- பெரும்பூகந் தெங்கிற் பிறங்க வளங்கொள்ளும்
- இரும்பூளை மேவி யிருந்தோய் - விரும்பும்
- பெரிதாய்ச் சிறிதாய்ப் பெரிதும் சிறிதும்
- அரிதாய் அரிதில் அரிதாய்த் - துரிய
- பெண்ணால் எவையும் பிறப்பித்து மற்றைநுதற்
- கண்ணால் அழிக்கின்ற கள்வனெவன் - எண்ணாது
- பெண்ணென் றுரைப்பிற் பிறப்பேழும் ஆந்துயரம்
- எண்ணென்ற நல்லோர்சொல் எண்ணிலையே - பெண்ணிங்கு
- பெண்என்றால் யோகப் பெரியோர் நடுங்குவரேல்
- மண்நின்றார் யார்நடுங்க மாட்டார்காண் - பெண்என்றால்
- பெண்டிருந்து மாழ்கப் பிணங்கொண்டு செல்வாரைக்
- கண்டிருந்தும் அந்தோ கலங்கிலையே - பண்டிருந்த
- பெற்றார் மகிழ்வெய்தப் பேசிவிளை யாடுங்கால்
- அற்றாவி போவ தறிந்திலையோ - கற்றாயப்
- பெற்றிடுதாய் போல்வதுநின் பெற்றியென்பேன் பிள்ளையது
- மற்றழுதால் கேட்டும் வராதங்கே - சற்றிருக்கப்
- பெற்றாள் பொறுப்பள் பிரானீ பொறுக்கினுநின்
- பொற்றாள் பொறாஎம் புலம்பு.
- பெண்ணான் மயங்கும் எளியேனை ஆளப் பெருங்கருணை
- அண்ணாநின் உள்ளம் இரங்காத வண்ணம் அறிந்துகொண்டேன்
- கண்ணார் உலகில்என் துன்பமெல் லாம்வெளி காணிலிந்த
- மண்ணா பிலத்தொடு விண்ணாடுங் கொள்ளை வழங்குமென்றே.
- பெற்றா ளனையநின் குற்றேவல் செய்து பிழைக்கறியாச்
- சிற்றாள் பலரினும் சிற்றா ளெனுமென் சிறுமைதவிர்த்
- துற்றாள் கிலைஎனின் மற்றார் துணைஎனக் குன்கமலப்
- பொற்றாள் அருட்புகழ்க் கற்றாய்ந்து பாடப் புரிந்தருளே.
- பெண்மணி பாகப் பெருமணி யேஅருட் பெற்றிகொண்ட
- விண்மணி யான விழிமணி யேஎன் விருப்புறுநல்
- கண்மணி நேர்கட வுண்மணி யேஒரு கால்மணியைத்
- திண்மணிக் கூடலில் விற்றோங்கு தெய்வ சிகாமணியே.
- பெரும்பேதை யேன்சிறு வாழ்க்கைத் துயர்எனும் பேரலையில்
- துரும்பே எனஅலை கின்றேன் புணைநின் துணைப்பதமே
- கரும்பே கருணைக் கடலே அருண்முக் கனிநறவே
- வரும்பேர் அருள்ஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
- பெருஞ்சீ ரொற்றி வாணரிவர் பேசா மௌனம் பிடித்திங்கே
- விரிஞ்சீர் தரநின் றுடன்கீழு மேலு நோக்கி விரைந்தார்யான்
- வருஞ்சீ ருடையீர் மணிவார்த்தை வகுக்க வென்றேன் மார்பிடைக்கா
- ழிருஞ்சீர் மணியைக் காட்டுகின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- பெருந்தா ரணியோர் புகழொற்றிப் பெருமா னிவர்தம் முகநோக்கி
- யருந்தா வமுத மனையீரிங் கடுத்த பரிசே தறையுமென்றேன்
- வருந்தா திங்கே யருந்தமுத மனையா ளாக வாழ்வினொடு
- மிருந்தா யடைந்தே மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- பெற்ற தாய்தனை மகமறந் தாலும்
- பிள்ளை யைப்பெறும் தாய்மறந் தாலும்
- உற்ற தேகத்தை உயிர்மறந் தாலும்
- உயிரை மேவிய உடல்மறந் தாலும்
- கற்ற நெஞ்சகம் கலைமறந் தாலும்
- கண்கள் நின்றிமைப் பதுமறந் தாலும்
- நற்ற வத்தவர் உள்ளிருந் தோங்கும்
- நமச்சி வாயத்தை நான்மற வேனே.
