- துன்னும் பெருங்குடிகள் சூழ்ந்துவலஞ் செய்துவகை
- மன்னுஞ் சிறுகுடிஆன் மார்த்தமே - முன்னரசும்
- துன்னுநெறிக் கோர்துணையாந் தூயகழுக் குன்றினிடை
- முன்னுமறி வானந்த மூர்த்தமே - துன்னுபொழில்
- துள்ளலொழிந் தென்னெஞ்சஞ் சோர்ந்தழியுங் காலத்திற்
- கள்ளமென்றா லுள்ளே களித்தெழும்பும் - அள்ளனெறி
- துள்ளம் குளிர உயிர்குளிர மெய்குளிரக்
- கொள்ளும் கருணைக் குறிப்பழகும் - உள்ளறிவின்
- துங்கம் உறஉரைத்துஞ் சூழ்கின் றிலையன்பு
- பொங்கவென்றால் ஈதொன்றும் போதாதோ - தங்கியஇப்
- துற்கந்த மாகச் சுடுங்கால் முகர்ந்திருந்தும்
- நற்கந்தத் தின்பால் நடந்தனையே - புற்கென்ற
- துள்ளுறுப்பின் மட்பகைஞன் சுற்றாழி யாகவதின்
- உள்ளுறுப்பே நானென் றுரைக்கேனோ - எள்ளுறுநீ
- துண்ணவந்தால் போலுமிவண் உற்றுவிசா ரித்திடுமோர்
- எண்ணம்வந்தால் அன்றி இசையாதால் - எண்ணமது
- துற்சங்கத் தோர்கணமுந் தோயாது நின்னடியர்
- சற்சங்கத் தென்றனைநீ தான்கூட்டி - நற்சங்கக்
- காப்பான் புகழுன் கழற்புகழைக் கேட்பித்துக்
- காப்பாய் இஃதென் கருத்து.
- துற்குணத்தில் வேறு தொடர்வேன் எனினுமற்றை
- நற்குணத்தில் உன்சீர் நயப்பேன்காண் - சிற்குணத்தோய்
- கூற்றுதைத்த நின்பொற் குரைகழற்பூந் தாளறிக
- வேற்றுரைத்தே னில்லை விரித்து.
- துனியால் உளந்தளர்ந் தந்தோ துரும்பில் சுழலுகின்றேன்
- இனியா யினும்இரங் காதோநின் சித்தம்எந் தாய்இதென்ன
- அனியாய மோஎன் னளவின்நின் பால்தண் ணருளிலையோ
- சனியாம்என் வல்வினைப் போதனை யோஎன்கொல் சாற்றுவதே.
- துடிவைத்த செங்கை அரசேநல் லூரில்நின் தூமலர்ப்பொன்
- அடிவைத்த போதெங்கள் அப்பர்தம் சென்னி யதுகுளிர்ந்தெப்
- படிவைத்த தோஇன்ப மியான்எணுந் தோறும்இப் பாவிக்குமால்
- குடிவைத்த புன்தலை ஒன்றோ மனமும் குளிர்கின்றதே.
- துன்பே மிகும்இவ் அடியேன் மனத்தில்நின் துய்யஅருள்
- இன்பே மிகுவதெந் நாளோ எழிலொற்றி எந்தைஉயிர்க்
- கன்பேமெய்த் தொண்டர் அறிவே சிவநெறிக் கன்பிலர்பால்
- வன்பேமெய்ப் போத வடிவே வடிவுடை மாணிக்கமே.
- துன்ன லுடையா ரிவர்தமைநீர் துன்னும் பதிதான் யாதென்றே
- னென்ன லிரவி லெமைத்தெளிவா னின்ற நினது பெயரென்றா
- ருன்ன லுறுவீர் வெளிப்படவீ துரைப்பீ ரென்றே னுரைப்பேனே
- லின்ன லடைவா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- துதிசே ரொற்றி வளர்தரும துரையே நீர்முன் னாடலுறும்
- பதியா தென்றே னம்பெயர்முற் பகரீ ரெழுத்தைப் பறித்ததென்றார்
- நிதிசேர்ந் திடுமப் பெயர்யாது நிகழ்த்து மென்றே னீயிட்ட
- தெதுவோ வதுகா ணென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- துருமஞ் செழிக்கும் பொழிலொற்றித் தோன்றா லிங்கு நீர்வந்த
- கருமஞ் சொலுமென் றேனிவண்யாங் கடாதற் குன்பா லெம்முடைமைத்
- தருமம் பெறக்கண் டாமென்றார் தருவ லிருந்தா லென்றேனில்
- லிருமந் தரமோ வென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- துச்சிலை விரும்பித் துயர்கொளும் கொடியேன்
- துட்டனேன் தூய்மைஒன் றில்லா
- எச்சிலை அனையேன் பாவியேன் என்னை
- என்செய்தால் தீருமோ அறியேன்
- பச்சிலை இடுவார் பக்கமே மருவும்
- பரமனேஎம் பசு பதியே
- அச்சிலை விரும்பும் அவருளத் தமுதே
- ஐயனே ஒற்றியூர் அரைசே.
- துப்புநேர் இதழி மகிழ்ந்தகல் யாண
- சுந்தரா சுந்தரன் தூதா
- மைப்பொதி மிடற்றாய் வளர்திரு முல்லை
- வாயில்வாழ் மாசிலா மணியே
- அப்பனே உன்னை விடுவனோ அடியேன்
- அறிவிலேன் எனினுநின் கோயிற்
- கெய்ப்புடன் வந்தால் வாஎன உரையா
- திருப்பதுன் திருவருட் கியல்போ.
