- தாண்டவன் தலைமாலை பூண்டவன் தொழுமன்பர் தங்களுக்கருளாண்டவன்
- தன்னிகரில் சித்தெலாம் வல்லவன் வடதிசைச் சைலமெனு மொருவில்வன்
- தக்ஷிணா மூர்த்தியருண் மூர்த்திபுண் ணியமூர்த்தி தகுமட்ட மூர்த்தியானோன்
- தலைமைபெறு கணநாய கன்குழக னழகன்மெய்ச் சாமிநந் தேவதேவன்
- தாயி னுலகனைத்துந் தாங்குந் திருப்புலியூர்க்
- கோயி லமர்ந்தகுணக் குன்றமே - மாயமிகும்
- தாங்கோய் மலைப்பிறவி யார்கலிக்கோர் வார்கலமாம்
- ஈங்கோய் மலைவாழ் இலஞ்சியமே - ஓங்காது
- தாஞ்சியத்தை62 வேங்கைத் தலையாற் றடுக்கின்ற
- வாஞ்சியத்தின் மேவு மறையோனே - ஆஞ்சியிலா
- தாமாத்தூர் வீழத் தடிந்தோன் கணேசனொடும்
- ஆமாத்தூர் வாழ்மெய் அருட்பிழம்பே - யாமேத்தும்
- தாய்க்குங் கிடையாத தண்ணருள்கொண் டன்பருளம்
- வாய்க்குங் கயிலை மலையானே - தூய்க்குமரன்
- தாவில் வலங்கொண்டு சஞ்சரித்தேன் அல்லதுநின்
- கோவில்வலங் கொள்ளக் குறித்தநிலை - பூவுலகில்
- தாயனையா யுன்றனது சந்நிதிநேர் வந்துமொரு
- நேயமுமில் லாதொதி82 போல் நின்றதுண்டு - தீயவினை
- தாதாட ஓங்கித் தலையாட வஞ்சரொடு
- வாதாட என்றாலென் வாய்துடிக்குங் - கோதாடச்
- தாக்கொழிந்து தத்துவத்தின் சார்பாம் - தனுவொழிந்து
- வாக்கொழிந்து மாணா மனமொழிந்து - ஏக்கமுற
- தானசைந்தால் மற்றைச் சகமசையும் என்றுமறை
- தேனசையச் சொல்லுகின்ற சித்தனெவன் - ஊனமின்றிப்
- தாம்வாழ அண்ட சராசரங்கள் தாம்வாழ
- நாம்வாழத் தன்னுரையாம் நான்மறைகள் - தாம்வாழச்
- தார்த்தியாய்த் தேவர் அரகரவென் றேத்தஅட்ட
- மூர்த்தியாய் நின்ற முதல்வனெவன் - சீர்த்திபெற
- தாம்தலைவ ராகத்தம் தாள்தொழுமெத் தேவர்க்கும்
- ஆந்தலைமை ஈந்தபர மார்த்தனெவன் - போந்துயிர்கள்
- தான்தந்தை என்றெறிந்தோன் தாளெறிந்த தண்டிக்குத்
- தான்தந்தை ஆன தயாளனெவன் - தான்கொண்டு
- தாமலையா வண்ணம் தகையருளி ஓங்குவெள்ளி
- மாமலைவாழ் கின்றஅருள் வள்ளலெவன் - ஆமவனே
- தான்பாடக்கேட்டுத் தமியேன் களிக்குமுன்னம்
- நான்பாடக்கேட்டுவக்கும் நற்றாய்காண் - வான்பாடும்
- தாபஞ்செய் குற்றம் தரினும் பொறுப்பதன்றிக்
- கோபஞ் செயாநமது கோமான்காண் - பாபமற
- தானோங்கும் அண்டமெலாம் சத்தமுறக் கூவுமொரு
- மானோங்கும் செங்கை மலரழகும் - ஊனோங்கும்
- தாவென்றால் நல்லருள்இந் தாவென்பான் நம்பெருமான்
- ஆஉன்பால் ஓதி அலுக்கின்றேன் - நீவன்பால்
- தாயார் மனையார் தனயரார் தம்மவரார்
- நீயார் இதனை நினைந்திலையே - சேயேகில்
- தாளா தரித்தேநின் றன்னைமறந் துய்யாது
- வாளா மதத்தின் மலிகின்றாய் - கேளாயிச்
- தாமரையோன் மான்முதலோர் தாம்அறையா ராயிலன்று
- நாமறைவோம் என்றல் நடவாதே - நாமிவணம்
- தாமதமே ஓரவித்தை தாமதமே ஆவரணம்
- தாமதமே மோக சமுத்திரம்காண் - தாமதமென்
- தானடங்கின் எல்லாச் சகமும் அடங்குமொரு
- மானடங்கொள் பாத மலர்வாய்க்கும் - வானடங்க
- தாயில் வளர்க்கும் தயவுடைய நம்பெருமான்
- கோயில் விளக்கும் குணத்தோரும் - தூயஅருள்
- தாதாவென் றன்புடனே சாமகீ தங்கள்முதல்
- வேதாக மங்கள் விரிப்போரும் - வேதாந்தம்
- தாழ்சடையும் நீறும் சரிகோவ ணக்கீளும்
- வாழ்சிவமும் கொண்டு வதிவோரும் - ஆழ்நிலைய
- தாயர் எனமாதர் தம்மையெண்ணிப் பாலர்பித்தர்
- பேயரென நண்ணும் பெரியோரு - மீயதனின்
- தாதொன்று தும்பைமுடித் தாணுஅடி யொன்றிமற்றை
- யாதொன்றும் நோக்கா தமைந்திடுக - தீதென்ற
- தாரம்விற்றுஞ் சேய்விற்றுந் தன்னைவிற்றும் பொய்யாத
- வாரம்வைத்தான் முன்னிங்கோர் மன்னனென்பர் - நாரம்வைத்த
- வேணிப் பிரானதுதான் மெய்யாமேல் அன்றெனைநீ
- ஏணிற் பிறப்பித்த தில்.
