- நில்லுங் கடம்ப நெறிபோ லெனப்பூவை
- சொல்லுங் கடம்பந் துறைநிறைவே - மல்லலொடு
- நின்றெழன்மெய் யன்றெனவே நேர்ந்துலகு வாழ்த்துகின்ற
- நன்றெறும்பி யூரிலங்கு நன்னெறியே - துன்றுகயற்
- நின்னகத்தி யான்பள்ளி நேர்ந்தேனென் றாட்கொண்ட
- தென்னகத்தி யான்பள்ளிச் செம்பொன்னே - தொன்னெறியோர்
- நின்றேயுன் பொற்றாள் நினையாதார் பாழ்மனையில்
- சென்றே உடலோம்பச் செய்யற்க - நன்றேநின்
- நித்தியமாய் நிர்க்குணமாய் நிற்சலமாய் நின்மலமாய்ச்
- சத்தியமாய்ச் சத்துவமாய்த் தத்துவமாய் - முத்தியருள்
- நிறைவாய்க் குறைவாய் நிறைகுறை வில்லாதாய்
- மறைவாய் வெளியாய் மனுவாய் - மறையாத
- நிற்கும் பிரம நிரதிசயா னந்தமதாய்
- நிற்கும் பரம நிருத்தனெவன் - தற்பரமாய்
- நின்றான் எவனன்பர் நேயமனத் தேவிரைந்து
- சென்றான் எவன்சர்வ தீர்த்தனெவன் - வன்தீமை
- நில்லாத காற்றை நிலையாக் கடத்தடைத்துச்
- செல்லாது வைக்கின்ற சித்தனெவன் - பொல்லாத
- நித்தம் தெரியா நிலைமே வியநமது
- சித்தம் தெளிவிக்கும் தேசிகன்காண் - வித்தரென
- நின்றாய் அலதவனை நேர்ந்துநினை யாய்பித்தர்
- என்றாலும் என்சொற் கிணங்குவரே - குன்றாது
- நின்னுடலும் பொய்யிங்கு நின்தவமும் பொய்நிலையா
- நின்னிலையும் பொய்யன்றி நீயும்பொய் - என்னிலிவண்
- நின்றால் அவர்பின்னர் நிற்கின்றாய் கண்மூடி
- நின்றாலும் அங்கோர் நிலையுண்டே - ஒன்றாது
- நின்னாசை என்னென்பேன் நெய்வீழ் நெருப்பெனவே
- பொன்னாசை மேன்மேலும் பொங்கினையே - பொன்னாசை
- நின்றாலும் பின்னதுதான் நீடும் கரியான
- தென்றால் அரகரமற் றென்செய்வாய் - நன்றாக
- நின்றார் இருந்தார் நிலைகுலைய வீழ்ந்துயிர்தான்
- சென்றார் எனக்கேட்டும் தேர்ந்திலையே - பின்றாது
- நிலைமுற்ற யோனி நெருக்கில் உயிர்போய்ப்
- பலனற்று வீழ்ந்ததுவும் பார்த்தாய் - பலனுற்றே
- நின்னைவைத்து முன்சென்றால் நீசெய்வ தென்னவர்முன்
- இந்நிலத்தில் நீசென்றால் என்செய்வர் - நின்னியல்பின்
- நின்வசம்நான் என்றுலகு நிந்தைமொழி கின்றதலால்
- என்வசம்நீ என்ப திலைகண்டாய் - என்வசம்நீ
- நினைப்பித்தா நித்தா நிமலா எனநீ
- நினைப்பித்தால் ஏழை நினைப்பேன் - நினைப்பின்
- மறப்பித்தாலி யானும் மறப்பேன் எவையும்
- பிறப்பித்தாய் என்னாலென் பேசு.
- நின்னன்பர் தம்பால் நிறுத்துதியோ அன்றிஎனைப்
- பொன்னன்பர் தம்பால் புணர்த்துதியோ - பொன்னன்பர்
- வைவமே என்னும் வறியேன் அறியேனென்
- தெய்வமே நின்றன் செயல்.
