- பரசிவம்சின்மயம் பூரணம் சிவபோக பாக்கியம் பரமநிதியம்
- பரசுகம் தன்மயம் சச்சிதா னந்தமெய்ப் பரமவே காந்தநிலயம்
- பரமஞா னம்பரம சத்துவம கத்துவம் பரமகை வல்யநிமலம்
- பரமதத் துவநிரதி சயநிட்க ளம்பூத பௌதிகா தாரநிபுணம்
- பரமபோ தம்போத ரகிதசகி தம்சம்ப வாதீத மப்பிரமேயம்
- பகரனந் தானந்தம் அமலமுசி தம்சிற்ப தம்சதா னந்தசாரம்
- பரையாதி கிரணாங்க சாங்கசௌ பாங்கவிம் பாகார நிருவிகற்பம்
- பரசுகா ரம்பம்ப ரம்பிரம வித்தம்ப ரானந்த புரணபோகம்
- பரிமிதா தீதம்ப ரோதயம் பரகிதம் பரபரீணம் பராந்தம்
- பரமாற்பு தம்பரம சேதனம் பசுபாச பாவனம் பரமமோக்ஷம்
- பரமானு குணநவா தீதம்சி தாகாச பாஸ்கரம் பரமபோகம்
- பரிபாக வேதன வரோதயா னந்தபத பாலனம் பரமயோகம்
- பரமசாத் தியவதீ தானந்த போக்கியம் பரிகதம் பரிவேத்தியம்
- பரகேவ லாத்விதா னந்தானு பவசத்த பாதாக்ர சுத்தபலிதம்
- பரமசுத் தாத்விதா னந்தவனு பூதிகம் பரிபூத சிற்குணாந்தம்
- பரமசித் தாந்தநிக மாந்தசம ரசசுத்த பரமானு பவவிலாசம்
- தரமிகும் சர்வசா திட்டான சத்தியம் சர்வவா னந்தபோகம்
- சார்ந்தசர் வாதார சர்வமங் களசர்வ சத்திதர மென்றளவிலாச்
- சகுணநிர்க் குணமுறு சலக்ஷண விலக்ஷணத் தன்மைபல வாகநாடித்
- தம்மைநிகர் மறையெலா மின்னுமள விடநின்ற சங்கர னநாதியதி
- சம்புவே தண்டன் பிறப்பிலான் முடிவிலான் தாணுமுக் கண்களுடையான்
- சதுரன் கடாசல வுரிப்போர்வை யான்செந் தழற்கரத் தேந்திநின்றோன்
- சர்வகா ரணன்விறற் காலகா லன்சர்வ சம்பிரமன் சர்வேச்சுரன்
- தகைகொள்பர மேச்சுரன் சிவபிரா னெம்பிரான் தம்பிரான் செம்பொற்பதம்
- மன்னுகின் னரர்பூதர் வித்தியா தரர்போகர் மற்றையர்கள் பற்றும்பதம்
- வண்மைபெறு நந்திமுதல் சிவகணத் தலைவர்கண் மனக்கோயில்வாழும்பதம்
- மாதேவி யெங்கள்மலை மங்கையென் னம்மைமென் மலர்க்கையால் வருடும்பதம்
- மறலியை யுதைத்தருள் கழற்பத மரக்கனை மலைக்கீ ழடர்க்கும்பதம்
- எங்கேமெய் யன்பருள ரங்கே நலந்தர வெழுந்தருளும் வண்மைப்பதம்
- எவ்வண்ணம் வேண்டுகினு மவ்வண்ண மன்றே யிரங்கியீந் தருளும்பதம்
- என்போன்ற வர்க்குமிகு பொன்போன்ற கருணைதந் திதயத் திருக்கும்பதம்
- என்னுயிரை யன்னபத மென்னுயிர்க் குயிரா யிலங்குசெம் பதுமப்பதம்
- தெழிப்பாலை வேலைத் திரையொலிபோ லார்க்குங்
- கழிப்பாலை யின்பக் களிப்பே - விழிப்பாலன்
- தயேந்திர ருள்ளத் தடம்போ லிலங்கும்
- மயேந்திரப் பள்ளியின்ப வாழ்வே - கயேந்திரனைக்
- கார்49காழி னெஞ்சக் கவுணியர்க்குப் போதமருள்
- சீர்காழி ஞானத் திரவியமே - ஓர்காழிப்
- விண்ணெதிர்கொண் டிந்திரன்போன் மேவிநெடு நாள்வாழப்
- பண்ணெதிர்கொள் பாடிப் பரம்பொருளே - நண்ணும்
- வானாட்டு முள்ளூர் மருவுகின்றோர் போற்றுதிருக்
- கானாட்டு முள்ளூர்க் கலைக்கடலே - மேனாட்டும்
- தேரையூர்ச் செங்கதிர்போற் செம்மணிக ணின்றிலங்கும்
- நாரையூர் மேவு நடுநிலையே - பாரில்
- கொந்தணவுங் கார்க்குழலார் கோலமயிற் போலுலவும்
- பந்தண நல்லூர்ப் பசுபதியே - கந்தமலர்
- மனந்தாள் மலரை மருவுவிப்போர் வாழும்
- பனந்தாளிற் பாலுகந்த பாகே - தினந்தாளிற்
- மயலூர் மனம்போல் வயலிற் கயலூர்
- வியலூர் சிவானந்த வெற்பே - அயலாம்பல்
- கண்விசைய மங்கைக் கனிபோற் பெறத்தொண்டர்
- எண்விசைய மங்கையில்வாழ் என்குருவே - மண்ணுலகில்
- காத்தும் படைத்துங் கலைத்துநிற்போர் நாடோறும்
- ஏத்துங் குரங்காட்டின்52 என்னட்பே - மாத்தழைத்த
- வானூர் மதிபோன் மணியாற் குமுதமலர்
- கானூ ருயர்தங்கக் கட்டியே - நானூறு
- தேனைக்கா வுள்மலர்கள் தேங்கடலென் றாக்குவிக்கும்
- ஆனைக்கா மேவியமர் அற்புதமே - மானைப்போல்
- நாட்போக்கி நிற்கு நவையுடையார் நாடரிதாம்
- வாட்போக்கி மேவுகின்ற வள்ளலே - கோட்போக்கி
- நில்லுங் கடம்ப நெறிபோ லெனப்பூவை
- சொல்லுங் கடம்பந் துறைநிறைவே - மல்லலொடு
- தண்டியூர் போற்றுந் தகைகாசிக் கட்செய்து
- கண்டியூர் வாழுங் களைகண்ணே - கொண்டியல்பின்
- உள்ளமங்கை மார்மே லுறுத்தா தவர்புகழும்
- புள்ளமங்கை வாழ்பரம போகமே - கள்ளமிலஞ்
- ஆர்ந்த வடவிலையான் அன்னத்தான் போற்றிநிதம்
- சார்ந்த வடதளிவாழ் தற்பரமே - சேர்ந்த
- தேக்கும் வரகுணனாந் தென்னவன்கண் சூழ்பழியைப்
- போக்கும் இடைமருதிற் பூரணமே - நீக்கமிலா
- அன்பள்ளி யோங்கு மறிவுடையோர் வாழ்த்துஞ்செம்
- பொன்பள்ளி வாழ்ஞான போதமே - இன்புள்ளித்
- தெள்ளியார் போற்றித் திகழுந் திருநன்னிப்
- பள்ளியார்ந் தோங்கும் பரசிவமே - எள்ளுறுநோய்
- கூறுதிரு வாக்கூர் கொடுப்பனபோற் சூழ்ந்துமதில்
- வீறுதிரு வாக்கூர் விளக்கமே - மாறகற்றி
- போய்வண் டுறைதடமும் பூம்பொழிலுஞ் சூழ்ந்தமரர்
- ஆய்வெண் டுமறைமாசி லாமணியே - தோய்வுண்ட
- பூவணமும் பூமணமும் போலவ மர்ந்ததிருப்
- பூவணத்தில் ஆனந்தப் பொக்கிஷமே - தீவணத்தில்
- தம்முருகன் பூணுட் டலம்போல வாழ்கின்ற
- எம்முருகன் பூண்டி இருநிதியே - செம்மையுடன்
- மன்ற மமர்ந்த வளம்போற் றிகழ்ந்தமுது
- குன்ற மமர்ந்தஅருட் கொள்கையே - அன்றகத்தின்
- நாவலர் போற்றி நலம்பெறவே யோங்குதிருக்
- கோவலூர் வீரட்டங் கொள்பரிசே - ஆவலர்மா
- பொற்கோலம் ஆமெயிற்குப் போர்க்கோலம் கொண்டதிரு
- விற்கோலம் மேவுபர மேட்டிமையே - சொற்போரில்
- பொங்குமணிக் கால்கள் பொலஞ்செய்திரு வொற்றிநகர்
- தங்குஞ் சிவபோக சாரமே - புங்கவர்கள்
- போற்றுந் திருவொற்றிப் பூங்கோயிற் குட்பெரியோர்
- சாற்றும் புகழ்வேத சாரமே - ஊற்றுறுமெய்
- பாகியற்சொல் மங்கையொடும் பாங்கார் பருப்பதத்தில்
- யோகியர்க ளேத்திடவாழ் ஒப்புரவே - போகிமுதல்
- என்போன் றவர்க்கும் இருள்நீக்கி இன்புதவும்
- பொன்போன்ற மேனிப் புராதனனே - மின்போன்ற
- செஞ்சடையாய் மூவருக்கும் தேவருக்கு மியாவருக்கும்
- அஞ்சடையா வண்ணம் அளிப்போனே - விஞ்சுலகில்
- எல்லார்க்கு நல்லவனே எல்லாஞ்செய் வல்லவனே
- எல்லார்க்கும் ஒன்றா யிருப்போனே - தொல்லூழி
- பொல்லா விரதத்தைப் போற்றியுவந் துண்பதல்லால்
- கொல்லா விரதத்தைக் கொண்டதிலை - அல்லாதார்
- பண்ர்மை கொண்டதமிழ்ப் பாமாலை யாற்றுதித்துக்
- கண்ர்கொண் டுன்பாற் கனிந்ததிலை - தண்ர்போல்
- நெஞ்சம் உருகி நினைக்குமன்பர் போலெனைநீ
- அஞ்சலென நின்றாள் அடுத்தநிலை - விஞ்சுலகர்
- மானஞ் செயாது மனநொந் திரப்போர்க்குத்
- தானஞ்செய் வாரைத் தடுத்ததுண்டு - ஈனமிலா
- தாயனையா யுன்றனது சந்நிதிநேர் வந்துமொரு
- நேயமுமில் லாதொதி82 போல் நின்றதுண்டு - தீயவினை
- மாளாக் கொடிய மனச்செல்வர் வாயிலிற்போய்க்
- கேளாச் சிவநிந்தை கேட்டதுண்டு - மீளாத
- பொல்லாப் புலையரைப்போற் புண்ணியரை வன்மதத்தால்
- சொல்லா வசையெல்லாஞ் சொன்னதுண்டு - நல்லோரைப்
- போற்றாது பொய்யுடம்பைப் போற்றிச் சிவபூசை
- ஆற்றாது சோற்றுக் கலைந்ததுண்டு - தேற்றாமல்
- ஈபத்தா என்றிங் கிரப்போர் தமைக்கண்டு
- கோபத்தால் நாய்போற் குரைத்ததுண்டு - பாபத்தால்
- சிந்தையொன்று வாக்கொன்று செய்கையொன்றாய்ப் போகவிட்டே
- எந்தைநினை யேத்தா திருந்ததுண்டு - புந்தியிந்த
- காடுபோன் ஞாலக் கடுநடையி லேயிருகான்
- மாடுபோல் நின்றுழைத்து வாழ்ந்ததுண்டு - நாடகன்ற
- கள்ளிவா யோங்குபெருங் காமக் கடுங்காட்டிற்
- கொள்ளிவாய்ப் பேய்போற் குதித்ததுண்டு - ஒள்ளியரால்
- எள்ளுண்ட மாயா இயல்புறுபுன் கல்வியெலாங்
- கள்ளுண்ட பித்தனைப்போற் கற்றதுண்டு - நள்ளுலகில்
- நண்ணியுனைப் போற்றுகின்ற நல்லோர்க் கினியசிவ
- புண்ணியமென் றாலெனக்குப் போராட்டம் - அண்ணலுனை
- போகமென்றா லுள்ளமிகப் பூரிக்கும் அன்றிசிவ
- யோகமென்றா லென்னுடைய உண்ணடுங்கும் - சோகமுடன்
- தொண்டர் தமைத்துதியாத் துட்டரைப்போ லெப்பொழுதுஞ்
- சண்டையென்ப தென்றனக்குத் தாய்தந்தை - கொண்டஎழு
- சிந்தை திரிந்துழலுந் தீயரைப்போல் நற்றரும
- நிந்தையென்ப தென்பழைய நேசங்காண் - முந்தநினை
- காந்தும் விழிப்புலியைக் கண்டதுபோல் நல்லகுண
- சாந்த மெனைக் கண்டால் தலைசாய்க்கும் - ஆந்தகையோர்
- இல்லை யடைந்தே யிரப்பவருக் கெப்போதும்
- இல்லையென்ப தென்வாய்க் கியல்புகாண் - தொல்லுலகை
- மந்திரத்தை உச்சரியா வாயுடையேன் என்போலத்
- தந்திரத்தில் கைதேர்ந் தவரில்லை - எந்தைஇனி
- மாவகஞ்சேர் மாணிக்க வாசகருக் காய்க்குதிரைச்
- சேவகன்போல் வீதிதனில் சென்றனையே - மாவிசயன்
- அன்புடைய தாயர்களோ ராயிரம்பே ரானாலும்
- அன்புடையாய் நின்னைப்போ லாவாரோ - இன்பமுடன்
- ஈண்டவரும் தந்தையர்கள் எண்ணிலரே ஆயினுமென்
- ஆண்டவனே நின்னைப்போ லாவாரோ - பூண்டகைகொள்
- கண்ணனையாய் நின்தாள் கமலங் களைவழுத்தா
- மண்ணனையார் பாற்போய் மயங்குகின்றேன் - திண்ணமிலாக்
- ஆமறையா நோயா லகமெலிவுற் றையோநான்
- தாமரையி னீர்போல் தயங்குகின்றேன் - தாமமுடி
- போய்ப்படுமோர் பஞ்சப் பொறிகளால் வெம்பாம்பின்
- வாய்ப்படுமோர் தேரையைப்போல் வாடுகின்றேன் - மாய்ப்பவரு
- மீன்போலு மாதர் விழியால் வலைப்பட்ட
- மான்போலுஞ் சோர்ந்து மடங்குகின்றேன் - கான்போல
- வாதனைகொண் டோனென்று மற்றெவரா னாலும்வந்து
- போதனைசெய் தாலுமெனைப் போக்கிவிடேல் - நீதயவு
- பொன்னார் மலைபோல் பொலிவுற் றசையாமல்
- எந்நாளும் வாழியநீ என்னெஞ்சே - பின்னான
- போக்கும் வரத்துமிலாப் பூரணமாய்ப் புண்ணியர்கள்
- நோக்கும் திறத்தெழுந்த நுண்ணுணர்வாய் - நீக்கமிலா
- பூப்பதுவாய்க் காப்பதுவாய்ப் போக்குவதாய்த் தேக்குவதாய்
- நீப்பதுவாய்த் தன்னுள் நிறுத்துவதாய்ப் - பூப்பதின்றி
- முச்சுடராய் முச்சுடர்க்கும் முன்னொளியாய்ப் பின்னொளியாய்
- எச்சுடரும் போதா இயற்சுடராய் - அச்சில்
- யோகமாய் யோகியர் யோகத் தெழுந்தசிவ
- போகமாய்ப் போகியாய்ப் போகமருள் - ஏகமாய்க்
- ஐயம் திரிபோ டறியாமை விட்டகற்றிப்
- பொய்யென்ப தொன்றும் பொருந்தாராய்ச் - செய்யென்ற
- பேர்த்துயிர்க ளெல்லாம்ஓர் பெண்பிள்ளை யின்வசமாய்ச்
- சேர்த்து வருவிக்கும் சித்தனெவன் - போர்த்துமிக
- மற்றிருந்த வானவரும் வாய்ந்தசைக்கா வண்ணமொரு
- சிற்றுரும்பை85 நாட்டிநின்ற சித்தனெவன் - மற்றவர்போல்
- பொய்விட்டு மெய்ந்நெறியைப் போற்றித்தற் போதத்தைக்
- கைவிட் டுணர்வே கடைப்பிடித்து - நெய்விட்ட
- தீப்போற் கனலும் செருக்கறவே செங்கமலப்
- பூப்போலும் தன்தாள் புணைபற்றிக் - காப்பாய
- மாற்றுரையாப் பொன்னே மணியேஎம் கண்மணியே
- ஏற்றுவந்த மெய்ப்பொருளே என்றுநிதம் - போற்றிநின்றால்
- வான்போல் பரவி மதிபோல் குளிர்ந்துயர்கோல்
- தேன்போல் மதுரிக்கும் தேவனெவன் - வான்போனார்
- போற்றுரைத்து நிற்கும் புனிதன்மேல் வந்தகொடுங்
- கூற்றுதைத்த செந்தாள் குழகனெவன் - ஆற்றலுறு
- தாம்தலைவ ராகத்தம் தாள்தொழுமெத் தேவர்க்கும்
- ஆந்தலைமை ஈந்தபர மார்த்தனெவன் - போந்துயிர்கள்
- நல்வந் தனைசெய்யும் நம்போல்வார்க் கோர்ஞானச்
- செல்வந் தருநமது தெய்வம்காண் - சொல்வந்த
- வன்பாய் வளர்க்கின்ற மற்றையர்போ லல்லாமல்
- அன்பாய் நமைவளர்க்கும் அப்பன்காண் - இன்பாக
- புல்லென்ற மாயையிடைப் போந்தோறும் நம்மையிங்கு
- நில்லென் றிருத்துகின்ற நேசன்காண் - சில்லென்றென்
- ஆர்ந்தநமக் கிவ்விடத்தும் அவ்விடத்தும் எவ்விடத்தும்
- நேர்ந்தஉயிர் போற்கிடைத்த நேசன்காண் - சேர்ந்துமிகத்
- நோக்கரிய நோக்கழகும் நோக்கார் நுதலழகும்
- போக்கரிய நன்னுதலில் பொட்டழகும் - தேக்குதிரி
- தேவென்ற தீம்பாலில் தேன்கலந்தாற் போலினிக்க
- வாவென் றருளுமலர் வாயழகும் - பூவொன்றும்
- வாழ்ந்தொளிரும் அன்பர் மனம்போலும் வெண்று
- சூழ்ந்தொளிகொண் டோங்குதிருத் தோளழகும் - தாழ்ந்திலவாய்த்
- ஏங்கும் பரிசுடைய எம்போல்வார் அச்சமெலாம்
- வாங்கும் அபய மலரழகும் - தீங்கடையாச்
- சித்திக்கும் யோகியர்தம் சிந்தைதனில் தேன்போன்று
- தித்திக்கும் சேவடியின் சீரழகும் - சத்தித்து
- செம்மை மணிமலையைச் சேர்ந்த - மரகதம்போல்
- அம்மையொரு பால்வாழ்ந் தருளழகும் - அம்மமிகச்
- சீர்த்திநிகழ் செம்பவளச் செம்மே னியினழகும்
- பார்த்திருந்தால் நம்முட் பசிபோங்காண் - தீர்த்தருளம்
- மத்தியில்நீ கேட்டும் வணங்குகிலாய் அன்படையப்
- புத்தியுளோர்க் கீதொன்றும் போதாதோ - முத்திநெறி
- நண்ணி உரைத்தும் நயந்திலைநீ அன்புகொளப்
- புண்ணியருக் கீதொன்றும் போதாதோ - புண்ணியராம்
- பேதமறக் கேட்டும் பிறழ்ந்தனையே அன்படையப்
- போதமுளோர்க் கீதொன்றும் போதாதோ - போதவும்நெய்
- சந்ததம்நீ கேட்டுமவன் தாள்நினையாய் அன்படையப்
- புந்தியுளோர்க் கீதொன்றும் போதாதோ - முந்தவரும்
- மாவுலகில் கேட்டும் வணங்குகிலாய் அன்படையப்
- பூவுலகர்க் கீதொன்றும் போதாதோ - தாவுநுதல்
- மாணவுரைப் பக்கேட்டும் வாய்ந்தேத்தாய் மெய்யன்பு
- பூணவென்றால் ஈதொன்றும் போதாதோ - நீணரகத்
- துங்கம் உறஉரைத்துஞ் சூழ்கின் றிலையன்பு
- பொங்கவென்றால் ஈதொன்றும் போதாதோ - தங்கியஇப்
- சொல்லிநின்றார் கேட்டும் துதிக்கின் றிலையன்பு
- புல்லஎன்றால் ஈதொன்றும் போதாதோ - நல்லதிருப்
- சாற்றிநின்றார் கேட்டுமவன் தாள்நினையாய் மெய்யன்பில்
- போற்றவென்றால் ஈதொன்றும் போதாதோ - போற்றுகின்ற
- கேள்வியிலார் போலதனைக் கேளாய் கெடுகின்றாய்
- வேள்வியிலார் கூட்டம் விழைகின்றாய் - வேள்வியென்ற
- செல்லாதே சைவநெறி செல்லென்றால் என்னுடனும்
- சொல்லாது போய்மயக்கம் தோய்கின்றாய் - பொல்லாத
- அஞ்ச94ருந்தென் றாலமுதி னார்கின்றாய் விட்டிடென்றால்
- நஞ்சருந்தென் றாற்போல் நலிகின்றாய் - வஞ்சகத்தில்
- ஈகின்றாய் வன்னெறியில் என்னை வலதழிக்கப்
- போகின்றாய் மீட்டும் புகுகின்றாய் - யோகின்றி
- என்னென்பேன் என்மொழியை ஏற்றனையேல் மாற்றுயர்ந்த
- பொன்னென்பேன் என்வழியில் போந்திலையே - கொன்னுறநீ
- போம்வழியும் பொய்நீ புரிவதுவும் பொய்அதனால்
- ஆம்விளைவும் பொய்நின் னறிவும்பொய் - தோம்விளைக்கும்
- போருறுமுட் காமப் புதுமயக்கம் நின்னுடைய
- பேரறிவைக் கொள்ளைகொளும் பித்தங்காண் - சோரறிவில்
- பேய்பிடித்தால் தீர்ந்திடுமிப் பெண்பேய் விடாதேசெந்
- நாய்பிடித்தால் போலுமென்று நாடிலையே - ஆய்விலுன்றன்
- கட்கு வளைஎன்றாய்க் கண்ர் உலர்ந்துமிக
- உட்குழியும் போதில் உரைப்பாயே - கட்குலவு
- போதவிடா யாகிப் புலம்புகின்றாய் மற்றதன்பால்
- மாதவிடாய் உண்டால் மதித்திலையே - மாதரவர்
- காகளமாய்108 இன்குரலைக் கட்டுரைத்தாய் காலனென்போன்
- காகளமென் பார்க்கென் கழறுதியே - நாகளவும்
- தேட்டாண்மை செய்வாயத் தேட்டாண்மை யைத்தெருவில்
- போட்டாலும் அங்கோர் புகழுண்டே - வாட்டாரைக்
- பொன்காவல் பூதமது போயெடுக்கும் போதுமறித்
- தென்காவல் என்றால்மற் றென்செய்வாய் - பொன்காவல்
- ஆய்ந்தோர் சிலநாளில் ஆயிரம்பேர் பக்கலது
- பாய்ந்தோடிப் போவதுநீ பார்த்திலையே - ஆய்ந்தோர்சொல்
- கூத்தாட் டவைசேர் குழாம்விளிந்தாற் போலுமென்ற
- சீர்த்தாட் குறள்மொழியும் தேர்ந்திலையே112- பேர்த்தோடும்
- பொன்னடப்ப தன்றியது போனகமே யாதியவாய்
- என்னடுத்த தொன்றுமிஃ தெண்ணிலையே - இந்நிலத்தில்
- ஆகாத் துரும்பிடத்தும் ஆசைவைத்தாய் - என்னிலுன்றன்
- ஏகாப் பெருங்காமம் என்சொல்கேன் - போகாத
- தன்னைத்தான் காக்கில் சினங்காக்க என்றதனைப்
- பொன்னைப்போல்போற்றிப் புகழ்ந்திலையே115 - துன்னி
- அகழ்வாரைத் தாங்கும் நிலம்போல என்னுந்
- திகழ்வாய் மையும்நீ தெளியாய்116 - இகழ்வாரை
- ஏய்ந்தனையன் போரிடத்தில் இன்னாமை செய்தவரைக்
- காய்ந்தனைமற் றென்னபலன் கண்டனையே - வாய்ந்தறிவோர்
- வன்போ டிருக்கு மதியிலிநீ மன்னுயிர்க்கண்
- அன்போ டிரக்கம் அடைந்திலையே - இன்போங்கு
- மெய்கொடுத்த தென்பாய் விருத்தர்கட்கு நின்போல்வார்
- கைகொடுத்துப் போவதனைக் கண்டிலையோ - மெய்கொடுத்த
- உறங்குவது போலுமென்ற ஒண்குறளின் வாய்மை
- மறங்கருதி அந்தோ மறந்தாய்117 - கறங்கின்
- நெய்விடல்போல் உற்றவர்கண்ணீர்விட் டழவுயிர்பல்
- மெய்விடலும் கண்டனைநீ விண்டிலையே - செய்வினையின்
- ஊர்ந்தார் தெருவில் உலாப்போந்தார் வானுலகம்
- சேர்ந்தார் எனக்கேட்டும் தேர்ந்திலையே - சேர்ந்தாங்கு
- நிலைமுற்ற யோனி நெருக்கில் உயிர்போய்ப்
- பலனற்று வீழ்ந்ததுவும் பார்த்தாய் - பலனுற்றே
- பெற்றார் மகிழ்வெய்தப் பேசிவிளை யாடுங்கால்
- அற்றாவி போவ தறிந்திலையோ - கற்றாயப்
- கூடி அழத்துணையாய்க் கூடுவார் வன்னரகில்
- வாடியழும் போது வருவாரோ - நீடியநீ
- அற்றவருக் கற்றசிவனாமெனுமப் பொன்மொழியை
- மற்றைமொழி போன்று மறந்தனையே - சிற்றுயிர்க்குக்
- தூரியத்தில்122 தோன்றொலிபோல் தோன்றிக் கெடுமாயா
- காரியத்தை மெய்யெனநீ கண்டனையே - சீரியற்றும்
- கோமுடிக்கண் தீப்பற்றிக் கொண்டதென்றால் மற்றதற்குப்
- பூமுடிக்கத் தேடுகின்றோர் போன்றனையே - மாமுடிக்கும்
- விண்டுறுங்கை வீடனலால் வேகின்ற தென்னவுட்போய்
- உண்டுறங்கு கின்றோரை ஒத்தனையே - தொண்டுலகங்
- வெள்ளத்தி னால்முழுகி விட்டதென்றால் சென்றுகடை
- கொள்ளத் திரிபவர்போல் கூடினையே - கொள்ளவிங்கு
- தற்புவனம் போகம் தனுகரணம் என்கின்ற
- சொற்பனத்தில் அந்தோ துவன்றினையே - பற்பகலும்
- கொண்டியங்கு கின்றாய் குறித்தனவே பிற்குறித்துப்
- பண்டறியார் போலப் படர்கின்றாய் - பண்டறிந்து
- காலம்போல் இங்குநிகழ் காலமும்காண் கின்றியெதிர்
- காலமற்றும் அத்திறம்மேற் காண்குவையேல் - சாலவுமுன்
- போதுசெலா முன்னமனு பூதியைநீ நாடாமல்
- யாதுபயன் எண்ணி இனைகின்றாய் - தீதுசெயும்
- சூழ்ச்சியறி யேன்நீ சுழல்கின்ற போதெல்லாம்
- சூழ்ச்சியிலே நானும் சுழல்கின்றேன் - நீட்சியில்நீ
- போகமென்றும் மற்றைப் புலனென்றும் பொய்அகலா
- யோகமென்றும் பற்பலவாம் யூகமென்றும் - மேகமென்றும்
- ஓயாத துன்பம் உரைக்க உடம்பெல்லாம்
- வாயாகி னும்போத மாட்டாதேல் - ஏஏநாம்
- றோதுகின்றேன் கேட்டும் உறார்போன் றுலகியலில்
- போதுகின்றாய் யாது புரிகிற்பேன் - தீதுநன்றோ
- ஒன்னலர்போல் கூடுவா ரோடொருநீ கூடுங்கால்
- என்னைநினை யாயென்சொ லெண்ணுதியோ - பன்னுறுநின்
- தீதெல்லாம் நானாதி சேடர்பல ராய்ப்பிரமன்
- போதெல்லாம் சொல்லிடினும் போதாதே - ஆதலினால்
- ஈண்டோர் அணுவாய் இருந்தநீ எண்டிசைபோல்
- நீண்டாய் இஃதோர் நெறியன்றே - வேண்டாநீ
- மற்றவர்போல் அன்றே மனனேநின் வண்புகழை
- முற்றுமிவண் ஆர்தான் மொழிவாரே - சுற்றிமனம்
- போகம் சுகமென்றும் போகம் தரும்கரும
- யோகம் சுகமென்றும் உண்டிலையென் - றாகஞ்செய்
- போதம் சுகமென்றும் பொன்றல்சுகம் என்றும்விந்து
- நாதம் சுகமென்றும் நாம்பொருளென் - றோதலஃ
- வெல்லுகின்றோர் போன்று விரிநீர் உலகிடையே
- சொல்லுகின்றோர் சொல்லும் சுகமன்று - சொல்லுகின்ற
- வாழும் பரசிவத்தின் வன்னிவெப்பம் போலமுற்றும்
- சூழும் சுகமே சுகம்கண்டாய் - சூழ்வதனுக்
- வேதனையால் ஈங்கு விரியும் சகப்பழக்க
- வாதனைபோய் நீங்கிலன்றி வாராதால் - வாதனையும்
- போகமுற்றும் பொய்யெனவே போதும் அனித்தியவி
- வேகமுற்றால் அன்றி விளங்காதால் - ஆகவஃ
- துண்ணவந்தால் போலுமிவண் உற்றுவிசா ரித்திடுமோர்
- எண்ணம்வந்தால் அன்றி இசையாதால் - எண்ணமது
- சித்திகளே வத்துவென்போர்ச் சேர்ந்துறையேல் பன்மாயா
- சத்திகளே வத்துவென்போர் சார்படையேல் - பொத்தியஇச்
- சன்மமே தோற்றும் தரமாம் திரமனித்த
- கன்மமே வத்துவென்போர் கண்ணுறையேல் - கன்மமிகு
- மாகம் கதியென்பார் மாட்டுறையேல் பல்போக
- யோகம் பொருளென்பா ரூடுறையேல் - ஏகம்கொள்
- மெய்யொழுக்கத் தார்போல் வெளிநின் றகத்தொழியாப்
- பொய்யொழுக்கத் தார்பால் பொருந்தியுறேல் - பொய்யொழுக்கில்
- பண்ர் மொழியால் பரிந்தேத்தி ஆனந்தக்
- கண்ர்கொண் டுள்ளம் களிப்போரும் - உண்ரில்
- பண்டுகண்டும் காணாப் பரிசினராய்ப் பொன்மேனி
- கண்டுகண்டு நாளும் களிப்போரும் - தொண்டடையும்
- பொற்பதிகம் என்றெண்ணிப் போற்றிஒரு மூவர்களின்
- சொற்பதிகம் கொண்டு துதிப்போரும் - சொற்பனத்தும்
- மன்னிசைப்பால் மேலோர் வகுத்தேத்தி நின்றதிரு
- இன்னிசைப்பா ஆதி இசைப்போரும் - மன்னிசைப்பின்
- தாதாவென் றன்புடனே சாமகீ தங்கள்முதல்
- வேதாக மங்கள் விரிப்போரும் - வேதாந்தம்
- வானங்கண் டாடும் மயில்போன்று நம்பெருமான்
- தானங்கண் டாடும் தவத்தோரும் - மோனமொடு
- வாரியலை போன்றசுத்த மாயையினால் ஆம்பூத
- காரியங்க ளாதியெலாம் கண்டொழித்து - ஊர்இயங்கத்
- தீதும் சுகமும் சிவன்செயலென் றெண்ணிவந்த
- யாதும் சமமா இருப்போரும் - கோதுபடக்
- சேந்தி னடைந்தவெலாஞ் சீரணிக்கச் சேர்சித்த
- சாந்தி யுடனே சரிப்போரும் - சாந்திபெறத்
- தம்பொருளைக் கண்டே சதானந்த வீட்டினிடைச்
- செம்பொருளைச் சார்ந்த திறத்தோரும் - மண்பொருள்போய்த்
- யாவும் அறிந்தும் அறியார்போன் றெப்பொழுதும்
- சாவும் பிறப்பும் தவிர்ந்தோரும் - ஓவலின்றி
- தேறா வுலகம் சிவமயமாய்க் கண்டெங்கும்
- ஏறா திழியா திருப்போரும் - மாறாது
- 84. மான்ற மலத்தாக்கு என்பது மயக்குதலைச் செய்கின்ற மலத்தினெதிரீடு எனக்கொள்க.தொ.வே.
- 705 85. சில் துரும்பு - அற்பமாகிய துரும்பு. தொ.வே.
- 86. சங்கமம், சங்கமென விகாரமாயிற்று. தொ.வே.
- 706 87. இந்தா என்பது மரூஉச் சொல். 'இதனைத் தரப்பெற்றுக்கொள்' என்னும் பொருட்டு.அல்லதூஉம் 'இங்கு வா' என்னும் எளிமை கண்ணிய ஏவலுமாம். தொ.வே.
- 88. காதரவு செய்தல் - அச்சுறுத்தல். தொ.வே.
- 707 89. நிச்சல் - நாடோறும். தொ.வே.
- 90. நட்டு ஊர்ந்து எனப்பிரித்து நேசித்துச் சென்று எனப் பொருள் கொள்க. தொ.வே.
- 708 91. வாழ்நாள், வாணாள் என மரீஇயது. தொ.வே.
- 92. கற்றூணை, சற்றுணை எனக் குறுகி நின்றது. தொ.வே.
- 709 93. அந்தோ, அத்தோ என வலிக்கும் வழி வலித்தது. தொ.வே.
- 94. ஐந்து, அஞ்சு என மருவிற்று. அஃது ஈண்டு ஆகுபெயராய்ச் சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம்என்னும் ஐந்தாசைகளைக் குறித்து நின்றது. தொ.வே.
- 710 95. ஏறுதல் என்பது ஈண்டொழுக்கத்தின் மேனின்றது. தொ.வே.
- 96. வெல் நடை எனப் பிரித்துக் கொள்க. அற்றேல் கொடு நடை எனப் பொருள் கொள்ளின்வெந்நடை எனப் பொது நகரமாக்கிக்கொள்க. தொ.வே.
- 711 97. நெஞ்சு எனும் மொழிக்கு முன்னுள்ள கீற்று(—) நீங்கின் நஞ்சு என்றாகும். ச.மு.க.
- 98. நொறில் - விரைவு. தொ.வே.
- 712 99. பெண்ணிங்கு மாமாத்திரையின் வருத்தனமென் றெண்ணினை - என்பதற்குப் பேண் என்றுபொருள்கொண்டனை என்பது பொருள். தொ.வே.
- 100. சிலந்தி - புண்கட்டி. ச.மு.க.
- 713 101. வம்பு, வப்பென விகாரமாயிற்று. தொ.வே.
- 102. பொத்துதல் - மூடுதல். தொ.வே.
- 714 103. மேடு - வயிறு. தொ.வே.
- 104. ஈரல், ஈருள் என மரீஇ வழங்கியது. தொ.வே.
- 715 105. பூட்டு - உடற்பொருத்து, தொ.வே.
- 106. நேர்தல் - விடை கொடுத்தல் என்னும் பொருட்டு. தொ.வே.
- 716 107. ஈண் டொருபுடைஒத்தமை தோற்றியாங் கழியு நிலையின்மையான் என்று கொள்க.தொ.வே.
- 108. வேளானோன்காகளம் - குயில். தொ.வே.
- 717 109. பிரமசாயை - பிரமகத்தி. தொ.வே.
- 110. கட்டுதல், ஈண்டுத் தழுவுதல் என்னும்பொருட்டு. தொ.வே.
- 718 111. நொறில் - அடக்கம். தொ.வே.
- 112. கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்போக்கும் அதுவிளிந் தற்று. திருக்குறள்332. ( 34 நிலையாமை 2 )
- 719 113. விடற்கு, விட்டற்கென விகாரமாயிற்று. தொ.வே.
- 114. செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்இல்அதனின் தீய பிற. திருக்குறள் 302 ( 31 வெகுளாமை 2 )
- 720 115. தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்தன்னையே கொல்லும் சினம். திருக்குறள் 305 ( 31 வெகுளாமை 5 )
- 116. அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மைஇகழ்வார்ப் பொறுத்தல் தலை. திருக்குறள் 151 (16 பொறையுடைமை 1 )
- 721 117. உறங்குவது போலும் சாக்காடு உறங்கிவிழிப்பது போலும் பிறப்பு. திருக்குறள் 339 ( 34 நிலையாமை 9 )
- 118. நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்பெருமை உடைத்துஇவ் வுலகு. திருக்குறள் 336 ( 34 நிலையாமை 6 )
- 722 119. புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி அறிவழித்திட்(டு) ஐம்மேலுந்திஅலமந்த போதாக அஞ்சேல்என்(று) அருள் செய்வான் அமரும்கோயில்வலம்வந்த மடவார்கள் நடமாட முழவதிர மழைஎன் றஞ்சிச்சிலமந்தி அலமந்து மரமேறிமுகில் பார்க்கும் திருவையாறே.ஞானசம்பந்தர் தேவாரம் 1394 ( 1 - 130 - 1 )
- 120. ஐயைந்து - ஐந்தும் ஐந்தும், உம்மைத்தொகை. தொ.வே.
- 723 121. வெற்றவே அடியார் அடிமிசை வீழும் விருப்பினன் வெள்ளைநீ றணியும்கொற்றவன் தனக்கு மந்திரி யாய குலச்சிறை குலாவிநின் றேத்தும்ஒற்றைவெள் விடையன் உம்பரார் தலைவன் உலகினில் இயற்கையை ஒழித்திட்(டு)அற்றவர்க்கு அற்ற சிவன்உறை கின்ற ஆலவாய் ஆவதும் இதுவே.ஞானசம்பந்தர் தேவாரம் - 4091 ( 3 - 120 - 2 )
- 122. தூரியம் - பறை. தொ.வே.
- 724 123. வீழ்வு - விருப்பம். தொ.வே.
- 124. ஊழி - கடல். தொ.வே.
- 725 125. ஆனாமை - விட்டு நீங்காமை. தொ.வே.
- 126. சிந்து - கடல். தொ.வே.
- 726 127. கச்சோதம் - மின்மினிப்பூச்சி. தொ.வே.
- 128. தொன்று - பழமை. தொ.வே.
- 727 129. ஆயில் - ஆராயுங்கால். தொ.வே
- பூதமெங்கே மற்றைப் புலனெங்கே பல்லுயிரின்
- பேதமெங்கே அண்டமெனும் பேரெங்கே - நாதமெங்கே
- மன்வடிவ மெங்கே மறையெங்கே வான்பொரு
- பொன்வடிவம் கொள்ளாத போது.
- எந்தாய்நின் அன்பர்தமக் கின்னமுதம் இட்டேத்திச்
- சிந்தா நலமொன்றுஞ் செய்தறியேன் - நந்தாச்
- சுவருண்ட மண்போலும் சோறுண்டேன் மண்ணில்
- எவருண் டெனைப்போல் இயம்பு.
- ஏலார் மனைதொறும்போய் ஏற்றெலும்புந் தேயநெடுங்
- காலாய்த் திரிந்துழலுங் கால்கண்டாய் - மாலாகித்
- தொண்டே வலஞ்செய்கழல் தோன்றலே நின்கோயில்
- கண்டே வலம்செய்யாக் கால்.
- கண்ணுதலே நின்தாள் கருதாரை நேசிக்க
- எண்ணுதலே செய்யேன்மற் றெண்ணுவனேல் - மண்ணுலகில்
- ஆமிடத்து நின்னடியார்க் காசையுரைத் தில்லையென்பார்
- போமிடத்திற் போவேன் புலர்ந்து.
- அங்கணனே நின்னடிக்கோர் அன்பிலரைச் சார்ந்தோர்தம்
- வங்கணமே132 வைப்பதினான் வைத்தேனேல் - அங்கணத்தில்
- நீர்போல் எனது நிலைகெடுக நிற்பழிசொற்
- றார்போ லழிக தளர்ந்து.
- பூவைவிட்டுப் புல்லெடுப்பார் போலுன் திருப்பாதத்
- தேவைவிட்டு வெம்பிறவித் தேவர்களைக் - கோவையிட்டுக்
- கூவுவார் மற்றவரைக் கூடியிடேன் கூடுவனேல்
- ஓவுவா ராவ133 லுனை.
- யாதோ கனற்கண் யமதூதர் காய்ச்சுகருந்
- தாதோ தழற்பிழம்போ தானறியேன் - மீதோங்கு
- நாட்டார்தார்க் கொன்றை நதிச்சடையோய் அஞ்செழுத்தை
- நாட்டாதார் வாய்க்கு நலம்.
- பூவுக் கரையரும்வான் புங்கவரும் போற்றுதிரு
- நாவுக் கரையரெனு நன்னாம - மேவுற்ற
- தொண்டர்க்கு நீகட்டுச் சோறெடுத்தாய் என்றறிந்தோ
- தொண்டர்க்குத் தொண்டனென்பார் சொல்.
- நண்ணித் தலையால் நடக்கின்றோம் என்பதெங்கள்
- மண்ணில் பழைய வழக்கங்காண் - பண்ணிற்சொல்
- அம்மையார் வாமத்தோய் ஆயினுமுன் காரைக்கால்
- அம்மையார் போனடந்தார் ஆர்.
- பெற்றிடுதாய் போல்வதுநின் பெற்றியென்பேன் பிள்ளையது
- மற்றழுதால் கேட்டும் வராதங்கே - சற்றிருக்கப்
- பெற்றாள் பொறுப்பள் பிரானீ பொறுக்கினுநின்
- பொற்றாள் பொறாஎம் புலம்பு.
- பொன்போல் பொறுமையுளார் புந்திவிடாய் நீஎன்பார்
- என்போல் பொறுமையுளார் யார்கண்டாய் - புன்போக
- அல்லாம் படிசினங்கொண் டாணவஞ்செய் இன்னாமை
- எல்லாம் பொறுக்கின்றேன் யான்.
- முன்மணத்தில் சுந்தரரை முன்வலுவில் கொண்டதுபோல்
- என்மணத்தில் நீவந் திடாவிடினும் - நின்கணத்தில்
- ஒன்றும் ஒருகணம்வந் துற்றழைக்கில் செய்ததன்றி
- இன்றும் ஒருமணஞ்செய் வேன்.
- செய்யார் அழலேநின் செம்மேனி என்னினும்என்
- அய்யாநின் கால்பிடித்தற் கஞ்சேன்காண் - மெய்யாஇஞ்
- ஞான்றுகண்டு நான்மகிழ நந்தொண்டன் என்றெனையும்
- ஏன்றுகொண் டால்போதும் எனக்கு.
- மாதேவா ஓவா மருந்தேவா மாமணிஇப்
- போதேவா என்றே புலம்புற்றேன் - நீதாவா
- யானாலுன் சித்த மறியேன் உடம்பொழிந்து
- போனாலென் செய்வேன் புகல்.
- உள்ளொன்ற நின்னடிக்கன் புற்றறியேன் என்னுளத்தின்
- வெள்ளென்ற வன்மை விளங்காதோ - நள்ளொன்ற
- அச்சங்கொண் டேனைநினக் கன்பனென்பர் வேழத்தின்
- எச்சங்கண் டாற்போல வே.
- ஆரா அமுதே அருட்கடலே நாயேன்றன்
- பேராத வஞ்சப் பிழைநோக்கி - யாரேனு
- நின்போல்வார் இல்லாதோய் நீயே புறம்பழித்தால்
- என்போல்வார் என்சொல்லார் ஈங்கு.
- என்சிறுமை நோக்கா தெனக்கருளல் வேண்டுமென்றே
- நின்பெருமை நோக்கிஇங்கு நிற்கின்றேன் - என்பெரும
- யாதோநின் சித்தம் அறியேன் அடியேற்கெப்
- போதோ அருள்வாய் புகல்.
- முத்தேவர் போற்று முதற்றேவ நின்னையன்றி
- எத்தேவர் சற்றே எடுத்துரைநீ - பித்தேன்செய்
- குற்றமெலாம் இங்கோர் குணமாகக் கொண்டென்னை
- அற்றமிலா தாள்கின் றவர்.
- திண்ணஞ்சற் றீந்திடநின் சித்தம் இரங்காத
- வண்ணஞ்சற் றேதெரிய வந்ததுகாண் - எண்ணெஞ்சில்
- இத்தனையு மென்வினைகள் நீங்கில் இருக்கஅண்டம்
- எத்தனையும் போதாமை என்று.
- கண்ணப்பன் ஏத்துநுதற் கண்ணப்ப மெய்ஞ்ஞான
- விண்ணப்ப நின்றனக்கோர் விண்ணப்பம் - மண்ணிற்சில்
- வானவரைப் போற்றும் மதத்தோர் பலருண்டு
- நானவரைச் சேராமல் நாட்டு.
- பரமாகிச் சூக்குமமாய்த் தூல மாகிப்
- பரமார்த்த நிலையாகிப் பதத்தின் மேலாம்
- சிரமாகித் திருவருளாம் வெளியாய் ஆன்ம
- சிற்சத்தி யாய்ப்பரையின் செம்மை யாகித்
- திரமாகித் தற்போத நிவிர்த்தி யாகிச்
- சிவமாகிச் சிவாநுபவச் செல்வ மாகி
- அரமாகி ஆனந்த போத மாகி
- ஆனந்தா தீதமதாய் அமர்ந்த தேவே.
- அளவிறந்த நெடுங்காலம் சித்தர் யோகர்
- அறிஞர்மலர் அயன்முதலோர் அனந்த வேதம்
- களவிறந்தும் கரணாதி இறந்தும் செய்யும்
- கடுந்தவத்தும் காண்பரிதாம் கடவு ளாகி
- உளவிறந்த எம்போல்வார் உள்ளத் துள்ளே
- ஊறுகின்ற தெள்ளமுத ஊற லாகிப்
- பிளவிறந்து பிண்டாண்ட முழுதுந் தானாய்ப்
- பிறங்குகின்ற பெருங்கருணைப் பெரிய தேவே.
- பொன்னாகி மணியாகிப் போக மாகிப்
- புறமாகி அகமாகிப் புனித மாகி
- மன்னாகி மலையாகிக் கடலு மாகி
- மதியாகி ரவியாகி மற்று மாகி
- முன்னாகிப் பின்னாகி நடுவு மாகி
- முழுதாகி நாதமுற முழங்கி எங்கும்
- மின்னாகிப் பரவிஇன்ப வெள்ளந் தேக்க
- வியன்கருணை பொழிமுகிலாய் விளங்குந் தேவே.
- மலைமேலும் கடன்மேலும் மலரின் மேலும்
- வாழ்கின்ற மூவுருவின் வயங்கும் கோவே
- நிலைமேலும் நெறிமேலும் நிறுத்து கின்ற
- நெடுந்தவத்தோர் நிறைமேலும் நிகழ்த்தும் வேதக்
- கலைமேலும் எம்போல்வார் உளத்தின் மேலும்
- கண்மேலும் தோள்மேலும் கருத்தின் மேலும்
- தலைமேலும் உயிர்மேலும் உணர்வின் மேலும்
- தகுமன்பின் மேலும்வளர் தாண்மெய்த் தேவே.
- தேசுவிரித் திருளகற்றி என்றும் ஓங்கித்
- திகழ்கின்ற செழுங்கதிரே செறிந்த வாழ்க்கை
- மாசுவிரித் திடுமனத்தில் பயிலாத் தெய்வ
- மணிவிளக்கே ஆனந்த வாழ்வே எங்கும்
- காசுவிரித் திடுமொளிபோல் கலந்து நின்ற
- காரணமே சாந்தமெனக் கருதா நின்ற
- தூசுவிரித் துடுக்கின்றோர் தம்மை நீங்காச்
- சுகமயமே அருட்கருணை துலங்கும் தேவே.
- கோவேஎண் குணக்குன்றே குன்றா ஞானக்
- கொழுந்தேனே செழும்பாகே குளிர்ந்த மோனக்
- காவேமெய் அறிவின்ப மயமே என்றன்
- கண்ணேமுக் கண்கொண்ட கரும்பே வானத்
- தேவேஅத் தேவுக்குந் தெளிய ஒண்ணாத்
- தெய்வமே வாடாமல் திகழ்சிற் போதப்
- பூவேஅப் பூவிலுறு மணமே எங்கும்
- பூரணமாய் நிறைந்தருளும் புனிதத் தேவே.
- பூதமே அவைதோன்றிப் புகுந்தொ டுங்கும்
- புகலிடமே இடம்புரிந்த பொருளே போற்றும்
- வேதமே வேதத்தின் விளைவே வேத
- வியன்முடிவே அம்முடிவின் விளங்கும் கோவே
- நாதமே நாதாந்த நடமே அந்த
- நடத்தினையுள் நடத்துகின்ற நலமே ஞான
- போதமே போதமெலாம் கடந்து நின்ற
- பூரணமே யோகியருள் பொலிந்த தேவே.
- யோகமே யோகத்தின் பயனே யோகத்
- தொருமுதலே யோகத்தின் ஓங்குந் தூய
- போகமே போகத்தின் பொலிவே போகம்
- புரிந்தருளும் புண்ணியமே புனித ஞான
- யாகமே யாகத்தின் விளைவே யாகத்
- திறையேஅவ் விறைபுரியும் இன்பே அன்பர்
- மோகமே மோகமெலாம் அழித்து வீறு
- மோனமே மோனத்தின் முளைத்த தேவே.
- சொல்லொழியப் பொருளொழியக் கரண மெல்லாம்
- சோர்ந்தொழிய உணர்வொழியத் துளங்கா நின்ற
- அல்லொழியப் பகலொழிய நடுவே நின்ற
- ஆனந்த அநுபவமே அதீத வாழ்வே
- நெல்லொழியப் பதர்கொள்வார் போல இன்ப
- நிறைவொழியக் குறைகொண்மத நெறியோர் நெஞ்சக்
- கல்லொழிய மெய்யடியர் இதய மெல்லாங்
- கலந்துகலந் தினிக்கின்ற கருணைத் தேவே.
- பேதமுறா மெய்ப்போத வடிவ மாகிப்
- பெருங்கருணை நிறம்பழுத்துச் சாந்தம் பொங்கிச்
- சீதமிகுந் தருள்கனிந்து கனிந்து மாறச்
- சின்மயமாய் நின்மலமே மணந்து நீங்கா
- ஆதரவோ டியன்மவுனச் சுவைமேன் மேற்கொண்
- டானந்த ரசமொழுக்கி அன்பால் என்றும்
- சேதமுறா தறிஞருளந் தித்தித் தோங்கும்
- செழும்புனிதக் கொழுங்கனியே தேவ தேவே.
- உடல்குளிர உயிர்தழைக்க உணர்ச்சி ஓங்க
- உளங்கனிய மெய்யன்பர் உள்ளத் தூடே
- கடலனைய பேரின்பம் துளும்ப நாளும்
- கருணைமலர்த் தேன்பொழியும் கடவுட் காவே
- விடலரிய எம்போல்வார் இதயந் தோறும்
- வேதாந்த மருந்தளிக்கும் விருந்தே வேதம்
- தொடலரிய வெளிமுழுதும் பரவி ஞானச்
- சோதிவிரித் தொளிர்கின்ற சோதித் தேவே.
- சொற்போதற் கரும்பெரிய மறைகள் நாடித்
- தொடர்ந்துதொடர்ந் தயர்ந்திளைத்துத் துளங்கி ஏங்கிப்
- பிற்போத விரைந்தன்பர் உளத்தே சென்ற
- பெருங்கருணைப் பெருவாழ்வே பெயரா தென்றும்
- தற்போத ஒழிவினிடை நிறைந்து பொங்கித்
- ததும்பிவழிந் தோங்கியெல்லாந் தானே யாகிச்
- சிற்போதத் தகம்புறமும் கோத்து நின்ற
- சிவானந்தப் பெருக்கேமெய்ச் செல்வத் தேவே.
- பற்றறியா முத்தர்தமை எல்லாம் வாழைப்
- பழம்போல விழுங்குகின்ற பரமே மாசு
- பெற்றறியாப் பெரும்பதமே பதத்தைக் காட்டும்
- பெருமானே ஆனந்தப் பேற்றின் வாழ்வே
- உற்றறியா தின்னுமின்னும் மறைக ளெல்லாம்
- ஓலமிட்டுத் தேடநின்ற ஒன்றே ஒன்றும்
- கற்றறியாப் பேதையேன் தனக்கும் இன்பம்
- கனிந்தளித்த அருட்கடலே கருணைத் தேவே.
- மெய்யுணர்ந்த வாதவூர் மலையைச் சுத்த
- வெளியாக்கிக் கலந்துகொண்ட வெளியே முற்றும்
- பொய்யுணர்ந்த எமைப்போல்வார் தமக்கும் இன்பம்
- புரிந்தருளும் கருணைவெள்ளப் பொற்பே அன்பர்
- கையுறைந்து வளர்நெல்லிக் கனியே உள்ளம்
- கரைந்துகரைந் துருகஅவர் கருத்தி னூடே
- உய்யுநெறி ஒளிகாட்டி வெளியும் உள்ளும்
- ஓங்குகின்ற சுயஞ்சுடரே உண்மைத் தேவே.
- ஒலிவடிவு நிறஞ்சுவைகள் நாற்றம் ஊற்றம்
- உறுதொழில்கள் பயன்பலவே றுளவாய் எங்கும்
- மலிவகையாய் எவ்வகையும் ஒன்றாய் ஒன்றும்
- மாட்டாதாய் எல்லாமும் வல்ல தாகிச்
- சலிவகையில் லாதமுதற் பொருளே எல்லாம்
- தன்மயமாய் விளங்குகின்ற தனியே ஆண்பெண்
- அலிவகையல் லாதவகை கடந்து நின்ற
- அருட்சிவமே சிவபோகத் தமைந்த தேவே.
- மட்டகன்ற நெடுங்காலம் மனத்தால் வாக்கால்
- மதித்திடினும் புலம்பிடினும் வாரா தென்றே
- கட்டகன்ற மெய்யறிவோர் கரணம் நீக்கிக்
- கலையகற்றிக் கருவியெலாம் கழற்றி மாயை
- விட்டகன்று கருமமல போதம் யாவும்
- விடுத்தொழித்துச் சகசமல வீக்கம் நீக்கிச்
- சுட்டகன்று நிற்கஅவர் தம்மை முற்றும்
- சூழ்ந்துகலந் திடுஞ்சிவமே துரியத் தேவே.
- பாயிரமா மறைஅனந்தம் அனந்தம் இன்னும்
- பார்த்தளந்து காண்டும்எனப் பல்கான் மேவி
- ஆயிரமா யிரமுகங்க ளாலும் பன்னாள்
- அளந்தளந்தோர் அணுத்துணையும் அளவு காணா
- தேயிரங்கி அழுதுசிவ சிவவென் றேங்கித்
- திரும்பஅருட் பரவெளிவாழ் சிவமே ஈன்ற
- தாயிரங்கி வளர்ப்பதுபோல் எம்போல் வாரைத்
- தண்ணருளால் வளர்த்தென்றும் தாங்குந் தேவே.
- பரிக்கிரக நிலைமுழுதுந் தொடர்ந்தோம் மேலைப்
- பரவிந்து நிலையனைத்தும் பார்த்தோம் பாசம்
- எரிக்கும்இயற் பரநாத நிலைக்கண் மெல்ல
- எய்தினோம் அப்பாலும் எட்டிப் போனோம்
- தெரிக்கரிய வெளிமூன்றும் தெரிந்தோம் எங்கும்
- சிவமேநின் சின்மயம்ஓர் சிறிதும் தேறோம்
- தரிக்கரிதென் றாகமங்க ளெல்லாம் போற்றத்
- தனிநின்ற பரம்பொருளே சாந்தத் தேவே.
- மணக்குமலர்த் தேனுண்ட வண்டே போல
- வளர்பரமா னந்தமுண்டு மகிழ்ந்தோர் எல்லாம்
- இணக்கமுறக் கலந்துகலந் ததீத மாதற்
- கியற்கைநிலை யாததுதான் எம்மாற் கூறும்
- கணக்குவழக் கனைத்தினையும் கடந்த தந்தோ
- காண்பரிதிங் கெவர்க்கும்எனக் கலைக ளெல்லாம்
- பிணக்கறநின் றோலமிடத் தனித்து நின்ற
- பெரும்பதமே மதாதீதப் பெரிய தேவே.
- பொதுவென்றும் பொதுவில்நடம் புரியா நின்ற
- பூரணசிற் சிவமென்றும் போதா னந்த
- மதுவென்றும் பிரமமென்றும் பரம மென்றும்
- வகுக்கின்றோர் வகுத்திடுக அதுதான் என்றும்
- இதுவென்றும் சுட்டவொணா ததனால் சும்மா
- இருப்பதுவே துணிவெனக்கொண் டிருக்கின் றோரை
- விதுவென்ற141 தண்ணளியால் கலந்து கொண்டு
- விளங்குகின்ற பெருவெளியே விமலத் தேவே.
- அன்னையினும் பெரிதினிய கருணை ஊட்டும்
- ஆரமுதே என்னுறவே அரசே இந்த
- மன்னுலகில் அடியேனை என்னே துன்ப
- வலையிலகப் படஇயற்றி மறைந்தாய் அந்தோ
- பொன்னைமதித் திடுகின்றோர் மருங்கே சூழ்ந்து
- போனகமும் பொய்யுறவும் பொருந்தல் ஆற்றேன்
- என்னைஉளங் கொள்ளுதியோ கொள்கி லாயோ
- என்செய்வேன் என்செய்வேன் என்செய் வேனே.
- படித்தேன்பொய் உலகியனூல் எந்தாய் நீயே
- படிப்பித்தாய் அன்றியும்அப் படிப்பில் இச்சை
- ஒடித்தேன்நான் ஒடித்தேனோ ஒடிப்பித் தாய்பின்
- உன்னடியே துணையெனநான் உறுதி யாகப்
- பிடித்தேன்மற் றதுவும்நீ பிடிப்பித் தாய்இப்
- பேதையேன் நின்னருளைப் பெற்றோர் போல
- நடித்தேன்எம் பெருமான்ஈ தொன்றும் நானே
- நடித்தேனோ அல்லதுநீ நடிப்பித் தாயோ.
- மத்தேறி அலைதயிர்போல் வஞ்ச வாழ்க்கை
- மயலேறி விருப்பேறி மதத்தி னோடு
- பித்தேறி உழல்கின்ற மனத்தால் அந்தோ
- பேயேறி நலிகின்ற பேதை யானேன்
- வித்தேறி விளைவேறி மகிழ்கின் றோர்போல்
- மேலேறி அன்பரெலாம் விளங்கு கின்றார்
- ஒத்தேறி உயிர்க்குயிராய் நிறைந்த எங்கள்
- உடையானே இதுதகுமோ உணர்கி லேனே.
- மதியணிந்த முடிக்கனியே மணியே எல்லாம்
- வல்லஅருட் குருவேநின் மலர்த்தாள் வாழ்த்திக்
- கதியணிந்தார் அன்பரெலாம் அடியேன் ஒன்றும்
- கண்டறியேன் கருமத்தால் கலங்கி அந்தோ
- பொதியணிந்து திரிந்துழலும் ஏறு போலப்
- பொய்யுலகில் பொய்சுமந்து புலம்பா நின்றேன்
- துதியணிந்த நின்னருளென் றனக்கு முண்டோ
- இன்றெனிலிப் பாவியேன் சொல்வ தென்னே.
- என்னரசே என்னுயிரே என்னை ஈன்ற
- என்தாயே என்குருவே எளியேன் இங்கே
- தன்னரசே செலுத்திஎங்கும் உழலா நின்ற
- சஞ்சலநெஞ் சகத்தாலே தயங்கி அந்தோ
- மின்னரசே பெண்ணமுதே என்று மாதர்
- வெய்யசிறு நீர்க்குழிக்கண் விழவே எண்ணி
- கொன்னரைசேர் கிழக்குருடன் கோல்போல் வீணே
- குப்புறுகின் றேன்மயலில் கொடிய னேனே.
- வன்கொடுமை மலநீக்கி அடியார் தம்மை
- வாழ்விக்குங் குருவேநின் மலர்த்தாள் எண்ண
- முன்கொடுசென் றிடுமடியேன் தன்னை இந்த
- மூடமனம் இவ்வுலக முயற்சி நாடிப்
- பின்கொடுசென் றலைத்திழுக்கு142 தந்தோ நாயேன்
- பேய்பிடித்த பித்தனைப்போல் பிதற்றா நின்றேன்
- என்கொடுமை என்பாவம் எந்தாய் எந்தாய்
- என்னுரைப்பேன் எங்குறுவேன் என்செய் வேனே.
- அருள்வெளியில் ஆனந்த வடிவி னால்நின்
- றாடுகின்ற பெருவாழ்வே அரசே இந்த
- மருள்வலையில் அகப்பட்ட மனத்தால் அந்தோ
- மதிகலங்கி மெய்ந்நிலைக்கோர் வழிகா ணாதே
- இருள்நெறியில் கோலிழந்த குருட்டூ மன்போல்
- எண்ணாதெல் லாம்எண்ணி ஏங்கி ஏங்கி
- உருள்சகடக் கால்போலுஞ் சுழலா நின்றேன்
- உய்யும்வகை அறியேனிவ் வொதிய னேனே.
- கற்றவளை தனக்கும்உண வளிக்கும் உன்றன்
- கருணைநிலை தனைஅறியேன் கடையேன் இங்கே
- எற்றவளை எறும்பேபோல் திரிந்து நாளும்
- இளைத்துநின தருள்காணா தெந்தாய் அந்தோ
- பெற்றவளைக் காணாத பிள்ளை போலப்
- பேதுறுகின் றேன்செய்யும் பிழையை நோக்கி
- இற்றவளைக்144 கேள்விடல்போல் விடுதி யேல்யான்
- என்செய்வேன் எங்குறுவேன் என்சொல் வேனே.
- அடிமைசெயப் புகுந்திடும்எம் போல்வார் குற்றம்
- ஆயிரமும் பொறுத்தருளும் அரசே நாயேன்
- கொடுமைசெயு மனத்தாலே வருந்தி அந்தோ
- குரங்கின்கை மாலையெனக் குலையா நின்றேன்
- கடுமைசெயப் பிறர்துணிந்தால் அடிமை தன்னைக்
- கண்டிருத்தல் அழகன்றே கருணைக் கெந்தாய்
- செடிமையுளப் பாதகனேன் என்செய் வேன்நின்
- திருவுளத்தை அறிந்திலேன் திகைக்கின் றேனே.
- எனையறியாப் பருவத்தே ஆண்டு கொண்ட
- என்னரசே என்குருவே இறையே இன்று
- மனையறியாப் பிழைகருது மகிழ்நன் போல
- மதியறியேன் செய்பிழையை மனத்துட் கொண்டே
- தனையறியா முகத்தவர்போல் இருந்தாய் எந்தாய்
- தடங்கருணைப் பெருங்கடற்குத் தகுமோ கண்டாய்
- அனையறியாச் சிறுகுழவி யாகி இங்கே
- அடிநாயேன் அரற்றுகின்றேன் அந்தோ அந்தோ.
- அம்பரத்தே ஆனந்த வடிவால் என்றும்
- ஆடுகின்ற மாமணியே அரசே நாயேன்
- இம்பரத்தம் எனும்உலக நடையில் அந்தோ
- இடருழந்தேன் பன்னெறியில் எனைஇ ழுத்தே
- பம்பரத்தின் ஆடியலைப் படுத்தும் இந்தப்
- பாவிமனம் எனக்குவயப் படுவ தில்லை
- கொம்பரற்ற இளங்கொடிபோல் தளர்ந்தேன் என்னைக்
- குறிக்கொள்ளக் கருதுதியோ குறித்தி டாயோ.
- கண்ணுடைய நுதற்கரும்பே மன்றில் ஆடும்
- காரணகா ரியங்கடந்த கடவு ளேநின்
- தண்ணுடைய மலரடிக்கோர் சிறிதும் அன்பு
- சார்ந்தேனோ செம்மரம்போல் தணிந்த நெஞ்சேன்
- பெண்ணுடைய மயலாலே சுழல்கின் றேன்என்
- பேதைமையை என்புகல்வேன் பேய னேனைப்
- புண்ணுடைய புழுவிரும்பும் புள்ளென் கேனோ
- புலைவிழைந்து நிலைவெறுத்தேன் புலைய னேனே.
- பொன்னுடையார் இடம்புகவோ அவர்கட் கேற்கப்
- பொய்ம்மொழிகள் புகன்றிடவோ பொதிபோல் இந்தக்
- கொன்னுடையா உடல்பருக்கப் பசிக்குச் சோறு
- கொடுக்கவோ குளிர்க்காடை கொளவோ வஞ்ச
- மின்னிடையார் முடைச்சிறுநீர்க் குழிக்கண் அந்தோ
- வீழ்ந்திடவோ தாழ்ந்திளைத்து விழிக்க வோதான்
- என்னுடையாய் என்னுடையாய் என்னை இங்கே
- எடுத்துவளர்த் தனைஅறியேன் என்சொல் வேனே.
- பொன்மலையோ சிறிதெனப்பே ராசை பொங்கிப்
- புவிநடையில் பற்பலகால் போந்து போந்து
- நென்மலையோ நிதிமலையோ என்று தேடி
- நிலைகுலைந்த தன்றிஉனை நினைந்து நேடி
- மன்மலையோ மாமணியோ மருந்தோ என்று
- வழுத்தியதே இல்லைஇந்த வஞ்ச நெஞ்சம்
- கன்மலையோ இரும்போசெம் மரமோ பாறைக்
- கருங்கல்லோ பராய்முருட்டுக் கட்டை யேயோ.
- கண்மயக்கும் பேரிருட்டுக் கங்குற் போதில்
- கருத்தறியாச் சிறுவனைஓர் கடுங்கா னத்தே
- உண்மயக்கம் கொளவிடுத்தே ஒருவன் பின்போம்
- ஒருதாய்போல் மாயைஇருள் ஓங்கும் போதின்
- மண்மயக்கம் பெறும்விடயக் காட்டில் அந்தோ
- மதியிலேன் மாழாந்து மயங்க நீதான்
- வண்மையுற்ற நியதியின்பின் என்னை விட்டே
- மறைந்தனையே பரமேநின் வண்மை என்னே.
- 140. எதுகை நயம்பற்றி நின்றது. தொ.வே.
- 141. விது - சந்திரன். ஈண்டு இரண்டன் உருபுவிரிக்க. தொ.வே.
- 142. இழுக்குது என்பது மரூஉ வழக்கு. அல்லதூஉம், ஆசிரியர் தொல்காப்பியனார்கூறிய 'கடிசொல்லில்லை' என்பதனால் கோடலுமாம். இங்ஙனமாதல், ''இனியேதெமக்குனருள் வருமோ எனக்கருதி ஏங்குதே நெஞ்சம்'' எனத் தாயுமானார் முதலியபிற சான்றோர் செய்யுட்களாலும் உணர்க என்க. தொ. வே.
- 143. உய்குவித்துஎன்பதனுள் '' கு '' சாரியை. தொ. வே
- 144. இற்றவள் - மனையறங் காப்போள். தொ. வே.
- துனியால் உளந்தளர்ந் தந்தோ துரும்பில் சுழலுகின்றேன்
- இனியா யினும்இரங் காதோநின் சித்தம்எந் தாய்இதென்ன
- அனியாய மோஎன் னளவின்நின் பால்தண் ணருளிலையோ
- சனியாம்என் வல்வினைப் போதனை யோஎன்கொல் சாற்றுவதே.
- தண்டாத சஞ்சலங் கொண்டேன் நிலையைஇத் தாரணியில்
- கண்டார் இரங்குவர் கேட்டார் உருகுவர் கங்கைதிங்கள்
- துண்டார் மலர்ச்சடை எந்தாய் இரங்கிலை தூய்மையிலா
- அண்டார் பிழையும் பொறுப்போய் இதுநின் அருட்கழகே.
- பொய்யோ அடிமை உரைத்தல்எந் தாய்என்னுட் போந்திருந்தாய்
- ஐயோநின் உள்ளத் தறிந்ததன் றோஎன் அவலமெல்லாம்
- கையோட வல்லவர் ஓர்பதி னாயிரங் கற்பநின்று
- மெய்யோ டெழுதினுந் தான்அடங் காத வியப்புடைத்தே.
- வென்றே முதலையும் மூர்க்கரும் கொண்டது மீளவிடார்
- என்றே உரைப்பரிங் கென்போன்ற மூடர்மற் றில்லைநின்பேர்
- நன்றே உரைத்துநின் றன்றே விடுத்தனன் நாணில்என்மட்
- டின்றேயக் கட்டுரை இன்றேஎன் சொல்வ திறையவனே.
- மின்போலுஞ் செஞ்சடை வித்தக னேஒளி மேவியசெம்
- பொன்போலு மேனிஎம் புண்ணிய னேஎனைப் போற்றிப்பெற்ற
- தன்போலுந் தாய்தந்தை ஆயிரம் பேரிருந் தாலும்அந்தோ
- நின்போலும் அன்புடை யார்எனக் கார்இந்த நீணிலத்தே.
- என்போன் மனிதரை ஏன்அடுப் பேன்எனக் கெய்ப்பில்வைப்பாம்
- பொன்போல் விளங்கும் புரிசடை யான்றனைப் போயடுத்தேன்
- துன்போர் அணுவும் பெறேன்இனி யான்என்று சொல்லிவந்தேன்
- முன்போல் பராமுகஞ் செய்யேல் அருளுக முக்கணனே.
- பொன்னுடை யார்தமைப் போய்அடுப் பாய்என்ற புன்மையினோர்க்
- கென்னுடை யான்றனை யேஅடுப் பேன்இதற் கெள்ளளவும்
- பின்னிடை யேன்அவர் முன்னடை யேன்எனப் பேசிவந்தேன்
- மின்னிடை மாதுமை பாகாஎன் சோகம் விலக்குகவே.