- தாழ்விக்கும் வஞ்சச் சகமால் ஒழித்தென்னை
- வாழ்விக்கும் நல்ல மருந்தென்கோ - வீழ்விக்கும்
- ஈங்கான மாயை இகந்தோர்க் கருள்வோய்நின்
- பாங்கான செம்பொற் பதம்.
- தானாகித் தானல்ல தொன்று மில்லாத்
- தன்மையனாய் எவ்வெவைக்குந் தலைவ னாகி
- வானாகி வளியனலாய் நீரு மாகி
- மலர் தலைய உலகாகி மற்று மாகித்
- தேனாகித் தேனினறுஞ் சுவைய தாகித்
- தீஞ்சுவையின் பயனாகித் தேடு கின்ற
- நானாகி என்னிறையாய் நின்றோய் நின்னை
- நாயடியேன் எவ்வாறு நவிற்று மாறே.
- தாயாகி னுஞ்சற்று நேரந் தரிப்பள்நந் தந்தையைநாம்
- வாயார வாழ்த்தினும் வையினும் தன்னிடை வந்திதுநீ
- ஈயாய் எனில்அருள் வான்என் றுனையடுத் தேன்உமையாள்
- நேயா மனமிரங் காயாஎன் எண்ணம் நெறிப்படவே.
- தாழ்வேதும் இன்றிய கோவே எனக்குத் தனித்தபெரு
- வாழ்வே நுதற்கண் மணியேஎன் உள்ள மணிவிளக்கே
- ஏழ்வேலை என்னினும் போதா இடும்பை இடுங்குடும்பப்
- பாழ்வே தனைப்பட மாட்டேன் எனக்குன் பதமருளே.
- தாயே மிகவும் தயவுடை யாள்எனச் சாற்றுவர்இச்
- சேயேன் படுந்துயர் நீக்கஎன் னேஉளம் செய்திலையே
- நாயேன் பிழைஇனி நாடாது நல்லருள் நல்கவரு
- வாயேஎம் ஒற்றி மயிலே வடிவுடை மாணிக்கமே.
- தாதா உணவுடை தாதா எனப்புல்லர் தம்மிடைப்போய்
- மாதாகம் உற்றவர் வன்நெஞ்சில் நின்அடி வைகுங்கொலோ
- காதார் நெடுங்கட் கரும்பேநல் ஒற்றிக் கருத்தர்நட
- வாதா ரிடம்வளர் மாதே வடிவுடை மாணிக்கமே.
- தாவென் றருளு மொற்றியுளீர் தமியேன் மோக தாகமற
- வாவென் றருள்வீ ரென்றேனவ் வாவின் பின்னர் வருமெழுத்தை
- மேவென் றதனிற் சேர்த்ததிங்கே மேவி னன்றோ வாவென்பே
- னேவென் றிடுகண் ணென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- தாங்கும் விடைமே லழகீரென் றன்னைக் கலந்துந் திருவொற்றி
- யோங்குந் தளியி லொளித்தீர்நீ ரொளிப்பில் வல்ல ராமென்றேன்
- வாங்கு நுதலாய் நீயுமெனை மருவிக் கலந்து மலர்த்தளியி
- லீங்கின் றொளித்தா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- தாயின் மேவிய தற்பர மேமுல்லை
- வாயின் மேவிய மாமணி யேஉன்தன்
- கோயின் மேவிநின் கோமலர்த் தாள்தொழா
- தேயின் மேவி இருந்தனன் என்னையே.
- தாயி லார்என நெஞ்சகம் தளர்ந்தேன்
- தந்தை உம்திருச் சந்நிதி அடைந்தேன்
- வாயி லார்என இருக்கின்றீர் அல்லால்
- வாய்தி றந்தொரு வார்த்தையும் சொல்லீர்
- கோயி லாகஎன் நெஞ்சகத் தமர்ந்த
- குணத்தி னீர்என்தன் குறைஅறி யீரோ
- ஒயி லாதுநல் தொண்டருக் கருள்வான்
- ஓங்கு சீர்ஒற்றி யூர்உடை யீரே.
