- பூவணமும் பூமணமும் போலவ மர்ந்ததிருப்
- பூவணத்தில் ஆனந்தப் பொக்கிஷமே - தீவணத்தில்
- பூப்பா திரிகொன்றை புன்னைமுதற் சூழ்ந்திலங்கும்
- ஏர்ப்பா75 திரிப்புலியூர் ஏந்தலே - சீர்ப்பொலியப்
- பூந்தண் டளிவிரித்துப் புக்கிசைக்குஞ் சீரோண
- காந்தன் றளிஅருட்ப்ர காசமே - சேர்ந்தவர்க்கே
- பூணா வெலும்பணியாய்ப் பூண்டோய்நின் பொன்வடிவங்
- காணாது வீழ்நாள் கழித்ததுண்டு - மாணாத
- பூப்பதுவாய்க் காப்பதுவாய்ப் போக்குவதாய்த் தேக்குவதாய்
- நீப்பதுவாய்த் தன்னுள் நிறுத்துவதாய்ப் - பூப்பதின்றி
- பூமியெங்கும் வாழ்த்திப் புகழ்வார் விரும்புமிட்ட
- காமியங்கள் ஈயும் கணேசனெவன் - நாமியங்க
- பூணிலங்க வெண்பொற் பொடியிலங்க என்பணித்தார்
- மாணிலங்க மேவுதிரு மார்பழகும் - சேணிலத்தர்
- பூவில் அடங்காப் புலியென்பேன் எப்புலியும்
- மேவில் வயப்பட்டால் எதிராதே - நோவியற்றி
- பூத்தால் சிறுவர்களும் பூசா பலம்என்பார்
- தேற்றார் சிவபூசை செய்யாராய்ப் - பூத்தாவி
- பூதமெங்கே மற்றைப் புலனெங்கே பல்லுயிரின்
- பேதமெங்கே அண்டமெனும் பேரெங்கே - நாதமெங்கே
- மன்வடிவ மெங்கே மறையெங்கே வான்பொரு
- பொன்வடிவம் கொள்ளாத போது.
- பூவைவிட்டுப் புல்லெடுப்பார் போலுன் திருப்பாதத்
- தேவைவிட்டு வெம்பிறவித் தேவர்களைக் - கோவையிட்டுக்
- கூவுவார் மற்றவரைக் கூடியிடேன் கூடுவனேல்
- ஓவுவா ராவ133 லுனை.
- பூவுக் கரையரும்வான் புங்கவரும் போற்றுதிரு
- நாவுக் கரையரெனு நன்னாம - மேவுற்ற
- தொண்டர்க்கு நீகட்டுச் சோறெடுத்தாய் என்றறிந்தோ
- தொண்டர்க்குத் தொண்டனென்பார் சொல்.
- பூதமே அவைதோன்றிப் புகுந்தொ டுங்கும்
- புகலிடமே இடம்புரிந்த பொருளே போற்றும்
- வேதமே வேதத்தின் விளைவே வேத
- வியன்முடிவே அம்முடிவின் விளங்கும் கோவே
- நாதமே நாதாந்த நடமே அந்த
- நடத்தினையுள் நடத்துகின்ற நலமே ஞான
- போதமே போதமெலாம் கடந்து நின்ற
- பூரணமே யோகியருள் பொலிந்த தேவே.
- பூவாய் மலர்க்குழல் பூவாய்மெய் அன்பர் புனைந்ததமிழ்ப்
- பாவாய் நிறைந்தபொற் பாவாய்செந் தேனிற் பகர்மொழியாய்
- காவாய் எனஅயன் காவாய் பவனும் கருதுமலர்
- மாவாய் எழில்ஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
- பூங்கொடி இடையைப் புணர்ந்தசெந் தேனே
- புத்தமு தேமறைப் பொருளே
- வாங்கொடி விடைகொள் அண்ணலே முல்லை
- வாயில்வாழ் மாசிலா மணியே
- தீங்கொடி யாத வினையனேன் எனினும்
- செல்வநின் கோயில்வந் தடைந்தால்
- ஈங்கொடி யாத அருட்கணால் நோக்கி
- ஏன்எனா திருப்பதும் இயல்போ.
- பூமாந்தும் வண்டெனநின் பொன்னருளைப் புண்ணியர்கள்
- தாமாந்தி நின்னடிக்கீழ்ச் சார்ந்துநின்றார் ஐயோநான்
- காமாந்த காரம்எனும் கள்ளுண்டு கண்மூடி
- ஏமாந்தேன் ஒற்றி எழுத்தறியும் பெருமானே.
