- பழுது நேர்கின்ற வஞ்சகர் கடைவாய்ப்
- பற்றி நின்றதில் பயன்எது கண்டாய்
- பொழுது போகின்ற தெழுதிஎன் நெஞ்சே
- பொழில்கொள் ஒற்றியம் புரிதனக் கேகித்
- தொழுது சண்முக சிவசிவ எனநம்
- தோன்ற லார்தமைத் துதித்தவர் திருமுன்
- பழுது சொல்லுதும் ஐயுறல் என்மேல்
- ஆணை காண்அவர் அருள்பெறல் ஆமே.
- பழுத்தலைநன் குணராதே பதியருளோ டூடிப்
- பழுதுபுகன் றேன்கருணைப் பாங்கறியாப் படிறேன்
- புழுத்தலையேன் புகன்றபிழை பொறுத்தருளல் வேண்டும்
- புண்ணியர்தம் உள்ளகத்தே நண்ணியமெய்ப் பொருளே
- கழுத்தலைநஞ் சணிந்தருளுங் கருணைநெடுங் கடலே
- கால்மலர்என் தலைமீது தான்மலர அளித்தாய்
- விழுத்தலைவர் போற்றமணி மன்றில்நடம் புரியும்
- மெய்ம்மைஅறி வின்புருவாய் விளங்கியசற் குருவே.
- பழம்பிழி மதுரப் பாட்டல எனினும்
- பத்தரும் பித்தரும் பிதற்றும்
- கிழம்பெரும் பாட்டும் கேட்பதுன் உள்ளக்
- கிளர்ச்சிஎன் றறிந்தநாள் முதலாய்
- வழங்குநின் புகழே பாடுறு கின்றேன்
- மற்றொரு பற்றும்இங் கறியேன்
- சழங்குடை உலகில் தளருதல் அழகோ
- தந்தையுந் தாயும்நீ அலையோ.