- நின்மயமாய் என்மயமாய் ஒன்றுங் காட்டா
- நிராமயமாய் நிருவிகற்ப நிலையாய் மேலாம்
- தன்மயமாய்த் தற்பரமாய் விமல மாகித்
- தடத்தமாய்ச் சொரூபமாய்ச் சகச மாகிச்
- சின்மயமாய்ச் சிற்பரமாய் அசல மாகிச்
- சிற்சொலித மாய்அகண்ட சிவமாய் எங்கும்
- மன்மயமாய் வாசகா தீத மாகி
- மனாதீத மாய்அமர்ந்த மவுனத் தேவே.
- நிறைமதி யாளர் புகழ்வோய் சடையுடை நீண்முடிமேல்
- குறைமதி தானொன்று கொண்டனை யேஅக் குறிப்பெனவே
- பொறைமதி யேன்றன் குறைமதி தன்னையும் பொன்னடிக்கீழ்
- உறைமதி யாக்கொண் டருள்வாய் உலகம் உவப்புறவே.
- நிலைகாட்டி ஆண்டநின் தாட்கன்பி லாதன்பில் நீண்டவன்போல்
- புலைகாட் டியமனத் தேன்கொண்ட வேடம் புனைஇடைமேல்
- கலைகாட்டிக் கட்டு மயிர்த்தலை காட்டிப்புன் கந்தைசுற்றி
- முலைகாட்டி ஆண்மகன் பெண்வேடம் காட்டு முறைமையன்றே.
- நிலையறி யாத குடும்பத் துயரென்னும் நீத்தத்திலே
- தலையறி யாது விழுந்தேனை ஆண்டருள் தானளிப்பாய்
- அலையறி யாத கடலேமுக் கண்கொண்ட ஆரமுதே
- விலையறி யாத மணியே விடேலிதென் விண்ணப்பமே.
- நின்னால் எனக்குள எல்லா நலனும் நினைஅடைந்த
- என்னால் உனக்குள தென்னைகண் டாய்எமை ஈன்றவளே
- முன்னால் வருக்கருள் ஒற்றிஎம் மான்கண் முழுமணியே
- ம்ன்னான் மறையின் முடிவே வடிவுடை மாணிக்கமே.
- நிலையைத் தவறார் தொழுமொற்றி நிமலப் பெருமானீர்முன்ன
- மலையைச் சிலையாக் கொண்டீர்நும் மாவல் லபமற் புதமென்றேன்
- வலையத் தறியாச் சிறுவர்களு மலையைச் சிலையாக் கொள்வர்களீ
- திலையற் புதந்தா னென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- நிலவும் ஒண்மதி முகத்தியர்க் குழன்றாய்
- நீச நெஞ்சர்தம் நெடுங்கடை தனிற்போய்
- இலவு காத்தனை என்னைநின் மதியோ
- எழில்கொள் ஒற்றியூர்க் கென்னுடன் போந்து
- பலவும் ஆய்ந்துநன் குண்மையை உணர்ந்த
- பத்தர் உள்ளகப் பதுமங்கள் தோறும்
- உலவும் ஓம்சிவ சண்முக சிவஓம்
- ஓம்சி வாயஎன் றுன்னுதி மனனே.
- நிலைகொள் நீறிடாப் புலையரை மறந்தும்
- நினைப்ப தென்பதை நெஞ்சமே ஒழிக
- கலைகொள் நீறிடும் கருத்தரை நாளும்
- கருதி நின்றுளே கனிந்துநெக் குருக
- மலைகொள் வில்லினான் மால்விடை உடையான்
- மலர்அ யன்தலை மன்னிய கரத்தான்
- அலைகொள் நஞ்சமு தாக்கிய மிடற்றான்
- அவனை நாம்மகிழ்ந் தடைகுதற் பொருட்டே.
- நிலையி லாஉல கியல்படும் மனத்தை
- நிறுத்தி லேன்ஒரு நியமமும் அறியேன்
- விலையி லாமணி யேஉனை வாழ்த்தி
- வீட்டு நன்னெறிக் கூட்டென விளம்பேன்
- அலையில் ஆர்ந்தெழும் துரும்பென அலைந்தேன்
- அற்ப னேன்திரு அருளடை வேனே
- சிலையில் ஆர்அழல் கணைதொடுத் தவனே
- திகழும் ஒற்றியூர்த் தியாகமா மணியே.
