- சாமகீ தப்பிரியன் மணிகண்ட சீகண்ட சசிகண்ட சாமகண்ட
- சயசய வெனுந்தொண்ட ரிதயமலர் மேவிய சடாமகுடன் மதனதகனன்
- சந்திரசே கரனிடப வாகனன் கங்கா தரன்சூல பாணியிறைவன்
- தனிமுத லுமாபதி புராந்தகன் பசுபதி சயம்புமா தேவனமலன்
- சார்ந்தால் வினைநீக்கித் தாங்குதிரு வக்கரையுள்
- நேர்ந்தார் உபநிடத நிச்சயமே - தேர்ந்தவர்கள்
- சான்றோர் வணங்குநொடித் தான்மலையில் வாழ்கின்ற
- தேன்றோய் அமுதச் செழுஞ்சுவையே - வான்தோய்ந்த
- சாதகமோ தீவினையின் சாதனையோ நானறியேன்
- பாதகமென் றாலெனக்குப் பாற்சோறு - தீதகன்ற
- சாருருவின் நல்லருளே சத்தியாய் மெய்யறிவின்
- சீருருவே ஓருருவாம் தேவனெவன் - ஈருருவும்
- சால்புடைய நல்லோர்க்குத் தண்ணருள்தந் தாட்கொளவோர்
- மால்விடைமேல் வந்தருளும் வள்ளலெவன் - மான்முதலோர்
- சார்ந்திலங்கும் கொன்றைமலர்த் தாரழகும் அத்தார்மேல்
- ஆர்ந்திலங்கும் வண்டின் அணியழகும் - தேர்ந்தவர்க்கும்
- சாற்றிநின்றார் கேட்டுமவன் தாள்நினையாய் மெய்யன்பில்
- போற்றவென்றால் ஈதொன்றும் போதாதோ - போற்றுகின்ற
- சாடியென்பாய் நீஅயலோர் தாதுக் கடத்திடுமேன்
- மூடியென்பார் மற்றவர்வாய் மூடுதியோ - மேடதனை10
- சாயைமயில் என்றே தருக்குகின்றாய் சார்பிரம
- சாயை109யஃ தென்பார்க்கென் சாற்றுதியே - சேயமலர்
- சாலமென்கோ வானிந்த்ர சாலமென்கோ வீறால
- காலமென்கோ நின்பொல்லாக் காலமென்கோ - ஞாலமதில்
- சாகான் கிழவன் தளர்கின்றான் என்றிவண்நீ
- ஓகாளம் செய்வதனை ஓர்ந்திலையோ - ஆகாத
- சார்பிலொன்று விட்டொழிந்தால் சாலமகிழ் கிற்பேனான்
- சோர்புகொண்டு நீதான் துயர்கின்றாய் - சார்புபெருந்
- சாதியென்றும் வாழ்வென்றும் தாழ்வென்றும் இவ்வுலக
- நீதியென்றும் கன்ம நெறியென்றும் - ஓதரிய
- சாதுக்கள் ஆமவர்தம் சங்க மகத்துவத்தைச்
- சாதுக்க ளன்றியெவர் தாமறிவார் - நீதுக்கம்
- சாதகத் தோர்கட்குத் தானருள் வேனெனில் தாழ்ந்திடுமா
- பாதகத் தோனுக்கு முன்னருள் ஈந்ததெப் பான்மைகொண்டோ
- தீதகத் தேன்எளி யேன்ஆ யினும்உன் திருவடியாம்
- போதகத் தேநினைக் கின்றேன் கருணை புரிந்தருளே.
- சாற்றவ னேகநன் னாவுள்ள தாயினும் சாற்றரிதாம்
- வீற்றவ னேவெள்ளி வெற்பவ னேஅருள் மேவியவெண்
- நீற்றவ னேநின் னருள்தர வேண்டும் நெடுமுடிவெள்
- ஏற்றவ னேபலி ஏற்றவனே அன்பர்க் கேற்றவனே.