- சாதகத் தோர்கட்குத் தானருள் வேனெனில் தாழ்ந்திடுமா
- பாதகத் தோனுக்கு முன்னருள் ஈந்ததெப் பான்மைகொண்டோ
- தீதகத் தேன்எளி யேன்ஆ யினும்உன் திருவடியாம்
- போதகத் தேநினைக் கின்றேன் கருணை புரிந்தருளே.
- சரங்கார் முகந்தொடுத் தெய்வது போலென் றனையுலகத்
- துரங்கா ரிருட்பெரு வாதனை யால்இடர் ஊட்டுநெஞ்சக்
- குரங்கால் மெலிந்துநின் நாமந் துணையெனக் கூறுகின்றேன்
- இரங்கார் தமக்கும் இரங்குகின் றோய்எற் கிரங்குகவே.
- சூற்படு மேக நிறத்தோனும் நான்முகத் தோனும்என்னைப்
- போற்படும் பாடுநல் லோர்சொலக் கேட்கும் பொழுதுமனம்
- வேற்படும் புண்ணில் கலங்கிஅந் தோநம் விடையவன்பூங்
- காற்படுந் தூளிநம் மேற்படு மோஒரு கால்என்னுமே.
- நாடிநின் றேநினை நான்கேட்டுக் கொள்வது நண்ணும்பத்துக்
- கோடியன் றேஒரு கோடியின் நூற்றொரு கூறுமன்றே
- தேடிநின் றேபுதைப் போருந் தருவர்நின் சீர்நினைந்துட்
- பாடியந் தோமனம் வாடிநின் றேன்முகம் பார்த்தருளே.
- ஏட்டாலுங் கேளயல் என்பாரை நான்சிரித் தென்னைவெட்டிப்
- போட்டாலும் வேறிடம் கேளேன்என் நாணைப் புறம்விடுத்துக்
- கேட்டாலும் என்னை உடையா னிடஞ்சென்று கேட்பனென்றே
- நீட்டாலும் வாயுரைப் பாட்டாலுஞ் சொல்லி நிறுத்துவனே.
- ஆதிக்க மாயை மனத்தேன் கவலை அடுத்தடுத்து
- வாதிக்க நொந்து வருந்துகின் றேன்நின் வழக்கம்எண்ணிச்
- சோதிக்க என்னைத் தொடங்கேல் அருளத் தொடங்குகண்டாய்
- போதிக்க வல்லநற் சேய்உமை யோடென்னுள் புக்கவனே.
- விழிக்கஞ்ச னந்தரும் மின்னார்தம் வாழ்க்கையில் வீழ்ந்தயலோர்
- மொழிக்கஞ்சி உள்ளம் பொறாதுநின் நாம மொழிந்தெளியேன்
- குழிக்கஞ்சி போன்மயங் கின்றேன்146அருளக் குறித்திலையேல்
- பழிக்கஞ்சி னோய்இன்னும் என்பழிக் கஞ்சப் படுமுனக்கே.
- ஒருமாது பெற்ற மகன்பொருட் டாக உவந்துமுன்னம்
- வருமாம னாகி வழக்குரைத் தோய்என் வழக்குரைத்தற்
- கிருமா நிலத்தது போல்வேடங் கட்ட இருத்திகொலோ
- திருமால் வணங்கும் பதத்தவ யானுன் சிறுவனன்றே.
- வானம் விடாதுறு கால்போல்என் தன்னை வளைந்துகொண்ட
- மானம் விடாதிதற் கென்செய்கு வேன்நின்னை வந்தடுத்தேன்
- ஊனம் விடாதுழல் நாயேன் பிழையை உளங்கொண்டிடேல்
- ஞானம் விடாத நடத்தோய்நின் தண்ணருள் நல்குகவே.
- வருஞ்செல்லுள்148 நீர்மறுத் தாலும் கருணை மறாதஎங்கள்
- பெருஞ்செல்வ மேஎஞ் சிவமே நினைத்தொழப் பெற்றும்இங்கே
- தருஞ்செல் அரிக்கு மரம்போல் சிறுமைத் தளர்நடையால்
- அருஞ்செல்லல் மூழ்கிநிற் கின்றேன் இதுநின் அருட்கழகே.
- பீழையை மேவும்இவ் வாழ்க்கையி லேமனம் பேதுற்றஇவ்
- ஏழையை நீவிட லாமோ அடிமைக் கிரங்குகண்டாய்
- மாழையைப்150 போன்முன்னர்த் தாங்கொண்டு வைத்து வளர்த்தஇள
- வாழையைத் தாம்பின்னர் நீர்விட லின்றி மறுப்பதுண்டே.
- பையுரைத் தாடும் பணிப்புயத் தோய்தமைப் பாடுகின்றோர்
- உய்யுரைத் தாவுள்ள தில்லதென் றில்லதை உள்ளதென்றே
- பொய்யுரைத் தாலும் தருவார் பிறர்அது போலன்றிநான்
- மெய்யுரைத் தாலும் இரங்காமை நின்னருள் மெய்க்கழகே.
- எள்ளிருக் கின்றதற் கேனுஞ் சிறிதிட மின்றிஎன்பான்
- முள்ளிருக் கின்றது போலுற்ற துன்ப முயக்கமெல்லாம்
- வெள்ளிருக் கின்றவர் தாமுங்கண் டார்எனில் மேவிஎன்றன்
- உள்ளிருக் கின்றநின் தாட்கோதல் என்எம் உடையவனே.
- வாய்மூடிக் கொல்பவர் போலேஎன் உள்ளத்தை வன்துயராம்
- பேய்மூடிக் கொண்டதென் செய்கேன் முகத்தில் பிறங்குகையைச்
- சேய்மூடிக் கொண்டுநற் பாற்கழக் கண்டுந் திகழ்முலையைத்
- தாய்மூடிக் கொள்ளுவ துண்டோ அருளுக சங்கரனே.
- சினத்தாலும் காமத்தி னாலும்என் தன்னைத் திகைப்பிக்கும்இம்
- மனத்தால் உறுந்துயர் போதாமை என்று மதித்துச்சுற்றும்
- இனத்தாலும் வாழ்க்கை இடும்பையி னாலும் இளைக்கவைத்தாய்
- அனத்தான் புகழும் பதத்தோய் இதுநின் அருட்கழகே.
- புல்லள வாயினும் ஈயார்தம் வாயில் புகுந்துபுகழ்ச்
- சொல்லள வாநின் றிரப்போர் இரக்கநற் சொன்னங்களைக்
- கல்லள152 வாத்தரு கின்றோர்தம் பாலுங் கருதிச்சென்றோர்
- நெல்லள வாயினும் கேளேன்நின் பாலன்றி நின்மலனே.
- கண்கட்டி ஆடும் பருவத்தி லேமுலை கண்டஒரு
- பெண்கட்டி யாள நினைக்கின்ற ஓர்சிறு பிள்ளையைப்போல்
- எண்கட்டி யானுன் அருள்விழைந் தேன்சிவ னேஎன்நெஞ்சம்
- புண்கட்டி யாய்அலைக் கின்றது மண்கட்டிப் போலுதிர்ந்தே.
- போகங்கொண் டார்த்த அருளார் அமுதப் புணர்முலையைப்
- பாகங்கொண் டார்த்த பரம்பொரு ளேநின் பதநினையா
- வேகங்கொண் டார்த்த மனத்தால்இவ் வேழை மெலிந்துமிகச்
- சோகங்கொண் டார்த்துநிற் கின்றேன் அருளத் தொடங்குகவே.
- வன்பட்ட கூடலில் வான்பட்ட வையை வரம்பிட்டநின்
- பொன்பட்ட மேனியில் புண்பட்ட போதில் புவிநடையாம்
- துன்பட்ட வீரர்அந் தோவாத வூரர்தம் தூயநெஞ்சம்
- என்பட்ட தோஇன்று கேட்டஎன் நெஞ்சம் இடிபட்டதே.
- நீர்சிந்தும் கண்ணும் நிலைசிந்தும் நெஞ்சமும் நீணடையில்
- சீர்சிந்து வாழ்க்கையும் தேன்சிந்தி வாடிய செம்மலர்போல்
- கூர்சிந்து புந்தியும் கொண்டுநின் றேன்உட் குறைசிந்தும்வா
- றோர்சிந்து போலருள் நேர்சிந்தன் ஏத்தும் உடையவனே.
- கொடிகொண்ட ஏற்றின் நடையும் சடையும் குளிர்முகமும்
- துடிகொண்ட கையும் பொடிகொண்ட மேனியும் தோலுடையும்
- பிடிகொண்ட பாகமும் பேரருள் நோக்கமும் பெய்கழலும்
- குடிகொண்ட நன்மனம் என்மனம் போற்குறை கொள்வதின்றே.
- வனம்போய் வருவது போலேவன் செல்வர் மனையிடத்தே
- தினம்போய் வருமிச் சிறியேன் சிறுமைச் செயலதுபோய்ச்
- சினம்போய்க் கொடும்பகைக் காமமும் போய்நின் திறநிகழ்த்தா
- இனம்போய்க் கொடிய மனம்போய் இருப்பதென் றென்னரசே.
- அந்நாணை யாதுநஞ் சேற்றயன் மால்மனை யாதியர்தம்
- பொன்னாணைக் காத்த அருட்கட லேபிறர் புன்மனைபோய்
- இந்நாணை யாவகை என்னாணைக் காத்தருள் ஏழைக்குநின்
- தன்னாணை ஐயநின் தாளாணை வேறு சரணில்லையே.
- முன்மழை வேண்டும் பருவப் பயிர்வெயில் மூடிக்கெட்ட
- பின்மழை பேய்ந்தென்ன பேறுகண் டாய்அந்தப் பெற்றியைப்போல்
- நின்மழை போற்கொடை இன்றன்றி மூப்பு நெருங்கியக்கால்
- பொன்மழை பேய்ந்தென்ன கன்மழை பேய்ந்தென்ன பூரணனே.
- வளங்கன்று மாவனத் தீன்றதன் தாயின்றி வாடுகின்ற
- இளங்கன்று போல்சிறு வாழ்க்கையில் நின்அருள் இன்றிஅந்தோ
- உளங்கன்று நான்செய்வ தென்னே கருணை உதவுகண்டாய்
- களங்கன்று பேரருட் காரென்று கூறும் களத்தவனே.
- காற்றுக்கு மேல்விட்ட பஞ்சாகி உள்ளம் கறங்கச்சென்றே
- சோற்றுக்கு மேற்கதி இன்றென வேற்றகந் தோறும்உண்போர்
- தூற்றுக்கு மேல்பெருந் தூறிலை ஆங்கென் துயரமெனும்
- சேற்றுக்கு மேல்பெருஞ் சேறிலை காண்அருட் செவ்வண்ணனே.
- அந்தோ துயரில் சுழன்றாடும் ஏழை அவலநெஞ்சம்
- சிந்தோத நீரில் சுழியோ இளையவர் செங்கைதொட்ட
- பந்தோ சிறுவர்தம் பம்பர மோகொட்டும் பஞ்சுகொலோ
- வந்தோ டுழலும் துரும்போஎன் சொல்வதெம் மாமணியே.
- வலைப்பட்ட மானென வாட்பட்ட கண்ணியர் மையலென்னும்
- புலைப்பட்ட பேய்க்கு விலைப்பட்ட நான்மதி போய்ப்புலம்ப
- விலைப்பட்ட இம்மனம் அந்தோஇவ் வேழைக்கென் றெங்கிருந்து
- தலைப்பட்ட தோஇதற் கென்செய்கு வேன்முக்கட் சங்கரனே.
- காண்டத்தின் மேவும் உலகீர்இத் தேகம் கரும்பணைபோல்
- நீண்டத்தி லென்ன நிலையல வேஇது நிற்றல்பசும்
- பாண்டத்தில் நீர்நிற்றல் அன்றோ நமைநம் பசுபதிதான்
- ஆண்டத்தில் என்ன குறையோநம் மேற்குறை ஆயிரமே.
- மாகலை வாணர் பிறன்பால் எமக்கும் மனைக்கும்கட்ட
- நீகலை தாஒரு மேகலை தாஉண நென்மலைதா
- போகலை யாஎனப் பின்தொடர் வார்அவர் போல்மனனீ
- ஏகலை ஈகலர் ஏகம்ப வாண ரிடஞ்செல்கவே.
- மாப்பிட்டு நேர்ந்துண்டு வந்தியை வாழ்வித்த வள்ளல்உன்வெண்
- காப்பிட்டு மேற்பல பாப்பிட்ட மேனியைக் கண்டுதொழக்
- கூப்பிட்டு நானிற்க வந்திலை நாதனைக் கூடஇல்லாள்
- பூப்பிட்ட காலத்தில் கூப்பிட்ட போதினும் போவதுண்டே.
- மைவிட்டி டாமணி கண்டாநின் தன்னை வழுத்தும்என்னை
- நெய்விட்டி டாஉண்டி போல்இன்பி லான்மெய்ந் நெறியறியான்
- பொய்விட்டி டான்வெம் புலைவிட்டி டான்மயல் போகமெலாம்
- கைவிட்டி டான்எனக் கைவிட்டி டேல்வந்து காத்தருளே.
- சொற்றுணைவேதியன் என்னும்பதிகச் சுருதியைநின்
- பொற்றுணை வார்கழற் கேற்றியப் பொன்னடிப் போதினையே
- நற்றுணை யாக்கரை ஏறிய புண்ணிய நாவரசைக்
- கற்றுணை யாதிந்தக் கற்றுணை யாமென் கடைநெஞ்சமே.
- சீர்தரு நாவுக் கரையரைப் போலிச் சிறியனும்ஓர்
- கார்தரு மாயைச் சமணான் மனக்கருங் கல்லிற்கட்டிப்
- பார்தரு பாவக் கடலிடை வீழ்த்திடப் பட்டுழன்றே
- ஏர்தரும் ஐந்தெழுத் தோதுகின் றேன்கரை ஏற்றரசே.
- எனைப்பெற்ற தாயினும் அன்புடை யாய்எனக் கின்பநல்கும்
- உனைப்பெற்ற உள்ளத் தவர்மலர்ச் சேவடிக் கோங்கும்அன்பு
- தனைப்பெற்ற நன்மனம் தாம்பெற்ற மேலவர் சார்பைப்பெற்றால்
- வினைப்பெற்ற வாழ்வின் மனைப்பெற்றம் போல மெவிவதின்றே.
- துடிவைத்த செங்கை அரசேநல் லூரில்நின் தூமலர்ப்பொன்
- அடிவைத்த போதெங்கள் அப்பர்தம் சென்னி யதுகுளிர்ந்தெப்
- படிவைத்த தோஇன்ப மியான்எணுந் தோறும்இப் பாவிக்குமால்
- குடிவைத்த புன்தலை ஒன்றோ மனமும் குளிர்கின்றதே.
- கார்முக மாகப்பொற் கல்வளைத் தோய்இக் கடையவனேன்
- சோர்முக மாகநின் சீர்முகம் பார்த்துத் துவளுகின்றேன்
- போர்முக மாகநின் றோரையும் காத்தநின் பொன்னருள்இப்
- பார்முக மாகஎன் ஓர்முகம் பார்க்கப் பரிந்திலதே.
- வான்வளர்த் தாய்இந்த மண்வளர்த் தாய்எங்கும் மன்னுயிர்கள்
- தான்வளர்த் தாய்நின் தகைஅறி யாஎன் றனைஅரசே
- ஏன்வளர்த் தாய்கொடும் பாம்பையெல் லாந்தள் ளிலைவளர்த்தாய்
- மான்வளர்த் தாய்கரத் தார்நினைப் போல வளர்ப்பவரே.
- அற்கண்டம் ஓங்கும் அரசேநின் றன்அடி யார்மதுரச்
- சொற்கண்ட போதும்என் புற்கண்ட நெஞ்சம் துணிந்துநில்லா
- திற்கண்ட மெய்த்தவர் போலோடு கின்ற தெறிந்ததுதீங்
- கற்கண் டெனினும்அக் கற்கண்ட காக்கைநிற் காதென்பரே.
- சொல்லுகின் றோர்க்கமு தம்போல் சுவைதரும் தொல்புகழோய்
- வெல்லுகின் றோரின்றிச் சும்மா அலையுமென் வேடநெஞ்சம்
- புல்லுகின் றோர்தமைக் கண்டால்என் னாங்கொல் புகல்வெறும்வாய்
- மெல்லுகின் றோர்க்கொரு நெல்லவல் வாய்க்கில் விடுவரன்றே.
- சீரிடு வார்பொருட் செல்வர்க்க லாமல்இத் தீனர்கட்கிங்
- காரிடு வார்பிச்சை ஆயினும் பிச்சன் அசடன்என்றே
- பேரிடு வார்வம்புப் பேச்சிடு வார்இந்தப் பெற்றிகண்டும்
- போரிடு வார்நினைப் போற்றார்என் னேமுக்கட் புண்ணியனே.
- சேலுக்கு நேர்விழி மங்கைபங் காஎன் சிறுமதிதான்
- மேலுக்கு நெஞ்சையுட் காப்பது போல்நின்று வெவ்விடய
- மாலுக்கு வாங்கி வழங்கவுந் தான்சம் மதித்ததுகாண்
- பாலுக்குங் காவல்வெம் பூனைக்குந் தோழன்என் பார்இதுவே.
- நிலைகாட்டி ஆண்டநின் தாட்கன்பி லாதன்பில் நீண்டவன்போல்
- புலைகாட் டியமனத் தேன்கொண்ட வேடம் புனைஇடைமேல்
- கலைகாட்டிக் கட்டு மயிர்த்தலை காட்டிப்புன் கந்தைசுற்றி
- முலைகாட்டி ஆண்மகன் பெண்வேடம் காட்டு முறைமையன்றே.
- சோபங்கண் டார்க்கருள் செய்வோய் மதிக்கன்றிச் சூழ்ந்திடுவெந்
- தீபங்கண் டாலும் இருள்போம்இவ் வேழை தியங்கும்பரி
- தாபங்கண் டாய்அருள் செய்யாதென் குற்றந் தனைக்குறித்துக்
- கோபங்கண் டாலுநன் றையாஎன் துன்பக் கொதிப்பறுமே.
- மாலறி யாதவன் அன்றேஅத் தெய்வ வரதனுநின்
- காலறி யாதவன் என்றால்அக் காலைஎக் காலைஎமைப்
- போலறி யாதவர் காண்பார்முற் கண்டமெய்ப் புண்ணியர்தம்
- பாலறி யாதவன் நானிது கேட்டுணர் பாலனன்றே.
- தாழ்வேதும் இன்றிய கோவே எனக்குத் தனித்தபெரு
- வாழ்வே நுதற்கண் மணியேஎன் உள்ள மணிவிளக்கே
- ஏழ்வேலை என்னினும் போதா இடும்பை இடுங்குடும்பப்
- பாழ்வே தனைப்பட மாட்டேன் எனக்குன் பதமருளே.
- மலங்கவிழ்ந் தார்மனம் வான்கவிழ்ந் தாலும்அவ் வான்புறமாம்
- சலங்கவிழ்ந் தாலும் சலியாதென் புன்மனந் தான்கடலில்
- கலங்கவிழ்ந் தார்மனம் போலே சலிப்பது காண்குடும்ப
- விலங்கவிழ்ந் தாலன்றி நில்லாதென் செய்வல் விடையவனே.
- களங்கனி போல்மணி கண்டாநின் பொற்கழல் காணற்கென்சிற்
- றுளங்கனி யாதுநின் சீர்கேட் கினும்அன் புறஉருகா
- வளங்கனி காமஞ் சிறவாமல் சிற்றில் வகுத்துழலும்
- இளங்கனி போல்நின்ற தென்செய்கு வேன்எம் இறையவனே.
- மாமத்தி னால்சுழல் வெண்தயிர் போன்று மடந்தையர்தம்
- காமத்தி னால்சுழல் என்றன்நெஞ் சோஉன்றன் காலைஅன்பாம்
- தாமத்தி னால்தளை யிட்டநெஞ் சோஇத் தகைஇரண்டின்
- நாமத்தினால் பித்தன் என்போய் நினக்கெது நல்லநெஞ்சே.
- வேதனை யாமது சூதனை யாஎன்று வேதனையால்
- போதனை யாநின் றுனைக்கூவு மேழையைப் போதனைகேள்
- வாதனை யாதிங்கு வாதனை யாவென்றுன் வாய்மலரச்
- சோதனை யாயினுஞ் சோதனை யாசிற் சுகப்பொருளே.
- இன்பற்ற இச்சிறு வாழ்க்கையி லேவெயி லேறவெம்பும்
- என்பற்ற புன்புழுப் போல்தளர் ஏழை எனினுமிவன்
- அன்பற்ற பாவிஎன் றந்தோ எனைவிடில் ஐயவையத்
- தென்பற்ற தாகமற் றில்லைகண் டாய்எனை ஏன்றுகொள்ளே.
- கொங்கிட்ட கொன்றைச் சடையும்நின் னோர்பசுங் கோமளப்பெண்
- பங்கிட்ட வெண்திரு நீற்றொளி மேனியும் பார்த்திடில்பின்
- இங்கிட்ட மாயையை எங்கிட்ட வாஎன் றிசைப்பினும்போய்ச்
- சங்கிட்ட ஓசையில் பொங்கிட்ட வாய்கொடு தாண்டிடுமே.
- கான்போல் இருண்டஇவ் வஞ்சக வாழ்க்கையில் கன்னெஞ்சமே
- மான்போல் குதித்துக்கொண் டோடேல் அமுத மதிவிளங்கும்
- வான்போல் குளிர்ந்த சிவானந்த வாழ்க்கையின் வாழ்வுறச்செந்
- தேன்போல் இனிக்கும் சிவாய நமஎனச் சிந்தைசெய்யே.
- சிவசங்க ராசிவ யோகா சிவகதிச் சீரளிக்கும்
- சிவசம்பு வேசிவ லோகா சிவாநந்தச் செல்வநல்கும்
- சிவசுந்த ராசிவ போகா சிவாகமச் செந்நெறிசொல்
- சிவபுங்க வாசிவ ஞானிகள் வாழ்த்தும் சிவகுருவே.
- இடைக்கொடி வாமத் திறைவாமெய்ஞ் ஞானிகட் கின்பநல்கும்
- விடைக்கொடி ஏந்தும் வலத்தாய்நின் நாமம் வியந்துரையார்
- கடைக்கொடி போலக் கதறுகின் றார்பொய்க் கதையவர்தாம்
- புடைக்கொடி யாலன்றிப் புல்லால் எயிலைப் புனைபவரே.
- உருமத்தி லேபட்ட புன்புழுப் போல்இவ் உலகநடைக்
- கருமத்தி லேபட்ட என்மனந் தான்நின் கழலடையும்
- தருமத்தி லேபட்ட தின்றேஎன் றெண்ணுந் தனையுமந்தோ
- மருமத்தி லேபட்ட வாளியைப் போன்று வருத்துவதே.
- என்னிறை வாஇமை யோரிறை வாமறை யின்முடிபின்
- முன்னிறை வாமலை மின்னிறை வாமலர் முண்டகத்தோன்
- தன்னிறை வாதிதித் தானிறை வாமெய்த் தபோதனருள்
- மன்னிறை வாஇங்கு வாஎன் றெனக்குநல் வாழ்வருளே.
- போற்றிஎன் ஆவித் துணையேஎன் அன்பில் புகுஞ்சிவமே
- போற்றிஎன் வாழ்வின் பயனேஎன் இன்பப் புதுநறவே
- போற்றிஎன் கண்ணுண் மணியேஎன் உள்ளம் புனைஅணியே
- போற்றிஎன் ஓர்பெருந் தேவே கருணை புரிந்தருளே.
- கஞ்சத்தி லேர்முக மஞ்சத்தி லேர்நடைக் கன்னியர்கண்
- நஞ்சத்தி லேஅவர் வஞ்சத்தி லேபட்டு நாணுறும்புன்
- நெஞ்சத்தி லேஅதன் தஞ்சத்தி லேமுக் கணித்தஎன்போல்
- பஞ்சத்தி லேபிர பஞ்சத்தி லேஉழப் பார்எவரே.
- தளைக்கின்ற மாயக் குடும்பப் பெருந்துயர் தாங்கிஅந்தோ
- இளைக்கின்ற ஏழைக் கிரங்குகண் டாய்சிறி தேஇறகு
- முளைக்கின்ற போதறுப் பார்போல்நின் னாம மொழிந்திடுங்கால்
- வளைக்கின்ற மாயைக்கிங் காற்றேன்முக் கண்ணுடை மாமணியே.
- உடையென்றும் பூணென்றும் ஊணென்றும் நாடி உழன்றிடும்இந்
- நடையென்றும் சஞ்சலஞ் சஞ்சலங் காணிதி னான்சிறியேன்
- புடையென்று வெய்ய லுறும்புழுப் போன்று புழுங்குகின்றேன்
- விடையென்று மாலறங் கொண்டோயென் துன்பம் விலக்குகவே.
- மெய்யகத் தேகணப் போதும் விடாது விரும்புகின்றோர்
- கையகத் தேநின் றொளிர்கனி யேநுதற் கட்கரும்பே
- வையகத் தேநினை அல்லாமல் நற்றுணை மற்றிலைஇப்
- பொய்யகத் தேன்செயும் தீங்கா யிரமும் பொறுத்தருளே.
- புரிகின்ற வீட்டகம் போந்தடி பட்டுப் புறங்கடையில்
- திரிகின்ற நாய்க்கும் சிரிப்பாம்என் பாவிச் சிறுபிழைப்பைச்
- சொரிகின்ற புண்ணில் கனலிடல் போலெணுந் தோறுநெஞ்சம்
- எரிகின்ற தென்செய்கு வேன்பிறை வார்சடை என்னமுதே.
- மோகங் கலந்த மனத்தேன் துயரங்கள் முற்றுமற்றுத்
- தேகங் கலந்த பவந்தீர்க்கும் நின்பதம் சிந்திக்கும்நாள்
- போகங் கலந்த திருநாள் மலையற் புதப்பசுந்தேன்
- பாகங் கலந்தசெம் பாலே நுதற்கட் பரஞ்சுடரே.
- புலையள வோஎனும் நெஞ்சக னேன்துயர்ப் போகமெட்டு
- மலையள வோஇந்த மண்ணள வோவந்த வானளவோ
- அலையள வோவன்று மன்றுணின் றோங்கும் அருமருந்தே
- இலையள வோஎனுந் தேவே அறிந்தும் இரங்கிலையே.
- கள்ளா டியகொன்றைச் செஞ்சடை யோய்நற் கனகமன்றின்
- உள்ளா டியமலர்ச் சேவடி யோய்இவ் வுலகியற்கண்
- எள்ளா டியசெக் கிடைப்படல் போல்துன் பிடைஇளைத்துத்
- தள்ளா டியநடை கொண்டேற்கு நன்னடை தந்தருளே.
- நாலே எனுமறை அந்தங்கள் இன்னமும் நாடியெனைப்
- போலே வருந்த வெளிஒளி யாய்ஒற்றிப் புண்ணியர்தம்
- பாலே இருந்த நினைத்தங்கை யாகப் பகரப்பெற்ற
- மாலே தவத்தில் பெரியோன் வடிவுடை மாணிக்கமே.
- பின்னீன்ற பிள்ளையின் மேலார்வம் தாய்க்கெனப் பேசுவர்நீ
- முன்னீன்ற பிள்ளையின் மேலாசை யுள்ளவா மொய்யசுரர்
- கொன்னீன்ற போர்க்கிளம் பிள்ளையை ஏவக் கொடுத்ததென்னே
- மன்னீன்ற ஒற்றி மயிலே வடிவுடை மாணிக்கமே.
- கலைமக ளோநின் பணியைஅன் போடும் கடைப்பிடித்தாள்
- அலைமக ளோஅன் பொடுபிடித் தாள்எற் கறைதிகண்டாய்
- தலைமக ளேஅருட் டாயேசெவ் வாய்க்கருந் தாழ்குழற்பொன்
- மலைமக ளேஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
- பொன்னோடு வாணிஎன் போரிரு வோரும் பொருணற்கல்வி
- தன்னோ டருளுந் திறநின்குற் றேவலைத் தாங்கிநின்ற
- பின்னோ அலததன் முன்னோ தெளிந்திடப் பேசுகநீ
- மன்னோ டெழிலொற்றி யூர்வாழ் வடிவுடை மாணிக்கமே.
- காமட் டலர்திரு வொற்றிநின் னாயகன் கந்தைசுற்றி
- யேமட் டரையொடு நிற்பது கண்டும் இரங்கலர்போல்
- நீமட்டு மேபட் டுடுக்கின் றனைஉன்றன் நேயம்என்னோ
- மாமட் டலர்குழல் மானே வடிவுடை மாணிக்கமே.
- வீற்றார்நின் றன்மணத் தம்மியின் மேல்சிறு மெல்லனிச்சம்
- ஆற்றாநின் சிற்றடிப் போதினைத் தூக்கிவைத் தாரெனின்மால்
- ஏற்றார் திருவொற்றி யூரார் களக்கறுப் பேற்றவரே
- மாற்றா இயல்கொண் மயிலே வடிவுடை மாணிக்கமே.
- பொருப்புறு நீலியென் பார்நின்னை மெய்அது போலும்ஒற்றி
- விருப்புறு நாயகன் பாம்பா பரணமும் வெண்தலையும்
- நெருப்புறு கையும் கனல்மேனி யும்கண்டு நெஞ்சம்அஞ்சாய்
- மருப்புறு கொங்கை மயிலே வடிவுடை மாணிக்கமே.
- அனம்பொறுத் தான்புகழ் ஒற்றிநின் நாயகன் அங்குமிழித்
- தனம்பொறுத் தாள்ஒரு மாற்றாளைத் தன்முடி தன்னில்வைத்தே
- தினம்பொறுத் தான்அது கண்டும் சினமின்றிச் சேர்ந்தநின்போல்
- மனம்பொறுத் தார்எவர் கண்டாய் வடிவுடை மாணிக்கமே.
- முப்போதும் அன்பர்கள் வாழ்த்தொற்றி யூர்எம் முதல்வர்மகிழ்
- ஒப்போ தருமலைப் பெண்ணமு தேஎன்று வந்துநினை
- எப்போதும் சிந்தித் திடர்நீங்கி வாழ எனக்கருள்வாய்
- மைப்போ தனையகண் மானே வடிவுடை மாணிக்கமே.
- மீதலத் தோர்களுள் யார்வணங் காதவர் மேவுநடுப்
- பூதலத் தோர்களுள் யார்புக ழாதவர் போற்றிநிதம்
- பாதலத் தோர்களுள் யார்பணி யாதவர் பற்றிநின்றாள்
- மாதலத் தோங்கொற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
- புரநோக்கி னால்பொடி தேக்கிய ஒற்றிப் புனிதர்களக்
- கரநோக்கி36 நல்லமு தாக்கிநிற் போற்றுங் கருத்தினர்ஆ
- தரநோக்கி உள்ளிருள் நீக்கிமெய்ஞ் ஞானத் தனிச்சுகந்தான்
- வரநோக்கி ஆள்விழி மானே வடிவுடை மாணிக்கமே.
- வாணாள் அடைவர் வறுமை யுறார்நன் மனைமக்கள்பொன்
- பூணாள் இடம்புகழ் போதம் பெறுவர்பின் புன்மைஒன்றும்
- காணார்நின் நாமம் கருதுகின் றோர்ஒற்றிக் கண்ணுதல்பால்
- மாணார்வம் உற்ற மயிலே வடிவுடை மாணிக்கமே.
- சீரறி வாய்த்திரு வொற்றிப் பரம சிவத்தைநினைப்
- போரறி வாய்அவ் அறிவாம் வெளிக்கப் புறத்துநின்றாய்
- யாரறி வார்நின்னை நாயேன்அறிவ தழகுடைத்தே
- வாரெறி பூண்முலை மானே வடிவுடை மாணிக்கமே.
- போற்றிடு வோர்தம் பிழைஆ யிரமும் பொறுத்தருள்செய்
- வீற்றொளிர் ஞான விளக்கே மரகத மென்கரும்பே
- ஏற்றொளிர் ஒற்றி யிடத்தார்இடத்தில் இலங்கும்உயர்
- மாற்றொளி ரும்பசும் பொன்னே வடிவுடை மாணிக்கமே.
- அண்டாரை வென்றுல காண்டுமெய்ஞ் ஞானம் அடைந்துவிண்ணில்
- பண்டாரை சூழ்மதி போலிருப் போர்கள்நின் பத்தர்பதம்
- கண்டாரைக் கண்டவர் அன்றோ திருவொற்றிக் கண்ணுதல்சேர்
- வண்டாரை வேலன்ன மானே வடிவுடை மாணிக்கமே.
- இட்டார் மறைக்கும் உபநிட தத்திற்கும் இன்னுஞ்சற்றும்
- எட்டாநின் பொன்னடிப் போதெளி யேன்தலைக் கெட்டுங்கொலோ
- கட்டார் சடைமுடி ஒற்றிஎம் மான்நெஞ்ச கத்தமர்ந்த
- மட்டார் குழன்மட மானே வடிவுடை மாணிக்கமே.
- ஏமமுய்ப் போர்எமக் கென்றே இளைக்கில் எடுக்கவைத்த
- சேமவைப் பேஅன்பர் தேடுமெய்ஞ் ஞானத் திரவியமே
- தாமமைக் கார்மலர்க் கூந்தல் பிடிமென் தனிநடையாய்
- வாமநற் சீர்ஒற்றி மானே வடிவுடை மாணிக்கமே.
- எண்ணிய எண்ணங்கள் எல்லாம் பலிக்க எனக்குன்அருள்
- பண்ணிய உள்ளங்கொள் உள்ளும் புறம்பும் பரிமளிக்கும்
- புண்ணிய மல்லிகைப் போதே எழில்ஒற்றிப் பூரணர்பால்
- மண்ணிய பச்சை மணியே வடிவுடை மாணிக்கமே.
- என்போல் குணத்தில் இழிந்தவர் இல்லைஎப் போதும்எங்கும்
- நின்போல் அருளில் சிறந்தவர் இல்லைஇந் நீர்மையினால்
- பொன்போலும் நின்னருள் அன்னே எனக்கும் புரிதிகண்டாய்
- மன்போல் உயர்ஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
- துன்பே மிகும்இவ் அடியேன் மனத்தில்நின் துய்யஅருள்
- இன்பே மிகுவதெந் நாளோ எழிலொற்றி எந்தைஉயிர்க்
- கன்பேமெய்த் தொண்டர் அறிவே சிவநெறிக் கன்பிலர்பால்
- வன்பேமெய்ப் போத வடிவே வடிவுடை மாணிக்கமே.
- சற்றே யெனினும்என் நெஞ்சத் துயரம் தவிரவும்நின்
- பொற்றே மலர்ப்பதம் போற்றவும் உள்ளம் புரிதிகண்டாய்
- சொற்றேர் அறிஞர் புகழ்ஒற்றி மேவும் துணைவர்தஞ்செம்
- மற்றேர் புயத்தணை மானே வடிவுடை மாணிக்கமே.
- கற்பே விகற்பம் கடியும்ஒன் றேஎங்கள் கண்நிறைந்த
- பொற்பேமெய்த் தொண்டர்தம் புண்ணிய மேஅருட் போதஇன்பே
- சொற்பேர் அறிவுட் சுகப்பொரு ளேமெய்ச் சுயஞ்சுடரே
- மற்பேர் பெறும்ஒற்றி மானே வடிவுடை மாணிக்கமே.
- தாதா உணவுடை தாதா எனப்புல்லர் தம்மிடைப்போய்
- மாதாகம் உற்றவர் வன்நெஞ்சில் நின்அடி வைகுங்கொலோ
- காதார் நெடுங்கட் கரும்பேநல் ஒற்றிக் கருத்தர்நட
- வாதா ரிடம்வளர் மாதே வடிவுடை மாணிக்கமே.
- ஓயா இடர்கொண் டுலைவேனுக் கன்பர்க் குதவுதல்போல்
- ஈயா விடினும்ஓர் எள்ளள வேனும் இரங்குகண்டாய்
- சாயா அருள்தரும் தாயே எழில்ஒற்றித் தற்பரையே
- மாயா நலம்அருள் வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
- பொன்னுடை யார்அன்றிப் போற்றுநற் கல்விப் பொருளுடையார்
- என்னுடை யார்என ஏசுகின் றார்இஃ தென்னைஅன்னே
- மின்னுடை யாய்மின்னில் துன்னிடை யாய்ஒற்றி மேவுமுக்கண்
- மன்னுடை யாய்என் னுடையாய் வடிவுடை மாணிக்கமே.
- வாழிநின் சேவடி போற்றிநின் பூம்பத வாரிசங்கள்
- வாழிநின் தாண்மலர் போற்றிநின் தண்ணளி வாழிநின்சீர்
- வாழிஎன் உள்ளத்தில் நீயுநின் ஒற்றி மகிழ்நரும்நீ
- வாழிஎன் ஆருயிர் வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
- 35. சௌந்தரம் என்பது சவுந்தரம் எனப் போலியாயிற்று. தொ.வே.
- 36. கரம்-விடம். தொ.வே.
- 37. விண்ணன் -இந்திரன். தொ.வே.
- 38. மாசை -பொன் தொ.வே.
- 39. கையிலேந்து எனற்பாலது சயிலேந்து எனப் போலியாயிற்று. தொ.வே.
- அன்பர்பால் நீங்காஎன் அம்மையே தாமரைமேற்
- பொன்பொருவு மேனி அயன்பூவின்-மன்பெரிய
- வாக்கிறைவி நின்தாள் மலர்ச்சரணம் போந்தேனைக்
- காக்கக் கடனுனக்கே காண்.
- தன்னந் தனியா யிங்குநிற்குஞ் சாமி யிவரூ ரொற்றியதா
- மன்னந் தருவீ ரென்றார்நா னழைத்தே னின்னை யன்னமிட
- முன்னம் பசிபோ யிற்றென்றார் முன்னின் றகன்றே னிவ்வன்ன
- மின்னந் தருவா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- கண்ணின் மணிபோ லிங்குநிற்குங் கள்வ ரிவரூ ரொற்றியதாம்
- பண்ணின் மொழியாய் நின்பாலோர் பறவைப் பெயர்வேண் டினம்படைத்தான்
- மண்ணின் மிசையோர் பறவையதா வாழ்வாயென்றா ரென்னென்றே
- னெண்ணி யறிநீ யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- செங்கேழ் கங்கைச் சடையார்வாய் திறவா ராக வீண்டடைந்தா
- ரெங்கே யிருந்தெங் கணைந்ததுகா ணெங்கள் பெருமா னென்றேனென்
- னங்கே ழருகி னகன்றுபோ யங்கே யிறைப்போ தமர்ந்தெழுந்தே
- யிங்கே நடந்து வருகின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- வான்றோய் பொழில்சூ ழொற்றியுளீர் வருந்தா தணைவே னோவென்றே
- னூன்றோ யுடற்கென் றார்தெரிய வுரைப்பீ ரென்றே னோவிதுதான்
- சான்றோ ருமது மரபோர்ந்து தரித்த பெயர்க்குத் தகாதென்றே
- யேன்றோர் மொழிதந் தருள்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- வளஞ்சே ரொற்றி யீரெனக்கு மாலை யணிவீ ரோவென்றேன்
- குளஞ்சேர் மொழிப்பெண் பாவாய்நின் கோலமனைக்க ணாமகிழ்வா
- லுளஞ்சேர்ந் தடைந்த போதேநின் னுளத்தி லணிந்தே முணரென்றே
- யிளஞ்சீர் நகைசெய் தருள்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- புயப்பா லொற்றி யீரச்சம் போமோ வென்றே னாமென்றார்
- வயப்பா வலருக் கிறையானீர் வஞ்சிப் பாவிங் குரைத்ததென்றேன்
- வியப்பா நகையப் பாவெனும்பா வெண்பா கலிப்பா வுரைத்துமென்றே
- யியற்பான் மொழிதந் தருள்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- தவந்தங் கியசீ ரொற்றிநகர் தனைப்போ னினைத்தென் மனையடைந்தீ
- ருவந்தென் மீதிற் றேவர்திரு வுள்ளந் திரும்பிற் றோவென்றேன்
- சிவந்தங் கிடநின் னுள்ளமெம்மேற் றிரும்பிற் றதனைத் தேர்ந்தன்றே
- யிவர்ந்திங் கணைந்தா மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- என்னே ருளத்தி னமர்ந்தீர்நல் லெழிலா ரொற்றி யிடையிருந்தீ
- ரென்னே யடிகள் பலியேற்ற லேழ்மை யுடையீர் போலுமென்றே
- னின்னே கடலி னிடைநீபத் தேழ்மை யுடையாய் போலுமென
- வின்னே யங்கொண் டுரைக்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- நல்லார் மதிக்கு மொற்றியுளீர் நண்ணு முயிர்க டொறுநின்றீ
- ரெல்லா மறிவீ ரென்னுடைய விச்சை யறியீர் போலுமென்றேன்
- வல்லா யறிவின் மட்டொன்று மனமட் டொன்று வாய்மட்டொன்
- றெல்லா மறிந்தே மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- விழியொண் ணுதலீ ரொற்றியுளீர் வேதம் பிறவி யிலரென்றே
- மொழியு நுமைத்தான் வேயீன்ற முத்த ரெனலிங் கென்னென்றேன்
- பழியன் றணங்கே யவ்வேய்க்குப் படுமுத் தொருவித் தன்றதனா
- லிழியும் பிறப்போ வென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- ஆறு முகத்தார் தமையீன்ற வைந்து முகத்தா ரிவர்தமைநான்
- மாறு முகத்தார் போலொற்றி வைத்தீர் பதியை யென்னென்றே
- னாறு மலர்ப்பூங் குழனீயோ நாமோ வைத்த துன்மொழிமன்
- றேறு மொழியன் றென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- உள்ளத் தனையே போலன்ப ருவக்குந் திருவா ழொற்றியுளீர்
- கள்ளத் தவர்போ லிவணிற்குங் கரும மென்னீ ரின்றென்றேன்
- மெள்ளக் கரவு செயவோநாம் வேட மெடுத்தோ நின்சொனினை
- யெள்ளப் புரிந்த தென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- அச்சை யடுக்குந் திருவொற்றி யவர்க்கோர் பிச்சை கொடுமென்றேன்
- விச்சை யடுக்கும் படிநம்பான் மேவினோர்க்கிவ் வகில நடைப்
- பிச்சை யெடுப்பே மலதுன்போற் பிச்சை கொடுப்பே மலவென்றே
- யிச்சை யெடுப்பா யுரைக்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- அளியா ரொற்றி யுடையாருக் கன்ன நிரம்ப விடுமென்றே
- னளியார் குழலாய் பிடியன்ன மளித்தாற் போது மாங்கதுநின்
- னொளியார் சிலம்பு சூழ்கமலத் துளதாற் கடகஞ் சூழ்கமலத்
- தெளியார்க் கிடுநீ யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- கூம்பா வொற்றி யூருடையீர் கொடும்பாம் பணிந்தீ ரென்னென்றே
- னோம்பா துரைக்கிற் பார்த்திடினுள் ளுன்னில் விடமேற் றுன்னிடைக்கீழ்ப்
- பாம்பா வதுவே கொடும்பாம்பெம் பணிப்பாம் பதுபோற் பாம்பலவென்
- றேம்பா நிற்ப விசைக்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- புயல்சூ ழொற்றி யுடையீரென் புடையென் குறித்தோ போந்ததென்றேன்
- கயல்சூழ் விழியாய் தனத்தவரைக் காண லிரப்போ ரெதற்கென்றார்
- மயல்சூழ் தனமிங் கிலையென்றேன் மறையா தெதிர்வைத் திலையென்ற
- லியல்சூ ழறமன் றென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- நலமா மொற்றி யுடையீர்நீர் நல்ல வழக ரானாலுங்
- குலமே துமக்கு மாலையிடக் கூடா தென்றே னின்குலம்போ
- லுலகோ துறுநங் குலமொன்றோ வோரா யிரத்தெட் டுயர்குலமிங்
- கிலகா நின்ற தென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- உடையா ரென்பா ருமையொற்றி யுடையீர் பணந்தா னுடையீரோ
- நடையா யேற்கின் றீரென்றே னங்காய் நின்போ லொருபணத்தைக்
- கடையா ரெனக்கீழ் வைத்தருமை காட்டேம் பணிகொள் பணங்கோடி
- யிடையா துடையே மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- கந்த வனஞ்சூ ழொற்றியுளீர் கண்மூன் றுடையீர் வியப்பென்றேன்
- வந்த வெமைத்தான் பிரிபோது மற்றை யவரைக் காண்போதுஞ்
- சந்த மிகுங்கண் ணிருமூன்றுந் தகுநான் கொன்றுந் தானடைந்தா
- யிந்த வியப்பென் னென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- கண்ணும் மனமுங் களிக்குமெழிற் கண்மூன் றுடையீர் கலையுடையீர்
- நண்ணுந் திருவா ழொற்றியுளீர் நடஞ்செய் வல்லீர் நீரென்றேன்
- வண்ண முடையாய் நின்றனைப்போன் மலர்வாய் நடஞ்செய் வல்லோமோ
- வெண்ண வியப்பா மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- அம்மை யடுத்த திருமேனி யழகீ ரொற்றி யணிநகரீ
- ரும்மை யடுத்தோர் மிகவாட்ட முறுத லழகோ வென்றுரைத்தேன்
- நம்மை யடுத்தாய் நமையடுத்தோர் நம்போ லுறுவ ரன்றெனிலே
- தெம்மை யடுத்த தென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- உண்கண் மகிழ்வா லளிமிழற்று மொற்றி நகரீ ரொருமூன்று
- கண்க ளுடையீ ரென்காதல் கண்டு மிரங்கீ ரென்னென்றேன்
- பண்கொண் மொழியாய் நின்காதல் பன்னாண் சுவைசெய் பழம்போலு
- மெண்கொண் டிருந்த தென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- வணங்கே ழிலங்குஞ் செஞ்சடையீர் வளஞ்சே ரொற்றி மாநகரீர்
- குணங்கேழ் மிடற்றோர் பாலிருளைக் கொண்டீர் கொள்கை யென்னென்றே
- னணங்கே யொருபா லன்றிநின்போ லைம்பா லிருள்கொண் டிடச்சற்று
- மிணங்கே மிணங்கே மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- புரக்குங் குணத்தீர் திருவொற்றிப் புனித ரேநீர் போர்க்களிற்றை
- யுரக்குங் கலக்கம் பெறவுரித்தீ ருள்ளத் திரக்க மென்னென்றேன்
- கரக்கு மிடையாய் நீகளிற்றின் கன்றைக் கலக்கம் புரிந்தனைநின்
- னிரக்க மிதுவோ வென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- யோக முடையார் புகழொற்றி யூரிற் பரம யோகியராந்
- தாக முடையா ரிவர்தமக்குத் தண்ர் தரநின் றனையழைத்தேன்
- போக முடையாய் புறத்தண்ர் புரிந்து விரும்பா மகத்தண்
- ரீக மகிழ்வி னென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- சீலஞ் சேர்ந்த வொற்றியுளீர் சிறிதாம் பஞ்ச காலத்துங்
- கோலஞ் சார்ந்து பிச்சைகொளக் குறித்து வருவீ ரென்னென்றேன்
- காலம் போகும் வார்த்தைநிற்குங் கண்டா யிதுசொற் கடனாமோ
- வேலங் குழலா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- புரியுஞ் சடையீ ரமர்ந்திடுமூர் புலியூ ரெனிலெம் போல்வார்க்கு
- முரியும் புலித்தோ லுடையீர்போ லுறுதற் கியலு மோவென்றேன்
- றிரியும் புலியூ ரன்றுநின் போற் றெரிவை யரைக்கண் டிடிற்பயந்தே
- யிரியும் புலியூ ரென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- ஆற்றுச் சடையா ரிவர்பலியென் றடைந்தார் நுமதூ ரியாதென்றேன்
- சோற்றுத் துறையென் றார்நுமக்குச் சோற்றுக் கருப்பேன் சொலுமென்றேன்
- றோற்றுத் திரிவே மன்றுநின்போற் சொல்லுங் கருப்பென் றுலகியம்ப
- வேற்றுத் திரியே மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- வெய்ய வினையின் வேர்அறுக்கும் மெய்ம்மை ஞான வீட்டிலடைந்
- துய்ய அமல நெறிகாட்டும் உன்னற் கரிய உணர்வளிக்கும்
- ஐயம் அடைந்த நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
- செய்ய மலர்க்கண் மால்போற்றும் சிவாய நமஎன் றிடுநீறே.
- வாங்கு வில்நுதல் மங்கையர் விழியால்
- மயங்கி வஞ்சர்பால் வருந்திநாள் தோறும்
- ஏங்கு கின்றதில் என்பயன் கண்டாய்
- எழில்கொள் ஒற்றியூர்க் கென்னுடன் போந்து
- தேங்கு லாவுசெங் கரும்பினும் இனிதாய்த்
- தித்தித் தன்பர்தம் சித்தத்துள் ஊறி
- ஓங்கும் ஓம்சிவ சண்முக சிவஓம்
- ஓம்சி வாயஎன் றுன்னுதி மனனே.
- தவம தின்றிவன் மங்கையர் முயக்கால்
- தருமம் இன்றுவஞ் சகர்கடுஞ் சார்வால்
- இவகை யால்மிக வருந்துறில் என்னாம்
- எழில்கொள் ஒற்றியூர்க் கென்னுடன் போந்து
- பவம தோட்டிநல் ஆனந்த உருவாம்
- பாங்கு காட்டிநல் பதந்தரும் அடியார்
- உவகை ஓம்சிவ சண்முக சிவஓம்
- ஓம்சி வாயஎன் றுன்னுதி மனனே.
- மின்னும் நுண்ணிடைப் பெண்பெரும் பேய்கள்
- வெய்ய நீர்க்குழி விழுந்தது போக
- இன்னும் வீழ்கலை உனக்கொன்று சொல்வேன்
- எழில்கொள் ஒற்றியூர்க் கென்னுடன் போந்து
- பொன்உ லாவிய புயம் உடை யானும்
- புகழ்உ லாவிய பூஉடை யானும்
- உன்னும் ஓம்சிவ சண்முக சிவஓம்
- ஓம்சி வாயஎன் றுன்னுதி மனனே.
- பொன்றும் வாழ்க்கையை நிலைஎன நினைந்தே
- புலைய மங்கையர் புழுநெளி அளற்றில்
- என்றும் வீழ்ந்துழல் மடமையை விடுத்தே
- எழில்கொள் ஒற்றியூர்க் கென்னுடன் போந்து
- துன்று தீம்பலாச் சுளையினும் இனிப்பாய்த்
- தொண்டர் தங்கள்நாச் சுவைபெற ஊறி
- ஒன்றும் ஓம்சிவ சண்முக சிவஓம்
- ஓம்சி வாயஎன் றுன்னுதி மனனே.
- வரைக்கு நேர்முலை மங்கையர் மயலால்
- மயங்கி வஞ்சரால் வருத்தமுற் றஞராம்
- இரைக்கும் மாக்கடல் இடைவிழுந் தயரேல்
- எழில்கொள் ஒற்றியூர்க் கென்னுடன் போந்து
- கரைக்கும் தெள்ளிய அமுதமோ தேனோ
- கனிகொ லோஎனக் கனிவுடன் உயர்ந்தோர்
- உரைக்கும் ஓம்சிவ சண்முக சிவஓம்
- ஓம்சி வாயஎன் றுன்னுதி மனனே.
- வாது செய்ம்மட வார்தமை விழைந்தாய்
- மறலி வந்துனை வாஎன அழைக்கில்
- ஏது செய்வையோ ஏழைநீ அந்தோ
- எழில்கொள் ஒற்றியூர்க் கென்னுடன் போந்து
- போது வைகிய நான்முகன் மகவான்
- புணரி வைகிய பூமகள் கொழுநன்
- ஓதும் ஓம்சிவ சண்முக சிவஓம்
- ஓம்சி வாயஎன் றுன்னுதி மனனே.
- நண்ணும் மங்கையர் புழுமலக் குழியில்
- நாளும் வீழ்வுற்று நலிந்திடேல் நிதமாய்
- எண்ணும் என்மொழி குருமொழி ஆக
- எண்ணி ஒற்றியூர்க் கென்னுடன் போந்து
- பண்ணும் இன்சுவை அமுதினும் இனிதாய்ப்
- பத்தர் நாள்தொறும் சித்தமுள் ளூற
- உண்ணும் ஓம்சிவ சண்முக சிவஓம்
- ஓம்சி வாயஎன் றுன்னுதி மனனே.
- பந்த வண்ணமாம் மடந்தையர் மயக்கால்
- பசையில் நெஞ்சரால் பரிவுறு கின்றாய்
- எந்த வண்ணநீ உய்வணம் அந்தோ
- எழில்கொள் ஒற்றியூர்க் கென்னுடன் போந்து
- சந்த மாம்புகழ் அடியரில் கூடிச்
- சனனம் என்னுமோர் சாகரம் நீந்தி
- உந்த ஓம்சிவ சண்முக சிவஓம்
- ஓம்சி வாயஎன் றுன்னுதி மனனே.
- மட்டின் மங்கையர் கொங்கையை விழைந்தாய்
- மட்டி லாததோர் வன்துயர் அடைந்தாய்
- எட்டி அன்னர்பால் இரந்தலை கின்றாய்
- எழில்கொள் ஒற்றியூர்க் கென்னுடன் போந்து
- தட்டி லாதநல் தவத்தவர் வானோர்
- சார்ந்தும் காண்கிலாத் தற்பரம் பொருளை
- ஒட்டி ஓம்சிவ சண்முக சிவஓம்
- ஓம்சி வாயஎன் றுன்னுதி மனனே.
- நிலவும் ஒண்மதி முகத்தியர்க் குழன்றாய்
- நீச நெஞ்சர்தம் நெடுங்கடை தனிற்போய்
- இலவு காத்தனை என்னைநின் மதியோ
- எழில்கொள் ஒற்றியூர்க் கென்னுடன் போந்து
- பலவும் ஆய்ந்துநன் குண்மையை உணர்ந்த
- பத்தர் உள்ளகப் பதுமங்கள் தோறும்
- உலவும் ஓம்சிவ சண்முக சிவஓம்
- ஓம்சி வாயஎன் றுன்னுதி மனனே.
- பழுது நேர்கின்ற வஞ்சகர் கடைவாய்ப்
- பற்றி நின்றதில் பயன்எது கண்டாய்
- பொழுது போகின்ற தெழுதிஎன் நெஞ்சே
- பொழில்கொள் ஒற்றியம் புரிதனக் கேகித்
- தொழுது சண்முக சிவசிவ எனநம்
- தோன்ற லார்தமைத் துதித்தவர் திருமுன்
- பழுது சொல்லுதும் ஐயுறல் என்மேல்
- ஆணை காண்அவர் அருள்பெறல் ஆமே.
- சூது நேர்கின்ற முலைச்சியர் பொருட்டாச்
- சுற்றி நின்றதில் சுகம்எது கண்டாய்
- போது போகின்ற தெழுதிஎன் நெஞ்சே
- பொழில்கொள் ஒற்றியம் புரிதனக் கேகி
- ஓது சண்முக சிவசிவ எனவே
- உன்னி நெக்குவிட் டுருகிநம் துயராம்
- ஆது சொல்லுதும் ஐயுறல் என்மேல்
- ஆணை காண்அவர் அருள்பெறல் ஆமே.
- மருட்டி வஞ்சகம் மதித்திடும் கொடியார்
- வாயல் காத்தின்னும் வருந்தில்என் பயனோ
- இருட்டிப் போகின்ற தெழுதிஎன் நெஞ்சே
- எழில்கொள் ஒற்றியூர் எனும்தலத் தேகித்
- தெருட்டி றஞ்செயும் சண்முக சிவஓம்
- சிவந மாஎனச் செப்பிநம் துயராம்
- அரிட்டை ஓதுதும் ஐயுறல் என்மேல்
- ஆணை காண்அவர் அருள்பெறல் ஆமே.
- கரவு நெஞ்சினர் கடைத்தலைக் குழன்றாய்
- கலங்கி இன்னும்நீ கலுழ்ந்திடில் கடிதே
- இரவு போந்திடும் எழுதிஎன் நெஞ்சே
- எழில்கொள் ஒற்றியூர் எனும்தலத் தேகிப்
- பரவு சண்முக சிவசிவ சிவஓம்
- பரசு யம்புசங் கரசம்பு நமஓம்
- அரஎன் றேத்துதும் ஐயுறல் என்மேல்
- ஆணை காண்அவர் அருள்பெறல் ஆமே.
- ஏய்ந்து வஞ்சகர் கடைத்தலை வருந்தி
- இருக்கின் றாய்இனி இச்சிறு பொழுதும்
- சாய்ந்து போகின்ற தெழுதிஎன் நெஞ்சே
- தகைகொள் ஒற்றியம் தலத்தினுக் கேகி
- வாய்ந்து சண்முக நமசிவ சிவஓம்
- வரசு யம்புசங் கரசம்பு எனவே
- ஆய்ந்து போற்றுதும் ஐயுறல் என்மேல்
- ஆணை காண்அவர் அருள்பெறல் ஆமே.
- ஈர்ந்த நெஞ்சினர் இடந்தனில் இருந்தே
- இடர்கொண் டாய்இனி இச்சிறு பொழுதும்
- பேர்ந்து போகின்ற தெழுதிஎன் நெஞ்சே
- பிறங்கும் ஒற்றியம் பெருநகர்க் கேகி
- ஒர்ந்து சண்முக சரவண பவஓம்
- ஓம்சு யம்புசங் கரசம்பு எனவே
- ஆர்ந்து போற்றுதும் ஐயுறல் என்மேல்
- ஆணை காண்அவர் அருள்பெறல் ஆமே.
- கமைப்பின் ஈகிலா வஞ்சகர் கடையைக்
- காத்தி ருக்கலை கடுகிஇப் பொழுதும்
- இமைப்பில் போகின்ற தெழுதிஎன் நெஞ்சே
- எழில்கொள் ஒற்றியூர் எனும்தலத் தேகி
- எமைப்பு ரந்தசண் முகசிவ சிவஓம்
- இறைவ சங்கர அரகர எனவே
- அமைப்பின் ஏத்துதும் ஐயுறல் என்மேல்
- ஆணை காண்அவர் அருள்பெறல் ஆமே.
- உறைந்து வஞ்சர்பால் குறையிரந் தவமே
- உழல்கின் றாய்இனி உரைக்கும்இப் பொழுதும்
- குறைந்து போகின்ற தெழுதிஎன் நெஞ்சே
- குலவும் ஒற்றியம் கோநகர்க் கேகி
- நிறைந்த சண்முக குருநம சிவஓம்
- நிமல சிற்பர அரகர எனவே
- அறைந்து போற்றுதும் ஐயுறல் என்மேல்
- ஆணை காண்அவர் அருள்பெறல் ஆமே.
- காவின் மன்னவன் எதிர்க்கினும் காமன்
- கணைகன் ஏவினும் காலனே வரினும்
- பூவின் மன்னவன் சீறினும் திருமால்
- போர்க்கு நேரினும் பொருளல நெஞ்சே
- ஓவில் மாதுயர் எற்றினுக் கடைந்தாய்
- ஒன்றும் அஞ்சல்நீ உளவறிந் திலையோ
- நாவின் மன்னரைக் கரைதனில் சேர்த்த
- நமச்சி வாயம்காண் நாம்பெறும் துணையே.
- எம்மை வாட்டும்இப் பசியினுக் கெவர்பால்
- ஏகு வோம்என எண்ணலை நெஞ்சே
- அம்ம ஒன்றுநீ அறிந்திலை போலும்
- ஆலக் கோயிலுள் அன்றுசுந் தரர்க்காய்ச்
- செம்மை மாமலர்ப் பதங்கள்நொந் திடவே
- சென்று சோறிரந் தளித்தருள் செய்தோன்
- நம்மை ஆளுடை நாதன்தன் நாமம்
- நமச்சி வாயம்காண் நாம்பெறும் துணையே.
- மலங்கும் மால்உடல் பிணிகளை நீக்க
- மருந்து வேண்டினை வாழிஎன் நெஞ்சே
- கலங்கு றேல்அருள் திருவெண் றெனது
- கரத்தி ருந்தது கண்டிலை போலும்
- விலங்கு றாப்பெரும் காமநோய் தவிர்க்க
- விரும்பி ஏங்கினை வெம்புறேல் அழியா
- நலங்கொள் செஞ்சடை நாதன்தன் நாமம்
- நமச்சி வாயம்காண் நாம்பெறும் துணையே.
- கந்த வண்ணமாம் கமலன்மால் முதலோர்
- கண்டி லார்எனில் கைலையம் பதியை
- எந்த வண்ணம்நாம் காண்குவ தென்றே
- எண்ணி எண்ணிநீ ஏங்கினை நெஞ்சே
- அந்த வண்ணவெள் ஆனைமேல் நம்பி
- அமர்ந்து சென்றதை அறிந்திலை போலும்
- நந்தம் வண்ணமாம் நாதன்தன் நாமம்
- நமச்சி வாயம்காண் நாம்பெறும் துணையே.
- ஏணப் பரிசெஞ் சடைமுத லானஎல் லாம்மறைத்துச்
- சேணப் பரிகள் நடத்திடு கின்றநல் சேவகன்போல்
- மாணப் பரிபவம் நீக்கிய மாணிக்க வாசகர்க்காய்க்
- காணப் பரிமிசை வந்தன ரால்எம் கடவுளரே.
- போற்றி நீறிடாப் புலையரைக் கண்டால்
- போக போகநீர் புலமிழந் தவமே
- நீற்றின் மேனியர் தங்களைக் கண்டால்
- நிற்க நிற்கஅந் நிமலரைக் காண்க
- சாற்றின் நன்னெறி ஈதுகாண் கண்காள்
- தமனி யப்பெரும் தனுஎடுத் தெயிலைக்
- காற்றி நின்றநம் கண்நுதற் கரும்பைக்
- கைலை ஆளனைக் காணுதற் பொருட்டே.
- முத்தி நீறிடார் முன்கையால் தொடினும்
- முள்ளு றுத்தல்போல் முனிவுடன் நடுங்க
- பத்தி நீறிடும் பத்தர்கள் காலால்
- பாய்ந்து தைக்கினும் பரிந்ததை மகிழ்க
- புத்தி ஈதுகாண் என்னுடை உடம்பே
- போற்ற லார்புரம் பொடிபட நகைத்தோன்
- சத்தி வேற்கரத் தனயனை மகிழ்வோன்
- தன்னை நாம்என்றும் சார்ந்திடற் பொருட்டே.
- இனிய நீறிடா ஈனநாய்ப் புலையர்க்
- கெள்ளில் பாதியும் ஈகுதல் ஒழிக
- இனிய நீறிடும் சிவனடி யவர்கள்
- எம்மைக் கேட்கினும் எடுத்தவர்க் கீக
- இனிய நன்னெறி ஈதுகாண் கரங்காள்
- ஈசன் நம்முடை இறையவன் துதிப்போர்க்
- கினிய மால்விடை ஏறிவந் தருள்வோன்
- இடங்கொண் டெம்முளே இசைகுதற் பொருட்டே.
- ஊற்றம் உற்றுவெண்
- நீற்றன் ஒற்றியூர்
- போற்ற நீங்குமால்
- ஆற்ற நோய்களே.-
- ஊதி யம் பெறா ஒதயினேன் மதிபோய்
- உழலும் பாவியேன் உண்மைஒன் றறியேன்
- வாதி யம்புறும் வஞ்சகர் உடனே
- வாய்இ ழுக்குற வன்மைகள் பேசி
- ஆதி எம்பெரு மான்உனை மறந்தேன்
- அன்பி லாதஎன் வன்பினை நினைக்கில்
- தீதி யம்பிய நஞ்சமும் கலங்கும்
- திகழும் ஒற்றியூர்த் தியாகமா மணியே.
- கைத வத்தர்தம் களிப்பினில் களித்தே
- காலம் போக்கினேன் களைகண்மற் றறியேன்
- செய்த வத்தர்தம் திறம்சிறி துணரேன்
- செய்வ தென்னைநின் திருவருள் பெறவே
- எய்த வத்திரு அருளெனக் கிரங்கி
- ஈயில் உண்டுமற் றின்றெனில் இன்றே
- செய்த வத்திரு மடந்தையர் நடனம்
- திகழும் ஒற்றியூர்த் தியாகமா மணியே.
- புன்னு னிப்படும் துளியினும் சிறிய
- போகம் வேட்டுநின் பொன்அடி மறந்தேன்
- என்னி னிப்படும் வண்ணம்அஃ தறியேன்
- என்செய் கேன்எனை என்செயப் புகுகேன்
- மின்னி னில்பொலி வேணியம் பெருமான்
- வேற லேன்எனை விரும்பல்உன் கடனே
- தென்ன னிப்படும் சோலைசூழ்ந் தோங்கித்
- திகழும் ஒற்றியூர்த் தியாகமா மணியே.
- வானை நோக்கிமண் வழிநடப் பவன்போல்
- வயங்கும் நின்அருள் வழியிடை நடப்பான்
- ஊனை நோக்கினேன் ஆயினும் அடியேன்
- உய்யும் வண்ணம்நீ உவந்தருள் புரிவாய்
- மானை நோக்கிய நோக்குடை மலையாள்
- மகிழ மன்றிடை மாநடம் புரிவோய்
- தேனை நோக்கிய கொன்றையஞ் சடையோய்
- திகழும் ஒற்றியூர்த் தியாகநா யகனே.
- வாயி லான்பெரு வழக்குரைப் பதுபோல்
- வள்ளல் உன்னடி மலர்களுக் கன்பாம்
- தூயி லாதுநின் அருள்பெற விழைந்தேன்
- துட்ட னேன்அருள் சுகம்பெற நினைவாய்
- கோயி லாகநல் அன்பர்தம் உளத்தைக்
- கொண்ட மர்ந்திடும் குணப்பெருங் குன்றே
- தேயி லாதபல் வளஞ்செறிந் தோங்கித்
- திகழும் ஒற்றியூர்த் தியாகநா யகனே.
- வித்தை இன்றியே விளைத்திடு பவன்போல்
- மெய்ய நின்இரு மென்மலர்ப் பதத்தில்
- பத்தி இன்றியே முத்தியை விழைந்தேன்
- பாவி யேன்அருள் பண்புற நினைவாய்
- மித்தை இன்றியே விளங்கிய அடியார்
- விழைந்த யாவையும் தழைந்திட அருள்வோய்
- சித்தி வேண்டிய முனிவரர் பரவித்
- திகழும் ஒற்றியூர்த் தியாகநா யகனே.
- கலம்இ லாதுவான் கடல்கடப் பவன்போல்
- கடவுள் நின்அடிக் கமலங்கள் வழுத்தும்
- நலம்இ லாதுநின் அருள்பெற விழைந்த
- நாயி னேன்செயும் நவைபொறுத் தருள்வாய்
- மலம்இ லாதநல் வழியிடை நடப்போர்
- மனத்துள் மேவிய மாமணிச் சுடரே
- சிலம்இ லாஞ்சம்ஆ தியதருப் பொழில்கள்
- திகழும் ஒற்றியூர்த் தியாகநா யகனே.
- போர்க்கும் வெள்ளத்தில் பொன்புதைப் பவன்போல்
- புலைய நெஞ்சிடைப் புனிதநின் அடியைச்
- சேர்க்கும் வண்ணமே நினைக்கின்றேன் எனினும்
- சிறிய னேனுக்குன் திருவருள் புரிவாய்
- கூர்க்கும் நெட்டிலை வேற்படைக் கரங்கொள்
- குமரன் தந்தையே கொடியதீ வினையைத்
- தீர்க்கும் தெய்வமே சைவவை திகங்கள்
- திகழும் ஒற்றியூர்த் தியாகநா யகனே.
- ஓட உன்னியே உறங்குகின் றவன்போல்
- ஓங்கும் உத்தம உன்அருட் கடலில்
- ஆட உன்னியே மங்கையர் மயலில்
- அழுந்து கின்றஎற் கருள்செய நினைவாய்
- நாட உன்னியே மால்அயன் ஏங்க
- நாயி னேன்உளம் நண்ணிய பொருளே
- தேட உன்னிய மாதவ முனிவர்
- திகழும் ஒற்றியூர்த் தியாகநா யகனே.
- கல்லை உந்திவான் நதிகடப் பவர்போல்
- காமம் உந்திய நாமநெஞ் சகத்தால்
- எல்லை உந்திய பவக்கடல் கடப்பான்
- எண்ணு கின்றனன் எனக்கருள் வாயோ
- அல்லை உந்திய ஒண்சுடர்க் குன்றே
- அகில கோடிகட் கருள்செயும் ஒன்றே
- தில்லை நின்றொளிர் மன்றிடை அமுதே
- திகழும் ஒற்றியூர்த் தியாகநா யகனே.
- நெய்யி னால்சுடு நெருப்பவிப் பவன்போல்
- நெடிய துன்பமாம் கொடியவை நிறைந்த
- பொய்யி னால்பவம் போக்கிட நினைத்தேன்
- புல்ல னேனுக்குன் நல்அருள் வருமோ
- கையி னால்தொழும் அன்பர்தம் உள்ளக்
- கமலம் மேவிய விமலவித் தகனே
- செய்யி னால்பொலிந் தோங்கிநல் வளங்கள்
- திகழும் ஒற்றியூர்த் தியாகநா யகனே.
- நீர்சொ ரிந்தொளி விளக்கெரிப் பவன்போல்
- நித்தம் நின்னிடை நேசம்வைத் திடுவான்
- பார்சொ ரிந்திடும் பவநெறி முயன்றேன்
- பாவி யேன்தனைக் கூவிநின் றாள்வாய்
- கார்சொ ரிந்தெனக் கருணைஈந் தன்பர்
- களித்த நெஞ்சிடை ஒளித்திருப் பவனே
- தேர்சொ ரிந்தமா மணித்திரு வீதித்
- திகழும் ஒற்றியூர்த் தியாகநா யகனே.
- வாதமே புரிவேன் கொடும்புலி அனையேன்
- வஞ்சக மனத்தினேன் பொல்லா
- ஏதமே உடையேன் என்செய்வேன் என்னை
- என்செய்தால் தீருமோ அறியேன்
- போதமே ஐந்தாம் பூதமே ஒழியாப்
- புனிதமே புதுமணப் பூவே
- பாதமே சரணம் சரணம்என் தன்னைப்
- பாதுகாத் தளிப்பதுன் பரமே.