- நிறைய வாழ்தொண்டர் நீடுற வன்பவம்
- பறைய நின்றப டம்பக்க நாதரே
- உறைய மாணிக்கு யிர் அளித் திட்டநீர்
- குறையி லாஒற்றிக் கோயிற்கண் உள்ளிரோ.
- நில்லா உடம்பை நிலைஎன்றே நேசிக்கும்
- பொல்லாத நெஞ்சப் புலையனேன் இவ்வுலகில்
- சொல்லா மனநோயால் சோர்வுற் றலையும்அல்லல்
- எல்லாம் அறிவாய் எழுத்தறியும் பெருமானே.
- நினையுடையாய் நீஅன்றி நேடில்எங்கும் இல்லாதாய்
- மனையுடையார் மக்கள்எனும் வாழ்க்கையிடைப் பட்டவமே
- இனையுடையான் என்றிங் கெனையாள்வ துன்கடனே
- எனையுடையாய் ஒற்றி எழுத்தறியும் பெருமானே.
- நிற்ப தென்றுநீ நீல நெஞ்சமே
- அற்ப மாதர்தம் அவலம் நீங்கியே
- சிற்ப ரன்திருத் தில்லை அம்பலப்
- பொற்பன் ஒற்றியில் புகுந்து போற்றியே.
- நிகழும்நின் திருவருள் நிலையைக் கொண்டவர்
- திகழும்நல் திருச்சபை அதனுட் சேர்க்கமுன்
- அகழுமால் ஏன்மாய் அளவும் செம்மலர்ப்
- புகழுமா றருளுக பொறுக்க பொய்மையே.
- நித்தனைத் தூய நிமலனைப் புலியூர் நிருத்தனை ஒருத்தனை வாய்மைச்
- சுத்தனை ஒற்றித் தலம்வளர் ஞான சுகத்தனைச் சூழ்ந்துநின் றேத்தா
- மத்தரைச் சமண வாதரைத் தேர வறியரை முறியரை வைண
- நத்தரைச் சுணங்க நாவரைக் கண்டால் நடுங்குவ நடுங்குவ மனமே.
- நின்முனம் நீல கண்டம்என் றோதும் நெறிமறந் துணவுகொண் டந்தோ
- பொன்முனம் நின்ற இரும்பென நின்றேன் புலையனேன் ஆதலால் இன்று
- மின்முனம் இலங்கும் வேணிஅம் கனியே விரிகடல் தானைசூழ் உலகம்
- தன்முனம் இலங்கும் ஒற்றியில் உன்னால் தண்டிக்கப் பட்டனன் அன்றே.
- நிற்பது போன்று நிலைபடா உடலை நேசம்வைத் தோம்புறும் பொருட்டாய்ப்
- பொற்பது தவிரும் புலையர்தம் மனைவாய்ப் புந்திநொந் தயர்ந்தழு திளைத்தேன்
- சொற்பதங் கடந்த நின்திரு வடிக்குத் தொண்டுசெய் நாளும்ஒன் றுளதோ
- கற்பது கற்றோர் புகழ்திரு வொற்றிக் காவல்கொள் கருணையங் கடலே.
- நின்ன டிக்கண்ஓர் கணப்பொழு தேனும்
- நிற்ப தின்றியே நீசமங் கையர்தம்
- கன்ன வில்தனம் விழைந்தது மனம்காண்
- கடைய னேன்செயக் கடவதொன் றறியேன்
- அன்ன ஊர்தியும் மாலும்நின் றலற
- அடியர் தங்களுள் அமர்ந்தருள் அமுதே
- தென்இ சைப்பொழில் ஒற்றிஎம் வாழ்வே
- செல்வ மேபர சிவபரம் பொருளே.