- சார்ந்தேநின் பால்ஒற்றி யூர்வாழும் நாயகர் தாமகிழ்வு
- கூர்ந்தே குலாவும்அக் கொள்கையைக் காணில் கொதிப்பளென்று
- தேர்ந்தேஅக் கங்கையைச் செஞ்சடை மேல்சிறை செய்தனர்ஒண்
- வார்ந்தே குழைகொள் விழியாய் வடிவுடை மாணிக்கமே.
- சாரா வறுஞ்சார்பில் சார்ந்தரைசே உன்னுடைய
- தாரார் மலரடியைத் தாழ்ந்தேத்தேன் ஆயிடினும்
- நேராய்நின் சந்நிதிக்கண் நின்றுநின்று வாடுகின்றேன்
- ஓராயோ சற்றேனும் ஒற்றியூர் உத்தமனே.
- சார்ந்த லோபமாம் தயையிலி ஏடா
- தாழ்ந்தி ரப்பவர் தமக்கணு அதனுள்
- ஈர்ந்த ஒன்றினை ஈயவும் ஒட்டாய்
- இரக்கின் றோர்தரின் அதுகொளற் கிசைவாய்
- சோர்ந்தி டாதுநான் துய்ப்பவும் செய்யாய்
- சுகமி லாதநீ தூரநில் இன்றேல்
- ஓர்ந்த ஒற்றியூர்ச் சிவன்அருள் வாளால்
- உன்னை வெட்டுவல் உண்மைஎன் றுணரே.
- சாதல் பிறத்தல் எனும்கடலில் தாழ்ந்து கரைகா ணாதழுந்தி
- ஈதல் இரக்கம் எள்அளவும் இல்லா தலையும் என்றனைநீ
- ஓதல் அறிவித் துணர்வறிவித் தொற்றி யூர்ச்சென் றுனைப்பாடக்
- காதல் அறிவித் தாண்டதற்கோர் கைம்மா றறியேன் கடையேனே.
- சால மாலும் மேலும்இடந் தாலும் அறியாத் தழல்உருவார்
- சேலும் புனலும் சூழ்ஒற்றித் திகழுந் தியாகப் பெருமானார்
- பாலுந் தேனுங் கலந்ததெனப் பவனி வந்தார் என்றனர்யான்
- மேலுங் கேட்கு முன்னமனம் விட்டங் கவர்முன் சென்றதுவே.
- சாரும் தணிகையில் சார்ந்தோய்நின் தாமரைத் தாள்துணையைச்
- சேரும் தொழும்பா திருப்பதம் அன்றிஇச் சிற்றடியேன்
- ஊரும் தனமும் உறவும் புகழும் உரைமடவார்
- வாருந் தணிமுலைப் போகமும் வேண்டிலன் மண்விண்ணிலே.
- சாறு சேர்திருத் தணிகை எந்தைநின்
- ஆறு மாமுகத் தழகை மொண்டுகொண்
- டூறில் கண்களால் உண்ண எண்ணினேன்
- ஈறில் என்னுடை எண்ணம் முற்றுமோ.
- சார்ந்த அடியார்க் கருள்அளிக்கும் தருமக் கடலே தற்பரமே
- வார்ந்த பொழில்சூழ் திருத்தணிகை மணியே உன்றன் ஆறெழுத்தை
- ஓர்ந்து மனத்தின் உச்சரித்திங் குயர்ந்த திருவெண்ணீறிட்டால்
- ஆர்ந்த ஞானம் உறும்அழியா அலக்கண் ஒன்றும் அழிந்திடுமே.