- பெருங்கருணைக் கடலேஎன் குருவே முக்கண்
- பெருமானே நினைப்புகழேன் பேயேன் அந்தோ
- கருங்கல்மனக் குரங்காட்டி வாளா நாளைக்
- கழிக்கின்றேன் பயன்அறியாக் கடைய னேனை
- ஒருங்குருள உடல்பதைப்ப உறுங்குன் றேற்றி
- உருட்டுகினும் உயிர்நடுங்க உள்ளம் ஏங்க
- இருங்கழுவில் ஏற்றுகினும் அன்றி இன்னும்
- என்செயினும் போதாதே எந்தாய் எந்தாய்.
- பெரியானை மாதர்ப் பிறைக்கண்ணி யானை
- அரியானை அங்கணனை ஆர்க்கும் - கரியானைத்
- தோலானைச் சீர்ஒற்றிச் சுண்ணவெண் நீற்றானை
- மேலானை நெஞ்சே விரும்பு.
- பெண்ணமர் பாகனைப் பேரரு ளோனைப்
- பெரியவர்க் கெல்லாம்பெ ரியவன் தன்னைக்
- கண்ணமர் நெற்றிக் கடவுள்பி ரானைக்
- கண்ணனை ஆண்டமுக் கண்ணனை எங்கள்
- பண்ணமர் பாடல்ப ரிசளித் தானைப்
- பார்முதல் அண்டம்ப டைத்தளிப் பானை
- எண்அம ராதஎ ழிலுடை யானை
- இன்றைஇ ரவில்எ திர்ந்துகொள் வேனே.
- பெருமநின் அருளே அன்றிஇவ் வுலகில் பேதையர் புழுமலப் பிலமாம்
- கருமவாழ் வெனைத்தும் வேண்டிலேன் மற்றைக் கடவுளர் வாழ்வையும் விரும்பேன்
- தருமவா ரிதியே தடம்பணை ஒற்றித் தலத்தமர் தனிமுதல் பொருளே
- துருமவான் அமுதே அடியனேன் தன்னைச் சோதியா தருள்வதுன் பரமே.
- பெண்மணியே என்றுலகில் பேதையரைப் பேசாதென்
- கண்மணியே கற்பகமே கண்ணுதலில் கொள்கரும்பே
- ஒண்மணியே தேனேஎன் றொற்றியப்பா உன்தனைநான்
- பண்மணஞ்செய் பாட்டில் பரவித் துதியேனோ.
- பெருமையில் பிறங்கும் பெரியநற் குணத்தோர்
- பெற்றதோர் பெருந்தனிப் பொருளே
- அருமையில் பிரமன் ஆதிய தேவர்
- அடைந்தநற் செல்வமே அமுதே
- இருமையிற் பயனும் நின்திரு அருளே
- என்றுநின் அடைக்கலம் ஆனேன்
- கருமையிற் பொலியும் விடநிகர் துன்பக்
- களைகளைந் தெனைவிளைத் தருளே.
- பெரியபொருள் எவைக்கும்முதற் பெரும்பொருளாம் அரும்பொருளைப் பேசற்கொண்ணாத்
- துரியநிலை அநுபவத்தைச் சுகமயமாய் எங்குமுள்ள தொன்மை தன்னை
- அரியபரம் பரமான சிதம்பரத்தே நடம்புரியும் அமுதை அந்தோ
- உரியபர கதிஅடைதற் குன்னினையேன் மனனேநீ உய்கு வாயே.