- பூணாக மாடப் பொதுநடிக்கும் புண்ணியனே
- சேணாகம் வாங்கும் சிவனே கடல்விடத்தை
- ஊணாக உள்ளுவந்த ஒற்றியப்பா மால்அயனும்
- காணாத நின்உருவைக் கண்டு களியேனோ.
- பூதம் நும்படை எனினும்நான் அஞ்சேன்
- புதிய பாம்பின்பூண் பூட்டவும் வெருவேன்
- பேதம் இன்றிஅம் பலந்தனில் தூக்கும்
- பெருமைச் சேவடி பிடிக்கவும் தளரேன்
- ஏதம் எண்ணிடா தென்னையும் தொழும்பன்
- என்று கொள்விரேல் எனக்கது சாலும்
- சூத ஒண்பொழில் ஒற்றியூர் உடையீர்
- தூய மால்விடைத் துவசத்தி னீரே.
- பூத்திடும் அவனும் காத்திடு பவனும் புள்விலங் குருக்கொடு நேடி
- ஏத்திடும் முடியும் கூத்திடும் அடியும் இன்னமும் காண்கிலர் என்றும்
- கோத்திடும் அடியர் மாலையின் அளவில் குலவினை என்றுநல் லோர்கள்
- சாற்றிடும் அதுகேட் டுவந்தனன் நினது சந்நிதி உறஎனக் கருளே.
- பூதநெறி யாதிவரு நாதநெறி வரையுமாப்
- புகலுமூ வுலகுநீத்துப்
- புரையுற்ற மூடம்எனும் இருள்நிலம்அ கன்றுமேல்
- போய்அருள்ஒ ளித்துணையினால்
- வேதநெறி புகல்சகல கேவலம்இ லாதபர
- வெளிகண்டு கொண்டுகண்ட
- விளைவின்றி நான்இன்றி வெளிஇன்றி வெளியாய்
- விளங்குநாள் என்றருளுவாய்
- வாதநெறி நடவாத போதநெறி யாளர்நிறை
- மதிநெறிஉ லாவும்மதியே
- மணிமிடற் றரசேஎம் வாழ்வின்முத லேஅரு
- மருந்தேபெ ருந்தெய்வமே
- காதநெறி மணம்வீசு கனிதருபொ ழிற்குலவு
- கடிமதிற் றில்லைநகர்வாழ்
- கனகஅம் பலநாத கருணையங் கணபோத
- கமலகுஞ் சிதபாதனே.
- பூவாய் வாட்கண் மகளேநீ புரிந்த தவந்தான் எத்தவமோ
- சேவாய் விடங்கப் பெருமானார் திருமால் அறியாச் சேவடியார்
- காவாய்ந் தோங்கும் திருஒற்றிக் காவல் உடையார் எவ்வௌர்க்கும்
- கோவாய் நின்றார் அவர்தம்மைக் கூடி உடலம் குளிர்ந்தனையே.
- பூணா அணிபூண் புயமுடையார் பொன்னம் பலத்தார் பொங்குவிடம்
- ஊணா உவந்தார் திருஒற்றி யூர்வாழ் வுடையார் உண்மைசொலி
- நீணால் இருந்தார் அவர்இங்கே நின்றார் மீட்டும் நின்றிடவே
- காணா தயர்ந்தேன் என்னடிநான் கனவோ நனவோ கண்டதுவே.
- பூமேல் அவனும் மால்அவனும் போற்றி வழுத்தும் பூங்கழலார்
- சேமேல் வருவார் திருஒற்றித் தியாகர் அவர்தம் திருப்புயத்தைத்
- தேமேல் அலங்கல் முலைஅழுந்தச் சேர்ந்தால் அன்றிச் சித்தசன்கைத்
- தாமேல் அழற்பூத் தாழாதென் சகியே இனிநான் சகியேனே.
- பூணாத பூண்களெலாம் பூண்டபரம் பொருளே
- பொய்யடியேன் பிழைமுழுதும் பொறுத்தருளி என்றும்
- காணாத காட்சியெலாங் காட்டிஎனக் குள்ளே
- கருணைநடம் புரிகின்ற கருணையைஎன் புகல்வேன்
- மாணாத குணக்கொடியேன் இதைநினைக்குந் தோறும்
- மனமுருகி இருகண்ர் வடிக்கின்றேன் கண்டாய்
- ஏணாதன் என்னினும்யான் அம்மையின்நின் அடியேன்
- எனஅறிந்தேன் அறிந்தபின்னர் இதயமலர்ந் தேனே.
