- தேரையூர்ச் செங்கதிர்போற் செம்மணிக ணின்றிலங்கும்
- நாரையூர் மேவு நடுநிலையே - பாரில்
- தேந்துறையி லன்னமகிழ் சேக்கை பலநிலவு
- மாந்துறைவாழ் மாணிக்க மாமலையே - ஏந்தறிவாம்
- தேனைக்கா வுள்மலர்கள் தேங்கடலென் றாக்குவிக்கும்
- ஆனைக்கா மேவியமர் அற்புதமே - மானைப்போல்
- தேரோண மட்டுந் திகழ்குடந்தை மட்டுமின்றிக்
- காரோண மட்டுங் கமழ்மலரே - சீரோங்கும்
- தேக்கும் வரகுணனாந் தென்னவன்கண் சூழ்பழியைப்
- போக்கும் இடைமருதிற் பூரணமே - நீக்கமிலா
- தேரூ ரணிவீதிச் சீரூர் மணிமாட
- ஆரூரி லெங்கள் அருமருந்தே - நீரூர்ந்த
- தேவனூ ரென்று திசைமுகன்மால் வாழ்த்துகின்ற
- பூவனூர் மேவும் புகழுடையோய் - பூவலகாம்
- தேடெலியை மூவுலகுந் தேர்ந்துதொழச் செய்தருளும்
- ஈடின்மறைக் காட்டிலென்றன் எய்ப்பில்வைப்பே - நாடுமெனை
- தேமே டகத்தனொடு சீதரனும் வாழ்த்துஞ்சீ
- ராமே டகத்தறிவா னந்தமே - பூமீதில்
- தேவா இறைவா சிவனே யெனுமுழக்கம்
- ஓவா அறையணிநல் லூருயர்வே - தாவாக்
- தேன்தோய் கருணைச் சிவங்கலந்து தேக்குகின்ற
- சான்றோர்தம் உள்ளம் தணவாதாய் - மான்றமலத்
- தேவென்ற தீம்பாலில் தேன்கலந்தாற் போலினிக்க
- வாவென் றருளுமலர் வாயழகும் - பூவொன்றும்
- தேராழி என்பாயச் சீக்குழியை அன்றுசிறு
- நீராழி யென்பவர்க்கென் நேருதியே106 - ஆராப்புன்
- தேட்டாண்மை செய்வாயத் தேட்டாண்மை யைத்தெருவில்
- போட்டாலும் அங்கோர் புகழுண்டே - வாட்டாரைக்
- தேக மதுநலியச் செய்யுங்காண் உய்வரிதாம்
- மேகமிஃ தென்பாரை மேவிலையோ - தாகமுறச்
- தேகாதி பொய்யெனவே தேர்ந்தார் உரைக்கவும்நீ
- மோகாதிக் குள்ளே முயல்கின்றாய் - ஓகோநும்
- தேசமென்றும் காலமென்றும் திக்கென்றும் பற்பலவாம்
- வாசமென்றும் அவ்வவ் வழக்கென்றும் - மாசுடைய
- தேனே அமுதே சிவமே சிவமேஎம்
- மானேஎன் றேத்தி மகிழ்வாரும் - வானான
- தேறா வுலகம் சிவமயமாய்க் கண்டெங்கும்
- ஏறா திழியா திருப்போரும் - மாறாது
- தேனென்ற இன்சொல் தெரிந்துநினைப் பாடுகின்றேன்
- நானென் றுரைத்தல் நகைஅன்றோ - வான்நின்ற
- ஒண்பொரு உள்ளம் உவந்தருளால் இன்சொல்லும்
- வண்பொருளும் ஈதல் மறந்து.
- தேசுவிரித் திருளகற்றி என்றும் ஓங்கித்
- திகழ்கின்ற செழுங்கதிரே செறிந்த வாழ்க்கை
- மாசுவிரித் திடுமனத்தில் பயிலாத் தெய்வ
- மணிவிளக்கே ஆனந்த வாழ்வே எங்கும்
- காசுவிரித் திடுமொளிபோல் கலந்து நின்ற
- காரணமே சாந்தமெனக் கருதா நின்ற
- தூசுவிரித் துடுக்கின்றோர் தம்மை நீங்காச்
- சுகமயமே அருட்கருணை துலங்கும் தேவே.
