- சித்திமுற்ற யோகஞ் செழும்பொழிலிற் பூவைசெயும்
- சத்திமுற்ற மேவுஞ் சதாசிவமே - பத்தியுற்றோர்
- சிந்துங் கருவலியின் திண்மையென்று தேர்ந்தவர்கள்
- முந்துங் கருவிலிவாழ் முக்கண்ணா - மந்தணத்தைக்
- சிந்தையொன்று வாக்கொன்று செய்கையொன்றாய்ப் போகவிட்டே
- எந்தைநினை யேத்தா திருந்ததுண்டு - புந்தியிந்த
- சிந்தை திரிந்துழலுந் தீயரைப்போல் நற்றரும
- நிந்தையென்ப தென்பழைய நேசங்காண் - முந்தநினை
- சித்தமாய்ச் சித்தாந்த தேசாய்த் திகம்பரமாய்ச்
- சத்தமாய்ச் சுத்த சதாநிலையாய் - வித்தமாய்
- சித்தத்திற் சுத்த சிதாகாசம் என்றொருசிற்
- சத்தத்திற் காட்டும் சதுரனெவன் - முத்தரென
- சித்திக்கும் யோகியர்தம் சிந்தைதனில் தேன்போன்று
- தித்திக்கும் சேவடியின் சீரழகும் - சத்தித்து
- சிங்கமென்றால் வாடித் தியங்குகின்றாய் மாதரிடைச்
- சிங்கமெனில் காணத் திரும்பினையே - இங்குசிறு
- சித்தநோய் செய்கின்ற சீதநோய் வாதமொடு
- பித்தநோய் கொண்டவர்பால் பேர்ந்திலையோ - மெத்தரிய
- சிந்தோடும்126 ஓர்வடவைத் தீயும் கரத்தடைப்பர்
- அந்தோ உனையார் அடக்குவரே - வந்தோடும்
- சித்திகளே வத்துவென்போர்ச் சேர்ந்துறையேல் பன்மாயா
- சத்திகளே வத்துவென்போர் சார்படையேல் - பொத்தியஇச்
- சிவமே சிவஞானச் செல்வமே அன்பர்
- நவமே தவமே நலமே நவமாம்
- வடிவுற்ற தேவேநின் மாக்கருணை யன்றோ
- படிவுற்ற என்னுட் பயன்.
- சிற்பர மேஎஞ் சிவமே திருவருள் சீர்மிகுந்த
- கற்பக மேஉனைச் சார்ந்தோர்க் களிக்குநின் கைவழக்கம்
- அற்பமன் றேபல அண்டங் களின்அடங் காததென்றே
- நற்பர ஞானிகள் வாசகத் தால்கண்டு நாடினனே.
- சினத்தாலும் காமத்தி னாலும்என் தன்னைத் திகைப்பிக்கும்இம்
- மனத்தால் உறுந்துயர் போதாமை என்று மதித்துச்சுற்றும்
- இனத்தாலும் வாழ்க்கை இடும்பையி னாலும் இளைக்கவைத்தாய்
- அனத்தான் புகழும் பதத்தோய் இதுநின் அருட்கழகே.
- சிவசங்க ராசிவ யோகா சிவகதிச் சீரளிக்கும்
- சிவசம்பு வேசிவ லோகா சிவாநந்தச் செல்வநல்கும்
- சிவசுந்த ராசிவ போகா சிவாகமச் செந்நெறிசொல்
- சிவபுங்க வாசிவ ஞானிகள் வாழ்த்தும் சிவகுருவே.
- சினங்கடந் தோர்உள்ளச் செந்தா மரையில் செழித்துமற்றை
- மனங்கடந் தோதும்அவ் வாக்கும் கடந்த மறைஅன்னமே
- தினங்கடந் தோர்புகழ் ஒற்றிஎம் மானிடம் சேரமுதே
- வனங்கடந் தோன்புகழ் மானே வடிவுடை மாணிக்கமே.
- சிமைக்கொள் சூலத் திருமலர்க்கைத் தேவர் நீரெங் கிருந்ததென்றே
- னெமைக்கண் டளவின் மாதேநீ யிருந்த தெனயா மிருந்ததென்றா
- ரமைக்கு மொழியிங் கிதமென்றே னாமுன் மொழியிங் கிதமன்றோ
- விமைக்கு மிழையா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- சிறியேன் றவமோ வெனைப்பெற்றார் செய்த தவமோ வீண்டடைந்தீ
- ரறியே னொற்றி யடிகேளிங் கடைந்த வாறென் னினைத்தென்றேன்
- பொறிநே ருனது பொற்கலையைப் பூவார் கலையாக் குறநினைத்தே
- யெறிவேல் விழியா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- சிந்தா மணியை நாம்பலநாள் தேடி எடுத்த செல்வமதை
- இந்தார் வேணி முடிக்கனியை இன்றே விடைமேல் வரச்செயும்காண்
- அந்தோ வினையால் நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
- செந்தா மரையோன் தொழுதேத்தும் சிவாய நமஎன் றிடுநீறே.
- சிந்தை நின்றசி வாநந்தச் செல்வமே
- எந்தை யேஎமை ஆட்கொண்ட தெய்வமே
- தந்தை யேவலி தாயத்த லைவநீ
- கந்தை சுற்றும்க ணக்கது என்கொலோ.
- சிந்தை நொந்துல கில்பிறர் தம்மைச்
- சேர்ந்தி டாதுநும் திருப்பெயர் கேட்டு
- வந்த டைந்தஎற் குண்டிலை எனவே
- வாய்தி றந்தொரு வார்த்தையும் சொல்லீர்
- இந்த வண்ணம்நீர் இருந்திடு வீரேல்
- என்சொ லார்உமை இவ்வுல கத்தார்
- உந்தி வந்தவ னோடரி ஏத்த
- ஓங்கு சீர்ஒற்றி யூர்உடை யீரே.
- சிந்தை மயங்கித் தியங்குகின்ற நாயேனை
- முந்தை வினைதொலைத்துன் மொய்கழற்காள் ஆக்காதே
- நிந்தைஉறும் நோயால் நிகழவைத்தல் நீதியதோ
- எந்தைநீ ஒற்றி எழுத்தறியும் பெருமானே.