- பூதநிலை முதற்பரமே நாதநிலை அளவும்
- போந்தவற்றின் இயற்கைமுதற் புணர்ப்பெல்லாம் விளங்க
- வேதநிலை ஆகமத்தின் நிலைகளெலாம் விளங்க
- வினையேன்றன் உளத்திருந்து விளக்கியமெய் விளக்கே
- போதநிலை யாய்அதுவுங் கடந்தஇன்ப நிலையாய்ப்
- பொதுவினின்மெய் அறிவின்ப நடம்புரியும் பொருளே
- ஏதநிலை யாவகைஎன் மயக்கம்இன்னுந் தவிர்த்தே
- எனைக்காத்தல் வேண்டுகின்றேன் இதுதருணங் காணே.
- பூதவெளி கரணவெளி பகுதிவெளி மாயா
- போகவெளி மாமாயா யோகவெளி புகலும்
- வேதவெளி அபரவிந்து வெளிஅபர நாத
- வெளிஏக வெளிபரம வெளிஞான வெளிமா
- நாதவெளி சுத்தவெறு வெளிவெட்ட வெளியா
- நலில்கின்ற வெளிகளலாம் நடிக்கும்அடி வருந்த
- ஏதஎளி யேன்பொருட்டா நடந்தென்பால் அடைந்தே
- என்கையின்ஒன் றளித்தனைநின் இரக்கம்எவர்க் குளதே.
- பூரணிசிற் போதைசிவ போகிசிவ யோகி
- பூவையர்கள் நாயகிஐம் பூதமுந்தா னனாள்
- தேரணியும் நெடுவிதித் தில்லைநக ருடையாள்
- சிவகாம வல்லிபெருந் தேவிஉளங் களிப்ப
- ஏரணியும் மணிமன்றில் இன்பவடி வாகி
- இன்பநடம் புரிகின்ற எம்முடைய துரையே
- தாரணியில் உனைப்பாடுந் தரத்தைஅடைந் தனன்என்
- தன்மையெலாம் நன்மைஎனச் சம்மதித்த வாறே.
- பூவுண்டவெள் விடைஏறிய புனிதன்தரு மகனார்
- பாவுண்டதொர் அமுதன்னவர் பசுமாமயில் மேல்வந்
- தாவுண்டனர் எனதின்னலம் அறியார்என இருந்தால்
- நாவுண்டவர் திருமுன்பிது நலம் அன்றுமக் கெனவே.
- பூவே மணமே சரணம் சரணம்
- பொருளே அருளே சரணம் சரணம்
- கோவே குகனே சரணம் சரணம்
- குருவே திருவே சரணம் சரணம்
- தேவே தெளிவே சரணம் சரணம்
- சிவசண் முகனே சரணம் சரணம்
- காவேர் தருவே சரணம் சரணம்
- கந்தா சரணம் சரணம் சரணம்
- பூசைசெய்து பெற்றவுன்றன் பொன்னடிமே லன்றியயல்
- ஆசையொன்று மில்லையெனக் கன்புடைய ஐயாவே.
- பூசைசெய் வாருளம் ஆசைசெய் வார்தில்லை
- ஈசர் எமதுநட ராஜற்கு - மங்களம்.
- பூமி புகழ்குரு சாமி தனைஈன்ற
- வாமி எனுஞ்சிவ காமிக்கு - மங்களம்.
- பூணி லங்குந்தன வாணி பரம்பர
- வாணி கலைஞர்கொள் வாணிக்கு - மங்களம்.
- பூரண வடிவாய்ப் பொங்கிமேற் றதும்பி
- ஆரண முடியுட னாகம முடியுங்
- பூப்பினும் பலகால் மடந்தையர் தமைப்போய்ப்புணர்ந்தவெம் புலையனேன் விடஞ்சார்
- பாப்பினுங் கொடியர் உறவையே விழைந்த பள்ளனேன் கள்ளனேன் நெருக்கும்
- ஆப்பினும் வலியேன் அறத்தொழில் புரியேன்அன்பினால்அடுத்தவர்கரங்கள்
- கூப்பினுங்கூப்பாக் கொடுங்கையேன் எனினும் கோபியேல் காத்தருள் எனையே.