- தாய்க்கும்இனி தாகும்உன்தன் தாள்மலரை ஏத்தாது
- நாய்க்கும் கடையாய் நலிகின்றேன் ஆயிடினும்
- வாய்க்கும்உன்தன் சந்திதிக்கண் வந்துவந்து வாடுகின்றேன்
- தூய்க்குமரன் தந்தாய்என் சோர்வறிந்து தீராயோ.
- தாமனை மழுமான் தரித்தசெங் கரனைத் தகையனைச் சங்கரன் தன்னைச்
- சேமனை ஒற்றித் தியாகனைச் சிவனைத் தேவனைத் தேர்ந்துநின் றேத்தா
- ஊமரைநீண்ட ஒதியரைப் புதிய ஒட்டரைத் துட்டரைப் பகைகொள்
- நாமரை நரக நாடரைக் கண்டால் நடுங்குவ நடுங்குவ மனமே.
- தாவியே இயமன் தமர்வரும் அந்நாள் சம்புநின் திருவருள் அ€டையாப்
- பாவியேன் செய்வ தென்என நெஞ்சம் ப€தைப€தைத் துருகுகின் றனன்காண்
- கூவியே எனக்குன் அருள்தரின் அல்லால் கொடியனேன் உய்வ€கை அறியேன்
- வாவிஏர் பெறப்பூஞ் சோ€லைசூழ்ந் தோங்கி வளம்பெறும் ஒற்றியூர் வாழ்வே.
- தாய்க்கும் தந்தைக்கும் நிகரும்நின் இருதாள்
- சார்ந்த மேலவர் தமைத்தொழு தேத்தா
- நாய்க்கும் நாய்எனும் பாவியேன் பிழையை
- நாடி நல்லருள் நல்கிடா திருந்தால்
- ஏய்க்கும் மால்நிறக் காலன்வந் திடும்போ
- தென்கொ லாம்இந்த எண்ணம்என் மனத்தைத்
- தீய்க்கு தென்செய்வேன் ஒற்றியம் சிவனே
- தில்லை அம்பலம் திகழ்ஒளி விளக்கே.
- தாய ராதியர் சலிப்புறு கிற்பார்
- தமரும் என்றனைத் தழுவுதல் ஒழிவார்
- நேய ராதியர் நேயம்விட் டகல்வார்
- நின்னை நம்பிஎன் நெஞ்சுவக் கின்றேன்
- தீய ராதியில் தீயன்என் றெனைநின்
- திருவு ளத்திடைச் சேர்த்திடா தொழித்தால்
- ஏயர் கோனுக்கன் றருளும்எம் பெருமான்
- என்செய் கேன்நர கிடைஇடும் போதே.
- தாயி னும்பெருந் தயவுடை யவன்நந்
- தலைவன் என்றுநான் தருக்கொடும் திரிந்தேன்
- நாயி னும்கடை யேன்படும் இடரை
- நாளும் கண்டனை நல்அருள் செய்யாய்
- ஆயி னும்திரு முகங்கண்டு மகிழும்
- அன்பர் தம்பணி ஆற்றிமற் றுடலம்
- தேயி னும்மிக நன்றெனக் கருள்உன்
- சித்தம் அன்றியான் செய்வதொன் றிலையே.
- தாயிற் பெரிய கருணையினார் தலைமா லையினார் தாழ்சடையார்
- வாயிற் கினிய புகழுடைய வள்ளல் அவர்தந் திருஅழகைக்
- கோயிற் கருகே சென்றுமனம் குளிரக் கண்டேன் பிரிவுற்றேன்
- ஈயில் சிறியேன் அவர் அழகை இன்னும் ஒருகால் காண்பேனோ.
- தாழாத துன்பச் சமுத்திரத் தேஇத் தனிஅடியேன்
- வீழாத வண்ணம் கருணைசெய் வாய்என்னை வேண்டிஅந்நாள்
- ஊழாம் வினைதவிர்த் தாண்டனை யேஎன் உடையவனே
- வாழா வகைஎனை இந்நாள் விடுத்தல் வழக்கலவே.
- தாதாதா தாதாதா தாக்குறைக்கென் செய்குதும்யாம்
- தாதாதா என்றுலகில் தான்அலைந்தோம் - போதாதா
- நந்தா மணியே நமச்சிவா யப்பொருளே
- எந்தாய் எனப்புகழ வே.1
- தாயும் தந்தையும் தெய்வமும் குருவும்
- தாங்கு கின்றதோர் தலைவனும் பொருளும்
- ஆயும் இன்பமும் அன்பும்மெய் அறிவும்
- அனைத்தும் நீஎன ஆதரித் திருந்தேன்
- ஏயும் என்னள விரக்கம்ஒன் றிலையேல்
- என்செய் வேன்இதை யார்க்கெடுத் துரைப்பேன்
- சேயும் நின்னருள் நசைஉறுங் கண்டாய்
- தில்லை மன்றிடைத் திகழ்ஒளி விளக்கே.