- தேன்சொல்லும் வாயுமை பாகாநின் தன்னைத் தெரிந்தடுத்தோர்
- தான்சொல்லுங் குற்றங் குணமாகக் கொள்ளுந் தயாளுவென்றே
- நான்சொல்வ தென்னைபொன் நாண்சொல்லும் வாணிதன் நாண்சொல்லும்அவ்
- வான்சொல்லும் எம்மலை மான்சொல்லும் கைம்மலை மான்சொல்லுமே.
- தேட்டக்கண் டேர்மொழிப் பாகா உலகில் சிலர்குரங்கை
- ஆட்டக்கண் டேன்அன்றி அக்குரங் கால்அவர் ஆடச்சற்றும்
- கேட்டுக்கண் டேனிலை நானேழை நெஞ்சக் கிழக்குரங்கால்
- வேட்டுக்கொண் டாடுகின் றேன்இது சான்ற வியப்புடைத்தே.
- தேரோங்கு காழிக்கண் மெய்ஞ்ஞானப்பாலுண்ட செம்மணியைச்
- சீரோங்கு முத்துச் சிவிகையின் மேல்வைத்த தேவஉன்றன்
- பேரோங்கும் ஐந்தெழுத் தன்றோ படைப்பைப் பிரமனுக்கும்
- ஏரோங்கு காப்பைத் திருநெடு மாலுக்கும் ஈந்ததுவே.
- தேனார் பொழிலா ரொற்றியில்வாழ் தேவ ரிவர்வாய் திறவாராய்
- மானார் கரத்தோர் நகந்தெரித்து வாளா நின்றார் நீளார்வந்
- தானா ருளத்தோ டியாதென்றேன் றங்கைத் தலத்திற் றலையையடி
- யேனா டுறவே காட்டுகின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- தேமாம் பொழில்சூ ழொற்றியுளீர் திகழுந் தகரக் காற்குலத்தைப்
- பூமா னிலத்தில் விழைந்துற்றீர் புதுமை யிஃதும் புகழென்றே
- னாமா குலத்தி லரைக்குலத்துள் ளணைந்தே புறமற் றரைக்குலங்கொண்
- டேமாந் தனைநீ யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- தேவர்க் கரிய வானந்தத் திருத்தாண் டவஞ்செய் பெருமானீர்
- மேவக் குகுகு குகுகுவணி வேணி யுடையீ ராமென்றேன்
- தாவக் குகுகு குகுகுகுகுத் தாமே யைந்து விளங்கவணி
- யேவற் குணத்தா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- தேன்என இனிக்கும் திருவருட் கடலே
- தெள்ளிய அமுதமே சிவமே
- வான்என நிற்கும் தெய்வமே முல்லை
- வாயில்வாழ் மாசிலா மணியே
- ஊன்என நின்ற உணர்விலேன் எனினும்
- உன்திருக் கோயில்வந் தடைந்தால்
- ஏன்எனக் கேளா திருந்தனை ஐயா
- ஈதுநின் திருவருட் கியல்போ.
- தேசு லாவிய சீர்முல்லை வாயில்வாழ்
- மாசி லாமணி யேமருந் தேசற்றும்
- கூசி டாமல்நின் கோயில்வந் துன்புகழ்
- பேசி டாத பிழைபொறுத் தாள்வையே.
- தேரும் நற்றவர் சிந்தைஎ னுந்தலம்
- சாரும் நற்பொரு ளாம்வலி தாயநீர்
- பாரும் மற்றிப்ப ழங்கந்தை சாத்தினீர்
- யாரும் அற்றவ ரோசொலும் ஐயரே.
- தேவியல் அறியாச் சிறியனேன் பிழையைத் திருவுளத் தெண்ணிநீ கோபம்
- மேவிஇங் கையோ கைவிடில் சிவனே வேறுநான் யாதுசெய் வேனே
- மூவிரு முகம்சேர் முத்தினை அளித்த முழுச்சுவை முதிர்ந்தசெங் கரும்பே
- சேவின்மேல் ஓங்கும் செழுமணிக் குன்றே திருவொற்றி யூர்மகிழ் தேவே.