- சிந்தை நொந்துநொந் தயர்கின்றேன் சிவனே
- செய்வ தோர்ந்திலேன் தீக்குண முடையேன்
- வந்து நின்னடிக் காட்செய என்றால்
- வஞ்ச நெஞ்சம்என் வசம்நின்ற திலையே
- எந்தை நின்னருள் உண்டெனில் உய்வேன்
- இல்லை என்னில்நான் இல்லைஉய்ந் திடலே
- அந்தி வான்நிறத் தொற்றியூர் அரசே
- அம்ப லத்தினின் றாடல்செய் அமுதே.
- சிறியர் செய்பிழை பெரியவர் பொறுக்கும்
- சீல மென்பதுன் திருமொழி அன்றே
- வறிய னேன்பிழை யாவையும் உனது
- மனத்தில் கொள்ளுதல் வழக்கல இனிநீ
- இறையும் தாழ்க்கலை அடியனேன் தன்னை
- ஏன்று கொண்டருள் ஈந்திடல் வேண்டும்
- செறிய ஓங்கிய ஒற்றியம் பரமே
- திருச்சிற் றம்பலம் திகழ்ஒளி விளக்கே.
- சின்மய னேஅனல் செங்கையில் ஏந்திய சேவகனே
- நன்மைய னேமறை நான்முகன் மாலுக்கு நாடரிதாம்
- தன்மைய னேசிவ சங்கர னேஎஞ் சதாசிவனே
- பொன்மய னேமுப் புராந்தக னேஒற்றிப் புண்ணியனே.
- சிற்பர சிவனே தேவர்தம் தலைமைத்
- தேவனே தில்லைஅம் பலத்தே
- தற்பர நடஞ்செய் தாணுவே அகில
- சராசர காரணப் பொருளே
- அற்பர்தம் இடஞ்செல் பற்பல துயரால்
- அலைதரு கின்றனன் எளியேன்
- கற்பகம் அனையநின் திருவருட் கடலில்
- களிப்புடன் ஆடுவ தென்றோ.
- சிந்தை நொந்திச்சி றியஅ டியனேன்
- எந்தை என்றுனை எண்ணிநிற் கின்றனன்
- இந்து சேகர னேஉன்றன் இன்னருள்
- தந்து காப்பதுன் தன்கடன் ஆகுமே.
- சிறியேன் தவமோ எனைஈன்றாள் செய்த தவமோ யான்அறியேன்
- மறியேர் கரத்தார் அம்பலத்தே வாழும் சிவனார் தமைக்கண்டேன்
- பிறியேன் எனினும் பிரிந்தேன்நான் பேயேன் அந்தப் பிரிவினைக்கீழ்
- எறியேன் அந்தோ அவர்தம்மை இன்னும் ஒருகால் காண்பேனோ.
- சிறியேன் பிழையைத் திருவுளத்தே தேர்ந்திங் கென்னைச் சீறுதியோ
- எறியேம் எனக்கொண் டிரங்குதியோ இவ்வா றவ்வா றெனஒன்றும்
- அறியேன் அவலக் கடல்அழுந்தி அந்தோ அழுங்கி அயர்கின்றேன்
- பிறியேன் என்னைப் பிரிக்கினும்பின் துணையும் காணேன் பெருமானே.
- சிரிப்பார் நின்பேர் அருள்பெற்றோர் சிவனே சிவனே சிவனேயோ
- விரிப்பார் பழிச்சொல் அன்றிஎனை விட்டால் வெள்ளை விடையோனே
- தரிப்பாய் இவனை அருளிடத்தே என்று நின்று தகும்வண்ணம்
- தெரிப்பார் நினக்கும் எவர்கண்டாய் தேவர் தேடற் கரியானே.
- சின்னஞ் சிறுவயதி லென்னை யடிமைகொண்ட
- சிவமே - சிவமே - சிவமேயென் றலறவும் இன்னந்
- சின்மயமாம் பொதுவினிலே தன்மயமாய் நின்று
- திருநடஞ்செய் பெருங்ருணைச் செல்வநட ராஜன்
- என்மயம்நான் அறியாத இளம்பருவந் தனிலே
- என்னைமணம் புரிந்தனன்ஈ தெல்லாரும் அறிவார்
- இன்மயம்இல் லாதவர்போல் இன்றுமணந் தருளான்
- இறைஅளவும் பிழைபுரிந்தேன் இல்லைஅவன் இதயம்
- கன்மயமோ அன்றுசுவைக் கனிமயமே என்னும்
- கணக்கறிந்தும் விடுவேனோ கண்டாய்என் தோழீ.
- சினந்துரைத்தேன் பிழைகளெலாம் மனம்பொறுத்தல் வேண்டும்
- தீனதயா நிதியேமெய்ஞ் ஞானசபா பதியே
- புனைந்துரைப்பார் அகத்தொன்றும் புறத்தொன்றும் நினைத்தே
- பொய்யுலகர் ஆங்கவர்போல் புனைந்துரைத்தேன் அலன்நான்
- இனந்திருந்தி எனையாட்கொண் டென்னுள்அமர்ந் தெனைத்தான்
- எவ்வுலகும் தொழநிலைமேல் ஏற்றியசற் குருவே
- கனந்தருசிற் சுகஅமுதம் களித்தளித்த நிறைவே
- கருணைநடத் தரசேஎன் கண்ணிலங்கு மணியே.
- சிற்றம் பலத்தார் ஒற்றிநகர் திகழுஞ் செல்வத் தியாகர்அவர்
- உற்றங் குவந்தோர் வினைகளெலாம் ஓட நாடி வரும்பவனி
- சுற்றுங் கண்கள் களிகூரத் தொழுது கண்ட பின்அலது
- முற்றுங் கனிவாய்ப் பெண்ணேநான் முடிக்கோர் மலரும் முடியேனே.
- சிந்தைக் கினியார் ஒற்றிநகர் திகழுஞ் செல்வத் தியாகர்அவர்
- சந்தத் தடந்தோள் கண்டவர்கள் தம்மை விழுங்க வரும்பவனி
- முந்தப் புகுந்து புளகமுடன் மூடிக் குளிரக் கண்டலது
- கந்தக் குழல்வாய்ப் பெண்ணேநான் கண்ர் ஒழியக் காணேனே.
- சிந்தா குலந்தீர்த் தருள்ஒற்றி யூர்வாழ் செல்வத் தியாகர்அவர்
- வந்தார் கண்டார் அவர்மனத்தை வாங்கிப் போக வரும்பவனி
- நந்தா மகிழ்வு தலைசிறப்ப நாடி ஓடிக் கண்டலது
- பந்தார் மலர்க்கைப் பெண்ணேநான் பாடல் ஆடல் பயிலேனே.