- சாக்கியனார் எறிந்தசிலை சகித்தமலை சித்த
- சாந்தர் உளஞ் சார்ந்தோங்கித் தனித்தமலை சபையில்
- தூக்கியகா லொடுவிளங்கும் தூயமலை வேதம்
- சொன்னமலை சொல்லிறந்த துரியநடு மலைவான்
- ஆக்கியளித் தழிக்குமலை அழியாத மலைநல்
- அன்பருக்கின் பந்தருமோர் அற்புதப்பொன் மலைநற்
- பாக்கியங்க ளெல்லாமும் பழுத்தமலை என்னும்
- பழமலையைக் கிழமலையாய்ப் பகருவதென் னுலகே.
- சாகாக் கலைநிலை தழைத்திடு வெளியெனும்
- ஆகா யத்தொளி ரருட்பெருஞ் ஜோதி
- சாக்கிரா தீதத் தனிவெளி யாய்நிறை
- வாக்கிய சிற்சபை யருட்பெருஞ் ஜோதி
- சாதியு மதமுஞ் சமயமுங் காணா
- ஆதிய நாதியா மருட்பெருஞ் ஜோதி
- சாமா றனைத்துந் தவிர்த்திங் கெனக்கே
- ஆமா றருளிய வருட்பெருஞ் ஜோதி
- சாவா நிலையிது தந்தன முனக்கே
- ஆவா வெனவரு ளருட்பெருஞ் ஜோதி
- சாதியு மதமுஞ் சமயமும் பொய்யென
- ஆதியி லுணர்த்திய வருட்பெருஞ் ஜோதி
- சாருயிர்க் கெல்லாந் தாரக மாம்பரை
- யாருயிர்க் குயிரா மருட்பெருஞ் ஜோதி
- சாகாக் கல்வியின் றரமெலாங் கற்பித்
- தேகாக் கரப்பொரு ளீந்தசற் குருவே
- சாகா வரமுந் தனித்தபே ரறிவும்
- மாகா தலிற்சிவ வல்லப சத்தியும்
- சாலவே யினிக்குஞ் சர்க்கரைத் திரளே
- ஏலவே நாவுக் கினியகற் கண்டே
- சாகாக் கல்வியின் றரமெலா முணர்த்திச்
- சாகா வரத்தையுந் தந்துமேன் மேலும்
- சார்பூத விளக்கமொடு பகுதிகளின் விளக்கம்
- தத்துவங்கள் விளக்கமெலாந் தருவிளக்க மாகி
- நேராதி விளக்கமதாய்ப் பரைவிளக்க மாகி
- நிலைத்தபரா பரைவிளக்க மாகிஅகம் புறமும்
- பேராசை விளக்கமதாய்ச் சுத்தவிளக் கமதாய்ப்
- பெருவிளக்க மாகிஎலாம் பெற்றவிளக் கமதாய்ச்
- சீராட விளங்குகின்ற இயற்கைவிளக் கமதாம்
- திருச்சிற்றம் பலந்தனிலே தெய்வமொன்றே கண்டீர்.
- சாதிமதம் சமயம்எனும் சங்கடம்விட் டறியேன்
- சாத்திரச்சே றாடுகின்ற சஞ்சலம்விட் டறியேன்
- ஆதிஅந்த நிலையறியேன் அலைஅறியாக் கடல்போல்
- ஆனந்தப் பெரும்போகத் தமர்ந்திடவும் அறியேன்
- நீதிநெறி நடந்தறியேன் சோதிமணிப் பொதுவில்
- நிருத்தமிடும் ஒருத்தர்திருக் கருத்தைஅறி வேனோ
- ஏதிலர்சார் உலகினிடை எங்ஙனம்நான் புகுவேன்
- யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.
- சாகாத தலைஅறியேன் வேகாத காலின்
- தரம்அறியேன் போகாத தண்ரை அறியேன்
- ஆகாய நிலைஅறியேன் மாகாய நிலையும்
- அறியேன்மெய்ந் நெறிதனைஓர் அணுஅளவும் அறியேன்
- மாகாத லுடையபெருந் திருவாளர் வழுத்தும்
- மணிமன்றந் தனைஅடையும் வழியும்அறி வேனோ
- ஏகாய200 உலகினிடை எங்ஙனம்நான் புகுவேன்
- யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.
