- சொற்பெறுமெய்ஞ் ஞானச் சுயஞ்சோதி யாந்தில்லைச்
- சிற்சபையில் வாழ்தலைமைத் தெய்வமே - நற்சிவையாந்
- சொல்லவ னீச்சரங்கு தோயவும்ப ராம்பெருமைப்
- பல்லவ னீச்சரத்தெம் பாவனமே - நல்லவர்கள்
- சொல்லூ ரடியப்பர் தூயமுடி மேல்வைத்த
- நல்லூ ரமர்ந்தநடு நாயகமே - மல்லார்ந்த
- சொற்கடவி மேலோர் துதித்தலொழி யாதோங்கு
- நற்கடவூர் வீரட்ட நாயகனே - வற்கடத்தும்
- சொல்லூரன் றன்னைத் தொழும்புகொளுஞ் சீர்வெண்ணெய்
- நல்லூ ரருட்டுறையின் நற்பயனே - மல்லார்ந்து
- சொல்லைக்கல் லென்றுநல்லோர் சொன்னபுத்தி கேளாமல்
- எல்லைக்கல் லொத்தே யிருந்ததுண்டு - தொல்லைவினை
- சொல்லிநின்றார் கேட்டும் துதிக்கின் றிலையன்பு
- புல்லஎன்றால் ஈதொன்றும் போதாதோ - நல்லதிருப்
- சொல்லாடி நின்றனவே சொல்கின்றாய் மற்றிதனை
- நல்லோர்கள் கண்டால் நகையாரோ - செல்லான
- சொல்லுதியோ சொல்லாயோ துவ்வாமை பெற்றொருநீ
- அல்லலுறுங் காலத் தறைகண்டாய் - அல்லவெலாம்
- சொல்லுகின்ற உள்ளுயிரைச் சோர்வுற் றிடக்குளிர்ந்து
- கொல்லுகின்ற நஞ்சில் கொடிதன்றோ - ஒல்லுமன்றத்
- தெம்மானின் தாட்கமல மெண்ணாது பாழ்வயிற்றில்
- சும்மா அடைக்கின்ற சோறு.
- சொல்லொழியப் பொருளொழியக் கரண மெல்லாம்
- சோர்ந்தொழிய உணர்வொழியத் துளங்கா நின்ற
- அல்லொழியப் பகலொழிய நடுவே நின்ற
- ஆனந்த அநுபவமே அதீத வாழ்வே
- நெல்லொழியப் பதர்கொள்வார் போல இன்ப
- நிறைவொழியக் குறைகொண்மத நெறியோர் நெஞ்சக்
- கல்லொழிய மெய்யடியர் இதய மெல்லாங்
- கலந்துகலந் தினிக்கின்ற கருணைத் தேவே.
- சொற்போதற் கரும்பெரிய மறைகள் நாடித்
- தொடர்ந்துதொடர்ந் தயர்ந்திளைத்துத் துளங்கி ஏங்கிப்
- பிற்போத விரைந்தன்பர் உளத்தே சென்ற
- பெருங்கருணைப் பெருவாழ்வே பெயரா தென்றும்
- தற்போத ஒழிவினிடை நிறைந்து பொங்கித்
- ததும்பிவழிந் தோங்கியெல்லாந் தானே யாகிச்
- சிற்போதத் தகம்புறமும் கோத்து நின்ற
- சிவானந்தப் பெருக்கேமெய்ச் செல்வத் தேவே.
- சொற்றுணைவேதியன் என்னும்பதிகச் சுருதியைநின்
- பொற்றுணை வார்கழற் கேற்றியப் பொன்னடிப் போதினையே
- நற்றுணை யாக்கரை ஏறிய புண்ணிய நாவரசைக்
- கற்றுணை யாதிந்தக் கற்றுணை யாமென் கடைநெஞ்சமே.
- சொல்லுகின் றோர்க்கமு தம்போல் சுவைதரும் தொல்புகழோய்
- வெல்லுகின் றோரின்றிச் சும்மா அலையுமென் வேடநெஞ்சம்
- புல்லுகின் றோர்தமைக் கண்டால்என் னாங்கொல் புகல்வெறும்வாய்
- மெல்லுகின் றோர்க்கொரு நெல்லவல் வாய்க்கில் விடுவரன்றே.