- தேன்என இனிக்கும் திருவருட் கடலே
- தெள்ளிய அமுதமே சிவமே
- வான்என நிற்கும் தெய்வமே முல்லை
- வாயில்வாழ் மாசிலா மணியே
- ஊன்என நின்ற உணர்விலேன் எனினும்
- உன்திருக் கோயில்வந் தடைந்தால்
- ஏன்எனக் கேளா திருந்தனை ஐயா
- ஈதுநின் திருவருட் கியல்போ.
- பூங்கொடி இடையைப் புணர்ந்தசெந் தேனே
- புத்தமு தேமறைப் பொருளே
- வாங்கொடி விடைகொள் அண்ணலே முல்லை
- வாயில்வாழ் மாசிலா மணியே
- தீங்கொடி யாத வினையனேன் எனினும்
- செல்வநின் கோயில்வந் தடைந்தால்
- ஈங்கொடி யாத அருட்கணால் நோக்கி
- ஏன்எனா திருப்பதும் இயல்போ.
- துப்புநேர் இதழி மகிழ்ந்தகல் யாண
- சுந்தரா சுந்தரன் தூதா
- மைப்பொதி மிடற்றாய் வளர்திரு முல்லை
- வாயில்வாழ் மாசிலா மணியே
- அப்பனே உன்னை விடுவனோ அடியேன்
- அறிவிலேன் எனினுநின் கோயிற்
- கெய்ப்புடன் வந்தால் வாஎன உரையா
- திருப்பதுன் திருவருட் கியல்போ.
- கங்கைஅஞ் சடைகொண் டோங்குசெங் கனியே
- கண்கள்மூன் றோங்குசெங் கரும்பே
- மங்கல்இல் லாத வண்மையே முல்லை
- வாயில்வாழ் மாசிலா மணியே
- துங்கநின் அடியைத் துதித்திடேன் எனினும்
- தொண்டனேன் கோயில்வந் தடைந்தால்
- எங்குவந் தாய்நீ யார்என வேனும்
- இயம்பிடா திருப்பதும் இயல்போ.
- நன்றுவந் தருளும் நம்பனே யார்க்கும்
- நல்லவ னேதிருத் தில்லை
- மன்றுவந் தாடும் வள்ளலே முல்லை
- வாயில்வாழ் மாசிலா மணியே
- துன்றுநின் அடியைத் துதித்திடேன் எனினும்
- தொண்டனேன் கோயில்வந் தடைந்தால்
- என்றுவந் தாய்என் றொருசொலும் சொல்லா
- திருப்பதுன் திருவருட் கியல்போ.
- பண்ணினுள் இசையே பாலினுள் சுவையே
- பத்தர்கட் கருள்செயும் பரமே
- மண்ணினுள் ஓங்கி வளம்பெறும் முல்லை
- வாயில்வாழ் மாசிலா மணியே
- பெண்ணினும் பேதை மதியினேன் எனினும்
- பெருமநின் அருள்பெற லாம்என்
- றெண்ணிவந் தடைந்தால் கேள்வியில் லாமல்
- இருப்பதுன் திருவருட் கியல்போ.
- முன்னிய மறையின் முடிவின்உட் பொருளே
- முக்கணா மூவர்க்கும் முதல்வா
- மன்னிய கருணை வாரியே முல்லை
- வாயில்வாழ் மாசிலா மணியே
- அன்னியன் அல்லேன் தொண்டனேன் உன்தன்
- அருட்பெரும் கோயில்வந் தடைந்தால்
- என்இது சிவனே பகைவரைப் போல்பார்த்
- திருப்பதுன் திருவருட் கியல்போ.
- நல்லவர் பெறும்நற் செல்வமே மன்றுள்
- ஞானநா டகம்புரி நலமே
- வல்லவர் மதிக்கும் தெய்வமே முல்லை
- வாயில்வாழ் மாசிலா மணியே
- புல்லவன் எனினும் அடியனேன் ஐயா
- பொய்யல உலகறிந் ததுநீ
- இல்லையென் றாலும் விடுவனோ சும்மா
- இருப்பதுன் திருவருட் கியல்போ.
- பொதுவினின் றருளும் முதல்தனிப் பொருளே
- புண்ணியம் விளைகின்ற புலமே
- மதுவினின் றோங்கும் பொழில்திரு முல்லை
- வாயில்வாழ் மாசிலா மணியே
- புதுமையன் அல்லேன் தொன்றுதொட் டுனது
- பூங்கழற் கன்புபூண் டவன்காண்
- எதுநினைந் தடைந்தாய் என்றுகே ளாமல்
- இருப்பதுன் திருவருட் கியல்போ.
- பொன்னையுற் றவனும் அயனும்நின் றறியாப்
- புண்ணியா கண்ணுதல் கரும்பே
- மன்னனே மருந்தே வளர்திரு முல்லை
- வாயில்வாழ் மாசிலா மணியே
- உன்னைநான் கனவின் இடத்தும்விட் டொழியேன்
- உன்திரு அடித்துணை அறிய
- என்னைஈன் றவனே முகமறி யார்போல்
- இருப்பதுன் திருவருட் கியல்போ.
- மாசில் சோதிம ணிவிளக் கேமறை
- வாசி மேவிவ ரும்வல்லி கேசநீர்
- தூசில் கந்தையைச் சுற்றிஐ யோபர
- தேசி போல்இருந் தீர்என்கொல் செய்வனே.
- மெல்லி தாயவி ரைமலர்ப் பாதனே
- வல்லி தாயம ருவிய நாதனே
- புல்லி தாயஇக் கந்தையைப் போர்த்தினால்
- கல்லி தாயநெஞ் சம்கரை கின்றதே.
- வெள்ளி மாமலை வீடென உடையீர்
- விளங்கும் பொன்மலை வில்எனக் கொண்டீர்
- வள்ளி யீர்என நும்மைவந் தடைந்தால்
- வாய்தி றந்தொரு வார்த்தையும் சொல்லீர்
- எள்ளில் எண்ணெய்போல் எங்கணும் நின்றீர்
- ஏழை யேன்குறை ஏன்அறி யீரோ
- ஒள்ளி யீர்உமை அன்றிஒன் றறியேன்
- ஓங்கு சீர்ஒற்றி யூர்உடை யீரே.
- கள்ள மற்றவாக் கரசும்புத் திரரும்
- களிக்க வேபடிக் காசளித் தருளும்
- வள்ளல் என்றுமை வந்தடைந் தேற்றால்
- வாய்தி றந்தொரு வார்த்தையும் சொல்லீர்
- எள்ள ரும்புகழ்த் தியாகர்என் றொருபேர்
- ஏன்கொண் டீர்இரப் போர்க்கிட அன்றோ
- உள்ளம் இங்கறி வீர்எனை ஆள்வீர்
- ஓங்கு சீர்ஒற்றி யூர்உடை யீரே.
- தோன்றாத் துணையாகும் சோதியே நின்அடிக்கே
- ஆன்றார்த்த அன்போ டகங்குழையேன் ஆயிடினும்
- ஊன்றார்த் தரித்ததனை உன்னிஉன்னி வாடுகின்றேன்
- தேன்றார்ச் சடையாய்உன் சித்தம் இரங்காதோ.
- காதார் கடுவிழியார் காமவலைக் குள்ளாகி
- ஆதாரம் இன்றி அலைதந்தேன் ஆயிடினும்
- போதார் நினதுகழல் பொன்அடியே போற்றுகின்றேன்
- நீதாவோ உன்னுடைய நெஞ்சம் இரங்காதோ.
- சூழ்ந்தவஞ் சகனேன் பிழைதனைக் குறியேல் துன்பசா கரந்தனில் அழுந்தி
- வீழ்ந்தனன் ஐயோ கைவிடில் சிவனே வேறுநான் யாதுசெய் வேனே
- வாழ்ந்தமா தவர்கள் மனத்தொளிர் ஒளியே வள்ளலே மழவிடை யவனே
- போழ்ந்தவேல் படைகொள் புனிதனை அளித்த பூரணாஒற்றியூர்ப் பொருளே.
- துரும்பினேன் பிழையைத் திருவுளத் தடையேல் துய்யநின் அருட்கடல் ஆட
- விரும்பினேன் ஐயோ கைவிடில் சிவனே வேறுநான் யாதுசெய் வேனே
- கரும்பின்நேர் மொழியார் இருவரை மணக்கும் கனிதனை அளித்தகற் பகமே
- இரும்பின்நேர் நெஞ்சர் எனினும்என் போல்வார்க் கின்அருள் தரும்ஒற்றி இறையே.
- கரைபடா வஞ்சப் பவக்கடல் உழக்கும் கடையனேன் நின்திரு வடிக்கு
- விரைபடா மலர்போல் இருந்துழல்கின்றேன்வெற்றனேன் என்செய விரைகேன்
- திரைபடாக் கருணைச் செல்வவா ரிதியே திருவொற்றி யூர்வளர் தேனே
- உரைபடாப் பொன்னே புரைபடா மணியே உண்ணுதற் கினியநல் அமுதே.
- போகம் கொண்ட புணர்முலை மாதொரு
- பாகம் கொண்ட படம்பக்க நாதரே
- மாகம் கொண்ட வளம்பொழில் ஒற்றியின்
- மோகம் கொண்டஎம் முன்நின் றருளிரோ.
- தவள நீற்றுமெய்ச் சாந்தவி னோதரே
- பவள மேனிப் படம்பக்க நாதரே
- கவள வீற்றுக் கரிஉரி போர்த்தநீர்
- இவளை ஒற்றிவிட் டெங்ஙனம் சென்றிரோ.
- மத்தனைவன் நெஞ்சகனை வஞ்சகனை வன்பிணிகொள்
- பித்தனைவீண் நாள்போக்கும் பேயேனை நாயேனை
- முத்தனையாய் உன்றன் முளரித்தாட் காளாக்க
- எத்தனைநாள் செல்லும் எழுத்தறியும் பெருமானே.
- தீதறிவேன் நன்கணுவும் செய்யேன்வீண் நாள்போக்கும்
- வாதறிவேன் வஞ்சகனேன் வல்வினையேன் வாய்மையிலேன்
- சூதறிவேன் மால்அயனும் சொல்லறிய நின்பெருமை
- யாதறிவேன் ஐயா எழுத்தறியும் பெருமானே.
- மன்னளவில் சோதி மணிபோல்வாய் மாதவத்தோர்
- தென்னளவும் வேணிச் சிவமே எனஒருகால்
- சொன்னளவில் சொன்னவர்தம் துன்பொழிப்பாய் என்பர்அது
- என்னளவில் காணேன் எழுத்தறியும் பெருமானே.
- மின்போல்வார் இச்சையினால் வெம்புகின்றேன் ஆனாலும்
- தன்போல்வாய் என்ஈன்ற தாய்போல்வாய் சார்ந்துரையாப்
- பொன்போல்வாய் நின்அருள்இப் போதடியேன் பெற்றேனேல்
- என்போல்வார் இல்லை எழுத்தறியும் பெருமானே.
- வீட்டுக் கடங்கா விளையாட்டுப் பிள்ளைஎனத்
- தேட்டுக் கடங்காத தீமனத்தால் ஆந்துயரம்
- பாட்டுக் கடங்காநின் பத்தர் அடிப்புகழ்போல்
- ஏட்டுக் கடங்கா தெழுத்தறியும் பெருமானே.
- கல்லை நிகராம் கடைமனம்போம் கான்நெறியில்
- புல்லை மதித் தையோபைம் பூஇழந்த பொய்யடியேன்
- ஒல்லைபடு கின்ற ஒறுவே தனைதனக்கோர்
- எல்லை அறியேன் எழுத்தறியும் பெருமானே.
- பொன்னைமதித் தையாநின் பொன்னடியைப் போற்றாத
- கன்னிகரும் நெஞ்சால் கலங்குகின்ற கைதவனேன்
- இன்னல் உழக்கின்ற ஏழைகட்கும் ஏழைகண்டாய்
- என்னை விடாதே எழுத்தறியும் பெருமானே.
- போகின்ற வஞ்சகரைப் போக்கிஉன்றன் பொன்அடிக்காள்
- ஆகின்ற மேலோர் அடிவழுத்தா நாயேற்குப்
- பாகின் தனிச்சுவையிற் பாங்காகும் நின்அருளை
- ஈகின்ற தென்றோ எழுத்தறியும் பெருமானே.
- வெங்கொளித்தேள் போன்ற வினையால் வெதும்பிமனம்
- அங்கொளிக்கா துன்னை அழைத்தழுது வாடுகின்றேன்
- இங்கொளிக்கா நஞ்சமுண்ட என்அருமை அப்பாநீ
- எங்கொளித்தாய் ஒற்றி எழுத்தறியும் பெருமானே.
- வேண்டும் நெஞ்சமே மேவி ஒற்றியூர்
- ஆண்டு நின்றருள் அரசின் பொற்பதம்
- பூண்டு கொண்டுளே போற்றி நிற்பையேல்
- யாண்டும் துன்பம்நீ அடைதல் இல்லையே.
- நிற்ப தென்றுநீ நீல நெஞ்சமே
- அற்ப மாதர்தம் அவலம் நீங்கியே
- சிற்ப ரன்திருத் தில்லை அம்பலப்
- பொற்பன் ஒற்றியில் புகுந்து போற்றியே.
- போற்றி ஒற்றியூர்ப் புண்ணி யன்திரு
- நீற்றி னான்தனை நினைந்து நிற்பையேல்
- தோற்ற ரும்பரஞ் சோதி நல்அருள்
- ஊற்றெ ழும்கடல் ஒக்க நெஞ்சமே.
- ஏல வார்குழ லாள் இடத் தவனே
- என்னை ஆண்டவ னேஎன தரசே
- கோல மாகமால் உருக்கொண்டும் காணாக்
- குரைக ழற்பதக் கோமளக் கொழுந்தே
- ஞால மீதில்எம் போல்பவர் பிழையை
- நாடி டாதருள் நற்குணக் குன்றே
- சீல மேவிய தவத்தினர் போற்றத்
- திகழும் ஒற்றியூர்ச் சிவபெரு மானே.
- மாலின் கண்மலர் மலர்திருப் பதனே
- மயிலின் மேல்வரு மகவுடை யவனே
- ஆலின் கீழ்அறம் அருள்புரிந் தவனே
- அரஎன் போர்களை அடிமைகொள் பவனே
- காலில் கூற்றுதைத் தருள்செயும் சிவனே
- கடவு ளேநெற்றிக் கண்ணுடை யவனே
- சேலின் நீள்வயல் செறிந்தெழில் ஓங்கித்
- திகழும் ஒற்றியூர்ச் சிவபெரு மானே.
- அம்ப லத்துள்நின் றாடவல் லானே
- ஆன்இ வர்ந்துவந் தருள்புரி பவனே
- சம்பு சங்கர சிவசிவ என்போர்
- தங்கள் உள்ளகம் சார்ந்திருப் பவனே
- தும்பை வன்னியம் சடைமுடி யவனே
- தூய னேபரஞ் சோதியே எங்கள்
- செம்பொ னேசெழும் பவளமா மலையே
- திகழும் ஒற்றியூர்ச் சிவபெரு மானே.
- உடையாய்உன் அடியவர்க்கும் அவர்மேல் பூண்ட
- ஒண்மணியாம் கண்மணிக்கும் ஓங்கு சைவ
- அடையாளம் என்னஒளிர் வெண்ற் றுக்கும்
- அன்பிலேன் அஞ்சாமல் அந்தோ அந்தோ
- நடையாய உடல் முழுதும் நாவாய் நின்று
- நவில்கின்றேன் என்பாவி நாவைச் சற்றும்
- இடையாத கொடுந்தீயால் கடினும் அன்றி
- என்செயினும் போதாதே எந்தாய் எந்தாய்.
- கண்ணுதலே நின்அடியார் தமையும் நோக்கேன்
- கண்மணிமா லைக்கெனினும் கனிந்து நில்லேன்
- பண்ணுதல்சேர் திருநீற்றுக் கோலம் தன்னைப்
- பார்த்தேனும் அஞ்சுகிலேன் பயனி லாமே
- நண்ணுதல்சேர் உடம்பெல்லாம் நாவாய் நின்று
- நவில்கின்றேன் என்கொடிய நாவை அந்தோ
- எண்ணுதல்சேர் கொடுந்தீயால் சுடினும் அன்றி
- என்செயினும் போதாதே எந்தாய் எந்தாய்.
- வஞ்சமிலார் நெஞ்சகத்தே மருவும் முக்கண்
- மாமணியே உனைநினையேன் வாளா நாளைக்
- கஞ்சமலர் முகத்தியர்க்கும் வாதில் தோன்றும்
- களிப்பினுக்கும் கழிக்கின்றேன் கடைய னேனை
- நஞ்சமுணக் கொடுத்துமடித் திடினும் வாளால்
- நசிப்புறவே துணித்திடினும் நலியத் தீயால்
- எஞ்சலுறச் சுடினும்அன்றி அந்தோ இன்னும்
- என்செயினும் போதாதே எந்தாய் எந்தாய்.
- அருள்பழுக்கும் கற்பகமே அரசே முக்கண்
- ஆரமுதே நினைப்புகழேன் அந்தோ வஞ்ச
- மருள்பழுக்கும் நெஞ்சகத்தேன் வாளா நாளை
- வாதமிட்டுக் கழிக்கின்றேன் மதியி லேனை
- வெருள்பழுக்கும் கடுங்காட்டில் விடினும் ஆற்று
- வெள்ளத்தில் அடித்தேக விடினும் பொல்லா
- இருள்பழுக்கும் பிலஞ்சேர விடினும் அன்றி
- என்செயினும் போதாதே எந்தாய் எந்தாய்.
- பெருங்கருணைக் கடலேஎன் குருவே முக்கண்
- பெருமானே நினைப்புகழேன் பேயேன் அந்தோ
- கருங்கல்மனக் குரங்காட்டி வாளா நாளைக்
- கழிக்கின்றேன் பயன்அறியாக் கடைய னேனை
- ஒருங்குருள உடல்பதைப்ப உறுங்குன் றேற்றி
- உருட்டுகினும் உயிர்நடுங்க உள்ளம் ஏங்க
- இருங்கழுவில் ஏற்றுகினும் அன்றி இன்னும்
- என்செயினும் போதாதே எந்தாய் எந்தாய்.
- தொழுகின்றோர் உளத்தமர்ந்த சுடரே முக்கண்
- சுடர்க்கொழுந்தே நின்பதத்தைத் துதியேன் வாதில்
- விழுகின்றேன் நல்லோர்கள் வெறுப்பப் பேசி
- வெறித்துழலும் நாயனையேன் விழல னேனை
- உழுகின்ற நுகப்படைகொண் டுலையத் தள்ளி
- உழக்கினும்நெட் டுடல்நடுங்க உறுக்கி மேன்மேல்
- எழுகின்ற கடலிடைவீழ்த் திடினும் அன்றி
- என்செயினும் போதாதே எந்தாய் எந்தாய்.
- விருப்பாகும் மதிச்சடையாய் விடையாய் என்றே
- மெய்யன்போ டுனைத்துதியேன் விரைந்து வஞ்சக்
- கருப்பாயும் விலங்கெனவே வளர்ந்தே நாளைக்
- கழிக்கின்றேன் கருநெஞ்சக் கள்வ னேனைப்
- பொருப்பாய யானையின் கால் இடினும் பொல்லாப்
- புழுத்தலையில் சோரிபுறம் பொழிய நீண்ட
- இருப்பாணி ஏற்றுகினும் அன்றி இன்னும்
- என்செயினும் போதாதே எந்தாய் எந்தாய்.
- அக்கநுதல் பிறைச்சடையாய் நின்தாள் ஏத்தேன்
- ஆண்பனைபோல் மிகநீண்டேன் அறிவொன் றில்லேன்
- மிக்கஒதி போல்பருத்தேன் கருங்க டாப்போல்
- வீண்கருமத் துழல்கின்றேன் விழல னேனைச்
- செக்கிடைவைத் துடல்குழம்பிச் சிதைய அந்தோ
- திருப்பிடினும் இருப்பறைமுட் சேரச் சேர்த்து
- எக்கரிடை உருட்டுகினும் அன்றி இன்னும்
- என்செயினும் போதாதே எந்தாய் எந்தாய்.
- அன்புடன்நின் பதம்புகழாப் பாவி நாவை
- அறத்துணியேன் நின்அழகை அமர்ந்து காணாத்
- துன்புறுகண் இரண்டினையும் சூன்றேன் நின்னைத்
- தொழாக்கையை வாளதனால் துண்ட மாக்கேன்
- வன்பறநின் தனைவணங்காத் தலையை அந்தோ
- மடித்திலேன் ஒதியேபோல் வளர்ந்தேன் என்னை
- இன்பறுவல் எரியிடைவீழ்த் திடினும் அன்றி
- என்செயினும் போதாதே எந்தாய் எந்தாய்.
- தேவேநின் அடிநினையா வஞ்ச நெஞ்சைத்
- தீமூட்டிச் சிதைக்கறியேன் செதுக்கு கில்லேன்
- கோவேநின் அடியர்தமைக் கூடாப் பொய்மைக்
- குடிகொண்டேன் புலைகொண்ட கொடியேன் அந்தோ
- நாவேற நினைத்துதியேன் நலமொன் றில்லேன்
- நாய்க்கடைக்கும் கடைப்பட்டேன் நண்ணு கின்றோர்க்
- கீவேதும் அறியேன்இங் கென்னை யந்தோ
- என்செயினும் போதாதே எந்தாய் எந்தாய்.
- அணிவேல் படைகொள் மகனா ரொடும்எம் அம்மை யொடுந்தான் அமர்கின்ற
- தணியாக் கோலம்கண்டு களிக்கத் தகையா தெமக்கொன் றருளானேல்
- மணிசேர் கண்டன் எண்தோள் உடையான் வடபால் கனக மலைவில்லான்
- பிணிபோக் கிடுவான் ஒற்றித் தியாகப் பெருமான் பிச்சைப் பெருமானே.
- ஓடல் எங்கணும் நமக்கென்ன குறைகாண்
- உற்ற நற்றுணை ஒன்றும்இல் லார்போல்
- வாடல் நெஞ்சமே வருதிஎன் னுடனே
- மகிழ்ந்து நாம்இரு வரும்சென்று மகிழ்வாய்க்
- கூடல் நேர்திரு ஒற்றியூர் அகத்துக்
- கோயில் மேவிநம் குடிமுழு தாளத்
- தாள்த லந்தரும் நமதருள் செல்வத்
- தந்தை யார்அடிச் சரண்புக லாமே.
- பொருந்தி ஈனருள் புகுந்துவீண் காலம்
- போக்கி நின்றனை போனது போக
- வருந்தி இன்னும்இங் குழன்றிடேல் நெஞ்சே
- வாழ்க வாழ்கநீ வருதிஎன் னுடனே
- திருந்தி நின்றநம் மூவர்தம் பதிகச்
- செய்ய தீந்தமிழ்த் தேறல்உண் டருளைத்
- தருந்தென் ஒற்றியூர் வாழுநம் செல்வத்
- தந்தை யார்அடிச் சரண்புக லாமே.
- உடுக்க வேண்டிமுன் உடைஇழந் தார்போல்
- உள்ள வாகும்என் றுன்னிடா தின்பம்
- மடுக்க வேண்டிமுன் வாழ்விழந் தாயே
- வாழ வேண்டிடில் வருதிஎன் னுடனே
- அடுக்க வேண்டிநின் றழுதழு தேத்தி
- அருந்த வத்தினர் அழிவுறாப் பவத்தைத்
- தடுக்க வேண்டிநல் ஒற்றியூர்ச் செல்வத்
- தந்தை யார்அடிச் சரண்புக லாமே.
- மோக மாதியால் வெல்லும்ஐம் புலனாம்
- மூட வேடரை முதலற எறிந்து
- வாகை ஈகுவன் வருதிஎன் னுடனே
- வஞ்ச வாழ்க்கையின் மயங்கும்என் நெஞ்சே
- போக நீக்கிநல் புண்ணியம் புரிந்து
- போற்றி நாள்தொறும் புகழ்ந்திடும் அவர்க்குச்
- சாகை நீத்தருள் ஒற்றியூர்ச் செல்வத்
- தந்தை யார்அடிச் சரண்புக லாமே.
- வெறிபி டிக்கினும் மகன்தனைப் பெற்றோர்
- விடுத்தி டார்அந்த வெறியது தீரும்
- நெறிபி டித்துநின் றாய்வரென் அரசே
- நீயும் அப்படி நீசனேன் தனக்குப்
- பொறிபி டித்தநல் போதகம் அருளிப்
- புன்மை யாவையும் போக்கிடல் வேண்டும்
- செறிபி டித்தவான் பொழில்ஒற்றி அமுதே
- தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே.
- வைத்த நின்அருள் வாழிய வாழிய
- மெய்த்த தில்லையின் மேவிய இன்பமே
- உய்த்த நல்அருள் ஒற்றியப் பாஎனைப்
- பொய்த்த சிந்தைவிட் டுன்தனைப் போற்றவே.
- போற்ற வைத்தனை புண்ணிய னேஎனைச்
- சாற்ற வைத்தனை நின்புகழ்த் தன்மையைத்
- தேற்ற வைத்தனை நெஞ்சைத்தெ ளிந்தன்பை
- ஊற்ற வைத்தனை உன்ஒற்றி மேவியே.
- ஆர்க்கும் கடற்கண் அன்றெழுந்த ஆல காலம் அத்தனையும்
- சேர்க்கும் களத்தான் சிவபெருமான் தியாகப் பெருமான் திருநடத்தைக்
- கார்க்கண் பொழில்சூழ் ஒற்றியில்போய்க் கண்டேன் பிறவி கண்டிலனே
- யார்க்கென் றுரைப்பேன் அம்மாநான் என்ன தவந்தான் செய்தேனோ.
- உள்ளும் புறமும் நிறைந்தடியார் உள்ளம் மதுரித் தூறுகின்ற
- தெள்ளும் அமுதாம் சிவபெருமான் தியாகப் பெருமான் திருமுகத்தைக்
- கள்ளம் தவிர்க்கும் ஒற்றியில்போய்க் கண்டேன் பசியைக் கண்டிலனே
- எள்ளல் இகந்தேன் அம்மாநான் என்ன தவந்தான் செய்தேனோ.
- ஆவல் உடையார் உள்ளுடையார் அயன்மால் மகவான் ஆதியராம்
- தேவர் பெருமான் சிவபெருமான் தியாகப் பெருமான் திருவடிவைக்
- காவம் பொழில்சூழ் ஒற்றியில்போய்க் கண்டேன் கண்ட காட்சிதனை
- யாவர் பெறுவார் அம்மாநான் என்ன தவந்தான் செய்தேனோ.
- மறப்பை அகன்ற மனத்துரவோர் வாழ்த்த அவர்க்கு வான்கதியின்
- சிறப்பை அளிக்கும் சிவபெருமான் தியாகப் பெருமான் திருநடத்தைப்
- பிறப்பை அகற்றும் ஒற்றியில்போய்ப் பேரா னந்தம் பெறக்கண்டேன்
- இறப்பைத் தவிர்த்தேன் அம்மாநான் என்ன தவந்தான் செய்தேனோ.
- துன்னும் சோம சுந்தரனார் தூய மதுரை நகர்அளித்த
- தென்னர் பெருமான் சிவபெருமான் தியாகப் பெருமான் திருஅழகைப்
- பன்னும் ஒற்றி நகர்தன்னில் பார்த்தேன் வினைபோம் வழிபார்த்த
- என்னை மறந்தேன் அம்மாநான் என்ன தவந்தான் செய்தேனோ.
- வருநாள் உயிர்வாழும் மாண்பறியோம் நெஞ்சே
- ஒருநாளும் நீவேறொன் றுன்னேல் - திருநாளைப்
- போவான் தொழுமன்றில் புண்ணியனை ஒற்றியில்தாய்
- ஆவான் திருவடிஅல் லால்.
- பரிந்துனக்குச் சொல்கின்றேன் பாவங்கள் எல்லாம்
- எரிந்துவிழ நாம்கதியில் ஏறத் - தெரிந்து
- விடையானை ஒற்றியூர் வித்தகனை மாதோர்
- புடையானை நெஞ்சமே போற்று.
- போற்றுதிஎன் நெஞ்சே புரம்நகையால் சுட்டவனை
- ஏற்றுகந்த பெம்மானை எம்மவனை - நீற்றொளிசேர்
- அவ்வண்ணத் தானை அணிபொழில்சூழ் ஒற்றியூர்ச்
- செவ்வண்ணத் தானைத் தெரிந்து.
- திகழ்கின்ற ஞானச் செழுஞ்சுடரை வானோர்
- புகழ்கின்ற தெய்வத்தைப் போதம் - நிகழ்கின்ற
- ஒற்றிக் கனியை உலகுடைய நாயகத்தை
- வெற்றித் துணையைநெஞ்சே வேண்டு.
- வேண்டாமை வேண்டுவது மேவாத் தவமுடையோர்
- தீண்டாமை யாததுநீ தீண்டாதே - ஈண்டாமை
- ஒன்றுவபோல் நெஞ்சேநீ ஒன்றிஒற்றி யூரன்பால்
- சென்றுதொழு கண்டாய் தினம்.
- தினந்தோறும் உள்ளுருகிச் சீர்பாடும் அன்பர்
- மனந்தோறும் ஓங்கும் மணியை - இனந்தோறும்
- வேதமலர் கின்ற வியன்பொழில்சூழ் ஒற்றிநகர்ப்
- போத மலரைநெஞ்சே போற்று.
- போற்றார் புரம்பொடித்த புண்ணியனை விண்ணவர்கள்
- ஆற்றாத நஞ்சமுண்ட ஆண்தகையைக் - கூற்றாவி
- கொள்ளும் கழற்கால் குருமணியை ஒற்றியிடம்
- கொள்ளும் பொருளைநெஞ்சே கூறு.
- ஓதுநெறி ஒன்றுளதென் உள்ளமே ஓர்திஅது
- தீதுநெறி சேராச் சிவநெறியில் - போதுநெறி
- ஓதம் பிடிக்கும்வயல் ஒற்றியப்பன் தொண்டர்திருப்
- பாதம் பிடிக்கும் பயன்.
- புல்வாயின் முன்னர்ப் புலிப்போத் தெனஎன்முன் போந்துநின்ற
- கல்வாய் மனத்தரைக் கண்டஞ்சி னேனைக் கடைக்கணிப்பாய்
- அல்வாய் மணிமிடற் றாரமு தேஅருள் ஆன்றபெரும்
- செல்வா வயித்திய நாதா அமரர் சிகாமணியே.
- அறத்தாயை ஓர்புடை கொண்டோர் புடைமண் அளந்தமுகில்
- நிறத்தாயை வைத்துல கெல்லாம் நடத்தும் நிருத்தஅண்டப்
- புறத்தாய்என் துன்பம் துடைத்தாண்டு மெய்அருட் போதந்தந்த
- திறத்தாய் வயித்திய நாதா அமரர் சிகாமணியே.
- செய்த நன்றிமேல் தீங்கிழைப் பாரில்
- திருப்பும் என்தனைக் திருப்புகின் றனைநீ
- பெய்த பாலினைக் கமரிடைக் கவிழ்க்கும்
- பேதை யாதலில் பிறழ்ந்தனை உனைநான்
- வைத போதினும் வாழ்த்தென நினைத்து
- மறுத்து நீக்கிஅவ் வழிநடக் கின்றாய்
- கொய்த கோட்டினை நட்டனை வளர்ப்பாய்
- கொடிய நெஞ்சமே மடியகிற் றிலையே.
- இலைஎ னாதணு வளவும்ஒன் றீய
- எண்ணு கின்றிலை என்பெறு வாயோ
- கொலைஇ னாதென அறிந்திலை நெஞ்சே
- கொல்லு கின்றஅக் கூற்றினும் கொடியாய்
- தலையின் மாலைதாழ் சடையுடைப் பெருமான்
- தாள்நி னைந்திலை ஊண்நினைந் துலகில்
- புலையி னார்கள்பால் போதியோ வீணில்
- போகப் போகஇப் போக்கினில் அழிந்தே.
- அழிந்த வாழ்க்கையின் அவலமிங் கனைத்தும்
- ஐயம் இன்றிநீ அறிந்தனை நெஞ்சே
- கழிந்த எச்சிலை விழைந்திடு வார்போல்
- கலந்து மீட்டுநீ கலங்குகின் றனையே
- மொழிந்த முன்னையோர் பெறும்சிவ கதிக்கே
- முன்னு றாவகை என்னுறும் உன்னால்
- இழிந்த நாயினும் கடையனாய் நின்றேன்
- என்செய் வேன்உனை ஏன்அடுத் தேனே.
- கண்கள் மூன்றினார் கறைமணி மிடற்றார்
- கங்கை நாயகர் மங்கைபங் குடையார்
- பண்கள் நீடிய பாடலார் மன்றில்
- பாத நீடிய பங்கயப் பதத்தார்
- ஒண்கண் மாதரார் நடம்பயில் ஒற்றி
- யூர்அ மர்ந்துவாழ் வுற்றவர்க் கேநம்
- மண்கொண் மாலைபோம் வண்ணம்நல் தமிழ்ப்பூ
- மாலை சூட்டுதும் வருதிஎன் மனனே.
- திருவின் நாயகன் கைப்படை பெறுவான்
- திருக்கண் சாத்திய திருமலர்ப் பதத்தார்
- கருவின் நின்றஎம் போல்பவர் தம்மைக்
- காத்த ளிப்பதே கடன்எனக் கொண்டார்
- உருவின் நின்றவர் அருஎன நின்றோர்
- ஒற்றி யூரிடை உற்றனர் அவர்க்கு
- மருவின் நின்றநன் மணங்கொளும் மலர்ப்பூ
- மாலை சூட்டுதும் வருதிஎன் மனனே.
- கரும்பைந் நாகணைக் கடவுள்நான் முகன்வான்
- கடவுள் ஆதியர் கலகங்கள் தவிர்ப்பான்
- துரும்பை நாட்டிஓர் விஞ்சையன் போலத்
- தோன்றி நின்றவர் துரிசறுத் திட்டோன்
- தரும்பைம் பூம்பொழில் ஒற்றியூர் இடத்துத்
- தலங்கொண் டார்அவர் தமக்குநாம் மகிழ்ந்து
- வரும்பைஞ் சீர்த்தமிழ் மாலையோ டணிபூ
- மாலை சூட்டுதும் வருதிஎன் மனனே.
- கஞ்சன் அங்கொரு விஞ்சனம் ஆகிக்
- காலில் போந்துமுன் காணரு முடியார்
- அஞ்ச னம்கொளும் நெடுங்கணாள் எங்கள்
- அம்மை காணநின் றாடிய பதத்தார்
- செஞ்சொன் மாதவர் புகழ்திரு வொற்றித்
- தேவர் காண்அவர் திருமுடிக் காட்ட
- மஞ்ச னங்கொடு வருதும்என் மொழியை
- மறாது நீஉடன் வருதிஎன் மனனே.
- சூழு மாலயன் பெண்ணுரு எடுத்துத்
- தொழும்பு செய்திடத் தோன்றிநின் றவனைப்
- போழும் வண்ணமே வடுகனுக் கருளும்
- பூத நாதர்நற் பூரணா னந்தர்
- தாழும் தன்மையோர் உயர்வுறச் செய்யும்
- தகையர் ஒற்றியூர்த் தலத்தினர் அவர்தாம்
- வாழும் கோயிற்குத் திருவல கிடுவோம்
- மகிழ்வு கொண்டுடன் வருதிஎன் மனனே.
- குளங்கொள் கண்ணினார் குற்றமே செயினும்
- குணமென் றேஅதைக் கொண்டருள் புரிவோர்
- உளங்கொள் அன்பர்தம் உள்ளகத் திருப்போர்
- ஒற்றி யூரிடம் பற்றிய புனிதர்
- களங்கொள் கண்டரெண் தோளர்கங் காளர்
- கல்லை வில்எனக் கண்டவர் அவர்தம்
- வளங்கொள் கோயிற்குத் திருமெழுக் கிடுவோம்
- வாழ்க நீஉடன் வருதிஎன் மனனே.
- பணிகொள் மார்பினர் பாகன மொழியாள்
- பாகர் காலனைப் பாற்றிய பதத்தார்
- திணிகொள் வன்மத மலைஉரி போர்த்தோர்
- தேவர் நாயகர் திங்களம் சடையார்
- அணிகொள் ஒற்றியூர் அமர்ந்திடும் தியாகர்
- அழகர் அங்கவர் அமைந்துவீற்றிருக்கும்
- மணிகொள் கோயிற்குத் திருப்பணி செய்தும்
- வாழ்க நீஉடன் வருதிஎன் மனனே.
- இலவு காக்கின்ற கிள்ளைபோல் உழன்றாய்
- என்னை நின்மதி ஏழைநீ நெஞ்சே
- பலவு வாழைமாக் கனிகனிந் திழியும்
- பணைகொள் ஒற்றியூர்க் கென்னுடன் வருதி
- நிலவு வெண்மதிச் சடையுடை அழகர்
- நிறைய மேனியில் நிகழ்ந்தநீற் றழகர்
- குலவு கின்றனர் வேண்டிய எல்லாம்
- கொடுப்பர் வாங்கிநான் கொடுப்பன்உன் தனக்கே.
- மன்னு ருத்திரர் வாழ்வைவேண் டினையோ
- மால வன்பெறும் வாழ்வுவேண் டினையோ
- அன்ன ஊர்திபோல் ஆகவேண் டினையோ
- அமையும் இந்திரன் ஆகவேண் டினையோ
- என்ன வேண்டினும் தடையிலை நெஞ்சே
- இன்று வாங்கிநான் ஈகுவன் உனக்கே
- வன்னி அஞ்சடை எம்பிரான் ஒற்றி
- வளங்கொள் ஊரிடை வருதிஎன் னுடனே.
- காலம் செல்கின்ற தறிந்திலை போலும்
- காலன் வந்திடில் காரியம் இலைகாண்
- நீலம் செல்கின்ற மிடற்றினார் கரத்தில்
- நிமிர்ந்த வெண்நெருப் பேந்திய நிமலர்
- ஏலம் செல்கின்ற குழலிஓர் புடையார்
- இருக்கும் ஒற்றியூர்க் கென்னுடன் வருதி
- ஞாலம் செல்கின்ற துயர்கெட வரங்கள்
- நல்கு வார்அவை நல்குவன் உனக்கே.
- 23. ஈண்டு மேற்கொண்ட குறட்பா.இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்கனவிலும் தேற்றாதார் மாட்டு. 1054 (106 - இரவு - 4)
- உண்மை ஓதினும் ஓர்ந்திலை மனனே
- உப்பி லிக்குவந் துண்ணுகின் றவர்போல்
- வெண்மை வாழ்க்கையின் நுகர்வினை விரும்பி
- வெளுக்கின் றாய்உனை வெறுப்பதில் என்னே
- தண்மை மேவிய சடையுடைப் பெருமான்
- சார்ந்த ஒற்றியந் தலத்தினுக் கின்றே
- எண்மை நீங்கிடச் செல்கின்றேன் உனக்கும்
- இயம்பி னேன்பழி இல்லைஎன் மீதே.
- யாது கண்டனை அதனிடத் தெல்லாம்
- அணைகின் றாய்அவ மாகநிற் கீந்த
- போது போக்கினை யேஇனி மனனே
- போதி போதிநீ போம்வழி எல்லாம்
- கோது நீக்கிநல் அருள்தரும் பெருமான்
- குலவும் ஒற்றியூர்க் கோயிலுக் கின்றே
- ஏதம் ஓடநான் செல்கின்றேன் உனக்கும்
- இயம்பி னேன்பழி இல்லைஎன் மீதே.
- மோகம் என்னும்ஓர் மூடரில் சிறந்தோய்
- முடிவி லாத்துயர் மூலஇல் ஒழுக்கில்
- போகம் என்னும்ஓர் அளற்றிடை விழவும்
- போற்று மக்கள்பெண் டன்னைதந் தையராம்
- சோக வாரியில் அழுந்தவும் இயற்றிச்
- சூழ்கின் றாய்எனைத் தொடர்ந்திடேல் தொடரில்
- ஓகை ஒற்றியூர்ச் சிவன்அருள் வாளால்
- உன்னை வெட்டுவல் உண்மைஎன் றுணரே.
- புகழே விரும்பிப் புலன்இழந்தேன் போந்துன் பதத்தைப் போற்றுகிலேன்
- இகழேன் எனைநான் ஒற்றியப்பா என்னை மதித்தேன் இருள்மனத்தேன்
- திகழ்ஏழ் உலகில் எனைப்போல்ஓர் சிறியர் அறியேன் தீவினையை
- அகழேன்எனினும் எனையாளா தகற்றல் அருளுக் கழகன்றே.
- ஒப்பார் இல்லா ஒற்றியப்பா உன்னை மறந்தேன் மாதர்கள்தம்
- வெப்பார் குழியில் கண்மூடி விழுந்தேன் எழுந்தும் விரைகின்றேன்
- இப்பார் நடையில் களித்தவரை ஈர்த்துக் கொடுபோய்ச் செக்கிலிடு
- விப்பார் நமனார் என்பதைநான் நினையா தறிவை விடுத்தேனே.
- விடுத்தேன் தவத்தோர் நெறிதன்னை வியந்தேன் உலக வெந்நெறியை
- மடுத்தேன் துன்ப வாரிதனை வஞ்ச மனத்தர் மாட்டுறவை
- அடுத்தேன் ஒற்றி யப்பாஉன் அடியை நினையேன் அலமந்தேன்
- படுத்தே நமன்செக் கிடும்போது படிறேன் யாது படுவேனோ.
- உண்டோ எனைப்போல் மதிஇழந்தோர் ஒற்றி யப்பா உன்னுடைய
- திண்டோள் இலங்கும் திருநீற்றைக் காண விரும்பேன் சேர்ந்தேத்தேன்
- எண்தோள் உடையாய் என்றிரங்கேன் இறையும் திரும்பேன் இவ்வறிவைக்
- கொண்டே உனைநான் கூடுவன்நின் குறிப்பே தொன்றும் அறியேனே.
- ஒன்றுநின் தன்மை அறிந்தில மறைகள் உள்ளம்நொந் திளைக்கின்றதின்னும்
- நன்றுநின் தன்மை நான் அறிந் தேத்தல் நாயர சாளல்போல் அன்றோ
- சென்றுநின் றடியர் உள்ளகத் தூறும் தெள்ளிய அமுதத்தின் திரட்டே
- மன்றுள்நின் றாடும் மாணிக்க மலையே வளங்கொளும் ஒற்றியூர் மணியே.
- நீரின்மேல் எழுதும் எழுத்தினும் வி€ரைந்து நி€லைபடா உடம்பி€னை ஓம்பிப்
- பாரின்மேல் அ€லையும் பாவியேன் தனக்குப் பரிந்தருள் பாலியாய் என்னில்
- காரின்மேல் வரல்போல் கடாமி€சை வரும்அக் காலன்வந் திடில்எது செய்வேன்
- வாரின்மேல் வளரும் திருமு€லை ம€லையாள் மணாளனே ஒற்றியூர் வாழ்வே.
- பசிக்குண வுழன்றுன் பாததா ம€ரை€யைப் பாடுதல் ஒழிந்துநீர்ப் பொறிபோல்
- நசிக்கும்இவ்வுட€லை நம்பினேன் என்€னை நமன்தமர் வருத்தில்என்செய்கேன்
- விசிக்கும்நல் அரவக்கச்சினோய் நினது மெய்அருள் அலதொன்றும் விரும்பேன்
- வசிக்கும்நல் தவத்தோர்க் கருள்செயஓங்கி வளம்பெறும் ஒற்றியூர் வாழ்வே.
- மடிக்குறும் நீர்மேல் எழுத்தினுக் கிடவே €மைவடித் தெடுக்குநர் போல
- நொடிக்குளே ம€றையும் உடம்பி€னை வளர்க்க நொந்தனன் நொந்ததும் அல்லால்
- படிக்குளே மனத்தால் பரிவுறு கின்றேன் பாவியேன் தனக்கருள் புரியாய்
- வடிக்குறும் தமிழ்கொண் டன்பருக் கருளும் வள்ளலே ஒற்றியூர் வாழ்வே.
- அங்€கையில் புண்போல் உலகவாழ் வ€னைத்தும் அழிதரக் கண்டுநெஞ் சயர்ந்தே
- பங்கமுற் ற€லைவ தன்றிநின் கமல பாதத்€தைப் பற்றிலேன் அந்தோ
- இங்கெ€னை நிகரும் ஏ€ழையார் எனக்குன் இன்னருள் எவ்வணம் அருள்வாய்
- மங்€கையோர் பு€டைகொள் வள்ளலே அழியா வளங்கொளும் ஒற்றியூர் வாழ்வே.
- கணத்தினில் உலகம் அழிதரக் கண்டும் கண்ணிலார் போல்கிடந் து€ழைக்கும்
- குணத்தினில் கொடியேன் தனக்குநின் அருள்தான் கூடுவ தெவ்வணம் அறியேன்
- பணத்தினில் பொலியும் பாம்ப€ரை ஆர்த்த பரமனே பிரமன்மால் அறியா
- வணத்தினால் நின்ற மாணிக்கச் சுடரே வள்ளலே ஒற்றியூர் வாழ்வே.
- மண்ணை மனத்துப் பாவியன்யான் மடவார் உள்ளே வதிந்தளிந்த
- புண்ணை மதித்துப் புகுகின்றேன் போதம் இழந்தேன் புண்ணியனே
- எண்ண இனிய நின்புகழை ஏத்தேன் ஒதிபோல் இருக்கின்றேன்
- தண்நல் அமுதே நீஎன்னைத் தடுத்திங் காளத் தக்கதுவே.
- கரும்பே ஒற்றி யூர்அமர்ந்த கனியே உன்தன் கழல்அடியை
- விரும்பேன் அடியார் அடித்தொண்டில் மேவேன் பொல்லா விடமனைய
- பெரும்பேய் மாதர் பிணக்குழியில் பேதை மனம்போந் திடச்சூறைத்
- துரும்பே என்னச் சுழல்கின்றேன் துணையொன் றறியேன் துனியேனே.
- என்னைக் கொடுத்தேன் பெண்பேய்கட் கின்பம் எனவே எனக்கவர்நோய்
- தன்னைக் கொடுத்தார் நான்அந்தோ தளர்ந்து நின்றேன் அல்லதுசெம்
- பொன்னைக் கொடுத்தும் பெறஅரிய பொருளே உன்னைப் போற்றுகிலேன்
- இன்னல் கொடுத்த பவமுடையேன் எற்றுக் கிவண்நிற் கின்றேனே.
- துள்ளிவாய் மடுக்கும் காளையர் ஆட்டத் துடுக்கினை ஒடுக்குறும் காமக்
- கொள்ளிவாய்ப் பேய்கள் எனுமட வியர்தம் கூட்டத்துள் நாட்டம்வைத் துழன்றேன்
- உள்ளிவாய் மடுத்துள் உருகிஆ னந்த உததிபோல் கண்கள்நீர் உகுப்பார்
- அள்ளிவாய் மடுக்கும் அமுதே எங்கள் அண்ணலே ஒற்றியூர் அரசே.
- அரியது நினது திருவருள் ஒன்றே அவ்வருள் அடைதலே எவைக்கும்
- பெரியதோர் பேறென் றுணர்ந்திலேன் முருட்டுப் பேய்களை ஆயிரம்கூட்டிச்
- சரிஎனச் சொலினும் போதுறா மடமைத் தையலார் மையலில் அழுந்திப்
- பிரியமுற் றலைந்தேன் ஏழைநான் ஒற்றிப் பெருமநின் அருளெனக் குண்டே.
- இனியநின் திருத்தாள் இணைமலர் ஏத்தேன் இளமுலை மங்கையர்க் குள்ளம்
- கனியஅக் கொடியார்க் கேவல்செய் துழன்றேன் கடையனேன் விடயவாழ் வுடையேன்
- துனியஇவ் வுடற்கண் உயிர்பிரிந் திடுங்கால்துணைநினை அன்றி ஒன் றறியேன்
- தனியமெய்ப் போத வேதநா யகனே தடம்பொழில் ஒற்றியூர் இறையே.
- இறையும்நின் திருத்தாள் கமலங்கள் ஏத்தேன் எழில்பெற உடம்பினை ஓம்பிக்
- குறையும்வெண் மதிபோல் காலங்கள் ஒழித்துக் கோதையர் குறுங்குழி அளற்றில்
- பொறையும் நல் நிறையும் நீத்துழன் றலைந்தேன் பொய்யனேன் தனக்குவெண் சோதி
- நிறையும்வெள் நீற்றுக் கோலனே ஒற்றி நிமலனே அருளுதல் நெறியே.
- மன்றுடையாய் மால்அயனும் மற்றும்உள வானவரும்
- குன்றுடையாய் என்னக் குறைதவிர்த்த கோமானே
- ஒன்றுடையாய் ஊர்விடையாய் ஒற்றியப்பா என்னுடைய
- வன்றுடையாய் என்றுன் மலரடியைப் போற்றேனோ.
- வஞ்ச மடவார் மயக்கும் மயக்கொழிய
- நஞ்சம்அணி கண்டத்து நாதனே என்றென்று
- உஞ்சவர்கள் வாழ்த்துகின்ற ஒற்றியப்பா உன்னுடைய
- கஞ்ச மலர்அடிக்கே காதலுற்றுப் போற்றேனோ.
- மானமிலார் நின்தாள் வழுத்தாத வன்மனத்தார்
- ஈனர்அவர் பால்போய் இளைத்தேன் இளைப்பாற
- ஊனமிலார் போற்றுகின்ற ஒற்றியப்பா உன்னுடைய
- ஞான அடியின்நிழல் நண்ணி மகிழேனோ.
- தந்தைதாய் மக்கள்மனை தாரம்எனும் சங்கடத்தில்
- சிந்தைதான் சென்று தியங்கி மயங்காமே
- உந்தைஎன்போர் இல்லாத ஒற்றியப்பா உன்அடிக்கீழ்
- முந்தையோர் போன்று முயங்கி மகிழேனோ.
- தூக்கமும்முன் தூங்கியபின் சோறிலையே என்னும்அந்த
- ஏக்கமுமே அன்றிமற்றோர் ஏக்கமிலா ஏழையனேன்
- ஊக்கமுளோர் போற்றுகின்ற ஒற்றியப்பா நின்அடிக்கீழ்
- நீக்கமிலா ஆனந்த நித்திரைதான் கொள்ளேனோ.
- வாதுபுரிந் தீன மடவார் மதித்திடுவான்
- போதுநிதம் போக்கிப் புலம்பும் புலைநாயேன்
- ஓதுமறை யோர்குலவும் ஒற்றியப்பா ஊரனுக்காத்
- தூதுசென்ற நின்தாள் துணைப்புகழைப் பாடேனோ.
- கள்உண்ட நாய்போல் கடுங்காம வெள்ளமுண்டு
- துள்உண்ட நெஞ்சத் துடுக்கடக்கி அன்பர்கள்தம்
- உள்உண்ட தெள்அமுதே ஒற்றியப்பா உன்தனைநான்
- வெள்உண்ட நந்தி விடைமீதில் காணேனோ.
- புண்ணியமோர் போதும் புரிந்தறியாப் பொய்யவனேன்
- எண்ணியதோர் எண்ணம் இடர்இன்றி முற்றியிட
- உண்ணிலவு நல்ஒளியே ஒற்றியப்பா உன்னுடைய
- தண்ணிலவு தாமரைப்பொன் தாள்முடியில் கொள்ளேனோ.
- சழக்கி ருந்ததென் னிடத்தில்ஆ யினும்நீர்
- தந்தை ஆதலின் சார்ந்தநல் நெறியில்
- பழக்கி வைப்பது தேவரீர்க் குரிய
- பண்பன் றோஎனைப் பரிந்திலீர் ஆனால்
- வழக்கி ருப்பதிங் குமக்குமென் றனக்கும்
- வகுத்துக் கூறுதல் மரபுமற் றன்றால்
- புழைக்கை மாவுரி யீர்ஒற்றி உடையீர்
- பொய்யன் என்னில்யான் போம்வழி எதுவோ.
- அழுது நெஞ்சயர்ந் துமைநினைக் கின்றேன்
- ஐய நீர்அறி யாததும் அன்றே
- கழுது துன்றிய காட்டகத் தாடும்
- கதியி லீர்எனக் கழறினன் அல்லால்
- பழுது பேசின தொன்றிலை ஒற்றிப்
- பதியில் வாழ்படம் பக்கநா யகரே
- பொழுது போகின்ற தென்செய்கேன் எனைநீர்
- பொய்யன் என்னில்யான் போம்வழி எதுவோ.
- முன்னை மாதவ முயற்சிஒன் றில்லா
- மூட னேன்தனை முன்வர வழைத்துப்
- பிள்னை ஒன்றும்வாய்ப் பேச்சிலீ ரானால்
- பித்தர் என்றுமைப் பேசிட லாமே
- என்னை நான்பழித் திடுகின்ற தல்லால்
- இகழ்கி லேன்உமை எழில்ஒற்றி உடையீர்
- புன்னை அஞ்சடை யீர்எனை உடையீர்
- பொய்யன் என்னில்யான் போம்வழி எதுவோ.
- வன்மை பேசிய வன்தொண்டர் பொருட்டாய்
- வழக்குப் பேசிய வள்ளல்நீர் அன்றோ
- இன்மை யாளர்போல் வலியவந் திடினும்
- ஏழை யாம்இவன் என்றொழித் திட்டால்
- தன்மை அன்றது தருமமும் அன்றால்
- தமிய னேன்இன்னும் சாற்றுவ தென்னே
- பொன்மை அஞ்சடை யீர்ஒற்றி உடையீர்
- பொய்யன் என்னில்யான் போம்வழி எதுவோ.
- உறங்கு கின்றதும் விழிப்பதும் மகிழ்வாய்
- உண்ணு கின்றதும் உடுப்பதும் மயக்குள்
- இறங்கு கின்றதும் ஏறுகின் றதுமாய்
- எய்க்கின் றேன்மனம் என்னினும் அடியேன்
- அறங்கொள் நும்அடி அரண்என அடைந்தேன்
- அயர்வு தீர்த்தெனை ஆட்கொள நினையீர்
- புறங்கொள் காட்டகத் தீர்ஒற்றி உடையீர்
- பொய்யன் என்னில்யான் போம்வழி எதுவோ.
- கரும்பின் கட்டியும் கனியையும் கொடுத்தால்
- கயவர் ஆயினும் கசக்கும்என் றுரையார்
- அரும்பின் கட்டிள முலைஉமை மகிழும்
- ஐய நீர்உம தருள்எனக் களிக்க
- இரும்பின் கட்டிநேர் நெஞ்சினேன் எனினும்
- ஏற்று வாங்கிடா திருந்ததுண் டேயோ
- பொரும்பின் கட்டுரி யீர்ஒற்றி உடையீர்
- பொய்யன் என்னில்யான் போம்வழி எதுவோ.
- விருப்பு நின்றதும் பதமலர் மிசைஅவ்
- விருப்பை மாற்றுதல் விரகுமற் றன்றால்
- கருப்பு நேரினும் வள்ளியோர் கொடுக்கும்
- கடமை நீங்குறார் உடமையின் றேனும்
- நெருப்பு நும்உரு ஆயினும் அருகில்
- நிற்க அஞ்சுறேன் நீலனும் அன்றால்
- பொருப்பு வில்லுடை யீர்ஒற்றி உடையீர்
- பொய்யன் என்னில்யான் போம்வழி எதுவோ.
- கொடிய நஞ்சமு தாக்கிய உமக்கிக்
- கொடிய னேனைஆட் கொள்ளுதல் அரிதோ
- அடியர் தம்பொருட் டடிபடு வீர்எம்
- ஐய நும்மடிக் காட்பட விரைந்தேன்
- நெடிய மால்அயன் காண்கில ரேனும்
- நின்று காண்குவல் என்றுளம் துணிந்தேன்
- பொடிய நீறணி வீர்ஒற்றி உடையீர்
- பொய்யன் என்னில்யான் போம்வழி எதுவோ.
- வினையி னால்உடல் எடுத்தன னேனும்
- மேலை நாள்உமை விரும்பிய அடியேன்
- எனைஇன் னான்என அறிந்திலி ரோநீர்
- எழுமைச் செய்கையும் இற்றென அறிவீர்
- மனையி னால்வரும் துயர்கெட உமது
- மரபு வேண்டியே வந்துநிற் கின்றேன்
- புனையி னால்அமர்ந் தீர்ஒற்றி உடையீர்
- பொய்யன் என்னில்யான் போம்வழி எதுவோ.
- பிழைபு ரிந்தனன் ஆகிலும் உமது
- பெருமை நோக்கில்அப் பிழைசிறி தன்றோ
- மழைபு ரிந்திடும் வண்கையை மாற்ற
- மதிக்கின் றோர்எவர் மற்றிலை அதுபோல்
- உழைபு ரிந்தருள் வீர்எனில் தடுப்பார்
- உம்பர் இம்பரில் ஒருவரும் இலைகாண்
- புழைபு ரிந்தகை உலவொற்றி உடையீர்
- பொய்யன் என்னில்யான் போம்வழி எதுவோ.
- அன்னைபோன் றடியர்க் கருத்தியில் அருத்தும் அப்பநின் அடியினை காணா
- தென்னையோ மலம்உண் டுழன்றிடும் பன்றி என்னஉண் டுற்றனன் அதனால்
- புன்னைஅம் சடைஎம் புண்ணிய ஒளியே பூதநா யகஎன்றன் உடலம்
- தன்னைநீ அமர்ந்த ஒற்றியில் உன்னால் தண்டிக்கப் பட்டனன் அன்றே.
- குழிக்குமண் அடைக்கும் கொள்கைபோல் பாழும் கும்பியை ஓம்பினன் அல்லால்
- செழிக்கும்உன் திருமுன் நீலகண் டந்தான் செப்புதல் மறந்தனன் அதனால்
- விழிக்குள்நின் றிலங்கும் விளங்கொளி மணியே மென்கரும் பீன்றவெண் முத்தம்
- தழிக்கொளும் வயல்சூழ் ஒற்றியில் உன்னால் தண்டிக்கப் பட்டனன் அன்றே.
- கமரிடை மலநீர் கவிழ்த்தல்போல் வயிற்றுக் கடன்கழித் திட்டனன் அல்லால்
- அமரிடைப் புரமூன் றெரித்தருள் புரிந்த ஐயனே நினைத்தொழல் மறந்தேன்
- சமரிடை மனத்தேன் ஆதலால் முனிவர் சங்கர சிவசிவ என்றே
- தமரிடை ஓங்கும் ஒற்றியில் உன்னால் தண்டிக்கப் பட்டனன் அன்றே.
- அருமருந் தனையாய் நின்திரு முன்போந் தரகர எனத்தொழல் மறந்தே
- இருளுறும் மனத்தேன் மலத்தினும் இழிந்த இயல்புற உண்டனன் அதனால்
- கருமருந் தனைய அஞ்செழுத் தோதும் கருத்தர்போல் திருத்தம தாகத்
- தருமநின் றோங்கும் ஒற்றியில் உன்னால் தண்டிக்கப் பட்டனன் அன்றே.
- கண்நுதல் கரும்பே நின்முனம் நீல கண்டம்என் றோதுதல் மறந்தே
- உண்ணுதற் கிசைந்தே உண்டுபின் ஒதிபோல் உன்முனம் நின்றனன் அதனால்
- நண்ணுதல் பொருட்டோர் நான்முகன் மாயோன் நாடிட அடியர்தம்உள்ளத்
- தண்ணுதல் கலந்த ஒற்றியில் உன்னால் தண்டிக்கப் பட்டனன் அன்றே.
- முறைப்படி நினது முன்புநின் றேத்தி முன்னிய பின்னர்உண் ணாமல்
- சிறைப்படி வயிற்றில் பொறைப்பட ஒதிபோல் சென்றுநின் முன்னர்உற் றதனால்
- கறைப்பட ஓங்கும் கண்டனே எவர்க்கும் கருத்தனே ஒருத்தனே மிகுசீர்
- தறைப்படர்ந் தோங்கும் ஒற்றியில் உன்னால் தண்டிக்கப் பட்டனன் அன்றே.
- யாது நான்பிழை செய்யினும் பொறுப்பான்
- எந்தை எம்மிறை என்றுவந் தடைந்தேன்
- தீது நோக்கிநீ செயிர்த்திடில் அடியேன்
- செய்வ தென்னைநின் சித்தமிங் கறியேன்
- போது போகின்ற தன்றிஎன் மாயப்
- புணர்ச்சி யாதொன்றும் போகின்ற திலைகாண்
- சீத வார்பொழில் ஒற்றியம் பரனே
- திருச்சிற் றம்பலம் திகழ்ஒளி விளக்கே.
- தாய்க்கும் தந்தைக்கும் நிகரும்நின் இருதாள்
- சார்ந்த மேலவர் தமைத்தொழு தேத்தா
- நாய்க்கும் நாய்எனும் பாவியேன் பிழையை
- நாடி நல்லருள் நல்கிடா திருந்தால்
- ஏய்க்கும் மால்நிறக் காலன்வந் திடும்போ
- தென்கொ லாம்இந்த எண்ணம்என் மனத்தைத்
- தீய்க்கு தென்செய்வேன் ஒற்றியம் சிவனே
- தில்லை அம்பலம் திகழ்ஒளி விளக்கே.
- ஆட்டு கின்றநீ அறிந்திலை போலும்
- ஐவர் பக்கம்நான் ஆடுகின் றதனைக்
- காட்டு கின்றவான் கடலிடை எழுந்த
- காள முண்டஅக் கருணையை உலகில்
- நாட்டு கின்றனை ஆயில்இக் கொடிய
- நாய்க்கும் உன்னருள் நல்கிட வேண்டும்
- தீட்டு கின்றநல் புகழ்ஒற்றி அரசே
- திருச்சிற் றம்பலம் திகழ்ஒளி விளக்கே.
- இன்று நின்றவர் நாளைநின் றிலரே
- என்செய் வோம்இதற் கென்றுளம் பதைத்துச்
- சென்று நின்றுசோர் கின்றனன் சிவனே
- செய்வ தென்னைநான் சிறியருள் சிவனே
- நன்று நின்துணை நாடக மலர்த்தாள்
- நண்ண என்றுநீ நயந்தருள் வாயோ
- பொன்றல் இன்றிய எழில்ஒற்றி அரசே
- போற்றும் யாவர்க்கும் பொதுவில்நின் றவனே.
- மறுமை இம்மையும் வளம்பெற வேண்டேன்
- மருவும் நின்அருள் வாழ்வுற அடையாச்
- சிறுமை எண்ணியே திகைக்கின்றேன் சிவனே
- செய்வ தென்னைநான் சிறியருள் சிறியேன்
- வறுமை யாளனேன் வாட்டம்நீ அறியா
- வண்ணம் உண்டுகொல் மாணிக்க மலையே
- பொறுமை யாளனே ஒற்றிஅம் பரனே
- போற்றும் யாவர்க்கும் பொதுவில்நின் றவனே.
- உய்ய வல்லனேல் உன்திரு அருளாம்
- உடைமை வேண்டும்அவ் உடைமையைத் தேடல்
- செய்ய வல்லனோ அல்லகாண் சிவனே
- செய்வ தென்னைநான் சிறியருள் சிறியேன்
- பெய்ய வல்லநின் திருவருள் நோக்கம்
- பெறவி ழைந்தனன் பிறஒன்றும் விரும்பேன்
- பொய்யி தல்லஎம் ஒற்றியம் பரனே
- போற்றும் யாவர்க்கும் பொதுவில்நின் றவனே.
- வெல்லு கின்றனர் வினைப்புல வேடர்
- மெலிகின் றேன்இங்கு வீணினில் காலம்
- செல்லு கின்றன ஐயவோ சிவனே
- செய்வ தென்னைநான் சிறியருள் சிறியேன்
- சொல்லு கின்றனன் கேட்கின்றாய் கேட்டும்
- தூர நின்றனை ஈரமில் லார்போல்
- புல்லு கின்றசீர் ஒற்றியம் பரனே
- போற்றும் யாவர்க்கும் பொதுவில்நின் றவனே.
- ஏறு கின்றிலேன் இழிகிலேன் நடுநின்
- றெய்க்கின் றேன்பவம் என்னும்அக் குழியில்
- தேறு கின்றிலேன் சிக்கெனச் சிவனே
- செய்வ தென்னைநான் சிறியருள் சிறியேன்
- கூறு கின்றதென் கடவுள்நீ அறியாக்
- கொள்கை ஒன்றிலை குன்றவில் லோனே
- பூறு வங்கொளும் ஒற்றியம் பரனே
- போற்றும் யாவர்க்கும் பொதுவில்நின் றவனே.
- கந்த மும்மல ரும்என நின்றாய்
- கண்டு கொண்டிலேன் காமவாழ் வதனால்
- சிந்தை நொந்தயர் கின்றனன் சிவனே
- செய்வ தென்னைநான் சிறியருள் சிறியேன்
- எந்த நல்வழி யால்உனை அடைவேன்
- யாதுந் தேர்ந்திலேன் போதுபோ வதுகாண்
- புந்தி இன்பமே ஒற்றியம் பரனே
- போற்றும் யாவர்க்கும் பொதுவில்நின் றவனே.
- அல்லல் என்னைவிட் டகன்றிட ஒற்றி
- அடுத்து நிற்கவோ அன்றிநற் புலியூர்த்
- தில்லை மேவவோ அறிந்திலேன் சிவனே
- செய்வ தென்னைநான் சிறியருள் சிறியேன்
- ஒல்லை இங்குவா என்றருள் புரியா
- தொழிதி யேல்உனை உறுவதெவ் வணமோ
- புல்லர் மேவிடா ஒற்றியம் பரனே
- போற்றும் யாவர்க்கும் பொதுவில்நின் றவனே.
- ஞால வாழ்க்கையை நம்பிநின் றுழலும்
- நாய்க ளுக்கெலாம் நாயர சானேன்
- சீலம் ஒன்றிலேன் திகைக்கின்றேன் சிவனே
- செய்வ தென்னைநான் சிறியருள் சிறியேன்
- ஏல நின்அருள் ஈதியேல் உய்வேன்
- இல்லை யேல்எனக் கில்லைஉய் திறமே
- போல என்றுரை யாஒற்றி அரசே
- போற்றும் யாவர்க்கும் பொதுவில்நின் றவனே.
- சுத்த நெஞ்சருள் சேர்க்கினும் அலது
- சோம்பல் நெஞ்சருள் சேர்க்கினும் நினது
- சித்தம் என்னள வன்றது சிவனே
- செய்வ தென்னைநான் சிறியருள் சிறியேன்
- நித்தம் நின்னடி அன்றிஒன் றேத்தேன்
- நித்த னேஅது நீஅறி யாயோ
- புத்த ருந்தமிழ் ஒற்றியூர் அரசே
- போற்றும் யாவர்க்கும் பொதுவில்நின் றவனே.
- தத்து மத்திடைத் தயிரென வினையால்
- தளர்ந்து மூப்பினில் தண்டுகொண் டுழன்றே
- செத்து மீளவும் பிறப்பெனில் சிவனே
- செய்வ தென்னைநான் சிறியருள் சிறியேன்
- தொத்து வேண்டும்நின் திருவடிக் கெனையே
- துட்டன் என்றியேல் துணைபிறி தறியேன்
- புத்தை நீக்கிய ஒற்றியம் பரனே
- போற்றும் யாவர்க்கும் பொதுவில்நின் றவனே.
- பரிந்தி லேன்அருட் பாங்குறும் பொருட்டாய்ப்
- பந்த பாசத்தைப் பறித்திடும் வழியைத்
- தெரிந்தி லேன்திகைப் புண்டனன் சிவனே
- செய்வ தென்னைநான் சிறியருள் சிறியேன்
- விரிந்த நெஞ்சமும் குவிந்தில இன்னும்
- வெய்ய மாயையில் கையற வடைந்தே
- புரிந்து சார்கின்ற தொற்றியம் பரனே
- போற்றும் யாவர்க்கும் பொதுவில்நின் றவனே.
- அன்னையில் பெரிதும் இனியஎன் அரசே அம்பலத் தாடல்செய் அமுதே
- பொன்னைஒத் தொளிரும் புரிசடைக் கனியே போதமே ஒற்றிஎம் பொருளே
- உன்னைவிட் டயலார் உறவுகொண் டடையேன் உண்மைஎன் உள்ளம்நீ அறிவாய்
- என்னைவிட் டிடில்நான் என்செய்வேன் ஒதிபோல் இருக்கின்ற இவ்வெளி யேனே.
- எளியனேன் மையல் மனத்தினால் உழன்றேன் என்செய்வேன் என்செய்வேன்பொல்லாக்
- களியனேன் வாட்டம் கண்டனை இன்னும் கருணைசெய் திலைஅருட் கரும்பே
- அளியனே திருச்சிற் றம்பலத் தொளியே அருமருந் தேவட வனத்துத்
- தனியனே ஒற்றித் தலத்தமர் மணியே தயையிலி போல்இருந் தனையே.
- இருந்தனை எனது நெஞ்சினுள் எந்தாய் என்துயர் அறிந்திலை போலும்
- முருந்தனை முறுவல் மங்கையர் மலைநேர் முலைத்தலை உருண்டன னேனும்
- மருந்தனை யாய்உன் திருவடி மலரை மறந்திலேன் வழுத்துகின் றனன்காண்
- வருந்தனை யேல்என் றுரைத்திலை ஐயா வஞ்சகம் உனக்கும்உண் டேயோ.
- ஞான மென்பதின் உறுபொருள் அறியேன்
- ஞானி அல்லன்நான் ஆயினும் கடையேன்
- ஆன போதிலும் எனக்குநின் அருள்ஓர்
- அணுவில் பாதியே ஆயினும் அடைந்தால்
- வான மேவிய அமரரும் அயனும்
- மாலும் என்முனம் வலியிலர் அன்றே
- ஊனம் நீக்கிநல் அருள்தரும் பொருளே
- ஒற்றி மேவிய உலகுடை யோனே.
- அளிய நெஞ்சம்ஓர் அறிவுரு வாகும்
- அன்பர் தம்புடை அணுகிய அருள்போல்
- எளிய நெஞ்சினேற் கெய்திடா தேனும்
- எள்ளில் பாதிமட் டீந்தருள் வாயேல்
- களிய மாமயல் காடற எறிந்தாங்
- கார வேரினைக் களைந்துமெய்ப் போத
- ஒளிய வித்தினால் போகமும் விளைப்பேன்
- ஒற்றி மேவிய உலகுடை யோனே.