- நின்போன்ற தெய்வம்ஒன் றின்றென வேதம் நிகழ்த்தவும்நின்
- பொன்போன்ற ஞானப் புதுமலர்த் தாள்துணைப் போற்றுகிலேன்
- என்போன்ற ஏழையர் யாண்டுளர் அம்பலத் தேநடஞ்செய்
- மின்போன்ற வேணிய னேஒற்றி மேவிய வேதியனே.
- நிதியேநின் பொன்னடி ஏத்தாது நெஞ்சம் நிறைமயலாம்
- சதியே புரிகின்ற தென்னைசெய் கேன்உனைத் தாழலர்தம்
- விதியே எனக்கும் விதித்ததன் றோஅவ் விதியும்இள
- மதியேர் சடைஅண்ண லேஒற்றி யூர்ஒளி மாணிக்கமே.
- நிலத்தே சிறுவர்செய் குற்றங்கள் யாவும் நினைத்தறவோர்
- சலத்தே உளத்தை விடார்என்பர் ஆதலின் தாதையென்றே
- குலத்தேவர் போற்றும் குணக்குன்ற மேஎங் குலதெய்வமே
- புலத்தே இழிதகை யேன்பிழை யாவும் பொறுத்தருளே.
- நின்பதம் பாடல் வேண்டும்நான் போற்றி
- நீறுபூத் தொளிர்குளிர் நெருப்பே
- நின்புகழ் கேட்டல் வேண்டும்நான் போற்றி
- நெற்றியங் கண்கொளும் நிறைவே
- நின்வச மாதல் வேண்டும்நான் போற்றி
- நெடியமால் புகழ்தனி நிலையே
- நின்பணி புரிதல் வேண்டும்நான் போற்றி
- நெடுஞ்சடை முடித்தயா நிதியே.
- நிதிதரு நிறைவே போற்றிஎன் உயிர்க்கோர்
- நெறிதரு நிமலமே போற்றி
- மதிமுடிக் கனியே போற்றிஎன் தன்னை
- வாழ்வித்த வள்ளலே போற்றி
- விதிமுதற் கிறையே போற்றிமெய்ஞ் ஞான
- வியன்நெறி விளக்கமே போற்றி
- பதிபசு பதியே போற்றி நின்பாதம்
- பாடஎற் கருளுக போற்றி.
- நின்பால் அடைந்தார் அன்பாலே அடியார் எல்லாம் நெடுவினையேன்
- வன்பால் மனப்பேய் தன்பாலே வருந்திச் சுழன்று மயர்கின்றேன்
- தென்பால் நோக்கி இன்பநடம் செய்யும் இறைவா சிறுவனுக்கா
- முன்பால் அமுதக் கடல்அளித்த முதல்வா என்னை முன்னுதியே.
- நிலைஅறியேன் நிலைஅறிந்து பெற்ற நல்லோர்
- நெறிஅறியேன் எனினும்உன்றன் நேச மன்றி
- இலைஅறியேன் மற்றவரைக் கனவி லேனும்
- எட்டுணைஓர் துணைஎனவும் எண்ணு றேன்நல்
- கலைஅறியேன் கருத்திலிருந் தறிவித் தாய்நான்
- கண்டறிந்தேன் எனினும்அவை காட்ட வேண்டும்
- அலைஅறியா அருட்கடலே அமுதே தேனே
- அம்பலத்தென் குருவேநான் அடிமை ஆளே.
- நிதியைநினைந் துனைமறந்த மதியைநினைந் தழுகேனோ நிமலா னந்தக்
- கதியைஇகழ்ந் திருள்விழைந்த விதியைநினைந் தழுகேனோ கண்போல் வாய்ந்த
- பதியைஉனைப் பாடாத பாட்டைநினைந் தழுகேனோ படிற்று நெஞ்சச்
- சதியைநினைந் தழுகேனோ யாதுகுறித் தழுகேன்இத் தமிய னேனே.
- நித்தி யம்பரா பரநி ராதரம்
- நிர்க்கு ணஞ்சதா நிலய நிட்களம்
- சத்தி யம்கனா கனமி குந்ததோர்
- தற்ப ரம்சிவம் சமர சத்துவம்
- வித்தி யஞ்சுகோ தயநி கேதனம்
- விமலம் என்றுநால் வேத முந்தொழும்
- சித்தி யங்குசிற் கனசி தம்பரம்
- சிவசி தம்பரம் சிவசி தம்பரம்.