- துன்னும் மாமருந் தேசுட ரேஅருள்
- மன்னும் மாணிக்க மேவல்லி கேசரே
- துன்னு கந்தையைச் சுற்றிநிற் பீர்எனில்
- என்ன நீர்எமக் கீயும்ப ரிசதே.
- துளிக்கும் கண்ணுடன் சோர்வுற நெஞ்சம்
- தோன்ற லேஉமைத் துணைஎன நம்பி
- வளிக்குள் பஞ்சனை யேன்அடைந் தேற்றால்
- வாய்தி றந்தொரு வார்த்தையும் சொல்லீர்
- அளிக்கும் தன்மையீர் வாழ்ந்திவண் இருக்க
- அடிய னேன்அலை கின்றதும் அழகோ
- ஒளிக்கும் தன்மைதான் உமக்கும்உண் டேயோ
- ஓங்கு சீர்ஒற்றி யூர்உடை யீரே.
- துரும்பினேன் பிழையைத் திருவுளத் தடையேல் துய்யநின் அருட்கடல் ஆட
- விரும்பினேன் ஐயோ கைவிடில் சிவனே வேறுநான் யாதுசெய் வேனே
- கரும்பின்நேர் மொழியார் இருவரை மணக்கும் கனிதனை அளித்தகற் பகமே
- இரும்பின்நேர் நெஞ்சர் எனினும்என் போல்வார்க் கின்அருள் தரும்ஒற்றி இறையே.
- துங்க வெண்பொடி அணிந்துநின் கோயில்
- தொழும்பு செய்துநின் துணைப்பதம் ஏத்திச்
- செங்கண் மால்அயன் தேடியும் காணாச்
- செல்வ நின்அருள் சேர்குவ தென்றோ
- எங்கள் உள்ளுவந் தூறிய அமுதே
- இன்ப மேஇமை யான்மகட் கரசே
- திங்கள் தங்கிய சடையுடை மருந்தே
- திகழும் ஒற்றியூர்ச் சிவபெரு மானே.
- துன்னும் சோம சுந்தரனார் தூய மதுரை நகர்அளித்த
- தென்னர் பெருமான் சிவபெருமான் தியாகப் பெருமான் திருஅழகைப்
- பன்னும் ஒற்றி நகர்தன்னில் பார்த்தேன் வினைபோம் வழிபார்த்த
- என்னை மறந்தேன் அம்மாநான் என்ன தவந்தான் செய்தேனோ.
- துன்ப வாழ்வினைச் சுகம்என மனனே
- சூழ்ந்து மாயையுள் ஆழ்ந்துநிற் கின்றாய்
- வன்ப தாகிய நீயும்என் னுடனே
- வருதி யோஅன்றி நிற்றியோ அறியேன்
- ஒன்ப தாகிய உருவுடைப் பெருமான்
- ஒருவன் வாழ்கின்ற ஒற்றியூர்க் கின்றே
- இன்ப வாழ்வுறச் செல்கின்றேன் உனக்கும்
- இயம்பி னேன்பழி இல்லைஎன் மீதே.
- துணையிலேன் நினது திருவடி அல்லால் துட்டனேன் எனினும் என் தன்னை
- இணையிலாய் உனது தொண்டர்தம் தொண்டன் எனச்செயல் நின்அருள் இயல்பே
- அணையிலா தன்பர் உள்ளகத் தோங்கும் ஆனந்த வெள்ளமே அரசே
- பணையில்வா ளைகள்பாய் ஒற்றியம் பதியில் பரிந்தமர்ந் தருள்செயும் பரமே.
- துனியே பிறத்தற் கேதுஎனும் துட்ட மடவார் உள்ததும்பும்
- பனிஏய் மலம்சூழ் முடைநாற்றப் பாழும் குழிக்கே வீழ்ந்திளைத்தேன்
- இனிஏ துறுமோ என்செய்கேன் எளியேன் தனைநீ ஏன்றுகொளாய்
- கனியே கருணைக் கடலேஎன் கண்ணே ஒற்றிக் காவலனே.
- துள்ளிவாய் மடுக்கும் காளையர் ஆட்டத் துடுக்கினை ஒடுக்குறும் காமக்
- கொள்ளிவாய்ப் பேய்கள் எனுமட வியர்தம் கூட்டத்துள் நாட்டம்வைத் துழன்றேன்
- உள்ளிவாய் மடுத்துள் உருகிஆ னந்த உததிபோல் கண்கள்நீர் உகுப்பார்
- அள்ளிவாய் மடுக்கும் அமுதே எங்கள் அண்ணலே ஒற்றியூர் அரசே.
- துன்பே சுமையாச் சுமக்கின்ற நாயேனை
- வன்பேசெய் துள்ள மயக்கிநின்ற வன்நோயை
- இன்பே அருள்கின்ற என்ஆ ருயிரேஎன்
- அன்பேநீ நீக்காயேல் ஆர்நீக்க வல்லாரே.
- துணையாம்உன் பொன்னடி ஏத்தா மனமது தோகையர்கண்
- கணையால் இளைக்கின்ற தென்னைசெய் கேன்என்றன் கண்இரண்டின்
- இணையாம் பரஞ்சுட ரேஅழி யாநல மேஇன்பமே
- பணையார் திருவொற்றி யூர்அர சேஎம் பரம்பொருளே.