- நிற்பது போன்று நிலைபடா உடலை நேசம்வைத் தோம்புறும் பொருட்டாய்ப்
- பொற்பது தவிரும் புலையர்தம் மனைவாய்ப் புந்திநொந் தயர்ந்தழு திளைத்தேன்
- சொற்பதங் கடந்த நின்திரு வடிக்குத் தொண்டுசெய் நாளும்ஒன் றுளதோ
- கற்பது கற்றோர் புகழ்திரு வொற்றிக் காவல்கொள் கருணையங் கடலே.
- அளவிலா உலகத் தனந்தகோ டிகளாம் ஆருயிர்த் தொகைக்குளும் எனைப்போல்
- இளகிலா வஞ்ச நெஞ்சகப் பாவி ஏழைகள் உண்டுகொல் இலைகாண்
- தளர்விலா துனது திருவடி எனும்பொற் றாமரைக் கணியனா குவனோ
- களவிலார்க் கினிய ஒற்றிஎம் மருந்தே கனந்தரும் கருணையங் கடலே.
- புலைய மங்கையர் புணர்முலைக் குவட்டில்
- போந்து ருண்டெனைப் புலன்வழிப் படுத்திக்
- கலைய நின்றதிக் கல்லுறழ் மனந்தான்
- கடைய னேன்செயக் கடவதொன் றறியேன்
- விலையி லாஉயர் மாணிக்க மணியே
- வேத உச்சியில் விளங்கொளி விளக்கே
- சிலைவி லாக்கொளும் ஒற்றிஎம் மருந்தே
- செல்வ மேபர சிவபரம் பொருளே.
- தேர்ந்து தேடினும் தேவர்போல் தலைமைத்
- தேவர் இல்லைஅத் தெளிவு கொண் டடியேன்
- ஆர்ந்து நும்அடிக் கடிமைசெய் திடப்பேர்
- ஆசை வைத்துமை அடுத்தனன் அடிகேள்
- ஓர்ந்திங் கென்றனைத் தொழும்புகொள் ளீரேல்
- உய்கி லேன்இஃ தும்பதம் காண்க
- சோர்ந்தி டார்புகழ் ஒற்றியூர் உடையீர்
- தூய மால்விடைத் துவசத்தி னீரே.
- புதியன் என்றெனைப் போக்குதி ரோநீர்
- பூரு வத்தினும் பொன்னடிக் கடிமைப்
- பதிய வைத்தனன் ஆயினும் அந்தப்
- பழங்க ணக்கினைப் பார்ப்பதில் என்னே
- முதியன் அல்லன்யான் எப்பணி விடையும்
- முயன்று செய்குவேன் மூர்க்கனும் அல்லேன்
- துதிய தோங்கிய ஒற்றியூர் உடையீர்
- தூய மால்விடைத் துவசத்தி னீரே.
- ஒழுக்கம் இல்லவன் ஓர் இடத் தடிமைக்
- குதவு வான்கொல்என் றுன்னுகிற் பீரேல்
- புழுக்க நெஞ்சினேன் உம்முடைச் சமுகம்
- போந்து நிற்பனேல் புண்ணியக் கனிகள்
- பழுக்க நின்றிடும் குணத்தரு வாவேன்
- பார்த்த பேரும்அப் பரிசினர் ஆவர்
- தொழுக்கன் என்னையாள் வீர்ஒற்றி உடையீர்
- தூய மால்விடைத் துவசத்தி னீரே.
- முத்தி நேர்கிலாத் தேவர்கள் தமைநான்
- முந்து றேன்அவர் முற்பட வரினும்
- சுத்தி யாகிய சொல்லுடை அணுக்கத்
- தொண்டர் தம்முடன் சூழ்த்திடீர் எனினும்
- புத்தி சேர்புறத் தொண்டர்தம் முடனே
- பொருந்த வைக்கினும் போதும்மற் றதுவே
- துத்தி யார்பணி யீர்ஒற்றி உடையீர்
- தூய மால்விடைத் துவசத்தி னீரே.
- வலிய வந்திடு விருந்தினை ஒழிக்கார்
- வண்கை உள்ளவர் மற்றதுபோலக்
- கலிய நெஞ்சினேன் வஞ்சக வாழ்வில்
- கலங்கி ஐயநுங் கருணையாம் அமுதை
- மலிய உண்டிட வருகின்றேன் வருமுன்
- மாற்று கிற்பிரேல் வள்ளல்நீர் அன்றோ
- நலியல் நீக்கிடும் ஒற்றியம் பதியீர்
- ஞான நாடகம் நவிற்றுகின் றீரே.
- பொய்யன் ஆகிலும் போக்கிடம் அறியாப்
- புலையன் ஆண்டவன் புகழ்உரைப் பானேல்
- உய்ய வைப்பன்ஈ துண்மைஇவ் வுலகில்
- ஒதிய னேன்புகல் ஓரிடம் அறியேன்
- ஐய நும்மடிக் காட்செயல் உடையேன்
- ஆண்ட நீர்எனை அகற்றுதல் அழகோ
- நையல் அற்றிட அருள்ஒற்றி உடையீர்
- ஞான நாடகம் நவிற்றுகின் றீரே.
- உட்டிகழ்ந்த மேலவனே ஒற்றியூர் உத்தமனே
- மட்டிலங்கும் உன்றன் மலரடியைப் போற்றாது
- தட்டிலங்கு நெஞ்சத்தால் சஞ்சலித்துன் சந்நிதிக்கண்
- எட்டிநின்று பார்க்கும்இந்த ஏழைமுகம் பாராயோ.
- விதிஇழந்த வெண்தலைகொள் வித்தகனே வேதியனே
- மதிஇழந்தோர்க் கேலா வளர்ஒற்றி வானவனே
- நிதிஇழந்தோர் போல்அயர்ந்து நின்னுடைய வாழ்க்கைப்
- பதிவிரும்பி வாடும்இந்தப் பாவிமுகம் பாராயோ.
- யாது செய்குவன் போதுபோ கின்ற
- தண்ண லேஉம தன்பருக் கடியேன்
- கோது செய்யினும் பொறுத்தருள் புரியும்
- கொள்கை யீர்எனைக் குறுகிய குறும்பர்
- வாது செய்கின்றார் மனந்தளர் கின்றேன்
- வலியி லேன்செயும் வகைஒன்றும் அறியேன்
- மாதர் செய்பொழில் ஒற்றியூர் உடையீர்
- வண்கை யீர்என்கண் மணிஅனை யீரே.
- நின்போன்ற தெய்வம்ஒன் றின்றென வேதம் நிகழ்த்தவும்நின்
- பொன்போன்ற ஞானப் புதுமலர்த் தாள்துணைப் போற்றுகிலேன்
- என்போன்ற ஏழையர் யாண்டுளர் அம்பலத் தேநடஞ்செய்
- மின்போன்ற வேணிய னேஒற்றி மேவிய வேதியனே.
- ஈன்றவ னேஅன்பர் இன்னுயிர்க் கின்புறும் இன்னமுதம்
- போன்றவ னேசிவ ஞானிகள் உள்ளுறும் புண்ணியனே
- ஆன்றவ னேஎம துள்ளும் புறம்பும் அறிந்துநின்ற
- சான்றவ னேசிவ னேஒற்றி மேவிய சங்கரனே.
- சங்கர னேஅர னேபர னேநற் சராசரனே
- கங்கர னேமதிக் கண்ணிய னேநுதல் கண்ணினனே
- நங்கர மேவிய அங்கனி போன்றருள் நாயகனே
- செங்கர னேர்வண னேஒற்றி மேவிய சின்மயனே.
- புண்ணிய னேஎமைப் போல்வார்க்கும் இன்பப் பொருள்அளிக்கும்
- திண்ணிய னேநற் சிவஞான நெஞ்சில் தெளிந்தஅருள்
- அண்ணிய னேகங்கை ஆறமர் வேணியில் ஆர்ந்தமதிக்
- கண்ணிய னேபற் பலவாகும் அண்டங்கள் கண்டவனே.
- எப்பாலும் நின்அன்பர் எல்லாம் கூடி
- ஏத்துகின்றார் நின்பதத்தை ஏழை யேன்நான்
- வெப்பாய மடவியர்தம் கலவி வேட்டு
- விழுகின்றேன் கண்கெட்ட விலங்கே போல
- இப்பாரில் மயங்குகின்றேன் நன்மை ஒன்றும்
- எண்ணுகிலேன் முக்கணுடை இறைவா என்றன்
- அப்பாஎன் ஆருயிர்க்கோர் துணைவா வீணில்
- அலைகின்றேன் என்செய்கேன் அந்தோ அந்தோ.
- இன்புடையார் நின்அன்பர் எல்லாம் நின்சீர்
- இசைக்கின்றார் நான்ஒருவன் ஏழை இங்கே
- வன்புடையார் தமைக்கூடி அவமே நச்சு
- மாமரம்போல் நிற்கின்றேன் வஞ்ச வாழ்க்கைத்
- துன்புடையார் அனைவர்க்கும் தலைமை பூண்டேன்
- தூய்மைஎன்ப தறிந்திலேன் சூழ்ந்தோர்க் கெல்லாம்
- அன்புடையாய் எனைஉடையாய் விடையாய் வீணே
- அலைகின்றேன் என்செய்கேன் அந்தோ அந்தோ.
- பொய்யாத நின்அடியார் எல்லாம் நல்ல
- புண்ணியமே செய்துநினைப் போற்று கின்றார்
- நையாநின் றுலைகின்ற மனத்தால் இங்கே
- நான்ஒருவன் பெரும்பாவி நாயேன் தீமை
- செய்யாநின் றுழைக்கின்றேன் சிறிதும் நின்னைச்
- சிந்தியேன் வந்திக்கும் திறமும் நாடேன்
- ஐயாஎன் அப்பாஎன் அரசே வீணில்
- அலைகின்றேன் என்செய்கேன் அந்தோ அந்தோ.
- தெருளுடையார் நின்அன்பர் எல்லாம் நின்றாள்
- சிந்தையில்வைத் தானந்தம் தேக்கு கின்றார்
- மருளுடையேன் நான்ஒருவன் பாவி வஞ்ச
- மனத்தாலே இளைத்திளைத்து மயங்கு கின்றேன்
- இருளுடையேன் ஏர்பூட்டும் பகடு போல்இங்
- கில்உழப்பில் உழைக்கின்றேன் எல்லாம் வல்ல
- அருளுடையாய் ஆளுடையாய் உடையாய் வீணில்
- அலைகின்றேன் என்செய்கேன் அந்தோ அந்தோ.
- வண்மைபெறு நின்அன்பர் எல்லாம் நின்னை
- வந்தனைசெய் தானந்த வயத்தே நின்றார்
- பெண்மையுறும் மனத்தாலே திகைத்தேன் நின்சீர்
- பேசுகிலேன் கூசுகிலேன் பேதை நானோர்
- ஒண்மையிலேன் ஒழுக்கமிலேன் நன்மை என்ப
- தொன்றுமிலேன் ஓதியேபோல் உற்றேன் மிக்க
- அண்மையில்வந் தருள்புரிவோய் என்னே வீணில்
- அலைகின்றேன் என்செய்கேன் அந்தோ அந்தோ.
- உம்பர்தமக் கரிதாம்உன் பதத்தை அன்றி
- ஒன்றுமறி யார்உன்னை உற்றோர் எல்லாம்
- இம்பர்வினை யுடையேன்நான் ஒருவன் பாவி
- எட்டுணையும் நினைந்தறியேன் என்றும் எங்கும்
- வம்பவிழ்பூங் குழல்மடவார் மையல் ஒன்றே
- மனம்உடையேன் உழைத்திளைத்த மாடு போல்வேன்
- அம்பலத்தெம் அரசேஇவ் வாழ்க்கைத் துன்பில்
- அலைகின்றேன் என்செய்கேன் அந்தோ அந்தோ.
- கொலைஅறியாக் குணத்தோர்நின் அன்பர் எல்லாம்
- குணமேசெய் துன்னருள்தான் கூடு கின்றார்
- புலைஅறிவேன் நான்ஒருவன் பிழையே செய்து
- புலங்கெட்ட விலங்கேபோல் கலங்கு கின்றேன்
- நிலைஅறியேன் நெறியொன்றும் அறியேன் எங்கும்
- நினைஅன்றித் துணையொன்றும் அறியேன் சற்றும்
- அலைஅறியா அருட்கடல்நீ ஆள்க வீணில்
- அலைகின்றேன் என்செய்கேன் அந்தோ அந்தோ.
- வஞ்சமிலார் உள்ளம் மருவுகின்ற வான்சுடரே
- கஞ்சமுளான் போற்றும் கருணைப் பெருங்கடலே
- நஞ்சமுதாக் கொண்டருளும் நல்லவனே நின்அலதோர்
- தஞ்சமிலேன் துன்பச் சழக்கொழித்தால் ஆகாதோ.
- சேய்பிழையைத் தாய்அறிந்தும் சீறாள் பொறுப்பாள்இந்
- நாய்பிழையை நீபொறுக்க ஞாயமும்உண் டையாவே
- தேய்மதிபோல் நெஞ்சம் தியக்கம்உறச் சஞ்சலத்தால்
- வாய்அலறி வாடும்எனை வாஎன்றால் ஆகாதோ.
- கண்ணுள் மணிபோல் கருதுகின்ற நல்லோரை
- எண்ணும் கணமும்விடுத் தேகாத இன்னமுதே
- உண்ணும் உணவுக்கும் உடைக்கும்முயன் றோடுகின்ற
- மண்ணுலகத் தென்றன் மயக்கறுத்தால் ஆகாதோ.
- இப்பா ரிடைஉனையே ஏத்துகின்ற நாயேனை
- வெப்பார் உளத்தினர்போல் வெம்மைசெயும் வெம்பிணியை
- எப்பா லவர்க்கும் இறைவனாம் என்அருமை
- அப்பாநீ நீக்காயேல் ஆர்நீக்க வல்லாரே.
- இம்மா நிலத்தில் இடருழத்தல் போதாதே
- விம்மா அழுங்கஎன்றன் மெய்உடற்றும் வெம்பிணியைச்
- செம்மான் மழுக்கரங்கொள் செல்வச் சிவமேஎன்
- அம்மாநீ நீக்காயேல் ஆர்நீக்க வல்லாரே.
- கணத்தில் என்னைவிட் டேகுகின் றவன்போல்
- காட்டு கின்றனன் மீட்டும்வந் தடுத்துப்
- பணத்தும் மண்ணினும் பாவைய ரிடத்தும்
- பரவ நெஞ்சினை விரவுகின் றனன்காண்
- குணத்தி னில்கொடுந் தாமதன் எனும்இக்
- கொடிய வஞ்சகன் ஒடியமெய்ப் போதம்
- உணர்த்து வார்இலை என்செய்கேன் எளியேன்
- ஒற்றி ஓங்கிய உத்தமப் பொருளே.
- சென்ற நாளில்ஓர் இறைப்பொழு தேனும்
- சிந்தை ஓர்வகை தெளிந்ததன் றதுபோய்
- நின்ற நாளினும் நிற்கின்ற திலைகாண்
- நெடிய பாவியேன் நிகழ்த்துவ தென்னே
- என்றன் ஆருயிர்க் கொருபெருந் துணையாம்
- எந்தை யேஎனை எழுமையும் காத்த
- உன்ற னால்இன்னும் உவகைகொள் கின்றேன்
- ஒற்றி ஓங்கிய உத்தமப் பொருளே.
- அன்ப தென்பதைக் கனவினும் காணேன்
- ஆடு கின்றனன் அன்பரைப் போல
- வன்ப வத்தையும் மாய்த்திட நினைத்தேன்
- வஞ்ச நெஞ்சினை வசப்படுக் கில்லேன்
- துன்ப வாழ்க்கையில் சுழல்கின்றேன் நின்னைத்
- தொழுது வாழ்த்திநல் சுகம்பெறு வேனே
- ஒன்ப தாகிய உருவுடைப் பெரியோய்
- ஒற்றி ஓங்கிய உத்தமப் பொருளே.
- ஆண்ட துண்டுநீ என்றனை அடியேன்
- ஆக்கை ஒன்றுமே அசைமடற் பனைபோல்
- நீண்ட துண்டுமற் றுன்னடிக் கன்பே
- நீண்ட தில்லைவல் நெறிசெலும் ஒழுக்கம்
- பூண்ட துண்டுநின் புனிதநல் ஒழுக்கே
- பூண்ட தில்லைஎன் புன்மையை நோக்கி
- ஈண்ட வந்தரு ளாய்எனில் அந்தோ
- என்செய் கேன்நர கிடைஇடும் போதே.
- ஊழை யேமிக நொந்திடு வேனோ
- உளத்தை நோவனோ உலகிடை மயக்கும்
- பாழை யேபலன் தருவதென் றெண்ணிப்
- பாவி யேன்பெரும் படர்உழக் கின்றேன்
- மாழை யேர்திரு மேனிஎம் பெருமான்
- மனம்இ ரங்கிஎன் வல்வினை கெடவந்
- தேழை யேற்கரு ளாய்எனில் அந்தோ
- என்செய் கேன்நர கிடைஇடும் போதே.
- ஈன்று கொண்டஎன் தந்தையும் தாயும்
- யாவும் நீஎன எண்ணிய நாயேன்
- மான்று கொண்டஇவ் வஞ்சக வாழ்வின்
- மயக்கி னால்மிக வன்மைகள் செய்தேன்
- சான்று கொண்டது கண்டனை யேனும்
- தமிய னேன்மிசைத் தயவுகொண் டென்னை
- ஏன்று கொண்டரு ளாய்எனில் அந்தோ
- என்செய் கேன்நர கிடைஇடும் போதே.
- அம்மை அப்பன்என் ஆருயிர்த் துணைவன்
- அரசன் தேசிகன் அன்புடைத் தேவன்
- இம்மை யிற்பயன் அம்மையிற் பயன்மற்
- றியாவு நீஎன எண்ணிநிற் கின்றேன்
- செம்மை யிற்பெறும் அன்பருள் ளகஞ்சேர்
- செல்வ மேஎனைச் சேர்த்தரு ளாயேல்
- எம்மை யிற்பெறு வேன்சிறு நாயேன்
- என்செய் கேன்நர கிடைஇடும் போதே.
- தாய ராதியர் சலிப்புறு கிற்பார்
- தமரும் என்றனைத் தழுவுதல் ஒழிவார்
- நேய ராதியர் நேயம்விட் டகல்வார்
- நின்னை நம்பிஎன் நெஞ்சுவக் கின்றேன்
- தீய ராதியில் தீயன்என் றெனைநின்
- திருவு ளத்திடைச் சேர்த்திடா தொழித்தால்
- ஏயர் கோனுக்கன் றருளும்எம் பெருமான்
- என்செய் கேன்நர கிடைஇடும் போதே.
- முன்னை நான்செய்த வல்வினைச் சிமிழ்ப்பான்
- மோக வாரியின் மூழ்கின னேனும்
- அன்னை போலும்என் ஆருயிர்த் துணையாம்
- அப்ப நின்அருள் அம்பியை நம்பி
- தன்னை நேர்சிவ ஞானமென் கரையைச்
- சார்கு வேம்எனும் தருக்குடன் உழன்றேன்
- இன்னும் நின்அருள் ஈந்திலை அந்தோ
- என்செய் கேன்நர கிடைஇடும் போதே.
- உண்ணு கின்றதும் உறங்குகின் றதும்மேல்
- உடுத்து கின்றதும் உலவுகின் றதும்மால்
- நண்ணு கின்றதும் நங்கையர் வாழ்க்கை
- நாடு கின்றதும் நவையுடைத் தொழில்கள்
- பண்ணு கின்றதும் ஆனபின் உடலைப்
- பாடை மேலுறப் படுத்துகின் றதும்என்
- றெண்ணு கின்றதோ றுளம்பதைக் கின்றேன்
- என்செய் கேன்நர கிடைஇடும் போதே.
- கல்லை வெல்லவும் வல்லஎன் மனந்தான்
- கடவுள் நின்அடிக் கமலங்கள் நினைத்தல்
- இல்லை நல்லைநின் அருள்எனக் கதனால்
- இல்லை இல்லைநீ இரக்கம்இல் லாதான்
- அல்லை இல்லையால் அருள்தரா திருத்தல்
- அடிய னேன்அள வாயின்இங் கிடர்க்கே
- எல்லை இல்லைஎன் றுளம்பதைக் கின்றேன்
- என்செய் கேன்நர கிடைஇடும் போதே.
- பொங்கு மாயையின் புணர்ப்பினுக் குள்ளம்
- போக்கி நின்றதும் புலப்பகை வர்களால்
- இங்கு மால்அரி ஏற்றின்முன் கரிபோல்
- ஏங்கு கின்றதும் இடர்ப்பெருங் கடலில்
- தங்கும் ஆசையங் கராப்பிடித் தீர்க்கத்
- தவிப்பில் நின்றதும் தமியனேன் தனையும்
- எங்கும் ஆகிநின் றாய்அறிந் திலையோ
- என்செய் கேன்நர கிடைஇடும் போதே.
- அரக்கன் அல்லன்யான் அரக்கனே எனினும்
- அரக்க னுக்கும்முன் அருள்அளித் தனையே
- புரக்க என்னைநின் அருட்கடன் என்றே
- போற்று கின்றனன் புலையரிற் புலையேன்
- உரக்க இங்கிழைத் திடும்பிழை எல்லாம்
- உன்னல் ஐயநீ உன்னிஎன் அளவில்
- இரக்கம் நின்திரு உளத்திலை யானால்
- என்செய் கேன்நர கிடைஇடும் போதே.
- கண்ணி லான்சுடர் காணஉன் னுதல்போல்
- கருத்தி லேனும்நின் கருணையை விழைந்தேன்
- எண்ணி லாஇடை யூறடுத் ததனால்
- இளைக்கின் றேன்எனை ஏன்றுகொள் வதற்கென்
- உண்ணி லாவிய உயிர்க்குயிர் அனையாய்
- உன்னை ஒத்ததோர் முன்னவர் இலைகாண்
- தெண்ணி லாமுடிச் சிவபரம் பொருள்நின்
- சித்தம் அன்றியான் செய்வதொன் றிலையே.
- நாடுந் தாயினும் நல்லவன் நமது
- நாதன் என்றுனை நாடும்அப் பொழுதே
- வாடு நெஞ்சம் தளிர்க்கின்றேன் மற்றை
- வைகற் போதெலாம் வாடுகின் றனன்காண்
- பாடுந் தொண்டர்கள் இடர்ப்படில் தரியாப்
- பண்பென் மட்டும்நின் பால்இலை போலும்
- தேடும் பத்தர்தம் உளத்தமர் வோய்நின்
- சித்தம் அன்றியான் செய்வதொன் றிலையே.
- மருள்அ ளித்தெனை மயக்கிஇவ் உலகில்
- வருத்து கின்றனை மற்றெனக் குன்றன்
- அருள்அ ளிக்கிலை ஆயினும் நினக்கே
- அடிமை யாக்கிலை ஆயினும் வேற்றுப்
- பொருள்அ ளிக்கிலை ஆயினும் ஒருநின்
- பொன்மு கத்தைஓர் போது கண் டிடவே
- தெருள்அ ளித்திடில் போதும் இங் குனது
- சித்தம் அன்றியான் செய்வதொன் றிலையே.
- வானும் வையமும் அளிக்கினும் உன்பால்
- மனம்வைத் தோங்குவர் வள்ளல்நின் அடியார்
- நானும் அவ்வகை உலகியல் ஒழுக்கில்
- நாடி நின்னருள் நலம்பெற விழைதல்
- கூனும் ஓர்முடக் கண்ணிலி வானில்
- குலவும் ஒண்சுடர் குறித்திடல் போலும்
- தேனும் கைக்கும்நின் அருளுண்டேல் உண்டுன்
- சித்தம் அன்றியான் செய்வதொன் றிலையே.
- அருள்பவன் நின்னை அல்லதை இங்கும்
- அங்கும்மற் றெங்கும்இன் றதுபோல்
- மருள்பவன் என்னை அல்லதை மண்ணும்
- வானமும் தேடினும் இன்றே
- இருள்பவம் உடையேன் என்செய்கேன் நின்தாள்
- இணைதுணை எனநினைந் துற்றேன்
- மருள்பவத் தொடும்என் துயர்அறுத் தாள்வாய்
- வாழிய அருட்பெருந் துறையே.
- கேளனந் தான்ஒரு போதுண் டனைமனக் கேதம்அற
- நீளனம் தேடு முடியான் எதுநினக் கீந்ததென்றே
- வேளனம் போல்நடை மின்னாரும் மைந்தரும் வேடிக்கையாய்
- ஏளனம் செய்குவர் நீஅரு ளாவிடில் என்அப்பனே.
- அப்பாநின் பொன்னருள் என்மேல் தயைசெய் தளித்திலையேல்
- துப்பா னவும்ஒரு போதுதுவ் வாது சுழன்றனையே
- இப்பாரில் ஈசன் திருவருள் நீபெற்ற தெங்ஙனமோ
- செப்பாய் எனவரிப் பார்சிரிப் பார்இச் செகத்தவரே.
- தீதுசெய் தேற்கருள் செய்வான்நின் சித்தம் திரும்பிலையேல்
- தாதுசெய் தேகத்து ணாஒரு போது தவிர்ந்தநினக்
- கேதுசெய் தான்சிவன் என்றே உலகர் இழிவுரைத்தால்
- யாதுசெய் வேன்தெய்வ மேஎளி யேன்உயிர்க் கின்னமுதே.
- மையல் வாழ்க்கையில் நாள்தொறும் அடியேன்
- வருந்தி நெஞ்சகம் மாழ்குவ தெல்லாம்
- ஐய ஐயவோ கண்டிடா தவர்போல்
- அடம்பி டிப்பதுன் அருளினுக் கழகோ
- செய்ய மேல்ஒன்றும் அறிந்திலன் சிவனே
- தில்லை மன்றிடைத் தென்முக நோக்கி
- உய்ய வைத்ததாள் நம்பிநிற் கின்றேன்
- உனைஅ லால்எனை உடையவர் எவரே.
- அன்னை அப்பனும் நீஎன மகிழ்ந்தே
- அகங்கு ளிர்ந்துநான் ஆதரித் திருந்தேன்
- என்னை இப்படி இடர்கொள விடுத்தால்
- என்செய் கேன் இதை யாரொடு புகல்கேன்
- பொன்னை ஒத்தநின் அடித்துணை மலரைப்
- போற்று வார்க்குநீ புரிகுவ திதுவோ
- உன்னை எப்படி ஆயினும் மறவேன்
- உனைஅ லால்எனை உடையவர் எவரே.
- அடிய னேன்மிசை ஆண்டவ நினக்கோர்
- அன்பி ருந்ததென் றகங்கரித் திருந்தேன்
- கொடிய னேன்படும் இடர்முழு தறிந்தும்
- கூலி யாளனைப் போல்எனை நினைத்தே
- நெடிய இத்துணைப் போதும்ஓர் சிறிதும்
- நெஞ்சி ரங்கிலை சஞ்சலத் தறிவும்
- ஒடிய நின்றனன் என்செய்கேன் சிவனே
- உனைஅ லால்எனை உடையவர் எவரே.
- அருள்பழுத் தோங்கும் ஆனந்தத் தருவே அற்புத அமலநித் தியமே
- தெருள்பழுத் தோங்கும் சித்தர்தம் உரிமைச் செல்வமே அருணையந் தேவே
- இருள்பழுத் தோங்கும் நெஞ்சினேன் எனினும் என்பிழை பொறுத்துநின் கோயில்
- பொருள்பழுத்தோங்கும் சந்நிதி முன்னர்ப்போந்துனைப் போற்றுமாறருளே.
- கருணையங் கடலே கண்கள்மூன் றுடைய கடவுளே கமலன்மால் அறியா
- அருணைஎங் கோவே பரசிவா னந்த அமுதமே அற்புத நிலையே
- இருள்நிலம் புகுதா தெனைஎடுத் தாண்ட இன்பமே அன்பர்தம் அன்பே
- பொருள்நலம் பெறநின் சந்நிதிக் கெளியேன் போந்துனைப் போற்றும்வா றருளே.
- ஏன்றுகொள் வான்நம தின்னுயிர் போல்முக்கண் எந்தைஎன்றே
- சான்றுகொள் வாய்நினை நம்பிநின் றேன்இத் தமிஅடியேன்
- மான்றுகொள் வான்வரும் துன்பங்கள் நீக்க மதித்திலையேல்
- ஞான்றுகொள் வேன்அன்றி யாதுசெய் வேன்இந்த நானிலத்தே.
- நிலத்தே சிறுவர்செய் குற்றங்கள் யாவும் நினைத்தறவோர்
- சலத்தே உளத்தை விடார்என்பர் ஆதலின் தாதையென்றே
- குலத்தேவர் போற்றும் குணக்குன்ற மேஎங் குலதெய்வமே
- புலத்தே இழிதகை யேன்பிழை யாவும் பொறுத்தருளே.
- அருளார் அமுதப் பெருங்கட லேதில்லை அம்பலத்தில்
- பொருளார் நடம்புரி புண்ணிய னேநினைப் போற்றுகிலேன்
- இருளார் மனத்தின் இடர்உழந் தேன்இனி யாதுசெய்கேன்
- மருளார் மலக்குடில் மாய்ந்திடில் உன்அருள் வாய்ப்பதற்கே.
- உண்டோஎன் போல்துய ரால்அலை கின்றவர் உத்தமநீ
- கண்டோர் சிறிதும் இரங்குகி லாய்இக் கடையவனேன்
- பண்டோர் துணைஅறி யேன்நின்னை யன்றிநிற் பற்றிநின்றேன்
- எண்டோள் மணிமிடற் றெந்தாய் கருணை இருங்கடலே.
- கடலே அனைய துயர்மிகை யால்உட் கலங்கும்என்னை
- விடலே அருளன் றெடுத்தாளல் வேண்டும்என் விண்ணப்பமீ
- தடல்ஏ றுவந்த அருட்கட லேஅணி அம்பலத்துள்
- உடலே மருவும் உயிர்போல் நிறைஒற்றி யூரப்பனே.
- பொன்னை வளர்ப்பாரைப் போற்றாமல் எம்பெருமான்
- உன்னைமதித் துன்னுறும்என் உள்ளம் அறிந்திருந்தும்
- அன்னையினும் சால அருள்வோய் அருளாயேல்
- என்னை முகம்பார்த் தெனக்கார் இரங்குவரே.
- திருவும் சீரும்சி றப்பும்தி றலும்சற்
- குருவும் கல்வியும் குற்றமில் கேள்வியும்
- பொருவில் அன்னையும் போக்கறு தந்தையும்
- தரும வெள்விடைச் சாமிநின் நாமமே.
- மின்னொப் பாகி விளங்கும்வி ரிசடை
- என்னப் பாஎனக் கின்னருள் ஈந்துநின்
- பொன்னொப் பாந்துணைப் பூம்பதம் போற்றியே
- உன்னப் பாங்கின்உ யர்நெறி உய்க்கவே.
- குடிகொள் மலஞ்சூழ் நவவாயிற் கூட்டைக் காத்துக் குணமிலியாய்ப்
- படிகொள் நடையில் பரதவிக்கும் பாவி யேனைப் பரிந்தருளிப்
- பொடிகொள் வெள்ளைப் பூச்சணிந்த பொன்னே உன்னைப் போற்றிஒற்றிக்
- கடிகொள் நகர்க்கு வரச்செய்தாய் கைம்மா றறியேன் கடையேனே.
- உண்டு வறிய ஒதிபோல உடம்பை வளர்த்தூன் ஊதியமே
- கொண்டு காக்கைக் கிரையாகக் கொடுக்க நினைக்கும் கொடியன் எனை
- விண்டு அறியா நின்புகழை விரும்பி ஒற்றி யூரில்நினைக்
- கண்டு வணங்கச் செய்ததற்கோர் கைம்மா றறியேன் கடையேனே.
- நாய்க்கும் எனக்கும் ஒப்பாரி நாடி அதற்கு விருந்திடுவான்
- வாய்க்கும் ஒதிபோல் பொய்உடலை வளர்க்க நினைக்கும் வஞ்சன்எனை
- ஆய்க்கும் இனிய அப்பாஉன் ஒற்றி யூரை அடைந்திருளைக்
- காய்க்கும் வண்ணம் செய்ததற்கோர் கைம்மா றறியேன் கடையேனே.
- பொள்ளற் குடத்தின் புலால்உடம்பைப் போற்றி வளர்த்துப் புலன் இழந்தே
- துள்ளற் கெழுந்த மனத்துடனே துள்ளி அலைந்த துட்டன் எனை
- உள்ளற் கறிவு தந்துன்றன் ஒற்றி யூர்க்கு வந்துவினைக்
- கள்ளப் பகைநீக் கிடச்செய்தாய் கைம்மா றறியேன் கடையேனே.
- கூட்டும் எலும்பால் தசையதனால் கோலும் பொல்லாக் கூரைதனை
- நாட்டும் பரம வீடெனவே நண்ணி மகிழ்ந்த நாயேனை
- ஊட்டுந் தாய்போல் உவந்துன்றன் ஒற்றி யூர்வந் துறநினைவு
- காட்டுங் கருணை செய்ததற்கோர் கைம்மா றறியேன் கடையேனே.
- ஊணத் துணர்ந்த பழுமரம்போல் ஒதிபோல் துன்பைத் தாங்குகின்ற
- தூணத் தலம்போல் சோரிமிகும் தோலை வளர்த்த சுணங்கன் எனை
- மாணப் பரிவால் அருட்சிந்தா மணியே உன்றன் ஒற்றிநகர்
- காணப் பணித்த அருளினுக்கோர் கைம்மா றறியேன் கடையேனே.
- புண்ணும் வழும்பும் புலால்நீரும் புழுவும் பொதிந்த பொதிபோல
- நண்ணுங் கொடிய நடைமனையை நான்என் றுளறும் நாயேனை
- உண்ணும் அமுதே நீஅமர்ந்த ஒற்றி யூர்கண் டென்மனமும்
- கண்ணுங் களிக்கச் செய்ததற்கோர் கைம்மா றறியேன் கடையேனே.
- திருவண்ண நதியும்வளை ஒருவண்ண மதியும்வளர்
- செவ்வண்ணம் நண்ணுசடையும்
- தெருள்வண்ண நுதல்விழியும் அருள்வண்ண வதனமும்
- திகழ்வண்ண வெண்ணகையும்ஓர்
- மருவண்ண மணிகுவளை மலர்வண்ண மிடறும்மலை
- மகள்வண்ண மருவும்இடமும்
- மன்வண்ண மிகுதுணைப் பொன்வண்ண அடிமலரும்
- மாணிக்க வண்ணவடிவும்
- இருவண்ண மாம்என்மன தொருவண்ணம் ஆகியே
- இடையறா தெண்ணும்வண்ணம்
- எவ்வண்ணம் அவ்வண்ணம் இவ்வண்ணம் என்றிவண்
- இயம்பல்உன் கருணைவண்ணம்
- கருவண்ணம் அறஉளம் பெருவண்ணம் உறநின்று
- கடல்வண்ணன் எண்ணும்அமுதே
- கனகஅம் பலநாத கருணையங் கணபோத
- கமலகுஞ் சிதபாதனே.
- எண்ணுறுவி ருப்பாதி வல்விலங் கினமெலாம்
- இடைவிடா துழலஒளிஓர்
- எள்அளவும் இன்றிஅஞ் ஞானஇருள் மூடிட
- இருண்டுயிர் மருண்டுமாழ்க
- நண்ணுமன மாயையாம் காட்டைக் கடந்துநின்
- ஞானஅருள் நாட்டைஅடையும்
- நாள்எந்த நாள்அந்த நாள்இந்த நாள்என்று
- நாயினேற் கருள்செய்கண்டாய்
- விண்ணுறுசு டர்க்கெலாம் சுடர்அளித் தொருபெரு
- வெளிக்குள்வளர் கின்றசுடரே
- வித்தொன்றும் இன்றியே விளைவெலாம் தருகின்ற
- விஞ்ஞான மழைசெய்முகிலே
- கண்ணுறுநு தற்பெருங் கடவுளே மன்றினில்
- கருணைநடம் இடுதெய்வமே
- கனகஅம் பலநாத கருணையங் கணபோத
- கமலகுஞ் சிதபாதனே.
- பூதநெறி யாதிவரு நாதநெறி வரையுமாப்
- புகலுமூ வுலகுநீத்துப்
- புரையுற்ற மூடம்எனும் இருள்நிலம்அ கன்றுமேல்
- போய்அருள்ஒ ளித்துணையினால்
- வேதநெறி புகல்சகல கேவலம்இ லாதபர
- வெளிகண்டு கொண்டுகண்ட
- விளைவின்றி நான்இன்றி வெளிஇன்றி வெளியாய்
- விளங்குநாள் என்றருளுவாய்
- வாதநெறி நடவாத போதநெறி யாளர்நிறை
- மதிநெறிஉ லாவும்மதியே
- மணிமிடற் றரசேஎம் வாழ்வின்முத லேஅரு
- மருந்தேபெ ருந்தெய்வமே
- காதநெறி மணம்வீசு கனிதருபொ ழிற்குலவு
- கடிமதிற் றில்லைநகர்வாழ்
- கனகஅம் பலநாத கருணையங் கணபோத
- கமலகுஞ் சிதபாதனே.
- கூர்கொண்ட வாள்கொண்டு கொலைகொண்ட வேட்டுவக்
- குடிகொண்ட சேரிநடுவில்
- குவைகொண்ட ஒருசெல்வன் அருமைகொண் டீன்றிடு
- குலங்கொண்ட சிறுவன்ஒருவன்
- நேர்கொண்டு சென்றவர்கள் கைகொண் டுறக்கண்கள்
- நீர்கொண்டு வாடல்எனவே
- நிலைகொண்ட நீஅருட் கலைகொண் டளித்தயான்
- நெறிகொண்ட குறிதவறியே
- போர்கொண்ட பொறிமுதல் புலைகொண்ட தத்துவப்
- புரைகொண்ட மறவர்குடியாம்
- பொய்கொண்ட மெய்என்னும் மைகொண்ட சேரியில்
- போந்துநின் றவர்அலைக்கக்
- கார்கொண்ட இடிஒலிக் கண்கொண்ட பார்ப்பில்
- கலங்கினேன் அருள்புரிகுவாய்
- கனகஅம் பலநாத கருணையங் கணபோத
- கமலகுஞ் சிதபாதனே.
- படமெடுத் தாடுமொரு பாம்பாக என்மனம்
- பாம்பாட்டி யாகமாயைப்
- பார்த்துக் களித்துதவு பரிசுடையர் விடயம்
- படர்ந்தபிர பஞ்சமாகத்
- திடமடுத் துறுபாம்பின் ஆட்டமது கண்டஞ்சு
- சிறுவன்யா னாகநின்றேன்
- தீரத்து ரந்தந்த அச்சந்த விர்த்திடு
- திறத்தன்நீ ஆகல்வேண்டும்
- விடமடுத் தணிகொண்ட மணிகண்ட னேவிமல
- விஞ்ஞான மாம்அகண்ட
- வீடளித் தருள்கருணை வெற்பனே அற்புத
- விராட்டுருவ வேதார்த்தனே
- கடமடுத் திடுகளிற் றுரிகொண்ட ணிந்தமெய்க்
- கடவுளே சடைகொள்அரசே
- கனகஅம் பலநாத கருணையங் கணபோத
- கமலகுஞ் சிதபாதனே.
- எழுவகைப் பிறவிகளுள் எப்பிறவி எய்துகினும்
- எய்துகபி றப்பில்இனிநான்
- எய்தாமை எய்துகினும் எய்திடுக இருமையினும்
- இன்பம்எய் தினும்எய்துக
- வழுவகைத் துன்பமே வந்திடினும் வருகமிகு
- வாழ்வுவந் திடினும்வருக
- வறுமைவரு கினும்வருக மதிவரினும் வருகஅவ
- மதிவரினும் வருகஉயர்வோ
- டிழிவகைத் துலகின்மற் றெதுவரினும் வருகஅல
- தெதுபோ கினும்போகநின்
- இணையடிகள் மறவாத மனம்ஒன்று மாத்திரம்
- எனக்கடைதல் வேண்டும்அரசே
- கழிவகைப் பவரோக நீக்கும்நல் லருள்எனும்
- கதிமருந் துதவுநிதியே
- கனகஅம் பலநாத கருணையங் கணபோத
- கமலகுஞ் சிதபாதனே.
- பற்றுவது பந்தம்அப் பற்றறுதல் வீடிஃது
- பரமவே தார்த்தம்எனவே
- பண்புளோர் நண்பினொடு பகருவது கேட்டும்என்
- பாவிமனம் விடயநடையே
- எற்றுவது செய்யாமல் எழுவதொடு விழுவதும்
- இறங்குவதும் ஏறுவதும்வீண்
- எண்ணுவதும் நண்ணுவதும் இப்புவன போகங்கள்
- யாவினும் சென்றுசென்றே
- சுற்றுவதும் ஆகிஓர் சற்றுமறி வில்லாது
- சுழல்கின்ற தென்செய்குவேன்
- தூயநின் திருவருளின் அன்றிஇவ் வேழைஅச்
- சுழல்மனம்அ டக்கவருமோ
- கற்றுவழு வற்றவர் கருத்தமர் கருத்தனே
- கண்ணுதற் கடவுள்மணியே
- கனகஅம் பலநாத கருணையங் கணபோத
- கமலகுஞ் சிதபாதனே.
- எளியனேன் சிறியன்யான் செய்பிழைகள் சிறியவோ
- எழுகடலி னும்பெரியவே
- என்செய்கேன் என்செய்கேன் இனிஆயி னும்செயா
- தெந்தைநினை ஏத்தஎன்றால்
- வளியின்வான் சுழல்கின்ற பஞ்சாக நெஞ்சால்
- மயங்குகின் றேன்அடியனேன்
- மனம்எனது வசமாக நினதுவசம் நானாக
- வந்தறிவு தந்தருளுவாய்
- ஒளியின்ஒளி யேநாத வெளியின் வெளியேவிடய
- உருவின்உரு வேஉருவினாம்
- உயிரின்உயி ரேஉயர்கொள் உணர்வின்உணர் வேஉணர்வின்
- உறவினுற வேஎம்இறையே
- களியின்நிறை வேஅளிகொள் கருணைநிதி யேமணிகொள்
- கண்டஎண் தோள்கடவுளே
- கனகஅம் பலநாத கருணையங் கணபோத
- கமலகுஞ் சிதபாதனே.
- சந்ததம்எ னக்குமகிழ் தந்தைநீ உண்டுநின்
- தன்னிடத் தேமவல்லி
- தாயுண்டு நின்அடியர் என்னும்நல் தமர்உண்டு
- சாந்தம்எனும் நேயர்உண்டு
- புந்திகொள்நி ராசையாம் மனைவிஉண் டறிவெனும்
- புதல்வன்உண் டிரவுபகலும்
- போனவிட முண்டருட் பொருளுமுண் டானந்த
- போகபோக் கியமும்உண்டு
- வந்தனைசெய் நீறெனும் கவசம்உண் டக்கமா
- மணியும்உண் டஞ்செழுத்தாம்
- மந்திரப் படைஉண்டு சிவகதிஎ னும்பெரிய
- வாழ்வுண்டு தாழ்வும்உண்டோ
- கந்தமிகு கொன்றையொடு கங்கைவளர் செஞ்சடைக்
- கடவுளே கருணைமலையே
- கனகஅம் பலநாத கருணையங் கணபோத
- கமலகுஞ் சிதபாதனே.
- நான்முகனும் மாலும்அடி முடியும்அறி வரியபர
- நாதமிசை ஓங்குமலையே
- ஞானமய மானஒரு வானநடு ஆனந்த
- நடனமிடு கின்றஒளியே
- மான்முகம்வி டாதுழலும் எனையும்உயர் நெறிமருவ
- வைத்தவண்வ ளர்த்தபதியே
- மறைமுடிவில் நிறைபரப் பிரமமே ஆகம
- மதிக்கும்முடி வுற்றசிவமே
- ஊண்முகச் செயல்விடுத் துண்முகப் பார்வையின்
- உறுந்தவர்பெ றுஞ்செல்வமே
- ஒழியாத உவகையே அழியாத இன்பமே
- ஒன்றிரண் டற்றநிலையே
- கான்முகக் கடகளிற் றுரிகொண்ட கடவுளே
- கண்கொண்ட நுதல்அண்ணலே
- கனகஅம் பலநாத கருணையங் கணபோத
- கமலகுஞ் சிதபாதனே.
- அருள்தரல் வேண்டும் போற்றிஎன் அரசே
- அடியனேன் மனத்தகத் தெழுந்த
- இருள்கெடல் வேண்டும் போற்றிஎந் தாயே
- ஏழையேன் நின்றனைப் பாடும்
- தெருள்உறல் வேண்டும் போற்றிஎன் அறிவே
- சிந்தைநைந் துலகிடை மயங்கும்
- மருள்அறல் வேண்டும் போற்றிஎன் குருவே
- மதிநதி வளர்சடை மணியே.
- மணிமிடற் றமுதே போற்றிஎன் தன்னை
- வாழ்விக்க வேண்டுவல் போற்றி
- அணிமதி முடியோய் போற்றிஇவ் வேழைக்
- கருளமு தருளுக போற்றி
- பணிஅணி புயத்தோய் போற்றிநின் சீரே
- பாடுதல் வேண்டும்நான் போற்றி
- தணிவில்பே ரொளியே போற்றிஎன் தன்னைத்
- தாங்குக போற்றிநின் பதமே.
- நின்பதம் பாடல் வேண்டும்நான் போற்றி
- நீறுபூத் தொளிர்குளிர் நெருப்பே
- நின்புகழ் கேட்டல் வேண்டும்நான் போற்றி
- நெற்றியங் கண்கொளும் நிறைவே
- நின்வச மாதல் வேண்டும்நான் போற்றி
- நெடியமால் புகழ்தனி நிலையே
- நின்பணி புரிதல் வேண்டும்நான் போற்றி
- நெடுஞ்சடை முடித்தயா நிதியே.
- நிதிதரு நிறைவே போற்றிஎன் உயிர்க்கோர்
- நெறிதரு நிமலமே போற்றி
- மதிமுடிக் கனியே போற்றிஎன் தன்னை
- வாழ்வித்த வள்ளலே போற்றி
- விதிமுதற் கிறையே போற்றிமெய்ஞ் ஞான
- வியன்நெறி விளக்கமே போற்றி
- பதிபசு பதியே போற்றி நின்பாதம்
- பாடஎற் கருளுக போற்றி.
- போற்றிஎன் உயிர்க்கோர் இன்பமே அன்பர்
- புரிதவக் காட்சியே போற்றி
- போற்றிஎன் அன்பாம் தெய்வமே சைவம்
- புகல்சிவ போகமே போற்றி
- போற்றிஎன் பெரிதாஞ் செல்வமே கருணைப்
- பூரண வெள்ளமே போற்றி
- போற்றிஎன் வாழ்வுக் கொருபெரு முதலே
- போற்றிநின் சேவடிப் போதே.
- போதஆ னந்த போகமே என்னைப்
- புறம்பிட நினைத்திடேல் போற்றி
- சீதவான் பிறைசேர் செஞ்சடை யாய்என்
- சிறுமைதீர்த் தருளுக போற்றி
- பேதம்ஒன் றில்லா அருட்கட லேஎன்
- பிழைஎலாம் பொறுத்தருள் போற்றி
- வேதமெய்ப் பொருளே போற்றிநின் அல்லால்
- வேறெனக் கிலைஅருள் போற்றி.
- போற்றுவார் உள்ளம் புகுந்தொளிர் ஒளியே
- போற்றிநின் பூம்பதம் போற்றி
- ஆற்றுவார் சடைஎன் அப்பனே போற்றி
- அமலநின் அடிமலர் போற்றி
- ஏற்றுவார் கொடிகொள் எந்தையே போற்றி
- இறைவநின் இருங்கழல் போற்றி
- சாற்றுமா றரிய பெருமையே போற்றி
- தலைவநின் தாட்டுணை போற்றி.
- துணைமுலை மடந்தை எம்பெரு மாட்டி
- துணைவநின் துணையடி போற்றி
- புணைஎன இடரின் கடலினின் றேற்றும்
- புனிதநின் பொன்னடி போற்றி
- இணையில்பே ரின்ப அமுதருள் கருணை
- இறைவநின் இணையடி போற்றி
- கணைஎனக் கண்ணன் தனைக்கொளும் ஒருமுக்
- கண்ணநின் கழலடி போற்றி.
- அடியனேன் பிழைகள் பொறுத்தருள் போற்றி
- அயல்எனை விட்டிடேல் போற்றி
- கொடியனேற் கின்பந் தந்தருள் போற்றி
- குணப்பெருங் குன்றமே போற்றி
- நெடியஎன் துன்பந் துடைத்தருள் போற்றி
- நினைஅலால் பிறிதிலேன் போற்றி
- படிமிசைப் பிறர்பால் செலுத்திடேல் எங்கள்
- பரமநின் அடைக்கலம் நானே.
- நான்செயும் பிழைகள் பலவும்நீ பொறுத்து
- நலந்தரல் வேண்டுவன் போற்றி
- ஏன்செய்தாய் என்பார் இல்லைமற் றெனக்குன்
- இன்னருள் நோக்கஞ்செய் போற்றி
- ஊன்செய்நா வால்உன் ஐந்தெழுத் தெளியேன்
- ஓதநீ உவந்தருள் போற்றி
- மான்செயும் நெடுங்கண் மலைமகள் இடங்கொள்
- வள்ளலே போற்றிநின் அருளே.
- தண்ணார் மதிபோல் சீதளவெண் தரளக் கவிகைத் தனிநிழற்கீழ்க்
- கண்ணார் செல்வச் செருக்கினர்தம் களிப்பில் சிறிய கடைநாயேன்
- பெண்ணார் பாகப் பெருந்தகைதன் பெரிய கருணைக் குரியம்என்றே
- எண்ணா நின்று களிக்கின்றேன் ஆரூர் எந்தாய் இரங்காயே.
- தெரியத் தெரியும் தெரிவுடையார் சிவாநு பவத்தில் சிறக்கின்றார்
- பிரியப் பிரியும் பெரும்பாவி அடியேன் பிழையில் பிழைக்கின்றேன்
- துரியப் பொருளே அணிஆரூர்ச் சோதி மணிநீ தூயஅருள்
- புரியப் பெறுவேன் எனில்அவர்போல் யானும் சுகத்திற் பொலிவேனே.
- பொலிவேன் கருணை புரிந்தாயேல் போதா னந்தக் கடல்ஆடி
- மலிவேன் இன்ப மயமாவேன் ஆரூர் மணிநீ வழங்காயேல்
- மெலிவேன் துன்பக் கடல்மூழ்கி மேவி எடுப்பார் இல்லாமல்
- நலிவேன் அந்தோ அந்தோநின் நல்ல கருணைக் கழகன்றே.
- இந்நாள் அடியேன் பிழைத்தபிழை எண்ணி இரங்காய் எனில்அந்தோ
- அந்நாள் அடிமை கொண்டனையே பிழையா தொன்றும் அறிந்திலையோ
- பொன்னார் கருணைக் கடல்இன்று புதிதோ பிறர்பால் போயிற்றோ
- என்நா யகனே திருஆரூர் எந்தாய் உள்ளம் இரங்கிலையே.
- புன்கண் அகற்றும் மெய்யடியார் போற்றும் பொன்னம் பலநடுவே
- வன்கண் அறியார் திருநடஞ்செய் வரதர் அமுதத் திருமுகத்தை
- முன்கண் உலகில் சிறியேன்செய் முழுமா தவத்தால் கண்டேன்நான்
- என்கண் அனையார் அவர்முகத்தை இன்னும் ஒருகால் காண்பேனோ.
- அருளே வடிவாய் அம்பலத்தே ஆடும் பெருமான் அடிகள்தமைத்
- தெருளே வடிவாம் அடியவர்போல் சிறியேன் கண்டேன் சீர்உற்றேன்
- மருளே வடிவேன் ஆதலினால் மறந்தே பிரிந்தே மதிகெட்டேன்
- இருளேர் மனத்தேன் அவர்தமைநான் இன்னும் ஒருகால் காண்பேனோ.
- பேதைப் பருவத் தெனைவலியப் பிடித்தாட் கொண்ட பெருமானே
- போதைக் கழிப்பான் வீண்புரியும் புலையேன் பிழையைப் பொறுக்கிலையேல்
- வாதைப் படும்என் உயிரைஉன்றன் மலர்த்தாள் முன்னர் மடிவித்தே
- ஓதைக் கடல்சூழ் உலகத்தே பழிசூழ் விப்பேன் உரைத்தேனே.
- எண்ணி நலிவேன் நின்பாதம் எந்நாள் அடைவோம் எனஎன்பால்
- நண்ணி நலிவைத் தவிராயேல் என்செய் திடுவேன் நாயகனே
- கண்ணி நலியப் படும்பறவைக் கால்போல் மனக்கால் கட்டுண்ணப்
- பண்ணி நலஞ்சேர் திருக்கூட்டம் புகுத எனினும் பரிந்தருளே.
- காணேன் நினது திருவருளைக் கண்டார் தமது கழல்தலைமேல்
- பூணேன் உலகச் சிறுநடையில் போந்து பொய்யே புகன்றந்தோ
- வீணே சுழன்று மெலிகின்றேன் என்னே இன்னல் மிகச்சுமக்கும்
- தூணே எனஇங் கெனைவிதித்தாய் எந்தாய் யாது சூழ்வேனே.
- புலையே புரியும் மனம்போன போக்கே அல்லால் புண்ணியநல்
- நிலையே அறியேன் சிறியேனுக் கருளல் அழகோ நிறைந்தகுண
- மலையே மணியே மருந்தேஎன் வாழ்வே எல்லாம் வல்லோனே
- கலையே கருதும் கழலுடையாய் அருளா மையும்நின் கடன்அன்றே.
- கடந்தாழ் கயம்போல் செருக்கிமயற் கடலில் அழுத்திக் கடுவினையேன்
- மடந்தாழ் மனத்தோ டுலைகின்றேன் கரைகண் டேறும் வகைஅறியேன்
- தொடர்ந்தார் எடுப்பார் எனையெடுக்கும் துணைநின் மலர்த்தாள் துணைகண்டாய்
- அடர்ந்தார் தமக்கும் அருள்கின்றோய் ஆணை ஆணை அடியேனே.
- செறியாத நெஞ்சக வஞ்சக னேன்இச் சிறுதலத்தே
- அறியா தறிந்தவன் போற்சில செய்திடல் ஐயநின்தாள்
- குறியா தரித்தல தாணைமற் றில்லைஎங் கொற்றவனே
- முறியா தருள்செய்தி யோதெரி யேன்எந்தை முன்னியதே.
- தீதொன்று மேகண் டறிந்ததல் லால்பலன் சேரநலம்
- யாதொன்றும் நான்கண் டறியேன் அறிந்தவன் என்னஇங்கே
- போதொன்று போக்குகின் றேன்பிழை யாவும் பொறுத்தருள்வாய்
- மாதொன்று பாகத் துணைஅன்றி நற்றுணை மற்றிலையே.
- பள்ளத்தி லேசெலும் நீர்போல்என் உள்ளம் பரப்பதலால்
- எள்ளத்தி லேசிறி தாயினும் நான்செல்வ தில்லைஎந்தாய்
- கள்ளத்தி லேசொல்லு கின்றேன் அலநின் கழலிணைஎன்
- உள்ளத்தி லேநின்ற ஆங்கவை காண்க உடையவனே.
- என்னைஅறியாப்பருவத் தாண்டுகொண்ட
- என்குருவே எனக்குரிய இன்ப மேஎன்
- தன்னைஇன்று விடத்துணிந்தாய் போலும் அந்தோ
- தகுமோநின் பெருங்கருணைத் தகவுக் கெந்தாய்
- உன்னைஅலா தொருவர்தம்பால் செல்லேன் என்னை
- உடையானே என்னுள்ளத் துள்ளே நின்று
- முன்னைவினைப் பயன்ஊட்ட நினைப்பிக் கின்றாய்
- முடிப்பிக்கத் துணிந்திலையேல் மொழிவ தென்னே.
- உள்ளமறிந் துதவுவன்நம் உடையான் எல்லாம்
- உடையான்மற் றொருகுறைஇங் குண்டோ என்னக்
- கள்ளமனத் தேன்அந்தோ களித்தி ருந்தேன்
- கைவிடுவார் போல்இருந்தாய் கருணைக் குன்றே
- எள்ளலுறப் படுவேன்இங் கேது செய்வேன்
- எங்கெழுகேன் யார்க்குரைப்பேன் இன்னும் உன்றன்
- வள்ளலருள் திறநோக்கி நிற்கின் றேன்என்
- மனத்துயர்போம் வகைஅருள மதித்தி டாயே.
- மண்முகத்தில் பல்விடய வாதனையால் மனனேநீ வருந்தி அந்தோ
- புண்முகத்தில் சுவைவிரும்பும் எறும்பெனவா ளாநாளைப் போக்கு கின்றாய்
- சண்முகத்தெம் பெருமானை ஐங்கரனை நடராஜத் தம்பி ரானை
- உண்முகத்தில் கருதிஅநு பவமயமாய் இருக்கிலைநின் உணர்ச்சி என்னே.
- தாதாதா தாதாதா தாக்குறைக்கென் செய்குதும்யாம்
- தாதாதா என்றுலகில் தான்அலைந்தோம் - போதாதா
- நந்தா மணியே நமச்சிவா யப்பொருளே
- எந்தாய் எனப்புகழ வே.1
- பொய்கண்டாய் காமப் புதுமயக்கிற் போய்உழலக்
- கைகண்டாய் என்னபலன் கண்டாயே - மெய்கண்ட
- பொன்னே அனையார்பால் போய்வணங்கக் கற்றிலையோ
- என்னேநின் தன்மைமன மே.
- ஞாலத் தார்தமைப் போலத் தாம்இங்கு
- நண்ணு வார்நின்னை எண்ணு வார்மிகு
- சீலத்தார் சிவமே எவையும்எனத் தேர்ந்தனரால்
- சாலத் தான்கொடுஞ் சாலத் தாலத்தைத்
- தாவி நான்பெரும் பாவி ஆயினன்
- ஏலத்தார் குழலா ளிடத்தாய்எனை எண்ணுதியோ.
- வல்லி ஆனந்த வல்லி சேர்மண
- வாள னேஅரு ளாள னேமலை
- வில்லியாய் நகைத்தே புரம்வீழ்த்த விடையவனே
- புல்லி யான்புலைப் போகம் வேட்டுநின்
- பொன்ன டித்துணைப் போகம் போக்கினேன்
- இல்லிஆர் கடம்போ லிருந்தேன்எனை எண்ணுதியோ.
- மறைமுடி விளக்கே போற்றி மாணிக்க மலையே போற்றி
- கறைமணி கண்ட போற்றி கண்ணுதற் கரும்பே போற்றி
- பிறைமுடிச் சடைகொண் டோங்கும் பேரருட் குன்றே போற்றி
- சிறைதவிர்த் தெனையாட் கொண்ட சிவசிவ போற்றி போற்றி.
- நிதியைநினைந் துனைமறந்த மதியைநினைந் தழுகேனோ நிமலா னந்தக்
- கதியைஇகழ்ந் திருள்விழைந்த விதியைநினைந் தழுகேனோ கண்போல் வாய்ந்த
- பதியைஉனைப் பாடாத பாட்டைநினைந் தழுகேனோ படிற்று நெஞ்சச்
- சதியைநினைந் தழுகேனோ யாதுகுறித் தழுகேன்இத் தமிய னேனே.
- எண்கடந்த உயிர்கள்தொறும் ஒளியாய் மேவி
- இருந்தருளும் பெருவாழ்வே இறையே நின்றன்
- விண்கடந்த பெரும்பதத்தை விரும்பேன் தூய்மை
- விரும்புகிலேன் நின்அருளை விழைந்தி லேன்நான்
- பெண்கடந்த மயல்எனும்ஓர் முருட்டுப் பேயாற்
- பிடிஉண்டேன் அடிஉண்ட பிஞ்சு போன்றேன்
- கண்கடந்த குருட்டூமர் கதைபோல் நின்சீர்
- கண்டுரைப்பல் என்கேனோ கடைய னேனே.
- மின்னைப் போல்இடை மெல்இய லார்என்றே
- விடத்தைப் போல்வரும் வெம்மனப் பேய்களைப்
- பொன்னைப் போல்மிகப் போற்றி இடைநடுப்
- புழையி லேவிரல் போதப்பு குத்திஈத்
- தன்னைப் போல்முடை நாற்றச்ச லத்தையே
- சந்த னச்சலந் தான்எனக் கொள்கின்றேன்
- என்னைப் போல்வது நாய்க்குலம் தன்னிலும்
- இல்லை அல்ல தெவற்றினும் இல்லையே.
- கள்உருகும் மலர்மணம்போல் கலந்தெங்கும் நிறைந்தோய்நின் கருணைக் கந்தோ
- முள்உருகும் வலியபராய் முருடுருகும் உருகாத முறைசேர் கல்லும்
- வள்உருகும் மலைஉருகும் மண்உருகும் மரம்உருகும் மதியி லேன்றன்
- உள்உருகும் வகையிலைஎன் செய்கேன்நான் ஏன்பிறந்தேன் ஒதிய னேனே.
- மாற்றரிய பசும்பொன்னே மணியேஎன் கண்ணேகண் மணியே யார்க்குந்
- தோற்றரிய சுயஞ்சுடரே ஆனந்தச் செழுந்தேனே சோதி யேநீ
- போற்றரிய சிறியேனைப் புறம்விடினும் வேற்றவர்பாற் போகேன் வேதம்
- தேற்றரிய திருவடிக்கண் பழிவிளைப்பேன் நின்ஆணைச் சிறிய னேனே.
- கஞ்சமலர்த் தவிசிருந்த நான்முகனும் நெடுமாலும் கருதிப் போற்ற
- அஞ்சநடை அம்மைகண்டு களிக்கப்பொன் அம்பலத்தில் ஆடு கின்ற
- எஞ்சல்இலாப் பரம்பொருளே என்குருவே ஏழையினே னிடத்து நீயும்
- வஞ்சம்நினைத் தனையாயில் என்செய்வேன் என்செய்வேன் மதியி லேனே.
- வெள்ளங்கொண் டோங்கும் விரிசடை யாய்மிகு மேட்டினின்றும்
- பள்ளங்கொண் டோங்கும் புனல்போல்நின் தண்ணருட் பண்புநல்லோர்
- உள்ளங்கொண் டோங்கும் அவமே பருத்த ஒதிஅனையேன்
- கள்ளங்கொண் டோங்கும் மனத்துறு மோஉறிற் காண்குவனே.
- ஐயாமுக் கண்கொண்ட ஆரமு தேஅரு ளார்பவள
- மெய்யாமெய்ஞ் ஞான விளக்கே கருணை விளங்கவைத்த
- மையார் மிடற்று மணியேஅன் றென்னை மகிழ்ந்ததந்தோ
- பொய்யாஎன் செய்வல் அருளா யெனில்எங்குப் போதுவனே.
- வெட்டை மாட்டி விடாப்பெருந் துன்பநோய்
- விளைவ தெண்ணிலர் வேண்டிச்சென் றேதொழுக்
- கட்டை மாட்டிக் கொள்வார்என வேண்டிப்பெண்
- கட்டை மாட்டிக் கொள்வார்தங் கழுத்திலே
- துட்டை மாட்டின் கழுத்தடிக் கட்டையோ
- துணிக்கும் கட்டைய தாம்இந்தக் கட்டைதான்
- எட்டை மாட்டி உயிர்விடக் கட்டைமேல்
- ஏறும் போதும் இழுக்கின்ற கட்டையே.
- புண்ணைக் கட்டிக்கொண் டேஅதன் மேல்ஒரு
- புடவை கட்டிப் புதுமைகள் காட்டிடும்
- பெண்ணைக் கட்டிக்கொள் வார்இவர் கொள்ளிவாய்ப்
- பேயைக் கட்டிக்கொண் டாலும் பிழைப்பர்காண்
- மண்ணைக் கட்டிக்கொண் டேஅழு கின்றஇம்
- மடையப் பிள்ளைகள் வாழ்வினை நோக்குங்கால்
- கண்ணைக் கட்டிக்கொண் டூர்வழி போம்கிழக்
- கழுதை வாழ்வில் கடைஎனல் ஆகுமே.
- கட்டளைக் கலிப்பா
- மெய்விளக்கே விளக்கல்லால் வேறுவிளக் கில்லைஎன்றார் மேலோர் நானும்
- பொய்விளக்கே விளக்கெனஉட் பொங்கிவழி கின்றேன்ஓர் புதுமை அன்றே
- செய்விளக்கும் புகழுடைய சென்னநகர் நண்பர்களே செப்பக் கேளீர்
- நெய்விளக்கே போன்றொருதண்ணீர்விளக்கும் எரிந்ததுசந் நிதியின் முன்னே.
- 185. கருங்குழியில் பெருமான் திருவறையில் தண்ரால் விளக்கெரிந்த அற்புதத்தைக்குறிக்கும் இப்பாடல் பெருமான் சென்னை நண்பர்களுக்கு எழுதிய திருமுகமொன்றன்பாற்பட்டது போலும். பெருமான் கையெழுத்திலுள்ள ஏட்டுச் சுவடியொன்றிலும்காணப்படுவதாக ஆ. பா. குறிக்கிறார். தொ. வே. இதனையும் ' மருவாணைப்பெண்ணாக்கி' என்னும் பாடலையும் இரண்டாந் திருமுறையில் சேர்த்துப்பதிப்பித்துள்ளார்.
- பனகஅணைத் திருநெடுமால் அயன்போற்றப் புலவரெலாம் பரவ ஓங்கும்
- கனகமணி அம்பலத்தே பெரியமருந் தொன்றிருக்கக் கண்டேன் கண்டேன்
- அனகநடத் ததுசச்சி தானந்த வடிவதுபே ரருள்வாய்ந் துள்ள
- தெனகமமர்ந் திருப்பதெல்லாம் வல்லதுபேர் நடராசன் என்ப தம்மா.
- அருள்அ ளித்துமெய் யன்பர் தம்மைஉள்
- ளங்கை நெல்லிபோல் ஆக்கு கின்றதும்
- பொருள்அ ளித்துநான் மறையின் அந்தமே
- புகலு கின்றதோர் புகழ்அ ளிப்பதும்
- வெருள்அ ளித்திடா விமல ஞானவான்
- வெளியி லேவெளி விரவி நிற்பதாம்
- தெருள்அ ளிப்பதும் இருள்கெ டுப்பதும்
- சிவசி தம்பரம் சிவசி தம்பரம்.
- பெத்த முஞ்சதா முத்தி யும்பெரும்
- பேத மாயதோர் போத வாதமும்
- சுத்த முந்தெறா வித்த முந்தரும்
- சொரூப இன்பமே துய்க்கும் வாழ்க்கையும்
- நித்த முந்தெரிந் துற்ற யோகர்தம்
- நிமல மாகிமெய்ந் நிறைவு கொண்டசிற்
- சித்த முஞ்செலாப் பரம ராசியம்
- சிவசி தம்பரம் சிவசி தம்பரம்.
- கற்பவைஎ லாங்கற்றுள் உணர்பவைஎ லாமனக்
- கரிசற உணர்ந்து கேட்டுக்
- காண்பவைஎ லாங்கண்டு செய்பவைஎ லாஞ்செய்து
- கருநெறி அகன்ற பெரியோர்
- பொற்பவைஎ லாஞ்சென்று புகல்பவைஎ லாங்கொண்டு
- புரிபவை எலாம்பு ரிந்துன்
- புகழவைஎ லாம்புகழ்ந் துறுமவைஎ லாம்உறும்
- போதவை எலாம்அ ருளுவாய்
- நிற்பவைஎ லாம்நிற்ப அசைபவைஎ லாம்அசைய
- நிறைபவை எலாஞ்செய் நிலையே
- நினைபவைஎ லாம்நெகிழ நெறிஅவைஎ லாம்ஓங்கும்
- நித்தியா னந்த வடிவே
- அற்புடைய அடியர்புகழ் தில்லையம் பதிமருவும்
- அண்ணலார் மகிழும் மணியே
- அகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி
- வானந்த வல்லி உமையே.
- இக்கணம்இ ருந்தஇம் மெய்யென்ற பொய்க்கூரை
- இனிவரு கணப்போ திலே
- இடியாதி ருக்குமோ இடியுமோ என்செய்கோம்
- என்செய்கோம் இடியும் எனில்யாம்
- தெக்கணம் நடக்கவரும் அக்கணம் பொல்லாத
- தீக்கணம் இருப்ப தென்றே
- சிந்தைநைந் தயராத வண்ணம்நல் அருள்தந்த
- திகழ் பரம சிவசத்தியே
- எக்கணமும் ஏத்தும்ஒரு முக்கணி பரம்பரை
- இமாசல குமாரி விமலை
- இறைவிபை ரவிஅமலை எனமறைகள் ஏத்திட
- இருந்த ருள்தருந் தேவியே
- அக்கணுதல் எம்பிரான் தில்லையம் பதிமருவும்
- அண்ணலார் மகிழும் மணியே
- அகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி
- வானந்த வல்லி உமையே.
- பொய்யாத மொழியும்மயல் செய்யாத செயலும்வீண்
- போகாத நாளும் விடயம்
- புரியாத மனமும்உட் பிரியாத சாந்தமும்
- புந்திதள ராத நிலையும்
- எய்யாத வாழ்வும்வே றெண்ணாத நிறைவும்நினை
- என்றும்மற வாத நெறியும்
- இறவாத தகவும்மேற் பிறவாத கதியும்இவ்
- ஏழையேற் கருள்செய் கண்டாய்
- கொய்யாது குவியாது குமையாது மணம்வீசு
- கோமளத் தெய்வ மலரே
- கோவாத முத்தமே குறையாத மதியமே
- கோடாத மணிவி ளக்கே
- ஐயான னம்கொண்ட தில்லையம் பதிமருவும்
- அண்ணலார் மகிழும் மணியே
- அகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி
- வானந்த வல்லி உமையே.
