன் உணவை அறவுண்டு குப்பைமேற் போட்ட
- நெட்டிலை அனையேன் என்னினும் வேறு நினைத்திடேல் காத்தருள் எனையே.
- கொலைபல புரிந்தே புலைநுகர்ந் திருந்தேன்
- கோடுறு குரங்கினிற் குதித்தே
- அலைதரு மனத்தேன் அறிவிலேன் எல்லாம்
- அறிந்தவன் போல்பிறர்க் குரைத்தேன்
- மலைவுறு சமய வலைஅகப் பட்டே
- மயங்கிய மதியினேன் நல்லோர்
- நலையல எனவே திரிந்தனன் எனினும்
- நம்பினேன் கைவிடேல் எனையே.
- கொடியேன் பிழைநீ குறியேல் அபயம்
- கொலைதீர் நெறிஎன் குருவே அபயம்
- முடியேன் பிறவேன் எனநின் அடியே
- முயல்வேன் செயல்வே றறியேன் அபயம்
- படியே அறியும் படியே வருவாய்
- பதியே கதியே பரமே அபயம்
- அடியேன் இனிஓர் இறையும் தரியேன்
- அரசே அருள்வாய் அபயம் அபயம்.
- கொடுத்திடநான் எடுத்திடவும் குறையாத நிதியே
- கொல்லாத நெறியேசித் தெல்லாஞ்செய் பதியே
- மடுத்திடவும் அடுத்தடுத்தே மடுப்பதற்குள் ளாசை
- வைப்பதன்றி வெறுப்பறியா வண்ணநிறை அமுதே
- எடுத்தெடுத்துப் புகன்றாலும் உலவாத ஒளியே
- என்உயிரே என்உயிருக் கிசைந்தபெருந் துணையே
- தடுத்திடவல் லவர்இல்லாத் தனிமுதற்பே ரரசே
- தாழ்மொழிஎன் றிகழாதே தரித்துமகிழ்ந் தருளே.
- கொலைபுரிவார் தவிரமற்றை எல்லாரும் நினது
- குலத்தாரே நீஎனது குலத்துமுதல் மகனே
- மலைவறவே சுத்தசிவ சமரசசன் மார்க்கம்
- வளரவளர்ந் திருக்கஎன வாழ்த்தியஎன் குருவே
- நிலைவிழைவார் தமைக்காக்கும் நித்தியனே எல்லா
- நிலையும்விளங் குறஅருளில் நிறுத்தியசிற் குணனே
- புலையறியாப் பெருந்தவர்கள் போற்றமணிப் பொதுவில்
- புனிதநடத் தரசேஎன் புகலும்அணிந் தருளே.
- கொடியவரே கொலைபுரிந்து புலைநுகர்வார் எனினும்
- குறித்திடும்ஓர் ஆபத்தில் வருந்துகின்ற போது
- படியில்அதைப் பார்த்துகவேல் அவர்வருத்தம் துன்பம்
- பயந்தீர்ந்து விடுகஎனப் பரிந்துரைத்த குருவே
- நெடியவரே நான்முகரே நித்தியரே பிறரே
- நின்மலரே என்கின்றோர் எல்லாரும் காண
- அடியும்உயர் முடியும்எனக் களித்தபெரும் பொருளே
- அம்பலத்தென் அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.
- கொள்ளைவினைக் கூட்டுறவால் கூட்டியபல் சமயக்
- கூட்டமும்அக் கூட்டத்தே கூவுகின்ற கலையும்
- கள்ளமுறும் அக்கலைகள் காட்டியபல் கதியும்
- காட்சிகளும் காட்சிதரு கடவுளரும் எல்லாம்
- பிள்ளைவிளை யாட்டெனநன் கறிவித்திங் கெனையே
- பிள்ளைஎனக் கொண்டுபிள்ளைப் பெயரிட்ட பதியே
- தள்ளரிய மெய்யடியார் போற்றமணி மன்றில்
- தனிநடஞ்செய் அரசேஎன் சாற்றும்அணிந் தருளே.
- கொள்ளைஎன இன்பம் கொடுத்தாய் நினதுசெல்வப்
- பிள்ளைஎன எற்குப் பெயரிட்டாய் - தெள்ளமுதம்
- தந்தாய் சமரசசன் மார்க்கசங்கத் தேவைத்தாய்
- எந்தாய் கருணை இது.
- கொண்டான் அடிமை குறியான் பிழைஒன்றும்
- கண்டான்265 களித்தான் கலந்திருந்தான் - பண்டாய
- நான்மறையும் ஆகமமும் நாடுந் திருப்பொதுவில்
- வான்மயத்தான் என்னை மகிழ்ந்து.
- கொடிப்பெரு மணிப்பொற் கோயில்என் உளமாக்
- கொண்டுவந் தமர்ந்தனன் என்றாள்
- கடிப்புது மலர்ப்பூங் கண்ணிவேய்ந் தெனைத்தான்
- கடிமணம் புரிந்தனன் என்றாள்
- ஒடிப்பற எல்லாம் வல்லதோர் சித்தாம்
- ஒளிஎனக் களித்தனன் என்றாள்
- இடிப்பொடு நொடித்தீர் காண்மினோ என்றாள்
- என்தவத் தியன்றமெல் லியலே.
- கொல்லா நெறியது கோடா நிலையது கோபமிலார்
- சொல்லால் உவந்தது சுத்தசன் மார்க்கந் துணிந்ததுல
- கெல்லாம் அளிப்ப திறந்தால் எழுப்புவ தேதம்ஒன்றும்
- செல்லா வளத்தின துத்தர ஞான சிதம்பரமே.
- கொழுந்தேனும் செழும்பாகும் குலவுபசும் பாலும்
- கூட்டிஉண்டாற் போல்இனிக்குங் குணங்கொள்சடைக் கனியே
- தொழுந்தேவ மடந்தையர்க்கு மங்கலநாண் கழுத்தில்
- தோன்றவிடம் கழுத்தினுளே தோன்றநின்ற சுடரே
- எழுந்தேறும் அன்பருளத் தேற்றுதிரு விளக்கே
- என்உயிர்க்குத் துணையேஎன் இருகண்ணுள் மணியே
- அழுந்தேற அறியாதென் அவலநெஞ்சம் அந்தோ
- அபயம்உனக் கபயம்எனை ஆண்டருள்க விரைந்தே.
- கொடுமுடி மேல்ஆயி ரத்தெட்டு மாற்றுப்பொற்
- கோயில் இருந்தத டி - அம்மா
- கோயில் இருந்தத டி. ஆணி
- கொடிகட்டிக்கொண்டோம்என்று சின்னம் பிடி
- கூத்தாடு கின்றோம்என்று சின்னம் பிடி
- அடிமுடியைக் கண்டோம்என்று சின்னம் பிடி
- அருளமுதம் உண்டோம்என்று சின்னம் பிடி.
- கொடிஇடைப்பெண் பேதாய்நீ அம்பலத்தே நடிக்கும்
- கூத்தாடி என்றெனது கொழுநர்தமைக் குறித்தாய்
- படிஇடத்தே வான்இடத்தே பாதலத்தே அண்ட
- பகிரண்ட கோடியிலே பதிவிளக்கம் எல்லாம்
- அடிமலர்கொண் டையர்செய்யும் திருக்கூத்தின் விளக்கம்
- ஆகும்இது சத்தியம்என் றருமறைஆ கமங்கள்
- கெடியுறவே பறையடித்துத் திரிகின்ற அவற்றைக்
- கேட்டறிந்து கொள்வாய்நின் வாட்டமெலாம் தவிர்ந்தே.