- சித்தமனே கம்புரிந்து திரிந்துழலுஞ் சிறியேன்
- செய்வகைஒன் றறியாது திகைக்கின்றேன் அந்தோ
- உத்தமனே உன்னையலால் ஒருதுணைமற் றறியேன்
- உன்னாணை உன்னாணை உண்மைஇது கண்டாய்
- இத்தமனே யச்சலனம் இனிப்பொறுக்க மாட்டேன்
- இரங்கிஅருள் செயல்வேண்டும் இதுதருணம் எந்தாய்
- சுத்தமனே யத்தவர்க்கும் எனைப்போலு மவர்க்கும்
- துயர்தவிப்பான் மணிமன்றில் துலங்குநடத் தரசே.
- சித்தெவையும் வியத்தியுறுஞ் சுத்தசிவ சித்தாய்ச்
- சித்தமதில் தித்திக்குந் திருவடிகள் வருந்த
- மத்தஇர விடைநடந்து வந்தருளி அடியேன்
- வாழுமனைத் தெருக்கதவு திறப்பித்தங் கடைந்து
- அத்தகவின் எனைஅழைத்தென் அங்கையில்ஒன் றளித்தாய்
- அன்னையினும் அன்புடையாய் நின்னருள்என் என்பேன்
- முத்தர்குழுக் காணமன்றில் இன்பநடம் புரியும்
- முக்கணுடை ஆனந்தச் செக்கர்மணி மலையே .
- சிறயவனேன் சிறுமையெலாம் திருவுளங்கொள் ளாதென்
- சென்னிமிசை அமர்ந்தருளும் திருவடிகள் வருந்தச்
- செறியிரவில் நடந்தணைந்து நானிருக்கு மிடத்தே
- தெருக்கதவந் திறப்பித்துச் சிறப்பின்எனை அழைத்துப்
- பிறிவிலதிங் கிதுதணைநீ பெறுகவெனப் பரிந்து
- பேசிஒன்று கொடுத்தாய்நின் பெருமையைஎன் என்பேன்
- பொறியினற வோர்துதிக்கப் பொதுவில்நடம் புரியும்
- பொருளேநின் அருளேமெய்ப் பொருள்எனத்தேர்ந் தனனே.
- சிவயோக சந்திதரும் தேவிஉல குடையாள்
- சிவகாம வல்லியொடுஞ் செம்பொன்மணிப் பொதுவில்
- நவயோக உருமுடிக்கண் விளங்கியநின் வடிவை
- நாய்க்டையேன் நான்நினைத்த நாள்எனக்கே மனமும்
- பவயோக இந்தியமும் இன்பமய மான
- படிஎன்றால் மெய்யறிவிற் தவர்க்கிருந்த வண்ணம்
- தன்னைஇந்த வண்ணம்என என்னை உரைப்பதுவே.
- சித்தியெலாம் அளித்தசிவ சத்திஎனை யுடையாள்
- சிவகாம வல்லியொடு சிவஞானப் பொதுவில்
- முத்தியெலாந் தரவிளங்கும் முன்னவநின் வடிவை
- மூடமனச் சிறியேன்நான் நாடவரும் பொழுது
- புத்தியெலாம் ஒன்றாகிப் புத்தமுதம் உண்டாற்
- போலும்இருப் பதுஅதற்கு மேலும்இருப் பதுவேல்
- பத்திஎலாம் உடையவர்கள் காணுமிடத் திருக்கும்
- படிதான்எப் படியோஇப் படிஎன்ப தரிதே.
- சிற்றிடைஎம் பெருமாட்டி தேவர்தொழும் பதத்தாள்
- சிவகாம வல்லியொடு சிறந்தமணிப் பொதுவில்
- உற்றிடைநின் றிலங்குகின்ற நின்வடிவைக் கொடியேன்
- உன்னுந்தொறும் உளம்இளகித் தளதளஎன் றுருகி
- மற்றிடையில் வலியாமல் ஆடுகின்ற தென்றால்
- வழியடியர் விழிகளினால் மகிழ்ந்துகண்ட காலம்
- பற்றிடையா தாங்கவர்கட் கிருந்தவண்ணந் தனையார்
- பகர்வாரே பகர்வாரேல் பகவன்நிகர் வாரே.
- சிற்பகல் மேவும்இத் தேகத்தை ஒம்பித் திருஅனையார்
- தற்பக மேவிலைந் தாழ்ந்தேன் தணிகை தனில்அமர்ந்த
- கற்பக மேநின் கழல்கரு தேன்இக் கடைப்படும்என்
- பொற்பகம் மேவிய நின்அருள் என்என்று போற்றுவதே.
- சிறியேன்இப் போதேகித் திருத்தணிகை மலைஅமர்ந்த தேவின் பாதம்
- குறியேனோ ஆனந்தக் கூத்தாடி அன்பர்கள்தம் குழாத்துள் சென்றே
- அறியேனோ பொருள்நிலையை அறிந்தெனதென்பதைவிடுத்திவ்வகிலமாயை
- முறியேனோ உடல்புளகம் மூடேனோ நன்னெறியை முன்னி இன்றே.
- சிந்தாமணி நிதிஐந்தரு செழிக்கும்புவ னமும்ஓர்
- நந்தாஎழில் உருவும்பெரு நலனும்கதி நலனும்
- இந்தாஎனத் தருவார்தமை இரந்தார்களுக் கெல்லாம்
- கந்தாசிவன் மைந்தாஎனக் கனநீறணிந் திடிலே.
- சிங்கமா முகனைக் கொன்ற திறலுடைச் சிம்புள் போற்றி
- துங்கவா ரணத்தோன் கொண்ட துயர்தவிர்த் தளித்தாய் போற்றி
- செங்கண்மால் மருக போற்றி சிவபிரான் செல்வ போற்றி
- எங்கள்ஆர் அமுதே போற்றி யாவர்க்கும் இறைவ போற்றி.
- சிந்தைக் கும்வழி இல்லைஉன் தன்மையைத்
- தெரிதற் கென்னும் திருத்தணி கேசனே
- உந்தைக் கும்வழி இல்லைஎன் றால்இந்த
- உலகில் யாவர் உனைஅன்றி நீர்மொள்ள
- மொந்தைக் கும்வழி இல்லை வரத்திரு
- முண்டைக் கும்வழி இல்லை அரையில்சாண்
- கந்தைக் கும்வழி இல்லை அரகர
- கஞ்சிக் கும்வழி இல்லைஇங் கையனே.