- தேவேநின் அடிநினையா வஞ்ச நெஞ்சைத்
- தீமூட்டிச் சிதைக்கறியேன் செதுக்கு கில்லேன்
- கோவேநின் அடியர்தமைக் கூடாப் பொய்மைக்
- குடிகொண்டேன் புலைகொண்ட கொடியேன் அந்தோ
- நாவேற நினைத்துதியேன் நலமொன் றில்லேன்
- நாய்க்கடைக்கும் கடைப்பட்டேன் நண்ணு கின்றோர்க்
- கீவேதும் அறியேன்இங் கென்னை யந்தோ
- என்செயினும் போதாதே எந்தாய் எந்தாய்.
- தேசார் அயில்வேல் மகனா ரொடும்தன் தேவி யொடும்தான் அமர்கோலம்
- ஈசா எனநின் றேத்திக் காண எண்ணும் எமக்கொன் றருளானேல்
- காசார் அரவக் கச்சேர் இடையான் கண்ணார் நுதலான் கனிவுற்றுப்
- பேசார்க்கருளான் ஒற்றித் தியாகப் பெருமான் பிச்சைப் பெருமானே.
- தேன்நெய் ஆடிய செஞ்சடைக் கனியைத்
- தேனை மெய்அருள் திருவினை அடியர்
- ஊனை நெக்கிட உருக்கிய ஒளியை
- உள்ளத் தோங்கிய உவப்பினை மூவர்
- கோனை ஆனந்தக் கொழுங்கடல் அமுதைக்
- கோம ளத்தினைக் குன்றவில் லியைஎம்
- மானை அம்பல வாணனை நினையாய்
- வஞ்ச நெஞ்சமே மாய்ந்திலை இனுமே.
- தேவர் அறியார் மால்அறியான் திசைமா முகத்தோன் தான்அறியான்
- யாவர் அறியார் திருஒற்றி யப்பா அடியேன் யாதறிவேன்
- மூவர் திருப்பாட் டினுக்கிசைந்தே முதிர்தீம் பாலும் முக்கனியும்
- காவல் அமுதும் நறுந்தேனும் கைப்ப இனிக்கும் நின்புகழே.
- தேவரே அயனே திருநெடு மாலே சித்தரே முனிவரே முதலா
- யாவரே எனினும் ஐயநின் தன்மை அறிந்திலர் யான்உனை அறிதல்
- தாவில்வான் சுடரைக் கண்ணிலி அறியும் தன்மையன் றோபெருந்தவத்தோர்
- ஓவில்மா தவம்செய் தோங்குசீர் ஒற்றியூர் அமர்ந் தருள்செயும் ஒன்றே.
- தேர்ந்து தேடினும் தேவர்போல் தலைமைத்
- தேவர் இல்லைஅத் தெளிவு கொண் டடியேன்
- ஆர்ந்து நும்அடிக் கடிமைசெய் திடப்பேர்
- ஆசை வைத்துமை அடுத்தனன் அடிகேள்
- ஓர்ந்திங் கென்றனைத் தொழும்புகொள் ளீரேல்
- உய்கி லேன்இஃ தும்பதம் காண்க
- சோர்ந்தி டார்புகழ் ஒற்றியூர் உடையீர்
- தூய மால்விடைத் துவசத்தி னீரே.
- தேடுவார் தேடும் செல்வமே சிவமே திருஅரு ணாபுரித் தேவே
- ஏடுவார் இதழிக் கண்ணிஎங் கோவே எந்தையே எம்பெரு மானே
- பாடுவார்க் களிக்கும் பரம்பரப் பொருளே பாவியேன் பொய்யெலாம் பொறுத்து
- நாடுவார் புகழும் நின்திருக் கோயில் நண்ணுமா எனக்கிவண் அருளே.
- தேவர் ஆயினும் தேவர்வ ணங்கும்ஓர்
- மூவர் ஆயினும் முக்கண நின்அருள்
- மேவு றாதுவி லக்கிடற் பாலரோ
- ஓவு றாதஉ டற்பிணி தன்னையே.
- தேசுநிற மாய்நிறைந்த வெண்ணிலா வே - நானுஞ்
- சிவமயம தாய்விழைந்தேன் வெண்ணிலா வே.