- தாய்தடை என்றேன் பின்னர்த் தாரமே தடைஎன் றேன்நான்
- சேய்தடை என்றேன் இந்தச் சிறுதடை எல்லாந் தீர்ந்தும்
- தோய்தடைச் சிறியேன் இன்னுந் துறந்திலேன் எனைத் தடுக்க
- ஏய்தடை யாதோ எந்தாய் என்செய்கேன் என்செய் கேனே.
- தாயும் தந்தையும் சற்குரு நாதனும்
- ஆயும் தெய்வமும் நீஎன் றறிந்தனன்
- பாயும் மால்விடை ஏறும் பரமனே
- நீயும் கைவிட என்னை நினைத்தியோ.
- வேறு
- தாய்வறிற்றிற் பிறவாது தானே முளைத்தவர்க்குச்
- சாதிகுல மறியாது தாண்டவஞ்செய் கின்றவர்க்கு
- ஏய தொழிலருளு மென்பிராண நாயகர்க்கு
- ஏமாந்த வரையெல்லாம் ஏமாத்து மீசருக்கு
- தாமப் புயனார் சங்கரனார் தாயில் இனியார் தற்பரனார்
- ஓமப் புகைவான் உறும்ஒற்றி யூர்வாழ் வுடையார் உற்றிலரே
- காமப் பயலோ கணைஎடுத்தான் கண்ட மகளீர் பழிதொடுத்தார்
- சேமக் குயிலே என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
- தாயாய் அளிக்குந் திருஒற்றித் தலத்தார் தமது பவனிதனை
- மாயா நலத்தில் காணவந்தால் மருவும் நமது மனங்கவர்ந்து
- பாயா விரைவில் நமைத்திரும்பிப் பாரா தோடு கின்றார்நாம்
- ஓயா தோடி னாலும்அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே.
- தாழ்வேன் வஞ்ச நெஞ்சகர்பால் சார்வேன் தனக்குன் அருள்தந்தால்
- வாழ்வேன் இலையேல் என்செய்கேன் வருத்தம் பொறுக்க மாட்டேனே
- ஏழ்வே தனையும் கடந்தவர்தம் இன்பப் பெருக்கே என்உயிரே
- போழ்வேல் கரங்கொள் புண்ணியனே புகழ்சேர் தணிகைப் பொருப்பரசே.
- தாழும் கொடிய மடவியர்தம் சழக்கால் உழலாத் தகைஅடைந்தே
- ஆழும் பரமா னந்தவெள்ளத் தழுந்திக் களிக்கும் படிவாய்ப்ப
- ஊழ்உந் தியசீர் அன்பர்மனத் தொளிரும் சுடரே உயர்தணிகை
- வாழும் பொருளே நின்திருத்தாள் அடியேன் முடிமேல் வைப்பாயே.
- தாணு ஈன்றருள் செல்வமே தணிகையில் சாமியே நினைஏத்திக்
- காணு வேன்இலை அருள்இவண் புன்மையில் காலங்கள் கழிக்கின்றேன்
- மாணும் அன்பர்கள் என்சொலார் ஐயநீ வந்தெனக் கருள்வாயேல்
- நாணு வேன்அலன் நடுங்கலன் ஒடுங்கலன் நாயினும் கடையேனே.
- தாருகப் பதகன் தன்னைத் தடிந்தருள் செய்தோய் போற்றி
- வேருகச் சூர மாவை வீட்டிய வேலோய் போற்றி
- ஆருகச் சமயக் காட்டை அழித்தவெங் கனலே போற்றி
- போருகத் தகரை ஊர்ந்த புண்ணிய மூர்த்தி போற்றி.
- தாதாதா தாதாதா தாக்குறைக்கென் செய்குதுமியாம்
- ஓதா தவமே யுழனெஞ்சே-மீதாத்
- ததிதி யெனமயிலிற் றானாடி நாளுந்
- திதிதி தருந்தணிகைத் தே.
- தாவென் றருளு மொற்றியுளீர் தமியேன் மோக தாகமற
- வாவென் றுரைப்பீ ரென்றேன்பின் வருமவ் வெழுத்திங் கிலையென்றார்
- ஓவென் றுயர்தீர்த் தருளுவதீ தோவென் றேன்பொய் யுரைக்கின்றாய்
- ஆவென் றுரைத்தா ரென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே.
- தாவாத வசியர்குலப் பெண்ணினுக்கோர் கரமளித்த சதுரன் அன்றே
- மூவாத மறைபுகலும் மொழிகேட்டுன் முண்டகத்தாள் முறையில் தாழ்ந்து
- தேவாதி தேவன்எனப் பலராலும் துதிபுரிந்து சிறப்பின் மிக்க
- தீவாய்இப் பிணிதொலைப்பாய் சிங்கபுரி தனில்அமர்ந்த தெய்வக் குன்றே.
