- பவபந்த நிக்ரக வினோதச களம்சிற் பரம்பரா னந்தசொருபம்
- பரிசயா தீதம்சு யம்சதோ தயம்வரம் பரமார்த்த முக்தமௌனம்
- படனவே தாந்தாந்த மாகமாந் தாந்தநிரு பாதிகம் பரமசாந்தம்
- பரநாத தத்துவாந் தம்சகச தரிசனம் பகிரங்க மந்தரங்கம்
- பவசாத னம்பெறும் பாதகர் மேவும்இப் பாரிடைநல்
- சிவசாத னத்தரை ஏன்படைத் தாய்அத் திருவிலிகள்
- அவசாத னங்களைக் கண்டிவ ருள்ளம் அழுங்கஎன்றோ
- கவசா தனமெனக் கைம்மா னுரியைக் களித்தவனே.
- பவமான எழுகடல் கடந்துமேற் கதியான
- பதிநிலை அணைந்து வாழப்
- பகலான சகலமுடன் இரவான கேவலப்
- பகையுந் தடாத படிஓர்
- தவமான கலனில்அருள் மீகாம னால்அலது
- தமியேன் நடத்த வருமோ
- தானா நடக்குமோ என்செய்கேன் நின்திருச்
- சரணமே சரணம் அருள்வாய்
- உவமான மற்றபர சிவமான சுத்தவெளி
- உறவான முத்தர் உறவே
- உருவான அருவான ஒருவான ஞானமே
- உயிரான ஒளியின் உணர்வே
- அவமான நீக்கிஅருள் தில்லையம் பதிமருவும்
- அண்ணலார் மகிழும் மணியே
- அகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி
- வானந்த வல்லி உமையே.
- பவள நிறத்தார் திருஒற்றிப் பதியில் அமர்ந்தார் பரசிவனார்
- தவள நிறநீற் றணிஅழகர் தமியேன் தன்னைச் சார்ந்திலரே
- துவளும் இடைதான் இறமுலைகள் துள்ளா நின்ற தென்னளவோ
- திவளும் இழையாய் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
- பவம்எனுங் கடற்குள் வீழ்ந்துழன் றேங்கும்
- பாவியேன் தன்முகம் பார்த்திங்
- கெவையும்நா டாமல் என்னடி நிழற்கீழ்
- இருந்திடென் றுரைப்பதெந் நாளோ
- சிவம்எனும் தருமக் கடல்அகத் தெழுந்த
- தெள்ளிய அமுதமே தேனே
- குவிமுலை வல்லிக் கொடியொடுந் தணிகைக்
- குன்றமர்ந் திடுகுணக் குன்றே.
- பவமான எழுவகைப் பரப்பான வேலையிற்
- பசுவான பாவிஇன்னும்
- பற்றான குற்றமதை உற்றலை துரும்பெனப்
- படராது மறையனைத்தும்
- உவமான முரைசெய்ய அரிதான சிவநிலையை
- உற்றதனை யொன்றிவாழும்
- உளவான வழியீ தெனக்காட்டி அருள்செய்யில்
- உய்குவேன் முடிவானநல்
- தவமான நெறிபற்றி ரண்டற்ற சுகவாரி
- தன்னில்நினை நாடியெல்லாம்
- தானான சுத்தசன் மார்க்கஅனு பவசாந்த
- தற்பரர்க ளகநிறைந்தே
- அவமான கருணைப்பிர காசநின் னருள்தனை
- அடியனுக் கருள்செய்குவாய்
- அற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும்
- ஆனந்த நடனமணியே.
- பவனத் தினண்டப் பரப்பினெங் கெங்கும்
- அவனுக் கவனா மருட்பெருஞ் ஜோதி
- பவக்கடல் கடந்துநான் பார்த்தபோ தருகே
- உவப்புறு வளங்கொண் டோங்கிய கரையே
- பவனே வெம்பவ நோய் - தனைத் - தீர்க்கும் பரஞ்சுட ரே
- சிவனே செம்பொரு ளே - திருச் - சிற்றம் பலநடிப் பாய்
- தவநே யம்பெறு வார் - தமைத் - தாங்கி யருள்செய வல்
- லவனே தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே.
- பவமே தவிர்ப்பது சாகா வரமும் பயப்பதுநல்
- தவமே புரிந்தவர்க் கின்பந் தருவது தான்தனக்கே
- உவமே யமான தொளிஓங்கு கின்ற தொளிருஞ்சுத்த
- சிவமே நிறைகின்ற துத்தர ஞான சிதம்பரமே.
- பவநெறி செலுமவர் கனவிலும் அறியாப்
- பரம்பொரு ளாகிஎன் உளம்பெறும் ஒளியே
- நவநெறி கடந்ததோர் ஞானமெய்ச் சுகமே
- நான்அருள் நிலைபெற நல்கிய நலமே
- சிவநெறி யேசிவ நெறிதரு நிலையே
- சிவநிலை தனில்உறும் அனுபவ நிறைவே
- தவநெறி செலும்அவர்க் கினியநல் துணையே
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.