- தேசார் மணிசூழ் ஒற்றிநகர்த் தியாகப் பெருமான் பவனிவரக்
- கூசா தோடிக் கண்டரையில் கூறை இழந்தேன் கைவளைகள்
- வீசா நின்றேன் தாயரெலாம் வீட்டுக் கடங்காப் பெண்எனவே
- ஏசா நிற்க என்னடிநான் இச்சை மயமாய் நின்றதுவே.
- தேடார்க் கரியான் ஒற்றிநகர்த் தியாகப் பெருமான் பவனிவரத்
- தோடார் பணைத்தோட் பெண்களொடும் சூழ்ந்து மகிழ்ந்து கண்டதன்றி
- வாடாக் காதல் கொண்டறியேன் வளையும் துகிலும் சேர்ந்ததுடன்
- ஏடார் கோதை என்னடிநான் இச்சை மயமாய் நின்றதுவே.
- தேசு பூத்த வடிவழகர் திருவாழ் ஒற்றித் தேவர்புலித்
- தூசு பூத்த கீளுடையார் சுகங்காள் அவர்முன் சொல்லீரோ
- மாசு பூத்த மணிபோல வருந்தா நின்றாள் மங்கையர்வாய்
- ஏசு பூத்த அலர்க்கொடியாய் இளைத்தாள் உம்மை எண்ணிஎன்றே.
- தேனார் கமலத் தடஞ்சூழும் திருவாழ் ஒற்றித் தியாகர்அவர்
- வானார் அமரர் முனிவர்தொழ மண்ணோர் வணங்க வரும்பவனி
- தானார் வங்கொண் டகமலரத் தாழ்ந்து சூழ்ந்து கண்டலது
- கானார் அலங்கற் பெண்ணேநான் கண்கள் உறக்கங் கொள்ளேனே.
- தேனேர் குதலை மகளேநீ செய்த தவந்தான் எத்தவமோ
- மானேர் கரத்தார் மழவிடைமேல் வருவார் மருவார் கொன்றையினார்
- பானேர் நீற்றர் பசுபதியார் பவள வண்ணர் பல்சடைமேல்
- கோனேர் பிறையார் அவர்தம்மைக் கூடி உடலம் குளிர்ந்தனையே.
- தேர்ந்துணர்ந்து தெளியாதே திருவருளோ டூடிச்
- சிலபுகன்றேன் திருக்கருணைத் திறஞ்சிறிதுந் தெரியேன்
- போந்தகனேன் புகன்றபிழை பொறுத்தருளல் வேண்டும்
- போதாந்த மிசைவிளங்கு நாதாந்த விளக்கே
- ஊர்ந்தபணக் கங்கணமே முதற்பணிகள் ஒளிர
- உயர்பொதுவில் நடிக்கின்ற செயலுடைய பெருமான்
- சார்ந்தவரை எவ்வகையுந் தாங்கிஅளிக் கின்ற
- தயவுடைய பெருந்தலைமைத் தனிமுதல்எந் தாயே.
- தேவரெலாம் தொழுந்தலைமைத் தேவர் பாதத்
- திருமலரை முடிக்கணிந்து திகழ்ந்து நின்ற
- நாவரசே நான்முகனும் விரும்பும் ஞான
- நாயகனே நல்லவர்க்கு நண்ப னேஎம்
- பாவமெலாம் அகற்றிஅருட் பான்மை நல்கும்
- பண்புடைய பெருமானே பணிந்து நின்பால்
- மேவவிருப் புறும்அடியர்க் கன்பு செய்ய
- வேண்டினேன் அவ்வகைநீ விதித்தி டாயே.
- தேர்ந்தஉளத் திடைமிகவும் தித்தித் தூறும்
- செழுந்தேனே சொல்லரசாம் தேவே மெய்ம்மை
- சார்ந்துதிகழ் அப்பூதி அடிகட் கின்பம்
- தந்தபெருந் தகையேஎம் தந்தை யேஉள்
- கூர்ந்தமதி நிறைவேஎன் குருவே எங்கள்
- குலதெய்வ மேசைவக் கொழுந்தே துன்பம்
- தீர்ந்தபெரு நெறித்துணையே ஒப்பி லாத
- செல்வமே அப்பனெனத் திகழ்கின் றோனே.