- தாங்ககி லாண்ட சராசர நிலைநின்
- றாங்குற விளங்கு மருட்பெருஞ் ஜோதி
- தாபத் துயரந் தவிர்த்துல குறுமெலா
- ஆபத்தும் நீக்கிய வருட்பெருஞ் ஜோதி
- தாய்கருப் பையினுட் டங்கிய வுயிர்களை
- ஆய்வுறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
- தானொரு தானாய்த் தானே தானாய்
- ஊனுயிர் விளக்கு மொருதனிப் பொருளே
- தாழ்வெலாந் தவிர்த்துச் சகமிசை யழியா
- வாழ்வெனக் களித்த வளரொளி மணியே
- தாவு மான்எனக் குதித்துக்கொண் டோடித்
- தைய லார்முலைத் தடம்படுங் கடையேன்
- கூவு காக்கைக்குச் சோற்றில்ஓர் பொருக்கும்
- கொடுக்க நேர்ந்திடாக் கொடியரில் கொடியேன்
- ஓவு றாதுழல் ஈஎனப் பலகால்
- ஓடி ஓடியே தேடுறும் தொழிலேன்
- சாவு றாவகைக் கென்செயக் கடவேன்
- தந்தை யேஎனைத் தாங்கிக்கொண் டருளே.
- தாலவாழ்க் கையிலே சார்ந்தவர் எல்லாம் தக்கமுப் போதினும் தனித்தே
- சீலமார் பூசைக் கடன்முடிக் கின்றார் சிறியனேன் தவஞ்செய்வான் போலே
- ஞாலமே லவர்க்குக் காட்டிநான் தனித்தே நவிலும்இந் நாய்வயிற் றினுக்கே
- காலையா தியமுப் போதினும் சோற்றுக் கடன்முடித் திருந்தனன் எந்தாய்.
- தான்எனைப் புணரும் தருணம்ஈ தெனவே
- சத்தியம் உணர்ந்தனன் தனித்தே
- தேன்உறக் கருதி இருக்கின்றேன் இதுநின்
- திருவுளம் தெரிந்ததெந் தாயே
- ஆன்எனக் கூவி அணைந்திடல் வேண்டும்
- அரைக்கணம் ஆயினும் தாழ்க்கில்
- நான்இருப் பறியேன் திருச்சிற்றம் பலத்தே
- நடம்புரி ஞானநா டகனே.
- தாயும்என் ஒருமைத் தந்தையும் ஞான
- சபையிலே தனிநடம் புரியும்
- தூயநின் பாதத் துணைஎனப் பிடித்தேன்
- தூக்கமும் சோம்பலும் துயரும்
- மாயையும் வினையும் மறைப்பும்ஆ ணவமும்
- வளைத்தெனைப் பிடித்திடல் வழக்கோ
- நாயினேன் இனிஓர் கணந்தரிப் பறியேன்
- நல்அருட் சோதிதந் தருளே.
- தாய்கொண்ட திருப்பொதுவில் எங்கள்குரு நாதன்
- சந்நிதிபோய் வரவிடுத்த தனிக்கரணப் பூவை
- காய்கொண்டு வந்திடுமோ பழங்கொண்டு வருமோ
- கனிந்தபழங் கொண்டுவருங் காலதனை மதமாம்
- பேய்கொண்டு போய்விடுமோ பிலத்திடைவீழ்ந் திடுமோ
- பின்படுமோ முன்படுமோ பிணங்கிஒளித் திடுமோ
- வாய்கொண்டு வென்றிடுமோ தோற்றிடுமோ என்னை
- மறந்திடுமோ திருவுளத்தின் வண்ணம்அறிந் திலனே.
- தானலா திறையும் உயிர்க்கசை வில்லாத் தலைவனே திருச்சிற்றம் பலத்தே
- வானலால் வேறொன் றிலைஎன உரைப்ப வயங்கிய மெய்யின்ப வாழ்வே
- ஊனலால் உயிரும் உளமும்உள் உணர்வும் உவப்புற இனிக்குந்தெள் ளமுதே
- ஞானநா டகஞ்செய் தந்தையே அடியேன் நவில்கின்றேன் கேட்டருள் இதுவே.
- தாய்மொழி குறித்தே கணக்கிலே மற்றோர் தாய்க்குநால் என்பதை இரண்டாய்
- வாய்மொழி வஞ்சம் புகன்றனன் வரைந்தேன் நடுங்கினேன் நினைத்ததை மனத்தே
- தூய்மொழி நேயர் நம்பினோர் இல்லில் சூழ்ந்தனன் நினைத்தது துயர்ந்தேன்
- காய்மொழி புகன்றேன் பொய்மொழி புகன்றேன்கலங்கினேன் அதுநினைத் தெந்தாய்.
- தாயே எனைத்தான் தந்தவனே தலைவா ஞான சபாபதியே
- பேயேன் செய்த பெருங்குற்றம் பொறுத்தாட் கொண்ட பெரியோனே
- நீயே இந்நாள் முகமறியார் நிலையில் இருந்தால் நீடுலகில்
- நாயே அனையேன் எவர்துணைஎன் றெங்கே புகுவேன் நவிலாயே.