- சினங்கொண்ட போதெல்லாஞ் செப்பிய வன்சொல்லை
- மனங்கொள்ளுந் தோறுமுள்ளே வாளிட் டறுக்குதடா.
- சிந்தையிற் றுன்பொழி சிவம்பெறு கெனத்தொழி
- லைந்தையு மெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி
- சிகரமும் வகரமுஞ் சேர்தனி யுகரமும்
- அகரமு மாகிய வருட்பெருஞ் ஜோதி
- சித்தியென் பதுநிலை சேர்ந்த வநுபவம்
- அத்திற லென்றவென் னருட்பெருஞ் ஜோதி
- சிருட்டித் தலைவரைச் சிருட்டியண் டங்களை
- அருட்டிறல் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- சிறுமையிற் சிறுமையும் சிறுமையிற் பெருமையும்
- அறிதர வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- சித்திர விசித்திர சிருட்டிகள் பலபல
- அத்தகை வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- சிசுமுதற் பருவச் செயல்களி னுயிர்களை
- அசைவறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
- சித்தெலாம் வல்ல திறலளித் தெனக்கே
- அத்தனென் றோங்கு மருட்பெருஞ் ஜோதி
- சித்தமும் வாக்குஞ் செல்லாப் பெருநிலை
- ஒத்துற வேற்றிய வொருசிவ பதியே
- சிவரக சியமெலாந் தெரிவித் தெனக்கே
- நவநிலை காட்டிய ஞானசற் குருவே
- சித்திக ளெல்லாந் தெளிந்திட வெனக்கே
- சத்தியை யளித்த தயவுடைத் தாயே
- சினமுத லனைத்தையுந் தீர்த்தெனை நனவினுங்
- கனவினும் பிரியாக் கருணைநற் றாயே
- சித்திக்கு மூலமாஞ் சிவமருந் தெனவுளந்
- தித்திக்கு ஞானத் திருவருண் மருந்தே
- சிற்சபை நடுவே திருநடம் புரியும்
- அற்புத மருந்தெனு மானந்த மருந்தே
- சிறுநெறி செல்லாத் திறனளித் தழியா
- துறுநெறி யுணர்ச்சிதந் தொளியுறப் புரிந்து
- சித்திக ளனைத்தையுந் தெளிவித் தெனக்கே
- சத்திய நிலைதனைத் தயவினிற் றந்தனை
- சிரம்வளர் முதலே முதல்வளர் சிரமே சிரமுதல் வளர்தரு செறிவே
- தரம்வளர் நிலையே நிலைவளர் தரமே தரநிலை வளர்தரு தகவே
- வரம்வளர் நிறையே நிறைவளர் வரமே வரநிறை வளர்தரு வயமே
- பரம்வளர் பதமே பதம்வளர் பரமே பரபதம் வளர்சிவ பதியே.
- சிவந்திகழ் கருணைத் திருநெறிச் சார்பும்
- தெய்வம்ஒன் றேஎனும் திறமும்
- நவந்தரு நிலைகள் சுதந்தரத் தியலும்
- நன்மையும் நரைதிரை முதலாம்
- துவந்துவம் தவிர்த்துச் சுத்தமா தியமுச்
- சுகவடி வம்பெறும் பேறும்
- தவந்திகழ் எல்லாம் வல்லசித் தியும்நீ
- தந்தருள் தருணம்ஈ தெனக்கே.
- சிரத்தை ஆதிய சுபகுணம் சிறிதும்
- சேர்ந்தி லேன்அருட் செயலிலேன் சாகா
- வரத்தை வேண்டினேன் வந்துநிற் கின்றேன்
- வள்ள லேஉன்றன் மனக்குறிப் பறியேன்
- கரத்தை நேர்உளக் கடையன்என் றெனைநீ
- கைவி டேல்ஒரு கணம்இனி ஆற்றேன்
- தரத்தை ஈந்தருள் வாய்வடல் அரசே
- சத்தி யச்சபைத் தனிப்பெரும் பதியே.
- சிதம்பரத்தே ஆனந்த சித்தர்திரு நடந்தான்
- சிறிதறிந்த படிஇன்னும் முழுதும்அறி வேனோ
- பதம்பெறத்தேம் பழம்பிழிந்து பாலும்நறும் பாகும்
- பசுநெய்யும் கலந்ததெனப் பாடிமகிழ் வேனோ
- நிதம்பரவி ஆனந்த நித்திரைநீங் காத
- நித்தர்பணி புரிந்தின்ப சித்திபெறு வேனோ
- மதம்பரவு மலைச்செருக்கில் சிறந்தசிறி யேன்நான்
- வள்ளல்குரு நாதர்திரு வுள்ளம்அறி யேனே.
- சித்திகள் எல்லாம் வல்லதோர் ஞானத் திருச்சபை தன்னிலே திகழும்
- சத்திகள் எல்லாம் சத்தர்கள் எல்லாம் தழைத்திடத் தனிஅருட் செங்கோல்
- சத்திய ஞானம் விளக்கியே நடத்தும் தனிமுதல் தந்தையே தலைவா
- பித்தியல் உடையேன் எனினும்நின் தனக்கே பிள்ளைநான் வாடுதல் அழகோ.
- சிறந்ததத் துவங்கள் அனைத்துமாய் அலவாய்த் திகழ்ஒளி யாய்ஒளி எல்லாம்
- பிறங்கிய வெளியாய் வெளிஎலாம் விளங்கும் பெருவெளி யாய்அதற் கப்பால்
- நிறைந்தசிற் சபையில் அருளர சியற்றும் நீதிநல் தந்தையே இனிமேல்
- பிறந்திடேன் இறவேன் நின்னைவிட் டகலேன் பிள்ளைநான் வாடுதல் அழகோ.
- சித்திஎலாம் வல்லசிவ சித்தன்உளம் கலந்தான்
- செத்தாரை எழுப்புகின்ற திருநாள்கள் அடுத்த
- இத்தினமே தொடங்கிஅழி யாதநிலை அடைதற்
- கேற்றகுறி ஏற்றவிடத் திசைந்தியல்கின் றனநாம்
- சத்தியமே பெருவாழ்வில் பெருங்களிப்புற் றிடுதல்
- சந்தேகித் தலையாதே சாற்றியஎன் மொழியை
- நித்தியவான் மொழிஎன்ன நினைந்துமகிழ் தமைவாய்
- நெஞ்சேநீ அஞ்சேல்உள் அஞ்சேல்அஞ் சேலே.