- தேன்படிக்கும் அமுதாம்உன் திருப்பாட்டைத்193 தினந்தோறும்
- நான்படிக்கும் போதென்னை நானறியேன் நாஒன்றோ
- ஊன்படிக்கும் உளம்படிக்கும் உயிர்படிக்கும் உயிர்க்குயிரும்
- தான்படிக்கும் அனுபவங்காண் தனிக்கருணைப் பெருந்தனையே.
- தேசகத்தில் இனிக்கின்ற தெள்ளமுதே மாணிக்க
- வாசகனே ஆனந்த வடிவான மாதவனே
- மாசகன்ற நீதிருவாய் மலர்ந்ததமிழ் மாமறையின்
- ஆசகன்ற அனுபவம்நான் அனுபவிக்க அருளுதியே.
- தேடுகின்ற ஆனந்தச் சிற்சபையில் சின்மயமாய்
- ஆடுகின்ற சேவடிகக்கீழ் ஆடுகின்ற ஆரமுதே
- நாடுகின்ற வாதவூர் நாயகனே நாயடியேன்
- வாடுகின்ற வாட்டமெலாம் வந்தொருக்கால் மாற்றுதியே.
- தேவர் நாயகன் ஆகியே என்மனச் சிலைதனில் அமர்ந்தோனே
- மூவர் நாயகன் எனமறை வாழ்த்திடும் முத்தியின் வித்தேஇங்
- கேவ ராயினும் நின்திருத் தணிகைசென் றிறைஞ்சிடில் அவரேஎன்
- பாவ நாசம்செய் தென்றனை ஆட்கொளும் பரஞ்சுடர் கண்டாயே.
- தேனும் தெள்ளிய அமுதமும் கைக்கும்நின் திருவருள் தேன்உண்டே
- யானும் நீயுமாய்க் கலந்துற வாடும்நாள் எந்தநாள் அறியேனே
- வானும் பூமியும் வழுத்திடும் தணிகைமா மலைஅமர்ந் திடுதேவே
- கோனும் தற்பர குருவுமாய் விளங்கிய குமாரசற் குணக்குன்றே.
- தேவ ரும்தவ முனிவரும் சித்தரும் சிவன்அரி அயன்ஆகும்
- மூவ ரும்பணி முதல்வநின் அடியில்என் முடிஉற வைப்பாயேல்
- ஏவ ரும்எனக் கெதிர்இலை முத்திவீ டென்னுடை யதுகண்டாய்
- தாவ ரும்பொழில் தணிகையம் கடவுளே சரவண பவகோவே.
- தேவ நேசனே சிறக்கும் ஈசனே
- பாவ நாசனே பரம தேசனே
- சாவ காசனே தணிகை வாசனே
- கோவ பாசனே குறிக்கொள் என்னையே.
- தேடேனோ என்நாதன் எங்குற்றான் எனஓடித் தேடிச் சென்றே
- நாடேனோ தணிகைதனில் நாயகனே நின்அழகை நாடி நாடிக்
- கூடேனோ அடியருடன் கோவேஎம் குகனேஎம் குருவே என்று
- பாடேனோ ஆனந்தப் பரவசம்உற் றுன்கமலப் பதம்நண் ணேனோ.
- தேனும் கடமும் திகழ்தணிகைத் தேவை நினையாய் தீநரகம்
- மானும் நடையில் உழல்கின்றாய் மனமே உன்றன் வஞ்சகத்தால்
- நானும் இழந்தேன் பெருவாழ்வை நாய்போல் அலைந்திங் கவமே9நீ
- தானும் இழந்தாய் என்னேஉன் தன்மை இழிவாம் தன்மையதே.
- தேனார் அலங்கல் குழல்மடவார் திறத்தின் மயங்காத் திறல்அடைதற்
- கானார் கொடிஎம் பெருமான்தன் அருட்கண் மணியே அற்புதமே
- கானார் பொழில்சூழ் திருத்தணிகைக் கரும்பே கருணைப் பெருங்கடலே
- வானார் அமுதே நின்திருத்தாள் அடியேன் முடிமேல் வைப்பாயே.