- சாற்றுவேன் எனது தந்தையே தாயே
- சற்குரு நாதனே என்றே
- போற்றுவேன் திருச்சிற் றம்பலத் தாடும்
- பூரணா எனஉல கெல்லாம்
- தூற்றுவேன் அன்றி எனக்குநீ செய்த
- தூயபேர் உதவிக்கு நான்என்
- ஆற்றுவேன் ஆவி உடல்பொருள் எல்லாம்
- அப்பநின் சுதந்தரம் அன்றோ.
- சாவதென்றும் பிறப்பதென்றும் சாற்றுகின்றபெரும்பாவம் தன்னைஎண்ணி
- நோவதின்று புதிதன்றே என்றும்உள தால்இந்த நோவை நீக்கி
- ஈவதுமன் றிடைநடிப்போய் நின்னாலே ஆகும்மற்றை இறைவ ராலே
- ஆவதொன்றும் இல்லைஎன்றால் அந்தோஇச் சிறியேனால் ஆவதென்னே.
- சாற்றுபே ரண்டப் பகுதிகள் அனைத்தும் தனித்தனி அவற்றுளே நிரம்பித்
- தோற்றுமா பிண்டப் பகுதிகள் அனைத்தும் சோதியால் விளக்கிஆ னந்த
- ஆற்றிலே நனைத்து வளர்த்திடும் பொதுவில் அரும்பெருந் தந்தையே இன்பப்
- பேற்றிலே விழைந்தேன் தலைவநின் தனக்கே பிள்ளைநான் பேதுறல் அழகோ.
- சாதியும் மதமும் சமயமும் தவிர்ந்தேன்
- சாத்திரக் குப்பையும் தணந்தேன்
- நீதியும் நிலையும் சத்தியப் பொருளும்
- நித்திய வாழ்க்கையும் சுகமும்
- ஆதியும் நடுவும் அந்தமும் இல்லா
- அருட்பெருஞ் சோதிஎன் றறிந்தேன்
- ஓதிய அனைத்தும் நீஅறிந் ததுநான்
- உரைப்பதென் அடிக்கடி உனக்கே.
- சாமத் திரவில் எழுந்தருளித் தமியேன் தூக்கந் தடுத்துமயல்
- காமக் கடலைக் கடத்திஅருட் கருணை அமுதங் களித்தளித்தாய்
- நாமத் தடிகொண் டடிபெயர்க்கும் நடையார் தமக்கும் கடையானேன்
- ஏமத் தருட்பே றடைந்தேன்நான் என்ன தவஞ்செய் திருந்தேனே.
- சாகாத கல்வியிலே தலைகாட்டிக் கொடுத்தீர்
- தடையறியாக் கால்காட்டித் தரம்பெறவும் அளித்தீர்
- மாகாதல் உடையவனா மனங்கனிவித் தழியா
- வான்அமுதும் மெய்ஞ்ஞான மருந்தும்உணப் புரிந்தீர்
- போகாத புனலாலே சுத்தஉடம் பினராம்
- புண்ணியரும் நண்ணரிய பொதுநிலையுந் தந்தீர்
- நாகாதி பதிகளும்நின் றேத்தவளர்க் கின்றீர்
- நடராஜ ரேநுமக்கு நான்எதுசெய் வேனே.
- சாதிகுலம் சமயமெலாம் தவிர்த்தெனைமேல் ஏற்றித்
- தனித்ததிரு அமுதளித்த தனித்தலைமைப் பொருளே
- ஆதிநடுக் கடைகாட்டா தண்டபகி ரண்டம்
- ஆருயிர்கள் அகம்புறம்மற் றனைத்தும்நிறை ஒளியே
- ஓதிஉணர்ந் தவர்எல்லாம் எனைக்கேட்க எனைத்தான்
- ஓதாமல் உணர்ந்துணர்வாம் உருவுறச்செய் உறவே
- சோதிமய மாய்விளங்கித் தனிப்பொதுவில் நடிக்கும்
- தூயநடத் தரசேஎன் சொல்லும்அணிந் தருளே.