- தாங்கஎன் தனைஓர் தாய்கையில் கொடுத்தாய்
- தாயவள் நான்தனித் துணர்ந்து
- தூங்கவும் ஒட்டாள் எடுக்கவும் துணியாள்
- சூதையே நினைத்திருக் கின்றாள்
- ஓங்குநற் றாயும் வந்திலாள் அந்தோ
- உளந்தளர் வுற்றனன் நீயும்
- ஈங்குவந் திலையேல் என்செய்கேன் இதுதான்
- எந்தைநின் திருவருட் கழகோ.
- தார்த்தட முலையார் நான்பல ரொடுஞ்சார்
- தலத்திலே வந்தபோ தவரைப்
- பார்த்திலேன் வார்த்தை பகர்ந்திலேன் தவசுப்
- பாதகப் பூனைபோல் இருந்தேன்
- பேர்த்துநான் தனித்த போதுபோய் வலிந்து
- பேசினேன் வஞ்சரிற் பெரியேன்
- நார்த்திடர் உளத்தேன் என்னினும் உனையே
- நம்பினேன் கைவிடேல் எனையே.
- தானந்தம் இல்லாத தன்மையைக் காட்டும்
- சாகாத கல்வியைத் தந்தெனக் குள்ளே
- தேனந்தத் தெள்ளமு தூற்றிப் பெருக்கித்
- தித்தித்துச் சித்தம் சிவமய மாக்கி
- வானந்தம் ஆதியும் கண்டுகொண் டழியா
- வாழ்க்கையில் இன்புற்றுச் சுத்தவே தாந்த
- ஆனந்த வீதியில் ஆடச்செய் தீரே
- அருட்பெருஞ் ஜோதிஎன் ஆண்டவர் நீரே.
- தாய்முதலோ ரொடுசிறிய பருவமதில்282 தில்லைத்
- தலத்திடையே திரைதூக்கத் தரிசித்த போது
- வேய்வகைமேல் காட்டாதே என்றனக்கே எல்லாம்
- வெளியாகக் காட்டியஎன் மெய்உறவாம் பொருளே
- காய்வகைஇல் லாதுளத்தே கனிந்தநறுங் கனியே
- கனவிடத்தும் நனவிடத்தும் எனைப்பிரியாக் களிப்பே
- தூய்வகையோர் போற்றமணி மன்றில்நடம் புரியும்
- சோதிநடத் தரசேஎன் சொல்லும்அணிந் தருளே.
- தாயானைத் தந்தைஎனக் காயி னானைச்
- சற்குருவு மானானைத் தமியேன் உள்ளே
- மேயானைக் கண்காண விளங்கி னானை
- மெய்ம்மைஎனக் களித்தானை வேதஞ் சொன்ன
- வாயானை வஞ்சம்இலா மனத்தி னானை
- வரங்கொடுக்க வல்லானை மணிமன் றன்றி
- ஏயானைத் துரியநடு விருக்கின் றானை
- எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
- தாயாகித் தந்தையுமாய்த் தாங்குகின்ற தெய்வம்
- தன்னைநிகர் இல்லாத தனித்தலைமைத் தெய்வம்
- வாயார வாழ்த்துகின்றோர் மனத்தமர்ந்த தெய்வம்
- மலரடிஎன் சென்னிமிசை வைத்தபெருந் தெய்வம்
- காயாது கனியாகிக் கலந்தினிக்குந் தெய்வம்
- கருணைநிதித் தெய்வம்முற்றுங் காட்டுவிக்குந் தெய்வம்
- சேயாக எனைவளர்க்குந் தெய்வமகா தெய்வம்
- சிற்சபையில் ஆடுகின்ற தெய்வமதே தெய்வம்.
- தாயனே எனது தாதையே ஒருமைத்
- தலைவனே தலைவனே என்கோ
- பேயனேன் பிழையைப் பொறுத்தருள் புரிந்த
- பெருந்தகைப் பெரும்பதி என்கோ
- சேயனேன் பெற்ற சிவபதம் என்கோ
- சித்தெலாம் வல்லசித் தென்கோ
- தூயனே எனது நேயனே என்கோ
- சோதியுட் சோதிநின் றனையே.
- தாகமுள் எடுத்த போதெதிர் கிடைத்த
- சர்க்கரை அமுதமே என்கோ
- மோகம்வந் தடுத்த போதுகைப் பிடித்த
- முகநகைக் கணவனே என்கோ
- போகமுள் விரும்பும் போதிலே வலிந்து
- புணர்ந்தஓர் பூவையே என்கோ
- ஆகமுட் புகுந்தென் உயிரினுட் கலந்த
- அம்பலத் தாடிநின் றனையே.