- சிற்சபை இன்பத் திருநடங் காட்டித்
- தெள்ளமு தூட்டிஎன் சிந்தையைத் தேற்றிப்
- பொற்சபை தன்னில் பொருத்திஎல் லாம்செய்
- பூரண சித்திமெய்ப் போகமும் தந்தே
- தற்பர மாம்ஓர் சதானந்த நாட்டில்
- சத்தியன் ஆக்கிஓர் சுத்தசித் தாந்த
- அற்புத வீதியில் ஆடச்செய் தீரே
- அருட்பெருஞ் ஜோதிஎன் ஆண்டவர் நீரே.
- சிறந்த பொன்னணித் திருச்சிற்றம் பலத்திலே திருநடம் புரிகின்ற
- அறந்த வாதசே வடிமலர் முடிமிசை அணிந்தக மகிழ்ந்தேத்த
- மறந்த நாயினேன் விண்ணப்பம் திருச்செவி மடுத்தருள் செயல்வேண்டும்
- பிறந்த இவ்வுடல் இம்மையே அழிவுறாப் பெருநலம் பெறுமாறே.
- சிற்பதமும் தற்பதமும் பொற்பதத்தே காட்டும்
- சிவபதமே ஆனந்தத் தேம்பாகின் பதமே
- சொற்பதங்கள் கடந்ததன்றி முப்பதமும் கடந்தே
- துரியபத முங்கடந்த பெரியதனிப் பொருளே
- நற்பதம்என் முடிசூட்டிக் கற்பதெலாங் கணத்தே
- நான்அறிந்து தானாக நல்கியஎன் குருவே
- பற்பதத்துத் தலைவரெலாம் போற்றமணி மன்றில்
- பயிலும்நடத் தரசேஎன் பாடல்அணிந் தருளே.
- சிரம்பெறுவே தாகமத்தின் அடிநடுவும் முடியும்
- செல்லாத நிலைஅதுவாய் எல்லாம்வல் லதுவாய்
- பரம்பரமாய்ப் பரம்பரமேற் பரவுசிதம் பரமாய்ப்
- பதிவெளியில் விளங்குகின்ற மதிசிவமே டையிலே
- தரங்குலவ அமர்ந்ததிரு வடிகள்பெயர்த் தெனது
- சார்படைந்தென் எண்ணமெலாம் தந்தனைஎன் அரசே
- குரங்குமனச் சிறியேனுக் கிங்கிதுபோ தாதோ
- கொடும்புலையேன் குடிசையிலும் குலவிநுழைந் தனையே.
- சிதத்திலே271 ஊறித் தெளிந்ததெள் ளமுதைச்
- சித்தெலாம் வல்லமெய்ச் சிவத்தைப்
- பதத்திலே பழுத்த தனிப்பெரும் பழத்தைப்
- பரம்பர வாழ்வைஎம் பதியை
- மதத்திலே மயங்கா மதியிலே விளைந்த
- மருந்தைமா மந்திரந் தன்னை
- இதத்திலே என்னை இருத்திஆட் கொண்ட
- இறைவனைக் கண்டுகொண் டேனே.
- சிதம்பர ஒளியைச் சிதம்பர வெளியைச்
- சிதம்பர நடம்புரி சிவத்தைப்
- பதந்தரு பதத்தைப் பரம்பர பதத்தைப்
- பதிசிவ பதத்தைத்தற் பதத்தை
- இதந்தரும் உண்மைப் பெருந்தனி நிலையை
- யாவுமாய் அல்லவாம் பொருளைச்
- சதந்தருஞ் சச்சி தானந்த நிறைவைச்
- சாமியைக் கண்டுகொண் டேனே.
- சித்தெலாம் வல்ல சித்தனே ஞான
- சிதம்பர ஜோதியே சிறியேன்
- கத்தெலாம் தவிர்த்துக் கருத்தெலாம் அளித்த
- கடவுளே கருணையங் கடலே
- சத்தெலாம் ஒன்றே சத்தியம் எனஎன்
- தனக்கறி வித்ததோர் தயையே
- புத்தெலாம் நீக்கிப் பொருளெலாம் காட்டும்
- பொதுநடம் புரிகின்ற பொருளே.
- சிதத்தொளிர் பரமே பரத்தொளிர் பதியே
- சிவபத அனுபவச் சிவமே
- மதத்தடை தவிர்த்த மதிமதி மதியே
- மதிநிறை அமுதநல் வாய்ப்பே
- சதத்திரு நெறியே தனிநெறித் துணையே
- சாமியே தந்தையே தாயே
- புதப்பெரு வரமே புகற்கருந் தரமே
- பொதுநடம் புரிகின்ற பொருளே.
- சிற்றறி வுடையன் ஆகித் தினந்தொறும் திரிந்து நான்செய்
- குற்றமும் குணமாக் கொண்ட குணப்பெருங் குன்றே என்னைப்
- பெற்றதா யுடனுற் றோங்கும் பெருமநின் பெருமை தன்னைக்
- கற்றறி வில்லேன் எந்தக் கணக்கறிந் துரைப்பேன் அந்தோ.
- சினைப்பள்ளித் தாமங்கள் கொணர்ந்தனர் அடியார்
- சிவசிவ போற்றிஎன் றுவகைகொள் கின்றார்
- நினைப்பள்ளி உண்ணத்தெள் ளாரமு தளிக்கும்
- நேரம்இந் நேரம்என் றாரியர் புகன்றார்
- முனைப்பள்ளி பயிற்றாதென் தனைக்கல்வி பயிற்றி
- முழுதுணர் வித்துடல் பழுதெலாம் தவிர்த்தே
- எனைப்பள்ளி எழுப்பிய அருட்பெருஞ் சோதி
- என்னப்ப னேபள்ளி எழுந்தருள் வாயே.
- சித்திபுரத்தே தினந்தோறும் சீர்கொளருள்
- சத்திவிழா நீடித் தழைத்தோங்க - எத்திசையில்
- உள்ளவரும் வந்தே உவகை உறுகமதத்
- துள்ளல் ஒழிக தொலைந்து.