- சாற்றுகின்ற கலைஐந்தில் பரமாதி நான்கும்
- தக்கஅவற் றூடிருந்த நந்நான்கும் நிறைந்தே
- ஊற்றுகின்ற அகம்புறமேல் நடுக்கீழ்மற் றனைத்தும்
- உற்றிடுந்தன் மயமாகி ஒளிர்கின்ற ஒளியே
- தோற்றுகின்ற கலைஉலகம் கலைஅண்ட முழுதும்
- துலங்குகின்ற சுடர்பரப்பிச் சூழ்கின்ற சுடரே
- போற்றுகின்ற மெய்அடியர் களிப்பநடித் தருளும்
- பொதுவில்நடத் தரசேஎன் புகலும்அணிந் தருளே.
- சாகாத கல்வியிலே தலையான நிலையே
- சலியாத காற்றிடைநின் றொலியாத கனலே
- ஏகாத புனலிடத்தே இடியாத புவியே
- ஏசாத மந்திரத்தே பேசாத பொருளே
- கூகாஎன் றெனைக்கூடி எடுக்காதே என்றும்
- குலையாத வடிவெனக்கே கொடுத்ததனி அமுதே
- மாகாதல் உடையார்கள் வழுத்தமணிப் பொதுவில்
- மாநடஞ்செய் அரசேஎன் மாலையும்ஏற் றருளே.
- சார்கலாந் தாதிச் சடாந்தமுங் கலந்த
- சமரச சத்திய வெளியைச்
- சோர்வெலாந் தவிர்த்தென் அறிவினுக் கறிவாய்த்
- துலங்கிய ஜோதியைச் சோதிப்
- பார்பெறாப் பதத்தைப் பதமெலாங் கடந்த
- பரமசன் மார்க்கமெய்ப் பதியைச்
- சேர்குணாந் தத்திற் சிறந்ததோர் தலைமைத்
- தெய்வத்தைக் கண்டுகொண் டேனே.
- சாதியைநீள் சமயத்தை மதத்தைஎலாம்
- விடுவித்தென் தன்னை ஞான
- நீதியிலே சுத்தசிவ சன்மார்க்க
- நிலைதனிலே நிறுத்தி னானைப்
- பாதியைஒன் றானவனைப் பரம்பரனைப்
- பராபரனைப் பதிஅ னாதி
- ஆதியைச்சிற் றம்பலத்தென் அருட்பெருஞ்சோ
- தியைப்பெற்றேன் அச்சோ அச்சோ.
- சாகாத வரம்எனக்கே தந்ததனித் தெய்வம்
- சன்மார்க்க சபையில்எனைத் தனிக்கவைத்த தெய்வம்
- மாகாத லால்எனக்கு வாய்த்தஒரு தெய்வம்
- மாதவரா தியர்எல்லாம் வாழ்த்துகின்ற தெய்வம்
- ஏகாத நிலைஅதன்மேல் எனைஏற்றும் தெய்வம்
- எண்ணுதொறும் என்னுளத்தே இனிக்கின்ற தெய்வம்
- தேகாதி உலகமெலாஞ் செயப்பணித்த தெய்வம்
- சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.
- சாதிமதம் சமயமுதற் சங்கற்ப விகற்பம்எலாம் தவிர்ந்து போக
- ஆதிநடம் புரிகின்றான் அருட்சோதி எனக்களித்தான் அந்தோ அந்தோ.
- சாகா அருளமுதம் தானருந்தி நான்களிக்க
- நாகா திபர்சூழ் நடராஜா - ஏகா
- பவனே பரனே பராபரனே எங்கள்
- சிவனே கதவைத் திற.