- துட்ட நெஞ்சக வஞ்சகக் கொடியேன்
- சொல்வ தென்னைஎன் தொல்வினை வசத்தால்
- இட்ட நல்வழி அல்வழி எனவே
- எண்ணும் இவ்வழி இரண்டிடை எனைநீ
- விட்ட தெவ்வழி அவ்வழி அகன்றே
- வேறும் ஓர்வழி மேவிடப் படுமோ
- சிட்டர் உள்ளுறும் சிவபெரு மான்நின்
- சித்தம் அன்றியான் செய்வதொன் றிலையே.
- துறையிடும் கங்கைச் செழுஞ்சடைக் கனியே
- சுயம்பிர காசமே அமுதில்
- கறையிடும் கண்டத் தொருபெருங் கருணைக்
- கடவுளே கண்ணுதற் கரும்பே
- குறையிடும் குணத்தால் கொடியனேன் எனினும்
- கொடுந்துய ரால்அலைந் தையா
- முறையிடு கின்றேன் அருள்தரா தென்னை
- மூடன்என் றிகழ்வது முறையோ.
- துன்னுடைய வியாக்கிரமத் தோலுடையான் தானிருக்கப்
- பொன்னுடையார் பக்கம் புகுவானேன் என்றிருப்பேன்
- தன்னுடைய துன்பம் தவிர்த்திங் கருளாயேல்
- என்னுடையாய் மற்றிங் கெனக்கார் இரங்குவரே.
- துன்றியமா பாதகத்தோன் சூழ்வினையை ஓர்கணத்தில்
- அன்றுதவிர்த் தாண்ட அருட்கடல்நீ என்றடுத்தேன்
- கன்றுறும்என் கண்கலக்கம் கண்டும் இரங்காயேல்
- என்றும்உளாய் மற்றிங் கெவர்தான் இரங்குவரே.
- துணைமுலை மடந்தை எம்பெரு மாட்டி
- துணைவநின் துணையடி போற்றி
- புணைஎன இடரின் கடலினின் றேற்றும்
- புனிதநின் பொன்னடி போற்றி
- இணையில்பே ரின்ப அமுதருள் கருணை
- இறைவநின் இணையடி போற்றி
- கணைஎனக் கண்ணன் தனைக்கொளும் ஒருமுக்
- கண்ணநின் கழலடி போற்றி.
- துட்ட வஞ்சக நெஞ்சக மேஒன்று சொல்லக் கேள்கடல் சூழ்உல கத்திலே
- இட்டம் என்கொல் இறையள வேனும்ஓர் இன்பம் இல்லை இடைக்கிடை இன்னலால்
- நட்ட மிக்குறல் கண்டுகண் டேங்கினை நாணு கின்றிலை நாய்க்குங் கடையைநீ
- பட்ட வன்மைகள் எண்ணில் எனக்குடல் பதைக்கும் உள்ளம் பகீல்என ஏங்குமே.
- அறுசீர்க்21 கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- துடிசேர் கரத்தார் ஒற்றியில்வாழ் சோதி வெண்ற் றழகர்அவர்
- கடிசேர்ந் தென்னை மாலையிட்ட கடனே அன்றி மற்றவரால்
- பிடிசேர் நடைநேர் பெண்களைப்போல் பின்னை யாதும் பெற்றறியேன்
- கொடிநேர் இடையாய் என்னடிஎன் குறையை எவர்க்குக் கூறுவனே.
- துத்திப் படத்தார் சடைத்தலையார் தொலையாப் பலிதேர் தொன்மையினார்
- முத்திக் குடையார் மண்எடுப்பார் மொத்துண் டுழல்வார் மொய்கழற்காம்
- புத்திக் குரிய பத்தர்கள்தம் பொருளை உடலை யாவையுமே
- எத்திப் பறிப்பார் மகளேநீ ஏதுக் கவரை விழைந்தனையே.
- துதிசெய் அடியர் தம்பசிக்குச் சோறும் இரப்பார் துய்யர்ஒரு
- நதிசெய் சடையார் திருஒற்றி நண்ணும் எனது நாயகனார்
- மதிசெய் துயரும் மதன்வலியும் மாற்ற இன்னும் வந்திலரே
- சதிசெய் தனரோ என்னடிஎன் சகியே இனிநான் சகியேனே.
- துப்பாடு திருமேனிச் சோதிமணிச் சுடரே
- துரியவெளிக் குள்ளிருந்த சுத்தசிவ வெளியே
- அப்பாடு சடைமுடிஎம் ஆனந்த மலையே
- அருட்கடலே குருவேஎன் ஆண்டவனே அரசே
- இப்பாடு படஎனக்கு முடியாது துரையே
- இரங்கிஅருள் செயல்வேண்டும் இதுதருணங் கண்டாய்
- தப்பாடு வேன்எனினும் என்னைவிடத் துணியேல்
- தனிமன்றுள் நடம்புரியுந் தாண்மலர்எந் தாயே.