- சொல்அ வாவிய தொண்டர்தம் மனத்தில்
- சுதந்த ரங்கொடு தோன்றிய துணையைக்
- கல்அ வாவிய ஏழையேன் நெஞ்சும்
- கரைந்து வந்திடக் கலந்திடும் களிப்பைச்
- செல்அ வாவிய பொழில்திரு வொற்றித்
- தேனைத் தில்லைச்சிற் றம்பலத் தாடும்
- நல்ல வாழ்வினை நான்மறைப் பொருளை
- நமச்சி வாயத்தை நான்மற வேனே.
- சொல்லும் சொல்லள வன்றுகாண் நெஞ்சத்
- துடுக்க னைத்தும்இங் கொடுக்குவ தெவனோ
- கல்லும் பிற்படும் இரும்பினும் பெரிதால்
- கடைய னேன்செயக் கடவதொன் றறியேன்
- அல்லும் எல்லும்நின் றகங்குழைந் தேத்தும்
- அன்பருள் ஊறும் ஆனந்தப் பெருக்கே
- செல்லு லாம்பொழில் ஒற்றியங் கரும்பே
- செல்வ மேபர சிவபரம் பொருளே.
- சொந்தமுற எண்ணித் தொழுகின்ற மெய்யடியர்
- சந்தமுறும் நெஞ்சத் தலத்தமர்ந்த தத்துவனே
- நந்தவனஞ் சூழ்ஒற்றி நாயகனே வாழ்க்கைஎனும்
- பந்தமதில் வாடும்இந்தப் பாவிமுகம் பாராயோ.
- சொல்லற் கரிய பெரியபரஞ் சுடரே முக்கட் சுடர்க்கொழுந்தே
- மல்லற் கருமால் அயன்முதலோர் வழுத்தும் பெருஞ்சீர் மணிக்குன்றே
- புல்லற் கரிதாம் எளியேன்றன் பிழைகள் யாவும் பொறுத்திந்த
- அல்லற் கடல்நின் றெனைஎடுத்தே அருள்வாய் உன்றன் அருள்நலமே.
- சொன்னிலைக்கும் பொருணிலைக்கும் தூரியதாய் ஆனந்தச் சுடராய் அன்பர்
- தன்னிலைக்கும் சென்னிலைக்கும் அண்மையதாய் அருள்பழுக்கும் தருவாய் என்றும்
- முன்னிலைக்கும் நின்னிலைக்கும் காண்பதரிதாய் மூவாத முதலாய்ச் சுத்த
- நன்னிலைக்கும் நிலையாய பசுபதியை மனனேநீ நவின்றி டாயே.
- சொல்லா லியன்ற தொடைபுனைவார் தூயா ரொற்றித் தொன்னகரார்
- அல்லா லியன்ற மனத்தார்பா லணுகா ரென்றென் மனைபுகுந்தார்
- வல்லா லியன்ற முலையென்றார் வல்லார் நீரென் றேனுன்சொற்
- கல்லா லியன்ற தென்றார்முன் கல்லா லியன்ற தென்றேனே.
- சொல்லுள் நிறைந்த பொருளானார் துய்யர் உளத்தே துன்னிநின்றார்
- மல்லல் வயற்சூழ் திருஒற்றி வாணர் பவனி வரக்கண்டேன்
- கல்லும் மரமும் ஆனந்தக் கண்ர் கொண்டு கண்டதெனில்
- எல்லை யில்லா அவரழகை என்னென் றுரைப்ப தேந்திழையே.
- சொன்னிறைந்த பொருளும்அதன் இலக்கியமும் ஆகித்
- துரியநடு விருந்தஅடித் துணைவருந்த நடந்து
- கொன்னிறைந்த இரவினிடை எழுந்தருளிக் கதவம்
- கொழுங்காப்பை அவிழ்வித்துக் கொடியேனை அழைத்து
- என்னிறைந்த ஒருபொருள்என் கையில்அளித் தருளி
- என்மகனே வாழ்கஎன எழில்திருவாய் மலர்ந்தாய்
- தன்னிறைந்த நின்கருணைத் தன்மையைஎன் புகல்வேன்
- தனிமன்றில் ஆனந்தத் தாண்டவஞ்செய் அரசே.