- சிற்சபையும் பொற்சபையும் சித்தி விளக்கத்தால்
- நற்சகமேல் நீடூழி நண்ணிடுக - சற்சபையோர்
- போற்றிவரம் பெற்றுவகை பூரிக்க வாழ்ந்திடுக
- நாற்றிசையும் வாழ்க நயந்து.
- சிற்சபை அப்பனைக் கண்டுகொண் டேன்அருள் தெள்ளமுதம்
- சற்சபை உள்ளம் தழைக்கஉண் டேன்உண்மை தான்அறிந்த
- நற்சபைச் சித்திகள் எல்லாம்என் கைவசம் நண்ணப்பெற்றேன்
- பொற்சபை ஓங்கப் புரிந்தாடு தற்குப் புகுந்தனனே.
- சின்மய வெளியிடைத் தன்மய மாகித்
- திகழும் பொதுநடம் நான்காணல் வேண்டும்
- என்மய மாகி இருப்பாயோ தோழி
- இச்சை மயமாய் இருப்பாயோ288 தோழி.
- சிதமலரோ சுகமலரும் பரிமளிக்க ஓங்கும்
- திருச்சிற்றம் பலநடுவே திருநடனம் புரியும்
- பதமலரோ பதமலரில் பாதுகையோ அவையில்
- படிந்ததிருப் பொடியோஅப் பொடிபடிந்த படியோ
- இதமலரும் அப்படிமேல் இருந்தவரோ அவர்பேர்
- இசைத்தவரும் கேட்டவரும் இலங்குமுத்தர் என்றால்
- நிதமலரும் நடராஜப் பெருமான்என் கணவர்
- நிலைஉரைக்க வல்லார்ஆர் நிகழ்த்தாய்என் தோழி.
- சிருட்டிஒன்று சிற்றணுவில் சிறிததனில் சிறிது
- சினைத்தகர ணக்கருஅச் சினைக்கருவில் சிறிது
- வெருட்டியமான் அம்மானில் சிறிதுமதி மதியின்
- மிகச்சிறிது காட்டுகின்ற வியன்சுடர்ஒன் றதனில்
- தெருட்டுகின்ற சத்திமிகச் சிறிததனில் கோடித்
- திறத்தினில்ஓர் சிறிதாகும் திருச்சிற்றம் பலத்தே
- அருட்டிறத்தின் நடிக்கின்ற என்னுடைய தலைவர்
- அருட்பெருமை எவர்உரைப்பார் அறியாய்என் தோழி.
- சிவமயமே வேறிலைஎல் லாம்எனநீ தானே
- தேமொழியாய் பற்பலகால் செப்பியிடக் கேட்டேன்
- தவமயத்தார் பலசமயத் தலைவர்மதத் தலைவர்
- தத்துவர்தத் துவத்தலைவர் அவர்தலைவர் தலைவர்
- இவர்அவர்என் றயல்வேறு பிரித்தவர்பால் வார்த்தை
- இயம்புவதென் என்றாய்ஈ தென்கொல்என்றாய் தோழி
- நவமயம்நீ உணர்ந்தறியாய் ஆதலில்இவ் வண்ணம்
- நவின்றனைநின் ஐயமற நான்புகல்வேன் கேளே.
- சிந்தா குலத்தொடுநான் தெய்வமே என்றுநினைந்
- தந்தோ படுத்துள் அயர்வுற்றேன் - எந்தாய்
- எடுத்தாள் எனநினையா தேகிடந்தேன் என்னை
- எடுத்தாய் தயவைவிய வேன்.
- சிருட்டிமுதல் ஐந்தொழில்நான் செய்யஎனக் கருள்புரிந்தாய்
- பொருட்டிகழ்நின் பெருங்கருணைப் புனிதஅமு துவந்தளித்தாய்
- தெருட்டிகழ்நின் அடியவர்தம் திருச்சபையின் நடுஇருத்தித்
- தெருட்டிஎனை வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய்.
- சிற்றம் பலத்தைத் தெரிந்துகொண் டேன்எம் சிவன்அருளால்
- குற்றம் பலவும் தவிர்ந்துநின் றேன்எண் குணக்குன்றிலே
- வெற்றம்பல் செய்தவர் எல்லாம் விரைந்து விரைந்துவந்தே
- நற்றம் பலம்தரு வாய்என்கின் றார்இந்த நானிலத்தே.
- சிவங்க னிந்தசிற் றம்பலத் தருள்நடம் செய்கின்ற பெருவாழ்வே
- நவங்க னிந்தமேல் நிலைநடு விளங்கிய நண்பனே அடியேன்றன்
- தவங்க னிந்ததோர் விண்ணப்பம் திருச்செவி தரித்தருள் புரிந்தாயே
- பவங்க னிந்தஇவ் வடிவமே அழிவுறாப் பதிவடி வாமாறே.
- சிறந்த பேரொளித் திருச்சிற்றம் பலத்திலே திகழ்கின்ற பெருவாழ்வே
- துறந்த பேருளத் தருட்பெருஞ் சோதியே சுகப்பெரு நிலையேநான்
- மறந்தி டாதுசெய் விண்ணப்பம் திருச்செவி மடுத்தருள் புரிந்தாயே
- பிறந்த இவ்வுடல் என்றும்இங் கழிவுறாப் பெருமைபெற் றிடுமாறே.
- சித்தியெலாந் தந்தே திருவம் பலத்தாடும்
- நித்தியனென் உள்ளே நிறைகின்றான் - சத்தியம்ஈ
- தந்தோ உலகீர் அறியீரோ நீவிரெலாம்
- சந்தோட மாய்இருமின் சார்ந்து.
- சிந்தா குலந்தவிர்த்துச் சிற்றம் பலப்பெருமான்
- வந்தான் எனைத்தான் வலிந்தழைத்தே - ஐந்தொழிலும்
- நீயேசெய் என்றெனக்கே நேர்ந்தளித்தான் என்னுடைய
- தாயே அனையான் தனித்து.
- சிற்றறி வுடையநான் செய்த தீமைகள்
- முற்றவும் பொறுத்தருள் முனிந்திடேல் இன்றே
- தெற்றென அருட்பெருஞ் சோதிச் செல்வமும்
- மற்றவும் வழங்குக வரதனே என்றேன்.