- சூரிட்ட நடையில்என் போரிட்ட மனதைநான்
- சொல்லிட்ட முடன்அ ணைத்துத்
- துன்றிட்ட மோனம்எனும் நன்றிட்ட அமுதுண்டு
- சும்மா இருத்தி என்றால்
- காரிட்டி தற்குமுன் யாரிட்ட சாபமோ
- கண்டிலேன் அம்மம் மஓர்
- கணமேனும் நில்லாது பொல்லாது புவியில்
- கறங்கெ னச்சுழல் கின்றதே
- தாரிட்ட நீஅருள் சீரிட்டி டாய்எனில்
- தாழ்பிறவி தன்னில் அதுதான்
- தன்னைவீழ்த் துவதன்றி என்னையும் வீழ்த்தும்இத்
- தமிய னேன்என் செய்குவேன்
- ஆறிட்ட சடையாளர் தில்லையம் பதிமருவும்
- அண்ணலார் மகிழும் மணியே
- அகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி
- வானந்த வல்லி உமையே.
- கலைபயின்ற உளத்தினிக்குங் கரும்பினைமுக் கனியைஅருட் கடலை ஓங்கும்
- நிலைபயின்ற முனிவரரும் தொழுதேத்த நான்முகனார் நீண்ட நாவின்
- தலைபயின்ற மறைபயின்று மூவுலகும் காக்கின்ற தாயை வாகைச்
- சிலைபயின்ற நுதலாளைக் கலைவாணி அம்மையைநாம் சிந்திப் போமே.
- புத்தமு தாகு மருந்து - பார்த்த
- போதே பிணிகளைப் போக்கு மருந்து
- பத்த ரருந்து மருந்து - அநு
- பானமுந் தானாம் பரம மருந்து. - நல்ல
- சேதப்ப டாத மருந்து - உண்டால்
- தேன்போ லினிக்குந் தெவிட்டா மருந்து
- பேதப்ப டாத மருந்து - மலைப்
- பெண்ணிடங் கொண்ட பெரிய மருந்து. - நல்ல
- பார்க்கப் பசிபோ மருந்து - தன்னைப்
- பாராத வர்களைச் சேரா மருந்து
- கூர்க்கத் தெரிந்த மருந்து - அநு
- கூல மருந்தென்று கொண்ட மருந்து. - நல்ல
- போதநடு வூடிருந்த வெண்ணிலா வே - மலப்
- போதமற வேண்டுகின்றேன் வெண்ணிலா வே.
- இழிந்தாலு நம்மையிங்கே யேற்றுவா ரென்றடைந்தால்
- ஏற்றுவார் போலேபின்னு மிழியவைப் பாருக்குப்
- பழந்தான் நழுவிமெல்லப் பாலில் விழுந்ததென்னப்
- பசப்பிப் பசப்பியன்பர் பண்டம் பறிப்பவர்க்குதெண்ட
- பாட்டுக்காசைப் பட்டுமுன்னம் பரவைதன் வாயிலிற்போய்ப்
- பண்புரைத்துத் தூதனென்றே பட்டங்கட்டிக் கொண்டவர்க்கு
- வீட்டுக்காசைப் படுவாரை வீட்டைவிட்டுத் துரத்தியே
- வேட்டாண்டி யாயுலகில் ஓட்டாண்டி யாக்குவார்க்கு தெண்ட
- மின்இணைச் சடில விடங்கன்என் கின்றாள் விடைக்கொடி விமலன்என் கின்றாள்
- பொன்இணை மலர்த்தாள் புனிதன்என் கின்றாள் பொதுவிலே நடிப்பன்என் கின்றாள்
- என்இணை விழிகள் அவன்திரு அழகை என்றுகொல் காண்பதென் கின்றாள்
- துன்இணை முலைகள் விம்முற இடைபோல் துவள்கின்றாள் பசியபொற் றொடியே.
- கருங்களிற் றுரிபோர்த் தம்பலத் தாடும் கருணைஎங் கடவுள்என் கின்றாள்
- பெருங்களி துளும்ப வடவனத் தோங்கும் பித்தரில் பித்தன்என் கின்றாள்
- ஒருங்களி மிழற்றும் குழலினார் என்போல் உறுவரோ அவனைஎன்கின்றாள்
- தருங்களி உண்டாள் போல்கின்றாள் நாணும் தவிர்க்கின்றாள் என்அருந் தவளே.
- சீத்தமணி அம்பலத்தான் என்பிராண நாதன்
- சிவபெருமான் எம்பெருமான் செல்வநட ராஜன்
- வாய்த்தஎன்னை அறியாத இளம்பருவந் தனிலே
- மகிழ்ந்துவந்து மாலையிட்டான் மறித்தும்முகம் பாரான்
- ஆய்த்தகலை கற்றுணர்ந்த அணங்கனையார் தமக்குள்
- ஆர்செய்த போதனையோ ஆனாலும் இதுகேள்
- காய்த்தமரம் வளையாத கணக்கும்உண்டோ அவன்றன்
- கணக்கறிந்தும் விடுவேனோ கண்டாய்என் தோழீ.
- தெருளமுதத் தனியோகர் சிந்தையிலும் ஞானச்
- செல்வர்அறி விடத்தும்நடஞ் செய்யும்நட ராஜன்
- அருளமுதம் அளிப்பன்என்றே அன்றுமணம் புணர்ந்தான்
- அளித்தறியான் அணுத்துணையும் அனுபவித்தும் அறியேன்
- மருளுடையான் அல்லன்ஒரு வஞ்சகனும் அல்லன்
- மனம்இரக்கம் மிகஉடையான் வல்வினையேன் அளவில்
- இருளுடையார் போலிருக்கும் இயல்பென்னை அவன்றன்
- இயல்பறிந்தும் விடுவேனோ இனித்தான்என் தோழீ.
- சின்மயமாம் பொதுவினிலே தன்மயமாய் நின்று
- திருநடஞ்செய் பெருங்ருணைச் செல்வநட ராஜன்
- என்மயம்நான் அறியாத இளம்பருவந் தனிலே
- என்னைமணம் புரிந்தனன்ஈ தெல்லாரும் அறிவார்
- இன்மயம்இல் லாதவர்போல் இன்றுமணந் தருளான்
- இறைஅளவும் பிழைபுரிந்தேன் இல்லைஅவன் இதயம்
- கன்மயமோ அன்றுசுவைக் கனிமயமே என்னும்
- கணக்கறிந்தும் விடுவேனோ கண்டாய்என் தோழீ.
- ஊன்மறந்த உயிரகத்தே ஒளிநிறைந்த ஒருவன்
- உலகமெலாம் உடையவன்என் னுடையநட ராஜன்
- பான்மறந்த சிறியஇனம் பருவமதின் மாலைப்
- பரிந்தணிந்தான் தெரிந்ததனிப் பருவமிதிற் பரியான்
- தான்மறந்தான் எனினும்இங்கு நான்மறக்க மாட்டேன்
- தவத்தேறி அவத்திழியச் சம்மதமும் வருமோ
- கோன்மறந்த குடியேபோல் மிடியேன்நான் அவன்றன்
- குணம்அறிந்தும் விடுவேனோ கூறாய்என் தோழீ.
- வெறுத்துரைத்தேன் பிழைகளெலாம் பொறுத்தருளல் வேண்டும்
- விளங்கறிவுக் கறிவாகி மெய்ப்பொதுவில் நடிப்போய்
- கறுத்துரைத்தார் தமக்கும்அருள் கனிந்துரைக்கும் பெரிய
- கருணைநெடுங் கடலேமுக் கண்ணோங்கு கரும்பே
- மறுத்துரைப்ப தெவன்அருள்நீ வழங்குகினும் அன்றி
- மறுத்திடினும் உன்னையலால் மற்றொருசார் பறியேன்
- செறுத்துரைத்த உரைகளெலாம் திருவருளே என்று
- சிந்திப்ப தல்லாமல் செய்வகைஒன் றிலனே.
- மிகுத்துரைத்தேன் பிழைகளெலாம் சகித்தருளல் வேண்டும்
- மெய்யறிவின் புருவாகி வியன்பொதுவில் நடிப்போய்
- தொகுத்துரைத்த மறைகளும்பின் விரித்துரைத்தும் காணாத்
- துரியநடு வேஇருந்த பெரியபரம் பொருளே
- பகுத்துரைத்த பயன்உரைக்கோர் பொருளாகி விளங்கும்
- பரஞ்சுடரே பரம்பரனே பசுபதியே அடியேன்
- வகுத்துரைப்ப தெவன்அருள்நீ வழங்குகினும் அன்றி
- மறுத்திடினும் உன்னையலால் மற்றொருசார் பிலனே.
- சினந்துரைத்தேன் பிழைகளெலாம் மனம்பொறுத்தல் வேண்டும்
- தீனதயா நிதியேமெய்ஞ் ஞானசபா பதியே
- புனைந்துரைப்பார் அகத்தொன்றும் புறத்தொன்றும் நினைத்தே
- பொய்யுலகர் ஆங்கவர்போல் புனைந்துரைத்தேன் அலன்நான்
- இனந்திருந்தி எனையாட்கொண் டென்னுள்அமர்ந் தெனைத்தான்
- எவ்வுலகும் தொழநிலைமேல் ஏற்றியசற் குருவே
- கனந்தருசிற் சுகஅமுதம் களித்தளித்த நிறைவே
- கருணைநடத் தரசேஎன் கண்ணிலங்கு மணியே.
- நாயகரே உமதுவசம் நான்இருக்கின் றதுபோல்
- நாடியதத் துவத்தோழி நங்கையர்என் வசத்தே
- மேயவர்ஆ காமையினால் அவர்மேல்அங் கெழுந்த
- வெகுளியினால் சிலபுகன்றேன் வேறுநினைத் தறியேன்
- தூயவரே வெறுப்புவரில் விதிவெறுக்க என்றார்
- சூழவிதித் தாரைவெறுத் திடுதல்அவர் துணிவே
- தீயவர்ஆ யினும்குற்றம் குறியாது புகன்றால்
- தீமொழிஅன் றெனத்தேவர் செப்பியதும் உளதே.
- சீதப் புனல்சூழ் வயல்ஒற்றித் தியாகப் பெருமான் திருமாட
- வீதிப் பவனி வரக்கண்டேன் மென்பூந் துகில்வீழ்ந் ததுகாணேன்
- போதிற் றெனவும் உணர்ந்திலேன் பொன்ன னார்பின் போதுகிலேன்
- ஈதற் புதமே என்னடிநான் இச்சை மயமாய் நின்றதுவே.
- தென்னார் சோலைத் திருஒற்றித் தியாகப் பெருமான் பவனிவரப்
- பொன்னார் வீதி தனிற்பார்த்தேன் புளகம் போர்த்தேன் மயல்பூத்தேன்
- மின்னார் பலர்க்கும் முன்னாக மேவி அவன்றன் எழில்வேட்டு
- என்னார் அணங்கே என்னடிநான் இச்சை மயமாய் நின்றதுவே.
- திங்கள் உலவும் பொழில்ஒற்றித் தியாகப் பெருமான் திருவீதி
- அங்கண் களிக்கப் பவனிவந்தான் அதுபோய்க் கண்டேன் தாயரெலாம்
- தங்கள் குலத்துக் கடாதென்றார் தம்மை விடுத்தேன் தனியாகி
- எங்கண் அனையாய் என்னடிநான் இச்சை மயமாய் நின்றதுவே.
- திருமாற் கரியான் ஒற்றிநகர்த் தியாகப் பெருமான் பவனிவரப்
- பெருமான் மனமு நானும்முன்னும் பின்னும் சென்று கண்டேமால்
- பொருமா நின்றேன் தாயரெலாம் போஎன் றீர்க்கப் போதுகிலேன்
- இருண்மாண் குழலாய் என்னடிநான் இச்சைமயமாய் நின்றதுவே.
- மன்னுங் கருணை வழிவிழியார் மதுர மொழியார் ஒற்றிநகர்த்
- துன்னும் அவர்தந் திருமுன்போய்ச் சுகங்காள் நின்று சொல்லீரோ
- மின்னுந் தேவர் திருமுடிமேல் விளங்குஞ் சடையைக் கண்டவள்தன்
- பின்னுஞ் சடையை அவிழ்த்தொன்றும் பேசாள் எம்மைப் பிரிந்தென்றே.
- வடிக்குந் தமிழ்த்தீந் தேன்என்ன வசனம் புகல்வார் ஒற்றிதனில்
- நடிக்குந் தியாகர் திருமுன்போய் நாராய் நின்று நவிற்றாயோ
- பிடிக்குங் கிடையா நடைஉடைய பெண்க ளெல்லாம் பிச்சிஎன
- நொடிக்கும் படிக்கு மிகுங்காம நோயால் வருந்தி நோவதுவே.
- மாய மொழியார்க் கறிவரியார் வண்கை உடையார் மறைமணக்கும்
- தூய மொழியார் ஒற்றியிற்போய்ச் சுகங்காள் நின்று சொல்லீரோ
- நேய மொழியாள் பந்தாடாள் நில்லாள் வாச நீராடாள்
- ஏய மொழியாள் பாலனமும் ஏலாள் உம்மை எண்ணிஎன்றே.
- ஒல்லார் புரமூன் றெரிசெய்தார் ஒற்றி அமர்ந்தார் எல்லார்க்கும்
- நல்லார் வல்லார் அவர்முன்போய் நாராய் நின்று நவிற்றுதியே
- அல்லார் குழலாள் கண்ராம் ஆற்றில் அலைந்தாள் அணங்கனையார்
- பல்லார் சூழ்ந்து பழிதூற்றப் படுத்தாள் விடுத்தாள் பாயல்என்றே.
- ஓவா நிலையார் பொற்சிலையார் ஒற்றி நகரார் உண்மைசொலும்
- தூவாய் மொழியார் அவர்முன்போய்ச் சுகங்காள் நின்று சொல்லீரோ
- பூவார் முடியாள் பூமுடியாள் போவாள் வருவாள் பொருந்துகிலாள்
- ஆவா என்பாள் மகளிரொடும் ஆடாள் தேடாள் அனம்என்றே.
- வட்ட மதிபோல் அழகொழுகும் வதன விடங்கர் ஒற்றிதனில்
- நட்ட நவில்வார் அவர்முன்போய் நாராய் நின்று நவிற்றாயோ
- கட்ட அவிழ்ந்த குழல்முடியாள் கடுகி விழுந்த கலைபுனையாள்
- முட்ட விலங்கு முலையினையும் மூடாள் மதனை முனிந்தென்றே.
- வேலை விடத்தை மிடற்றணிந்த வெண்ற் றழகர் விண்ணளவும்
- சோலை மருவும் ஒற்றியிற்போய்ச் சுகங்காள் அவர்முன் சொல்லீரோ
- மாலை மனத்தாள் கற்பகப்பூ மாலை தரினும் வாங்குகிலாள்
- காலை அறியாள் பகல்அறியாள் கங்குல் அறியாள் கனிந்தென்றே.
- மாண்காத் தளிர்க்கும் ஒற்றியினார் வான மகளிர் மங்கலப்பொன்
- நாண்காத் தளித்தார் அவர்முன்போய் நாராய் நின்று நவிற்றுதியோ
- பூண்காத் தளியாள் புலம்பிநின்றாள் புரண்டாள் அயன்மால் ஆதியராம்
- சேண்காத் தளிப்போர் தேற்றுகினும் தேறாள் மனது திறன்என்றே.
- தேசு பூத்த வடிவழகர் திருவாழ் ஒற்றித் தேவர்புலித்
- தூசு பூத்த கீளுடையார் சுகங்காள் அவர்முன் சொல்லீரோ
- மாசு பூத்த மணிபோல வருந்தா நின்றாள் மங்கையர்வாய்
- ஏசு பூத்த அலர்க்கொடியாய் இளைத்தாள் உம்மை எண்ணிஎன்றே.
- தோடார் குழையார் ஒற்றியினார் தூயர்க் கலது சுகம்அருள
- நாடார் அவர்க்கு மாலையிட்ட நாளே முதல்இந் நாள்அளவும்
- சூடா மலர்போல் இருந்ததல்லால் சுகமோர் அணுவுந் துய்த்தறியேன்
- கோடா ஒல்குங் கொடியேஎன் குறையை எவர்க்குக் கூறுவனே.
- துடிசேர் கரத்தார் ஒற்றியில்வாழ் சோதி வெண்ற் றழகர்அவர்
- கடிசேர்ந் தென்னை மாலையிட்ட கடனே அன்றி மற்றவரால்
- பிடிசேர் நடைநேர் பெண்களைப்போல் பின்னை யாதும் பெற்றறியேன்
- கொடிநேர் இடையாய் என்னடிஎன் குறையை எவர்க்குக் கூறுவனே.
- போர்க்கும் உரியார் மால்பிரமன் போகி முதலாம் புங்கவர்கள்
- யார்க்கும் அரியார் எனக்கெளியர் ஆகி என்னை மாலையிட்டார்
- ஈர்க்கும் புகுதா முலைமதத்தை இன்னுந் தவிர்த்தார் அல்லரடி
- கூர்க்கும் நெடுவேற் கண்ணாய்என் குறையை எவர்க்குக் கூறுவனே.
- மாவென் றுரித்தார் மாலையிட்ட மணாளர் என்றே வந்தடைந்தால்
- வாவென் றுரையார் போஎன்னார் மௌனஞ் சாதித் திருந்தனர்காண்
- ஆவென் றலறிக் கண்ர்விட் டழுதால் துயரம் ஆறுமடி
- கோவென் றிருவேல் கொண்டாய்என் குறையை எவர்க்குக் கூறுவனே.
- தீது தவிர்ப்பார் திருவொற்றித் தியாகர் அழியாத் திறத்தார்அவர்
- மாது மகிழ்தி எனஎன்னை மாலை யிட்டார் மாலையிட்ட
- போது கண்ட திருமுகத்தைப் போற்றி மறித்தும் கண்டறியேன்
- கோது கண்டேன் மாதேஎன் குறையை எவர்க்குக் கூறுவனே.
- அந்தார் அணியும் செஞ்சடையார் அடையார் புரமூன் றவைஅனலின்
- உந்தா நின்ற வெண்ணகையார் ஒற்றித் தியாகர் பவனிஇங்கு
- வந்தார் என்றார் அந்தோநான் மகிழ்ந்து காண வருமுன்னம்
- மந்தா கினிபோல் மனம்என்னை வஞ்சித் தவர்முன் சென்றதுவே.
- ஈமப் புறங்காட் டெரியாடும் எழிலார் தில்லை இனிதமர்வார்
- சேமப் புலவர் தொழும்ஒற்றித் திகழுந் தியாகப் பெருமானார்
- வாமப் பாவை யொடும்பவனி வந்தார் என்றார் அதுகாண்பான்
- காமப் பறவை போல்என்மனம் கடுகி அவர்முன் சென்றதுவே.
- சூலப்படையார் பூதங்கள் சுற்றும் படையார் துதிப்பவர்தம்
- சீலப் பதியார் திருஒற்றித் திகழுந் தியாகப் பெருமானார்
- நீலக் களத்தார் திருப்பவனி நேர்ந்தார் என்றார் அதுகாண்பான்
- சாலப் பசித்தார் போல்மனந்தான் தாவி அவர்முன் சென்றதுவே.
- காது நடந்த கண்மடவாள் கடிமா மனைக்குக் கால்வருந்தத்
- தூது நடந்த பெரியவர்சிற் சுகத்தா ரொற்றித் தொன்னகரார்
- வாது நடந்தான் செய்கின்றோர் மாது நடந்து வாவென்றார்
- போது நடந்த தென்றேனெப் போது நடந்த தென்றாரே.
- இலமே செறித்தார் தாயர்இனி என்செய் குவதென் றிருந்தேற்கு
- நலமே தருவார் போல்வந்தென் நலமே கொண்டு நழுவினர்காண்
- உலமே அனைய திருத்தோளார் ஒற்றித் தியாகப் பெருமானார்
- வலமே வலம்என்அ வலம்அவலம் மாதே இனிஎன் வழுத்துவதே.
- சடையில் தரித்தார் ஒருத்திதனைத் தழுவி மகிழ்மற் றொருபெண்ணைப்
- புடையில் தரித்தார் மகளேநீ போனால் எங்கே தரிப்பாரோ
- கடையில் தரித்த விடம்அதனைக் களத்தில் தரித்தார் கரித்தோலை
- இடையில் தரித்தார் ஒற்றியூர் இருந்தார் இருந்தார் என்னுளத்தே.
- உரப்பார் மிசையில் பூச்சூட ஒட்டார் சடைமேல் ஒருபெண்ணைக்
- கரப்பார் மலர்தூ வியமதனைக் கண்ணால் சுட்டார் கல்எறிந்தோன்
- வரப்பார் மிசைக்கண் வாழ்ந்திருக்க வைத்தார் பலிக்கு மனைதொறும்போய்
- இரப்பார் அன்றோ மகளேநீ ஏதுக் கவரை விழைந்தனையே.
- கருதும் அவரை வெளிக்கிழுப்பார் காணா தெல்லாங் காட்டிநிற்பார்
- மருதில் உறைவார் ஒற்றிதனில் வதிவார் புரத்தை மலைவில்லால்
- பொருது முடிப்பார் போல்நகைப்பார் பூவுண் டுறங்கும் புதுவெள்ளை
- எருதில் வருவார் மகளேநீ ஏதுக் கவரை விழைந்தனையே.
- சேவார் கொடியார் ஒற்றிநகர் திகழுஞ் செல்வத் தியாகர்அவர்
- பூவார் கொன்றைப் புயங்கள்மனம் புணரப் புணர வரும்பவனி
- ஓவாக் களிப்போ டகங்குளிர உடலங் குளிரக் கண்டலது
- பாவார் குதலைப் பெண்ணேநான் பரிந்து நீரும் பருகேனே.
- சிந்தா குலந்தீர்த் தருள்ஒற்றி யூர்வாழ் செல்வத் தியாகர்அவர்
- வந்தார் கண்டார் அவர்மனத்தை வாங்கிப் போக வரும்பவனி
- நந்தா மகிழ்வு தலைசிறப்ப நாடி ஓடிக் கண்டலது
- பந்தார் மலர்க்கைப் பெண்ணேநான் பாடல் ஆடல் பயிலேனே.
- என்னா ருயிர்போல் மகளேநீ என்ன தவந்தான் இயற்றினையோ
- பொன்னார் புயனும் மலரோனும் போற்றி வணங்கும் பொற்பதத்தார்
- தென்னார் ஒற்றித் திருநகரார் தியாகர் எனும்ஓர் திருப்பெயரார்
- கொன்னார் சூலப் படையவரைக் கூடி உடலம் குளிர்ந்தனையே.
- பொய்யர் உளத்துப் புகுந்தறியார் போத னொடுமால் காண்பரிதாம்
- ஐயர் திருவாழ் ஒற்றிநகர் அமர்ந்தார் இன்னும் அணைந்திலரே
- வைய மடவார் நகைக்கின்றார் மாரன் கணையால் திகைக்கின்றேன்
- செய்ய முகத்தாய் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
- என்ஆ ருயிர்க்கோர் துணையானார் என்ஆண் டவனார் என்னுடையார்
- பொன்னார் ஒற்றி நகர்அமர்ந்தார் புணர்வான் இன்னும் போந்திலரே
- ஒன்னார் எனவே தாயும்எனை ஒறுத்தாள் நானும் உயிர்பொறுத்தேன்
- தென்னார் குழலாய் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
- எட்டிக் கனியும் மாங்கனிபோல் இனிக்க உரைக்கும் இன்சொலினார்
- தட்டிற் பொருந்தார் ஒற்றியில்வாழ் தலைவர் இன்னும் சார்ந்திலரே
- மட்டிற் பொலியும் மலர்க்கணைசெல் வழியே பழிசெல் வழிஅன்றோ
- தெட்டிற் பொலியும் விழியாய்நான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
- காலை மலர்ந்த கமலம்போல் கவின்செய் முகத்தார் கண்நுதலார்
- சோலை மலர்ந்த ஒற்றியினார் சோகந் தீர்க்க வந்திலரே
- மாலை மலர்ந்த மையல்நோய் வசந்தம் அதனால் வளர்ந்ததையோ
- சேலை விழியாய் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
- உயிர்க்குள் உயிராய் உறைகின்றோர் ஒற்றி நகரார் பற்றிலரைச்
- செயிர்க்குள் அழுத்தார் மணிகண்டத் தேவர் இன்னும் சேர்ந்திலரே
- வெயிற்கு மெலிந்த செந்தளிர்போல் வேளம் பதனால் மெலிகின்றேன்
- செயற்கை மடவாய் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
- போக முடையார் பெரும்பற்றப் புலியூர் உடையார் போதசிவ
- யோக முடையார் வளர்ஒற்றி யூர்வாழ் வுடையார் உற்றிலரே
- சோகம் உடையேன் சிறிதேனும் துயிலோ அணையா குயில்ஒழியா
- தேகம் அயர்ந்தேன் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
- சங்கக் குழையார் சடைமுடியார் சதுரர் மறையின் தலைநடிப்பார்
- செங்கட் பணியார் திருஒற்றித் தேவர் இன்னும் சேர்ந்திலரே
- மங்கைப் பருவம் மணமில்லா மலர்போல் ஒழிய வாடுகின்றேன்
- திங்கள் முகத்தாய் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
- பொன்னார் புயத்துப் போர்விடையார் புல்லர் மனத்துட் போகாதார்
- ஒன்னார் புரந்தீ உறநகைத்தார் ஒற்றி எனும்ஓர் ஊர்அமர்ந்தார்
- என்னா யகனார் எனைமருவல் இன்றோ நாளை யோஅறியேன்
- மின்னார் மருங்குல் குறமடவாய் விரைந்தோர் குறிநீ விளம்புவையே.
- கொற்றம் உடையார் திருஒற்றிக் கோயில்உடையார் என்எதிரே
- பொற்றை மணித்தோட் புயங்காட்டிப் போனார் என்னைப் புலம்பவைத்துக்
- குற்றம் அறியேன் மனநடுக்கங் கொண்டேன் உடலங் குழைகின்றேன்
- கற்றிண் முலையாய் என்னடிநான் கனவோ நனவோ கண்டதுவே.
- பூமேல் அவனும் மால்அவனும் போற்றி வழுத்தும் பூங்கழலார்
- சேமேல் வருவார் திருஒற்றித் தியாகர் அவர்தம் திருப்புயத்தைத்
- தேமேல் அலங்கல் முலைஅழுந்தச் சேர்ந்தால் அன்றிச் சித்தசன்கைத்
- தாமேல் அழற்பூத் தாழாதென் சகியே இனிநான் சகியேனே.
- புன்னை இதழிப் பொலிசடையார் போக யோகம் புரிந்துடையார்
- மன்னும் விடையார் திருஒற்றி வாணர் பவனி வரக்கண்டேன்
- உன்னும் உடலம் குளிர்ந்தோங்க உவகை பெருக உற்றுநின்ற
- என்னை விழுங்கும் அவரழகை என்னென் றுரைப்ப தேந்திழையே.
- தவர்தாம் வணங்கும் தாளுடையார் தாய்போல் அடியர் தமைப்புரப்பார்
- பவர்தாம் அறியாப் பண்புடையார் பணைசூழ் ஒற்றிப் பதிஅமர்ந்தார்
- அவர்தாம் மீண்டுற் றணைவாரோ அன்றி நான்போய் அணைவேனோ
- உவர்தாம் அகற்றும் சோதிடம்பார்த் துரைப்பீர் புரிநூல் உத்தமரே.
- பெருமை உடையார் மனைதொறும்போய்ப் பிச்சை எடுத்தார் ஆனாலும்
- அருமை மணியார் அம்பலத்தில் ஆடித் திரிந்தார் ஆனாலும்
- ஒருமை உடையார் கோவணமே உடையாய் உடுத்தார் ஆனாலும்
- கருமை விழியாய் நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே.
- போர்மால் விடையார் உலகமெலாம் போக்குந் தொழிலர் ஆனாலும்
- ஆர்வாழ் சடையார் தமைஅடைந்தோர் ஆசை அழிப்பார் ஆனாலும்
- தார்வாழ் புயத்தார் மாவிரதர் தவஞா னியரே ஆனாலும்
- கார்வாழ் குழலாய் நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே.
- கோதே மருவார் மால்அயனும் குறியா நெறியார் என்றாலும்
- சாதே மகிழ்வார் அடியாரைத் தம்போல் நினைப்பார் என்றாலும்
- மாதே வருக்கும் மாதேவர் மௌன யோகி என்றாலும்
- காதேர் குழையாய் நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே.
- காதம் மணக்குங் கடிமலர்ப்பூங் காவார் ஒற்றிக் கண்நுதலார்
- போதம் மணக்கும் புனிதர்அவர் பொன்னம் புயத்தைப் புணரேனேல்
- சீதம் மணக்குங் குழலாய்என் சிந்தை மயங்கித் தியங்குமடி
- ஏதம் மணக்கும் என்செய்வேன் என்னை மடவார் இகழாரோ.
- பண்ணார் மொழியார் உருக்காட்டும் பணைசூழ் ஒற்றிப் பதியினர்என்
- கண்ணார் மணிபோன் றென்உயிரில் கலந்து வாழும் கள்வர்அவர்
- நண்ணார் இன்னும் திருஅனையாய் நான்சென் றிடினும் நலம்அருள
- எண்ணார் ஆயின் என்செய்வேன் என்னை மடவார் இகழாரோ.
- வில்லை மலையாய்க் கைக்கொண்டார் விடஞ்சூழ் கண்டர் விரிபொழில்சூழ்
- தில்லை நகரார் ஒற்றியுளார் சேர்ந்தார் அல்லர் நான்அவர்பால்
- ஒல்லை அடைந்து நின்றாலும் உன்னை அணைதல் ஒருபோதும்
- இல்லை எனிலோ என்செய்கேன் என்னை மடவார் இகழாரோ.
- திருந்தால் அமர்ந்தார் திருப்புலியூர்ச் சிற்றம் பலத்தில் திருநடம்செய்
- மருந்தார் ஒற்றி வாணர்இன்னும் வந்தார் அல்லர் நான்போய்என்
- அருந்தாழ் வகல அருள்வீரென் றாலும் ஒன்றும் அறியார்போல்
- இருந்தால் அம்மா என்செய்வேன் என்னை மடவார் இகழாரோ.
- ஆண்பனைபெண் பனையாக்கி அங்கமதங் கனையாய்
- ஆக்கிஅருண் மணத்தில்ஒளி அனைவரையும் ஆக்கும்
- மாண்பனைமிக குவந்தளித்த மாகருணை மலையே
- வருத்தமெலாந் தவிர்த்தெனக்கு வாழ்வளித் வாழ்வே
- நாண்பனையுந் தந்தையும்என் நற்குருவும் ஆகி
- நாயடியேன் உள்ளகத்து நண்ணியநா யகனே
- வீண்பனைபோன் மிகநீண்டு விழற்கிறைப்பேன் எனினும்
- விருப்பமெலாம் நின்அருளின் விருப்பம்அன்றி இலையே.
- சித்தமனே கம்புரிந்து திரிந்துழலுஞ் சிறியேன்
- செய்வகைஒன் றறியாது திகைக்கின்றேன் அந்தோ
- உத்தமனே உன்னையலால் ஒருதுணைமற் றறியேன்
- உன்னாணை உன்னாணை உண்மைஇது கண்டாய்
- இத்தமனே யச்சலனம் இனிப்பொறுக்க மாட்டேன்
- இரங்கிஅருள் செயல்வேண்டும் இதுதருணம் எந்தாய்
- சுத்தமனே யத்தவர்க்கும் எனைப்போலு மவர்க்கும்
- துயர்தவிப்பான் மணிமன்றில் துலங்குநடத் தரசே.
- அந்தோஈ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன்
- அறிவறியாச் சிறியேனை அறிவறியச் செய்தே
- இந்தோங்கு சடைமணிநின் அடிமுடியுங் காட்டி
- இதுகாட்டி அதுகாட்டி என்நிலையுங் காட்டிச்
- சந்தோட சித்தர்கள்தந் தனிச்சூதுங் காட்டி
- சாகாத நிலைகாட்டிச் சகசநிலை காட்டி
- வந்தோடு184 நிகர்மனம்போய்க் கரைந்த இடங் காட்டி
- மகிழ்வித்தாய் நின்அருளின் வண்மைஎவர்க் குளதே.
- என்னைஒன்றும் அறியாத இளம்பவருவந் தனிலே
- என்உளத்தே அமர்ந்தருளி யான்மயங்குந் தோறும்
- அன்னைஎனப் பரிந்தருளி அப்போதைக் கப்போ
- தப்பன்எனத் தெளிவித்தே அறிவுறுத்தி நின்றாய்
- நின்னைஎனக் கென்என்பேன் என்உயிர் என்பேனோ
- நீடியஎன் உயிர்த்துணையாம் நேயமதென் பேனோ
- இன்னல்அறுத் தருள்கின்ற என்குருவென் பேனோ
- என்என்பேன் என்னுடைய இன்பமதென் பேனே.
- பாடும்வகை அணுத்துணையும் பரிந்தறியாச் சிறிய
- பருவத்தே அணிந்தணிந்தது பாடும்வகை புரிந்து
- நாடும்வகை உடையோர்கள் நன்குமதித் திடவே
- நல்லறிவு சிறிதளித்துப் புல்லறிவு போக்கி
- நீடும்வகை சன்மார்க்க சுத்தசிவ நெறியில்
- நிறுத்தினைஇச் சிறியேனை நின்அருள்என் என்பேன்
- கூடும்வகை உடையரெலாங் குறிப்பெதிர்பார்க் கின்றார்
- குற்றமெலாங் குணமாகக் கொண்டகுணக் குன்றே.
- ஏறியநான் ஒருநிலையில் ஏறஅறி யாதே
- இளைக்கின்ற காலத்தென் இளைப்பெல்லாம் ஒழிய
- வீறியஓர் பருவசத்தி கைகொடுத்துத் தூக்கி
- மேலேற்றச் செய்தவளை மேவுறவுஞ் செய்து
- தேறியநீர் போல்எனது சித்தமிகத் தேறித்
- தெளிந்திடவுஞ் செய்தனைஇச் செய்கைஎவர் செய்வார்
- ஊறியமெய் அன்புடையார் உள்ளம்எனும் பொதுவில்
- உவந்துநடம் புரிகின்ற ஒருபெரிய பொருளே.
- ஆரணமும் ஆகமமும் எதுதுணிந்த ததுவே
- அம்பலத்தில் ஆடுகின்ற ஆட்டமென எனக்குக்
- காரணமுங் காரியமும் புலப்படவே தெரித்தாய்
- கண்ணுதலே இங்கிதற்குக் கைம்மாறொன் றறியேன்
- பூரணநின் அடித்தொண்டு புரிகின்ற சிறியேன்
- போற்றிசிவ போற்றிஎனப் போற்றிமகிழ் கின்றேன்
- நாரணநான் முகன்முதலோர் காண்பரும்அந் நடத்தை
- நாயடியேன் இதயத்தில் நவிற்றியருள் வாயே.
- சத்தியமெய் அறிவின்ப வடிவாகிப் பொதுவில்
- தனிநடஞ்செய் தருளுகின்ற சற்குருவே எனக்குப்
- புத்தியொடு சித்தியும்நல் லறிவும்அளித் தழியாப்
- புனிதநிலை தனிலிருக்கப் புரிந்தபரம் பொருளே
- பத்திஅறி யாச்சிறியேன் மயக்கம்இன்னுந் தவிர்த்துப்
- பரமசுக மயமாக்கிப் படிற்றுளத்தைப் போக்கித்
- தத்துவநீ நான்என்னும் போதமது நீக்கித்
- தனித்தசுகா தீதமும்நீ தந்தருள்க மகிழ்ந்தே.
- ஏதும்அறி யாதிருளில் இருந்தசிற யேனை
- எடுத்துவிடுத் தறிவுசிறி தேய்ந்திடவும் புரிந்து
- ஓதுமறை முதற்கலைகள் ஓதாமல் உணர
- உணர்விலிருந் துணர்த்திஅருள் உண்மைநிலை காட்டித்
- தீதுசெறி சமயநெறி செல்லுதலைத் தவிர்த்துத்
- திருஅருண்மெய்ப் பொதுநெறியில் செலுத்தியும் நான்மருளும்
- போதுமயங் கேல்மகனே என்றுமயக் கெல்லாம்
- போக்கிஎனக் குள்ளிருந்த புனிதபரம் பொருளே.
- பூதநிலை முதற்பரமே நாதநிலை அளவும்
- போந்தவற்றின் இயற்கைமுதற் புணர்ப்பெல்லாம் விளங்க
- வேதநிலை ஆகமத்தின் நிலைகளெலாம் விளங்க
- வினையேன்றன் உளத்திருந்து விளக்கியமெய் விளக்கே
- போதநிலை யாய்அதுவுங் கடந்தஇன்ப நிலையாய்ப்
- பொதுவினின்மெய் அறிவின்ப நடம்புரியும் பொருளே
- ஏதநிலை யாவகைஎன் மயக்கம்இன்னுந் தவிர்த்தே
- எனைக்காத்தல் வேண்டுகின்றேன் இதுதருணங் காணே.
- ஒங்காரத் துள்ளொளியாய் அவ்வொளிக்குள் ஒளியாய்
- உபயவடி வாகியநின் அபயபதம் வருந்த
- ஈங்கார நடந்திரவில் யானிருக்கும் இடம்போந்
- தெழிற்கதவந் திறப்பித்தங் கென்னைவலிந் தழைத்துப்
- பாங்காரும் வண்ணம்ஒன்றென் கைதனிலே அளித்துப்
- பண்பொடுவாழ்ந் திடுகஎனப் பணித்தபரம் பொருளே
- ஆங்கார வண்ணம்அகன் றதைஅறிந்து மகிழ்ந்தே
- அனுபவிக்கின் றேன்பொதுவில் ஆடுகின்ற அரசே.
- உள்ளிரவி மதியாய்நின் றுலகமெலாம் நடத்தும்
- உபயவகை யாகியநின் அபயபதம் வருந்த
- நள்ளிரவின் மிகநடந்து நான்இருக்கும் இடத்தே
- நடைக்கதவந் திறப்பித்து நடைக்கடையில் அழைத்து
- எள்ளிரவு நினைந்துமயக் கெய்தியிடேல் மகனே
- என்றென்கை தனில்ஒன்றை ஈந்துமகிழ் வித்தாய்
- அள்ளிரவு போல்மிடற்றில் அழகுகிறர்ந் தாட
- அம்பலத்தில் ஆடுகின்ற செம்பவளக் குன்றே.
- வேதமுடி மேற்சுடராய் ஆகத்தின் முடிமேல்
- விளங்கும்ஒளி யாகியநின் மெல்லடிகள் வருந்தப்
- பூதமுடி மேல்நடந்து நானிருக்கு மிடத்தே
- போந்திரவிற் கதவுதனைக் காப்பவிழ்க்கப் புரிந்து
- நாதமுடி மேல்விளங்குந் திருமேனி காட்டி
- நற்பொருள்என் கைதனிலே நல்கியநின் பெருமை
- ஓதமுடி யாதெனில்என் புகல்வேன்அம் பலத்தே
- உயிர்க்கின்பந் தரநடனம் உடையபரம் பொருளே.
- வேதாந்த சித்தாந்தம் என்னும்அந்தம் இரண்டும்
- விளங்கஅமர்ந் தருளியநின் மெல்லடிகள் வருந்த
- நாதாந்த வெளிதனிலே நடந்தருளும் அதுபோல்
- நடந்தருளிக் கடைநாயேன் நண்ணும்இடத் தடைந்து
- போதாந்த மிசைவிளக்குந் திருமேனி காட்டிப்
- புலையேன்கை யிடத்தொன்று பொருந்தவைத்த பொருளே
- சூதாந்த மனைத்தினுக்கும் அப்பாற்பட் டிருந்த
- துரியவெளிக் கேவிளங்கும் பெரியஅருட் குருவே.
- புண்ணியர்தம் மனக்கோயில் புகுந்தமர்ந்து விளங்கும்
- பொன்மலர்ச்சே வடிவருத்தம் பொருந்தநடந் தெளியேன்
- நண்ணியஓர் இடத்தடைந்து கதவுதிறப் பித்து
- நற்பொருள்ஒன் றென்கைதனில் நல்கியநின் பெருமை
- எண்ணியபோ தெல்லாம்என் மனமுருக்கும் என்றால்
- எம்ப—ருமான் நின்அருளை என்னெனயான் புகல்வேன்
- தண்ணியவெண் மதிஅணிந்த செஞ்சடைநின் றாடத்
- தனித்தமன்றில் ஆனந்தத் தாண்டவஞ்செய் அரசே.
- கற்றவர்தம் கருத்தினின்முக் கனிரசம்போல் இனிக்கும்
- கழலடிகள் வருந்தியிடக் கடிதுநடந் திரவில்
- மற்றவர்கா ணாதெளியேன் இருக்கும்இடத் தடைந்து
- மனைக்கதவு திறப்பித்து வலிந்தெனைஅங் கழைத்து
- நற்றவர்க்கும் அரிதிதனை வாங்கெனஎன் கரத்தே
- நல்கியநின் பெருங்கருணை நட்பினைஎன் என்பேன்
- அற்றவர்க்கும் பற்றவர்க்கும் பொதுவினிலே நடஞ்செய்
- அருட்குருவே சச்சிதா னந்தபரம் பொருளே.
- அருளுருவாய் ஐந்தொழிலும் நடத்துகின்ற அடிகள்
- அசைந்துவருந் திடஇரவில் யானிருக்கும் இடத்தே
- தெருளுருவின் நடந்துதெருக் கதவுதிறப் பித்துச்
- சிறியேனை அழைத்தெனது செங்கையில்ஒன் றளித்து
- மருளுருவின் மற்றவர்போல் மயங்கேல்என் மகனே
- மகிழ்ந்துதிரு அருள்வழியே வார்கஎன உரைத்தாய்
- இருளுருவின் மனக்கொடியேன் யாதுதவம் புரிந்தேன்
- எல்லாம்வல் லவனாகி இருந்தபசு பதியே.
- தற்போதந் தோன்றாத தலந்தனிலே தோன்றும்
- தாள்மலர்கள் வருந்தியிடத் தனித்துநடந் தருளி
- எற்போதங் ககன்றிரவில் யானிருக்கு மிட•போந்
- தெழிற்கதவந் திறப்பித்திவ் வெளியேனை அழைத்துப்
- பொற்போத வண்ணம்ஒன்றென் கைதனிலே அளித்துப்
- புலையொழிந்த நிலைதனிலே பொருந்துகஎன் றுரைத்தாய்
- சிற்போத மயமான திருமணிமன் றிடத்தே
- சிவமயமாம் அனுபோகத் திருநடஞ்செய் அரசே
- கற்பனைகள் எல்லாம்போய்க் கரைந்ததலந் தனிலே
- கரையாது நிறைந்திருக் கழலடிகள் வருந்த
- வெற்பனையும் இன்றிஒரு தனியாக நடந்து
- விரைந்திரவிற் கதவுதனைக் காப்பவிழ்க்கப் புரிந்து
- அற்பனைஓர் பொருளாக அழைத்தருளி அடியேன்
- அங்கையில்ஒன் றளித்தனைநின் அருளினைஎன் புகல்வேன்
- நற்பனவர் துதிக்கமணி மன்றகத்தே இன்ப
- நடம்புரியும் பெருங்கருணை நாயகமா மணியே .
- எங்கும்விளங் குவதாகி இன்பமய மாகி
- என்னுணர்வுக் குணர்வுதரும் இணையடிகள் வருந்த
- பொங்குமிர விடைநடந்து நானுறையும் இடத்தே
- போந்துமணிக் கதவுதனைக் காப்பவிழ்க்கப் புரிந்து
- தங்குமடி யேனைஅழைத் தங்கையில்ஒன் றளித்தே
- தயவினொடு வாழ்கஎனத் தனித்திருவாய் மலர்ந்தாய்
- இங்குநின தருட்பெருமை என்னுரைப்பேன் பொதுவில்
- இன்பநடம் புரிகின்ற என்னுடைநா யகனே .
- தன்னுருவங் காட்டாத மலஇரவு விடியுந்
- தருணத்தே உதயஞ்செய் தாள்மலர்கள் வருந்தப்
- பொன்னுருவத் திருமேனி கொண்டுநடந் தடியேன்
- பொருந்துமிடத் தடைந்துகத வந்திறக்கப் புரிந்து
- தன்னுருவம் போன்றதொன்றங் கெனை அழைத்தென் கரத்தே
- தந்தருளி மகிழ்ந்திங்கே தங்குகஎன் றுரைத்தாய்
- என்னுருவம் எனக்குணர்த்தி அருளியநின் பெருமை
- என்னுரைப்பேன் மணிமன்றில் இன்பநடத் தரசே.
- அறிவுடையார் உள்ளகப்போ தலருகின்ற தருணத்
- தருள்மணத்தே னாகிஉற்ற அடிஇணைகள் வருந்தப்
- பிறிவுடையேன் இருக்குமிடந் தேடிநடந் தடைந்து
- பெருங்கதவந் திறப்பித்துப் பேயன்எனை அழைத்துச்
- செறிவுடையாய் இதுவாங்கென் றுதவவும்நான் மறுப்பத்
- திரும்பவும்என் கைதனிலே சேரஅளித் தனையே
- பொறிவறியேன் அளவினில்உன் கருணையைஎன் என்பேன்
- பொற்பொதுவில் நடம்புரியும் பூரணவான் பொருளே.
- அருள்விளங்கும் உள்ளகத்தே அதுஅதுவாய் விளங்கும்
- அணிமலர்ச்சே வடிவருத்தம் அடையநடந் தருளிப்
- பொருள்விளங்கா நடுஇரவில் நானுறையும் இடத்தே
- போந்துதெருக் காப்பவிழ்க்கப் புரிந்தெனைஅங் கழைத்துத்
- தெருள்விளங்கும் ஒருபொருள்என் செங்கைதனில் அளித்தாய்
- சிவபெருமான் பெருங்கருணைத் திறத்தினைஎன் என்பேன்
- மருள்விளங்கி உணர்ச்சியுறத் திருமணிமன் றிடத்தே
- மன்னுயிர்க் கின்பருள வயங்குநடத் தரசே.
- பருவமுறு தருணத்தே சர்க்கரையும் தேனும்
- பாலுநெய்யும் அளிந்தநறும் பழரசமும் போல
- மருவும்உளம் உயிர்உணர்வோ டெல்லாந்தித் திக்க
- வயங்கும்அடி யிணைகள்மிக வருந்தநடந் தருளித்
- தெருவடைந்து நானிருக்கு மனைக்காப்புத் திறக்கச்
- செய்தருளிப் பொருள்ஒன்றென் செங்கைதனில் அளித்தாய்
- திருமணிமன் றிடைநடிக்கும் பெருமான்நின் கருணைத்
- திறத்தினைஇச் சிறியேன்நான் செப்புதல்எங் ஙனமே.
- பரயோக அனுபவத்தே அகம்புறந்தோன் றாத
- பரஞ்சோதி யாகும்இணைப் பாதமலர் வருந்த
- வரயோகர் வியப்பஅடி யேன்இருக்கும் இடத்தே
- வந்துதெருக் கதவுதனைக் காப்பவிழ்க்கப் புரிந்து
- திரயோகர்க் கரிதிதனை வாங்குகஎன் றெனது
- செங்கைதனில் அளித்தாய்நின் திருவருள்என் என்பேன்
- உரயோகர் உளம்போல விளங்குமணி மன்றில்
- உயிர்க்கின்பந் தரநடனம் உடையபரம் பொருளே.
- மோகஇருட் கடல்கடத்தும் புணைஒன்று நிறைந்த
- மோகனசுகம் அளிப்பிக்கும் துணைஒன்றென் றுரைக்கும்
- யோகமலர்த் திருவடிகள் வருந்தநடந் தருளி
- உணர்விலியேன் பொருட்டாக இருட்டிரவில் நடந்து
- போகமனைப் பெருங்கதவந் திறப்பித்துட் புகுந்து
- புலையேனை அழைத்தொன்று பொருந்தஎன்கை கொடுத்தாய்
- நாகமணிப் பணிமிளிர அம்பலத்தே நடஞ்செய்
- நாயகநின் பெருங்கருணை நவிற்றமுடி யாதே.
- இருட்டாய மலச்சிறையில் இருக்கும்நமை எல்லாம்
- எடுப்பதொன்றாம் இன்பநிலை கொடுப்பதொன்றாம் எனவே
- பொருட்டாயர் போற்றுகின்ற பொன்னடிகள் வருந்தப்
- பொறையிரவில் யானிருக்கும் இடந்தேடிப் புகுந்து
- மருட்டாயத் திருந்தேனைக் கூவிவர வழைத்து
- வண்ணம்ஒன்றென் கைதனிலே மகிழ்ந்தளித்தாய் நின்றன்
- அருட்டாயப் பெருமைதனை என்னுரைப்பேன் பொதுவில்
- ஆனந்தத் திருநடஞ்செய் தருளுகின்ற அரசே.
- நான்கண்ட போதுசுயஞ் சோதிமய மாகி
- நான்பிடித்த போதுமதி நளினவண்ண மாகித்
- தேன்கொண்ட பாலெனநான் சிந்திக்குந் தோறுந்
- தித்திப்ப தாகிஎன்றன் சென்னிமிசை மகிழ்ந்து
- தான்கொண்டு வைத்தஅந்நாள் சில்லென்றென் உடம்பும்
- தகஉயிருங் குளிர்வித்த தாண்மலர்கள் வருந்த
- வான்கொண்டு நடந்திங்கு வந்தெனக்கும் அளித்தாய்
- மன்றில்நடத் தரசேநின் மாகருணை வியப்பே.
- பக்குவத்தால் உயர்வாழைப் பழங்கனிந்தாற் போலும்
- பரங்கருணை யாற்கனிந்த பத்தர்சித்தந் தனிலே
- பொக்கமில்அப் பழந்தனிலே தெள்ளமுதங் கலந்தாற்
- போற்கலந்து தித்திக்கும் பொன்னடிகள் வருந்த
- மிக்கஇருள் இரவினிடை நடந்தெளியேன் இருக்கும்
- வியன்மனையில் அடைந்துகத வந்திறக்கப் புரிந்து
- ஒக்கஎனை அழைத்தொன்று கொடுத்திங்கே இருஎன்
- றுரைத்தனைஎம் பெருமான்நின் உயர்கருணை வியப்பே.
- பூதவெளி கரணவெளி பகுதிவெளி மாயா
- போகவெளி மாமாயா யோகவெளி புகலும்
- வேதவெளி அபரவிந்து வெளிஅபர நாத
- வெளிஏக வெளிபரம வெளிஞான வெளிமா
- நாதவெளி சுத்தவெறு வெளிவெட்ட வெளியா
- நலில்கின்ற வெளிகளலாம் நடிக்கும்அடி வருந்த
- ஏதஎளி யேன்பொருட்டா நடந்தென்பால் அடைந்தே
- என்கையின்ஒன் றளித்தனைநின் இரக்கம்எவர்க் குளதே.
- வானதுவாய்ப் பசுமலம்போய்த் தனித்துநிற்குந் தருணம்
- வயங்குபரா னந்தசுகம் வளைந்துகொள்ளுந் தருணம்
- தானதுவாய் அதுதானாய்ச் சகசமுறுந் தருணம்
- தடையற்ற அனுபவமாந் தன்மையடி வருந்த
- மானதுவாய் நடந்தெளியேன் இருக்குமிடத் தடைந்து
- மணிக்கதவந் திறப்பித்து மகிழ்ந்தெனைஅங் கழைத்து
- ஆனதொரு பொருளளித்தாய் நின்னருள்என் என்பேன்
- அம்பலத்தே நடம்புரியும் எம்பெருஞ்சோ தியனே.
- புன்றனை தலையெனநான் அறியாமல் ஒருநாள்
- பொருத்தியபோ தினிற்சிவந்து பொருந்தியபொன் னடிகள்
- இன்றலைவின் மிகச்சிவந்து வருந்தநடந் தெளியேன்
- இருக்குமிடத் தடைத்துகத வந்திறக்கப் புரிந்து
- மன்றலின்அங் கெனைஅழைத்தேன் கையில்ஒன்று கொடுத்தாய்
- மன்னவநின் பெருங்கருணை வண்மையைஎன் என்பேன்
- பொன்றவிலாச் சித்தர்முத்தர் போற்றமணி மன்றில்
- புயங்கநடம் புரிகின்ற வயங்கொளிமா மணியே.
- மாவின்மணப் போர்விடைமேல் நந்திவிடை மேலும்
- வயங்கிஅன்பர் குறைதவிர்த்து வாழ்வளிப்ப தன்றிப்
- பூவின்மணம் போல்உயிருக் குயிராகி நிறைந்து
- போகம்அளித் தருள்கின்ற பொன்னடிகள் வருந்தத்
- தாவிநடந் திரவின்மனைக் கதவுதிப் பித்தே
- தயவுடன்அங் கெனைஅழைத்துத் தக்கதொன்று கொடுத்தாய்
- நாவின்மணந் துறப்புலவர் வியந்தேத்தும் பொதுவில்
- நடம்புரியும் நாயகநின் நற்கருணை இதுவே.
- மணப்போது வீற்றிருந்தான் மாலவன்மற் றவரும்
- மனஅழுக்கா றுறச்சிறியேன் வருந்தியநாள் அந்தோ
- கணப்போதுந் தரியாமற் கருணைஅடி வருந்தக்
- கங்குலிலே நடந்தென்னைக் கருதிஒன்று கொடுத்தாய்
- உணப்போது போக்கினன்முன் உளவறியா மையினால்
- உளவறிந்தேன் இந்நாள்என் உள்ளமகிழ் வுற்றேன்
- தணப்போது மறைகளெலாந் தனித்தனிநின் றேத்தத்
- தனிமன்றில் ஆனந்தத் தாண்டவஞ்செய் அரசே.
- முத்தேவர் அழுக்காற்றின் மூழ்கியிடத் தனித்த
- முழுமணிபோன் றொருவடிவென் முன்கொடுவந் தருளி
- எத்தேவர் தமக்குமிக அரியஎனும் மணப்பூ
- என்கரத்தே கொடுத்தனைநின் எண்ணம்இதென் றறியேன்
- சித்தேஎன் பவரும்ஒரு கத்தேஎன் பவரும்
- தேறியபின் ஒன்றாகத் தெரிந்துகொள்ளும் பொதுவில்
- அத்தேவர் வழுத்தஇன்ப உருவாகி நடஞ்செய்
- ஆரமுதே என்னுயிருக் கானபெருந் துணையே.
- திருவருடுந் திருவடிப்பொற் சிலம்பசைய நடந்தென்
- சிந்தையிலே புகுந்துநின்பாற் சேர்ந்துகலந் திருந்தாள்
- தெருமரலற் றுயர்ந்தமறைச் சிரத்தமர்ந்த புனிதை
- சிவகாம வல்லிபெருந் தேவிஉளங் களிப்பப்
- பொருவருமெய் யன்புடையார் இருவருங்கண் டுவந்து
- போற்றமணிப் பொதுவில்நடம் புரிகின்ற துரையே
- பருவரல்அற் றடிச்சிறியேன் பெருவரம்பெற் றுனையே
- பாடுகின்றேன் பெரியஅருட் பருவமடைந் தனனே.
- பார்பூத்த பசுங்கொடிபொற் பாலைவயர்கள் அரசி
- பரம்பரைசிற் பரைபரா பரைநிமலை யாதி
- சீர்பூத்த தெய்வமறைச் சிலம்பணிந்த பதத்தாள்
- சிவகாம வல்லிபெருந் தேவிஉளங் களிப்ப
- ஏர்பூத்த மணிமன்றில் இன்பநடம் புரியும்
- என்னருமைத் துரையேநின் இன்னருளை நினைந்து
- கார்பூத்த கனைமழைபோல் கண்களின்நீர் சொரிந்து
- கனிந்துமிகப் பாடுகின்ற களிப்பைஅடைந் தனனே.
- பூரணிசிற் போதைசிவ போகிசிவ யோகி
- பூவையர்கள் நாயகிஐம் பூதமுந்தா னனாள்
- தேரணியும் நெடுவிதித் தில்லைநக ருடையாள்
- சிவகாம வல்லிபெருந் தேவிஉளங் களிப்ப
- ஏரணியும் மணிமன்றில் இன்பவடி வாகி
- இன்பநடம் புரிகின்ற எம்முடைய துரையே
- தாரணியில் உனைப்பாடுந் தரத்தைஅடைந் தனன்என்
- தன்மையெலாம் நன்மைஎனச் சம்மதித்த வாறே.
- சேலோடும் இணைந்தவிழிச் செல்விபெருந் தேவி
- சிவகம வல்லியொடு சிவபோக வடிவாய்
- மேலோடு கீழ்நடுவுங் கடந்தோங்கு வெளியில்
- விளங்கியநின் திருஉருவை உளங்கொளும்போ தெல்லாம்
- பாலோடு பழம்பிழிந்து தேன்கலந்து பாகும்
- பசுநெய்யுங் கூட்டிஉண்ட படிஇருப்ப தென்றால்
- மாலோடு காண்கின்ற கண்களுக்கங் கிருந்த
- வண்ணம்இந்த வண்ணம்என எண்ணவும்ஒண் ணாதே.
- சித்தியெலாம் அளித்தசிவ சத்திஎனை யுடையாள்
- சிவகாம வல்லியொடு சிவஞானப் பொதுவில்
- முத்தியெலாந் தரவிளங்கும் முன்னவநின் வடிவை
- மூடமனச் சிறியேன்நான் நாடவரும் பொழுது
- புத்தியெலாம் ஒன்றாகிப் புத்தமுதம் உண்டாற்
- போலும்இருப் பதுஅதற்கு மேலும்இருப் பதுவேல்
- பத்திஎலாம் உடையவர்கள் காணுமிடத் திருக்கும்
- படிதான்எப் படியோஇப் படிஎன்ப தரிதே.
- தெய்வமெலாம் வணங்குகின்ற தேவிஎனை அளித்தாள்
- சிவகாம வல்லியொடு திருமலிஅம் பலத்தே
- சைவமெலாந் தரவிளங்கு நின்வடிவைக் கொடியேன்
- தான்நினைத்த போதெனையே நான்நினைத்த நிலையேல்
- ஐவகைஇந் தியங்கடந்தார் கண்டவிடத் திருந்த
- அனுபவத்தின் வண்ணமதை யார்புகல வல்லார்
- உய்வகைஅந் நாள் உரைத்த தன்றியும்இந் நாளில்
- உந்திரவில் வந்துணர்வு தந்தசிவ குருவே.
- ஆரமுதம் அனையவள்என் அம்மைஅபி ராமி
- ஆனந்த வல்லியொடும் அம்பலத்தே விளங்கும்
- பேரமுத மயமாம்உன் திருவடிவைக் குறித்துப்
- பேசுகின்ற போதுமணம் வீசுகின்ற தொன்றோ
- சீரமுத மாகிஎல்லாந் தித்திப்ப தன்போர்
- சிறிதுமிலாக் கடைப்புலையேன் திறத்துக்கிங் கென்றால்
- ஊரமுதப் பேரன்பர் பேசுமிடத் தவர்பால்
- உற்றவண்ணம் இற்றிதென்ன உன்னமுடி யாதே.
- பொற்பதத்தாள் என்னளவிற் பொன்னாசை தவிர்த்தாள்
- பூரணிஆ னந்தசிவ போகவல்லி யோடு
- சொற்பதமுங் கடந்தமன்றில் விளங்கியநின் வடிவைத்
- தூய்மையிலேன் நான்எண்ணுந் தோறும்மனம் இளகிச்
- சிற்பதத்திற் பரஞான மயமாகும் என்றால்
- தெளிவுடையார் காண்கின்ற திறத்தில்அவர்க் கிருக்கும்
- நற்பதம்எத் தன்மையதோ உரைப்பரிது மிகவும்
- நாதமுடி தனிற்புரியும் ஞானநடத் தரசே.
- காமசத்தி யுடன்களிக்கும் காலையிலே அடியேன்
- கனஞான சத்தியையும் கலந்துகொளப் புரிந்தாள்
- வாமசத்தி சிவகாம வல்லியொடும் பொதுவில்
- வயங்கியநின் திருவடியை மனங்கொளும்போ தெல்லாம்
- ஆமசத்தன் எனும்எனக்கே ஆனந்த வெள்ளம்
- அதுததும்பிப் பொங்கிவழிந் தாடும்எனில் அந்தோ
- ஏமசத்தர் எனும்அறிஞர் கண்டவிடத் திருந்த
- இன்பஅனு பவப்பெருமை யாவர்புகல் வாரே.
- கலைக்கடைநன் கறியாதே கனஅருளோ டூடிக்
- கரிகபுகன் றேன்கவலைக் கடற்புணைஎன் றுணரேன்
- புலைக்கடையேன் புகன்றபிழை பொறுத்தருளல் வேண்டும்
- போற்றிசிவ போற்றிசிவ போற்றிசிவ போற்றி
- தலைக்கடைவாய் அன்றிரவில் தாள்மலரொன் றமர்த்தித்
- தனிப்பொருள்என் க€யிலளித்த தயவுடைய பெருமான்
- கொலைக்கடையார்க் கெய்தரிய குணமலையே பொதுவில்
- கூத்தாடிக் கொண்டுலகைக் காத்தாளுங் குருவே.
- பழுத்தலைநன் குணராதே பதியருளோ டூடிப்
- பழுதுபுகன் றேன்கருணைப் பாங்கறியாப் படிறேன்
- புழுத்தலையேன் புகன்றபிழை பொறுத்தருளல் வேண்டும்
- புண்ணியர்தம் உள்ளகத்தே நண்ணியமெய்ப் பொருளே
- கழுத்தலைநஞ் சணிந்தருளுங் கருணைநெடுங் கடலே
- கால்மலர்என் தலைமீது தான்மலர அளித்தாய்
- விழுத்தலைவர் போற்றமணி மன்றில்நடம் புரியும்
- மெய்ம்மைஅறி வின்புருவாய் விளங்கியசற் குருவே.
- கையடைநன் கறியாதே கனஅருளோ டூடிக்
- காசுபுகன் றேன்கருணைத் தேசறியாக் கடையேன்
- பொய்யடியேன் புகன்றபிழை பொறுத்தருளல் வேண்டும்
- புத்தமுதே சுத்தசுக பூரணசிற் சிவமே
- ஐயடிகள் காடவர்கோன் அகமகிழ்ந்து போற்றும்
- அம்பலத்தே அருள்நடஞ்செய் செம்பவள மலையே
- மெய்யடியர் உள்ளகத்தில் விளங்குகின்ற விளக்கே
- வேதமுடி மீதிருந்த மேதகுசற் குருவே.
- திறப்படநன் குணராதே திருவருளோ டூடித்
- தீமைபுகன் றேன்கருணைத் திறஞ்சிறிதுந் தெளியேன்
- புறப்படிறேன் புகன்றபிழை பொறுத்தருளல் வேண்டும்
- பூதமுதல் நாதவரைப் புணருவித்த புனிதா
- உறப்படுமெய் உணர்வுடையார் உள்ளகத்தே விளங்கும்
- உண்மையறி வானந்த உருவுடைய குருவே
- சிறப்படைமா தவர்போற்றச் செம்பொன்மணிப் பொதுவில்
- திருத்தொழில்ஐந் தியற்றுவிக்குந் திருநடநா யகனே.
- தேர்ந்துணர்ந்து தெளியாதே திருவருளோ டூடிச்
- சிலபுகன்றேன் திருக்கருணைத் திறஞ்சிறிதுந் தெரியேன்
- போந்தகனேன் புகன்றபிழை பொறுத்தருளல் வேண்டும்
- போதாந்த மிசைவிளங்கு நாதாந்த விளக்கே
- ஊர்ந்தபணக் கங்கணமே முதற்பணிகள் ஒளிர
- உயர்பொதுவில் நடிக்கின்ற செயலுடைய பெருமான்
- சார்ந்தவரை எவ்வகையுந் தாங்கிஅளிக் கின்ற
- தயவுடைய பெருந்தலைமைத் தனிமுதல்எந் தாயே.
- 189. உலகியல் உணர்வோர் அணுத்துணை யேனும் உற்றிலாச் சிறியஓர் பருவத்திலகிய எனக்குள் இருந்தருள் நெறியில் ஏற்றவுந் தரமிலா மையினான்விலகுறுங் காலத் தடிக்கடி ஏற விடுத்துப்பின் விலகுறா வண்ணம்அலகிலா உணர்ச்சி அளித்தனை உன்றன் அருட்கடற் பெருமைஎன் புகல்வேன்திலகநற் காழி ஞாநசம் பந்தத் தெள்ளமு தாஞ்சிவ குருவே.பெருமானின் கையெழுத்து மூலத்தில் இவ்விருத்தம் இவ்வாறு ஐந்து அடிகளுடன்காணப்பெறுவதாக ஆ.பா.கூறி இங்ஙனமே பதிப்பித்துள்ளார். தொ. வே.முதற்பதிப்பிலும் பின் பதிப்புகளிலும் `அலகிலா உணர்ச்சி அளித்தனை' என்னும்நான்காம் அடி இல்லை. `திலகநற்காழி' என்பதனை நான்காம் அடியாக அவர்கள் கொண்டனர். ஆசிரியவிருத்தம் நான்கடியின் மிக்கு வராது. பெருமானதுகையெழுத்து மூலங்களில் அடித்தல் திருத்தல்கள் உண்டு. பாடும் வேகத்தில் ஐந்தடியாக அமைந்த இதனைப் பெருமான் திருத்தியமைக்காதுவிட்டார்கள் போலும்.
- 190. இஃதோர் தனிப்பாடல். இதனை இவ்விடத்தில் சேர்த்துத் தொ.வே. பதிப்பித்துள்ளார்.
- கண்ணுளே விளங்குகின்ற மணியே சைவக்
- கனியேநா வரசேசெங் கரும்பே வேதப்
- பண்ணுளே விளைந்தஅருட் பயனே உண்மைப்
- பதியோங்கு நிதியேநின் பாதம் அன்றி
- விண்ணுளே அடைகின்ற போகம் ஒன்றும்
- விரும்பேன்என் றனையாள வேண்டுங் கண்டாய்
- ஒண்ணுளே ஒன்பதுவாய் வைத்தாய் என்ற
- உத்தமனே191 சித்தமகிழ்ந் துதவு வோனே.
- ஓங்காரத் தனிமொழியின் பயனைச் சற்றும்
- ஓர்கிலேன் சிறியேன்இவ் வுலக வாழ்வில்
- ஆங்காரப் பெருமதமால் யானை போல
- அகம்பாவ மயனாகி அலைகின் றேன்உன்
- பாங்காய மெய்யடியர் தம்மைச் சற்றும்
- பரிந்திலேன் அருளடையும் பரிசொன் றுண்டோ
- தீங்காய செயலனைத்தும் உடையேன் என்ன
- செய்வேன்சொல் லரசேஎன் செய்கு வேனே.
- செய்வகைஒன் றறியாத சிறியேன் இந்தச்
- சிற்றுலக வாழ்க்கையிடைச் சிக்கி அந்தோ
- பொய்வகையே புரிகின்றேன் புண்ணி யாநின்
- பொன்னடியைப் போற்றிலேன் புனித னேநான்
- உய்வகைஎவ் வகையாது செய்வேன் நீயே
- உறுதுணைஎன் றிருக்கின்றேன் உணர்வி லேனை
- மெய்வகையிற் செலுத்தநினைத் திடுதி யோசொல்
- வேந்தேஎன் உயிர்த்துணையாய் விளங்குங் கோவே.
- விளங்குமணி விளக்கெனநால் வேதத் துச்சி
- மேவியமெய்ப் பொருளை உள்ளே விரும்பி வைத்துக்
- களங்கறுமெய் யன்பரெல்லாங் களிப்ப அன்றோர்
- கற்றுணையாற் கடல்கடந்து கரையிற் போந்து
- துளங்குபெருஞ் சிவநெறியைச் சார்ந்த ஞானத்
- துணையேநந் துரையேநற் சுகமே என்றும்
- வளங்கெழும்ஆ கநநெறியை வளர்க்க வந்த
- வள்ளலே நின்னருளை வழங்கு வாயே.
- 191. எண்ணுகேன் என்சொல்லி எண்ணுகேனோஎம்பெருமான் திருவடியே எண்ணினல்லால்கண்ணிலேன் மற்றோர்களைகண் இல்லேன்கழலடியே கைதொழுது காணின்அல்லால்ஒண்ணுளே ஒன்பது வாசல்வைத்தாய்ஒக்க அடைக்கும்போ துணரமாட்டேன்புண்ணியா உன்னடிக்கே போதுகின்றேன்பூம்புகலூர் மேவிய புண்ணியனே.- 7215 (6-99-1) திருநாவுக்கரசர். திருப்புகலூர்த் திருத்தாண்டகம்.
- தேன்படிக்கும் அமுதாம்உன் திருப்பாட்டைத்193 தினந்தோறும்
- நான்படிக்கும் போதென்னை நானறியேன் நாஒன்றோ
- ஊன்படிக்கும் உளம்படிக்கும் உயிர்படிக்கும் உயிர்க்குயிரும்
- தான்படிக்கும் அனுபவங்காண் தனிக்கருணைப் பெருந்தனையே.
- இன்பாட்டுத் தொழிற்பொதுவில் இயற்றுகின்ற எம்பெருமான்
- உன்பாட்டுக் குவப்புறல்போல் ஊர்பாட்டுக் குவந்திலர்என்
- றென்பாட்டுக் கிசைப்பினும்என் இடும்பாட்டுக் கரணமெலாம்
- அன்பாட்டுக் கிசைவதுகாண் அருட்பாட்டுப் பெருந்தகையே.
- பெண்சுமந்த பாகப் பெருமான் ஒருமாமேல்
- எண்சுமந்த சேவகன்போல் எய்தியதும் வைகைநதி
- மண்சுமந்து நின்றதும்ஓர் மாறன் பிரம்படியால்
- புண்சுமந்து கொண்டதும்நின் பொருட்டன்றோ புண்ணியனே .
- வாதாகா வண்ண மணியேஎம் வல்லபைதன்
- நாதாகா வண்ண நலங்கொள்வான் - போதார்
- வனங்காத்து நீர்அளித்த வள்ளலே அன்பால்
- இனங்காத் தருளாய் எனை.
