- தரமிகும் சர்வசா திட்டான சத்தியம் சர்வவா னந்தபோகம்
- சார்ந்தசர் வாதார சர்வமங் களசர்வ சத்திதர மென்றளவிலாச்
- சகுணநிர்க் குணமுறு சலக்ஷண விலக்ஷணத் தன்மைபல வாகநாடித்
- தம்மைநிகர் மறையெலா மின்னுமள விடநின்ற சங்கர னநாதியதி
- தருக்காட்டுப் பள்ளித் தகைகொண்டோர் சூழுந்
- திருக்காட்டுப் பள்ளியில்வாழ் தேவே - மருக்காட்டு
- தரும்பேர் அருளொற்றி யூருடை யான்இடஞ் சார்ந்தபசுங்
- கரும்பே இனியகற் கண்டே மதுரக் கனிநறவே
- இரும்பேய் மனத்தினர் பால்இசை யாத இளங்கிளியே
- வரும்பேர் ஒளிச்செஞ் சுடரே வடிவுடை மாணிக்கமே.
- தருவார் தருவார் செல்வமுதல் தருவார் ஒற்றித் தலம்அமர்வார்
- மருவார் தமது மனமருவார் மருவார் கொன்றை மலர்புனைவார்
- திருவார் புயனும் மலரோனும் தேடும் தியாகப் பெருமானார்
- வருவார் வருவார் எனநின்று வழிபார்த் திருந்தேன் வந்திலரே.
- தரையிற் கீறிச் சலந்தரனைச் சாய்த்தார் அந்தச் சக்கரமால்
- வரையற் களித்தார் திருஒற்றி வாணர் இன்னும் வந்திலரே
- கரையிற் புணர்ந்த நாரைகளைக் கண்டேன் கண்ட வுடன்காதல்
- திரையிற் புணர்ந்தேன் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
- தரும விடையார் சங்கரனார் தகைசேர் ஒற்றித் தனிநகரார்
- ஒருமை அளிப்பார் தியாகர்எனை உடையார் இன்று வருவாரோ
- மருவ நாளை வருவாரோ வாரா தென்னை மறப்பாரோ
- கருமம் அறிந்த குறமடவாய் கணித்தோர் குறிதான் கண்டுரையே.
- தருநிதியக் குருவியற்றச் சஞ்சலிக்கு மனத்தால்
- தளர்ந்தசிறி யேன்தனது தளர்வெல்லாந் தவிர்த்து
- இருநிதியத் திருமகளிர் இருவர்எனை வணங்கி
- இசைந்திடுவந் தனம்அப்பா என்றுமகிழ்ந் திசைத்துப்
- பெருநிதிவாய்த் திடஎனது முன்பாடி ஆடும்
- பெற்றிஅறித் தனைஇந்தப் பேதமையேன் தனக்கே
- ஒருநிதிநின் அருள்நிதியும் உவந்தளித்தல் வேண்டும்
- உயர்பொதுவில் இனபநடம் உடையபரம் பொருளே.
- தருவாய் இதுநல் தருணங்கண் டாய்என்னைத் தாங்கிக்கொண்ட
- குருவாய் விளங்கு மணிமன்ற வாணனைக் கூடிஇன்ப
- உருவாய்என் உள்ளத்தின் உள்ளே அமர்ந்துள்ள உண்மைஎலாம்
- திருவாய் மலர்ந்த சிவகாம வல்லிநின் சீர்அருளே.
- தருமக வமுதாற் சத்திசத் தர்களை
- அருளினிற் காக்கு மருட்பெருஞ் ஜோதி
- தரித்திடேன் சிறிதும் தரித்திடேன் எனது
- தளர்ச்சியும் துன்பமும் தவிர்த்தே
- தெரித்திடல் அனைத்தும் தெரித்திடல் வேண்டும்
- தெரித்திடாய் எனில்இடர் எனைத்தான்
- எரித்திடும் அந்தோ என்செய்வேன் எங்கே
- எய்துகேன் யார்துணை என்பேன்
- திரித்தநெஞ் சகத்தேன் சரித்திரம் அனைத்தும்
- திருவுளம் தெரிந்தது தானே.