- சிரிப்பிலே பொழுது கழிக்கும்இவ் வாழ்க்கைச்
- சிறியவர் சிந்தைமாத் திரமோ
- பொருப்பிலே தவஞ்செய் பெரியர்தம் மனமும்
- புளிப்பிலே துவர்ப்பிலே உவர்ப்புக்
- கரிப்பிலே கொடிய கயப்பிலே கடிய
- கார்ப்பிலே கார்ப்பொடு கலந்த
- எரிப்பிலே புகுவ தன்றிஎள் அளவும்
- இனிப்பிலே புகுகின்ற திலையே.
- சிறுசெயலைச் செயும்உலகச் சிறுநடையோர் பலபுகலத் தினந்தோ றுந்தான்
- உறுசெயலை அறியாஇச் சிறுபயலைப் பிடித்தலைத்தல் உவப்போ கண்டாய்
- தெறுசெயலைத் தவிர்த்தெல்லாச் சித்தியும்பெற் றிடஅழியாத் தேகன் ஆகப்
- பெறுசெயலை எனக்களித்தே மறுசெயலைப் புரிகஎனைப் பெற்ற தேவே.
- சிற்சபைக் கண்ணும் பொற்சபைக் கண்ணும்
- திருநடம் புரியும் திருநட ராஜ
- எனக்கருள் புரிந்த நினக்கடி யேன்கைம்
- மாற்றை அறிந்திலன் போற்றிநின் அருளே.
- சிறுநெறிக் கெனைத்தான் இழுத்ததோர் கொடிய
- தீமன மாயையைக் கணத்தே
- வெறுவிய தாக்கித் தடுத்தெனை ஆண்ட
- மெய்யநின் கருணைஎன் புகல்வேன்
- உறுநறுந் தேனும் அமுதும்மென் கரும்பில்
- உற்றசா றட்டசர்க் கரையும்
- நறுநெயுங் கலந்த சுவைப்பெரும் பழமே
- ஞானமன் றோங்கும்என் நட்பே.
- சிற்றம் பலத்தில் நடங்கண் டவர்காற் பொடிகொள் புல்ல தே
- சிருட்டி முதல்ஓர் ஐந்து தொழிலும் செய்ய வல்ல தே
- பற்றம் பலத்தில் வைத்தார் தம்மைப் பணியும் பத்த ரே
- பரம பதத்தர் என்று பகர்வர் பரம முத்த ரே.
- எனக்கும் உனக்கும்
- சிருட்டி முதல்ஓர் ஐந்து தொழிலும் செய்யென் றென்னை யே
- செல்வப் பிள்ளை யாக்கி வளர்க்கின் றாய்இ தென்னை யே
- தெருட்டித் திருப்பொற் பதத்தைக் காட்டி அமுதம் ஊட்டி யே
- திகழ நடுவைத் தாய்சன் மார்க்க சங்கம்கூட்டி யே.
- எனக்கும் உனக்கும்
- சின்ன வயது தொடங்கி என்னைக் காக்கும் தெய்வ மே
- சிறியேன் மயங்கும் தோறும் மயக்கம் தீர்க்கும் தெய்வ மே
- என்னை அவத்தைக் கடல்நின் றிங்ஙன் எடுத்த தெய்வ மே
- எல்லா நலமும் தரும்இன் னமுதம் கொடுத்த தெய்வ மே.
- எனக்கும் உனக்கும்
- சிவமே நின்னைப் பொதுவில் கண்ட செல்வர் தம்மை யே
- தேவர் கண்டு கொண்டு வணங்கு கின்றார் இம்மை யே
- தவமே புரிந்து நின்னை உணர்ந்த சாந்த சித்த ரே
- தகும்ஐந் தொழிலும் தாமே இயற்ற வாய்ந்த சித்த ரே.
- எனக்கும் உனக்கும்
- சிற்றம் பலத்தின் நடனம் காட்டிச் சிவத்தைக் காட்டி யே
- சிறப்பாய் எல்லாம் வல்ல சித்தித் திறத்தைக் காட்டி யே
- குற்றம் பலவும் தீர்த்தென் தனக்கோர் முடியும் சூட்டி யே
- கோவே நீயும் என்னுள் கலந்து கொண்டாய் நாட்டி யே.
- எனக்கும் உனக்கும்
- சிறுவயதில் எனைவிழைந்தீர் அணையவா ரீர்
- சித்தசிகா மணியேநீர் அணையவா ரீர்
- உறுவயதிங் கிதுதருணம் அணையவா ரீர்
- உண்மைசொன்ன உத்தமரே அணையவா ரீர்
- பொறுமைமிக உடையவரே அணையவா ரீர்
- பொய்யாத வாசகரே அணையவா ரீர்
- இறுதிதவிர்த் தாண்டவரே அணையவா ரீர்
- என்னுடைய நாயகரே அணையவா ரீர். அணையவா ரீர்
- சிவமே பொருள்என் றறிவால் அறிந்தேன்
- செத்தாரை மீட்கின்ற திண்மையைப் பெற்றேன்
- உவமேயம் இல்லாத ஒருநிலை தன்னில்
- ஒன்றிரண் டென்னாத உண்மையில் நின்றேன்
- தவமே புரிகின்றார் எல்லாரும் காணத்
- தயவால் அழைக்கின்றேன் கயவாதே தோழி
- அவமேபோ காதென்னோ டாடேடி பந்து
- அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி
- சிவசிவ சிவசிவ ஜோதி - சிவ
- சிவசிவ சிவசிவ சிவசிவ ஜோதி
- சிவசிவ சிவசிவ ஜோதி.
- சிற்பர மாம்பரஞ் ஜோதி - அருட்
- சித்தெல்லாம் வல்ல சிதம்பர ஜோதி
- தற்பர தத்துவ ஜோதி - என்னைத்
- தானாக்கிக் கொண்ட தயாநிதி ஜோதி. சிவசிவ
- சித்துரு வாம்சுயஞ் ஜோதி - எல்லாம்
- செய்திட வல்ல சிதம்பர ஜோதி
- அத்துவி தானந்த ஜோதி - என்னை
- ஆட்கொண் டருளும்சிற் றம்பல ஜோதி. சிவசிவ
- சின்மய மாம்பெருஞ் ஜோதி - அருட்
- செல்வ மளிக்கும் சிதம்பர ஜோதி
- தன்மய மாய்நிறை ஜோதி - என்னைத்
- தந்தமெய் ஜோதி சதானந்த ஜோதி. சிவசிவ
- சிவமய மாம்சுத்த ஜோதி - சுத்த
- சித்தாந்த வீட்டில் சிறந்தொளிர் ஜோதி
- உவமையில் லாப்பெருஞ் சோதி - என
- துள்ளே நிரம்பி ஒளிர்கின்ற ஜோதி. சிவசிவ
- சித்தம் சிவமாக்கும் ஜோதி - நான்
- செய்த தவத்தால் தெரிந்தஉட் ஜோதி
- புத்தமு தாகிய ஜோதி - சுக
- பூரண மாய்ஒளிர் காரண ஜோதி. சிவசிவ
- சிவசிவ சிவசிவ ஜோதி - சிவ
- சிவசிவ சிவசிவ சிவசிவ ஜோதி
- சிவசிவ சிவசிவ ஜோதி.
