- சூழ்திருவாய்ப் பாடியங்கு சூழ்கினுமா மென்றுலகர்
- வாழ்திருவாய்ப் பாடிஇன்ப வாரிதியே - ஏழ்புவிக்குள்
- சூழ்ந்திடுக என்னையுநின் தொண்டருடன் சேர்த்தருள்க
- வாழ்ந்திடுக நின்தாள் மலர்.
- சூழ்கின்றாய் வேறொன்றில் சுற்றுகின்றாய் மற்றொன்றில்
- வீழ்கின்றாய் மேலொன்றில் மீள்கின்றாய் - தாழ்வொன்றே
- சூழ்ந்தமுலை மொட்டென்றே துள்ளுகின்றாய் கீழ்த்துவண்டு
- வீழ்ந்தமுலைக் கென்ன விளம்புதியே - தாழ்ந்தஅவை
- சூழ்ச்சியறி யேன்நீ சுழல்கின்ற போதெல்லாம்
- சூழ்ச்சியிலே நானும் சுழல்கின்றேன் - நீட்சியில்நீ
- சூற்படு மேக நிறத்தோனும் நான்முகத் தோனும்என்னைப்
- போற்படும் பாடுநல் லோர்சொலக் கேட்கும் பொழுதுமனம்
- வேற்படும் புண்ணில் கலங்கிஅந் தோநம் விடையவன்பூங்
- காற்படுந் தூளிநம் மேற்படு மோஒரு கால்என்னுமே.
- சூடுண்ட பூஞைக்குச் சோறுண்ட வாய்பின் துடிப்பதன்றி
- ஊடுண்ட பாலிட்ட ஊண்கண்ட தேனும் உணத்துணியா
- தீடுண்ட என்மனம் அந்தோ துயரில் இடியுண்டும்இவ்
- வீடுண்ட வாழ்க்கையில் வீழுண்ட தால்எம் விடையவனே.
- சூது நேர்கின்ற முலைச்சியர் பொருட்டாச்
- சுற்றி நின்றதில் சுகம்எது கண்டாய்
- போது போகின்ற தெழுதிஎன் நெஞ்சே
- பொழில்கொள் ஒற்றியம் புரிதனக் கேகி
- ஓது சண்முக சிவசிவ எனவே
- உன்னி நெக்குவிட் டுருகிநம் துயராம்
- ஆது சொல்லுதும் ஐயுறல் என்மேல்
- ஆணை காண்அவர் அருள்பெறல் ஆமே.
- சூழ்ந்தவஞ் சகனேன் பிழைதனைக் குறியேல் துன்பசா கரந்தனில் அழுந்தி
- வீழ்ந்தனன் ஐயோ கைவிடில் சிவனே வேறுநான் யாதுசெய் வேனே
- வாழ்ந்தமா தவர்கள் மனத்தொளிர் ஒளியே வள்ளலே மழவிடை யவனே
- போழ்ந்தவேல் படைகொள் புனிதனை அளித்த பூரணாஒற்றியூர்ப் பொருளே.
- சூத மெறிவேல் தோன்ற லொடும்தன் துணைவி யொடும்தான் அமர்கின்ற
- காதல் கோலம் கண்டு களிப்பான் கருதும் எமக்கொன் றருளானேல்
- ஈதல் வல்லான் எல்லாம் உடையான் இமையோர் அயன்மாற் கிறையானான்
- பேதம் இல்லான் ஒற்றித் தியாகப் பெருமான் பிச்சைப் பெருமானே.
- சூழு மாலயன் பெண்ணுரு எடுத்துத்
- தொழும்பு செய்திடத் தோன்றிநின் றவனைப்
- போழும் வண்ணமே வடுகனுக் கருளும்
- பூத நாதர்நற் பூரணா னந்தர்
- தாழும் தன்மையோர் உயர்வுறச் செய்யும்
- தகையர் ஒற்றியூர்த் தலத்தினர் அவர்தாம்
- வாழும் கோயிற்குத் திருவல கிடுவோம்
- மகிழ்வு கொண்டுடன் வருதிஎன் மனனே.
- சூழ்வேன் நினது கருணைநடம் சூழும் பெரியார் தமைச்சூழ்ந்து
- வாழ்வேன் எளியேன் குறிப்பிந்த வண்ணம் எனது மனக்குரங்கோ
- தாழ்வேன் நினையும் தாழ்விப்பேன் அவலக் கடலில் சலியாமே
- வீழ்வேன் என்றால் எம்பெருமான் இதற்கென் செய்கேன் வினையேனே.