- நிருத்தம் பயின்றார் நித்தியனார் நேச மனத்தர் நீலகண்டர்
- ஒருத்தர் திருவாழ் ஒற்றியினார் உம்பர் அறியா என்கணவர்
- பொருத்தம் அறிந்தே புணர்வாரோ பொருத்தம் பாரா தணைவாரோ
- வருத்தந் தவிரக் குறப்பாவாய் மகிழ்ந்தோர் குறிதான் வழுத்துவையே.
- நிரந்தார் கங்கை நீள்சடையார் நெற்றி விழியார் நித்தியனார்
- சிரந்தார் ஆகப் புயத்தணிவார் திருவாழ் ஒற்றித் தியாகர்அவர்
- பரந்தார் கோயிற் கெதிர்நிற்கப் பார்த்தேன் மீட்டும் பார்ப்பதன்முன்
- கரந்தார் கலுழ்ந்தேன் என்னடிநான் கனவோ நனவோ கண்டதுவே.
- நிலவார் சடையார் திருஒற்றி நிருத்தர் பவனி தனைக்காண
- நலவா தரவின் வந்துநின்றால் நங்காய் எனது நாண்கவர்ந்து
- பலவா தரவால் நமைத்திரும்பிப் பாரா தோடு கின்றார்நாம்
- உலவா தோடி னாலும்அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே.
- நிறைஅணிந்த சிவகாமி நேயநிறை ஒளியே
- நித்தபரி பூரணமாம் சுத்தசிவ வெளியே
- கறைஅணிந்த களத்தரசே கண்ணுடைய கரும்பே
- கற்கண்டே கனியேஎன் கண்ணேகண் மணியே
- பிறைஅணிந்த முடிமலையே பெருங்கருணைக் கடலே
- பெரியவரெல் லாம்வணங்கும் பெரியபரம் பொருளே
- குறைஅணிந்து திரிகின்றேன் குறைகளெலாந் தவிர்த்தே
- குற்றமெலாங் குணமாகக் கொள்வதுநின் குணமே.
- நிலைநாடி அறியாதே நின்னருளோ டூடி
- நீர்மையல புகன்றேன்நன் னெறிஒழுகாக் கடையேன்
- புலைநாயேன் புகன்றபிழை பொறுத்தருளல் வேண்டும்
- பூதகணஞ் சூழநடம் புரிகின்ற புனிதா
- கலைநாடு மதியணிந்த கனபவளச் சடையாய்
- கருத்தறியாக் காலையிலே கருணைஅளித் தவனே
- தலைஞான முனிவர்கள்தந் தலைமீது விளங்கும்
- தாளுடையாய் ஆளுடைய சற்குருஎன் அரசே.
- நின்புகழ்நன் கறியாதே நின்னருளோ டூடி
- நெறியலவே புகன்றேன்நன் னிலைவிரும்பி நில்லேன்
- புன்புலையேன் புகன்றபிழை பொறுத்தருளல் வேண்டும்
- பூரணசிற் சிவனேமெய்ப் பொருள்அருளும் புனிதா
- என்புடைஅந் நாளிரவில் எழுந்தருளி அளித்த
- என்குருவே என்னிருகண் இலங்கியநன் மணியே
- அன்புடையார் இன்படையும் அழகியஅம் பலத்தே
- ஆத்தாளும் அப்பனுமாய்க் கூத்தாடும் பதியே.
- நிலைஅருள் நினது மலர்அடிக் கன்பு
- நிகழ்ந்திட நாள்தொறும் நினையாப்
- புலையர்தம் இடம்இப் புன்மையேன் புகுதல்
- பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய்
- மலைஅர சளித்த மரகதக் கொம்பர்
- வருந்திஈன் றெடுத்தமா மணியே
- தலைஅர சளிக்க இந்திரன் புகழும்
- தணிகைவாழ் சரவண பவனே.