- துரியவெளி தனிற்பரம நாதஅணை நடுவே
- சுயஞ்சுடரில் துலங்குகின்ற துணையடிகள் வருந்தப்
- பிரியமொடு நடந்தெளியேன் இருக்குமிடந் தேடிப்
- பெருங்கதவந் திறப்பித்துப் பேயன்எனை அழைத்து
- உரியபொருள் ஒன்றெனது கையில்அளித் திங்கே
- உறைகமகிழ்ந் தெனஉரைத்த உத்தமநின் னருளைப்
- பெரியபொரு னெவற்றினுக்கும் பெரியபொரு ளென்றே
- பின்னர்அறிந் தேன்இதற்கு முன்னர்அறி யேனே.
- துலைக்கொடிநன் கறியோதே துணைஅருளோ டூடித்
- துரிசுபுகன் றேன்கருணைப் பரிசுபுகன் றறியேன்
- புலைக்கொடியேன் புகன்றபிழை பொறுத்தருளல் வேண்டும்
- பொங்குதிரைக் கங்கைமதி தங்கியசெஞ் சடையாய்
- மலைக்கொடிஎன் அம்மைஅருள் மாதுசிவ காம
- வல்லிமறை வல்லிதுதி சொல்லிநின்று காணக்
- கலைக்கொடிநன் குணர்முனிவர் கண்டுபுகழ்ந் தேத்தக்
- கனகசபை தனில்நடிக்குங் காரணசற் குருவே.
- துதிபெறும் காசி நகரிடத் தனந்தம் தூயநல் உருவுகொண் டாங்கண்
- விதிபெறும் மனைகள் தொறும்விருந் தினனாய் மேவிய கருணையை மறவேன்
- நதிபெறும் சடிலப் பவளநற் குன்றே நான்மறை நாடரு நலமே
- மதிபெறும் உளத்தில் பதிபெறும் சிவமே வல்லபைக் கணேசமா மணியே.
- துன்னும் மறையின் முடிவில்ஒளிர் தூய விளக்கே சுகப்பெருக்கே
- அன்னை அனையாய் தணிகைமலை அண்ணா உன்றென் ஆறெழுத்தை
- உன்னி மனத்தின் உச்சரித்திங் குயர்ந்த திருவெண்ணீறிட்டால்
- சென்னி அணியாய் அடிசேரும் தீமை ஒன்றும் சேராதே.
- துன்பி னால்அகம் வெதும்பிநைந் தயர்ந்துநின் துணைஅடி மலர்ஏத்தும்
- அன்பி லாதஇப் பாவியேன் செய்பிழை அனைத்தையும் பொறுப்பாயேல்
- வன்பி லாதநின் அடியவர் தம்திரு மனத்தினுக் கென்னாமோ
- இன்பி னால்சுரர் போற்றிடும் தணிகைவாழ் இறைவனே எம்மானே.
- துட்ட நெஞ்சினேன் எட்டியை அனையேன்
- துயர்செய் மாதர்கள் சூழலுள் தினமும்
- பட்ட வஞ்சனேன் என்செய உதித்தேன்
- பாவி யேன்எந்தப் பரிசுகொண் டடைவேன்
- நட்டம் ஆடிய நாயகன் அளித்த
- நல்ல மாணிக்க நாயக மணியே
- மட்ட றாப்பொழில் சூழ்திருத் தணிகை
- வள்ள லேமயில் வாகனத் தேவே
- துயில்ஏறிய சோர்வும்கெடும் துயரம்கெடும் நடுவன்
- கையில்ஏறிய பாசம்துணி கண்டேமுறித் திடுமால்
- குயில்ஏறிய பொழில்சூழ்திருக் குன்றேறி நடக்கும்
- மயில்ஏறிய மணியேஎன வளர்நீறணிந் திடிலே.
- துடிஎன்னும் இடைஅனம் பிடிஎன்னும் நடைமுகில்
- துணைஎனும் பிணையல்அளகம்
- சூதென்னும் முலைசெழுந் தாதென்னும் அலைபுனல்
- சுழிஎன்ன மொழிசெய்உந்தி
- வடிஎன்னும் விழிநிறையும் மதிஎன்னும் வதனம்என
- மங்கையர்தம் அங்கம்உற்றே
- மனம்என்னும் ஒருபாவி மயல்என்னும் அதுமேவி
- மாழ்கநான் வாழ்கஇந்தப்
- படிஎன்னும் ஆசையைக் கடிஎன்ன என்சொல்இப்
- படிஎன்ன அறியாதுநின்
- படிஎன்ன என்மொழிப் படிஇன்ன வித்தைநீ
- படிஎன்னும் என்செய்குவேன்
- தடிதுன்னும் மதில்சென்னை கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- துனியும் பிறவித் தொடுவழக்குஞ் சோர்ந்து விடவுந் துரியவெளிக்
- கினியும் பருக்குங் கிடையாத இன்பம் அடைந்தே இருந்திடவும்
- பனியுந் திமய மலைப்பச்சைப் படர்ந்த பவளப் பருப்பதத்தைக்
- கனியுஞ் சிலையுங் கலந்தஇடம்160 எங்கே அங்கே கண்டேனே.
- துதிபெறு கணபதி இணையடி மலரும்
- பதிதரு சரவண பவன்மல ரடியுங்
- கதிதரு பரசிவன்இயலணி கழலும்
- மதியுற மனனிடை மருவுது மிகவே.
- துன்னுகின்ற தீமைநின்பாற் சூழ்ந்துரைக்குந் தோறுமதை
- உன்னுகின்ற போதிலெனக் கூடுருவிப் போகுதடா.
- துன்புடையேன் புன்மொழிகள் தூற்றியதை யெவ்வுயிர்க்கும்
- அன்புடையா யெண்ணிலெனக் கஞ்சுங் கலங்குதடா.