- பூமியோ பொருளோ விரும்பிலேன் உன்னைப்
- புணர்ந்திட விரும்பினேன் என்றாள்
- காமிஎன் றெனைநீ கைவிடேல் காமக்
- கருத்தெனக் கில்லைகாண் என்றாள்
- சாமிநீ வரவு தாழ்த்திடில் ஐயோ
- சற்றுநான் தரித்திடேன் என்றாள்
- மாமிகு கருணை வள்ளலே என்றாள்
- வரத்தினால் நான்பெற்ற மகளே.
- பூத்தசுடர்ப் பூஅகத்தே புறத்தேசூழ் இடத்தே
- பூத்துமிகக் காய்த்துமதி அமுதொழுகப் பழுத்து
- மாத்தகைய பெருஞ்ஜோதி மணிமன்றுள் விளங்கும்
- வண்ணம்ஒரு சிறிதறிய மாட்டாமல் மறைகள்
- ஏத்துவதும் ஏறுவதும் இறங்குவதும் ஆகி
- இருக்கின்ற என்றுணர்ந்தோர் இயம்பிடில்இச் சிறியேன்
- தோத்திரஞ்செய் தம்மைகண்டு மகிழ்ந்திடஅம் மன்றில்
- துலங்கும்அடிப் பெருமையைஎன் சொல்லுவது தோழி.
- பூஒன்றே முப்பூஐம் பூஎழுபூ நவமாம்
- பூஇருபத் தைஐம்பூவாய்ப் பூத்துமலர்ந் திடவும்
- நான்ஒன்று மணம்வேறு வணம்வேறு வேறா
- நண்ணிவிளங் குறவும்அதின் நற்பயன்மாத் திரையில்
- மேவொன்றா இருப்பஅதின் நடுநின்று ஞான
- வியன்நடனம் புரிகின்ற விரைமலர்ச்சே வடியின்
- பாஒன்று பெருந்தகைமை உரைப்பவர்ஆர் சிறியேன்
- பகர்ந்திடவல் லுநள் அல்லேன் பாராய்என் தோழி.
- பூமி பொருந்து புரத்தே287 நமதுசிவ
- காமிதனை வேட்டுக் கலந்தமர்ந்தான் - நேமி
- அளித்தான்மால் கண்மலருக் கானந்தக் கூத்தில்
- களித்தான் அவன்றான் களித்து.
- பூதமுத லாயபல கருவிகள் அனைத்தும்என்
- புகல்வழிப் பணிகள்கேட்பப்
- பொய்படாச் சத்திகள் அனந்தகோ டிகளும்மெய்ப்
- பொருள்கண்ட சத்தர்பலரும்
- ஏதமற என்னுளம் நினைத்தவை நினைத்தாங்
- கிசைந்தெடுத் துதவஎன்றும்
- இறவாத பெருநிலையில் இணைசொலா இன்புற்
- றிருக்கஎனை வைத்தகுருவே
- நாதமுதல் இருமூன்று வரையந்த நிலைகளும்
- நலம்பெறச் சன்மார்க்கமாம்
- ஞானநெறி ஓங்கஓர் திருவருட் செங்கோல்
- நடத்திவரு நல்லஅரசே
- வாதமிடு சமயமத வாதிகள் பெறற்கரிய
- மாமதியின் அமுதநிறைவே
- மணிமன்றின் நடுநின்ற ஒருதெய்வ மேஎலாம்
- வல்லநட ராஜபதியே.
- பூவார் கொன்றைச் செஞ்சடை யாளர் புகழாளர்
- ஈவார் போல்வந் தென்மனை புக்கார் எழில்காட்டி
- தேவார் தில்லைச் சிற்சபை மேவும் திருவாளர்
- ஆவா என்றார் என்னடி அம்மா அவர்சூதே.
- பூத வெளியின் நடமும் பகுதி வெளியின் ஆட்ட மும்
- போக வெளியில் கூத்தும் யோக வெளியுள் ஆட்ட மும்
- நாத வெளியில் குனிப்பும் பரம நாத நடமு மே
- நன்று காட்டிக் கொடுத்தாய் என்றும் நலியாத் திடமு மே.
- எனக்கும் உனக்கும்
- பூவாம லேநிதம் காய்த்த இடத்தும்
- பூவார் மலர்கொண்டு பந்தாடா நின்றேன்
- சாவா வரம்தந்து வாழ்வாயோ பந்தே
- சாவாமல் என்னொடு வீழ்வாயோ பந்தே.