- சாகாத கல்வியே கல்விஒன் றேசிவம்
- தான்என அறிந்தஅறிவே
- தகும்அறிவு மலம்ஐந்தும் வென்றவல் லபமே
- தனித்தபூ ரணவல்லபம்
- வேகாத காலாதி கண்டுகொண் டெப்பொருளும்
- விளையவிளை வித்ததொழிலே
- மெய்த்தொழில தாகும்இந் நான்கையும் ஒருங்கே
- வியந்தடைந் துலகம்எல்லாம்
- மாகாத லுறஎலாம் வல்லசித் தாகிநிறை
- வானவர மேஇன்பமாம்
- மன்னும்இது நீபெற்ற சுத்தசன் மார்க்கத்தின்
- மரபென் றுரைத்தகுருவே
- தேகாதி மூன்றும்நான் தருமுன்அருள் செய்தெனைத்
- தேற்றிஅருள் செய்தசிவமே
- சிற்சபையின் நடுநின்ற ஒன்றான கடவுளே
- தெய்வநட ராஜபதியே.
- சாகாத தலைஇது வேகாத காலாம்
- தரம்இது காண்எனத் தயவுசெய் துரைத்தே
- போகாத புனலையும் தெரிவித்தென் உளத்தே
- பொற்புற அமர்ந்ததோர் அற்புதச் சுடரே
- ஆகாத பேர்களுக் காகாத நினைவே
- ஆகிய எனக்கென்றும் ஆகிய சுகமே
- தாகாதல் எனத்தரும் தருமசத் திரமே
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- சாமாந்தர் ஆகாத் தரஞ்சிறி துணரீர்
- தத்துவ ஞானத்தை இற்றெனத் தெரியீர்
- மாமாந்த நோயுற்ற குழவியில் குழைந்தீர்
- வாழ்க்கையி லேஅற்ப மகிழ்ச்சியும் பெற்றீர்
- காமாந்த காரத்தில் கண்மூடித் திரிவீர்
- கற்பன கற்கிலீர் கருத்தனைக் கருதா
- தேமாந்து தூங்குகின் றீர்விழிக் கின்றீர்
- எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே.
- சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலே
- சாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச்சண் டையிலே
- ஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்
- அலைந்தலைந்து வீணேநீர் அழிதல்அழ கலவே
- நீதியிலே சன்மார்க்க நிலைதனிலே நிறுத்த
- நிருத்தமிடும் தனித்தலைவர் ஒருத்தர்அவர் தாமே
- வீதியிலே அருட்சோதி விளையாடல் புரிய
- மேவுகின்ற தருணம்இது கூவுகின்றேன் உமையே.
- சாதிகுலம் என்றும் சமயமதம் என்றுமுப
- நீதிஇயல் ஆச்சிரம நீட்டென்றும் - ஓதுகின்ற
- பேயாட்ட மெல்லாம் பிதிர்ந்தொழிந்த வேபிறர்தம்
- வாயாட்டம் தீர்ந்தனவே மற்று.
- சாத்திரங்கள் எல்லாம் தடுமாற்றம் சொல்வதன்றி
- நேத்திரங்கள் போற்காட்ட நேராவே - நேத்திரங்கள்
- சிற்றம் பலவன் திருவருட்சீர் வண்ணமென்றே
- உற்றிங் கறிந்தேன் உவந்து.
- சாகாத கல்வித் தரம்அறிதல் வேண்டுமென்றும்
- வேகாத கால்உணர்தல் வேண்டுமுடன் - சாகாத்
- தலைஅறிதல் வேண்டும் தனிஅருளால் உண்மை
- நிலைஅடைதல் வேண்டும் நிலத்து.