- துரியமுங் கடந்த சுகபூ ரணந்தரும்
- அரியசிற் றம்பலத் தருட்பெருஞ் ஜோதி
- துன்பறுத் தொருசிவ துரிய சுகந்தனை
- அன்பருக் கேதரு மருட்பெருஞ் ஜோதி
- துரிசறு கருவிகள் சுத்தநல் வெளியிடை
- அரசுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- துணையு நிமித்தமுந் துலங்கதி னதுவும்
- அணைவுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- துன்பளித் தாங்கே சுகமளித் துயிர்களை
- அன்புறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
- துன்பந் தொலைத்தருட் ஜோதியால் நிறைந்த
- இன்ப மெனக்கரு ளெழிற்சிவ பதியே
- துய்ப்பினி லனைத்துஞ் சுகம்பெற வளித்தெனக்
- கெய்ப்பெலாந் தவிர்த்த வின்புடைத் தாயே
- துன்பெலாந் தவிர்த்துளே யன்பெலாம் நிரம்ப
- இன்பெலா மளித்த வென்றனித் தந்தையே
- துரியவாழ் வுடனே சுகபூ ரணமெனும்
- பெரியவாழ் வளித்த பெருந்தனித் தந்தையே
- துறையிது வழியிது துணிவிது நீசெயும்
- முறையிது வெனவே மொழிந்தமெய்த் துணையே
- துன்னு மனாதியே சூழ்ந்தெனைப் பிரியா
- தென்னுற வாகிய வென்னுயி ருறவே
- துரியமுங் கடந்ததோர் பெரியவான் பொருளென
- உரைசெய் வேதங்க ளுன்னுமெய்ச் சத்தே
- துன்புள வனைத்துந் தொலைத்தென துருவை
- யின்புறு வாக்கிய என்னுடை யன்பே
- துன்புறு தத்துவத் துரிசெலா நீக்கிநல்
- லின்புற வென்னுளத் தேற்றிய விளக்கே
- துருக்க லோகொடுங் கருங்கலோ வயிரச்
- சூழ்க லோஎனக் காழ்கொளும் மனத்தேன்
- தருக்கல் ஆணவக் கருக்கலோ டுழல்வேன்
- சந்தை நாயெனப் பந்தமுற் றலைவேன்
- திருக்கெ லாம்பெறு வெருக்கெனப்199 புகுவேன்
- தீய னேன்பெரும் பேயனேன் உளந்தான்
- உருக்கல் ஆகுதற் கென்செயக் கடவேன்
- உடைய வாஎனை உவந்துகொண் டருளே.
- துண்ணெனக் கொடியோர் பிறவுயிர் கொல்லத் தொடங்கிய போதெலாம் பயந்தேன்
- கண்ணினால் ஐயோ பிறஉயிர் பதைக்கக் கண்டகா லத்திலும் பதைத்தேன்
- மண்ணினில் வலையும் தூண்டிலும் கண்ணி வகைகளும் கண்டபோ தெல்லாம்
- எண்ணிஎன் உள்ளம் நடுங்கிய நடுக்கம் எந்தைநின் திருவுளம்223 அறியும்.
- துரியநிலை துணிந்தவரும் சொல்லரும்மெய்ப் பொருளே
- சுத்தசிவா னந்தசபைச் சித்தசிகா மணியே
- பெரியசிவ பதியேநின் பெருமைஅறிந் திடவே
- பேராசைப் படுகின்றேன் பித்தர்களில் பெரியேன்
- கரியமணித் திறத்தினையும் காணவல்லேன் அல்லேன்
- கண்மணியே நின்திறத்தைக் காணுதல்வல் லேனோ
- அரியபெரும் பொருளாம்உன் அருட்சோதி எனக்கே
- அளித்தனையேல் அறிந்துகொள்வேன் அளித்திடுக விரைந்தே.
- துன்பெலாம் தவிர்க்கும் திருச்சிற்றம் பலத்தே
- சோதியுட் சோதியே அழியா
- இன்பெலாம் அளிக்கும் இறைவனே என்னை
- ஈன்றநல் தந்தையே தாயே
- அன்பெலாம் ஆகி நிறைந்ததோர் நிறைவே
- அண்ணலே இனிப்பிரி வாற்றேன்
- பொன்பதந் தருதற் கிதுதகு தருணம்
- புணர்ந்தருள் புணர்ந்தருள் எனையே.
- தும்மினேன் வெதும்பித் தொட்டிலிற் கிடந்தே
- சோர்ந்தழு திளைத்துமென் குரலும்
- கம்மினேன் செவிலி அம்மிபோல் அசையாள்
- காதுறக் கேட்டிருக் கின்றாள்
- செம்மியே மடவார் கொம்மியே பாடிச்
- சிரித்திருக் கின்றனர் அந்தோ
- இம்மியே எனினும் ஈந்திடார் போல
- இருப்பதோ நீயும்எந் தாயே.
- துருவிலா வயிரத் தொட்டிலே தங்கத்
- தொட்டிலே பலஇருந் திடவும்
- திருவிலாப் பொத்தைத் தொட்டிலிற் செவிலி
- சிறியனைக் கிடத்தினள் எந்தாய்
- பிரிவிலாத் தனிமைத் தலைவநீ பெற்ற
- பிள்ளைநான் எனக்கிது பெறுமோ
- கருவிலாய் நீஇத் தருணம்வந் திதனைக்
- கண்டிடில் சகிக்குமோ நினக்கே.