- சச்சிதானந்த வடிவம்நம் வடிவம் தகும்அதிட் டானம்மற் றிரண்டும்
- பொய்ச்சிதா பாசக் கற்பனை இவற்றைப் போக்கியாங் கவ்வடி வாகி
- அச்சிதா கார போதமும் அதன்மேல் ஆனந்த போதமும் விடுத்தல்
- மெய்ச்சிதாம் வீடென் றுரைத்தனை சித்தி விநாயக விக்கினேச் சுரனே.
- சத்தசத் தியல்மற் றறிந்துமெய்ப் போதத் தத்துவ நிலைபெற விழைவோர்
- சித்தமுற் றகலா தொளித்தநின் கமலச் சேவடி தொழஎனக் கருள்வாய்
- சுத்தசற் குணத்தெள் ளமுதெழு கடலே சுகபரி பூரணப் பொருளே
- வித்தக முக்கண் அத்தனே சித்தி விநாயக விக்கினேச் சுரனே.
- பெரும்பொருட் கிடனாம் பிரணவ வடிவில் பிறங்கிய ஒருதனிப் பேறே
- அரும்பொருள் ஆகி மறைமுடிக் கண்ணே அமர்ந்தபே ரானந்த நிறைவே
- தரும்பர போக சித்தியும் சுத்த தருமமும் முத்தியும் சார்ந்து
- விரும்பினோர்க் களிக்கும் வள்ளலே சித்தி விநாயக விக்கினேச் சுரனே.
- விண்ணவர் புகழும் மெய்கண்ட நாதன் வித்தகக் கபிலன்ஆ தியர்க்கே
- கண்அருள் செயும்நின் பெருமையை அடியேன் கனவிலும் நனவிலும் மறவேன்
- தண்அருட் கடலே அருட்சிவ போக சாரமே சராசர நிறைவே
- வண்ணமா மேனிப் பரசிவ களிறே வல்லபைக் கணேசமா மணியே.
- என்னை வேண்டிஎ னக்கருள் செய்தியேல் இன்னல் நீங்கும்நல் இன்பமும் ஓங்கும்நின்
- தன்னை வேண்டிச்ச ரண்புகுந் தேன்என்னைத் தாங்கிக் கொள்ளும்சரன்பிறி தில்லைகாண்
- அன்னைவேண்டிஅ ழும்மகப் போல்கின்றேன் அறிகி லேன்நின்தி ருவுளம் ஐயனே
- மின்னை வேண்டிய செஞ்சடையாளனே விளங்கும் சித்தி விநாயக வள்ளலே.
- தஞ்சம் என்றுனைச் சார்ந்தனன் எந்தைநீ தானும் இந்தச்ச கத்தவர் போலவே
- வஞ்சம் எண்ணி இருந்திடில் என் செய்வேன் வஞ்சம் அற்றம னத்துறை அண்ணலே
- பஞ்ச பாதகம் தீர்த்தனை என்றுநின் பாத பங்கயம் பற்றினன் பாவியேன்
- விஞ்ச நல்லருள் வேண்டித்த ருதியோ விளங்கும் சித்தி விநாயக வள்ளலே.
- கள்ள நெஞ்சகன் ஆயினும் ஐயநான் கள்ளம் இன்றிக்க ழறுகின் றேன்என
- துள்ளம் நின்திரு வுள்ளம்அ றியுமே ஓது கின்றதென் போதுக ழித்திடேல்
- வள்ள மாமலர்ப் பாதப்பெ ரும்புகழ் வாழ்த்தி நாத்தழும் பேறவ ழங்குவாய்
- வெள்ள வேணிப்பெ ருந்தகை யேஅருள் விளங்கும் சித்தி விநாயக வள்ளலே.
- ஆணி லேஅன்றி ஆருயிர்ப் பெண்ணிலே அலியி லேஇவ்வ டியனைப் போலவே
- காணி லேன்ஒரு பாவியை இப்பெருங் கள்ள நெஞ்சக்க டையனை மாயையாம்
- ஏணி லேஇடர் எய்தவி டுத்தியேல் என்செய் கேன்இனி இவ்வுல கத்திலே
- வீணி லே உழைப் பேன்அருள் ஐயனே விளங்கும் சித்தி விநாயக வள்ளலே.
- திங்கள்அம் கொழுந்து வேய்ந்த செஞ்சடைக் கொழுந்தே போற்றி
- மங்கைவல் லபைக்கு வாய்த்த மகிழ்நநின் மலர்த்தாள் போற்றி
- ஐங்கர நால்வாய் முக்கண் அருட்சிவ களிறே போற்றி
- கங்கையை மகிழும் செல்வக் கணேசநின் கழல்கள் போற்றி.
- அம்பொன்று செஞ்சடை அப்பரைப் போல்தன் அடியர்தம்துக்
- கம்பொன்றும் வண்ணம் கருணைசெய் தாளும் கருதுமினோ
- வம்பொன்று பூங்குழல் வல்லபை யோடு வயங்கியவெண்
- கொம்பொன்று கொண்டெமை ஆட்கொண் டருளிய குஞ்சரமே.
- திருமால் வணங்கத் திசைமுகன் போற்றச் சிவமுணர்ந்த
- இருமா தவர்தொழ மன்றகத் தாடு மிறைவடிவாக்
- குருமா மலர்ப்பிறை வேணியு முக்கணுங் கூறுமைந்து
- வருமா முகமுங்கொள் வல்லபை பாகனை வாழ்த்துதுமே.
- மாணித்த ஞான மருந்தேஎன் கண்ணின்உள் மாமணியே
- ஆணிப்பொன் னேஎன தாருயி ரேதணி காசலனே
- தாணிற்கி லேன்நினைத் தாழாத வஞ்சர் தமதிடம்போய்ப்
- பேணித் திரிந்தனன் அந்தோஎன் செய்வன்இப் பேதையனே.
- சிற்பகல் மேவும்இத் தேகத்தை ஒம்பித் திருஅனையார்
- தற்பக மேவிலைந் தாழ்ந்தேன் தணிகை தனில்அமர்ந்த
- கற்பக மேநின் கழல்கரு தேன்இக் கடைப்படும்என்
- பொற்பகம் மேவிய நின்அருள் என்என்று போற்றுவதே.
- போற்றேன் எனினும் பொறுத்திடல் வேண்டும் புவிநடையாம்
- சேற்றே விழுந்து தியங்குகின் றேனைச் சிறிதும்இனி
- ஆற்றேன் எனதர சேஅமு தேஎன் அருட்செல்வமே
- மேற்றேன் பெருகு பொழில்தணி காசல வேலவனே.
- குருவே அயன்அரி ஆதியர் போற்றக் குறைதவிர்ப்பான்
- வருவேல் பிடித்து மகிழ்வள்ள லேகுண மாமலையே
- தருவே தணிகைத் தயாநிதி யேதுன்பச் சாகரமாம்
- கருவேர் அறுத்திக் கடையனைக் காக்கக் கடன்உனக்கே.
- கேளாது போல்இருக் கின்றனை ஏழைஇக் கீழ்நடையில்
- வாளா இடர்கொண் டலறிடும் ஓலத்தை மாமருந்தே
- தோளா மணிச்சுட ரேதணி காசலத் து‘ய்ப்பொருளே
- நாளாயின் என்செய்கு வேன்இறப் பாய நவைவருமே.
- இருப்பாய மாய மனத்தால் வருந்தி இளைத்துநின்றேன்
- பொருப்பாய கன்மப் புதுவாழ்வில் ஆழ்ந்தது போதும்இன்றே
- கருப்பாழ் செயும்உன் சுழல்அடிக் கேஇக் கடையவனைத்
- திருப்பாய் எனில்என்செய் கேன்தணி காசலத் தெள்ளமுதே.
- சாரும் தணிகையில் சார்ந்தோய்நின் தாமரைத் தாள்துணையைச்
- சேரும் தொழும்பா திருப்பதம் அன்றிஇச் சிற்றடியேன்
- ஊரும் தனமும் உறவும் புகழும் உரைமடவார்
- வாருந் தணிமுலைப் போகமும் வேண்டிலன் மண்விண்ணிலே.
- அணிகொள் வேல்உடை அண்ணலே நின்திரு அடிகளை அன்போடும்
- பணிகி லேன்அகம் உருகிநின் றாடிலேன் பாடிலேன் மனமாயைத்
- தணிகி லேன்திருத் தணிகையை நினைகிலேன் சாமிநின் வழிபோகத்
- துணிகி லேன்இருந் தென்செய்தேன் பாவியேன் துன்பமும் எஞ்சேனே.
- களித்து நின்திருக் கழலிணை ஏழையேன் காண்பனோ அலதன்பை
- ஒளித்து வன்துயர் உழப்பனோ இன்னதென் றுணர்ந்திலேன் அருட்போதம்
- தெளித்து நின்றிடும் தேசிக வடிவமே தேவர்கள் பணிதேவே
- தளிர்த்த தண்பொழில் தணிகையில் வளர்சிவ தாருவே மயிலோனே.
- மயிலின் மீதுவந் தருள்தரும் நின்திரு வரவினுக் கெதிர்பார்க்கும்
- செயலி னேன்கருத் தெவ்வணம் முடியுமோ தெரிகிலேன் என்செய்கேன்
- அயிலின் மாமுதல் தடிந்திடும் ஐயனே ஆறுமா முகத்தேவே
- கயிலை நேர்திருத் தணிகைஅம் பதிதனில் கந்தன்என் றிருப்போனே.
- பாரும் விசும்பும் அறியஎனைப் பயந்த தாயும் தந்தையும்நீ
- ஒரும் போதிங் கெனில்எளியேன் ஒயாத் துயருற் றிடல்நன்றோ
- யாரும் காண உனைவாதுக் கிழுப்பேன் அன்றி என்செய்கேன்
- சேரும் தணிகை மலைமருந்தே தேனே ஞானச் செழுஞ்சுடரே.
- மின்நேர் உலக நடைஅதனால் மேவும் துயருக் காளாகிக்
- கல்நேர் மனத்தேன் நினைமறந்தென் கண்டேன் கண்டாய் கற்பகமே
- பொன்னே கடவுள் மாமணியே போதப் பொருளே பூரணமே
- தென்னேர் தணிகை மலைஅரசே தேவே ஞானச் செழுஞ்சுடரே.
- கையாத அன்புடையார் அங்கை மேவும்
- கனியேஎன் உயிரேஎன் கண்ணே என்றும்
- பொய்யாத பூரணமே தணிகை ஞானப்
- பொருளேநின் பொன்அருள்இப் போதியான் பெற்றால்
- உய்யாத குறைஉண்டோ துயர்சொல் லாமல்
- ஓடுமே யமன்பாசம் ஓய்ந்து போம்என்
- ஐயாநின் அடியரொடு வாழ்கு வேன்இங்
- கார்உனைஅல் லால்எனக்கின் றருள்செய் வாயே.
- அண்ணாவே நின்அடியை அன்றி வேறோர்
- ஆதரவிங் கறியேன்நெஞ் சழிந்து துன்பால்
- புண்ணாவேன் தன்னைஇன்னும் வஞ்சர் பாற்போய்ப்
- புலந்துமுக வாட்டம்உடன் புலம்பி நிற்கப்
- பண்ணாதே யாவன்இவன் பாவிக் குள்ளும்
- படுபாவி என்றென்னைப் பரிந்து தள்ள
- எண்ணாதே யான்மிகவும் ஏழை கண்டாய்
- இசைக்கரிய தணிகையில்வீற் றிருக்கும் கோவே.
- கோவேநல் தணிகைவரை அமர்ந்த ஞான
- குலமணியே குகனேசற் குருவே யார்க்கும்
- தேவேஎன் விண்ணப்பம் ஒன்று கேண்மோ
- சிந்தைதனில் நினைக்கஅருள் செய்வாய் நாளும்
- பூவேயும் அயன்திருமால் புலவர் முற்றும்
- போற்றும்எழில் புரந்தரன்எப் புவியும் ஓங்கச்
- சேவேறும் பெருமான்இங் கிவர்கள் வாழ்த்தல்
- செய்துவக்கும் நின்இரண்டு திருத்தாள் சீரே.
- பண்டுமன துவந்துகுணம் சிறிதும் இல்லாப்
- பாவியேன் தனைஆண்டாய் பரிவால் இன்று
- கொண்டுகுலம் பேசுதல்போல் எளியேன் குற்றம்
- குறித்துவிடில் என்செய்கேன் கொடிய னேனைக்
- கண்டுதிருத் தொண்டர்நகை செய்வார் எந்தாய்
- கைவிடேல் உன்ஆணை காண்முக் காலும்
- தண்துளவன் புகழ்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- அன்னைமுத லாம்பந்தத் தழுங்கி நாளும்
- அலைந்துவயி றோம்பிமனம் அயர்ந்து நாயேன்
- முன்னைவினை யாற்படும்பா டெல்லாம் சொல்லி
- முடியேன்செய் பிழைகருதி முனியேல் ஐயா
- பொன்னைநிகர் அருட்குன்றே ஒன்றே முக்கட்
- பூமணமே நறவேநற் புலவர் போற்றத்
- தன்னைநிகர் தரும்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- மின்னாளும் இடைமடவார் அல்கு லாய
- வெங்குழியில் வீழ்ந்தாழ்ந்து மெலிந்தேன் அல்லால்
- எந்நாளும் உனைப்போற்றி அறியேன் என்னே
- ஏழைமதி கொண்டேன்இங் கென்செய் கேனே
- அன்னாய்என அப்பாஎன் றரற்றும் அன்பர்க்
- காரமுதே அருட்கடலே அமரர் கோவே
- தன்னார்வத் தமர்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- உளந்தளர விழிசுருக்கும் வஞ்சர் பால்சென்
- றுத்தமநின் அடியைமறந் தோயா வெய்யில்
- இளந்தளிர்போல் நலிந்திரந்திங் குழலும் இந்த
- ஏழைமுகம் பார்த்திரங்காய் என்னே என்னே
- வளந்தருசற் குணமலையே முக்கட் சோதி
- மணியின்இருந் தொளிர்ஒளியே மயிலூர் மன்னே
- தளந்தரும்பூம் பொழில்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- கல்லாத வஞ்சகர்பால் சென்று வீணாள்
- கழித்து நிற்கும் கடையன்இவன் கருணை இல்லாப்
- பொல்லாத பாவிஎன எண்ணி என்னைப்
- புறம்போக்கில் ஐயாயான் புரிவ தென்னே
- எல்லாம்செய் வல்லவனே தேவர் யார்க்கும்
- இறைவனே மயில்ஏறும் எம்பி ரானே
- சல்லாப வளத்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- பாவவினைக் கோர்இடமாம் மடவார் தங்கள்
- பாழ்ங்குழிக்கண் வீழமனம் பற்றி அந்தோ
- மாவல்வினை யுடன்மெலிந்திங் குழல்கின் றேன்நின்
- மலர்அடியைப் போற்றேன்என் மதிதான் என்னே
- தேவர்தொழும் பொருளேஎன் குலத்துக் கெல்லாம்
- தெய்வமே அடியர்உளம் செழிக்கும் தேனே
- தாவகன்றோர் புகழ்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- உள்ளமனக் குரங்காட்டித் திரியும் என்றன்
- உளவறிந்தோ ஐயாநீ உன்னைப் போற்றார்
- கள்ளமனக் குரங்குகளை ஆட்ட வைத்தாய்
- கடையனேன் பொறுத்துமுடி கில்லேன் கண்டாய்
- தெள்ளமுதப் பெருங்கடலே தேனே ஞானத்
- தெளிவேஎன் தெய்வமே தேவர் கோவே
- தள்ளரிய புகழ்த்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- வந்தாள்வாய் ஐயாவோ வஞ்சர் தம்பால்
- வருந்துகின்றேன் என்றலறும் மாற்றம் கேட்டும்
- எந்தாய்நீ இரங்காமல் இருக்கின் றாயால்
- என்மனம்போல் நின்மனமும் இருந்த தேயோ
- கந்தாஎன் றுரைப்பவர்தம் கருத்துள் ஊறும்
- கனிரசமே கரும்பேகற் கண்டே நற்சீர்
- தந்தாளும் திருத்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- ஊர்ஆதி இகழ்மாயக் கயிற்றால் கட்டுண்
- டோய்ந்தலறி மனம்குழைந்திங் குழலு கின்றேன்
- பார்ஆதி அண்டம்எலாம் கணத்தில் காண்போய்
- பாவியேன் முகவாட்டம் பார்த்தி லாயோ
- சீர்ஆதி பகவன்அருட் செல்வ மேஎன்
- சிந்தைமலர்ந் திடஊறுந் தேனே இன்பம்
- சார்ஆதி மலைத்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- வாஎன்பார் இன்றிஉன தன்பர் என்னை
- வஞ்சகன்என் றேமறுத்து வன்க ணாநீ
- போஎன்பார் ஆகில்எங்குப் போவேன் அந்தோ
- பொய்யனேன் துணைஇன்றிப் புலம்பு வேனே
- கோஎன்பார்க் கருள்தருமக் குன்றே ஒன்றே
- குணங்குறிஅற் றிடஅருளும் குருவே வாழ்க்கைத்
- தாஎன்பார் புகழ்த்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- பன்னகநொந் துறுவஞ்ச உலகில் நின்று
- பரதவித்துன் அருட்கெதிர்போய்ப் பார்க்கின் றேன்நின்
- பொன்னருளைப் புணர்ந்துமன மகிழ்ந்து வாழப்
- புண்ணியனே நாயேற்குப் பொருத்தம் இன்றோ
- பின்னைஒரு துணைஅறியேன் தனியே விட்டால்
- பெருமநினக் கழகேயோ பேதை யாம்என்
- தன்னைஅளித் தருள்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- விண்அ றாதுவாழ் வேந்தன் ஆதியர்
- வேண்டி ஏங்கவும் விட்டென் நெஞ்சகக்
- கண்அ றாதுநீ கலந்து நிற்பதைக்
- கள்ள நாயினேன் கண்டு கொண்டிலேன்
- எண்அ றாத்துயர்க் கடலுள் மூழ்கியே
- இயங்கி மாழ்குவேன் யாது செய்குவேன்
- தண்அ ற்‘ப்பொழில் குலவும் போரி6 வாழ்
- சாமி யேதிருத் தணிகை நாதனே.
- வாட்கண் ஏழையர் மயலில் பட்டகம்
- மயங்கி மால்அயன் வழுத்தும் நின்திருத்
- தாட்கண் நேயம்அற் றுலக வாழ்க்கையில்
- சஞ்ச ரித்துழல் வஞ்ச னேன்இடம்
- ஆட்க ணேசுழல் அந்த கன்வரில்
- அஞ்சு வேன்அலால் யாது செய்குவேன்
- நாட்க ணேர்மலர்ப் பொழில்கொள் போரிவாழ்
- நாய காதிருத் தணிகை நாதனே.
- எண்ணில் புன்தொழில் எய்தி ஐயவோ
- இயல்பின் வாழ்க்கையில் இயங்கி மாழ்கியே
- கண்ணின் உண்மணி யாய நின்தனைக்
- கருதி டாதுழல் கபட னேற்கருள்
- நண்ணி வந்திவன் ஏழை யாம்என
- நல்கி ஆண்டிடல் நியாய மேசொலாய்
- தண்இ ரும்பொழில் சூழும் போரிவாழ்
- சாமி யேதிருத் தணிகை நாதனே.
- கூவி ஏழையர் குறைகள் தீரஆட்
- கொள்ளும் வள்ளலே குறுகும் வாழ்க்கையில்
- பாவி யேன்படும் பாட னைத்தையும்
- பார்த்தி ருந்தும்நீ பரிந்து வந்திலாய்
- சேவி யேன் எனில் தள்ளல் நீதியோ
- திருவ ருட்கொரு சிந்து வல்லையோ
- தாவி ஏர்வளைப் பயில்செய் போரிவாழ்
- சாமி யேதிருத் தணிகை நாதனே.
- செல்லும் வாழ்க்கையில் தியங்க விட்டுநின்
- செய்ய தாள்துதி செய்தி டாதுழல்
- கல்லும் வெந்நிடக் கண்டு மிண்டுசெய்
- கள்ள நெஞ்சினேன் கவலை தீர்ப்பையோ
- சொல்லும் இன்பவான் சோதி யேஅருள்
- தோற்ற மேசுக சொருப வள்ளலே
- சல்லி யங்கெட அருள்செய் போரிவாழ்
- சாமி யேதிருத் தணிகை நாதனே.
- ஏது செய்குவ னேனும் என்றனை
- ஈன்ற நீபொறுத் திடுதல் அல்லதை
- ஈது செய்தவன் என்றிவ் வேழையை
- எந்த வண்ணம்நீ எண்ணி நீக்குவாய்
- வாது செய்வன்இப் போது வள்ளலே
- வறிய னேன்என மதித்து நின்றிடேல்
- தாது செய்மலர்ப் பொழில்கொள் போரிவாழ்
- சாமி யேதிருத் தணிகை நாதனே.
- 6. போரி-திருப்போரூர்
- விடைய வாழ்க்கையை விரும்பினன் நின்திரு விரைமலர்ப் பதம்போற்றேன்
- கடைய நாயினேன் எவ்வணம் நின்திருக் கருணைபெற் றுய்வேனே
- விடையில் ஏறிய சிவபரஞ் சுடர்உளே விளங்கிய ஒளிக்குன்றே
- தடையி லாதபேர் ஆனந்த வெள்ளமே தணிகைஎம் பெருமானே.
- மலையும் வேற்கணார் மையலில் அழுந்தியே வள்ளல்நின் பதம்போற்றா
- தலையும் இப்பெருங் குறையினை ஐயகோ யாவரோ டுரைசெய்கேன்
- நிலைகொள் ஆனந்த நிருத்தனுக் கொருபொருள் நிகழ்த்திய பெருவாழ்வே
- தலைமை மேவிய சற்குரு நாதனே தணிகையம் பதியானே.
- என்னை என்னைஈ தென்றன் மாதவம்
- முன்னை நன்னெறி முயன்றி லேனைநின்
- பொன்னை அன்னதாள் போற்ற வைத்தனை
- அன்னை என்னும்நல் தணிகை அண்ணலே.
- வள்ளல் உன்அடி வணங்கிப் போற்றஎன்
- உள்ளம் என்வசத் துற்ற தில்லையால்
- எள்ளல் ஐயவோ ஏழைஎன் செய்கேன்
- தள்ள ரும்பொழில் தணிகை வெற்பனே.
- வெற்ப னேதிருத் தணிகை வேலனே
- பொற்ப னேதிருப் போரி நாதனே
- கற்ப மேல்பல காலம் செல்லுமால்
- அற்ப னேன்துயர்க் களவு சாற்றவே.
- தணிகை மேவிய சாமி யேநினை
- எணிகை விட்டிடேல் என்று தோத்திரம்
- அணிகை நின்அடிக் கயர்ந்து நின்றுவீண்
- கணிகை போல்எனைக் கலக்கிற் றுள்ளமே.
- மன்னும் நின்அருள் வாய்ப்ப தின்றியே
- இன்னும் இத்துயர் ஏய்க்கில் என்செய்கேன்
- பொன்னின் அம்புயன் போற்றும் பாதனே
- தன்னில் நின்றிடும் தணிகை மேலனே.
- வேத மாமுடி விளங்கும் நின்திருப்
- பாதம் ஏத்திடாப் பாவி யேன்தனக்
- கீதல் இன்றுபோ என்னில் என்செய்கேன்
- சாதல் போக்கும்நல் தணிகை நேயனே.
- தாழ்வேன் வஞ்ச நெஞ்சகர்பால் சார்வேன் தனக்குன் அருள்தந்தால்
- வாழ்வேன் இலையேல் என்செய்கேன் வருத்தம் பொறுக்க மாட்டேனே
- ஏழ்வே தனையும் கடந்தவர்தம் இன்பப் பெருக்கே என்உயிரே
- போழ்வேல் கரங்கொள் புண்ணியனே புகழ்சேர் தணிகைப் பொருப்பரசே.
- இருப்பேன் துயர்வாழ் வினில்எனினும் எந்தாய் நினது பதங்காணும்
- விருப்பேன் அயன்மால் முதலோரை வேண்டேன் அருள வேண்டாயோ
- திருப்பேர் ஒளியே அருட்கடலே தெள்ளார் அமுதே திருத்தணிகைப்
- பொருப்பே மகிழ்ந்த புண்ணியமே புனித ஞான போதகமே.
- போதா நந்த அருட்கனியே புகலற் கரிய பொருளேஎன்
- நாதா தணிகை மலைஅரசே நல்லோர் புகழும் நாயகனே
- ஓதா தவமே வருந்துயரால் உழன்றே பிணியில் உலைகின்றேன்
- ஏதாம் உனதின் அருள்ஈயா திருந்தால் அந்தோ எளியேற்கே.
- எளியேன் நினது திருவருளுக் கெதிர்நோக் குற்றே இரங்குகின்ற
- களியேன் எனைநீ கைவிட்டால் கருணைக் கியல்போ கற்பகமே
- அளியே தணிகை அருட்சுடரே அடியர் உறவே அருள்ஞானத்
- துளியே அமையும் எனக்கெந்தாய் வாஎன் றொருசொல் சொல்லாயே.
- நீற்றணி விளங்கும் அவர்க்கருள் புரியும்
- நின்அடிக் கமலங்கள் நினைந்தே
- போற்றிடா தவர்பால் பொய்யனேன் புகுதல்
- பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய்
- ஆற்றல்கொள் நின்பொன் அடியருக் கடியன்
- ஆச்செயில் உய்குவன் அமுதே
- சாற்றிடும் பெருமைக் களவிலா தோங்கும்
- தணிகைவாழ் சரவண பவனே.
- பார்க்கின் றிலையே பன்னிருகண் படைத்தும் எளியேன் பாடனைத்தும்
- தீர்க்கின் றிலையே என்னேயான் செய்வேன் சிறியேன் சீமானே
- போர்க்குன் றொடுசூர் புயக்குன்றும் பொடிசெய் வேற்கைப் புண்ணியனே
- சீர்க்குன் றெனும்நல் வளத்தணிகைத் தேவே மயில்ஊர் சேவகனே.
- சேவி யாதஎன் பிழைகளை என்னுளே சிறிதறி தரும்போதோ
- பாவி யேன்மனம் பகீலென வெதும்பியுள் பதைத்திடக் காண்கின்றேன்
- ஆவி யேஅருள் அமுதமே நின்திரு வருள்தனக் கென்னாமோ
- பூவில் நாயகன் போற்றிடும் தணிகையம் பொருப்பமர்ந் திடுவாழ்வே.
- துன்பி னால்அகம் வெதும்பிநைந் தயர்ந்துநின் துணைஅடி மலர்ஏத்தும்
- அன்பி லாதஇப் பாவியேன் செய்பிழை அனைத்தையும் பொறுப்பாயேல்
- வன்பி லாதநின் அடியவர் தம்திரு மனத்தினுக் கென்னாமோ
- இன்பி னால்சுரர் போற்றிடும் தணிகைவாழ் இறைவனே எம்மானே.
- வாழ்வில் ஆம்சிறு களிப்பினால் உன்றனை மறந்திறு மாக்கின்றேன்
- தாழ்வி லேசிறி தெண்ணிநொந் தயர்வன்என் தன்மைநன் றருளாளா
- கேழ்வி மேவிய அடியவர் மகிழ்வுறக் கிடைத்தருள் பெருவாழ்வே
- வேழ்வி8 ஓங்கிய தணிகைமா மலைதனில் விளங்கிவீற் றிருப்போனே.
- என்றும் மாதர்மேல் இச்சைவைத் துன்றனை எண்ணுவேன் துயருற்றால்
- கன்று நெஞ்சகக் கள்வனேன் அன்பினைக் கருத்திடை எணில்சால
- நன்று நன்றெனக் கெவ்வணம் பொன்அருள் நல்குவை அறிகில்லேன்
- துன்று மாதவர் போற்றிடும் தணிகைவாழ் சோதியே சுகவாழ்வே.
- சிறியேன்இப் போதேகித் திருத்தணிகை மலைஅமர்ந்த தேவின் பாதம்
- குறியேனோ ஆனந்தக் கூத்தாடி அன்பர்கள்தம் குழாத்துள் சென்றே
- அறியேனோ பொருள்நிலையை அறிந்தெனதென்பதைவிடுத்திவ்வகிலமாயை
- முறியேனோ உடல்புளகம் மூடேனோ நன்னெறியை முன்னி இன்றே.
- வாவா என்ன அருள்தணிகை மருந்தை என்கண் மாமணியைப்
- பூவாய் நறவை மறந்தவநாள் போக்கின் றதுவும் போதாமல்
- மூவா முதலின் அருட்கேலா மூட நினைவும் இன்றெண்ணி
- ஆவா நெஞ்சே எனைக்கெடுத்தாய் அந்தோ நீதான் ஆவாயோ.
- வாயாத் துரிசற் றிடும்புலவோர் வழுத்தும் தணிகை மலைஅமுதைக்
- காயாக் கனியை மறந்தவநாள் கழிக்கின் றதுவும் போதாமல்
- ஈயாக் கொடியர் தமக்கின்றி ஏலா நினைவும் இன்றெண்ணி
- மாயா என்றன் வாழ்வழித்தாய் மனமே நீதான் வாழ்வாயோ.
- வாழும் படிநல் அருள்புரியும் மருவுந் தணிகை மலைத்தேனைச்
- சூழும் கலப மயில்அரசைத் துதியாப் பவமும் போதாமல்
- வீழும் கொடியர் தமக்கன்றி மேவா நினைவும் மேவிஇன்று
- தாழும் படிஎன் தனைஅலைத்தாய் சவலை மனம்நீ சாகாயோ.
- காயோம் எனநின் றவர்க்கினிய கனியாம் தணிகைக் கற்பகத்தைப்
- போய்ஓர் கணமும் போற்றுகிலாய் புன்மை புரிந்தாய் புலங்கெட்டாய்
- பேயோ எங்கும் திரிந்தோடிப் பேணா என்பைப் பேணுகின்ற
- நாயோ மனமே நீஉனைநான் நம்பி வாளா நலிந்தேனே.
- தேனும் கடமும் திகழ்தணிகைத் தேவை நினையாய் தீநரகம்
- மானும் நடையில் உழல்கின்றாய் மனமே உன்றன் வஞ்சகத்தால்
- நானும் இழந்தேன் பெருவாழ்வை நாய்போல் அலைந்திங் கவமே9நீ
- தானும் இழந்தாய் என்னேஉன் தன்மை இழிவாம் தன்மையதே.
- இலதை நினைப்பாய் பித்தர்கள்போல் ஏங்கா நிற்பாய் தணிகையில்என்
- குலதெய் வமுமாய்க் கோவாய்சற் குருவாய் நின்ற குகன்அருளே
- நலதென் றறியாய் யான்செய்த நன்றி மறந்தாய் நாணாதென்
- வலதை அழித்தாய் வலதொடுநீ வாழ்வாய் கொல்லோ வல்நெஞ்சே.
- நெஞ்சே உகந்த துணைஎனக்கு நீஎன் றறிந்தே நேசித்தேன்
- மஞ்சேர் தணிகை மலைஅமுதை வாரிக் கொளும்போ தென்னுள்ளே
- நஞ்சே கலந்தாய் உன்உறவு நன்றே இனிஉன் நட்பகன்றால்
- உய்ஞ்சேன் இலையேல் வன்னரகத் துள்ளேன் கொள்ளேன் ஒன்றையுமே.
- இருந்தாய் இங்கு கண்டவிடத் தேகா நின்றாய் அவ்விடத்தும்
- பொருந்தாய் மீண்டும் புகுவாய்பின் போவாய் வருவாய் புகழ்த்தணிகை
- மருந்தாய் நின்ற குகன்அடியை வழுத்தாய் எனையும் வலிக்கின்றாய்
- திருந்தாய் நெஞ்சே நின்செயலைச் செப்ப எனக்குத் திடுக்கிடுமே.
- கரத்தைக் காட்டியே கண்களை நீட்டியே
- கடைய னேன்உயிர் வாட்டிய கன்னியர்
- உரத்தைக் காட்டி மயக்கம யங்கினேன்
- உன்றன் பாத உபயத்தைப் போற்றிலேன்
- புரத்தைக் காட்டு நகையின்எ ரித்ததோர்
- புண்ணி யற்குப் புகல்குரு நாதனே
- வரத்தைக் காட்டும் மலைத்தணி கேசனே
- வஞ்ச னேற்கருள் வாழ்வுகி டைக்குமோ.
- காசம் மேகம் கடும்பிணி சூலைமோ
- காதி யால்தந்து கண்கலக் கம்செயும்
- மோச மேநிசம் என்றுபெண் பேய்களை
- முன்னி னேன்நினை முன்னிலன் ஆயினேன்
- பாசம் நீக்கிடும் அன்பர்கள் போல்எனைப்
- பாது காக்கும் பரம்உனக் கையனே
- தேசம் யாவும் புகழ்தணி காசலச்
- செல்வ மேஅருட் சிற்சுக வாரியே.
- ஐயம் ஏற்றுத் திரிபவர் ஆயினும்
- ஆசை ஆம்பொருள் ஈந்திட வல்லரேல்
- குய்யம் காட்டும்ம டந்தையர் வாய்ப்பட்டுன்
- கோல மாமலர்ப் பாதம்கு றித்திலேன்
- மைஉ லாம்பொழில் சூழும்த ணிகைவாழ்
- வள்ள லேவள்ளி நாயக னேபுவிச்
- சைய றும்பர ஞானிகள் போற்றிடும்
- சாமி யேஎனைக் காப்பதுன் தன்மையே.
- கண்ணைக் காட்டி இருமுலை காட்டிமோ
- கத்தைக் காட்டி அகத்தைக்கொண் டேஅழி
- மண்ணைக் காட்டிடும் மாய வனிதைமார்
- மாலைப் போக்கிநின் காலைப் பணிவனோ
- பண்ணைக் காட்டி உருகும்அ டியர்தம்
- பத்திக் காட்டிமுத் திப்—‘ருள் ஈதென
- விண்ணைக் காட்டும் திருத்தணி காசல
- வேல னேஉமை யாள்அருள் பாலனே.
- ஆறாத் துயரம் தருங்கொடியார்க் காளாய் உழன்றிங் கலையாதே
- கூறாப் பெருமை நின்அடியார் கூட்டத் துடன்போய்க் குலாவும்வண்ணம்
- தேறாப் பொருளாம் சிவத்தொழுகும் தேனே தணிகைத் திருமலைவாழ்
- மாறாச் சுகமே நின்திருத்தாள் அடியேன் முடிமேல் வைப்பாயே.
- தணிகா சலம்போய்த் தழையேனோ சாமி திருத்தாள் விழையேனோ
- பணிகா தலித்துப் பிழையேனோ பாடி மனது குழையேனோ
- திணிகாண் உலகை அழையேனோ சேர்ந்தவ் வீட்டுள் நுழையேனோ
- பிணிகாண் உலகில் பிறந்துழன்றே பேதுற் றலையும் பழையேனே.
- தேனே உளங்கொள் தெளிவே அகண்ட சிதம்மேவி நின்ற சிவமே
- கோனே கனிந்த சிவபோத ஞான குருவே விளங்கு குகனே
- தானே தனக்கு நிகராய் விளங்கு தணிகா சலத்தெம் அரசே
- நானே ழைஇங்கு மனம்நொந்து நொந்து நலிகின்ற செய்கை நலமோ.
- முதுவோர் வணங்கு தணிகா சலத்து முதலேஇவ் வேழை முறியேன்
- மதுவால் மயங்கும் அளிபோல் மயங்கி மதியாது நின்ற பிழையால்
- விதுவாகி அன்பர் உளம்மேவும் நீகை விடில்ஏழை எங்கு மெலிவேன்
- இதுநீதி அல்ல எனஉன் றனக்கும் எவர்சொல்ல வல்லர் அரசே.
- காமாந்த காரியாய் மாதர் அல்குல்
- கடல்வீழ்ந்தேன் மதிதாழ்ந்தேன் கவலை சூழ்ந்தேன்
- நாமாந்த கனைஉதைத்த நாதன் ஈன்ற
- நாயகமா மணியேநல் நலமே உன்றன்
- பூமாந்தண் சேவடியைப் போற்றேன் ஓங்கும்
- பொழில்கொள்தணி காசலத்தைப் புகழ்ந்து பாடேன்
- ஏமாந்த பாவியேன் அந்தோ அந்தோ
- ஏன்பிறந்தேன் புவிச்சுமையா இருக்கின் றேனே.
- பண்ணேன்நின் புகழ்சொல்வோர் தமக்குப் பூசை
- பாடேன்நின் திருச்சீரைப் பரமன் ஈன்ற
- கண்ணேநின் தணிகைதனைக் கண்டு போற்றேன்
- கைகுவியேன் மெய்குளிரேன் கண்ர் பாயேன்
- உண்ணேன்நல் ஆனந்த அமுதை அன்பர்
- உடன்ஆகேன் ஏகாந்தத் துறஓர் எண்ணம்
- எண்ணேன்வன் துயர்மண்ணேன் மனஞ்செம் புண்ணேன்
- ஏன்பிறந்தேன் புவிச்சுமையா இருக்கின் றேனே.
- போதல் இருத்தல் எனநினையாப் புனிதர் சனனப் போரோடு
- சாதல் அகற்றும் திருத்தணிகைச் சைவக் கனியே தற்பரமே
- ஓதல் அறியா வஞ்சகர்பால் உழன்றே மாதர்க் குள்ளுருகும்
- காதல் அகற்றி நின்உருவைக் கண்கள் ஆரக் கண்டிலனே.
- இலக்கம் அறியா இருவினையால் இம்மா னிடம்ஒன் றெடுத்தடியேன்
- விலக்கம் அடையா வஞ்சகர்பால் வீணாட் போக்கி மேவிமனத்
- தலக்கண் இயற்றும் பொய்வாழ்வில் அலைந்தேன் தணிகை அரசேஅக்
- கலக்கம் அகன்று நின்உருவைக் கண்கள் ஆரக் கண்டிலனே.
- வஞ்சகப் பேதையர் மயக்கில் ஆழ்ந்துழல்
- நெஞ்சகப் பாவியேன் நினைந்தி லேன்ஐயோ
- வெஞ்சகப் போரினை விட்டு ளோர்புகழ்
- தஞ்சகத் தணிகைவாழ் தரும வானையே.
- வைவளர் வாட்கணார் மயக்கில் வீழ்ந்தறாப்
- பொய்வளர் நெஞ்சினேன் போற்றி லேன்ஐயோ
- மெய்வளர் அன்பர்கள் மேவி ஏத்துறும்
- செய்வளர் தணிகையில் செழிக்கும் தேனையே.
- மெய்யாவோ நற்றணிகை மலையைச் சார்ந்து
- மேன்மையுறும் நின்புகழை விரும்பி ஏத்தேன்
- உய்யாவோ வல்நெறியேன் பயன்ப டாத
- ஓதிஅனையேன் எட்டிதனை ஒத்தேன் அன்பர்
- பொய்யாஓ டெனமடவார் போகம் வேட்டேன்
- புலையனேன் சற்றேனும் புனிதம் இல்லேன்
- ஐயாவோ நாணாமல் பாவி யேன்யான்
- யார்க்கெடுத்தென் குறைதன்னை அறைகு வேனே.
- வாட்செல்லா நெடுங்கண்ணார் மயலில் வீழ்ந்து
- மனம்போன வழிசென்று வருந்தா நின்றேன்
- சேட்செல்லார் வரைத்தணிகைத் தேவ தேவே
- சிவபெருமான் பெற்றபெருஞ் செல்வ மேநான்
- நாட்செல்லா நின்றதினி என்செய் கேனோ
- நாயினேன் பிழைதன்னை நாடி நின்பால்
- கோட்சொல்லா நிற்பர்எனில் என்னா மோஎன்
- குறையைஎடுத் தெவர்க்கெளியேன் கூறு கேனே.
- முன்அறியேன் பின்அறியேன் மாதர் பால்என்
- மூடமனம் இழுத்தோடப் பின்சென் றெய்த்தேன்
- புன்னெறியேன் பொய்யரொடும் பயின்றேன் நின்றன்
- புனிதஅருட் கடலாடேன் புளகம் மூடேன்
- பொன்அரையன் தொழும்சடிலப் புனிதன் ஈன்ற
- புண்ணியமே தணிகைவளர் போத வாழ்வே
- என்அரைசே என்அமுதே நின்பால் அன்றி
- எவர்க்கெடுத்தென் குறைதன்னை இயம்பு கேனே.
- விடுமாட்டில் திரிந்துமட மாத ரார்தம்
- வெய்யநீர்க் குழிவீழ்ந்து மீளா நெஞ்சத்
- தடுமாற்றத் தொடும்புலைய உடலை ஓம்பிச்
- சார்ந்தவர்க்கோர் அணுஅளவும் தான்ஈ யாது
- படுகாட்டில் பலன்உதவாப் பனைபோல் நின்றேன்
- பாவியேன் உடற்சுமையைப் பலரும் கூடி
- இடுகாட்டில் வைக்குங்கால் என்செய் வேனோ
- என்குறையை எவர்க்கெடுத்திங் கியம்பு கேனே.
- மின்னைநேர் இடைமடவார் மயல்செய் கின்ற
- வெங்குழியில் வீழ்ந்தழுந்தி வெறுத்தேன் போலப்
- பின்னையே எழுந்தெழுந்து மீட்டும் மீட்டும்
- பேய்போல வீழ்ந்தாடி மயற்குள் மூழ்கிப்
- பொன்னையே ஒத்தஉன தருளை வேண்டிப்
- போற்றாது வீணேநாள் போக்கு கின்ற
- என்னையே யான்சிரிப்பேன் ஆகில் அந்தோ
- என்குறையை எவர்க்கெடுத்திங் கியம்பு கேனே.
- வேய்ப்பால்மென் தோள்மடவார் மறைக்கும் மாய
- வெம்புழுச்சேர் வெடிப்பினிடை வீழ்ந்து நின்றேன்
- தாய்ப்பாலை உண்ணாது நாய்ப்பால் உண்ணும்
- தகையனேன் திருத்தணிகை தன்னைச் சார்ந்து
- ஆய்ப்பாலை ஒருமருங்கான் ஈன்ற செல்வத்
- தாரமுதே நின்அருளை அடையேன் கண்டாய்
- ஏய்ப்பாலை நடுங்கருங்கல் போல்நின் றெய்த்தேன்
- என்குறையை எவர்க்கெடுத்திங் கியம்பு கேனே.
- வஞ்சமட மாதரார் போகம் என்னும்
- மலத்தினிடைக் கிருமிஎன வாளா வீழ்ந்தேன்
- கஞ்சமலர் மனையானும் மாலும் தேடக்
- காணாத செங்கனியில் கனிந்த தேனே
- தஞ்சம் என்போர்க் கருள்புரியும் வள்ளலேநல்
- தணிகைஅரை சேஉனது தாளைப் போற்றேன்
- எஞ்சல்இலா வினைச்சேம இடமாய் உற்றேன்
- என்குறையை எவர்க்கெடுத்திங் கியம்பு கேனே.
- பொன்னைப் பொருளா நினைப்போர்பால் போந்து மிடியால் இரந்தலுத்தேன்
- நின்னைப் பொருள்என் றுணராத நீசன் இனிஓர் நிலைகாணேன்
- மின்னைப் பொருவும் சடைப்பவள வெற்பில் விளைந்த வியன்கரும்பே
- முன்னைப் பொருளே தணிகையனே முறையோ முறையோ முறையேயோ.
- பொன்னின் றொளிரும் மார்பன்அயன் போற்றும் உன்தாள் புகழ்மறந்தே
- கன்னின் றணங்கும் மனத்தார்பால் கனிந்தேன் இனிஓர் துணைகாணேன்
- மின்னின் றிலங்கு சடைக்கனியுள் விளைந்த நறவே மெய்அடியார்
- முன்னின் றருளும் தணிகையனே முறையோ முறையோ முறையேயோ.
- வெதிர்உள் ளவரின் மொழிகேளா வீண ரிடம்போய் மிகமெலிந்தே
- அதிரும் கழற்சே வடிமறந்தேன் அந்தோ இனிஓர் துணைகாணேன்
- எதிரும் குயில்மேல் தவழ்தணிகை இறையே முக்கண் இயற்கனியின்
- முதிரும் சுவையே முதற்பொருளே முறையோ முறையோ முறையேயோ.
- ஈனத் திவறும் மனக்கொடியோர் இடம்போய் மெலிந்து நாள்தோறும்
- ஞானத் திருத்தாள் துணைசிறிதும் நாடேன் இனிஓர் துணைகாணேன்
- தானத் தறுகண் மலைஉரியின் சட்டை புனைந்தோன் தரும்பேறே
- மோனத் தவர்த்ம் அகவிளக்கே முறையோ முறையோ முறையேயோ.
- தேவே எனநிற் போற்றாத சிறிய ரிடம்போய்த் தியங்கிஎன்றன்
- கோவே நின்றன் திருத்தாளைக் குறிக்க மறந்தேன் துணைகாணேன்
- மாவே ழத்தின் உரிபுனைந்த வள்ளற் கினிய மகப்பேறே
- மூவே தனையை அறுத்தருள்வோய் முறையோ முறையோ முறையேயோ.
- வேதா நந்த னொடுபோற்றி மேவப் படும்நின் பதம்மறந்தே
- ஈதா னம்தந் திடுவீர்என் றீன ரிடம்போய் இரந்தலைந்தேன்
- போதா னந்தப் பரசிவத்தில் போந்த பொருளே பூரணமே.
- மூதா னந்த வாரிதியே முறையோ முறையோ முறையேயோ.
- வடியாக் கருணை வாரிதியாம் வள்ளல் உன்தாள் மலர்மறந்தே
- கொடியா ரிடம்போய்க்குறையிரந்தேன் கொடியேன் இனிஓர் துணைகாணேன்
- அடியார்க் கெளிய முக்கணுடை அம்மான் அளித்த அருமருந்தே
- முடியா முதன்மைப் பெரும்பொருளே முறையோ முறையோ முறையேயோ.
- மதியில் நெஞ்சினேன் ஓதியினை அனையேன்
- மாதர் கண்எனும் வலையிடைப் பட்டேன்
- பதியில் ஏழையேன் படிற்றுவஞ் சகனேன்
- பாவி யேன்எந்தப் பரிசுகொண் டடைவேன்
- பொதியில் ஆடிய சிவபிரான் அளித்த
- புண்ணி யாஅருட் போதக நாதா
- துதிஇ ராமனுக் கருள்செயும் தணிகைத்
- து‘ய னேபசுந் தோகைவா கனனே.
- மன்னப்பார் போற்று மணியேநின் பொன்னருளைத்
- துன்னப்பா ராது சுழன்றேன் அருணைகிரி
- தன்னப்பா நற்றணிகை தன்னில் அமர்ந்தருளும்
- என்னப்பா இன்னும் இந்த ஏழைக் கிரங்காயோ.
- காய்நின்ற நெஞ்சக் கடையேன் திருத்தணிகை
- வாய்நின் றுனதுபுகழ் வாய்பாடக் கைகுவித்துத்
- தூய்நின்றே தாளைத்தொழுதாடித் துன்பம்எலாம்
- போய்நின் றடைவேனோ புண்ணியநின் பொன்னருளே.
- பொன்பிணிக்கும் நெஞ்சப் புலையேனை இவ்வுலகில்
- வன்பிணிக்கோ பெற்று வளர்த்தாய் அறியேனே
- என்பிணைத்தார் வள்ளற் கினிமை பெறும்மணியே
- அன்பிணைத்தோர் போற்றும் அருட்டணிகை மன்னவனே.
- வன்நோயும் வஞ்சகர்தம் வன்சார்பும் வன்துயரும்
- என்னோயுங் கொண்டதனை எண்ணி இடிவேனோ
- அன்னோ முறைபோகி ஐயா முறையேயோ
- மன்னோ முறைதணிகை வாழ்வே முறையேயோ.
- மால்ஏந்திய குழலார்தரு மயல்போம்இடர் அயல்போம்
- கோல்ஏந்திய அரசாட்சியும் கூடும்புகழ் நீடும்
- மேல்ஏந்திய வானாடர்கள் மெலியாவிதம் ஒருசெவ்
- வேல்ஏந்திய முருகாஎன வெண்றணிந் திடிலே.
- போதுகொண் டவனும் மாலும்நின் றேத்தும்
- புண்ணிய நின்திரு அடிக்கே
- யாதுகொண் டடைகேன் யாதுமேற் செய்கேன்
- யாதுநின் திருஉளம் அறியேன்
- தீதுகொண் டவன்என் றெனக்கருள் சிறிதும்
- செய்திடா திருப்பையோ சிறியோன்
- ஏதிவன் செயல்ஒன் றிலைஎனக் கருதி
- ஈவையோ தணிகைவாழ் இறையே.
- என்னே குறைநமக் கேழைநெஞ் சேமயில் ஏறிவரும்
- மன்னே எனநெடு மாலும் பிரமனும் வாழ்த்திநிற்கும்
- தன்னேர் தணிகைத் தடமலை வாழும்நற் றந்தைஅருள்
- பொன்னேர் திருவடிப் போதுகண் டாய்நம் புகலிடமே.
- பேதைநெஞ் சேஎன்றன் பின்போந் திடுதிஇப் பேயுலக
- வாதைஅஞ் சேல்பொறி வாய்க்கலங் கேல்இறை யும்மயங்கேல்
- போதையெஞ் சேல்தணி காசலம் போய்அப் பொருப்பமர்ந்த
- தாதைஅஞ் சேவடிக் கீழ்க்குடி யாகத் தயங்குவமே.
- வாழும்இவ் வுலக வாழ்க்கையை மிகவும்
- வலித்திடும் மங்கையர் தம்பால்
- தாழும்என் கொடிய மனத்தினை மீட்டுன்
- தாள்மலர்க் காக்கும்நாள் உளதோ
- சூழும்நெஞ் சிருளைப் போழும்மெய் ஒளியே
- தோற்றம்ஈ றற்றசிற் சுகமே
- ஊழும்உற் பவம்ஓர் ஏழும்விட் டகல
- உதவுசீர் அருட்பெருங் குன்றே.
- விதுவாழ் சடையார் விடைமேல் வருவார்
- விதிமால் அறியா விமலனார்
- மதுவாழ் குழலாள் புடைவாழ் உடையார்
- மகனார் குகனார் மயில்ஊர்வார்
- முதுவாழ் வடையா தவமே அலைவேன்
- முன்வந் திடயான் அறியாதே
- புதுவாழ் வுடையார் எனவே மதிபோய்
- நின்றேன் அந்தோ பொல்லேனே.
- பொன்னார் புயனார் புகழும் புகழார்
- புலியின் அதளார் புயம்நாலார்
- தென்னார் சடையார் கொடிமேல் விடையார்
- சிவனார் அருமைத் திருமகனார்
- என்நா யகனார் என்னுயிர் போல்வார்
- எழின்மா மயிலார் இமையோர்கள்
- தந்நா யகனார் தணிகா சலனார்
- தனிவந் திவண்மால் தந்தாரே.
- காரூர் சடையார் கனலார் மழுவார்
- கலவார் புரமூன் றெரிசெய்தார்
- ஆரூர் உடையார் பலிதேர்ந் திடும்எம்
- அரனார் அருமைத் திருமகனார்
- போரூர் உறைவார் தணிகா சலனார்
- புதியார் எனஎன் முனம்வந்தார்
- ஏரூர் எமதூ ரினில்வா என்றார்
- எளியேன் ஏமாந் திருந்தேனே.
- மழுவார் தருகைப் பெருமான் மகனார்
- மயில்வா கனனார் அயில்வேலார்
- தழுவார் வினையைத் தணியார் அணியார்
- தணிகா சலனார் தம்பாதம்
- தொழுவார் அழுவார் விழுவார் எழுவார்
- துதியா நிற்பார் அவர்நிற்கப்
- புழுவார் உடலோம் பிடும்என் முனர்வந்
- தருள்தந் தருளிப் போனாரே.
- வேதனைச் சிறைக்குள் வேதனை படச்செய்
- விமலனை அமலனை அற்பர்
- போதனைக் கடங்காப் போதனை ஐந்தாம்
- பூதனை மாதவர் புகழும்
- பாதனை உமையாள் பாலனை எங்கள்
- பரமனை மகிழ்விக்கும் பரனைத்
- தாதனை உயிர்க்குள் உயிரனை யவனைத்
- தணிகையில் கண்டிறைஞ் சுவனே.
- கடைய னேன்இன்னும் எத்தனை நாள்செலும் கடுந்துயர்க் கடல்நீந்த
- விடையின் ஏறிய சிவபிரான் பெற்றருள் வியன்திரு மகப்பேறே
- உடைய நாயகிக் கொருபெருஞ் செல்வமே உலகெலாம் அளிப்போனே
- அடைய நின்றவர்க் கருள்செயுந் தணிகைவாழ் ஆனந்தத் தெளிதேனே.
- புலைய மாதர்தம் போகத்தை விழைந்தேன்
- புன்மை யாவைக்கும் புகலிடம் ஆனேன்
- நிலைய மாம்திருத் தணிகையை அடையேன்
- நிருத்தன் ஈன்றருள் நின்மலக் கொழுந்தே
- விலையி லாதநின் திருவருள் விழையேன்
- வீணர் தங்களை விரும்பிநின் றலைந்தேன்
- இலைஎ னாதணு வளவும் ஒன்றீயேன்
- என்செய் வான்பிறந் தேன்எளி யேனே.
- 12. வித்து - விச்சு, என்றாற்போல, சத்து - சச்சு எனப் போலியாயிற்று. தொ.வே.
- மாவீழ்ந்திடு விடையார்திரு மகனார்பசு மயில்மேல்
- நீவீழ்ந்திட நின்றார்அது கண்டேன்என்றன் நெஞ்சே
- பூவீழ்ந்தது வண்டேமதி போய்வீழ்ந்தது வண்டே
- நாவீழ்ந்தது மலரேகழை நாண்வீழ்ந்தது மலரே.
- வெற்றார்புரம் எரித்தார்தரும் மேலார்மயில் மேலே
- உற்றார்அவர் எழில்மாமுகத் துள்ளேநகை கண்டேன்
- பொற்றார்புயங் கண்டேன்துயர் விண்டேன்எனைப் போல
- மற்றார்பெறு வாரோஇனி வாழ்வேன்மனம் மகிழ்ந்தே.
- கண்ணிமதி புனைந்தசடைக் கனியே முக்கட்
- கரும்பேஎன் கண்ணேமெய்க் கருணை வாழ்வே
- புண்ணியநல் நிலைஉடையோர் உளத்தில் வாய்க்கும்
- புத்தமுதே ஆனந்த போக மேஉள்
- எண்ணியமெய்த் தவர்க்கெல்லாம் எளிதில் ஈந்த
- என்அரசே ஆறுமுகத் திறையாம் வித்தே
- திண்ணியஎன் மனம்உருக்கிக் குருவாய் என்னைச்
- சிறுகாலை ஆட்கொண்ட தேவ தேவ.
- நின்னிருதாள் துணைபிடித்தே வாழ்கின் றேன்நான்
- நின்னைஅலால் பின்னைஒரு நேயம் காணேன்
- என்னைஇனித் திருவுளத்தில் நினைதி யோநான்
- ஏழையினும் ஏழைகண்டாய் எந்தாய் எந்தாய்
- பொன்னைஅன்றி விரும்பாத புல்லர் தம்பால்
- போகல்ஒழிந் துன்பதமே போற்றும் வண்ணம்
- சின்னம்அளித் தருட்குருவாய் என்னை முன்னே
- சிறுகாலை ஆட்கொண்ட தேவ தேவே.
- மாறாத பெருஞ்செல்வ யோகர் போற்றும்
- மாமணியே ஆறுமுக மணியே நின்சீர்
- கூறாத புலைவாய்மை உடையார் தம்மைக்
- கூடாத வண்ணம்அருட் குருவாய் வந்து
- தேறாத நிலைஎல்லாம் தேற்றி ஓங்கும்
- சிவஞானச் சிறப்படைந்து திகைப்பு நீங்கிச்
- சீறாத வாழ்விடைநான் வாழ என்னைச்
- சிறுகாலை ஆட்கொண்ட தேவ தேவே.
- கற்பனையே எனும்உலகச் சழக்கில் அந்தோ
- கால்ஊன்றி மயங்குகின்ற கடைய னேனைச்
- சொற்பனம்இவ் வுலகியற்கை என்று நெஞ்சம்
- துணிவுகொளச் செய்வித்துன் துணைப்பொற் றாளை
- அற்பகலும் நினைந்துகனிந் துருகி ஞான
- ஆனந்த போகம்உற அருளல் வேண்டும்
- சிற்பரசற் குருவாய்வந் தென்னை முன்னே
- சிறுகாலை ஆட்கொண்ட தேவ தேவே.
- புகுவா னவர்தம் இடர்முழுதும் போக்கும் கதிர்வேல் புண்ணியனே
- மிகுவான் முதலாம் பூதம்எலாம் விதித்தே நடத்தும் விளைவனைத்தும்
- தகுவான் பொருளாம் உனதருளே என்றால் அடியேன் தனைஇங்கே
- நகுவான் வருவித் திருள்நெறிக்கே நடத்தல் அழகோ நவிலாயே.
- ஆக்கும் தொழிலால் களித்தானை அடக்குந் தொழிலால் அடக்கிப்பின்
- காக்கும் தொழிலால் அருள்புரிந்த கருணைக் கடலே கடைநோக்கால்
- நோக்கும் தொழில்ஓர் சிறிதுன்பால் உளதேல் மாயா நொடிப்பெல்லாம்
- போக்கும் தொழில்என் பால்உண்டாம் இதற்கென் புரிவேன் புண்ணியனே.
- விளைப்பேன் பவமே அடிச்சிறியேன் வினையால் விளையும் வினைப்போகம்
- திளைப்பேன் எனினும் கதிர்வடிவேல் தேவே என்னும் திருமொழியால்
- இளைப்பேன் அலன்இங் கியம்புகிற்பேன் எனக்கென் குறையுண் டெமதூதன்
- வளைப்பேன் எனவந் திடில்அவனை மடிப்பேன் கருணை வலத்தாலே.
- காயா தளியக் கனிந்தன்பால் கல்லால் அடிநின் றருள்ஒழுகும்
- கனியுட் சுவையே அடியர்மனக் கவலை அகற்றும் கற்பகமே
- ஓயா துயிர்க்குள் ஒளித்தெவையும் உணர்த்தி அருளும் ஒன்றேஎன்
- உள்ளக் களிப்பே ஐம்பொறியும் ஒடுக்கும் பெரியோர்க் கோர்உறவே
- தேயாக் கருணைப் பாற்கடலே தெளியா அசுரப் போர்க்கடலே
- தெய்வப் பதியே முதற்கதியே திருச்செந் தூரில் திகழ்மதியே
- தாயாய் என்னைக் காக்கவரும் தனியே பரம சற்குருவே
- தணிகா சலமாம் தலத்தமர்ந்த சைவ மணியே சண்முகனே.
- நாணும் அயன்மால் இந்திரன்பொன் நாட்டுப் புலவர் மணம்வேட்ட
- நங்கை மார்கள் மங்கலப்பொன் நாண்காத் தளித்த நாயகமே
- சேணும் புவியும் பாதலமும் தித்தித் தொழுகும் செந்தேனே
- செஞ்சொற் சுவையே பொருட்சுவையே சிவன்கைப் பொருளே செங்கழுநீர்ப்
- பூணும் தடந்தோட்பெருந் தகையே பொய்யர் அறியாப் புண்ணியமே
- போகங் கடந்த யோகியர்முப் போகம் விளைக்கும் பொற்புலமே
- தாணு என்ன உலகமெலாம் தாங்கும் தலைமைத் தயாநிதியே
- தணிகா சலமாம் தலத்தமர்ந்த சைவ மணியே சண்முகனே.
- முன்னைப் பொருட்கு முதற்பொருளே முடியா தோங்கும் முதுமறையே
- முக்கட் கரும்பீன் றெடுத்தமுழு முத்தே முதிர்ந்த முக்கனியே
- பொன்னைப் புயங்கொண் டவன்போற்றும் பொன்னே புனித பூரணமே
- போத மணக்கும் புதுமலரே புலவர் எவரும் புகும்பதியே
- மின்னைப் பொருவும் உலகமயல் வெறுத்தோர் உள்ள விளக்கொளியே
- மேலும் கீழும் நடுவும்என விளங்கி நிறைந்த மெய்த்தேவே
- தன்னைப் பொருவும் சிவயோகம் தன்னை உடையோர் தம்பயனே
- தணிகா சலமாம் தலத்தமர்ந்த சைவ மணியே சண்முகனே.
- ஏதம் நிறுத்தும் இவ்வுலகத் தியல்பின் வாழ்க்கை யிடத்தெளியேன்
- எண்ணி அடங்காப் பெருந்துயர்கொண் டெந்தாய் அந்தோ இளைக்கின்றேன்
- வேதம் நிறுத்தும் நின்கமல மென்தாள் துணையே துணைஅல்லால்
- வேறொன் றறியேன் அஃதறிந்திவ் வினையேற் கருள வேண்டாவோ
- போத நிறுத்தும் சற்குருவே புனித ஞானத் தறிவுருவே
- பொய்யர் அறியாப் பரவெளியே புரம்மூன் றெரித்தோன் தரும்ஒளியே
- சாதல் நிறுத்தும் அவருள்ளத் தலம்தாள் நிறுத்தும் தயாநிதியே
- தணிகா சலமாம் தலத்தமர்ந்த சைவ மணியே சண்முகனே.
- முருகா எனநின் றேத்தாத மூட ரிடம்போய் மதிமயங்கி
- முன்னும் மடவார் முலைமுகட்டின் முயங்கி அலைந்தே நினைமறந்தேன்
- உருகா வஞ்ச மனத்தேனை உருத்தீர்த் தியமன் ஒருபாசத்
- துடலும் நடுங்க விசிக்கில்அவர்க் குரைப்ப தறியேன் உத்தமனே
- பருகா துள்ளத் தினித்திருக்கும் பாலே தேனே பகர்அருட்செம்
- பாகே தோகை மயில்நடத்தும் பரமே யாவும் படைத்தோனே
- தருகா தலித்தோன் முடிகொடுத்த தரும துரையே தற்பரனே
- தணிகா சலமாந் தலத்தமர்ந்த சைவ மணியே சண்முகனே.
- தேடுங் கிளிநீ நின்னை விளம்பித் திருஅன்னார்
- அடுந் தணிகையில் என்உயிர் அன்னார் அருகேபோய்க்
- கூடும் தனமிசை என்பெயர் வைத்தக் கோதைக்கே
- ஈடும் கெடஇன் றென்னையும் ஈந்தருள் என்பாயே.
- பொன்னை இருத்தும் பொன்மலர் எகினப் புள்ளேநீ
- அன்னை இகழ்ந்தே அங்கலர் செய்வான் அனுராகம்
- தன்னை அளிக்குந் தண்டணி கேசர் தம்பாற்போய்
- என்னை இகழ்ந்தாள் என்செயல் கொண்டாள் என்பாயே.
- கங்கையஞ் சடைசேர் முக்கட் கரும்பருள் மணியே போற்றி
- அங்கையங் கனியே போற்றி அருட்பெருங் கடலே போற்றி
- பங்கையன் முதலோர் போற்றும் பரம்பரஞ் சுடரே போற்றி
- சங்கைதீர்த் தருளும் தெய்வச் சரவண பவனே போற்றி.
- பனிப்பற அருளும் முக்கட் பரஞ்சுடர் ஒளியே போற்றி
- இனிப்புறு கருணை வான்தேன் எனக்கருள் புரிந்தாய் போற்றி
- துனிப்பெரும் பவந்தீர்த் தென்னைச் சுகம்பெற வைத்தோய் போற்றி
- தனிப்பெருந் தவமே போற்றி சண்முகத் தரசே போற்றி.
- மணப்புது மலரே தெய்வ வான்சுவைக் கனியே போற்றி
- தணப்பற அடியர்க் கின்பம் தரும்ஒரு தருவே போற்றி
- கணப்பெருந் தலைவர் ஏத்தும் கழற்பதத் தரசே போற்றி
- குணப்பெருங் குன்றே போற்றி குமரசற் குருவே போற்றி.
- தவம்பெறு முனிவருள்ளத் தாமரை அமர்ந்தோய் போற்றி
- பவம்பெறுஞ் சிறியேன் தன்னைப் பாதுகாத் தளித்தோய் போற்றி
- நவம்பெறு நிலைக்கும் மேலாம் நண்ணிய நலமே போற்றி
- சிவம்பெறும் பயனே போற்றி செங்கதிர் வேலோய் போற்றி.
- மூவடி வாகி நின்ற முழுமுதற் பரமே போற்றி
- மாவடி அமர்ந்த முக்கண் மலைதரு மணியே போற்றி
- சேவடி வழுத்தும் தொண்டர் சிறுமைதீர்த் தருள்வோய் போற்றி
- தூவடி வேல்கைக் கொண்ட சுந்தர வடிவே போற்றி
- விண்ணுறு சுடரே என்னுள் விளங்கிய விளக்கே போற்றி
- கண்ணுறு மணியே என்னைக் கலந்தநற் களிப்பே போற்றி
- பண்ணுறு பயனே என்னைப் பணிவித்த மணியே போற்றி
- எண்ணுறும் அடியார் தங்கட் கினியதெள் அமுதே போற்றி.
- மறைஎலாம் பரவ நின்ற மாணிக்க மலையே போற்றி
- சிறைஎலாம் தவிர்ந்து வானோர் திருவுறச் செய்தோய் போற்றி
- குறைஎலாம் அறுத்தே இன்பம் கொடுத்தஎன் குருவே போற்றி
- துறைஎலாம் விளங்கு ஞானச் சோதியே போற்றி போற்றி.
- தாருகப் பதகன் தன்னைத் தடிந்தருள் செய்தோய் போற்றி
- வேருகச் சூர மாவை வீட்டிய வேலோய் போற்றி
- ஆருகச் சமயக் காட்டை அழித்தவெங் கனலே போற்றி
- போருகத் தகரை ஊர்ந்த புண்ணிய மூர்த்தி போற்றி.
- சிங்கமா முகனைக் கொன்ற திறலுடைச் சிம்புள் போற்றி
- துங்கவா ரணத்தோன் கொண்ட துயர்தவிர்த் தளித்தாய் போற்றி
- செங்கண்மால் மருக போற்றி சிவபிரான் செல்வ போற்றி
- எங்கள்ஆர் அமுதே போற்றி யாவர்க்கும் இறைவ போற்றி.
- முத்தியின் முதல்வ போற்றி மூவிரு முகத்த போற்றி
- சத்திவேற் கரத்த போற்றி சங்கரி புதல்வ போற்றி
- சித்திதந் தருளும் தேவர் சிகாமணி போற்றி போற்றி
- பத்தியின் விளைந்த இன்பப் பரம்பர போற்றி போற்றி.
- தெருளுடை யோர்க்கு வாய்த்த சிவானந்தத் தேனே போற்றி
- பொருளுடை மறையோர் உள்ளம் புகுந்தபுண் ணியமே போற்றி
- மருளுடை மனத்தி னேனை வாழ்வித்த வாழ்வே போற்றி
- அருளுடை அரசே எங்கள் அறுமுகத் தமுதே போற்றி.
- பொய்யனேன் பிழைகள் எல்லாம் பொறுத்திடல் வேண்டும் போற்றி
- கையனேன் தன்னை இன்னும் காத்திடல் வேண்டும் போற்றி
- மெய்யனே மெய்யர் உள்ளம் மேவிய விளைவே போற்றி
- ஐயனே அப்ப னேஎம் அரசனே போற்றி போற்றி
- முருகநின் பாதம் போற்றி முளரியங் கண்ணற் கன்பாம்
- மருகநின் கழல்கள் போற்றி வானவர் முதல்வ போற்றி
- பெருகருள் வாரி போற்றி பெருங்குணப் பொருப்பே போற்றி
- தருகநின் கருணை போற்றி சாமிநின் அடிகள் போற்றி.
- கோதிலாக் குணத்தோய் போற்றி குகேசநின் பாதம் போற்றி
- தீதிலாச் சிந்தை மேவும் சிவபரஞ் சோதி போற்றி
- போதில்நான் முகனும் காணாப் பூரண வடிவ போற்றி
- ஆதிநின் தாள்கள் போற்றி அநாதிநின் அடிகள் போற்றி.
- வேதமும் கலைகள் யாவும் விளம்பிய புலவ போற்றி
- நாதமும் கடந்து நின்ற நாதநின் கருணை போற்றி
- போதமும் பொருளும் ஆகும் புனிதநின் பாதம் போற்றி
- ஆதரம் ஆகி என்னுள் அமர்ந்தஎன் அரசே போற்றி.
- என்னிரு கண்ணின் மேவும் இலங்கொளி மணியே போற்றி
- பன்னிரு படைகொண் டோங்கும் பன்னிரு கரத்தோய் போற்றி
- மின்னிரு நங்கை மாருள் மேவிய மணாள போற்றி
- நின்னிரு பாதம் போற்றி நீள்வடி வேல போற்றி.
- திருமாலைப் பணிகொண்டு திகிரிகொண்ட தாருகனைச் செறித்து வாகைப்
- பெருமாலை அணிதிணிதோள் பெருமானே ஒருமான்றன் பெண்மேற் காமர்
- வருமாலை உடையவர்போல் மணமாலை புனைந்தமுழு மணியே முக்கட்
- குருமாலைப் பொருள்உரைத்த குமாரகுரு வேபரம குருவே போற்றி.
- தோடேந்து கடப்பமலர்த் தொடையொடு செங்குவளை மலர்த்தொடையும் வேய்ந்து
- பாடேந்தும் அறிஞர்தமிழ்ப் பாவொடுநா யடியேன்சொற் பாவும் ஏற்றுப்
- பீடேந்தும் இருமடவார் பெட்பொடும்ஆங் கவர்கண்முலைப் பெரிய யானைக்
- கோடேந்தும் அணிநெடுந்தோட் குமாரகுரு வேபரம குருவே போற்றி.
- நீர்வேய்ந்த சடைமுடித்துத் தோலுடுத்து நீறணிந்து நிலவுங் கொன்றைத்
- தார்வேய்ந்து விடங்கலந்த களங்காட்டி நுதலிடைஓர் தழற்கண் காட்டிப்
- பேர்வேய்ந்த மணிமன்றில் ஆடுகின்ற பெரும்பித்தப் பெருமான் ஈன்ற
- கூர்வேய்ந்த வேல்அணிதோள் குமாரகுரு வேபரம குருவே போற்றி.