- தருணம்இஞ் ஞான்றே சுத்தசன் மார்க்கத்
- தனிநெறி உலகெலாம் தழைப்பக்
- கருணையும் சிவமே பொருள்எனக் கருதும்
- கருத்தும்உற் றெம்மனோர் களிப்பப்
- பொருள்நிறை ஓங்கத் தெருள்நிலை விளங்கப்
- புண்ணியம் பொற்புற வயங்க
- அருள்நயந் தருள்வாய் திருச்சிற்றம் பலத்தே
- அருட்பெருஞ் சோதிஎன் அரசே.
- தரைத்தலத் தெனைநீ எழுமையும் பிரியாத் தம்பிரான் அல்லையோ மனத்தைக்
- கரைத்துளே புகுந்தென் உயிரினுட் கலந்த கடவுள்நீ அல்லையோ எனைத்தான்
- இரைத்திவ ணளித்தோர் சிற்சபை விளங்கும் எந்தைநீ அல்லையோ நின்பால்
- உரைத்தல்என் ஒழுக்கம் ஆதலால் உரைத்தேன் நீஅறி யாததொன் றுண்டோ.
- தருணத்துக் கேற்றவா சொல்லிப்பின் மாற்றும்
- தப்புரை ஈதன்று சத்தியம் சொன்னேன்
- கருணைப் பெருக்கினில் கலந்தென துள்ளே
- கனவினும் நனவினும் களிப்பருள் கின்றீர்
- வருணப் பொதுவிலும் மாசமு கத்தென்
- வண்பொரு ளாதியை நண்பொடு கொடுத்தேன்
- இருள்நச் சறுத்தமு தந்தர வல்லீர்
- எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே.
- தருண நிதியே என்னொருமைத் தாயே என்னைத் தடுத்தாண்டு
- வருண நிறைவில் சன்மார்க்கம் மருவப் புரிந்த வாழ்வேநல்
- அருண ஒளியே எனச்சிறிதே அழைத்தேன் அழைக்கும் முன்வந்தே
- கருணை கொடுத்தாய் நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.
- தருவகைஇத் தருணம்நல்ல தருணம்இதில் எனக்கே
- தனித்தஅருட் பெருஞ்சோதி தந்தருள்க இதுதான்
- ஒருவகைஈ திலைஎனில்வே றொருவகைஎன் னுடைய
- உடல்உயிரை ஒழித்திடுக உவப்பினொடே இந்த
- இருவகையும் சம்மதமே திருவடிசாட் சியதாய்
- இயம்பினன்என் இதயம்உன்றன் இதயம்அறிந் ததுவே
- அருவகையோ உருவகையும் ஆகிஎன்னுள் அமர்ந்தாய்
- அம்மேஎன் அப்பாஎன் அய்யாஎன் அரசே.
- தரம்பிறர் அறியாத் தலைவஓர் முக்கண்
- தனிமுதல் பேரருட் சோதிப்
- பரம்பர ஞான சிதம்பர நடஞ்செய்
- பராபர நிராமய நிமல
- உரம்பெறும் அயன்மால் முதற்பெருந் தேவர்
- உளத்ததி சயித்திட எனக்கே
- வரந்தரு கின்றாய் வள்ளல்நின் கருணை
- மாகடற் கெல்லைகண் டிலனே.
- தருநெறி எல்லாம்உள் வாங்கும் - சுத்த
- சன்மார்க்கம் என்றோர் தனிப்பேர்கொண் டோங்கும்
- திருநெறிக் கேசென்று பாரீர் - திருச்
- சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
- தருணா பதியே சிவபதி யே
- தனிமா பதியே சபாபதி யே.
- தருவளர் நிழலே நிழல்வளர் சுகமே
- தடம்வளர் புனலே புனல்வளர் நலனே
- திருவளர் உருவே உருவளர் உயிரே
- திருநட மணியே திருநட மணியே.