- துனித்தவெம் மடவார் பகல்வந்த போது
- துறவியின் கடுகடுத் திருந்தேன்
- தனித்திர வதிலே வந்தபோ தோடித்
- தழுவினேன் தடமுலை விழைந்தேன்
- இனித்தசொல் புகன்றேன் என்பினைக் கறித்தே
- இடர்ப்பட்ட நாயென இளைத்தேன்
- நனித்தவ றுடையேன் என்னினும் உனையே
- நம்பினேன் கைவிடேல் எனையே.
- துன்பெலாம் தவிர்த்த துணையைஎன் உள்ளத்
- துரிசெலாந் தொலைத்தமெய்ச் சுகத்தை
- என்பொலா மணியை என்சிகா மணியை
- என்னிரு கண்ணுள்மா மணியை
- அன்பெலாம் அளித்த அம்பலத் தமுதை
- அருட்பெருஞ் ஜோதியை அடியேன்
- என்பெலாம் உருக்கி இன்பெலாம் அளித்த
- எந்தையைக் கண்டுகொண் டேனே.
- துன்புறேல் மகனே தூங்கலை எனஎன்
- சோர்வெலாந் தவிர்த்தநற் றாயை
- அன்புளே கலந்த தந்தையை என்றன்
- ஆவியைப் பாவியேன் உளத்தை
- இன்பிலே நிறைவித் தருள்உரு வாக்கி
- இனிதமர்ந் தருளிய இறையை
- வன்பிலாக் கருணை மாநிதி எனும்என்
- வள்ளலைக் கண்டுகொண் டேனே.
- துதிவளர் திருச்சிற் றம்பலத் தாடும்
- சோதியுட் சோதியே எனது
- மதிவளர் மருந்தே மந்திர மணியே
- மன்னிய பெருங்குண மலையே
- கதிதரு துரியத் தனிவெளி நடுவே
- கலந்தர சாள்கின்ற களிப்பே
- பதியுறும் உளத்தே இனித்திட எனக்கே
- பழுத்தபே ரானந்தப் பழமே.
- துன்பெலாம் தவிர்த்த துணைவனே என்கோ
- சோதியுட் சோதியே என்கோ
- அன்பெலாம் அளித்த அன்பனே என்கோ
- அம்மையே அப்பனே என்கோ
- இன்பெலாம் புரிந்த இறைவனே என்கோ
- என்உயிர்க் கின்னமு தென்கோ
- என்பொலா மணியே என்கணே என்கோ
- என்னுயிர் நாதநின் றனையே.
- துப்பார் செஞ்சடை யாய் - அருட் - சோதிச் சுகக்கட லே
- செப்பா மேனிலைக் கே - சிறி - யேனைச் செலுத்திய வா
- எப்பா லும்புக ழும் - பொது - இன்ப நடம்புரி யும்
- அப்பா தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே.
- துப்பார் செஞ்சுடரே - அருட் - சோதி சுகக்கட லே
- அப்பா என்னர சே - திரு - வம்பலத் தாரமு தே
- இப்பா ரிற்பசிக் கே - தந்த - இன்சுவை நல்லுண வே
- ஒப்பாய் ஒப்பரி யாய் - எனக் - குண்மை உரைத்தரு ளே.
- துரும்பினில் சிறியேன் வஞ்சம் சூழ்ந்தநெஞ் சகத்தேன் செய்த
- பெரும்பிழை அனைத்தும் அந்தோ பெருங்குண மாகக்கொண்டாய்
- அரும்பொருள் என்ன வேதம் ஆகமம் வழுத்து கின்ற
- கரும்பினில் இனியாய் உன்றன் கருணைஎன் னென்பேன் அந்தோ.
- துப்பார் கனகப் பொதுவில்நடத் தொழிலால் உலகத் துயர்ஒழிக்கும்
- வைப்பாம் இறைவா சிவகாம வல்லிக் கிசைந்த மணவாளா
- ஒப்பார் உயர்ந்தார் இல்லாத ஒருவா எல்லாம் உடையானே
- அப்பா அரசே இனிச்சிறிதும் ஆற்ற மாட்டேன் கண்டாயே.
- துற்குண மாயைபோய்த் தொலைந்தது ஞானம்
- தோன்றிடப் பொன்னொளி தோற்றிய கதிர்தான்
- சிற்குண வரைமிசை உதயஞ்செய் ததுமா
- சித்திகள் அடிப்பணி செய்திடச் சூழ்ந்த
- நற்குணச் சன்மார்க்க சங்கத்தார் எல்லாம்
- நண்ணினர் தோத்திரம் பண்ணிநிற் கின்றார்
- எற்குண வளித்தஎன் அருட்பெருஞ் சோதி
- என்னம்மை யேபள்ளி எழுந்தருள் வாயே.
- துன்பம் தவிர்ந்தது தூக்கம் தொலைந்தது
- இன்பம் கிடைத்ததென்று உந்தீபற
- எண்ணம் பலித்ததென்று உந்தீபற.
- துதிபெறும் அயனோ டரிஅரன் முதலோர்
- சூழ்ந்துசூழ்ந் திளைத்தொரு தங்கள்
- விதியைநொந் தின்னும் விழித்திருக் கின்றார்
- விழித்திருந் திடவும்நோ வாமே
- மதியிலேன் அருளால் சுத்தசன் மார்க்க
- மன்றிலே வயங்கிய தலைமைப்
- பதிபதம் பெற்றேன் எனக்கிது போதும்
- பண்ணிய தவம்பலித் ததுவே.