- பெத்த முஞ்சதா முத்தி யும்பெரும்
- பேத மாயதோர் போத வாதமும்
- சுத்த முந்தெறா வித்த முந்தரும்
- சொரூப இன்பமே துய்க்கும் வாழ்க்கையும்
- நித்த முந்தெரிந் துற்ற யோகர்தம்
- நிமல மாகிமெய்ந் நிறைவு கொண்டசிற்
- சித்த முஞ்செலாப் பரம ராசியம்
- சிவசி தம்பரம் சிவசி தம்பரம்.
- பெண்ணாசை தீர்க்கு மருந்து - பொருட்
- பேராசை யெல்லாம் பிளக்கு மருந்து
- மண்ணாசை தீர்க்கு மருந்து - எல்லாம்
- வல்ல மருந்தென்று வாழ்த்து மருந்து. - நல்ல
- பெண்ணொரு பால்வைத்த மத்த னடி - சிறு
- பிள்ளைக் கறிகொண்ட பித்த னடி
- நண்ணி நமக்கரு ளத்த னடி - மிக
- நல்லன டியெல்லாம் வல்ல னடி.. - கொம்மி
- பெற்றம் இவரும் பெருமானார் பிரமன் அறியாப் பேர்ஒளியாய்
- உற்ற சிவனார் திருஒற்றி யூர்வாழ் வுடையார் உற்றிலரே
- எற்றென் றுரைப்பேன் செவிலி அவள் ஏறாமட்டும் ஏறுகின்றாள்
- செற்றம் ஒழியாள் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
- பெற்றி அறியாப் பிரமனுக்கும் பெரிய மாற்கும் பெறஅறியார்
- புற்றின் அரவார் கச்சைஉடைப் புனிதர் என்னைப் புணரும்இடம்
- தெற்றி மணிக்கால் விளங்குதில்லைச் சிற்றம் பலமோ அன்றிஇந்த
- ஒற்றி நகரோ சோதிடம்பார்த் துரைப்பீர் புரிநூல் உத்தமரே.
- பெருமை உடையார் மனைதொறும்போய்ப் பிச்சை எடுத்தார் ஆனாலும்
- அருமை மணியார் அம்பலத்தில் ஆடித் திரிந்தார் ஆனாலும்
- ஒருமை உடையார் கோவணமே உடையாய் உடுத்தார் ஆனாலும்
- கருமை விழியாய் நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே.
- பெண்சுமந்த பாகப் பெருமான் ஒருமாமேல்
- எண்சுமந்த சேவகன்போல் எய்தியதும் வைகைநதி
- மண்சுமந்து நின்றதும்ஓர் மாறன் பிரம்படியால்
- புண்சுமந்து கொண்டதும்நின் பொருட்டன்றோ புண்ணியனே .
- பெரும்பொருட் கிடனாம் பிரணவ வடிவில் பிறங்கிய ஒருதனிப் பேறே
- அரும்பொருள் ஆகி மறைமுடிக் கண்ணே அமர்ந்தபே ரானந்த நிறைவே
- தரும்பர போக சித்தியும் சுத்த தருமமும் முத்தியும் சார்ந்து
- விரும்பினோர்க் களிக்கும் வள்ளலே சித்தி விநாயக விக்கினேச் சுரனே.
- பெருவயல் ஆறு முகன்நகல் அமர்ந்துன் பெருமைகள் பேசிடத் தினமும்
- திருவளர் மேன்மைத் திறமுறச் சூழும் திருவருட் பெருமையை மறவேன்
- மருவளர் தெய்வக் கற்பக மலரே மனமொழி கடந்தவான் பொருளே
- வருமலை வல்லிக் கொருமுதற் பேறே வல்லபைக் கணேசமா மணியே.