- பெண்குணத்தில் கடைப்படும் ஓர் பேய்க்குணங்கொள்
- நாயேன்றன் பிழைகள் எல்லாம்
- எண்குணப்பொற் குன்றேநின் திருஉளத்தில்
- சிறிதேனும் எண்ணேல் கண்டாய்
- பண்குணத்தில் சிறந்திடும்நின் பத்தர்தமைப்
- புரப்பதுபோல் பாவி யேனை
- வண்குணத்தில் புரத்தியிலை யேனும்எனைக்
- கைவிடேல் வடிவே லோனே.
- சத்திவேல் கரத்தநின் சரணம் போற்றிமெய்ப்
- பத்தியோ டருச்சனை பயிலும் பண்பினால்
- முத்திசார் குவர்என மொழிதல் கேட்டுநல்
- புத்தியோ டுன்பதம் புகழ்வர் புண்ணியர்.
- கறிபிடித்த ஊன்கடையில் கண்டவர்தம் கால்பிடித்துக் கவ்வும் பொல்லா
- வெறிபிடித்த நாய்க்கேனும் வித்தைபயிற் றிடலாகும் வேண்டி வேண்டி
- மறிபிடித்த சிறுவனைப் போல் வாத்தியார் மனமறுகி வருந்தத் தங்கள்
- குறிபிடித்துக் காட்டுவோர்க் கியாவர்படிப் பிக்கவலார் குமர வேளே.
- ஓரிரண்டா நற்றணிகை உத்தமன்றன் ஓங்கற்றோள்
- தாரிரண்டார் போனின்ற தையன்மீர்-வாரிரண்டாத்
- தொய்யி லழிக்குந் துணைமுலையா ளுள்ளகத்தா
- மைய லழிக்கு மருந்து.
- பதிபூசை முதலநற் கிரியையால் மனம்எனும்
- பசுகரணம் ஈங்கசுத்த
- பாவனை அறச்சுத்த பாவனையில் நிற்கும்மெய்ப்
- பதியோக நிலைமைஅதனான்
- மதிபாசம் அற்றதின் அடங்கிடும் அடங்கவே
- மலைவில்மெய்ஞ் ஞானமயமாய்
- வரவுபோக் கற்றநிலை கூடும்என எனதுளே
- வந்துணர்வு தந்தகுருவே
- துதிவாய்மை பெறுசாந்த பதம்மேவு மதியமே
- துரிசறு சுயஞ்சோதியே
- தோகைவா கனமீ திலங்கவரு தோன்றலே
- சொல்லரிய நல்லதுணையே
- ததிபெறும் சென்னையில• கந்தகோட் டத்துள்வளர்
- தலமோங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- ஈஎன்று நான்ஒருவர் இடம்நின்று கேளாத
- இயல்பும்என் னிடம்ஒருவர்ஈ
- திடுஎன்ற போதவர்க் கிலைஎன்று சொல்லாமல்
- இடுகின்ற திறமும்இறையாம்
- நீஎன்றும் எனைவிடா நிலையும்நான் என்றும்உள
- நினைவிடா நெறியும்அயலார்
- நிதிஒன்றும் நயவாத மனமும்மெய்ந் நிலைநின்று
- நெகிழாத திடமும்உலகில்
- சீஎன்று பேய்என்று நாய்என்று பிறர் தமைத்
- தீங்குசொல் லாததெளிவும்
- திரம்ஒன்று வாய்மையும் து‘ய்மையும் தந்துநின்
- திருவடிக் காளாக்குவாய்
- தாய்ஒன்று சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- கரையில்வீண் கதைஎலாம் உதிர்கருங் காக்கைபோல்
- கதறுவார் கள்ளுண்டதீக்
- கந்தம்நா றிடஊத்தை காதம்நா றிடஉறு
- கடும்பொய்இரு காதம்நாற
- வரையில்வாய் கொடுதர்க்க வாதம்இடு வார்சிவ
- மணங்கமழ் மலர்ப்பொன்வாய்க்கு
- மவுனம்இடு வார்இவரை மூடர்என ஓதுறு
- வழக்குநல் வழக்கெனினும்நான்
- உரையிலவர் தமையுறா துனதுபுகழ் பேசும்அவ
- ரோடுறவு பெறஅருளுவாய்
- உயர்தெய்வ யானையொடு குறவர்மட மானும்உள்
- உவப்புறு குணக்குன்றமே
- தரையில்உயர் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- நாம்பிரமம் நமைஅன்றி ஆம்பிரமம் வேறில்லை
- நன்மைதீ மைகளும் இல்லை
- நவில்கின்ற வாகிஆந் தரம்இரண்டினும்ஒன்ற
- நடுநின்ற தென்றுவீணாள்
- போம்பிரம நீதிகேட் போர்பிரமை யாகவே
- போதிப்பர் சாதிப்பர்தாம்
- புன்மைநெறி கைவிடார் தம்பிரமம் வினைஒன்று
- போந்திடில் போகவிடுவார்
- சாம்பிரம மாம்இவர்கள் தாம்பிரமம் எனும்அறிவு
- தாம்புபாம் பெனும்அறிவுகாண்
- சத்துவ அகண்டபரிபுரண காரஉப
- சாந்தசிவ சிற்பிரம நீ
- தாம்பிரிவில் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- வன்பெரு நெருப்பினைப் புன்புழுப் பற்றுமோ
- வானைஒரு மான்தாவுமோ
- வலியுள்ள புலியைஓர் எலிசீறு மோபெரிய
- மலையைஓர் ஈச்சிறகினால்
- துன்புற அசைக்குமோ வச்சிரத் து‘ண்ஒரு
- துரும்பினால் துண்டமாமோ
- சூரியனை இருள்வந்து சூழுமோ காற்றில்மழை
- தோயுமோ இல்லைஅதுபோல்
- அன்புடைய நின்அடியர் பொன்அடியை உன்னும்அவர்
- அடிமலர் முடிக்கணிந்தோர்க்
- கவலமுறு மோகாமம் வெகுளிஉறு மோமனத்
- தற்பமும்வி கற்பம்உறுமோ
- தன்புகழ்செய் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தன்முகத் துய்யமணி உன்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- காணலிடை நீரும்ஒரு கட்டையில் கள்வனும்
- காண்உறு கயிற்றில் அறவும்
- கடிதரு கிளிஞ்சிலிடை வெள்ளியும் பொன்னைக்
- கதித்தபித் தளையின்இடையும்
- மானலில் கண்டுள மயங்கல்போல் கற்பனையை
- மாயையில் கண்டுவிணே
- மனைஎன்றும் மகவென்றும் உறவென்றும் நிதிஎன்றும்
- வாள்வென்றும் மானம்என்றும்
- ஊனலின் உடம்பென்றும் உயிரென்றும் உளம்என்றும்
- உள்என்றும் வெளிஎன்றும்வான்
- உலகென்றும் அளவுறுவி காரம்உற நின்றஎனை
- உண்மைஅறி வித்தகுருவே
- தானமிகு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தன்முகத் துய்யமணி உன்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- சடமாகி இன்பம் தராதாகி மிகுபெருஞ்
- சஞ்சலா காரமாகிச்
- சற்றாகி வெளிமயல் பற்றாகி ஓடும்இத்
- தன்மைபெறு செல்வம்ந்தோ
- விடமாகி ஒருகபட நடமாகி யாற்றிடை
- விரைந்துசெலும் வெள்ளம்ஆகி
- வேலைஅலை யாகிஆங் காரவலை யாகிமுதிர்
- வேனில்உறு மேகம்ஆகிக்
- கடமாய சகடமுறு காலாகி நீடுவாய்க்
- காலோடும் நீராகியே
- கற்விலா மகளிர்போல் பொற்பிலா துழலும்இது
- கருதாத வகைஅருளுவாய்
- தடமேவு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- உழல்உற்ற உழவுமுதல் உறுதொழில் இயற்றிமலம்
- ஒத்தபல பொருள்ஈட்டிவீண்
- உறுவயிறு நிறையவெண் சோறடைத் திவ்வுடலை
- ஒதிபோல் வளர்த்துநாளும்
- விழல்உற்ற வாழ்க்கையை விரும்பினேன் ஐயஇவ்
- வெய்யஉடல் பொய்என்கிலேன்
- வெளிமயக் கோமாய விடமயக் கோஎனது
- விதிமயக் கோஅறிகிலேன்
- கழல்உற்ற நின்துணைக் கால்மலர் வணங்கிநின்
- கருணையை விழைந்துகொண்டெம்
- களைகணே ஈராறு கண்கொண்ட என்றன்இரு
- கண்ணேஎ னப்புகழ்கிலேன்
- தழைவுற்ற சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- பாய்ப்பட்ட புலிஅன்ன நாய்ப்பட்ட கயவர்தம்
- பாழ்பட்ட மனையில்நெடுநாள்
- பண்பட்ட கழுநீரும் விண்பட்ட இன்னமுது
- பட்டபா டாகும்அன்றிப்
- போய்ப்பட்ட புல்லுமணி பூப்பட்ட பாடும்நற்
- பூண்பட்ட பாடுதவிடும்
- புன்பட்ட உமியும்உயர் பொன்பட்ட பாடவர்கள்
- போகம்ஒரு போகமாமோ
- ஆய்ப்பட்ட மறைமுடிச் சேய்ப்பட்ட நின்அடிக்
- காட்பட்ட பெருவாழ்விலே
- அருள்பட்ட நெறியும்மெய்ப் பொருள்பட்ட நிலையும்உற
- அமர்போக மேபோகமாம்
- தாய்ப்பட்ட சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- உளம்எனது வசம்நின்ற தில்லைஎன் தொல்லைவினை
- ஒல்லைவிட் டிடவுமில்லை
- உன்பதத் தன்பில்லை என்றனக் குற்றதுணை
- உனைஅன்றி வேறும்இல்லை
- இளையன்அவ னுக்கருள வேண்டும்என் றுன்பால்
- இசைக்கின்ற பேரும்இல்லை
- ஏழையவ னுக்கருள்வ தேன்என்றுன் எதிர்நின்
- றியம்புகின் றோரும்இல்லை
- வளமருவும் உனதுதிரு அருள்குறைவ தில்லைமேல்
- மற்றொரு வழக்கும்இல்லை
- வந்திரப் போர்களுக் கிலைஎன்ப தில்லைநீ
- வன்மனத் தவனும்அல்லை
- தளர்விலாச் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- எத்திக்கும் என்உளம் தித்திக்கும் இன்பமே
- என்உயிர்க் குயிராகும்ஓர்
- ஏகமே ஆனந்த போகமே யோகமே
- என்பெருஞ் செல்வமேநன்
- முத்திக்கு முதலான முதல்வனே மெய்ஞ்ஞான
- மூர்த்தியே முடிவிலாத
- முருகனே நெடியமால் மருகனே சிவபிரான்
- முத்தாடும் அருமைமகனே
- பத்திக் குவந்தருள் பரிந்தருளும் நின்அடிப்
- பற்றருளி என்னைஇந்தப்
- படியிலே உழல்கின்ற குடியிலே ஒருவனாப்
- பண்ணாமல் ஆண்டருளுவாய்
- சத்திக்கும் நீர்ச்சென்னை கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- நான்கொண்ட விரதம்நின் அடிஅலால் பிறர்தம்மை
- நாடாமை ஆகும்இந்த
- நல்விரத மாம்கனியை இன்மைஎனும் ஒருதுட்ட
- நாய்வந்து கவ்விஅந்தோ
- தான்கொண்டு போவதினி என்செய்வேன் என்செய்வேன்
- தளராமை என்னும்ஒருகைத்
- தடிகொண் டடிக்கவோ வலியிலேன் சிறியனேன்
- தன்முகம் பார்த்தருளுவாய்
- வான்கொண்ட தெள்அமுத வாரியே மிகுகருனை
- மழையே மழைக்கொண்டலே
- வள்ளலே என்இருகண் மணியேஎன் இன்பமே
- மயில்ஏறு மாணிக்கமே
- தான்கொண்ட சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- வேதப் பொருளே சரணம் சரணம்
- விண்ணோர் பெருமாள் சரணம் சரணம்
- போதத் திறனே சரணம் சரணம்
- புனைமா மயிலோய் சரணம் சரணம்
- நாதத் தொலியே சரணம் சரணம்
- நவைஇல் லவனே சரணம் சரணம்
- காதுக் கினிதாம் புகழோய் சரணம்
- கந்தா சரணம் சரணம் சரணம்
- சீர்திகழ் தோகை மயில்மேலே - இளஞ்
- செஞ்சுடர் தோன்றுந் திறம்போலே
- கூர்வடி வேல்கொண்டு நம்பெருமான் - வருங்
- கோலத்தைப் பாருங்கள் கோதையர்காள்.
- சச்சிதா னந்த உருவாண்டி - பர
- தற்பர போகந் தருவாண்டி
- உச்சிதாழ் அன்பர்க் குறவாண்டி - அந்த
- உத்தம தேவனைப் பாடுங்கடி.
- சைவந் தழைக்கத் தழைத்தாண்டி -ஞான
- சம்பந்தப் பேர்கொண் டழைத்தாண்டி
- பொய்வந்த உள்ளத்தில் போகாண்டி - அந்தப்
- புண்ணியன் பொன்னடி போற்றுங்கடி.
- மாலை கொணர்ந்தனர் மஞ்சனம் போந்தது
- மாமயில் வீரரே வாரும்
- தீமையில் தீரரே வாரும்.
- மான்முடிமே லும்கமலத் தான்முடிமே லும்தேவர்
- கோன்முடிமே லும்போய்க் குலாவுமே - வான்முடிநீர்
- ஊர்ந்துவலம் செய்தொழுகும் ஒற்றியூர்த் தியாகரைநாம்
- சார்ந்துவலம் செய்கால்கள் தாம்.
- படியே அளந்த மாலவனும் பழைய மறைசொற் பண்ணவனும்
- முடியீ றறியா முதற்பொருளே மொழியும் ஒற்றி நகர்க்கிறையே
- அடியார் களுக்கே இரங்கிமுனம் அடுத்த சுரநோய் தடுத்ததுபோல்
- படிமீ தடியேற் குறுபிணிபோம் படிநீ கடைக்கண் பார்த்தருளே.
- வான்றோய் பொழிற்சூ ழொற்றியுளீர் வருந்தா தணைவே னோவென்றேன்
- ஊன்றோ யுடற்கென் றார்தெரிய வுரைப்பீ ரென்றே னோவிதுதான்
- சான்றோ ருங்கண் மரபோர்ந்து தரித்த பெயர்க்குத் தகாதென்றார்
- ஆன்றோய் விடங்க ரென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே.
- புயப்பா லொற்றி யீரச்சம் போமோ வென்றே னாமென்றார்
- வயப்பா வலருக் கிறையானீர் வஞ்சிப் பாவிங் குரைப்பதென்றேன்
- வியப்பா நகையப் பாவெனும்பா வெண்பா கலிப்பா வுடனென்றார்
- அயப்பா லிடையா யென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே.
- கானார் சடையீ ரென்னிருக்கைக் கன்றும் பசுப்போற் கற்றதென்றேன்
- மானார் விழியாய் கற்றதுநின் மருங்குற் கலையு மென்றார் நீர்
- தானா ரென்றே னனிப்பள்ளித் தலைவ ரெனவே சாற்றினர்நான்
- ஆனா லொற்றி யிருமென்றே னங்கு மிருந்தே னென்றாரே.
- மண்ணாளா நின்றவர்தம் வாழ்வு வேண்டேன்
- மற்றவர்போல் பற்றடைந்து மாள வேண்டேன்
- விண்ணாளா நின்றஒரு மேன்மை வேண்டேன்
- வித்தகநின் திருவருளே வேண்டி நின்றேன்
- புண்ணாளா நின்றமன முடையேன் செய்த
- பொய்அனைத்தும் திருவுளத்தே பொறுப்பாய் அன்றிக்
- கண்ணாளா சுடர்க்கமலக் கண்ணா என்னைக்
- கைவிடில்என் செய்வேனே கடைய னேனே.
- பொன்னுடையார் வாயிலில்போய் வீணே காலம்
- போக்குகின்றேன் இவ்வுலகப் புணர்ப்பை வேண்டி
- என்னுடையாய் நின்னடியை மறந்தேன் அந்தோ
- என்செய்கேன் என்செய்கேன் ஏழை யேன்நான்
- பின்னுடையேன் பிழைஉடையேன் அல்லால் உன்றன்
- பேரருளும் உடையேனோ பிறந்தேன் வாளா
- உன்னுடைய திருவுளத்தென் நினைதி யோஎன்
- ஒருமுதல்வா ஸ்ரீராமா உணர்கி லேனே.
- * கொந்தமூர் ஸ்ரீநிவாச வரதாசாரிய சுவாமிகள் கேட்டுக்கொண்டதற்கிணங்க அருளிச் செய்தது.வீரராகவர் போற்றிப் பஞ்சகம்
- தண்ணமர் மதிபோல் சாந்தந் தழைத்தசத் துவனே போற்றி
- வண்ணமா மணியே போற்றி மணிவண்ணத் தேவா போற்றி
- அண்ணலே எவ்வு ளூரில் அமர்ந்தருள் ஆதி போற்றி
- விண்ணவர் முதல்வா போற்றி வீரரா கவனே போற்றி.
- பாண்டவர் தூத னாகப் பலித்தருள் பரனே போற்றி
- நீண்டவன் என்ன வேதம் நிகழ்த்துமா நிதியே போற்றி
- தூண்டலில் லாமல் ஓங்குஞ் ஜோதிநல் விளக்கே போற்றி
- வேண்டவர் எவ்வு ளூர்வாழ் வீரரா கவனே போற்றி.
- மேதினி புரக்கும் வேந்தர் வீறெலாம் நினதே போற்றி
- கோதிலா மனத்தே நின்று குலாவிய கோவே போற்றி
- ஓதிய எவ்வு ளூரில் உறைந்தருள் புரிவாய் போற்றி
- வேதியன் தன்னை ஈன்ற வீரரா கவனே போற்றி.
- இளங்கொடி தனைக்கொண் டேகும் இராவணன் தனைய ழித்தே
- களங்கமில் விபீட ணர்க்குக் கனவர சளித்தாய் போற்றி
- துளங்குமா தவத்தோர் உற்ற துயரெலாம் தவிர்த்தாய் போற்றி
- விளங்குநல் எவ்வு ளூர்வாழ் வீரரா கவனே போற்றி.
- அற்புதத் திருவை மார்பில் அணைத்தபே ரழகா போற்றி
- பொற்புறு திகிரி சங்கு பொருந்துகைப் புனிதா போற்றி
- வற்புறு பிணிதீர்த் தென்னை மகிழ்வித்த வரதா போற்றி
- வெற்புயர் எவ்வு ளூர்வாழ் வீரரா கவனே போற்றி.
- உம்பர்வான் அமுதனைய சொற்களாற் பெரியோர்
- உரைத்தவாய் மைகளைநாடி
- ஓதுகின் றார்தமைக் கண்டவ மதித்தெதிரில்
- ஒதிபோல நிற்பதுமலால்
- கம்பர்வாய் இவர்வாய்க் கதைப்பென்பர் சிறுகருங்
- காக்கைவாய்க் கத்தல்இவர்வாய்க்
- கத்தலில் சிறிதென்பர் சூடேறு நெய்ஒரு
- கலங்கொள்ள வேண்டும்என்பர்
- இம்பர்நாம் கேட்டகதை இதுவெண்பர் அன்றியும்
- இவர்க்கேது தெரியும்என்பர்
- இவைஎலாம் எவனோஓர் வம்பனாம் வீணன்முன்
- இட்டகட் டென்பர்அந்த
- வம்பர்வா யறஒரு மருந்தருள்க தவசிகா
- மணிஉலக நாதவள்ளல்
- மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற
- வளர்வைத் தியநாதனே.
- படிஅளவு சாம்பலைப் பூசியே சைவம்
- பழுத்தபழ மோபூசுணைப்
- பழமோ எனக்கருங் கல்போலும் அசையாது
- பாழாகு கின்றார்களோர்
- பிடிஅளவு சாதமும் கொள்ளார்கள் அல்லதொரு
- பெண்ணைஎனி னுங்கொள்கிலார்
- பேய்கொண்ட தோஅன்றி நோய்கொண்ட தோபெரும்
- பித்தேற்ற தோஅறிகிலேன்
- செடிஅளவு ஊத்தைவாய்ப் பல்லழுக் கெல்லாம்
- தெரிந்திடக் காட்டிநகைதான்
- செய்துவளை யாப்பெரும் செம்மரத் துண்டுபோல்
- செம்மாப்பர் அவர்வாய்மதம்
- மடிஅளவ தாஒரு மருந்தருள்க தவசிகா
- மணிஉலக நாதவள்ளல்
- மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற
- வளர்வைத் தியநாதனே.
- பெண்கொண்ட சுகமதே கண்கண்ட பலன்இது
- பிடிக்கஅறி யாதுசிலர்தாம்
- பேர்ஊர் இலாதஒரு வெறுவெளியி லேசுகம்
- பெறவே விரும்பிவீணில்
- பண்கொண்ட உடல்வெளுத் துள்ளே நரம்பெலாம்
- பசைஅற்று மேல்எழும்பப்
- பட்டினி கிடந்துசா கின்றார்கள் ஈதென்ன
- பாவம்இவர் உண்மைஅறியார்
- கண்கொண்ட குருடரே என்றுவாய்ப் பல்எலாங்
- காட்டிச் சிரித்துநீண்ட
- கழுமரக் கட்டைபோல் நிற்பார்கள் ஐயஇக்
- கயவர்வாய் மதமுழுதுமே
- மண்கொண்டு போகஓர் மருந்தருள்க தவசிகா
- மணிஉலக நாதவள்ளல்
- மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற
- வளர்வைத் தியநாதனே.
- பேதைஉல கீர்விரதம் ஏதுதவம் ஏதுவீண்
- பேச்சிவை எலாம்வேதனாம்
- பித்தன்வாய்ப் பித்தேறு கத்துநூல் கத்திய
- பெரும்புரட் டாகும்அல்லால்
- ஓதைஉறும் உலகா யதத்தினுள உண்மைபோல்
- ஒருசிறிதும் இல்லைஇல்லை
- உள்ளதறி யாதிலவு காத்தகிளி போல்உடல்
- உலர்ந்தீர்கள் இனியாகினும்
- மேதைஉண வாதிவேண் டுவஎலாம் உண்டுநீர்
- விரைமலர்த் தொடைஆதியா
- வேண்டுவ எலாங்கொண்டு மேடைமேல் பெண்களொடு
- விளையாடு வீர்கள்என்பார்
- வாதைஅவர் சார்பற மருந்தருள்க தவசிகா
- மணிஉலக நாதவள்ளல்
- மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற
- வளர்வைத் தியநாதனே.
- கற்பவை எலாம்கற் றுணர்ந்தபெரி யோர்தமைக்
- காண்பதே அருமைஅருமை
- கற்பதரு மிடியன்இவன் இடைஅடைந் தால்எனக்
- கருணையால் அவர்வலியவந்
- திற்புறன் இருப்பஅது கண்டும்அந் தோகடி
- தெழுந்துபோய்த் தொழுதுதங்கட்
- கியல்உறுதி வேண்டாது கண்கெட்ட குருடர்போல்
- ஏமாந்தி ருப்பர்இவர்தாம்
- பொற்பினறு சுவைஅறியும் அறிவுடையர் அன்றுமேற்
- புல்லாதி உணும்உயிர்களும்
- போன்றிடார் இவர்களைக் கூரைபோய்ப் பாழாம்
- புறச்சுவர் எனப்புகலலாம்
- வற்புறும் படிதரும வழிஓங்கு தவசிகா
- மணிஉலக நாதவள்ளல்
- மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற
- வளர்வைத் தியநாதனே.
- இளவேனில் மாலையாய்க் குளிர்சோலை யாய்மலர்
- இலஞ்சிபூம் பொய்கைஅருகாய்
- ஏற்றசந் திரகாந்த மேடையாய் அதன்மேல்
- இலங்குமர மியஅணையுமாய்த்
- தளவேயும் மல்லிகைப் பந்தராய்ப் பால்போல்
- தழைத்திடு நிலாக்காலமாய்த்
- தனிஇளந் தென்றலாய் நிறைநரம் புளவீணை
- தன்னிசைப் பாடல்இடமாய்
- களவேக லந்தகற் புடையமட வரல்புடை
- கலந்தநய வார்த்தைஉடனாய்க்
- களிகொள இருந்தவர்கள் கண்டசுக நின்னடிக்
- கழல்நிழற் சுகநிகருமே
- வளவேலை சூழுலகு புகழ்கின்ற தவசிகா
- மணிஉலக நாதவள்ளல்
- மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற
- வளர்வைத் தியநாதனே.
- உலகம் புரக்கும் பெருமான்தன் உளத்தும் புயத்தும் அமர்ந்தருளி
- உவகை அளிக்கும் பேரின்ப உருவே எல்லாம் உடையாளே
- திலகம் செறிவாள் நுதற்கரும்பே தேனே கனிந்த செழுங்கனியே
- தெவிட்டா தன்பர் உளத்துள்ளே தித்தித் தெழும்ஓர் தெள்ளமுதே
- மலகஞ் சுகத்தேற் கருளளித்த வாழ்வே என்கண் மணியேஎன்
- வருத்தந் தவிர்க்க வரும்குருவாம் வடிவே ஞான மணிவிளக்கே
- சலகந் தரம்போற் கருணைபொழி தடங்கண் திருவே கணமங்கைத்
- தாயே சரணம் சரணம் இது தருணம் கருணை தருவாயே.
- உண்மைநெறி அண்மைதனில் உண்டுளம்ஒ ருங்கில்என
- ஓதுமெய்ப் போதநெறியே
- கைகுவித் தருகில்நின் றேத்தமூ வாண்டில்
- களித்துமெய்ப் போதம்உண்டு
- அணிவா யுலகத் தம்புயனும் அளிக்குந் தொழிற்பொன் அம்புயனும்
- அறியா அருமைத் திருவடியை அடியேந் தரிசித் தகங்குளிர
- மணிவாய் மலர்ந்தெம் போல்வார்க்கு மறையுண் முடிபை வகுத்தருள
- வயங்குங் கருணை வடிவெடுத்து வந்து விளங்கு மணிச்சுடரே
- பிணிவாய் பிறவிக் கொருமருந்தே பேரா னந்தப் பெருவிருந்தே
- பிறங்கு கதியின் அருளாறே பெரியோர் மகிழ்விற் பெரும்பேறே
- திணிவாய் எயிற்சூழ் திருவோத்தூர் திகழ அமர்ந்த சிவநெறியே
- தேவர் புகழுஞ் சிவஞானத்தேவே ஞான சிகாமணியே.
- பொன்மகள்வாழ் சிங்கபுரி போதன்அறு மாமுகன்மேல்
- நன்மைமிகு செந்தமிழ்ப்பா நாம்உரைக்கச் - சின்மயத்தின்
- மெய்வடிவாம் நங்குருதாள் வேழமுகன் தன்னிருதாள்
- பொய்யகலப் போற்றுவம்இப் போது.
- முன்செய்த மாதவத்தால் அருணகிரி நாதர்முன்னே முறையிட் டேத்தும்
- புன்செயல்தீர் திருப்புகழை ஏற்றருளும் மெய்ஞ்ஞான புனிதன் என்றே
- என்செயலில் இரவுபகல் ஒழியாமல் போற்றியிட இரங்கா தென்னே
- தென்திசைசேர்ந் தருள்புரியும் சிங்கபுரி தனில்அமர்ந்த தெய்வக் குன்றே.
- அற்புதக் கணபதி அமல போற்றியே
- தற்பர சண்முக சாமி போற்றியே
- சிற்பர சிவமகா தேவ போற்றியே
- பொற்பமர் கௌரிநிற் போற்றி போற்றியே.
- மாதங்க முகத்தோன்நங் கணபதிதன் செங்கமல மலர்த்தாள் போற்றி
- ஏதங்கள் அறுத்தருளுங் குமரகுருபரன்பாத இணைகள் போற்றி
- தாதங்க மலர்க்கொன்றைச் சடையுடைய சிவபெருமான் சரணம் போற்றி
- சீதங்கொள் மலர்க்குழலாள் சிவகாம சவுந்தரியின் திருத்தாள் போற்றி.
- பொய்யான வாழ்க்கையினை மெய்யாக நம்பிவீண்
- போக்கிநன் னாளைமடவார்
- போகமே பெரிதெனக் கொண்டறி வழிந்துநின்
- பொன்னடிக் கானபணியைச்
- செய்யாத பாவியேன் என்னைநீ கைவிடில்
- செய்வதறி யேன்ஏழையேன்
- சேய்செய்த பிழையெலாம் தாய்பொறுப் பதுபோல
- சிந்தைதனில் எண்ணிடாயோ
- மெய்யான நிலைபெறக் கையா லணைத்தருள
- வேண்டுமறை யாகமத்தின்
- மேலான சுத்தசன் மார்க்கஅனு பவசாந்த
- மேதையர்கள் பரவிவாழ்த்தும்
- ஐயான னங்கொண்ட தெய்வமே கங்கைஅர
- வம்புலியு மாடமுடிமேல்
- அற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும்
- ஆனந்த நடனமணியே.
- போதாரு நான்முகப் புத்தேளி னாற்பெரிய
- பூமியிடை வந்துநமனாற்
- போகுமுயிர் கள்வினையை ஒழிமின்என் றேகுரவர்
- போதிக்கும் உண்மைமொழியைக்
- காதார வேபல தரங்கேட்டும் நூற்களிற்
- கற்றும்அறி வற்றிரண்டு
- கண்கெட்ட குண்டையென வீணே யலைந்திடும்
- கடையனேன் உய்வதெந்நாள்
- மாதாவு மாய்ஞான வுருவுமாய் அருள்செயும்
- வள்ளலே உள்ளமுதலே
- மாலாதி தேவர்முனி வோர்பரவி யேதொழுது
- வாழ்த்திமுடி தாழ்த்துமுன்றன்
- ஆதார மானஅம் போருகத் தைக்காட்டி
- யாண்டருள வேண்டும்அணிசீர்
- அற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும்
- ஆனந்த நடனமணியே.
- நீறணிந் தொளிர்அக்க மணிபூண்டு சன்மார்க்க
- நெறிநிற்கும் அன்பர்மனமாம்
- நிலமீது வளர்தேவ தாருவே நிலையான
- நிறைவே (மெய் யருட்சத்தியாம்)
- வீறணிந் தழியாத நிதியமே ஒழியாத
- விண்ணே அகண்டசுத்த
- வெளியே விளங்குபர ஒளியே வரைந்திடா
- வேதமே வேதமுடிவே
- தூறணிந் தலைகின்ற பாவியேன் நின்திருத்
- துணைமலர்த் தாட்குரியனாய்த்
- துயர்தீர்ந் திளைப்பாறும் இன்பஅம் போதியில்
- தோயஅருள் புரிதிகண்டாய்
- ஆறணிந் திடுவேணி அண்ணலே அணிகுலவும்
- அம்மைசிவ காமியுடனே
- அற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும்
- ஆனந்த நடனமணியே.
- மணிகொண்ட நெடியஉல காய்அதில் தங்கும்ஆன்
- மாக்களாய் ஆன்மாக்களின்
- மலமொழித் தழியாத பெருவாழ் வினைத்தரும்
- வள்ளலாய் மாறாமிகத்
- திணிகொண்ட முப்புரா திகளெரிய நகைகொண்ட
- தேவாய் அகண்டஞானச்
- செல்வமாய் வேலேந்து சேயாய் கஜானனச்
- செம்மலாய் அணையாகவெம்
- பணிகொண்ட கடவுளாய்க் கடவுள ரெலாம்தொழும்
- பரமபதி யாய்எங்கள்தம்
- பரமேட்டி யாய்ப்பரம போதமாய் நாதமாய்
- பரமமோ க்ஷாதிக்கமாய்
- அணிகொண்ட சுத்தஅனு பூதியாய்ச் சோதியாய்
- ஆர்ந்துமங் களவடிவமாய்
- அற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும்
- ஆனந்த நடனமணியே.
- 179. பதவுரை : இன்பம் - பேரின்பம் தருவதாகிய, நடஞ்செய் - திருநடனத்தைப் புரியா நின்ற, பெருமானீர் - பெருமானாகிய நீர், இரண்டே - இரண்டேயாகிய, காற்கு - பாதங்களையுடைய எனக்கு, ஐ - அழகிய, முகம் - முகம் ஒன்றினை, தந்தீர் - கொடுத்தீர், இங்ஙனம் இருக்க, இரண்டே காற்கு - இரண்டு பாதாம்புயங்களுக்கு, ஐமுகம் - பஞ்சமுகங்களை, கொண்டீர் - கொண்ட நீராக இருக்கின்றீர், என்னே - யாதுபற்றி, அடிகள் - அடிகளே, என்றுரைத்தேன் - எனப் புகன்றேன். அதற்கு மன்றில் நின்றார் - அம்பலத்தின் கண்ணின்ற இவர் அடியாளைக் கண்ணுற்று, இரண்டே கால் - இரண்டு காலாகப் பெற்ற நீ, கைமுகம் புடைக்க விருந்தாய் - கைத்த முகம் பெருக்கக் காட்டினை, எனைக்கென்று - யாதுபற்றி என வினவி, இங்கே நீ - இப்போது இவ்விடத்து, இரண்டே காற்கு - இரு காலாகிய அரை ( அல்குலுக்கு இன்பம் பெருக்க எண்ணி ) ஐமுகம் கொண்டாய் என்றார் - சுமுகங் கொண்டனை எனப் புகல்கின்றனர். ஏ! தோழி ! இஃது என் ? என வினவியது. - ச.மு.க.
- 180. பதவுரை : இரண்டேகாற்கு - இருவினை வழி செல்லாதவர்களுக்கு, ஐமுகம் - ஆசாரிய முகத்தினை, கொண்டனை - கொண்ட நீராயிருக்கின்றீர். என்னை - அடியாளை, உடையீர் - உடையவரே, அம்பலத்தீர் - திருவம்பலத்தில் நடிக்கின்றவரே, இரண்டேகாற்கு - சூரியகலை சந்திரகலையாகிய வாசியனுபவத்திற்கு, ஐ - அழகிய, முகந்தந்நீர் - முகத்தினைத் தந்தவரே, என்னை இது தானென்று - இஃது என்ன விஷயத்திற்கு என்று, உரைத்தேன் - செப்பினேன். அதற்கு அன்னார், இரண்டே கால், கை, முகங் கொண்டிருந்த நீயும் - இரண்டு காலும், இருகையும், முகமும் அடையப் பெற்றிரா நின்ற நீயும், எனைக் கண்டே - நம்மைத் தரிசித்த தக்ஷணம் நீ முன் உரைத்த வண்ணமே, இரண்டேகாற்கு - வாசிக்கு, ஐமுகங்கொண்டாய் - அழகிய முகத்தினை அனுபவ இடமாகக் கொண்டு விட்டனை என்கின்றனர் தோழி, இன்னார் நீடுழி வாழ்க எனத் தலைவி வாழ்த்தியதாகக் கொள்க.இரண்டேகாற்கை - தமிழில் எழுதினால் இரண்டு (உ), கால் (வ), கை : உவகை.இரண்டேகாற் கைமுகந் தந்தீர் என்றதற்கு, விநாயகருக்கு கை - துதிக்கையுடைய முகத்தினைத் தந்தீர் எனப் பொருள் கூறுவாரும் உளர். தலைவி தலைவருக்குள் நடந்த அலங்கார விவகாரத்துள் விநாயகரைப் பற்றிக் கூறுதல் அவ்வளவு விசேட மன்றெனக் கொள்க.
- 181. குறிப்பு : ஆடுமிடம் - நடனஞ் செய்யுமிடம், பாடும் - வேதாகமங்களால் புகழப்படும், திருவும் - பொன் என்னுஞ் சொல்லும், சவுந்தரமும் - அழகு, அழகுக்குப் பிரதிபதமாய அம் என்னும் சொல்லும், பழமும் - ( பழம் = பலம் வடமொழி ) - பலம் என்னும் சொல்லும் சேர்ந்தால், பொன்னம்பலம் ஆகிறது. முன்பின் ஒன்றேயாய் - முன்னும் பின்னும் ஒரு சொல்லாகிய அம், பல் நடு வுளது - பல் என்னுஞ் சொல் நடுவுளது. அம்+பல்+அம் - அம்பலம், - ச. மு. க.
- பற்று நினைத்தெழுமிப் பாவிமனத் தீமையெலாம்
- உற்று நினைக்கிலெனக் கூடுருவிப் போகுதடா.
- எள்ளேத நின்னிடத்தே எண்ணுகின்ற தோறுமதை
- உள்ளே நினைக்கிலெனக் கூடுருவிப் போகுதடா.
- துன்னுகின்ற தீமைநின்பாற் சூழ்ந்துரைக்குந் தோறுமதை
- உன்னுகின்ற போதிலெனக் கூடுருவிப் போகுதடா.
- எள்ளுகின்ற தீமைநின்பா லெண்ணுகின்ற தோறுமதை
- உள்ளுகின்ற போதிலெனக் கூடுருவிப் போகுதடா.
- மிக்க நிலைநிற்க விரும்பேன் பிழைகளெலாம்
- ஒக்க நினைக்கிலெனக் கூடுருவிப் போகுதடா.
- கோகோ வெனுங்கொடியேன் கூறியகுற் றங்களெலாம்
- ஓகோ நினைக்கிலெனக் கூடுருவிப் போகுதடா.
- பித்து மனக்கொடியேன் பேசியவன் சொல்லையெலாம்
- ஒத்து நினைக்கிலெனக் கூடுருவிப் போகுதடா.
- தேர்ந்து தெளியாச் சிறியவனேன் தீமையெலாம்
- ஓர்ந்து நினைக்கிலெனக் கூடுருவிப் போகுதடா.
- நிறுத்தி யறியே நிகழ்த்தியவன் சொல்லை
- உறுத்தி நினைக்கிலெனக் கூடுருவிப் போகுதடா.
- தோன்றி விரியுமனத் துட்டனேன் வன்பிழையை
- ஊன்றி நினைக்கிலெனக் கூடுருவிப் போகுதடா.
- சினங்கொண்ட போதெல்லாஞ் செப்பிய வன்சொல்லை
- மனங்கொள்ளுந் தோறுமுள்ளே வாளிட் டறுக்குதடா.
- ஊடும்போ துன்னை யுரைத்தவெலா நாயடியேன்
- நாடும்போ தெல்லாமென் னாடி நடுங்குதடா.
- போதந் திகழ்பர நாதந் தனில்நின்ற
- நீதராஞ் சண்முக நாதற்கு - மங்களம்.
- விமலபோ தாந்தமா மெய்ப்பொருள் வெளியெனும்
- அமலசிற் சபையி லருட்பெருஞ் ஜோதி
- பொதுவுணர் வுணரும் போதலாற் பிரித்தே
- அதுவெனிற் றோன்றா வருட்பெருஞ் ஜோதி
- செடியறுத் தேதிட தேகமும் போகமும்
- அடியருக் கேதரு மருட்பெருஞ் ஜோதி
- விருப்போ டிகலுறு வெறுப்புந் தவிர்த்தே
- அருட்பே றளித்த வருட்பெருஞ் ஜோதி
- போகமுங் களிப்பும் பொருந்துவித் துயிர்களை
- ஆகமுட் காக்கு மருட்பெருஞ் ஜோதி
- பொருந்திய வருட்பெரும் போகமே யுறுகெனப்
- பெருந்தய வாலெனைப் பெற்றநற் றாயே
- நீகேண் மறக்கினு நின்னையாம் விட்டுப்
- போகே மெனவெனைப் பொருந்திய பொன்னே
- பவக்கடல் கடந்துநான் பார்த்தபோ தருகே
- உவப்புறு வளங்கொண் டோங்கிய கரையே
- அறிவுரு வனைத்து மானந்த மாயிடப்
- பொறியுறு மான்மதற் போதமும் போயிடத்
- போற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர்
- ஆற்றலி னோங்கிய வருட்பெருஞ் ஜோதி
- போற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர்
- ஆற்றலி னோங்கிய வருட்பெருஞ் ஜோதி
- போற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர்
- ஆற்றலி னோங்கிய வருட்பெருஞ் ஜோதி
- போற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர்
- ஆற்றலி னோங்கிய வருட்பெருஞ் ஜோதி
- சுத்தவே தாந்த மவுனமோ அலது
- சுத்தசித் தாந்தரா சியமோ
- நித்தநா தாந்த நிலைஅனு பவமோ
- நிகழ்பிற முடிபின்மேல் முடிபோ
- புத்தமு தனைய சமரசத் ததுவோ
- பொருள்இயல் அறிந்திலம் எனவே
- அத்தகை உணர்ந்தோர் உரைத்துரைத் தேத்தும்
- அருட்பெருஞ் சோதிஎன் அரசே.
- தத்துவம் அனைத்தும் தனித்தனி கடந்தேம்
- தத்துவா தீதமேல் நிலையில்
- சித்தியல் முழுதும் தெரிந்தனம் அவைமேல்
- சிவநிலை தெரிந்திடச் சென்றேம்
- ஒத்தஅந் நிலைக்கண் யாமும்எம் உணர்வும்
- ஒருங்குறக் கரைந்துபோ யினம்என்
- றத்தகை உணர்ந்தோர் வழுத்தநின் றோங்கும்
- அருட்பெருஞ் சோதிஎன் அரசே.
- எங்குமாய் விளங்கும் சிற்சபை இடத்தே
- இதுஅது எனஉரைப் பரிதாய்த்
- தங்கும்ஓர் இயற்கைத் தனிஅனு பவத்தைத்
- தந்தெனைத் தன்மயம் ஆக்கிப்
- பொங்கும்ஆ னந்த போகபோக் கியனாய்ப்
- புத்தமு தருத்திஎன் உளத்தே
- அங்கையில் கனிபோன் றமர்ந்தருள் புரிந்த
- அருட்பெருஞ் சோதிஎன் அரசே.
- இடம்பெறும்இந் திரியஇன்பம் கரணஇன்பம் உலக
- இன்பம்உயிர் இன்பம்முதல் எய்தும்இன்ப மாகித்
- தடம்பெறும்ஓர் ஆன்மஇன்பம் தனித்தஅறி வின்பம்
- சத்தியப்பே ரின்பம்முத்தி இன்பமுமாய் அதன்மேல்
- நடம்பெறுமெய்ப் பொருள்இன்பம் நிரதிசய இன்பம்
- ஞானசித்திப் பெரும்போக நாட்டரசின் பமுமாய்த்
- திடம்பெறஓங் கியஇயற்கைத் தனிஇன்ப மயமாம்
- திருச்சிற்றம் பலந்தனிலே தெய்வமொன்றே கண்டீர்.
- கற்றமே லவர்தம் உறவினைக் கருதேன் கலகர்தம் உறவினிற் களித்தேன்
- உற்றமே தகவோர் உவட்டுற இருந்தேன் உலகியற் போகமே உவந்தேன்
- செற்றமே விழையும் சிறுநெறி பிடித்தேன் தெய்வம்ஒன் றெனும்அறி வறியேன்
- குற்றமே உடையேன் அம்பலக் கூத்தன் குறிப்பினுக் கென்கட வேனே.
- கடுமையேன் வஞ்சக் கருத்தினேன் பொல்லாக் கண்மனக் குரங்கனேன் கடையேன்
- நெடுமைஆண் பனைபோல் நின்றவெற் றுடம்பேன் நீசனேன் பாசமே உடையேன்
- நடுமைஒன் றறியேன் கெடுமையிற் கிளைத்த நச்சுமா மரம்எனக்கிளைத்தேன்
- கொடுமையே குறித்தேன் அம்பலக் கூத்தன் குறிப்பினுக் கென்கட வேனே.
- நிலத்திலும்பணத்தும் நீள்விழிமடவார் நெருக்கிலும்பெருக்கிய நினைப்பேன்
- புலத்திலும் புரைசேர் பொறியிலும் மனத்தைப் போக்கிவீண் போதுபோக் குறுவேன்
- நலத்தில்ஓர் அணுவும் நண்ணிலேன் கடைய நாயினுங் கடையனேன் நவையேன்
- குலத்திலும் கொடியேன் அம்பலக் கூத்தன் குறிப்பினுக் கென்கட வேனே.
- அரசர்எலாம் மதித்திடப்பே ராசையிலே அரசோ
- டால்எனவே மிகக்கிளைத்தேன் அருளறியாக் கடையேன்
- புரசமரம் போற்பருத்தேன் எட்டிஎனத் தழைத்தேன்
- புங்கெனவும் புளிஎனவும் மங்கிஉதிர் கின்றேன்
- பரசும்வகை தெரிந்துகொளேன் தெரிந்தாரைப் பணியேன்
- பசைஅறியாக் கருங்கல்மனப் பாவிகளிற் சிறந்தேன்
- விரசுநிலத் தேன்பிறந்தேன் நின்கருத்தை அறியேன்
- வியக்குமணி மன்றோங்கி விளங்குபரம் பொருளே.
- பொருளறியேன் பொருளறிந்தார் போன்றுநடித் திங்கே
- பொங்கிவழிந் துடைகின்றேன் பொய்யகத்தேன் புலையேன்
- மருளறியாத் திருவாளர் உளங்கயக்கத் திரிவேன்
- வையுண்டும் உழவுதவா மாடெனவே தடித்தேன்
- வெருளறியாக் கொடுமனத்தேன் விழற்கிறைத்துக் களிப்பேன்
- வீணர்களில் தலைநின்றேன் விலக்கனைத்தும் புரிவேன்
- தெருளறியேன் உலகிடைநான் ஏன்பிறந்தேன் நினது
- திருவுளத்தை அறிந்திலேன் தெய்வநடந் தவனே.
- தவம்புரியேன் தவம்புரிந்தார் தமைப்போல நடித்துத்
- தருக்குகின்றேன் உணர்ச்சியிலாச் சடம்போல இருந்தேன்
- பவம்புரிவேன் கமரினிடைப் பால்கவிழ்க்கும் கடையேன்
- பயனறியா வஞ்சமனப் பாறைசுமந் துழல்வேன்
- அவம்புரிவேன் அறிவறியேன் அன்பறியேன் அன்பால்
- ஐயாநின் அடியடைந்தார்க் கணுத்துணையும் உதவேன்
- நவம்புரியும் உலகிடைநான் ஏன்பிறந்தேன் நினது
- நல்லதிரு வுளம்அறியேன் ஞானநடத் திறையே.
- இறைஅளவும் அறிவொழுக்கத் திச்சையிலேன் நரகில்
- இருந்துழன்று வாடுகின்றோர் எல்லார்க்கும் இழிந்தேன்
- பொறைஅளவோ நன்மைஎலாம் போக்கில்விட்டுத் தீமை
- புரிகின்றேன் எரிகின்ற புதுநெருப்பிற் கொடியேன்
- நிறைஅளவோ முறைஅளவோ நிலைஅளவுந் தவிர்ந்த
- நெடுஞ்சால நெஞ்சகத்தேன் நீலவிடம் போல்வேன்
- கறையளவா உலகிடைநான் ஏன்பிறந்தேன் நினது
- கருத்தறியேன் கருணைநடங் காட்டுகின்ற குருவே.
- காட்டுகின்ற உவர்க்கடல்போல் கலைகளிலும் செல்வக்
- களிப்பினிலும் சிறந்துமிகக் களித்துநிறை கின்றேன்
- நீட்டுகின்ற ஆபத்தில் ஒருசிறிதும் உதவேன்
- நெடுந்தூரம் ஆழ்ந்துதவாப் படுங்கிணறு போல்வேன்
- ஆட்டுகின்ற அருட்பெருமை ஒருசிறிதும் தெரியேன்
- அச்சமிலேன் நாணமிலேன் அடக்கம்ஒன்றும் இல்லேன்
- கூட்டுகின்ற உலகிடைநான் ஏன்பிறந்தேன் நினது
- குறிப்பறியேன் மன்றில்நடங் குலவுகுல மணியே.
- போக மாதியை விழைந்தனன் வீணில்
- பொழுது போக்கிடும் இழுதையேன் அழியாத்
- தேக மாதியைப் பெறமுயன் றறியேன்
- சிரங்கு நெஞ்சகக் குரங்கொடும் உழல்வேன்
- காக மாதிகள் அருந்தஓர் பொருக்கும்
- காட்ட நேர்ந்திடாக் கடையரில் கடையேன்
- ஆக மாதிசொல் அறிவறி வேனோ
- அப்ப னேஎனை ஆண்டுகொண் டருளே.
- வருத்த நேர்பெரும் பாரமே சுமந்து
- வாடும் ஓர்பொதி மாடென உழன்றேன்
- பருத்த ஊனொடு மலம்உணத் திரியும்
- பன்றி போன்றுளேன் நன்றியொன் றறியேன்
- கருத்தி லாதயல் குரைத்தலுப் படைந்த
- கடைய நாயினிற் கடையனேன் அருட்குப்
- பொருத்தன் ஆவதற் கென்செயக் கடவேன்
- புண்ணி யாஎனைப் புரிந்துகொண் டருளே.
- அகங்காரக் கொடுங்கிழங்கை அகழ்ந்தெறிய அறியேன்
- அறிவறிந்த அந்தணர்பால் செறியும்நெறி அறியேன்
- நகங்கானம் உறுதவர்போல் நலம்புரிந்தும் அறியேன்
- நச்சுமரக் கனிபோல இச்சைகனிந் துழல்வேன்
- மகங்காணும் புலவரெலாம் வந்துதொழ நடிக்கும்
- மணிமன்றந் தனைஅடையும் வழியும்அறி வேனோ
- இகங்காணத் திரிகின்றேன் எங்ஙனம்நான் புகுவேன்
- யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.
- வேதாந்த நிலைநாடி விரைந்துமுயன் றறியேன்
- மெய்வகையும் கைவகையும் செய்வகையும் அறியேன்
- நாதாந்தத் திருவீதி நடந்திடுதற் கறியேன்
- நான்ஆர்என் றறியேன்எங் கோன்ஆர்என் றறியேன்
- போதாந்தத் திருநாடு புகஅறியேன் ஞான
- பூரணா காயம்எனும் பொதுவைஅறி வேனோ
- ஏதாந்தீ யேன்சரிதம் எங்ஙனம்நான் புகுவேன்
- யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.
- சாதிமதம் சமயம்எனும் சங்கடம்விட் டறியேன்
- சாத்திரச்சே றாடுகின்ற சஞ்சலம்விட் டறியேன்
- ஆதிஅந்த நிலையறியேன் அலைஅறியாக் கடல்போல்
- ஆனந்தப் பெரும்போகத் தமர்ந்திடவும் அறியேன்
- நீதிநெறி நடந்தறியேன் சோதிமணிப் பொதுவில்
- நிருத்தமிடும் ஒருத்தர்திருக் கருத்தைஅறி வேனோ
- ஏதிலர்சார் உலகினிடை எங்ஙனம்நான் புகுவேன்
- யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.
- சாகாத தலைஅறியேன் வேகாத காலின்
- தரம்அறியேன் போகாத தண்ரை அறியேன்
- ஆகாய நிலைஅறியேன் மாகாய நிலையும்
- அறியேன்மெய்ந் நெறிதனைஓர் அணுஅளவும் அறியேன்
- மாகாத லுடையபெருந் திருவாளர் வழுத்தும்
- மணிமன்றந் தனைஅடையும் வழியும்அறி வேனோ
- ஏகாய200 உலகினிடை எங்ஙனம்நான் புகுவேன்
- யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.
- பையார் பாம்பு கொடியதெனப் பகர்வார் அதற்கும் பரிந்துமுன்னாள்
- ஐயா கருணை அளித்தனைஎன் அளவில் இன்னும் அளித்திலையே
- மையார் மிடற்றோய் ஆனந்த மன்றில் நடிப்போய் வல்வினையேன்
- நையா நின்றேன் ஐயோநான் பாம்பிற் கொடியன் ஆனேனே.
- கல்லுங் கனியத் திருநோக்கம் புரியும் கருணைக் கடலேநான்
- அல்லும் பகலுந் திருக்குறிப்பை எதிர்பார்த் திங்கே அயர்கின்றேன்
- கொல்லுங் கொடியார்க் குதவுகின்ற குறும்புத் தேவர் மனம்போலச்
- சொல்லும் இரங்கா வன்மைகற்க எங்கே ஐயோ துணிந்தாயோ.
- போகமே விழைந்தேன் புலைமனச் சிறியேன் பூப்பினும் புணர்ந்தவெம் பொறியேன்
- ஏகமே பொருள்என் றறிந்திலேன் பொருளின் இச்சையால் எருதுநோ வறியாக்
- காகமேஎனப்போய்ப்பிறர் தமைவருத்திக்களித்தபாதகத்தொழிற்கடையேன்
- மோகமேஉடையேன் என்னினும்எந்தாய் முனிந்திடேல்காத்தருள் எனையே.
- பூப்பினும் பலகால் மடந்தையர் தமைப்போய்ப்புணர்ந்தவெம் புலையனேன் விடஞ்சார்
- பாப்பினுங் கொடியர் உறவையே விழைந்த பள்ளனேன் கள்ளனேன் நெருக்கும்
- ஆப்பினும் வலியேன் அறத்தொழில் புரியேன்அன்பினால்அடுத்தவர்கரங்கள்
- கூப்பினுங்கூப்பாக் கொடுங்கையேன் எனினும் கோபியேல் காத்தருள் எனையே.
- கொட்டிலை அடையாப் பட்டிமா டனையேன் கொட்டைகள் பரப்பிமேல் வனைந்த
- கட்டிலை விரும்பி அடிக்கடி படுத்த கடையனேன் கங்குலும் பகலும்
- அட்டிலை அடுத்த பூஞையேன் உணவை அறவுண்டு குப்பைமேற் போட்ட
- நெட்டிலை அனையேன் என்னினும் வேறு நினைத்திடேல் காத்தருள் எனையே.
- நேரிழை யவர்தம் புணர்முலை நெருக்கில் நெருக்கிய மனத்தினேன் வீணில்
- போரிழை வெறியர் புகழ்பெறு வெறியேன் புனைகலை இலர்க்கொரு கலையில்
- ஓரிழை எனினும் கொடுத்திலேன் நீள உடுத்துடுத் தூர்தொறுந் திரிந்தேன்
- ஏரிழை விழைந்து பூண்டுளங் களித்தேன் என்னினும் காத்தருள்எனையே.
- தாலவாழ்க் கையிலே சார்ந்தவர் எல்லாம் தக்கமுப் போதினும் தனித்தே
- சீலமார் பூசைக் கடன்முடிக் கின்றார் சிறியனேன் தவஞ்செய்வான் போலே
- ஞாலமே லவர்க்குக் காட்டிநான் தனித்தே நவிலும்இந் நாய்வயிற் றினுக்கே
- காலையா தியமுப் போதினும் சோற்றுக் கடன்முடித் திருந்தனன் எந்தாய்.
- சோற்றிலே விருப்பஞ் சூழ்ந்திடில் ஒருவன் துன்னுநல் தவம்எலாஞ் சுருங்கி
- ஆற்றிலே கரைத்த புளிஎனப் போம்என் றறிஞர்கள் உரைத்திடல் சிறிதும்
- போற்றிலேன் உன்னைப் போற்றிலேன் சுவையில் பொருந்திய காரசா ரஞ்சேர்
- சாற்றிலே கலந்த சோற்றிலே ஆசை தங்கினேன் என்செய்வேன் எந்தாய்.
- விருப்பிலேன் போலக் காட்டினேன் அன்றி விளைவிலா தூண்எலாம் மறுத்த
- கருப்பிலே எனினும் கஞ்சியா திகளைக் கருத்துவந் துண்ணுதற் கமையேன்
- நெருப்பிலே உருக்கு நெய்யிலே சிறிதும் நீரிடாத் தயிரிலே நெகிழ்ந்த
- பருப்பிலே சோற்றுப் பொருப்பிலே ஆசை பற்றினேன் என்செய்வேன் எந்தாய்.
- உறியிலே தயிரைத் திருடிஉண் டனன்என் றொருவனை உரைப்பதோர் வியப்போ
- குறியிலே அமைத்த உணவெலாம் திருடிக் கொண்டுபோய் உண்டனன் பருப்புக்
- கறியிலே பொரித்த கறியிலே கூட்டுக் கறியிலே கலந்தபே ராசை
- வெறியிலே உனையும் மறந்தனன் வயிறு வீங்கிட உண்டனன் எந்தாய்.
- தண்டுகாய் கிழங்கு பூமுதல் ஒன்றும் தவறவிட் டிடுவதற் கமையேன்
- கொண்டுபோய் வயிற்றுக் குழிஎலாம் நிரம்பக் கொட்டினேன் குணமிலாக் கொடியேன்
- வண்டுபோல் விரைந்து வயல்எலாம் நிரம்ப மலங்கொட்டஓடிய புலையேன்
- பண்டுபோல் பசித்தூண் வருவழி பார்த்த பாவியேன் என்செய்வேன் எந்தாய்.
- பருப்பிடி யரிவா லிடிகளா திகளால் பண்ணிய பண்ணிகா ரங்கள்
- உருப்பிடி நிரம்ப வரவர எல்லாம் ஒருபெரு வயிற்றிலே அடைத்தேன்
- கருப்பிடி உலகின் எருப்பிடி அனைய கடையரில் கடையனேன் உதவாத்
- துருப்பிடி இருப்புத் துண்டுபோல் கிடந்து தூங்கினேன் என்செய்வேன் எந்தாய்.
- அடிக்கடி நுண்மை விழைந்துபோய் அவைகள் அடுக்கிய இடந்தொறும் அலைந்தே
- தடிக்கடி நாய்போல் நுகர்ந்துவாய் சுவைத்துத் தவம்புரிந் தான்என நடித்தேன்
- பொடிக்கடி நாசித் துளையிலே புகுத்திப் பொங்கினேன் அய்யகோ எனது
- முடிக்கடிபுனையமுயன்றிலேன் அறிவில்மூடனேன்என்செய்வேன்எந்தாய்.
- உன்கடன் அடியேற் கருளல்என் றுணர்ந்தேன்
- உடல்பொருள் ஆவியும் உனக்கே
- பின்கடன் இன்றிக் கொடுத்தனன் கொடுத்த
- பின்னும்நான் தளருதல் அழகோ
- என்கடன் புரிவேன் யார்க்கெடுத் துரைப்பேன்
- என்செய்வேன் யார்துணை என்பேன்
- முன்கடன் பட்டார் போல்மனம் கலங்கி
- முறிதல்ஓர் கணம்தரி யேனே.
- தந்தையும் தாயும் குருவும்யான் போற்றும்
- சாமியும் பூமியும் பொருளும்
- சொந்தநல் வாழ்வும் நேயமும் துணையும்
- சுற்றமும் முற்றும்நீ என்றே
- சிந்தையுற் றிங்கே இருக்கின்றேன் இதுநின்
- திருவுளம் தெரிந்ததே எந்தாய்
- நிந்தைசெய் உலகில் யான்உளம் கலங்கல்
- நீதியோ நின்அருட் கழகோ.
- அரைசெலாம் வழங்கும் தனிஅர சதுநின்
- அருளர செனஅறிந் தனன்பின்
- உரைசெய்நின் அருள்மேல் உற்றபே ராசை
- உளம்எலாம் இடங்கொண்ட தெந்தாய்
- வரைசெயா மேன்மேல் பொங்கிவாய் ததும்பி
- வழிகின்ற தென்வசங் கடந்தே
- இரைசெய்என் ஆவி தழைக்கஅவ் வருளை
- ஈந்தருள் இற்றைஇப் போதே.
- போதெலாம் வீணில் போக்கிஏ மாந்த
- புழுத்தலைப் புலையர்கள் புணர்க்கும்
- சூதெலாம் கேட்குந் தொறும்உனைப் பரவும்
- தூயர்கள் மனம்அது துளங்கித்
- தாதெலாம் கலங்கத் தளருதல் அழகோ
- தனிஅருட் சோதியால் அந்த
- வாதெலாம் தவிர்த்துச் சுத்தசன் மார்க்கம்
- வழங்குவித் தருளுக விரைந்தே.
- என்உள வரைமேல் அருள்ஒளி ஓங்கிற்
- றிருள்இர வொழிந்தது முழுதும்
- மன்உறும் இதய மலர்மலர்ந் ததுநன்
- மங்கல முழங்குகின் றனசீர்ப்
- பொன்இயல் விளக்கம் பொலிந்தது சித்திப்
- பூவையர் புணர்ந்திடப் போந்தார்
- சொன்னநல் தருணம் அருட்பெருஞ் சோதி
- துலங்கவந் தருளுக விரைந்தே.
- சீரிடம் பெறும்ஓர் திருச்சிற்றம் பலத்தே
- திகழ்தனித் தந்தையே நின்பால்
- சேரிடம் அறிந்தே சேர்ந்தனன்257 கருணை
- செய்தருள் செய்திடத் தாழ்க்கில்
- யாரிடம் புகுவேன் யார்துணை என்பேன்
- யார்க்கெடுத் தென்குறை இசைப்பேன்
- போரிட முடியா தினித்துய ரொடுநான்
- பொறுக்கலேன் அருள்கஇப் போதே.
- போதுதான் விரைந்து போகின்ற தருள்நீ
- புரிந்திடத் தாழ்த்தியேல் ஐயோ
- யாதுதான் புரிவேன் யாரிடம் புகுவேன்
- யார்க்கெடுத் தென்குறை இசைப்பேன்
- தீதுதான் புரிந்தேன் எனினும்நீ அதனைத்
- திருவுளத் தடைத்திடு வாயேல்
- ஈதுதான் தந்தை மரபினுக் கழகோ
- என்னுயிர்த் தந்தைநீ அலையோ.
- தந்தைநீ அலையோ தனயன்நான் அலனோ
- தமியனேன் தளர்ந்துளங் கலங்கி
- எந்தையே குருவே இறைவனே முறையோ
- என்றுநின் றோலிடு கின்றேன்
- சிந்தையே அறியார் போன்றிருந் தனையேல்
- சிறியனேன் என்செய்கேன் ஐயோ
- சந்தையே புகுந்த நாயினில் கடையேன்
- தளர்ச்சியைத் தவிர்ப்பவர் யாரோ.
- சாற்றுவேன் எனது தந்தையே தாயே
- சற்குரு நாதனே என்றே
- போற்றுவேன் திருச்சிற் றம்பலத் தாடும்
- பூரணா எனஉல கெல்லாம்
- தூற்றுவேன் அன்றி எனக்குநீ செய்த
- தூயபேர் உதவிக்கு நான்என்
- ஆற்றுவேன் ஆவி உடல்பொருள் எல்லாம்
- அப்பநின் சுதந்தரம் அன்றோ.
- சுதந்தரம் உனக்கே கொடுத்தனம் உனது
- தூயநல் உடம்பினில் புகுந்தேம்
- இதந்தரும் உளத்தில் இருந்தனம் உனையே
- இன்புறக் கலந்தனம் அழியாப்
- பதந்தனில் வாழ்க அருட்பெருஞ் சோதிப்
- பரிசுபெற் றிடுகபொற் சபையும்
- சிதந்தரு சபையும் போற்றுக என்றாய்
- தெய்வமே வாழ்கநின் சீரே.
- என்னேஎம் பெருமான்இங் கின்னும்அணைந் திலன்என்றே ஏங்கி ஏங்கி
- மன்னேஎன் மணியேகண் மணியேஎன் வாழ்வேநல் வரத்தாற் பெற்ற
- பொன்னேஅற் புதமேசெம் பொருளேஎன் புகலேமெய்ப் போத மேஎன்
- அன்னேஎன் அப்பாஎன் றழைத்தலன்றி அடியேனால் ஆவ தென்னே.
- பொடிஎடுக்கப் போய்அதனை மறந்துமடி எடுத்தரையில் புனைவேன் சில்லோர்
- தடிஎடுக்கக் காணில்அதற் குளங்கலங்கி ஓடுவனித் தரத்தேன் இங்கே
- முடிஎடுக்க வல்லேனோ இறைவாநின் அருள்இலதேல் முன்னே வைத்த
- அடிஎடுக்க முடியாதே அந்தோஇச் சிறியேனால் ஆவ தென்னே.
- சாவதென்றும் பிறப்பதென்றும் சாற்றுகின்றபெரும்பாவம் தன்னைஎண்ணி
- நோவதின்று புதிதன்றே என்றும்உள தால்இந்த நோவை நீக்கி
- ஈவதுமன் றிடைநடிப்போய் நின்னாலே ஆகும்மற்றை இறைவ ராலே
- ஆவதொன்றும் இல்லைஎன்றால் அந்தோஇச் சிறியேனால் ஆவதென்னே.
- திருத்தகுபொன் னம்பலத்தே திருநடஞ்செய் தருளும்
- திருவடிகள் அடிச்சிறியேன் சென்னிமிசை வருமோ
- உருத்தகுநா னிலத்திடைநீள் மலத்தடைபோய் ஞான
- உருப்படிவம் அடைவேனோ ஒன்றிரண்டென் னாத
- பொருத்தமுறு சுத்தசிவா னந்தவெள்ளம் ததும்பிப்
- பொங்கிஅகம் வெள்ளத்தே நான்மூழ்கி நான்போய்
- அதுவாகப் பெறுவேனோ அறிந்திலன்மேல் விளைவே.
- கரணமெலாம் கரைந்ததனிக் கரைகாண்ப துளதோ
- கரைகண்ட பொழுதெனையுங் கண்டுதெளி வேனோ
- அரணமெலாம் கடந்ததிரு வருள்வெளிநேர் படுமோ
- அவ்வெளிக்குள் ஆனந்த அனுபவந்தான் உறுமோ
- மரணமெலாம் தவிர்ந்துசிவ மயமாகி நிறைதல்
- வாய்த்திடுமோ மூலமல வாதனையும் போமோ
- சரணமெலாம் தரமன்றில் திருநடஞ்செய் பெருமான்
- தனதுதிரு வுளம்எதுவோ சற்றுமறிந் திலனே.
- நாதாந்தத் திருவீதி நடந்துகடப் பேனோ
- ஞானவெளி நடுஇன்ப நடந்தரிசிப் பேனோ
- போதாந்தத் திருவடிஎன் சென்னிபொருந் திடுமோ
- புதுமையறச் சிவபோகம் பொங்கிநிறைந் திடுமோ
- வேதாந்த சித்தாந்த சமரசமும் வருமோ
- வெறுவெளியில் சுத்தசிவ வெளிமயந்தான் உறுமோ
- பாதாந்த வரைநீறு மணக்கமன்றில் ஆடும்
- பரமர்திரு வுளம்எதுவோ பரம்அறிந் திலனே.
- ஆனந்த நடம்பொதுவில் கண்டதரு ணத்தே
- அருமருந்தொன் றென்கருத்தில் அடைந்தமர்ந்த ததுதான்
- கானந்த மதத்தாலே காரமறை படுமோ
- கடுங்கார மாகிஎன்றன் கருத்தில்உறைந் திடுமோ
- ஊனந்த மறக்கொளும்போ தினிக்கரசம் தருமோ
- உணக்கசந்து குமட்டிஎதிர் எடுத்திடநேர்ந் திடுமோ
- நானந்த உளவறிந்து பிறர்க்கீய வருமோ
- நல்லதிரு வுளம்எதுவோ வல்லதறிந் திலனே.
- தாய்கொண்ட திருப்பொதுவில் எங்கள்குரு நாதன்
- சந்நிதிபோய் வரவிடுத்த தனிக்கரணப் பூவை
- காய்கொண்டு வந்திடுமோ பழங்கொண்டு வருமோ
- கனிந்தபழங் கொண்டுவருங் காலதனை மதமாம்
- பேய்கொண்டு போய்விடுமோ பிலத்திடைவீழ்ந் திடுமோ
- பின்படுமோ முன்படுமோ பிணங்கிஒளித் திடுமோ
- வாய்கொண்டு வென்றிடுமோ தோற்றிடுமோ என்னை
- மறந்திடுமோ திருவுளத்தின் வண்ணம்அறிந் திலனே.
- ஞானமணிப் பொதுநடஞ்செய் திருவடிகண் டிடவே
- நடக்கின்றேன் அந்தோமுன் நடந்தவழி அறியேன்
- ஊனமிகும் ஆணவமாம் பாவிஎதிர்ப் படுமோ
- உடைமைஎலாம் பறித்திடுமோ நடைமெலிந்து போமோ
- ஈனமுறும் அகங்காரப் புலிகுறுக்கே வருமோ
- இச்சைஎனும் இராக்கதப்பேய் எனைப்பிடித்துக் கொளுமோ
- ஆனமலத் தடைநீக்க அருட்டுணைதான் உறுமோ
- ஐயர்திரு வுளம்எதுவோ யாதுமறிந் திலனே.
- மணிக்கதவம் திறவாயோ மறைப்பையெலாம் தவிர்த்தே
- மாற்றறியாப் பொன்னேநின் வடிவதுகாட் டாயோ
- கணிக்கறியாப் பெருநிலையில் என்னொடுநீ கலந்தே
- கரைகடந்த பெரும்போகம் கண்டிடச்செய் யாயோ
- தணிக்கறியாக் காதல்மிகப் பெருகுகின்ற தரசே
- தாங்கமுடி யாதினிஎன் தனித்தலைமைப் பதியே
- திணிக்கலையா தியஎல்லாம் பணிக்கவல்ல சிவமே
- சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.
- உரைகடந்த திருவருட்பே ரொளிவடிவைக் கலந்தே
- உவட்டாத பெரும்போகம் ஓங்கியுறும் பொருட்டே
- இரைகடந்தென் உள்ளகத்தே எழுந்துபொங்கித் ததும்பி
- என்காதல் பெருவெள்ளம் என்னைமுற்றும் விழுங்கிக்
- கரைகடந்து போனதினித் தாங்கமுடி யாது
- கண்டுகொள்வாய் நீயேஎன் கருத்தின்வண்ணம் அரசே
- திரைகடந்த குருமணியே சிவஞான மணியே
- சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.
- உன்புடைநான் பிறர்போலே உடுக்கவிழைந் தேனோ
- உண்ணவிழைந் தேனோவே றுடைமைவிழைந் தேனோ
- அன்புடையாய் என்றனைநீ அணைந்திடவே விழைந்தேன்
- அந்தோஎன் ஆசைவெள்ளம் அணைகடந்த தரசே
- என்புடைவந் தணைகஎன இயம்புகின்றேன் உலகோர்
- என்சொலினும் சொல்லுகஎன் இலச்சைஎலாம் ஒழித்தேன்
- தென்புடையோர் முகநோக்கித் திருப்பொதுநிற் கின்றோய்
- சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.