- துரியபதம் அடைந்தபெருஞ் சுத்தர்களும் முத்தர்களும் துணிந்து சொல்லற்
- கரியபதம் எனக்களித்தான் அம்பலத்தில் ஆடுகின்றான் அந்தோ அந்தோ.
- துன்பமெலாம் ஒருகணத்தில் தொலைத்தருளி எந்நாளும் சுகத்தில் ஓங்க
- அன்புடையான் அம்பலத்தான் அருட்சோதி எனக்களித்தான் அந்தோ அந்தோ.
- துரியத்திற் கப்பாலுந் தோன்றும் பொதுவில்
- ஜோதித் திருநடம் நான்காணல் வேண்டும்
- கரியைக்கண் டாங்கது காண்பாயோ தோழி
- காணாது போய்ப்பழி290 பூண்பாயோ தோழி.
- துனிநாள் அனைத்தும் தொலைத்துவிட்டேன் தூக்கம் தவிர்த்தேன் சுகம்பலிக்கும்
- கனிநாள் இதுவே என்றறிந்தேன் கருத்து மலர்ந்தேன் களிப்புற்றேன்
- தனிநா யகனே கனகசபைத் தலைவா ஞான சபாபதியே
- இனிநான் இறையும் கலக்கமுறேன் இளைக்க மாட்டேன் எனக்கருளே.
- துன்பமெலாம் தீர்ந்த சுகமெல்லாம் கைதந்த
- அன்பரெலாம் போற்ற அருள்நடஞ்செய் - இன்பன்
- அருட்பெருஞ்சிற் சோதிதிரு அம்பலத்தான் வேதப்
- பொருட்பெருஞ்சித் தென்னுட் புகுந்து.
- துன்பம் கெடுத்துச் சுகங்கொடுத்தான் என்தனக்கே
- அன்பகத்தில் வாழும்சிற் றம்பலத்தான் - இன்புருவம்
- தாங்கினேன் சாகாத் தனிவடிவம் பெற்றொளியால்
- ஓங்கினேன் உண்மை உரை.
- துன்பெலாந் தீர்ந்தன சுகம்பலித் ததுநினைச்
- சூழ்ந்ததருள் ஒளிநிறைந்தே
- சுத்தசன் மார்க்கநிலை அனுபவம் நினக்கே
- சுதந்தரம தானதுலகில்
- வன்பெலாம் நீக்கிநல் வழியெலாம் ஆக்கிமெய்
- வாழ்வெலாம் பெற்றுமிகவும்
- மன்னுயிர் எலாம்களித் திடநினைத் தனைஉன்றன்
- மனநினைப் பின்படிக்கே
- அன்பநீ பெறுகஉல வாதுநீ டூழிவிளை
- யாடுக அருட்சோதியாம்
- ஆட்சிதந் தோம்உனைக் கைவிடோம் கைவிடோம்
- ஆணைநம் ஆணைஎன்றே
- இன்புறத் திருவாக் களித்தெனுள் ளேகலந்
- திசைவுடன் இருந்தகுருவே
- எல்லாஞ்செய் வல்லசித் தாகிமணி மன்றினில்
- இலங்குநட ராஜபதியே.
- துன்புறு மனத்தனாய் எண்ணாத எண்ணிநான்
- சோர்ந்தொரு புறம்படுத்துத்
- தூங்குதரு ணத்தென்றன் அருகிலுற் றன்பினால்
- தூயதிரு வாய்மலர்ந்தே
- இன்புறு முகத்திலே புன்னகை ததும்பவே
- இருகைமலர் கொண்டுதூக்கி
- என்றனை எடுத்தணைத் தாங்குமற் றோரிடத்
- தியலுற இருத்திமகிழ்வாய்
- வன்பறு பெருங்கருணை அமுதளித் திடர்நீக்கி
- வைத்தநின் தயவைஅந்தோ
- வள்ளலே உள்ளுதொறும் உள்ளக மெலாம்இன்ப
- வாரிஅமு தூறிஊறித்
- துன்பம்அற மேற்கொண்டு பொங்கித் ததும்பும்இச்
- சுகவண்ணம் என்புகலுவேன்
- துரியவெளி நடுநின்ற பெரியபொரு ளேஅருட்
- சோதிநட ராஜகுருவே.
- துரிய மேல்பர வெளியிலே சுகநடம் புரியும்
- பெரிய தோர்அருட் சோதியைப் பெறுதலே எவைக்கும்
- அரிய பேறுமற் றவைஎலாம் எளியவே அறிமின்
- உரிய இம்மொழி மறைமொழி சத்தியம் உலகீர்.
- துன்மார்க்க நடையிடைத் தூங்குகின் றீரே
- தூக்கத்தை விடுகின்ற துணைஒன்றும் கருதீர்
- சன்மார்க்க சங்கத்தைச் சார்ந்திட விழையீர்
- சாவையும் பிறப்பையும் தவிர்ந்திட விரும்பீர்
- பன்மார்க்கம் செல்கின்ற படிற்றுளம் அடக்கீர்
- பசித்தவர் தம்முகம் பார்த்துண வளியீர்
- என்மார்க்கம் எச்சுகம் யாதுநும் வாழ்க்கை
- எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே.