- பெருங்களப முலைமடவார் என்னும் பொல்லாப்
- பேய்க்கோட்பட் டாடுகின்ற பித்த னேனுக்
- கிரும்புலவர்க் கரியதிரு அருள்ஈ வாயேல்
- என்சொலார்4 அடியர்அதற் கெந்தாய் எந்தாய்
- கரும்பின்இழிந் தொழுகும்அருள் சுவையே முக்கண்
- கனிகனிந்த தேனேஎன் கண்ணே ஞானம்
- தரும்புனிதர் புகழ்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- பெருமை வேண்டிய பேதையில் பேதையேன் பெருந்துயர் உழக்கின்றேன்
- ஒருமை ஈயும்நின் திருப்பதம் இறைஞ்சிலேன் உய்வதெப் படியேயோ
- அருமை யாம்தவத் தம்மையும் அப்பனும் அளித்திடும் பெருவாழ்வே
- தரும வள்ளலே குணப்பெருங் குன்றமே தணிகைமா மலையானே.
- பெருமை நிதியே மால்விடைகொள் பெம்மான் வருந்திப் பெறும்பேறே
- அருமை மணியே தணிகைமலை அமுதே உன்றன் ஆறெழுத்தை
- ஒருமை மனத்தின் உச்சரித்திங் குயர்ந்த திருவெண்ணீறிட்டால்
- இருமை வளனும் எய்தும்இடர் என்ப தொன்றும் எய்தாதே.
- பெண்குணத்தில் கடைப்படும் ஓர் பேய்க்குணங்கொள்
- நாயேன்றன் பிழைகள் எல்லாம்
- எண்குணப்பொற் குன்றேநின் திருஉளத்தில்
- சிறிதேனும் எண்ணேல் கண்டாய்
- பண்குணத்தில் சிறந்திடும்நின் பத்தர்தமைப்
- புரப்பதுபோல் பாவி யேனை
- வண்குணத்தில் புரத்தியிலை யேனும்எனைக்
- கைவிடேல் வடிவே லோனே.
- பெண்கொண்ட சுகமதே கண்கண்ட பலன்இது
- பிடிக்கஅறி யாதுசிலர்தாம்
- பேர்ஊர் இலாதஒரு வெறுவெளியி லேசுகம்
- பெறவே விரும்பிவீணில்
- பண்கொண்ட உடல்வெளுத் துள்ளே நரம்பெலாம்
- பசைஅற்று மேல்எழும்பப்
- பட்டினி கிடந்துசா கின்றார்கள் ஈதென்ன
- பாவம்இவர் உண்மைஅறியார்
- கண்கொண்ட குருடரே என்றுவாய்ப் பல்எலாங்
- காட்டிச் சிரித்துநீண்ட
- கழுமரக் கட்டைபோல் நிற்பார்கள் ஐயஇக்
- கயவர்வாய் மதமுழுதுமே
- மண்கொண்டு போகஓர் மருந்தருள்க தவசிகா
- மணிஉலக நாதவள்ளல்
- மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற
- வளர்வைத் தியநாதனே.
- பெரியநா தாந்தப் பெருநிலை வெளியெனும்
- அரியசிற் றம்பலத் தருட்பெருஞ் ஜோதி
- பெரிதினும் பெரிதாய்ச் சிறிதினுஞ் சிறிதாய்
- அரிதினு மரிதா மருட்பெருஞ் ஜோதி
- பெருவெளி யதனைப் பெருஞ்சுக வெளியில்
- அருளுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- பெருமையிற் பெருமையும் பெருமையிற் சிறுமையும்
- அருணிலை வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- பெண்ணினுள் ளாணு மாணினுட் பெண்ணும்
- அண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- பெண்ணினுண் மூன்று மாணினுள் ளிரண்டும்
- அண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- பெண்ணிடை நான்கு மாணிடை மூன்றும்
- அண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
- பெண்ணிய லாணு மாணியற் பெண்ணும்
- அண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
- பெண்டிறல் புறத்து மாண்டிற லகத்தும்
- அண்டுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- பெண்ணியன் மனமு மாணிய லறிவும்
- அண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- பெற்றதம் பிள்ளைக் குணங்களை எல்லாம் பெற்றவர் அறிவரே அல்லால்
- மற்றவர் அறியார் என்றனை ஈன்ற வள்ளலே மன்றிலே நடிக்கும்
- கொற்றவ ஓர்எண்குணத்தவ நீ தான் குறிக்கொண்டகொடியனேன்குணங்கள்
- முற்றும்நன் கறிவாய் அறிந்தும்என்றனைநீ முனிவதென்முனிவுதீர்ந்தருளே.