- சொல்லார் மலர்புனை அன்பகத் தோர்க்கருள் சொல்லும்எல்லாம்
- வல்லாய்என் றேத்த அறிந்தேன் இனிஎன்றன் வல்வினைகள்
- எல்லாம் விடைகொண் டிரியும்என் மேல்இய மன்சினமும்
- செல்லாது காண்ஐய னேதணி காசலச் சீர்அரைசே.
- சொல்லும் பொருளு மாய்நிறைந்த சுகமே அன்பர் துதிதுணையே
- புல்லும் புகழ்சேர் நல்தணிகைப் பொருப்பின் மருந்தே பூரணமே
- அல்லும் பகலும் நின்நாமம் அந்தோ நினைந்துன் ஆளாகேன்
- கல்லும் பொருவா வன்மனத்தால் கலங்கா நின்றேன் கடையேனே.
- சொல்விளைவு நோக்காதே சொன்னதெலா மெண்ணுதொறும்
- வல்வினையே னுள்ளகத்தே வாளிட் டறுக்குதடா.
- சொல்லுறு மசுத்தத் தொல்லுயிர்க் கவ்வகை
- அல்லலிற் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
- சொருப மறைப்பெலாந் தொலைப்பித் துயிர்களை
- அருளினிற் றெருட்டு மருட்பெருஞ் ஜோதி
- சொல்லவனே பொருளவனே துரியபதத் தவனே
- தூயவனே நேயவனே சோதிஉரு வவனே
- நல்லவனே நன்னிதியே ஞானசபா பதியே
- நாயகனே தாயகனே நண்பவனே அனைத்தும்
- அல்லவனே ஆனவனே அம்மைஅப்பா என்னை
- ஆண்டவனே தாண்டவனே அருட்குருவே எல்லாம்
- வல்லவனே சிவகாம வல்லிமண வாளா
- மன்னவனே என்னவனே வந்தருள்க விரைந்தே.
- சொல்வந்த வேத முடிமுடி மீதில் துலங்குவது
- கல்வந்த நெஞ்சினர் காணற் கரியது காமமிலார்
- நல்வந் தனைசெய நண்ணிய பேறது நன்றெனக்கே
- செல்வந்தந் தாட்கொண்ட துத்தர ஞான சிதம்பரமே.
- சொல்லுகின்ற என்சிறுவாய்ச் சொன்மாலை அத்தனையும்
- வெல்லுகின்ற தும்பைஎன்றே மேல்அணிந்தான் - வல்லிசிவ
- காம சவுந்தரிக்குக் கண்ணனையான் ஞானசபைச்
- சேமநட ராஜன் தெரிந்து.
- சொல்லுகின்றேன் பற்பலநான் சொல்லுகின்ற வெல்லாம்
- துரிசலவே சூதலவே தூய்மையுடை யனவே
- வெல்லுகின்ற வார்த்தைஅன்றி வெறும்வார்த்தை என்வாய்
- விளம்பாதென் ஐயர்நின்று விளம்புகின்ற படியால்
- செல்லுகின்ற படியேநீ காண்பாய்இத் தினத்தே
- தேமொழிஅப் போதெனைநீ தெளிந்துகொள்வாய் கண்டாய்
- ஒல்லுகின்ற வகைஎல்லாம் சொல்லுகின்றே னடிநான்
- உண்மைஇது உண்மைஇது உண்மைஇது தானே.
- சொல்வந்த அந்தங்கள் ஆறும் - ஒரு
- சொல்லாலே ஆமென்றச் சொல்லாலே வீறும்
- செல்வம் கொடுத்தது பாரீர் - திருச்
- சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
- சொல்லால் அளப்பரிய சோதிவரை மீது
- தூயதுரி யப்பதியில் நேயமறை ஓது
- எல்லாம்செய் வல்லசித்தர் தம்மைஉறும் போது
- இறந்தார்எழுவாரென்றுபுறந்தாரைஊது.