- துன்மார்க்கம் எல்லாம் தொலைத்துவிட்டேன் சுத்தசிவ
- சன்மார்க்க சங்கம் தலைப்பட்டேன் - என்மார்க்கம்
- நன்மார்க்கம் என்றேவான் நாட்டார் புகழ்கின்றார்
- மன்மார்க்கத் தாலே மகிழ்ந்து.
- துணைவா அபயம் துயர்அகல என்பால்
- அணைவா அபயம் அபயம் - பணைவாய்
- வடலா அபயம் வரதா அபயம்
- நடநாய காஅபயம் நான்.
- துஞ்சாத நிலைஒன்று சுத்தசன் மார்க்கச்
- சூழலில் உண்டது சொல்லள வன்றே
- எஞ்சாத அருளாலே யான்பெற்றுக் கொண்டேன்
- இறந்தாரை எல்லாம் எழுப்புதல் வல்லேன்
- விஞ்சாத அறிவாலே தோழிநீ இங்கே
- வேதுசெய் மரணத்துக் கெதுசெய்வோ மென்றே
- அஞ்சாமல் என்னோடே ஆடேடி பந்து
- அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி
- துதிசெயும் முத்தரும் சித்தரும் காணச்
- சுத்தசன் மார்க்கத்தில் உத்தம ஞானப்
- பதிசெயும் சித்திகள் பற்பல வாகப்
- பாரிடை வானிடைப் பற்பல காலம்
- விதிசெயப் பெற்றனன் இன்றுதொட் டென்றும்
- மெய்யருட் சோதியால் விளைவிப்பன் நீஅவ்
- அதிசயம் பார்க்கலாம் ஆடேடி பந்து
- அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி
- ஆடேடி பந்து ஆடேடி பந்து
- அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து.
- துரியத் தலமூன்றின் மேலே - சுத்த
- துரியப் பதியில் அதுஅத னாலே
- தெரியத் தெரிவது பாரீர் - திருச்
- சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
- துய்யர் அருட்பெருஞ் ஜோதியார் நம்முடை
- அய்யர் இதோதிரு வம்பலத் திருக்கின்றார் அஞ்சா தே
- துரிய வெளிக்கே உரியபொற் பாதம்
- சுகமய மாகிய சுந்தரப் பாதம்
- பெரிய பொருளென்று பேசும்பொற் பாதம்
- பேறெல்லாந் தந்த பெரும்புகழ்ப் பாதம். ஆடிய
- துள்ளலை விட்டுத் தொடங்கினேன் மன்றாடும்
- வள்ளலைக் கண்டேன டி - அக்கச்சி
- வள்ளலைக் கண்டேன டி.
- துரியமலைமேல்உளதோர் சோதிவள நாடு
- தோன்றும்அதில் ஐயர்நடம் செய்யுமணி வீடு
- தெரியும்அது கண்டவர்கள் காணில்உயி ரோடு
- செத்தவர் எழுவார்என்று கைத்தாளம் போடு.
- துதிவேத உறவே சுகபோத நறவே
- துனிதீரும் இடமே தனிஞான நடமே
- நதியார நிதியே அதிகார பதியே
- நடராஜ குருவே நடராஜ குருவே.
- துரியபதம் கடந்தபெருஞ் சோதிவரு கின்றார்
- சுகவடிவந் தரஉயிர்க்குத் துணைவர்வரு கின்றார்
- பெரியபிர மாதியர்க்கும் அரியர் வருகின்றார்
- பித்தர்என மறைபுகலும் சித்தர்வரு கின்றார்
- இரிவகல்சிற் சபைநடஞ்செய் இறைவர்வரு கின்றார்
- என்றுதிரு நாதஒலி இசைக்கின்ற தம்மா
- உரிமைபெறும் என்தோழி நீயும்இங்கே சின்ன
- ஒலிகேட்டுக் களித்திடுவாய் உளவாட்டம் அறவே.
- துடியேறும் இடைஉனக்கு வந்தஇறு மாப்பென்
- சொல்என்றாய் அரிபிரமர் சுரர்முனிவர் முதலோர்
- பொடிஏறு வடிவுடையார் என்கணவர் சபையின்
- பொற்படிக்கீழ் நிற்பதுபெற் றப்பரிசு நினைந்தே
- இடிஏறு போன்றிறுமாந் திருக்கின்றா ரடிநான்
- எல்லாரும் அதிசயிக்க ஈண்டுதிருச் சபையின்
- படிஏறித் தலைவர்திரு அடிஊறும் அமுதம்
- பருகுகின்றேன் இறுமாக்கும் பரிசுரைப்ப தென்னே.
- துருவுபர சாக்கிரத்தைக் கண்டுகொண்டேன் பரம
- சொப்பனங்கண் டேன்பரம சுழுத்தியுங்கண் டுணர்ந்தேன்
- குருபிரம சாக்கிரத்தைக் கண்டேன்பின் பிரமம்
- குலவியசொப் பனங்கண்டேன் சிவசுழுத்தி கண்டேன்
- குருதுரியம் காண்கின்றேன் சமரசசன் மார்க்கம்
- கூடினேன் பொதுவில்அருட் கூத்தாடும் கணவர்
- மருவிடப்பெற் றவர்வடிவம் நான்ஆனேன் களித்து
- வாழ்கின்றேன் எதிர்அற்ற வாழ்க்கையில்என் தோழி.