- பெண்மையே விழைந்தேன் அவர்மனம் அறியேன்
- பேய்எனப் பிடித்தனன் மடவார்க்
- குண்மையே புகல்வான் போன்றவர் தமைத்தொட்
- டுவந்தகங் களித்தபொய் யுளத்தேன்
- தண்மையே அறியேன் வெம்மையே உடையேன்
- சாத்திரம் புகன்றுவாய் தடித்தேன்
- நண்மையே அடையேன் என்னினும் உனையே
- நம்பினேன் கைவிடேல் எனையே.
- பெரியன்அருட் பெருஞ்சோதிப் பெருங்கருணைப் பெருமான்
- பெரும்புகழைப் பேசுதலே பெரும்பேறென் றுணர்ந்தே
- துரியநிலத் தவர்எல்லாம் துதிக்கின்றார் ஏழை
- துதித்தல்பெரி தலஇங்கே துதித்திடஎன் றெழுந்த
- அரியபெரும் பேராசைக் கடல்பெரிதே அதுஎன்
- அளவுகடந் திழுக்கின்ற தாதலினால் விரைந்தே
- உரியஅருள் அமுதளித்தே நினைத்துதிப்பித் தருள்வாய்
- உலகமெலாம் களித்தோங்க ஓங்குநடத் தரசே.
- பெட்டிஇதில் உலவாத பெரும்பொருள்உண் டிதுநீ
- பெறுகஎன அதுதிறக்கும் பெருந்திறவுக் கோலும்
- எட்டிரண்டும் தெரியாதேன் என்கையிலே கொடுத்தீர்
- இதுதருணம் திறந்ததனை எடுக்கமுயல் கின்றேன்
- அட்டிசெய நினையாதீர் அரைக்கணமும் தரியேன்
- அரைக்கணத்துக் காயிரம்ஆ யிரங்கோடி ஆக
- வட்டிஇட்டு நும்மிடத்தே வாங்குவன்நும் ஆணை
- மணிமன்றில் நடம்புரிவீர் வந்தருள்வீர் விரைந்தே.
- பெறுவது நுமைஅன்றிப் பிறிதொன்றும் விரும்பேன்
- பேசல்நும் பேச்சன்றிப் பிறிதொன்றும் பேசேன்
- உறுவதுநும் அருள்அன்றிப் பிரிதொன்றும் உவவேன்
- உன்னல்உம் திறன்அன்றிப் பிரிதொன்றும் உன்னேன்
- மறுநெறி தீர்த்தெனை வாழ்வித்துக் கொண்டீர்
- வள்ளலே நும்திரு வரவுகண் டல்லால்
- அறுசுவை உண்டிகொண் டருந்தவும் மாட்டேன்
- அருட்பெருஞ் சோதியீர் ஆணைநும் மீதே.
- பெண்மையை வயங்கும் ஆண்மையை அனைத்தும்
- பிறங்கிய பொதுமையைப் பெரிய
- தண்மையை எல்லாம் வல்லஓர் சித்த
- சாமியைத் தயாநிதி தன்னை
- வண்மையை அழியா வரத்தினை ஞான
- வாழ்வைஎன் மதியிலே விளங்கும்
- உண்மையை என்றன் உயிரைஎன் உயிருள்
- ஒருவனைக் கண்டுகொண் டேனே.
- பெருகுமா கருணைப் பெருங்கடல் இன்பப்
- பெருக்கமே என்பெரும் பேறே
- உருகும்ஓர் உள்ளத் துவட்டுறா தினிக்கும்
- உண்மைவான் அமுதமே என்பால்
- கருகும்நெஞ் சதனைத் தளிர்த்திடப் புரிந்த
- கருணையங் கடவுளே விரைந்து
- வருகஎன் றுரைத்தேன் வந்தருட் சோதி
- வழங்கினை வாழிநின் மாண்பே.