- நிலைக்கும் தணிகை என்அரசை நீயும் நினையாய் நினைப்பதையும்
- கலைக்கும் தொழில்கொண் டெனைக்கலக்கம் கண்டாய் பலன்என் கண்டாயே
- முலைக்கும் கலைக்கும் விழைந்தவமே முயங்கும் மூட முழுநெஞ்சே
- அலைக்கும் கொடிய விடம்நீஎன் றறிந்தேன் முன்னர் அறிந்திலனே.
- நின்நிலை அறியா வஞ்சகர் இடத்தில்
- நின்றுநின் றலைதரும் எளியேன்
- தன்நிலை அறிந்தும் ஐயகோ இன்னும்
- தயைஇலா திருந்தனை என்னே
- பொன்நிலைப் பொதுவில் நடஞ்செயும் பவளப்
- பொருப்பினுள் மலர்ந்திடும் பூவே
- கொல்நிலை வேல்கைக் கொளும்திருத் தணிகைக்
- குன்றமர்ந் திடுகுணக் குன்றே.
- நிருத்தம் பயின்றார் கடல்நஞ் சயின்றார்
- நினைவார் தங்கள் நெறிக்கேற்க
- அருத்தம் பகர்வார் அருமைப் புதல்வர்
- அறுமா முகனார் அயில்வேலார்
- திருத்தம் பெறுவார் புகழும் தணிகைத்
- திருமா மலையார் ஒருமாதின்
- வருத்தம் பாரார் வளையும் தாரார்
- வாரார் அவர்தம் மனம்என்னே.
- நின்னிருதாள் துணைபிடித்தே வாழ்கின் றேன்நான்
- நின்னைஅலால் பின்னைஒரு நேயம் காணேன்
- என்னைஇனித் திருவுளத்தில் நினைதி யோநான்
- ஏழையினும் ஏழைகண்டாய் எந்தாய் எந்தாய்
- பொன்னைஅன்றி விரும்பாத புல்லர் தம்பால்
- போகல்ஒழிந் துன்பதமே போற்றும் வண்ணம்
- சின்னம்அளித் தருட்குருவாய் என்னை முன்னே
- சிறுகாலை ஆட்கொண்ட தேவ தேவே.
- நிலைஉறும் நிராசையாம் உயர்குலப் பெண்டிரொடு
- நிகழ்சாந்த மாம்புதல்வனும்
- நெறிபெறும் உதாரகுணம் என்னும்நற் பொருளும்மருள்
- நீக்கும்அறி வாம்துணைவனும்
- மலைவறு நிராங்கார நண்பனும் சுத்தமுறு
- மனம்என்னும் நல்ஏவலும்
- வருசகல கேவலம்இ லாதஇட மும்பெற்று
- வாழ்கின்ற வாழ்வருளுவாய்
- அலைஇலாச் சிவஞான வாரியே ஆனந்த
- அமுதமே குமுதமலர்வாய்
- அணிகொள்பொற் கொடிபசுங் கொடிஇரு புறம்படர்ந்
- தழகுபெற வருபொன்மலையே
- தலைவர்புகழ் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- நின்பால் அறிவும் நின்செயலும் நீயும் பிறிதன் றெமதருளே
- நெடிய விகற்ப உணர்ச்சிகொடு நின்றாய் அதனால் நேர்ந்திலைகாண்
- அன்பால் உன்பால் ஒருமொழிதந் தனம்இம் மொழியால் அறிந்தொருங்கி
- அளவா அறிவே உருவாக அமரென் றுணர்த்தும் அரும்பொருளே
- இன்பால் என்பால் தருதாயில் இனிய கருணை இருங்கடலே
- இகத்தும் பரத்தும் துணையாகி என்னுள் இருந்த வியனிறைவே
- தென்பால் விளங்குந் திருவோத்தூர் திகழும் மதுரச் செழுங்கனியே
- தேவர் புகழுஞ் சிவஞானத் தேவே ஞான சிகாமணியே.
- நிறுத்தி யறியே நிகழ்த்தியவன் சொல்லை
- உறுத்தி நினைக்கிலெனக் கூடுருவிப் போகுதடா.
- நிற்குருகா வஞ்ச நினைவால் நினைத்தவெலாஞ்
- சற்குருவே யெண்ணுதொறுந் தாது கலங்குதடா.