- தேனே உளங்கொள் தெளிவே அகண்ட சிதம்மேவி நின்ற சிவமே
- கோனே கனிந்த சிவபோத ஞான குருவே விளங்கு குகனே
- தானே தனக்கு நிகராய் விளங்கு தணிகா சலத்தெம் அரசே
- நானே ழைஇங்கு மனம்நொந்து நொந்து நலிகின்ற செய்கை நலமோ.
- தேவே எனநிற் போற்றாத சிறிய ரிடம்போய்த் தியங்கிஎன்றன்
- கோவே நின்றன் திருத்தாளைக் குறிக்க மறந்தேன் துணைகாணேன்
- மாவே ழத்தின் உரிபுனைந்த வள்ளற் கினிய மகப்பேறே
- மூவே தனையை அறுத்தருள்வோய் முறையோ முறையோ முறையேயோ.
- தேவ ரேமுதல் உலகங்கள் யாவையும் சிருட்டிஆ தியசெய்யும்
- மூவ ரேஎதிர் வருகினும் மதித்திடேன் முருகநின் பெயர்சொல்வோர்
- யாவ ரேனும்என் குடிமுழு தாண்டெனை அளித்தவர் அவரேகாண்
- தாவ நாடொணாத் தணிகையம் பதியில்வாழ் சண்முகப் பெருமானே.
- தேறாப்பெரு மனமானது தேறுந்துயர் மாறும்
- மாறாப்பிணி மாயும்திரு மருவும்கரு ஒருவும்
- வீறாப்பொடு வருசூர்முடி வேறாக்கிட வரும்ஓர்
- ஆறாக்கரப்10 பொருளேஎன அருள்நீறணிந் திடிலே.
- தேன்வழி மலர்ப்பூங் குழல்துடி இடைவேல்
- திறல்விழி மாதரார் புணர்ப்பாம்
- கான்வழி நடக்கும் மனத்தினை மீட்டுன்
- கழல்வழி நடத்தும்நாள் உளதோ
- மான்வழி வரும்என் அம்மையை வேண்டி
- வண்புனத் தடைந்திட்ட மணியே
- வான்வழி அடைக்கும் சிகரிசூழ் தணிகை
- மாமலை அமர்ந்தருள் மருந்தே.
- தேடுங் கிளிநீ நின்னை விளம்பித் திருஅன்னார்
- அடுந் தணிகையில் என்உயிர் அன்னார் அருகேபோய்க்
- கூடும் தனமிசை என்பெயர் வைத்தக் கோதைக்கே
- ஈடும் கெடஇன் றென்னையும் ஈந்தருள் என்பாயே.
- தேனே அமுதே சிவமே தவமே தெளிவேஎங்
- கோனே குருவே குலமே குணமே குகனேயோ
- வானே வளியே அனலே புனலே மலையேஎன்
- ஊனே உயிரே உணர்வே எனதுள் உறைவானே.
- தேனமர் பசுங்கொன்றை மாலையா டக்கவின்
- செய்யுமதி வேணியாட
- செய்யுமுப் புரிநூலு மாடநடு வரியுரி
- சிறந்தாட வேகரத்தில்
- மானிமிர்ந் தாடஒளிர் மழுவெழுந் தாடமக
- வானாதி தேவராட
- மாமுனிவர் உரகர்கின் னரர்விஞ்சை யருமாட
- மால்பிரம னாடஉண்மை
- ஞானஅறி வாளர்தின மாடஉல கன்னையாம்
- நங்கைசிவ காமியாட
- நாகமுடன் ஊகமன நாடிஒரு புறமாட
- நந்திமறை யோர்களாட
- ஆனைமுக னாடமயி லேறிவிளை யாடுமுயர்
- ஆறுமுக னாடமகிழ்வாய்
- அற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும்
- ஆனந்த நடனமணியே.
- தேர்ந்து தெளியாச் சிறியவனேன் தீமையெலாம்
- ஓர்ந்து நினைக்கிலெனக் கூடுருவிப் போகுதடா.
- தேசுறுநின் றண்ணருளாந் தெள்ளமுதங் கொள்ளவுள்ளே
- ஆசைபொங்கு கின்றதெனக் கன்புடைய ஐயாவே.
