- நயப்படும் ஓர்நின் அருளெனக் கின்றெனில் நாய்மனமென்
- வயப்படு மோதுயர் மண்படு மோநல்ல வாழ்வைஎன்னால்
- செயப்படு மோகுணம் சீர்ப்படு மோபவம் சேரச்சற்றும்
- பயப்படு மோமலம் பாழ்படு மோஎம் பசுபதியே.
- நயத்தால் உனது திருவருளை நண்ணாக் கொடியேன் நாய் உடம்பை
- உயத்தான் வையேன் மடித்திடுவேன் மடித்தாற் பின்னர் உலகத்தே
- வயத்தால் எந்த உடம்புறுமோ என்ன வருமோ என்கின்ற
- பயத்தால் ஐயோ இவ்வுடம்பைச் சுமக்கின் றேன்எம் பரஞ்சுடரே.
- நயந்தபொற் சரிகைத் துகில்எனக் கெனது நண்பினர் உடுத்திய போது
- பயந்தஅப் பயத்தை அறிந்தவர் எல்லாம் பயந்தனர் வெய்யிலிற் கவிகை
- வியந்துமேற் பிடித்த போதெலாம் உள்ளம் வெருவினேன் கைத்துகில் வீசி
- அயந்தரு தெருவில் நடப்பதற் கஞ்சி அரைக்குமேல் வீக்கினன் எந்தாய்.
- நயந்த கருணை நடத்தரசே ஞான அமுதே நல்லோர்கள்
- வியந்த மணியே மெய்யறிவாம் விளக்கே என்னை விதித்தோனே
- கயந்த மனத்தேன் எனினும்மிகக் கலங்கி நரகக் கடுங்கடையில்
- பயந்த பொழுதும் தாழ்த்திருத்தல் அழகோ கடைக்கண் பார்த்தருளே.
- நயந்தநட நாயகர்உன் நாயகரே எனினும்
- நாடியமந் திரங்கள்சில கூடிஉரை யிடவே
- வியந்துமற்றைத் தேவர்எலாம் வரவும்அவர் நேயம்
- விரும்பாதே இருப்பதென்நீ என்கின்றாய் தோழி
- வயந்தரும்இந் திரர்பிரமர் நாரணர்கா ரணர்கள்
- மற்றையர்கள் மற்றையர்கள் மற்றையர்கள் எவர்க்கும்
- பயந்தகுடி அல்லடிநான் திருச்சிற்றம் பலத்தே
- பதிநடஞ்செய் அடிப்பணிக்கே பதித்தகுடி அறியே.
- நயந்தநட நாயகர்உன் நாயகரே எனினும்
- நங்கைநினைக் கண்டிடவே நாடிமற்றைத் தலைவர்
- வியந்துவரு கின்றதுகண் டுபசரியா திங்கே
- மேல்நோக்கி இருப்பதென்நீ என்கின்றாய் தோழி
- வயந்தருபார் முதல்நாத வரையுளநாட் டவர்க்கும்
- மற்றவரை நடத்துகின்ற மாநாட்டார் தமக்கும்
- பயந்தகுடி அல்லடிநான் திருச்சிற்றம் பலத்தே
- பதிநடஞ்செய் அடிப்பணிக்கே பதித்தகுடி அறியே.
- நயந்தநட நாயகர்உன் நாயகரே எனினும்
- நாடும்மற்றைத் தலைவர்தமைக் கண்டபொழு தெனினும்
- வியந்தவர்க்கோர் நல்லுரையும் சொல்லாதே தருக்கி
- வீதியிலே நடப்பதென்நீ என்கின்றாய் தோழி
- வயந்தரும்இவ் வண்டபகி ரண்டமட்டோ நாத
- வரையோஅப் பாலும்உள மாநாட்டார் தமக்கும்
- பயந்தகுடி அல்லடிநான் திருச்சிற்றம் பலத்தே
- பதிநடஞ்செய் அடிப்பணிக்கே பதித்தகுடி அறியே.