- நிலம்பெறு முயிர்வகை நீள்குழு வனைத்தும்
- அலம்பெறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
- நிகரிலா வின்ப நிலைநடு வைத்தெனைத்
- தகவொடு காக்குந் தனிச்சிவ பதியே
- நினைவவை பலவாய் நினைவன பலவாய்
- இனைவற விளக்கிடு மென்றனிச் சித்தே
- நினைத்தவை நினைத்தவை நினைத்தாங் கெய்துற
- அனைத்தையுந் தருமோ ரரும்பெறன் மணியே
- நிறைவளர் முறையே முறைவளர் நிறையே நிறைமுறை வளர்பெரு நெறியே
- பொறைவளர் புவியே புவிவளர் பொறையே புவிபொறை வளர்தரு புனலே
- துறைவளர் கடலே கடல்வளர் துறையே துறைகடல் வளர்தரு சுதையே
- மறைவளர் பொருளே பொருள்வளர் மறையே மறைபொருள்வளர்சிவபதியே.
- நிதிவளர் நிலமே நிலம்வளர் நிதியே நிதிநிலம் வளர்தரு நிறைவே
- மதிவளர் நலமே நலம்வளர் மதியே மதிநலம் வளர்தரு பரமே
- கதிவளர் நிலையே நிலைவளர் கதியே கதிநிலை வளர்தரு பொருளே
- பதிவளர் பதமே பதம்வளர் பதியே பதிபதம் வளர்சிவ பதியே.
- நிலத்திலும்பணத்தும் நீள்விழிமடவார் நெருக்கிலும்பெருக்கிய நினைப்பேன்
- புலத்திலும் புரைசேர் பொறியிலும் மனத்தைப் போக்கிவீண் போதுபோக் குறுவேன்
- நலத்தில்ஓர் அணுவும் நண்ணிலேன் கடைய நாயினுங் கடையனேன் நவையேன்
- குலத்திலும் கொடியேன் அம்பலக் கூத்தன் குறிப்பினுக் கென்கட வேனே.
- நிலைபுரிந் தருளும் நித்தனே உலகில் நெறியலா நெறிகளில் சென்றே
- கொலைபுரிந் திட்ட கொடியவர் இவர்என் றயலவர் குறித்தபோ தெல்லாம்
- உலைபுரிந் திடுவெந் தீவயிற் றுள்ளே உற்றென நடுநடுக் குற்றே
- துலைபுரிந்207 தோடிக் கண்களை மூடித் துயர்ந்ததும் நீஅறிந் ததுவே.
- நிறமுறு விழிக்கீழ்ப் புறத்தொடு தோளும் நிறைஉடம் பிற்சில உறுப்பும்
- உறவுதோல் தடித்துத் துடித்திடுந் தோறும் உன்னிமற் றவைகளை அந்தோ
- பிறர்துயர் காட்டத் துடித்தவோ என்று பேதுற்று மயங்கிநெஞ் சுடைந்தேன்
- நறுவிய துகிலில் கறைஉறக் கண்டே நடுங்கினேன் எந்தைநீ அறிவாய்.
- நினைத்தபோ தெல்லாம் நின்னையே நினைத்தேன்
- நினைப்பற நின்றபோ தெல்லாம்
- எனைத்தனி ஆக்கி நின்கணே நின்றேன்
- என்செயல் என்னஓர் செயலும்
- தினைத்தனை எனினும் புரிந்திலேன் எல்லாம்
- சிவன்செய லாம்எனப் புரிந்தேன்
- அனைத்தும்என் அரசே நீஅறிந் ததுவே
- அடிக்கடி உரைப்பதென் நினக்கே.
- நிலந்தெளிந் ததுகண மழுங்கின சுவண
- நீடொளி தோன்றிற்றுக் கோடொலிக் கின்ற
- அலர்ந்தது தாமரை ஆணவ இருள்போய்
- அழிந்தது கழிந்தது மாயைமால் இரவு
- புலர்ந்தது தொண்டரோ டண்டரும் கூடிப்
- போற்றியோ சிவசிவ போற்றிஎன் கின்றார்
- இலங்குரு வளித்தஎன் அருட்பெருஞ் சோதி
- என்குரு வேபள்ளி எழுந்தரு ளாயே.