- தேவியுற் றொளிர்தரு திருவுரு வுடனென
- தாவியிற் கலந்தொளி ரருட்பெருஞ் ஜோதி
- தேசுறத் திகழ்தரு திருநெறிப் பொருளியல்
- ஆசறத் தெரித்த வருட்பெருஞ் ஜோதி
- தேவரை யெல்லாந் திகழ்புற வமுதளித்
- தாவகை காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
- தேற்றிய வேதத் திருமுடி விளங்கிட
- ஏற்றிய ஞான வியலொளி விளக்கே
- தேகமுறு பூதநிலைத் திறம்சிறிதும் அறியேன்
- சித்தாந்த நிலைஅறியேன் சித்தநிலைஅறியேன்
- யோகமுறு நிலைசிறிதும் உணர்ந்தறியேன் சிறியேன்
- உலகநடை யிடைக்கிடந்தே உழைப்பாரில் கடையேன்
- ஆகமுறு திருநீற்றின் ஒளிவிளங்க அசைந்தே
- அம்பலத்தில் ஆடுகின்ற அடியைஅறி வேனோ
- ஏகஅனு பவம்அறியேன் எங்ஙனம்நான் புகுவேன்
- யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.
- தேட்டிலே மிகுந்த சென்னையில் இருந்தால் சிலுகுறும்219 என்றுளம் பயந்தே
- நாட்டிலே சிறிய ஊர்ப்புறங் களிலே நண்ணினேன் ஊர்ப்புறம் அடுத்த
- காட்டிலே பருக்கைக் கல்லிலே புன்செய்க் களத்திலே திரிந்துற்ற இளைப்பை
- ஏட்டிலே எழுத முடியுமோ இவைகள் எந்தைநீ அறிந்தது தானே.
- தேர்விலாச் சிறிய பருவத்திற் றானே தெய்வமே தெய்வமே எனநின்
- சார்வுகொண் டெல்லாச் சார்வையும் விடுத்தேன் தந்தையும் குருவும்நீ என்றேன்
- பேர்விலா துளத்தே வந்தவா பாடிப் பிதற்றினேன் பிறர்மதிப் பறியேன்
- ஓர்விலாப் பிழைகள் ஒன்றையும் அறியேன் இன்றுநான் உரைப்பதிங் கென்னே.
- தேனே திருச்சிற் றம்பலத்தில் தெள்ளா ரமுதே சிவஞான
- வானே ஞான சித்தசிகா மணியே என்கண் மணியேஎன்
- ஊனே புகுந்தென் உளங்கலந்த உடையாய் அடியேன் உவந்திடநீ
- தானே மகிழ்ந்து தந்தாய்இத் தருணம் கைம்மா றறியேனே.
- தேகம்எப் போதும் சிதையாத வண்ணம்
- செய்வித் தெலாம்வல்ல சித்தியும் தந்தே
- போகம்எல் லாம்என்றன் போகம தாக்கிப்
- போதாந்த நாட்டைப் புரக்கமேல் ஏற்றி
- ஏகசி வானந்த வாழ்க்கையில் என்றும்
- இன்புற்று வாழும் இயல்பளித் தென்னை
- ஆகம வீதியில் ஆடச்செய் தீரே
- அருட்பெருஞ் ஜோதிஎன் ஆண்டவர் நீரே.
- தேனாய்த் தீம்பழ மாய்ச் - சுவை - சேர்கரும் பாயமு தம்
- தானாய் அன்பரு ளே - இனிக் - கின்ற தனிப்பொரு ளே
- வானாய்க் காலன லாய்ப் - புன - லாயதில் வாழ்புவி யாய்
- ஆனாய் தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே.
- தேனே அமுதே சிற்சபையில் சிவமே தவமே செய்கின்றோர்
- ஊனே புகுந்த ஒளியேமெய் உணர்வே என்றன் உயிர்க்குயிராம்
- வானே என்னைத் தானாக்கு வானே கோனே எல்லாம்வல்
- லானே ஐயா அம்மாஎன் அப்பா யான்உன் அடைக்கலமே.