- சிவமே பொருளென்று தேற்றி - என்னைச்
- சிவவெளிக் கேறும் சிகரத்தில் ஏற்றிச்
- சிவமாக்கிக் கொண்டது பாரீர் - திருச்
- சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
- சித்தர் எலாம்வல்ல தேவர் நமையாண்ட
- அத்தர் இதோதிரு வம்பலத் திருக்கின்றார் அஞ்சா தே
- சிந்தை களிக்கக்கண்டு சிவானந்த மதுவுண்டு
- தெளிந்தோர்எல் லாரும்தொண்டு செய்யப் பவுரிகொண்டு
- இந்த வெளியில்நட மிடத்துணிந் தீரேஅங்கே
- இதைவிடப் பெருவெளி இருக்குதென் றால்இங்கே வருவார்
- சின்ன வயதில்என்னைச் சேர்ந்தார்புன் னகையோடு
- சென்றார் தயவால்இன்று வந்தார் இவர்க்கார்ஈடு
- என்னைவிட் டினிஇவர் எப்படிப் போவார்ஓடு
- இந்தக் கதவைமூடு இரட்டைத்தாட் கோலைப்போடு. இவர்க்கும்
- சித்தமும் உள்ளமும் தித்தித் தினிக்கின்ற
- புத்தமு தாகிய பொன்னடிப் போதுக்கே அபயம்
- சிற்பதம் பொற்பதஞ் சீரே சிறந்தது
- சித்தாடு கின்ற திருநாள் பிறந்தது
- கற்பத நெஞ்சக் கரிசு துறந்தது
- கற்றபொய்ந் நூல்கள் கணத்தே மறந்தது அற்புதம்
- சிவமாக்கிக்கொண்டான்என்று ஊதூது சங்கே
- சிற்றம் பலத்தான்என்று ஊதூது சங்கே
- நவநோக் களித்தான் என்று ஊதூது சங்கே
- நான்அவன் ஆனேன்என்று ஊதூது சங்கே.
- சிற்சபையைக் கண்டோம்என்று சின்னம் பிடி
- சித்திகள்செய் கின்றோம்என்று சின்னம் பிடி
- பொற்சபை புகுந்தோம்என்று சின்னம் பிடி
- புந்திமகிழ் கின்றோம்என்று சின்னம் பிடி.
- சித்தாடு கின்றார்என்று சின்னம் பிடி
- செத்தார் எழுவார்என்று சின்னம் பிடி
- இத்தா ரணியில்என்று சின்னம் பிடி
- இதுவே தருணம்என்று சின்னம் பிடி.
- சிற்சபையும் பொற்சபையும் சொந்தமென தாச்சு
- தேவர்களும் மூவர்களும் பேசுவதென் பேச்சு
- இற்சமய வாழ்வில்எனக் கென்னைஇனி ஏச்சு
- என்பிறப்புத் துன்பமெலாம் இன்றோடே போச்சு.
- சிற்பொதுவும் பொற்பொதுவும் நான்அறிய லாச்சு
- சித்தர்களும் முத்தர்களும் பேசுவதென் பேச்சு
- இற்பகரும்345 இவ்வுலகில் என்னைஇனி ஏச்சு
- என்பிறவித் துன்பமெலாம் இன்றோடே போச்சு.
- சிவசிவ கஜமுக கணநா தா
- சிவகண வந்தித குணநீ தா.
- சிவசிவ சிவசிவ தத்துவ போதா
- சிவகுரு பரசிவ சண்முக நாதா.
- சிவசிவ சிவசிவ சின்மய தேஜா
- சிவசுந் தரகுஞ் சிதநட ராஜா.
- சிதம்பரப் பாட்டே திருப்பாட்டு
- ஜீவர்கள் பாட்டெல்லாம் தெருப்பாட்டு.
- சிவகாம வல்லிக்கு மாப்பிள்ளை யே
- திருவாளன் நான்அவன் சீர்ப்பிள்ளை யே.
- சிவகாம வல்லியைச் சேர்ந்தவ னே
- சித்தெல்லாம் செய்திடத் தேர்ந்தவ னே.
- சிற்சபை அப்பனை உற்றே னே
- சித்திஎ லாம்செயப் பெற்றே னே.
- சிவஞானப தாடக நாடக
- சிவபோதப ரோகள கூடக.
- சிதம்பிர காசா பரம்பிர கா சா
- சிதம்ப ரேசா சுயம்பிர கா சா.
- சிவஞான நிலையே சிவயோக நிறைவே
- சிவபோக உருவே சிவமான உணர்வே
- நவநீத மதியே நவநாத கதியே
- நடராஜ பதியே நடராஜ பதியே.
- சிற்சபையில் நடிக்கின்ற நாயகனார் தமக்குச்
- சேர்ந்தபுறச் சமயப்பேர் பொருந்துவதோ என்றாய்
- பிற்சமயத் தார்பெயரும் அவர்பெயரே கண்டாய்
- பித்தர்என்றே பெயர்படைத்தார்க் கெப்பெயர்ஒவ் வாதோ
- அச்சமயத் தேவர்மட்டோ நின்பெயர்என் பெயரும்
- அவர்பெயரே எவ்வுயிரின் பெயரும்அவர் பெயரே
- சிற்சபையில் என்கணவர் செய்யும்ஒரு ஞானத்
- திருக்கூத்துக் கண்டளவே தெளியும்இது தோழி.
- சிவம்எ னும்பெயர்க் கிலக்கியம் ஆகிஎச் செயலும்தன் சமுகத்தே
- நவநி றைந்தபேர் இறைவர்கள் இயற்றிட ஞானமா மணிமன்றில்
- தவநி றைந்தவர் போற்றிட ஆனந்தத் தனிநடம் புரிகின்றான்
- எவன்அ வன்திரு வாணைஈ திசைத்தனன் இனித்துய ரடையேனே.