- நிலத்தே புழுத்த புழுவும் அலேன்புன் நிலத்திழிந்த
- மலத்தே புழுத்த புழுஅனை யேனைஅவ் வான்துதிக்கும்
- குலத்தே தலைமை கொடுத்தென் உளத்தில் குலவுகின்றாய்
- தலத்தே அருட்பெருஞ் சோதிஅப் பாஎன் தயாநிதியே.
- நிதியே என்னுள்ள நிறைவே பொதுவில் நிறைந்தசிவ
- பதியே அருட்பெருஞ் சோதிய னேஅம் பலம்விளங்கும்
- கதியே என்கண்ணும் கருத்தும் களிக்கக் கலந்துகொண்ட
- மதியே அமுத மழையேநின் பேரருள் வாழியவே.
- நிலத்தே அடைந்த இடர்அனைத்தும் நிமிடத் தொழித்தே நிலைபெற்றேன்
- வலத்தே அழியா வரம்பெற்றேன் மணிமன் றேத்தும் வாழ்வடைந்தேன்
- குலத்தே சமயக் குழியிடத்தே விழுந்திவ் வுலகம் குமையாதே
- நலத்தே சுத்த சன்மார்க்கம் நாட்டா நின்றேன் நாட்டகத்தே.
- நினைந்துநினைந் துணர்ந்துணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந் தன்பே
- நிறைந்துநிறைந் தூற்றெழுங்கண்ணீரதனால் உடம்பு
- நனைந்துநனைந் தருளமுதே நன்னிதியே ஞான
- நடத்தரசே என்னுரிமை நாயகனே என்று
- வனைந்துவனைந் தேத்துதும்நாம் வம்மின்உல கியலீர்
- மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்
- புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ்சொல் கின்றேன்
- பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே.
- நிந்தையிலார் நெஞ்சகத்தே நிறைந்தபெருந் தகையை
- நிலையனைத்தும் காட்டியருள் நிலைஅளித்த குருவை
- எந்தையைஎன் தனித்தாயை என்னிருகண் மணியை
- என்உயிரை என்உணர்வை என்அறிவுள் அறிவை
- சிந்தையிலே தனித்தினிக்கும் தெள்ளமுதை அனைத்தும்
- செய்யவல்ல தனித்தலைமைச் சிவபதியை உலகீர்
- முந்தைமல இருட்டொழிய முன்னுமினோ கரண
- முடுக்கொழித்துக் கடைமரண நடுக்கொழித்து முயன்றே.
- நினைக்க நினைக்கத் தித்திப் பெனது நினைவில் கொடுக்கு தே
- நின்பால் அன்றிப் பிறர்பால் செல்ல நெஞ்சம் நடுக்கு தே
- எனைத்துன் பொழித்தாட் கொண்ட நின்னை அன்னை என்ப னோ
- எந்தாய் அன்பி லேன்நின் னடிக்கு முன்னை அன்ப னோ.
- எனக்கும் உனக்கும்
- நித்த பரானந்த ஜோதி - சுத்த
- நிரதிச யானந்த நித்திய ஜோதி
- அத்துவி தானந்த ஜோதி - எல்லா
- ஆனந்த வண்ணமும் ஆகிய ஜோதி. சிவசிவ
- நினையும்நினைவு கனியஇனிய நிறைவுதருக சரணமே
- நினையும்எனையும் ஒருமைபுரியும் நெறியில்நிறுவு சரணமே.
- நினைக்கில்நெஞ்சம் இனிக்கும்என்ற நிருத்தமன்றில் ஒருத்தனே
- நினைக்கும்அன்பர் நிலைக்கநின்று பொருத்துகின்ற கருத்தனே.
- நிகழ்நவ நிலையே நிலையுயர் நிலையே
- நிறையருள் நிதியே நிதிதரு பதியே
- திகழ்சிவ பதமே சிவபத சுகமே
- திருநட மணியே திருநட மணியே.