- தாங்காதே பசிபெருக்கிக் கடைநாய்போல் உலம்பித்
- தவம்விடுத்தே அவந்தொடுத்தே தனித்துண்டும் வயிறு
- வீங்காதேல் எழுந்திருக்கேன் வீங்கிவெடித் திடல்போல்
- விம்மும்எனில் எழுந்துடனே வெறுந்தடிபோல் விழுந்தே
- வாங்காது தூங்கியதோர் வழக்கம்உடை யேனை
- வலிந்தடிமை கொண்டருளி மறப்பொழித்தெந் நாளும்
- தூங்காதே விழிக்கவைத்த துரையேஎன் உளத்தே
- சுத்தநடம் புரிகின்ற சித்தசிகா மணியே.
- தானே தயவால் சிறியேற்குத் தனித்த ஞான அமுதளித்த
- தாயே எல்லாச் சுதந்தரமும் தந்த கருணை எந்தாயே
- ஊனே விளங்க ஊனமிலா ஒளிபெற் றெல்லா உலகமும்என்
- உடைமை யாக்கொண் டருள்நிலைமேல் உற்றேன் உன்றன் அருளாலே
- வானே மதிக்கச் சாகாத வரனாய்319 எல்லாம் வல்லசித்தே
- வயங்க உனையுட் கலந்துகொண்டேன் வகுக்குந் தொழிலே முதலைந்தும்
- நானே புரிகின் றேன்புரிதல் நானோ நீயோ நான்அறியேன்
- நான்நீ என்னும் பேதம்இலா நடஞ்செய் கருணை நாயகனே.
- தாழாதெனை ஆட்கொண் டருளிய தந்தையேநின்
- கேழார்மணி அம்பலம் போற்றக் கிடைத்துளேன்நான்
- ஏழாநிலை மேல்நிலை ஏறி இலங்குகின்றேன்
- ஊழால்வந்த துன்பங்கள் யாவும் ஒழிந்ததன்றே.
- தாயேஎனைத் தந்த தயாநிதித் தந்தையேஇந்
- நாயேன்பிழை யாவையும் கொண்டனை நன்மைஎன்றே
- காயேகனி யாகக் கருதும் கருத்தனேநின்
- சேயேஎன என்பெயர் எங்கும் சிறந்ததன்றே.
- தாதையாம் என்னுடைய தாயாம்என் சற்குருவாம்
- மேதையாம் இன்ப விளைவுமாம் - ஓது
- குணவாளன் தில்லைஅருட் கூத்தன் உமையாள்
- மணவாளன் பாத மலர்.
- தாயாகி என்உயிர்த் தந்தையும் ஆகிஎன் சற்குருவாய்த்
- தேயாப் பெரும்பதம் ஆகிஎன் சத்தியத் தெய்வமுமாய்
- வாயாரப் பாடும்நல் வாக்களித் தென்உளம் மன்னுகின்ற
- தூயா திருநட ராயாசிற் றம்பலச் சோதியனே.
- தாழ்குழலீர் எனைச்சற்றே தனிக்கவிட்டால் எனது
- தலைவரைக்காண் குவல்என்றேன் அதனாலோ அன்றி
- ஏழ்கடலிற் பெரிதன்றோ நான்பெற்ற இன்பம்
- என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
- கூழ்கொதிப்ப தெனக்கொதித்தாள் பாங்கிஎனை வளர்த்த
- கோதைமருண் டாடுகின்ற பேதைஎனல் ஆனாள்
- சூழ்மடந்தை மார்களெலாம் தூற்றிநகைக் கின்றார்
- சுத்தர்நட ராயர்திருச் சித்தம்அறிந் திலனே.
- தானே அருள்ஆனான் தானே பொருள்ஆனான்
- தானேஎல் லாம்வல்ல தான்ஆனான் - தானேதான்
- நான்ஆனான் என்னுடைய நாயகன்ஆ னான்ஞான
- வான்ஆனான் அம்பலத்தெம் மான்.
- தானேவந் தென்உளத்தே சார்ந்து கலந்துகொண்டான்
- தானே எனக்குத் தருகின்றான் - தானேநான்
- ஆகப் புரிந்தானென் அப்பன் பெருங்கருணை
- மேகத்திற் குண்டோ விளம்பு.
- தான்நான் எனும்பேதந் தன்னைத் தவிர்த்தான்நான்
- ஆனான்சிற் றம்பலவன் அந்தோநான் - வானாடர்
- செய்தற் கரியதவம் செய்தேன் மகிழ்கின்றேன்
- எய்தற் கரியசுகம் ஏய்ந்து.
- தானேதான் ஆகிஎலாம் தானாகி அலனாய்த்
- தனிப்பதியாய் விளங்கிடும்என் தந்தையைஎன் தாயை
- வானேஅவ் வான்கருவே வான்கருவின் முதலே
- வள்ளால்என் றன்பரெலாம் உள்ளாநின் றவனைத்
- தேனேசெம் பாகேஎன் றினித்திடுந்தெள் ளமுதைச்
- சிற்சபையில் பெருவாழ்வைச் சிந்தைசெய்மின் உலகீர்
- ஊனேயும் உடலழியா தூழிதொறும் ஓங்கும்
- உத்தமசித் தியைப்பெறுவீர் சத்தியம்சொன் னேனே.