- சார்உலக வாதனையைத் தவிர்த்தவர்உள் ளகத்தே
- சத்தியமாய் அமர்ந்தருளும் உத்தமசற் குருவை
- நேர்உறவே எவராலும் கண்டுகொளற் கரிதாம்
- நித்தியவான் பொருளைஎலா நிலைகளுந்தான் ஆகி
- ஏர்உறவே விளங்குகின்ற இயற்கைஉண்மை தன்னை
- எல்லாம்செய் வல்லபத்தை எனக்களித்த பதியை
- ஓர்உறவென் றடைந்துலகீர் போற்றிமகிழ்ந் திடுமின்
- உள்ளமெலாம் கனிந்துருகி உள்ளபடி நினைந்தே.
- சாதல் பிறத்தல் என்னும் அவத்தைத் தவிர்த்துக் காலை யே
- தனித்துன் அருளின் அமுதம் புகட்டிக் கொடுத்தாய் மேலை யே
- ஓதல் உணர்தல் உவத்தல் எனக்கு நின்பொற் பாத மே
- உலக விடயக் காட்டில் செல்லா தெனது போத மே.
- எனக்கும் உனக்கும்
- சாகாக் கல்விஎனக்குப் பயிற்றித் தந்த சோதி யே
- தன்னேர் முடிஒன் றெனது முடியில் தரித்த சோதி யே
- ஏகாக் கரப்பொற் பீடத்தென்னை ஏற்று சோதி யே
- எல்லாம் வல்ல சித்திஆட்சி ஈய்ந்த சோதி யே.
- எனக்கும் உனக்கும்
- சாதிமதந் தவிர்த்தவரே அணையவா ரீர்
- தனித்தலைமைப் பெரும்பதியீர் அணையவா ரீர்
- ஆதியந்தம் இல்லவரே அணையவா ரீர்
- ஆரணங்கள் போற்றநின்றீர் அணையவா ரீர்
- ஓதியுணர் வரியவரே அணையவா ரீர்
- உள்ளபடி உரைத்தவரே அணையவா ரீர்
- ஈதிசைந்த தருணமிங்கே அணையவா ரீர்
- என்னுடைய நாயகரே அணையவா ரீர். அணையவா ரீர்
- சாகா வரந்தந்த தாரகப் பாதம்
- சச்சிதா னந்த சதோதய பாதம்
- தேகாதி எல்லாம் சிருட்டிக்கும் பாதம்
- திதிமுதல் ஐந்தொழில் செய்கின்ற பாதம். ஆடிய
- சாதி சமயச் சழக்கெலாம் அற்றது
- சன்மார்க்க ஞான சபைநிலை பெற்றது
- மேதியிற் சாகாத வித்தையைக் கற்றது
- மெய்யருட் சோதிஎன் உள்ளத்தில் உற்றது அற்புதம்
- சாதி சமயச் சழக்கைவிட் டேன்அருட்
- சோதியைக் கண்டேன டி - அக்கச்சி
- சோதியைக் கண்டேன டி.
- சாக்கிய வேதம் தேக்கிய பாதம்
- தாக்கிய ஏதம் போக்கிய பாதம்
- சோக்கிய வாதம் ஆக்கிய பாதம்
- தூக்கிய பாதம் தூக்கிய பாதம்.
- சாதிசம யங்களிலே வீதிபல வகுத்த
- சாத்திரக்குப் பைகள்எல்லாம் பாத்திரம்அன் றெனவே
- ஆதியில்என் உளத்திருந்தே அறிவித்த படியே
- அன்பால்இன் றுண்மைநிலை அறிவிக்க அறிந்தேன்
- ஓதிஉணர்ந் தோர்புகழும் சமரசசன் மார்க்கம்
- உற்றேன்சிற் சபைகாணப் பெற்றேன்மெய்ப் பொருளாம்
- சோதிநடத் தரசைஎன்றன் உயிர்க்குயிராம் பதியைச்
- சுத்தசிவ நிறைவைஉள்ளே பெற்றுமகிழ்ந் தேனே.