- பெண்ணாய் ஆணுரு வாய் - எனைப் - பெற்றபெ ருந்தகை யே
- அண்ணா என்னர சே - திரு - வம்பலத் தாடுகின் றோய்
- எண்ணா நாயடி யேன் - களித் - திட்டவு ணவையெ லாம்
- உண்ணா துண்டவ னே - எனக் - குண்மை உரைத்தரு ளே.
- பெரியஎனப் புகல்கின்ற பூதவகை எல்லாம்
- பேசுகின்ற பகுதியிலே வீசுகின்ற சிறுமை
- உரியபெரும் பகுதியும்அப் பகுதிமுதல் குடிலை
- உளங்கொள்பரை முதல்சத்தி யோகமெலாம் பொதுவில்
- துரியநடம் புரிகின்ற சோதிமலர்த் தாளில்
- தோன்றியதோர் சிற்றசைவால் தோன்றுகின்ற என்றால்
- அரியபெரும் பொருளாக நடிக்கின்ற தலைவர்
- அருட்பெருமை என்அளவோ அறியாய் என்தோழி.
- பெண்ணே பொருளே எனச்சுழன்ற பேதை மனத்தால் பெரிதுழன்ற
- புண்ணே எனும்இப் புலைஉடம்பில் புகுந்து திரிந்த புலையேற்குத்
- தண்ணேர் மதியின் அமுதளித்துச் சாகா வரந்தந் தாட்கொண்ட
- கண்ணே மணியே நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.
- பெண்ணுக் கிசைந்தே பலமுகத்தில் பேய்போல் சுழன்ற பேதைமனத்
- தெண்ணுக் கிசைந்து துயர்க்கடலாழ்ந் திருந்தேன் தன்னை எடுத்தருளி
- விண்ணுக் கிசைந்த கதிர்போல்என் விவேகத் திசைந்து மேலும்என்தன்
- கண்ணுக் கிசைந்தோய் நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.
- பெற்றேன் என்றும் இறவாமை பேதம் தவிர்ந்தே இறைவன்எனை
- உற்றே கலந்தான் நானவனை உற்றே கலந்தேன் ஒன்றானேம்
- எற்றே அடியேன் செய்ததவம் யாரே புரிந்தார் இன்னமுதம்
- துற்றே உலகீர் நீவிர்எலாம் வாழ்க வாழ்க துனிஅற்றே.
- பெருமாயை என்னும்ஒரு பெண்பிள்ளை நீதான்
- பெற்றவுடம் பிதுசாகாச் சுத்தவுடம் பாக்கி
- ஒருஞானத் திருவமுதுண் டோங்குகின்றேன் இனிநின்
- உபகரிப்போர் அணுத்துணையும் உளத்திடைநான் விரும்பேன்
- அருளாய ஜோதிஎனக் குபகரிக்கின் றதுநீ
- அறியாயோ என்னளவில் அமைகஅயல் அமர்க
- தெருளாய உலகிடைஎன் சரிதமுணர்ந் திலையோ
- சிற்சபைஎன் அப்பனுக்குச் சிறந்தபிள்ளை நானே.
- பெருகியபே ரருளுடையார் அம்பலத்தே நடிக்கும்
- பெருந்தகைஎன் கணவர்திருப் பேர்புகல்என் கின்றாய்
- அருகர்புத்த ராதிஎன்பேன் அயன்என்பேன் நாரா
- யணன்என்பேன் அரன்என்பேன் ஆதிசிவன் என்பேன்
- பருகுசதா சிவம்என்பேன் சத்திசிவம் என்பேன்
- பரமம்என்பேன் பிரமம்என்பேன் பரப்பிரமம் என்பேன்
- துருவுசுத்தப் பிரமம்என்பேன் துரியநிறை வென்பேன்
- சுத்தசிவம் என்பன்இவை சித்துவிளை யாட்டே.