- சூரிட்ட நடையில்என் போரிட்ட மனதைநான்
- சொல்லிட்ட முடன்அ ணைத்துத்
- துன்றிட்ட மோனம்எனும் நன்றிட்ட அமுதுண்டு
- சும்மா இருத்தி என்றால்
- காரிட்டி தற்குமுன் யாரிட்ட சாபமோ
- கண்டிலேன் அம்மம் மஓர்
- கணமேனும் நில்லாது பொல்லாது புவியில்
- கறங்கெ னச்சுழல் கின்றதே
- தாரிட்ட நீஅருள் சீரிட்டி டாய்எனில்
- தாழ்பிறவி தன்னில் அதுதான்
- தன்னைவீழ்த் துவதன்றி என்னையும் வீழ்த்தும்இத்
- தமிய னேன்என் செய்குவேன்
- ஆறிட்ட சடையாளர் தில்லையம் பதிமருவும்
- அண்ணலார் மகிழும் மணியே
- அகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி
- வானந்த வல்லி உமையே.
- சூலப்படையார் பூதங்கள் சுற்றும் படையார் துதிப்பவர்தம்
- சீலப் பதியார் திருஒற்றித் திகழுந் தியாகப் பெருமானார்
- நீலக் களத்தார் திருப்பவனி நேர்ந்தார் என்றார் அதுகாண்பான்
- சாலப் பசித்தார் போல்மனந்தான் தாவி அவர்முன் சென்றதுவே.
- சூரியசந் திரரெல்லாந் தோன்றாமை விளங்கும்
- சுயஞ்சோதி யாகும்அடித் துணைவருந்த நடந்து
- கூரியமெய் அறிவென்ப தொருசிறிதுங் குறியாக்
- கொடியேன்நான் இருக்குமிடங் குறித்திரவில் நடந்து
- காரியம்உண் டெனக்கூவிக் கதவுதிறப் பித்துக்
- கையில் ஒன்றை அளித்தனைஉன் கருணையைஎன் என்பேன்
- ஆரியர்தம் அளவுகடந் தப்பாலுங் கடந்த
- ஆனந்த மன்றில்நடம் ஆடுகின்ற அரசே .
- சூரியன் தோன்றினன் தொண்டர்கள் சூழ்ந்தனர்
- சூரசங் காரரே வாரும்
- வீரசிங் காரரே வாரும் .
- சூரிய சந்திர ஜோதியுட் ஜோதியென்
- றாரியர் புகழ்தரு மருட்பெருஞ் ஜோதி
- சூழ்வி லாதுழல் மனத்தினால் சுழலும்
- துட்ட னேன்அருட் சுகப்பெரும் பதிநின்
- வாழ்வு வேண்டினேன் வந்துநிற் கின்றேன்
- வள்ள லேஉன்றன் மனக்குறிப் பறியேன்
- ஊழ்வி டாமையில் அரைக்கணம் எனினும்
- உன்னை விட்டயல் ஒன்றும்உற் றறியேன்
- தாழ்வி லாதசீர் தருவடல் அரசே
- சத்தி யச்சபைத் தனிப்பெரும் பதியே.
- சூழ்ந்திடும்ஐங் கருவினிலே சொருபசத்தி பேதம்
- சொல்லினொடு மனங்கடந்த எல்லையிலா தனவே
- தாழ்ந்திலவாய் அவைஅவையும் தனித்தனிநின் றிலங்கத்
- தகும்அவைக்குள் நவவிளக்கம் தரித்தந்த விளக்கம்
- வாழ்ந்திடஓர் சத்திநிலை வயங்கியுறப் புரிந்து
- மதிக்கும்அந்தச் சத்திதனில் மன்னுசத்தர் ஆகி
- ஆழ்ந்திடும்ஓர் பரம்பரத்தை அசைத்துநின்று நடிக்கும்
- அடிப்பெருமை உரைப்பவரார் அறியாய்என் தோழி.
- சூதுமன்னும் இந்தையே சூடல்என்ன விந்தையே
- கோதுவிண்ட சிந்தையே கோயில்கொண்ட தந்தையே.