- தேடிய துண்டு நினதுரு வுண்மை
- தெளிந்திடச் சிறிதுநின் னுடனே
- ஊடிய துண்டு பிறர்தமை அடுத்தே
- உரைத்ததும் உவந்ததும் உண்டோ
- ஆடிய பாதம் அறியநான் அறியேன்
- அம்பலத் தரும்பெருஞ் சோதி
- கூடிய நின்னைப் பிரிகிலேன் பிரிவைக்
- கூறவுங் கூசும்என் நாவே.
- தேகாதி மூன்றும்உன் பாற்கொடுத் தேன்நின் திருவடிக்கே
- மோகா திபன்என் றுலகவர் தூற்ற முயலுகின்றேன்
- நாகா திபரும் வியந்திட என்எதிர் நண்ணிஎன்றும்
- சாகா வரந்தந்து சன்மார்க்க நீதியும் சாற்றுகவே.
- தேவர்களோ சித்தர்களோ சீவன்முத்தர் தாமோ
- சிறந்தமுனித் தலைவர்களோ செம்பொருள்கண் டோரோ
- மூவர்களோ அறுவர்களோ முதற்சத்தி அவளோ
- முன்னியநம் பெருங்கணவர் தம்இயலை உணர்ந்தோர்
- யாவர்களும் அல்லஎன்றால் யான்உணர்ந்து சொல்ல
- அமையுமோ ஒருசிறிதும் அமையாது கண்டாய்
- ஆவலொடும் அன்பர்தொழக் கனகசபை நடிப்பார்
- அவர்பெருமை எவ்விதத்தும் அவர்அறிவார் தோழி.
- தேர்ந்தேன் தெளிந்தேன் சிவமே பொருள்எனஉள்
- ஓர்ந்தேன் அருளமுதம் உண்கின்றேன் - சார்ந்தேன்சிற்
- றம்பலத்தில் எல்லாம்வல் லானை அவன்அருளால்
- எம்பலத்தெல் லாம்வலன்ஆ னேன்.
- தேனே கன்னல் செழும்பாகே என்ன மிகவும் தித்தித்தென்
- ஊனே புகுந்தென் உளத்தில்அமர்ந் துயிரில் கலந்த ஒருபொருளை
- வானே நிறைந்த பெருங்கருணை வாழ்வை மணிமன் றுடையானை
- நானே பாடிக் களிக்கின்றேன் நாட்டார் வாழ்த்த நானிலத்தே.
- தேன்பாடல் அன்புடையார் செயப்பொதுவில் நடிக்கின்ற சிவமே ஞானக்
- கான்பாடிச் சிவகாம வல்லிமகிழ் கின்றதிருக் கணவா நல்ல
- வான்பாட மறைபாட என்னுளத்தே வயங்குகின்ற மன்னா நின்னை
- யான்பாட நீதிருத்த என்னதவஞ் செய்தேனோ எந்தாய் எந்தாய்.
- தேவர்கள் எல்லாரும் சிந்திக்கும் பாதம்
- தெள்ளமு தாய்உளந் தித்திக்கும் பாதம்
- மூவரும் காணா முழுமுதற் பாதம்
- முப்பாழுக் கப்பால் முளைத்தபொற் பாதம். ஆடிய
- தேவ கலாநிதியே ஜீவ தயாநிதியே
- தீன சகாநிதியே சேகர மாநிதியே
- நாவல ரோர்பதியே நாரி உமாபதியே
- ஞான சபாபதியே ஞான சபாபதியே.
- தேவர்களோ முனிவர்களோ சிறந்தமுத்தர் தாமோ
- தேர்ந்தசிவ யோகிகளோ செம்பொருள் கண்டோரோ
- மூவர்களோ ஐவர்களோ முதற்பரையோ பரமோ
- முன்னியஎன் தனித்தலைவர் தம்இயலை உணர்ந்தார்
- யாவர்களும் அல்லஎன்றால் யான்உணர்ந்து மொழிதற்
- கமையுமோ ஒருசிறிதும் அமையாது கண்டாய்
- ஆவலொடும் அன்பர்தொழச் சிற்சபையில் நடிப்பார்
- அவர்பெருமை அவர்அறிவர் அவரும்அறிந் திலரே.