- தாழைப் பழம்பிழி பாலொடு சர்க்கரைச் சாறளிந்த
- வாழைப் பழம்பசு நெய்நறுந் தேனும் மருவச்செய்து
- மாழைப் பலாச்சுளை மாம்பழம் ஆதி வடித்தளவி
- ஏழைக் களித்தனை யேஅரு ளாரமு தென்றொன்றையே.
- தாயே எனக்குத் தயவு புரிந்த தருணத் தந்தை யே
- தனியே நின்னை நினைக்கக் கிளர்வ தெனது சிந்தை யே
- நாயேன் எண்ணம் அனைத்தும் முடித்துக் கொடுத்த பண்ப னே
- நான்செய் தவத்தால் எனக்குக் கிடைத்த நல்ல நண்ப னே.
- எனக்கும் உனக்கும்
- தாங்கல் விடுதல் இரண்டும் எனக்குச் சமம தாயிற் றே
- சகத்தில் வழங்கும் மாயை வழக்குத் தவிர்ந்து போயிற் றே
- ஏங்கல் சலித்தல் இரண்டும் இன்றி இளைப்பு நீங்கி னேன்
- எந்தாய் கருணை அமுதுண் டின்பப் பொருப்பில் ஓங்கி னேன்.
- எனக்கும் உனக்கும்
- தான்அன்றி ஒன்றிலா ஜோதி - என்னைத்
- தன்மயம் ஆக்கிய சத்திய ஜோதி
- நான்இன்று கண்டதோர் ஜோதி - தானே
- நானாகி வாழ்ந்திட நல்கிய ஜோதி. சிவசிவ
- தாண்டவ னார்என்னைத் தான்தடுத் தாட்கொண்ட
- ஆண்டவ னார்இதோ அம்பலத் திருக்கின்றார் அஞ்சா தே
- தாங்கி எனைப்பெற்ற தாயாகும் பாதம்
- தந்தையு மாகித் தயவுசெய் பாதம்
- ஓங்கிஎன் னுள்ளே உறைகின்ற பாதம்
- உண்மை விளங்க உரைத்தபொற் பாதம். ஆடிய
- தாங்கும் அவளரு ளாலே நடராஜர்
- சந்நிதி கண்டேன டி - அம்மா
- சந்நிதி கண்டேன டி. ஆணி
- தானேநான் ஆனேன்என்று சின்னம் பிடி
- சத்தியம்சத் தியம்என்று சின்னம் பிடி
- ஊனே புகுந்ததென்று சின்னம் பிடி
- ஒளிவண்ணம் ஆனதென்று சின்னம் பிடி.
- தாழ்குழலாய் எனைச்சற்றே தனிக்கவிட்டால் ஞான
- சபைத்தலைவர் வருகின்ற தருணம்இது நான்தான்
- வாழ்வடைபொன் மண்டபத்தே பளிக்கறையி னூடே
- மலரணையை அலங்கரித்து வைத்திடுதல் வேண்டும்
- சூழுறநான் அலங்கரிப்பேன் என்கின்றாய் தோழி
- துரைக்குமனம் இல்லைஅது துணிந்தறிந்தேன் பலகால்
- ஏழ்கடலில் பெரிதன்றோ நான்அடைந்த சுகம்இங்
- கிதைவிடநான் செய்பணிவே றெப்பணிநீ இயம்பே.
- தாழ்குழல்நீ ஆண்மகன்போல் நாணம்அச்சம் விடுத்தே
- சபைக்கேறு கின்றாய்என் றுரைக்கின்றாய் தோழி
- வாழ்வகைஎன் கணவர்தமைப் புறத்தணைந்தாள் ஒருத்தி
- மால்எனும்பேர் உடையாள்ஓர் வளைஆழிப் படையாள்
- ஆழ்கடலில் துயில்கின்றாள் மாமணிமண் டபத்தே
- ஆள்கின்றாள் ஆண்மகனாய் அறிந்திலையோ அவரைக்
- கேழ்வகையில் அகம்புணர்ந்தேன் அவர்கருணை அமுதம்
- கிடைத்ததுநான் ஆண்மகனா கின்றததி சயமோ.
- தாயினும்பே ரருளுடையார் என்னுயிரில் கலந்த
- தனித்தலைவர் நான்செய்தபெருந் தவத்தாலே கிடைத்தார்
- வாயினும்ஓர் மனத்தினும்மா மதியினும்எத் திறத்தும்
- மதித்தளத்தற் கருந்துரிய மன்றில்நடம் புரிவார்
- ஆயினும்என் அளவின்மிக எளியர்என என்னை
- அகம்புணர்ந்தார் புறம்புணர்ந்தார் புறப்புணர்ச்சித் தருணம்
- தூயஒளி பெற்றழியா தோங்குவடி வானேன்
- சுகமயமாம் அகப்புணர்ச்சி சொல்லுவதெப் படியோ.