- இறந்திறந்தே இளைத்ததெலாம் போதும்இந்த உடம்பே
- இயற்கைஉடம் பாகஅருள் இன்னமுதம் அளித்தென்
- புறந்தழுவி அகம்புணர்ந்தே கலந்துகொண்டெந் நாளும்
- பூரணமாம் சிவபோகம் பொங்கியிட விழைந்தேன்
- பிறந்திறந்து போய்க்கதியைப் பெறநினைந்தே மாந்த
- பேதையர்போல் எனைநினையேல் பெரியதிருக் கதவம்
- திறந்தருளி அணைந்திடுவாய் சிற்சபைவாழ் அரசே
- சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.
- கூறுகின்ற சமயம்எலாம் மதங்கள்எலாம் பிடித்துக்
- கூவுகின்றார் பலன்ஒன்றும் கொண்டறியார் வீணே
- நீறுகின்றார் மண்ணாகி நாறுகின்றார் அவர்போல்
- நீடுலகில் அழிந்துவிட நினைத்தேனோ நிலைமேல்
- ஏறுகின்ற திறம்விழைந்தேன் ஏற்றுவித்தாய் அங்கே
- இலங்குதிருக் கதவுதிறந் தின்னமுதம் அளித்தே
- தேறுகின்ற மெய்ஞ்ஞான சித்திஉறப் புரிவாய்
- சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.
- வேதநெறி ஆகமத்தின் நெறிபவுரா ணங்கள்
- விளம்புநெறி இதிகாசம் விதித்தநெறி முழுதும்
- ஓதுகின்ற சூதனைத்தும் உளவனைத்தும் காட்டி
- உள்ளதனை உள்ளபடி உணரஉரைத் தனையே
- ஏதமற உணர்ந்தனன்வீண் போதுகழிப் பதற்கோர்
- எள்ளளவும் எண்ணம்இலேன் என்னொடுநீ புணர்ந்தே
- தீதறவே அனைத்தும்வல்ல சித்தாடல் புரிவாய்
- சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.
- கலையுரைத்த கற்பனையே நிலைஎனக்கொண் டாடும்
- கண்மூடி வழக்கம்எலாம் மண்மூடிப் போக
- மலைவறுசன் மார்க்கம்ஒன்றே நிலைபெறமெய் உலகம்
- வாழ்ந்தோங்கக் கருதியருள் வழங்கினைஎன் தனக்கே
- உலைவறும்இப் பொழுதேநல் தருணம்என நீயே
- உணர்த்தினைவந் தணைந்தருள்வாய் உண்மைஉரைத் தவனே
- சிலைநிகர்வன் மனங்கரைத்துத் திருவமுதம் அளித்தோய்
- சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.
- தடித்தஓர் மகனைத் தந்தைஈண் டடித்தால் தாயுடன் அணைப்பள்தாய் அடித்தால்
- பிடித்தொரு தந்தை அணைப்பன்இங் கெனக்குப் பேசிய தந்தையும் தாயும்
- பொடித்திரு மேனி அம்பலத் தாடும் புனிதநீ ஆதலால் என்னை
- அடித்தது போதும் அணைத்திடல் வேண்டும் அம்மைஅப் பாஇனிஆற்றேன்.
- உலகறி வெனக்கிங் குற்றநாள் தொடங்கி உன்அறி வடையும்நாள் வரையில்
- இலகிஎன் னோடு பழகியும் எனைத்தான் எண்ணியும் நண்ணியும் பின்னர்
- விலகிய மாந்தர் அனைவரும் இங்கே மெய்யுறக் கூடிநின் றுனையே
- அலகில்பே ரன்பில் போற்றிவாழ்ந் திடவும் அடியனேற் கிச்சைகாண் எந்தாய்.
- மண்ணுல கதிலே உயிர்கள்தாம் வருந்தும் வருத்தத்தை ஒருசிறி தெனினும்
- கண்ணுறப் பார்த்தும் செவியுறக் கேட்டும் கணமும்நான் சகித்திடமாட்டேன்
- எண்ணுறும் எனக்கே நின்னருள் வலத்தால் இசைத்தபோ திசைத்தபோ தெல்லாம்
- நண்ணும்அவ் வருத்தம் தவிர்க்கும்நல் வரந்தான் நல்குதல் எனக்கிச்சை எந்தாய்.
- விண்டபோ தகரும் அறிவரும் பொருளே மெய்யனே ஐயனே உலகில்
- தொண்டனேன் தன்னை அடுத்தவர் நேயர் சூழ்ந்தவர் உறவினர் தாயர்
- கொண்டுடன் பிறந்தோர் அயலவர் எனும்இக் குறிப்பினர் முகங்களில் இளைப்பைக்
- கண்டபோ தெல்லாம் மயங்கிஎன் னுள்ளம் கலங்கிய கலக்கம்நீ அறிவாய்.
- சீர்த்தசிற் சபைஎன் அப்பனே எனது தெய்வமே என்பெருஞ் சிறப்பே
- ஆர்த்தஇவ் வுலகில் அம்மையர் துணைவர் அடுத்தவர் உறவினர் நேயர்
- வேர்த்தமற் றயலார் பசியினால் பிணியால்மெய்யுளம்வெதும்பியவெதுப்பைப்
- பார்த்தபோ தெல்லாம் பயந்தென துள்ளம் பதைத்ததுன் உளம்அறி யாதோ.
- பரைத்தனி வெளியில் நடம்புரிந் தருளும் பரமனே அரும்பெரும் பொருளே
- தரைத்தலத் தியன்ற வாழ்க்கையில் வறுமைச் சங்கடப் பாவியால் வருந்தி
- நரைத்தவர் இளைஞர் முதலினோர் எனையோர் நண்பன்என் றவரவர் குறைகள்
- உரைத்தபோ தெல்லாம் நடுங்கிஎன் னுள்ளம் உடைந்ததுன் உளம்அறி யாதோ.
- அன்னையே அப்பா திருச்சிற்றம் பலத்தென் ஐயனே இவ்வுல கதிலே
- பொன்னையே உடையார் வறியவர் மடவார் புகலும்ஆடவர்இவர் களுக்குள்
- தன்னையே அறியாப் பிணியினால் ஆவி தளர்கின்றார் தருணம்ஈ தெனவே
- சொன்னபோ தெல்லாம் பயந்துநான் அடைந்த சோபத்தை நீஅறி யாயோ.
- உண்டதோ றெல்லாம் அமுதென இனிக்கும் ஒருவனே சிற்சபை உடையாய்
- விண்டபே ருலகில் அம்மஇவ் வீதி மேவும்ஓர் அகத்திலே ஒருவர்
- ஒண்டுயிர் மடிந்தார் அலறுகின் றார்என் றொருவரோ டொருவர்தாம் பேசிக்
- கொண்டபோ தெல்லாம் கேட்டென துள்ளம் குலைநடுங் கியதறிந் திலையோ.
- காவிநேர் கண்ணாள் பங்கனே206 தலைமைக் கடவுளே சிற்சபை தனிலே
- மேவிய ஒளியே இவ்வுல கதில்ஊர் வீதிஆ திகளிலே மனிதர்
- ஆவிபோ னதுகொண் டுறவினர் அழுத அழுகுரல் கேட்டபோ தெல்லாம்
- பாவியேன் உள்ளம் பகீர்என நடுங்கிப் பதைத்ததுன் உளம்அறி யாதோ.
- நிலைபுரிந் தருளும் நித்தனே உலகில் நெறியலா நெறிகளில் சென்றே
- கொலைபுரிந் திட்ட கொடியவர் இவர்என் றயலவர் குறித்தபோ தெல்லாம்
- உலைபுரிந் திடுவெந் தீவயிற் றுள்ளே உற்றென நடுநடுக் குற்றே
- துலைபுரிந்207 தோடிக் கண்களை மூடித் துயர்ந்ததும் நீஅறிந் ததுவே.
- ஓர்ந்தஉள் ளகத்தே நிறைந்தொளிர் கின்ற ஒருவனே உலகியல் அதிலே
- மாந்தர்கள் இறப்பைக் குறித்திடும் பறையின் வல்லொலி கேட்டபோ தெல்லாம்
- காந்திஎன் உள்ளம் கலங்கிய கலக்கம் கடவுள்நீ யேஅறிந் திடுவாய்
- ஏந்தும்இவ் வுலகில் இறப்பெனில் எந்தாய் என்னுளம் நடுங்குவ தியல்பே.
- மறைமுடி வயங்கும் ஒருதனித் தலைமை வள்ளலே உலகர சாள்வோர்
- உறைமுடி208 வாள்கொண் டொருவரை ஒருவர் உயிரறச் செய்தனர் எனவே
- தறையுறச் சிறியேன் கேட்டபோ தெல்லாம் தளர்ந்துள நடுங்கிநின் றயர்ந்தேன்
- இறையும்இவ் வுலகில் கொலைஎனில் எந்தாய் என்னுளம் நடுங்குவ தியல்பே.
- எட்டரும் பொருளே திருச்சிற்றம் பலத்தே இலகிய இறைவனே உலகில்
- பட்டினி உற்றோர் பசித்தனர் களையால் பரதவிக் கின்றனர் என்றே
- ஒட்டிய பிறரால் கேட்டபோ தெல்லாம் உளம்பகீர் எனநடுக் குற்றேன்
- இட்டஇவ் வுலகில் பசிஎனில் எந்தாய் என்னுளம் நடுங்குவ தியல்பே.
- பல்லிகள் பலவா யிடத்தும்உச் சியினும் பகரும்நேர் முதற்பல வயினும்
- சொல்லிய தோறும் பிறர்துயர் கேட்கச் சொல்கின் றவோஎனச் சூழ்ந்தே
- மெல்லிய மனம்நொந் திளைத்தனன் கூகை வெங்குரல் செயுந்தொறும் எந்தாய்
- வல்லியக் குரல்கேட் டயர்பசுப் போல வருந்தினேன் எந்தைநீ அறிவாய்.
- காக்கைகள் கூவக் கலங்கினேன் பருந்தின் கடுங்குரல்கேட்டுளங்குலைந்தேன்
- தாக்கிய ஆந்தை குரல்செயப் பயந்தேன் சாக்குரல் பறவையால் தளர்ந்தேன்
- வீக்கிய வேறு கொடுஞ்சகு னஞ்செய் வீக்களால் மயங்கினேன் விடத்தில்
- ஊக்கிய பாம்பைக் கண்டபோ துள்ளம் ஒடுங்கினேன் நடுங்கினேன் எந்தாய்.
- இன்புறும் உணவு கொண்டபோ தெல்லாம் இச்சுகத் தால்இனி யாது
- துன்புறுங் கொல்லோ என்றுளம் நடுங்கிச்சூழ்வெறுவயிற்றொடும் இருந்தேன்
- அன்பிலே அன்பர் கொடுத்தவை எல்லாம்ஐயகோ213 தெய்வமே இவற்றால்
- வன்புறச் செய்யேல் என்றுளம் பயந்து வாங்கியுண் டிருந்தனன் எந்தாய்.
- தொழுந்தகை உடைய சோதியே அடியேன் சோம்பலால் வருந்திய தோறும்
- அழுந்தஎன் உள்ளம் பயந்ததை என்னால் அளவிடற் கெய்துமோ பகலில்
- விழுந்துறு தூக்கம் வரவது தடுத்தும் விட்டிடா வன்மையால் தூங்கி
- எழுந்தபோ தெல்லாம் பயத்தொடும் எழுந்தேன் என்செய்வேன் என்செய்வேன் என்றே.
- அந்தமோ டாதி இல்லதோர் பொதுவில் அரும்பெருஞ் சோதியே அடியேன்
- சொந்தமோ அறியேன் பகலிர வெல்லாம் தூக்கமே கண்டனன் தூக்கம்
- வந்தபோ தெல்லாம் பயத்தொடு படுத்தேன் மற்றுநான் எழுந்தபோதெல்லாம்
- தொந்தமாம் பயத்தால் சிவசிவ தூக்கம் தொலைவதெக் காலம்என் றெழுந்தேன்.
- பகலிர வடியேன் படுத்தபோ தெல்லாம் தூக்கமாம் பாவிவந் திடுமே
- இகலுறு கனவாம் கொடியவெம் பாவி எய்துமே என்செய்வோம் என்றே
- உகலுற உள்ளே நடுங்கிய நடுக்கம் உன்னுளம் அறியுமே எந்தாய்
- நகலுறச் சிறியேன் கனவுகண் டுள்ளம் நடுங்கிடா நாளும்ஒன் றுளதோ.
- காமமா மதமாங் காரமா திகள்என் கருத்தினில் உற்றபோ தெல்லாம்
- நாமம்ஆர் உளத்தோ டையவோ நான்தான் நடுங்கிய நடுக்கம்நீ அறிவாய்
- சேமமார் உலகில் காமமா திகளைச் செறிந்தவர் தங்களைக் கண்டே
- ஆமைபோல் ஒடுங்கி அடங்கினேன் அதுவும் ஐயநின் திருவுளம் அறியும்.
- கருத்துவே றாகிக் கோயிலில் புகுந்துன் காட்சியைக் கண்டபோ தெல்லாம்
- வருத்தமே அடைந்தேன் பயத்தொடும் திரும்பி வந்துநொந் திளைத்தனன் எந்தாய்
- நிருத்தனே நின்னைத் துதித்தபோ தெல்லாம் நெகிழ்ச்சிஇல் லாமையால் நடுங்கிப்
- பருத்தஎன் உடம்பைப் பார்த்திடா தஞ்சிப் படுத்ததும் ஐயநீ அறிவாய்.
- இந்தவிர் சடைஎம் இறைவனே என்னோ டியல்கலைத் தருக்கஞ்செய் திடவே
- வந்தவர் தம்மைக் கண்டபோ தெல்லாம் மனம்மிக நடுங்கினேன் அறிவாய்
- சந்தியுற் றொருகால் படித்தசாத் திரத்தைத் தமியனேன் மீளவுங் கண்டே
- நொந்ததும் உலகப் படிப்பில்என் உள்ளம் நொந்ததும் ஐயநீ அறிவாய்.
- அருளினை அளிக்கும் அப்பனே உலகில் அன்புளார் வலிந்தெனக் கீந்த
- பொருளினை வாங்கிப் போனபோ தெல்லாம் புழுங்கிய புழுக்கம்நீ அறிவாய்
- மருளும்அப் பொருளைச் சாலகத் தெறிந்து மனமிகஇளைத்ததும்பொருளால்
- இருளுரும் எனநான் உளம்நடுங் கியதும் எந்தைநின் திருவுளம் அறியும்.
- பொருளிலே உலகம் இருப்பதா தலினால் புரிந்துநாம் ஒருவர்பால் பலகால்
- மருவினால் பொருளின் இச்சையால் பலகால் மருவுகின் றான்எனக் கருதி
- வெருவுவர் எனநான் அஞ்சிஎவ் விடத்தும் மேவிலேன் எந்தைநீ அறிவாய்
- ஒருவும்அப் பொருளை நினைத்தபோ தெல்லாம் உவட்டினேன் இதுவும்நீ அறிவாய்.
- தகைத்தபே ருலகில் ஐயனே அடியேன் தடித்தஉள் ளத்தொடு களித்தே
- நகைத்தபோ தெல்லாம் நடுங்கினேன் இங்கே நல்லவா கனங்களில் ஏறி
- உகைத்தபோ தெல்லாம் நடுங்கினேன் விரைந்தே ஓட்டிய போதெலாம் பயந்தேன்
- பகைத்தபோ தயலார் பகைகளுக் கஞ்சிப் பதுங்கினேன் ஒதுங்கினேன் எந்தாய்.
- உருவுள மடவார் தங்களை நான்கண் ணுற்றபோ துளநடுக் குற்றேன்
- ஒருவுளத் தவரே வலிந்திட வேறோர் உவளகத் தொளித்தயல் இருந்தேன்
- கருவுளச் சண்டைக் கூக்குரல் கேட்ட காலத்தில் நான்உற்ற கலக்கம்
- திருவுளம் அறியும் உரத்தசொல் எனது செவிபுகில் கனல்புகு வதுவே.
- பண்ணிகா ரங்கள் பொசித்தஅப் போதும் பராக்கிலே செலுத்திய போதும்
- எண்ணிய மடவார் தங்களை விழைந்தே இசைந்தனு பவித்தஅப் போதும்
- நண்ணிய தயிலம் முழுக்குற்ற போதும் நவின்றசங் கீதமும் நடமும்
- கண்ணுறக் கண்டு கேட்டஅப் போதும் கலங்கிய கலக்கம்நீ அறிவாய்.
- நயந்தபொற் சரிகைத் துகில்எனக் கெனது நண்பினர் உடுத்திய போது
- பயந்தஅப் பயத்தை அறிந்தவர் எல்லாம் பயந்தனர் வெய்யிலிற் கவிகை
- வியந்துமேற் பிடித்த போதெலாம் உள்ளம் வெருவினேன் கைத்துகில் வீசி
- அயந்தரு தெருவில் நடப்பதற் கஞ்சி அரைக்குமேல் வீக்கினன் எந்தாய்.
- எளியரை வலியார் அடித்தபோது ஐயோ என்மனம் கலங்கிய கலக்கம்
- தெளியநான் உரைக்க வல்லவன் அல்லேன் திருவுளம் அறியுமே எந்தாய்
- களியரைக் கண்டு பயந்தஎன் பயந்தான் கடலினும் பெரியது கண்டாய்
- அளியர்பால் கொடியர் செய்தவெங் கொடுமை அறிந்தஎன் நடுக்கம்ஆர் அறிவார்.
- இரவிலே பிறர்தம் இடத்திலே இருந்த இருப்பெலாம் கள்ளர்கள் கூடிக்
- கரவிலே கவர்ந்தார் கொள்ளைஎன் றெனது காதிலே விழுந்தபோ தெல்லாம்
- விரவிலே217 நெருப்பை மெய்யிலே மூட்டி வெதுப்பல்போல் வெதும்பினேன் எந்தாய்
- உரவிலே ஒருவர் திடுக்கென வரக்கண் டுளம்நடுக் குற்றனன் பலகால்.
- உரத்தொரு வருக்கங் கொருவர் பேசியபோ துள்ளகம் நடுங்கினேன் பலகால்
- கரத்தினால் உரத்துக் கதவுதட் டியபோ தையவோ கலங்கினேன் கருத்தில்
- புரத்திலே அம்மா அப்பனே ஐயோ எனப்பிறர் புகன்றசொல் புகுந்தே
- தரத்தில்என் உளத்தைக் கலக்கிய கலக்கம் தந்தைநீ அறிந்தது தானே.
- மண்ணினீள் நடையில் வந்தவெந் துயரை மதித்துளம் வருந்திய பிறர்தம்
- கண்ணினீர் விடக்கண் டையவோ நானும் கண்ணினீர் விட்டுளங் கவன்றேன்
- நண்ணிநின் றொருவர் அசப்பிலே218 என்னை அழைத்தபோ தடியனேன் எண்ணா
- தெண்ணியா துற்ற தோஎனக் கலங்கி ஏன்எனல் மறந்தனன் எந்தாய்.
- என்புடை வந்தார் தம்முகம் நோக்கி என்கொலோ என்கொலோ இவர்தாம்
- துன்புடை யவரோ இன்புடை யவரோ சொல்லுவ தென்னையோ என்றே
- வன்புடை மனது கலங்கிஅங் கவரை வாஎனல் மறந்தனன் எந்தாய்
- அன்புடை220 யவரைக் கண்டபோ தெல்லாம் என்கொலோ என்றயர்ந் தேனே.
- காணுறு பசுக்கள் கன்றுக ளாதி கதறிய போதெலாம் பயந்தேன்
- ஏணுறு மாடு முதல்பல விருகம்221 இளைத்தவை கண்டுளம் இளைத்தேன்
- கோணுறு கோழி முதல்பல பறவை கூவுதல் கேட்டுளங் குலைந்தேன்
- வீணுறு கொடியர் கையிலே வாளை விதிர்த்தல்கண் டென்என வெருண்டேன்.
- பிதிர்ந்தமண் உடம்பை மறைத்திட வலியார் பின்முன்நோக் காதுமேல் நோக்கி
- அதிர்ந்திட நடந்த போதெலாம் பயந்தேன் அவர்புகன் றிட்டதீ மொழிகள்
- பொதிந்திரு செவியில் புகுந்தொறும் பயந்தேன் புண்ணியா நின்துதி எனும்ஓர்
- முதிர்ந்ததீங் கனியைக் கண்டிலேன் வேர்த்து முறிந்தகாய் கண்டுளம் தளர்ந்தேன்.
- வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம் வாடினேன் பசியினால் இளைத்தே
- வீடுதோ றிரந்தும் பசியறா தயர்ந்த வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்
- நீடிய பிணியால் வருந்துகின் றோர்என் நேர்உறக் கண்டுளந் துடித்தேன்
- ஈடின்மா222 னிகளாய் ஏழைக ளாய்நெஞ் சிளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்.
- நலிதரு சிறிய தெய்வமென் றையோ நாட்டிலே பலபெயர் நாட்டிப்
- பலிதர ஆடு பன்றிகுக் குடங்கள் பலிக்கடா முதலிய உயிரைப்
- பொலிவுறக் கொண்டே போகவும் கண்டே புந்திநொந் துளநடுக் குற்றேன்
- கலியுறு சிறிய தெய்வவெங் கோயில் கண்டகா லத்திலும் பயந்தேன்.
- துண்ணெனக் கொடியோர் பிறவுயிர் கொல்லத் தொடங்கிய போதெலாம் பயந்தேன்
- கண்ணினால் ஐயோ பிறஉயிர் பதைக்கக் கண்டகா லத்திலும் பதைத்தேன்
- மண்ணினில் வலையும் தூண்டிலும் கண்ணி வகைகளும் கண்டபோ தெல்லாம்
- எண்ணிஎன் உள்ளம் நடுங்கிய நடுக்கம் எந்தைநின் திருவுளம்223 அறியும்.
- நடுநிலை இல்லாக் கூட்டத்தைக் கருணை நண்ணிடா அரையரை நாளும்
- கெடுநிலை நினைக்கும் சிற்றதி காரக் கேடரைப் பொய்யலால் கிளத்தாப்
- படுநிலை யவரைப் பார்த்தபோ தெல்லாம் பயந்தனன் சுத்தசன் மார்க்கம்
- விடுநிலை உலக நடைஎலாங் கண்டே வெருவினேன் வெருவினேன் எந்தாய்.
- ஓங்கிய திருச்சிற் றம்பல முடைய ஒருதனித் தலைவனே என்னைத்
- தாங்கிய தாயே தந்தையே குருவே தயாநிதிக் கடவுளே நின்பால்
- நீங்கிய மனத்தார் யாவரே எனினும் அவர்தமை நினைத்தபோ தெல்லாம்
- தேங்கிய உள்ளம் பயந்தனன் அதுநின் திருவுளம் அறியுமே எந்தாய்.
- என்சுதந் தரம்ஓர் எட்டுணை யேனும் இல்லையே எந்தைஎல் லாம்உன்
- தன்சுதந் தரமே அடுத்தஇத் தருணம் தமியனேன் தனைப்பல துயரும்
- வன்சுமை மயக்கும் அச்சமும் மறைப்பும் மாயையும் வினையும்ஆ ணவமும்
- இன்சுவைக் கனிபோல் உண்கின்ற தழகோ இவைக்கெலாம் நான்இலக் கலவே.
- ஐயநான் ஆடும் பருவத்திற் றானே அடுத்தநன் னேயனோ டப்பா
- பொய்யுல காசை எனக்கிலை உனக்கென் புகல்என அவனும்அங் கிசைந்தே
- மெய்யுறத் துறப்போம் என்றுபோய் நினது மெய்யருள் மீட்டிட மீண்டேம்
- துய்யநின் உள்ளம் அறிந்ததே எந்தாய் இன்றுநான் சொல்லுவ தென்னே.
- பொறித்துனைப் பதியாப் பெற்றநாள் அடிமை புரிந்தது போலவே இன்றும்
- செறித்துநிற் கின்றேன் அன்றிஎன் உரிமைத் தெய்வமும் குருவும்மெய்ப் பொருளும்
- நெறித்தநற் றாயுந் தந்தையும் இன்பும் நேயமும் நீஎனப் பெற்றே
- குறித்தறிந் ததன்பின் எந்தைநான் ஏறிக் குதித்ததென் கூறுக நீயே.
- ஆரணம் உரைத்த வரைப்பெலாம் பலவாம் ஆகமம் உரைவரைப் பெல்லாம்
- காரண நினது திருவருட் செங்கோல் கணிப்பருங் களிப்பிலே ஓங்கி
- நாரணர் முதலோர் போற்றிட விளங்கி நடக்கின்ற பெருமைநான் அறிந்தும்
- தாரணி யிடைஇத் துன்பமா திகளால் தனையனேன் தளருதல் அழகோ.
- உற்றதோர் திருச்சிற் றம்பலத் தோங்கும் ஒருதனித் தந்தையே நின்பால்
- குற்றம்நான் புரிந்திங் கறிந்திலேன் குற்றம் குயிற்றினேன் என்னில்அக் குற்றம்
- இற்றென அறிவித் தறிவுதந் தென்னை இன்புறப் பயிற்றுதல் வேண்டும்
- மற்றய லார்போன் றிருத்தலோ தந்தை வழக்கிது நீஅறி யாயோ.
- குற்றமோ குணமோ நான்அறி யேன்என் குறிப்பெலாம் திருச்சிற்றம் பலத்தே
- உற்றதா தலினால் உலகியல் வழக்கில் உற்றன228 மற்றென தலவே
- தெற்றென229 அருட்கே குற்றம்என் பதுநான் செய்திடில் திருத்தலே அன்றி
- மற்றய லார்போன் றிருப்பதோ தந்தை மரபிது நீஅறி யாயோ.
- மாயையால் வினையால் அரிபிர மாதி வானவர் மனமதி மயங்கித்
- தீயகா ரியங்கள் செய்திடில் அந்தோ சிறியனேன் செய்வது புதிதோ
- ஆயினும் தீய இவைஎன அறியேன் அறிவித்துத் திருத்துதல் அன்றி
- நீயிவண் பிறர்போன் றிருப்பது தந்தை நெறிக்கழ கல்லவே எந்தாய்.
- கலங்கிய போதும் திருச்சிற்றம் பலத்தில் கருணையங் கடவுளே நின்பால்
- இலங்கிய நேயம் விலங்கிய திலையே எந்தைநின் உளம்அறி யாதோ
- மலங்கிய மனத்தேன் புகல்வதென் வினையால் மாயையால் வரும்பிழை எல்லாம்
- அலங்கும்என் பிழைகள் அல்லஎன் றுன்னோ டடிக்கடி அறைந்தனன் ஆண்டே.
- ஆதலால் இரக்கம் பற்றிநான் உலகில் ஆடலே அன்றிஓர் விடயக்
- காதலால் ஆடல் கருதிலேன் விடயக் கருத்தெனக் கில்லைஎன் றிடல்இப்
- போதலால் சிறிய போதும்உண் டதுநின் புந்தியில் அறிந்தது தானே
- ஈதலால் வேறோர் தீதென திடத்தே இல்லைநான் இசைப்பதென் எந்தாய்.
- தன்னைநே ரில்லாத் தந்தையே உலகில் தந்தையர் தங்களை அழைத்தே
- சொன்னசொல் மறுத்தே மக்கள்தம் மனம்போம் சூழலே போகின்றார் அடியேன்
- என்னைநீ உணர்த்தல் யாதது மலையின் இலக்கெனக் கொள்கின்றேன் அல்லால்
- பின்னைஓர் இறையும் மறுத்ததொன் றுண்டோபெரியநின் ஆணைநான் அறியேன்.
- போற்றுவார் போற்றும் புனிதனே மக்கள் பொருந்து தம் தந்தையர் தமையே
- வேற்றுவாழ் வடைய வீடுதா பணந்தா மெல்லிய சரிகைவத் திரந்தா
- ஏற்றஆ பரணந் தாஎனக் கேட்டே இரங்குவார் இவைகுறித் தடியேன்
- தேற்றுவாய் நின்னைக் கேட்டதொன் றுண்டோ திருவுளம் அறியநான் அறியேன்.
- உவந்தென துளத்தே உணர்த்திய எல்லாம் உறுமலை இலக்கென நம்பி
- நிவந்ததோள் பணைப்ப மிகஉளங் களிப்ப நின்றதும் நிலைத்தமெய்ப் பொருள்இப்
- பவந்தனில் பெறுதல் சத்தியம் எனவே பற்பல குறிகளால் அறிந்தே
- சிவந்தபொன் மலைபோல் இருந்ததும் இந்நாள் திகைப்பதும் திருவுளம் அறியும்.
- ஏய்ந்தபொன் மலைமேல் தம்பத்தில் ஏறி ஏகவும் ஏகவும் நுணுகித்
- தேய்ந்துபோ தடியேன் பயந்தவெம் பயத்தைத் தீர்த்துமேல் ஏற்றிய திறத்தை
- வாய்ந்துளே கருதி மலைஎனப் பணைத்தே மனங்களிப் புற்றுமெய் இன்பம்
- தோய்ந்துநின் றாடிச்சுழன்றதும் இந்நாள் சுழல்வதும் திருவுளம் அறியும்.
- வாட்டமோ டிருந்த சிறியனேன் தனது வாட்டமும் மாயையா திகளின்
- ஈட்டமும் தவிர்க்கத் திருவுளத் திரங்கி என்னைஓர் பொருள்என மதித்தே
- தீட்டரும் புகழ்சேர் திருவடித் துணைகள் செலுத்திய திருச்சிலம் பொலிநான்
- கேட்டபோ திருந்த கிளர்ச்சியும் இந்நாள் கிலேசமுந் திருவுளம் அறியும்.
- கற்றவர் கல்லார் பிறர்பிறர் குரல்என் காதிலே கிடைத்தபோ தெல்லாம்
- மற்றவர் தமக்கென் உற்றதோ அவர்தம் மரபினர் உறவினர் தமக்குள்
- உற்றதிங் கெதுவோ என்றுளம் நடுங்கி ஓடிப்பார்த் தோடிப்பார்த் திரவும்
- எற்றரு பகலும் ஏங்கிநான் அடைந்த ஏக்கமுந் திருவுளம் அறியும்.
- கருணையம் பதிநங் கண்ணுள்மா மணிநம் கருத்திலே கலந்ததெள் ளமுதம்
- மருள்நெறி தவிர்க்கும் மருந்தெலாம் வல்ல வள்ளல்சிற் றம்பலம் மன்னும்
- பொருள்நிறை இன்பம் நம்மைஆண் டளித்த புண்ணியம் வருகின்ற தருணம்
- தருணம்இப் போதென் றெண்ணிநான் இருக்கும் தன்மையும் திருவுளம் அறியும்.
- இமையவர் பிரமர் நாரணர் முதலோர் எய்துதற் கரியபே ரின்பம்
- தமைஅறிந் தவருட் சார்ந்தபே ரொளிநம் தயாநிதி தனிப்பெருந் தந்தை
- அமையும்நம் உயிர்க்குத் துணைதிருப் பொதுவில் ஐயர் தாம் வருகின்ற சமயம்
- சமயம்இப் போதென் றெண்ணிநான் இருக்கும் தன்மையும் திருவுளம் அறியும்.
- 206. காவியல் கருணை வடிவனே - முதற் பதிப்பு, பொ. சு. பதிப்பு.
- 207. தொலைபுரிந்து, 208. உறைஉறு - முதற்பதிப்பு, பொ.சு., ச. மு. க. பதிப்புகள்.
- 209. எந்தாய் கூகை வெங்குரல் செயுந்தோறும் - முதற்பதிப்பு, பொ.சு.,பி. இரா. பதிப்புகள்.
- 210. விடத்தின் - ச. மு. க. பதிப்பு.
- 211. செறும் - பி. இரா. பதிப்பு.
- 212. துயர்களை - ச. மு. க.
- 213. ஐயவோ - படிவேறுபாடு. ஆ. பா.
- 214. நடுக்கமும் - படிவேறுபாடு. ஆ. பா.
- 215. ஐயவோ - படிவேறுபாடு. ஆ. பா
- 216. அறியும் எந்தாயே - பி. இரா. பதிப்பு.
- 217. விரைவிலே - முதற்பதிப்பு, பொ. சு., ச. மு. க., பி. இரா. பதிப்பு.
- 218. அசைப்பிலே - படிவேறுபாடு. ஆ. பா.
- 219. சிறுகுறும் - முதற்பதிப்பு, பொ. சு., ச.மு. க. பதிப்பு.
- 220. இன்புடை - ச.மு க. பதிப்பு.
- 221. மிருகம் - முதற்பதிப்பு, பொ. சு., ச.மு.க., பி. இரா. பதிப்பு.
- 222. ஈடு - ஒப்பு, முதற் பதிப்பு.
- 223. திருவருள் - முதற் பதிப்பு, பொ. சு. பதிப்பு.
- 224. அலகுறாது - குறைவுபடாது. முதற் பதிப்பு.
- 225. கனியில் - பி. இரா. பதிப்பு.
- 226. அறிந்ததே - முதற்பதிப்பு, பொ. சு., ச. மு. க. பதிப்பு.
- 227. மைதவழ் முகில்போன் றருள்பொழி கருணை - முதற் பதிப்பு, பொ. சு., ச. மு. க.'மைதவழ் விழியென் னம்மையோர் புடைகொள் வள்ளலே' என்றும் பாடம் எனச் ச.மு.க.அடிக்குறிப்பிடுகிறார்.
- 228. உற்றிடின் - முதற்பதிப்பு; பொ. சு., ச. மு. க. பதிப்பு.
- 229. தெற்றென - விரைந்து. முதற்பதிப்பு.
- 230. தப்பிலா - முதற்பதிப்பு., பொ.சு., ச. மு. க. பதிப்பு.
- 231. இருக்கில் - பி. இரா. பதிப்பு,
- 232. விடுத்தல் - முதற்பதிப்பு, பொ. சு.,ச. மு. க., பி. இரா. பதிப்பு.
- 233. அருளாம் - ச. மு. க. பதிப்பு.
- 234. வரிக்கணேர் இன்ப வல்லியை மணந்த - முதற்பதிப்பு, பொ. சு., ச.மு.க. பதிப்பு.
- அம்மாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
- ஆணவம்ஆ தியமுழுதும் அறுத்துநிற்றல் வேண்டும்
- இம்மாலைத் தத்துவங்கள் எல்லாம்என் வசத்தே
- இயங்கிஒரு தீமையும்இல் லாதிருத்தல் வேண்டும்
- எம்மான்நான் வேண்டுதல்வேண் டாமையறல் வேண்டும்
- ஏகசிவ போகஅனு போகம்உறல் வேண்டும்
- தம்மானத் திருவடிவில் எந்தாயும் நானும்
- சார்ந்துகலந் தோங்குகின்ற தன்மையும்வேண் டுவனே.
- நினைத்தபோ தெல்லாம் நின்னையே நினைத்தேன்
- நினைப்பற நின்றபோ தெல்லாம்
- எனைத்தனி ஆக்கி நின்கணே நின்றேன்
- என்செயல் என்னஓர் செயலும்
- தினைத்தனை எனினும் புரிந்திலேன் எல்லாம்
- சிவன்செய லாம்எனப் புரிந்தேன்
- அனைத்தும்என் அரசே நீஅறிந் ததுவே
- அடிக்கடி உரைப்பதென் நினக்கே.
- களித்தபோ தெல்லாம் நின்இயல் உணர்ந்தே
- களித்தனன் கண்கள்நீர் ததும்பித்
- துளித்தபோ தெல்லாம் நின்அருள் நினைத்தே
- துளித்தனன் சூழ்ந்தவர் உளத்தைத்
- தெளித்தபோ தெல்லாம் நின்திறம் புகன்றே
- தெளித்தனன் செய்கைவே றறியேன்
- ஒளித்திரு வுளமே அறிந்ததிவ் வனைத்தும்
- உரைப்பதென் அடிக்கடி உனக்கே.
- களவிலே களித்த காலத்தும் நீயே
- களித்தனை நான்களித் தறியேன்
- உளவிலே உவந்த போதும்நீ தானே
- உவந்தனை நான்உவந் தறியேன்
- கொளஇலே சமும்ஓர் குறிப்பிலேன் அனைத்தும்
- குறித்தனை கொண்டனை நீயே
- அளவிலே எல்லாம் அறிந்தனை அரசே
- அடிக்கடி உரைப்பதென் நினக்கே.
- விழித்துவிழித் திமைத்தாலும் சுடர்உதயம் இலையேல்
- விழிகள்விழித் திளைப்பதலால் விளைவொன்றும் இலையே
- மொழித்திறஞ்செய் தடிக்கடிநான் முடுகிமுயன் றாலும்
- முன்னவநின் பெருங்கருணை முன்னிடல்இன் றெனிலோ
- செழித்துறுநற் பயன்எதுவோ திருவுளந்தான் இரங்கில்
- சிறுதுரும்போர் ஐந்தொழிலும் செய்திடல்சத் தியமே
- பழித்துரைப்பார் உரைக்கஎலாம் பசுபதிநின் செயலே
- பரிந்தெனையும் பாடுவித்துப் பரிசுமகிழ்ந் தருளே.
- மாநிருபா திபர்சூழ மணிமுடிதான் பொறுத்தே
- மண்ணாள வானாள மனத்தில்நினைத் தேனோ
- தேன்ஒருவா மொழிச்சியரைத் திளைக்கவிழைந் தேனோ
- தீஞ்சுவைகள் விரும்பினனோ தீமைகள்செய் தேனோ
- நானொருபா வமும்அறியேன் நன்னிதியே எனது
- நாயகனே பொதுவிளங்கும் நடராஜ பதியே
- ஏன்ஒருமை இலர்போல்நீ இருக்கின்றாய் அழகோ
- என்ஒருமை அறியாயோ யாவும்அறிந் தாயே.
- பிரிந்தினிச் சிறிதும் தரிக்கலேன் பிரிவைப்
- பேசினும் நெய்விடுந் தீப்போல்
- எரிந்துளங் கலங்கி255 மயங்கல்கண் டிலையோ
- எங்கணும் கண்ணுடை எந்தாய்
- புரிந்தசிற் பொதுவில் திருநடம் புரியும்
- புண்ணியா என்னுயிர்த் துணைவா
- கரந்திடா256 துறுதற் கிதுதகு தருணம்
- கலந்தருள் கலந்தருள் எனையே.
- ஏதும்ஒன் றறியாப் பேதையாம் பருவத்
- தென்னைஆட் கொண்டெனை உவந்தே
- ஓதும்இன் மொழியால் பாடவே பணிந்த
- ஒருவனே என்னுயிர்த் துணைவா
- வேதமும் பயனும் ஆகிய பொதுவில்
- விளங்கிய விமலனே ஞான
- போதகம் தருதற் கிதுதகு தருணம்
- புணர்ந்தருள் புணர்ந்தருள் எனையே.
- கருங்களிறு போல்மதத்தால் கண்சொருக்கி வீணே
- காலம்எலாம் கழிக்கின்ற கடையர்கடைத் தலைவாய்
- ஒருங்குசிறி யேன்தனைமுன் வலிந்தருளே வடிவாய்
- உள்அமர்ந்தே உள்ளதனை உள்ளபடி உணர்த்திப்
- பெருங்கருணை யால்அளித்த பேறதனை இன்னும்
- பிறர்அறியா வகைபெரிதும் பெறதும்என உள்ளே
- மருங்கிருந்த எனைவெளியில் இழுத்துவிட்ட தென்னோ
- மனம்ஆலை பாய்வதுகாண் மன்றில்நடத் தரசே.
- நாடுகின்ற மறைகள்எலாம் நாம்அறியோம் என்று
- நாணிஉரைத் தலமரவே நல்லமணி மன்றில்
- ஆடுகின்ற சேவடிகண் டானந்தக் கடலில்
- ஆடும்அன்பர் போல்நமக்கும் அருள்கிடைத்த தெனினும்
- வீடுகின்ற பிறர்சிறிதும் அறியாமல் இருக்க
- வேண்டும்என இருந்தஎன்னை வெளியில்இழுத் திட்டு
- வாடுகின்ற வகைபுரிந்த விதியைநினைந் தையோ
- மனம்ஆலை பாய்வதுகாண் மன்றில்நடத் தரசே.
- தளர்ந்திடேல் மகனே என்றெனை எடுத்தோர்
- தாய்கையில் கொடுத்தனை அவளோ
- வளர்ந்திடா வகையே நினைத்தனள் போன்று
- மாயமே புரிந்திருக் கின்றாள்
- கிளர்ந்திட எனைத்தான் பெற்றநற் றாயும்
- கேட்பதற் கடைந்திலன் அந்தோ
- உளந்தரு கருணைத் தந்தையே நீயும்
- உற்றிலை பெற்றவர்க் கழகோ.
- தும்மினேன் வெதும்பித் தொட்டிலிற் கிடந்தே
- சோர்ந்தழு திளைத்துமென் குரலும்
- கம்மினேன் செவிலி அம்மிபோல் அசையாள்
- காதுறக் கேட்டிருக் கின்றாள்
- செம்மியே மடவார் கொம்மியே பாடிச்
- சிரித்திருக் கின்றனர் அந்தோ
- இம்மியே எனினும் ஈந்திடார் போல
- இருப்பதோ நீயும்எந் தாயே.
- காய்ந்திடு மனத்தாள் போன்றனள் சிறிதும்
- கனிவிலாள் காமமா திகளாம்
- பாய்ந்திடு வேடப் பயல்களால் எனக்குப்
- பயம்புரி வித்தனள் பலகால்
- தேய்ந்திடு மதிஎன் றெண்ணினாள் குறையாத்
- திருமதி எனநினைந் தறியாள்
- சாய்ந்தஇச் செவிலி கையிலே என்னைத்
- தந்தது சாலும்எந் தாயே.
- புண்ணிலே புகுந்த கோல்எனத் துயரம்
- புகுந்தெனைக் கலக்கிய போதும்
- கண்ணிலே எனது கருத்திலே கலந்த
- கருத்தனே நின்றனை அல்லால்
- மண்ணிலே வயங்கும் வானிலே பிறரை
- மதித்திலேன் மதிக்கின்றார் தமையும்
- நண்ணிலேன் வேறொன் றெண்ணிலேன் உனையே
- நம்பினேன் கைவிடேல் எனையே.
- வம்பனேன் பிறர்போல் வையமும் வானும்
- மற்றவும் மதித்திலேன் மதஞ்சார்
- உம்பனேர் அகங்கா ரந்தவிர்ந் தெல்லா
- உலகமும் வாழ்கவென் றிருந்தேன்
- செம்பொனே கருணைத் தெய்வமே எல்லாம்
- செயவல்ல சித்தனே சிவனே
- நம்பனே ஞான நாதனே உனையே
- நம்பினேன் கைவிடேல் எனையே.
- படித்தனன் உலகப் படிப்பெலாம் மெய்ந்நூல்
- படித்தவர் தங்களைப் பார்த்து
- நொடித்தனன் கடிந்து நோக்கினேன் காம
- நோக்கினேன் பொய்யர்தம் உறவு
- பிடித்தனன் உலகில் பேதையர் மயங்கப்
- பெரியரில் பெரியர்போல் பேசி
- நடித்தனன் எனினும் நின்னடித் துணையே
- நம்பினேன் கைவிடேல் எனையே.
- பஞ்சுநேர் உலகப் பாட்டிலே மெலிந்த
- பாவியேன் சாவியே போன
- புஞ்செயே அனையேன் புழுத்தலைப் புலையேன்
- பொய்யெலாம் பூரித்த வஞ்ச
- நெஞ்சினேன் பாப நெறியினேன் சினத்தில்
- நெடியனேன் கொடியனேன் காம
- நஞ்சினேன் எனினும் அஞ்சினேன் உனையே
- நம்பினேன் கைவிடேல் எனையே.
- துனித்தவெம் மடவார் பகல்வந்த போது
- துறவியின் கடுகடுத் திருந்தேன்
- தனித்திர வதிலே வந்தபோ தோடித்
- தழுவினேன் தடமுலை விழைந்தேன்
- இனித்தசொல் புகன்றேன் என்பினைக் கறித்தே
- இடர்ப்பட்ட நாயென இளைத்தேன்
- நனித்தவ றுடையேன் என்னினும் உனையே
- நம்பினேன் கைவிடேல் எனையே.
- தார்த்தட முலையார் நான்பல ரொடுஞ்சார்
- தலத்திலே வந்தபோ தவரைப்
- பார்த்திலேன் வார்த்தை பகர்ந்திலேன் தவசுப்
- பாதகப் பூனைபோல் இருந்தேன்
- பேர்த்துநான் தனித்த போதுபோய் வலிந்து
- பேசினேன் வஞ்சரிற் பெரியேன்
- நார்த்திடர் உளத்தேன் என்னினும் உனையே
- நம்பினேன் கைவிடேல் எனையே.
- பெண்மையே விழைந்தேன் அவர்மனம் அறியேன்
- பேய்எனப் பிடித்தனன் மடவார்க்
- குண்மையே புகல்வான் போன்றவர் தமைத்தொட்
- டுவந்தகங் களித்தபொய் யுளத்தேன்
- தண்மையே அறியேன் வெம்மையே உடையேன்
- சாத்திரம் புகன்றுவாய் தடித்தேன்
- நண்மையே அடையேன் என்னினும் உனையே
- நம்பினேன் கைவிடேல் எனையே.
- வன்மையில் பொருள்மேல் இச்சைஇல் லவன்போல்
- வாதிபோல் வார்த்தைகள் வழங்கி
- அன்மையில் பிறர்பால் உளவினால் பொருளை
- அடிக்கடி வாங்கிய கொடியேன்
- இன்மையுற் றவருக் குதவிலேன் பொருளை
- எனைவிடக் கொடியருக் கீந்தேன்
- நன்மையுற் றறியேன் என்னினும் உனையே
- நம்பினேன் கைவிடேல் எனையே.
- கட்டமே அறியேன் அடுத்தவர் இடத்தே
- காசிலே ஆசையில் லவன்போல்
- பட்டமே காட்டிப் பணம்பறித் துழன்றேன்
- பகல்எலாம் தவசிபோல் இருந்தேன்
- இட்டமே இரவில் உண்டயல் புணர்ந்தே
- இழுதையிற் றூங்கினேன் களித்து
- நட்டமே புரிந்தேன் என்னினும் உனையே
- நம்பினேன் கைவிடேல் எனையே.
- எளியவர் விளைத்த நிலமெலாங் கவரும்
- எண்ணமே பெரிதுளேன் புன்செய்க்
- களியுணும் மனையில் சர்க்கரை கலந்து
- காய்ச்சுபால் கேட்டுண்ட கடையேன்
- துளியவர்க் குதவேன் விருப்பிலான் போலச்
- சுவைபெறச் சுவைத்தநாக் குடையேன்
- நளிர்எனச் சுழன்றேன் என்னினும் உனையே
- நம்பினேன் கைவிடேல் எனையே.
- கொலைபல புரிந்தே புலைநுகர்ந் திருந்தேன்
- கோடுறு குரங்கினிற் குதித்தே
- அலைதரு மனத்தேன் அறிவிலேன் எல்லாம்
- அறிந்தவன் போல்பிறர்க் குரைத்தேன்
- மலைவுறு சமய வலைஅகப் பட்டே
- மயங்கிய மதியினேன் நல்லோர்
- நலையல எனவே திரிந்தனன் எனினும்
- நம்பினேன் கைவிடேல் எனையே.
- போக மாட்டேன் பிறரிடத்தே பொய்யிற் கிடந்து புலர்ந்துமனம்
- வேக மாட்டேன் பிறிதொன்றும் விரும்ப மாட்டேன் பொய்யுலகன்
- ஆக மாட்டேன் அரசேஎன் அப்பா என்றன் ஐயாநான்
- சாக மாட்டேன் உனைப்பிரிந்தால் தரிக்க மாட்டேன்கண்டாயே.
- வெறுக்க மாட்டேன் நின்றனையே விரும்பிப் பிடித்தேன் துயர்சிறிதும்
- பொறுக்க மாட்டேன் உலகவர்போல் பொய்யிற் கிடந்து புரண்டினிநான்
- சிறுக்க மாட்டேன் அரசேநின் திருத்தாள் ஆணை நின்ஆணை
- மறுக்க மாட்டேன் வழங்குவன எல்லாம் வழங்கி வாழியவே.
- பொய்விட் டகலாப் புலைக்கொடியேன் பொருட்டா இரவில் போந்தொருநின்
- கைவிட் டகலாப் பெரும்பொருள்என் கையிற் கொடுத்தே களிப்பித்தாய்
- மைவிட் டகலா விழிஇன்ப வல்லி மகிழும் மணவாளா
- மெய்விட் டகலா மனத்தவர்க்கு வியப்பாம் உனது மெய்யருளே.
- பாதி இரவில் எழுந்தருளிப் பாவி யேனை எழுப்பிஅருட்
- சோதி அளித்தென் உள்ளகத்தே சூழ்ந்து கலந்து துலங்குகின்றாய்
- நீதி நடஞ்செய் பேரின்ப நிதிநான் பெற்ற நெடும்பேற்றை
- ஓதி முடியா தென்போல்இவ் வுலகம் பெறுதல் வேண்டுவனே.
- ஆணைஉன்மேல் ஆணைஉன்மேல் ஆணைஉன்மேல் ஐயா
- அரைக்கணமும் நினைப்பிரிந்தே இனித்தரிக்க மாட்டேன்
- கோணைநிலத் தவர்பேசக் கேட்டதுபோல் இன்னும்
- குறும்புமொழி செவிகள்உறக் கொண்டிடவும் மாட்டேன்
- ஊணைஉறக் கத்தையும்நான் விடுகின்றேன் நீதான்
- உவந்துவராய் எனில்என்றன் உயிரையும்விட் டிடுவேன்
- மாணைமணிப் பொதுநடஞ்செய் வள்ளால்நீ எனது
- மனம்அறிவாய் இனம்உனக்கு வகுத்துரைப்ப தென்னே.
- படமுடியா தினித்துயரம் படமுடியா தரசே
- பட்டதெல்லாம் போதும்இந்தப் பயந்தீர்த்திப் பொழுதென்
- உடல்உயிரா தியஎல்லாம் நீஎடுத்துத் கொண்டுன்
- உடல்உயிரா தியஎல்லாம் உவந்தெனக்கே அளிப்பாய்
- வடலுறுசிற் றம்பலத்தே வாழ்வாய்என் கண்ணுள்
- மணியேஎன் குருமணியே மாணிக்க மணியே
- நடனசிகா மணியேஎன் நவமணியே ஞான
- நன்மணியே பொன்மணியே நடராஜ மணியே.
- நான்மறந்தேன் எனினும்எனைத் தான்மறவான் எனது
- நாயகன்என் றாடுகின்றேன் எனினும்இது வரையும்
- வான்மறந்தேன் வானவரை மறந்தேன்மால் அயனை
- மறந்தேன்நம் உருத்திரரை மறந்தேன்என் னுடைய
- ஊன்மறந்தேன் உயிர்மறந்தேன் உணர்ச்சிஎலாம் மறந்தேன்
- உலகம்எலாம் மறந்தேன்இங் குன்னைமறந் தறியேன்
- பான்மறந்த குழவியைப்போல் பாரேல்இங் கெனையே
- பரிந்துநின தருட்சோதி புரிந்துமகிழ்ந் தருளே.
- கைக்கிசைந்த பொருள்எனக்கு வாய்க்கிசைந்துண் பதற்கே
- காலம்என்ன கணக்கென்ன கருதும்இடம் என்ன
- மெய்க்கிசைந்தன் றுரைத்ததுநீர் சத்தியம் சத்தியமே
- விடுவேனோ இன்றடியேன் விழற்கிறைத்தேன் அலவே
- செய்க்கிசைந்த சிவபோகம் விளைத்துணவே இறைத்தேன்
- தினந்தோறும் காத்திருந்தேன் திருவுளமே அறியும்
- மைக்கிசைந்த விழிஅம்மை சிவகாம வல்லி
- மகிழநடம் புரிகின்றீர் வந்தருள்வீர் விரைந்தே.
- மின்போலே வயங்குகின்ற விரிசடையீர் அடியேன்
- விளங்கும்உம திணைஅடிகள் மெய்அழுந்தப் பிடித்தேன்
- முன்போலே ஏமாந்து விடமாட்டேன் கண்டீர்
- முனிவறியீர் இனிஒளிக்க முடியாது நுமக்கே
- என்போலே இரக்கம்விட்டுப் பிடித்தவர்கள் இலையே
- என்பிடிக்குள் இசைந்ததுபோல் இசைந்ததிலை பிறர்க்கே
- பொன்போலே முயல்கின்ற மெய்த்தவர்க்கும் அரிதே
- பொய்தவனேன் செய்தவம்வான் வையகத்திற் பெரிதே.
- எதுதருணம் அதுதெரியேன் என்னினும்எம் மானே
- எல்லாஞ்செய் வல்லவனே என்தனிநா யகனே
- இதுதருணம் தவறும்எனில் என்உயிர்போய் விடும்இவ்
- வெளியேன்மேல் கருணைபுரிந் தெழுந்தருளல் வேண்டும்
- மதுதருண வாரிசமும் மலர்ந்ததருள் உதயம்
- வாய்த்ததுசிற் சபைவிளக்கம் வயங்குகின்ற துலகில்
- விதுதருண அமுதளித்தென் எண்ணம்எலாம் முடிக்கும்
- வேலைஇது காலைஎன விளம்பவும்வேண் டுவதோ.
- இதுதருணம் நமையாளற் கெழுந்தருளுந் தருணம்
- இனித்தடைஒன் றிலைகண்டாய் என்மனனே நீதான்
- மதுவிழுமோர் ஈப்போலே மயங்காதே கயங்கி
- வாடாதே மலங்காதே மலர்ந்துமகிழ்ந் திருப்பாய்
- குதுகலமே இதுதொடங்கிக் குறைவிலைகாண் நமது
- குருவாணை நமதுபெருங் குலதெய்வத் தாணை
- பொதுவில்நடம் புரிகின்ற புண்ணியனார் எனக்குள்
- புணர்ந்துரைத்த திருவார்த்தை பொன்வார்த்தை இதுவே.
- காரண காரியக் கல்விகள் எல்லாம்
- கற்பித்தென் னுள்ளே கலந்துகொண் டென்னை
- நாரணர் நான்முகர் போற்றமேல் ஏற்றி
- நாதாந்த நாட்டுக்கோர் நாயகன் ஆக்கிப்
- பூரண மாம்இன்பம் பொங்கித் ததும்பப்
- புத்தமு தாம்அருட் போனகம் தந்தே
- ஆரண வீதியில் ஆடச்செய் தீரே
- அருட்பெருஞ் ஜோதிஎன் ஆண்டவர் நீரே.
- தேகம்எப் போதும் சிதையாத வண்ணம்
- செய்வித் தெலாம்வல்ல சித்தியும் தந்தே
- போகம்எல் லாம்என்றன் போகம தாக்கிப்
- போதாந்த நாட்டைப் புரக்கமேல் ஏற்றி
- ஏகசி வானந்த வாழ்க்கையில் என்றும்
- இன்புற்று வாழும் இயல்பளித் தென்னை
- ஆகம வீதியில் ஆடச்செய் தீரே
- அருட்பெருஞ் ஜோதிஎன் ஆண்டவர் நீரே.
- சிற்சபை இன்பத் திருநடங் காட்டித்
- தெள்ளமு தூட்டிஎன் சிந்தையைத் தேற்றிப்
- பொற்சபை தன்னில் பொருத்திஎல் லாம்செய்
- பூரண சித்திமெய்ப் போகமும் தந்தே
- தற்பர மாம்ஓர் சதானந்த நாட்டில்
- சத்தியன் ஆக்கிஓர் சுத்தசித் தாந்த
- அற்புத வீதியில் ஆடச்செய் தீரே
- அருட்பெருஞ் ஜோதிஎன் ஆண்டவர் நீரே.
- தத்துவம் எல்லாம்என் தன்வசம் ஆக்கிச்
- சாகாவ ரத்தையும் தந்தெனைத் தேற்றி
- ஒத்துவந் துள்ளே கலந்துகொண் டெல்லா
- உலகமும் போற்ற உயர்நிலை ஏற்றிச்
- சித்திஎ லாம்செயச் செய்வித்துச் சத்தும்
- சித்தும் வெளிப்படச் சுத்தநா தாந்த
- அத்திரு வீதியில் ஆடச்செய் தீரே
- அருட்பெருஞ் ஜோதிஎன் ஆண்டவர் நீரே.
- இத்தனை என்றுநின் றெண்ணிடல் ஒண்ணா
- என்பிழை யாவையும் அன்பினில் கொண்டே
- சத்திய மாம்சிவ சித்தியை என்பால்
- தந்தெனை யாவரும் வந்தனை செயவே
- நித்தியன் ஆக்கிமெய்ச் சுத்தசன் மார்க்க
- நீதியை ஓதிஓர் சுத்தபோ தாந்த
- அத்தனி வீதியில் ஆடச்செய் தீரே
- அருட்பெருஞ் ஜோதிஎன் ஆண்டவர் நீரே.
- இருளான மலம்அறுத் திகபரங் கண்டே
- எல்லா உயிர்களும் இன்புற்று வாழ
- மருளான பற்பல மார்க்கங்கள் எல்லாம்
- வழிதுறை தெரியாமல் மண்மூடிப் போகத்
- தெருளான சுத்தசன் மார்க்கம தொன்றே
- சிறந்து விளங்கஓர் சிற்சபை காட்டும்
- அருளான வீதியில் ஆடச்செய் தீரே
- அருட்பெருஞ் ஜோதிஎன் ஆண்டவர் நீரே.
- இருட்சாதித் தத்துவச் சாத்திரக் குப்பை
- இருவாய்ப்புப் புன்செயில் எருவாக்கிப் போட்டு
- மருட்சாதி சமயங்கள் மதங்களாச் சிரம
- வழக்கெலாம் குழிக்கொட்டி மண்மூடிப் போட்டுத்
- தெருட்சாருஞ் சுத்தசன் மார்க்கநன் னீதி
- சிறந்து விளங்கஓர் சிற்சபை காட்டும்
- அருட்சோதி வீதியில் ஆடச்செய் தீரே
- அருட்பெருஞ் ஜோதிஎன் ஆண்டவர் நீரே.
- மாழை மாமணிப் பொதுநடம் புரிகின்ற வள்ளலே அளிகின்ற
- வாழை வான்பழச் சுவைஎனப் பத்தர்தம் மனத்துளே தித்திப்போய்
- ஏழை நாயினேன் விண்ணப்பம் திருச்செவிக் கேற்றருள் செயல்வேண்டும்
- கோழை மானிடப் பிறப்பிதில் உன்னருட் குருஉருக் கொளுமாறே.
- பொன்னின் மாமணிப் பொதுநடம் புரிகின்ற புண்ணியா கனித்தோங்கி
- மன்னு வாழையின் பழச்சுவை எனப்பத்தர் மனத்துளே தித்திப்போய்
- சின்ன நாயினேன் விண்ணப்பம் திருச்செவி சேர்த்தருள் செயல்வேண்டும்
- இன்ன என்னுடைத் தேகம்நல் லொளிபெறும் இயலருக் கொளுமாறே.
- சாகாத கல்வியிலே தலைகாட்டிக் கொடுத்தீர்
- தடையறியாக் கால்காட்டித் தரம்பெறவும் அளித்தீர்
- மாகாதல் உடையவனா மனங்கனிவித் தழியா
- வான்அமுதும் மெய்ஞ்ஞான மருந்தும்உணப் புரிந்தீர்
- போகாத புனலாலே சுத்தஉடம் பினராம்
- புண்ணியரும் நண்ணரிய பொதுநிலையுந் தந்தீர்
- நாகாதி பதிகளும்நின் றேத்தவளர்க் கின்றீர்
- நடராஜ ரேநுமக்கு நான்எதுசெய் வேனே.
- வேதாந்த நிலையும்அதன் அந்தத்தே விளங்கும்
- மெய்ந்நிலையும் காட்டுவித்தீர் விளங்கியசித் தாந்தப்
- போதாந்த நிலையும்அப்பால் புகல்அரிதாம் பெரிய
- பொருள்நிலையும் தெரிவித்தீர் புண்ணியரே நுமது
- பாதாந்தம் அறிவித்தீர் சுத்தவடி வுடனே
- பகர்பிரண வாகாரப் பரிசும்எனக் களித்தீர்
- நாதாந்தத் தனிச்செங்கோல் நான்செலுத்தக் கொடுத்தீர்
- நடராஜ ரேநுமக்கு நான்எதுசெய் வேனே.
- கண்ணுடையீர் பெருங்கருணைக் கடலுடையீர் எனது
- கணக்கறிந்தீர் வழக்கறிந்தீர் களித்துவந்தன் றுரைத்தீர்
- எண்ணுடையார் எழுத்துடையார் எல்லாரும் போற்ற
- என்னிதய மலர்மிசைநின் றெழுந்தருளி வாமப்
- பெண்ணுடைய மனங்களிக்கப் பேருலகம் களிக்கப்
- பெத்தருமுத் தருமகிழப் பத்தரெலாம் பரவ
- விண்ணுடைய அருட்ஜோதி விளையாடல் புரிய
- வேண்டுமென்றேன் என்பதன்முன் விரைந்திசைந்தீர் அதற்கே.
- இடர்தீர் நெறியே அருள்வாய் அபயம்
- இனிநான் தரியேன் தரியேன் அபயம்
- விடர்போல் எனைநீ நினையேல் அபயம்
- விடுவேன் அலன்நான் அபயம் அபயம்
- உடலோ டுறுமா பொருள்ஆ வியும்இங்
- குனவே எனவே அலவே அபயம்
- சுடர்மா மணியே அபயம் அபயம்
- சுகநா டகனே அபயம் அபயம்.
- இன்புறநான் எய்ப்பிடத்தே பெற்றபெரு வைப்பே
- ஏங்கியபோ தென்றன்னைத் தாங்கியநல் துணையே
- அன்புறஎன் உட்கலந்தே அண்ணிக்கும் அமுதே
- அச்சமெலாம் தவிர்த்தென்னை ஆட்கொண்ட குருவே
- என்பருவம் குறியாதே எனைமணந்த பதியே
- இச்சையுற்ற படிஎல்லாம் எனக்கருளும் துரையே
- துன்பறமெய் அன்பருக்கே பொதுநடஞ்செய் அரசே
- தூயதிரு வடிகளுக்கென் சொல்லும்அணிந் தருளே.
- ஒசித்தகொடி அனையேற்குக் கிடைத்தபெரும் பற்றே
- உள்மயங்கும் போதுமயக் கொழித்தருளும் தெளிவே
- பசித்தபொழு தெதிர்கிடைத்த பால்சோற்றுத் திரளே
- பயந்தபொழு தெல்லாம்என் பயந்தவிர்த்த துரையே
- நசித்தவரை எழுப்பிஅருள் நல்கியமா மருந்தே
- நான்புணர நானாகி நண்ணியமெய்ச் சிவமே
- கசித்தமனத் தன்பர்தொழப் பொதுநடஞ்செய் அரசே
- களித்தெனது சொன்மாலை கழலில்அணிந் தருளே.
- மனம்இளைத்து வாடியபோ தென்எதிரே கிடைத்து
- வாட்டமெலாம் தவிர்த்தெனக்கு வாழ்வளித்த நிதியே
- சினமுகத்தார் தமைக்கண்டு திகைத்தபொழு தவரைச்
- சிரித்தமுகத் தவராக்கி எனக்களித்த சிவமே
- அனம்உகைத்தான் அரிமுதலோர் துருவிநிற்க எனக்கே
- அடிமுடிகள் காட்டுவித்தே அடிமைகொண்ட பதியே
- இனம்எனப்பே ரன்பர்தொழப் பொதுநடஞ்செய் அரசே
- என்னுடைய சொன்மாலை யாவும்அணிந் தருளே.
- கதிக்குவழி காட்டுகின்ற கண்ணேஎன் கண்ணில்
- கலந்தமணி யேமணியில் கலந்தகதிர் ஒளியே
- விதிக்கும்உல குயிர்க்குயிராய் விளங்குகின்ற சிவமே
- மெய்யுணர்ந்தோர் கையகத்தே விளங்கியதீங் கனியே
- மதிக்குமதிக் கப்புறம்போய் வயங்குதனி நிலையே
- மறைமுடிஆ கமமுடிமேல் வயங்கும்இன்ப நிறைவே
- துதிக்கும்அன்பர் தொழப்பொதுவில் நடம்புரியும் அரசே
- சொன்மாலை சூட்டுகின்றேன் தோளில்அணிந் தருளே.
- நல்லாசொல் யோகாந்தப் பதிகள்பல கோடி
- நாட்டியதோர் போதாந்தப் பதிகள்பல கோடி
- வல்லார்சொல் கலாந்தநிலைப் பதிகள்பல கோடி
- வழுத்தும்ஒரு நாதாந்தப் பதிகள்பல கோடி
- இல்லார்ந்த வேதாந்தப் பதிகள்பல கோடி
- இலங்குகின்ற சித்தாந்தப் பதிகள்பல கோடி
- எல்லாம்பே ரருட்சோதித் தனிச்செங்கோல் நடத்தும்
- என்அரசே என்மாலை இனிதுபுனைந் தருளே.
- தன்பெருமை தான்அறியாத் தன்மையனே எனது
- தனித்தலைவா என்னுயிர்க்குள் இனித்ததனிச் சுவையே
- நின்பெருமை நான்அறியேன் நான்மட்டோ அறியேன்
- நெடுமால்நான் முகன்முதலா மூர்த்திகளும் அறியார்
- அன்புறும்ஆ கமமறைகள் அறியாவே எனினும்
- அவரும்அவை களும்சிலசொல் அணிகின்றார் நினக்கே
- என்பருவம் குறியாதே எனையாண்ட அரசே
- யானும்அவர் போல்அணிகின் றேன்அணிந்திங் கருளே.
- உண்ணஉண்ணத் தெவிட்டாதே தித்தித்தென் உடம்போ
- டுயிர்உணர்வும் கலந்துகலந் துள்ளகத்தும் புறத்தும்
- தண்ணியவண் ணம்பரவப் பொங்கிநிறைந் தாங்கே
- ததும்பிஎன்றன் மயம்எல்லாம் தன்மயமே ஆக்கி
- எண்ணியஎன் எண்ணமெலாம் எய்தஒளி வழங்கி
- இலங்குகின்ற பேரருளாம் இன்னமுதத் திரளே
- புண்ணியமே என்பெரிய பொருளேஎன் அரசே
- புன்மொழிஎன் றிகழாதே புனைந்துமகிழ்ந் தருளே.
- மலைவறியாப் பெருஞ்சோதி வச்சிரமா மலையே
- மாணிக்க மணிப்பொருப்பே மரகதப்பேர் வரையே
- விலைஅறியா உயர்ஆணிப் பெருமுத்துத் திரளே
- விண்ணவரும் நண்ணரும்ஓர் மெய்ப்பொருளின் விளைவே
- கொலைஅறியாக் குணத்தோர்தங் கூட்டுறவே அருட்செங்
- கோல்நடத்து கின்றதனிக் கோவேமெய் அறிவால்
- நிலைஅறிந்தோர் போற்றுமணி மன்றில்நடத் தரசே
- நின்னடிப்பொன் மலர்களுக்கென் நெடுஞ்சொல்அணிந் தருளே.
- வாதுறும்இந் தியகரண பரங்கள்முதல் நான்கும்
- வகுத்திடுநந் நான்கும்அகம் புறமேல்கீழ் நடுப்பால்
- ஓதுறும்மற் றெல்லாந்தன் மயமாகக் கலந்தே
- ஓங்கவற்றின் அப்புறமும் ஒளிர்கின்ற ஒளியே
- சூதுறுமிந் தியகரண லோகாண்டம் அனைத்தும்
- சுடர்பரப்பி விளங்குகின்ற சுயஞ்சோதிச் சுடரே
- போதுறுவார் பலர்நின்று போற்றநடம் பொதுவில்
- புரியும்நடத் தரசேஎன் புகலும்அணிந் தருளே.
- சாற்றுகின்ற கலைஐந்தில் பரமாதி நான்கும்
- தக்கஅவற் றூடிருந்த நந்நான்கும் நிறைந்தே
- ஊற்றுகின்ற அகம்புறமேல் நடுக்கீழ்மற் றனைத்தும்
- உற்றிடுந்தன் மயமாகி ஒளிர்கின்ற ஒளியே
- தோற்றுகின்ற கலைஉலகம் கலைஅண்ட முழுதும்
- துலங்குகின்ற சுடர்பரப்பிச் சூழ்கின்ற சுடரே
- போற்றுகின்ற மெய்அடியர் களிப்பநடித் தருளும்
- பொதுவில்நடத் தரசேஎன் புகலும்அணிந் தருளே.
- நாட்டியஓங் காரம்ஐந்தில் பரமுதல்ஓர் நான்கும்
- நந்நான்கு மாறிடத்தும் நயந்துநிறைந் தருளி
- ஈட்டியசெம் பொருள்நிலையோ டிலக்கியமும் விளங்க
- இனிதுநின்று விளங்குகின்ற இன்பமய ஒளியே
- கூட்டியஓங் காரஉல கோங்கார அண்டம்
- குடிவிளங்கக் கதிர்பரப்பிக் குலவுபெருஞ் சுடரே
- பாட்டியல்கொண் டன்பரெலாம் போற்றமன்றில் நடிக்கும்
- பரமநடத் தரசேஎன் பாட்டும்அணிந் தருளே.
- திரைஇலதாய் அழிவிலதாய்த் தோலிலதாய்ச் சிறிதும்
- சினைப்பிலதாய்ப் பனிப்பிலதாய்ச் செறிந்திடுகோ திலதாய்
- விரைஇலதாய்ப் புரைஇலதாய் நார்இலதாய் மெய்யே
- மெய்யாகி அருள்வண்ணம் விளங்கிஇன்ப மயமாய்ப்
- பரைவெளிக்கப் பால்விளங்கு தனிவெளியில் பழுத்தே
- படைத்தஎன துளத்தினிக்கக் கிடைத்ததனிப் பழமே
- உரைவளர்மா மறைகளெலாம் போற்றமணிப் பொதுவில்
- ஓங்கும்நடத் தரசேஎன் உரையும்அணிந் தருளே.
- கார்ப்பிலதாய்த் துவர்ப்பிலதாய் உவர்ப்பிலதாய்ச் சிறிதும்
- கசப்பிலதாய்ப் புளிப்பிலதாய்க் காய்ப்பிலதாய்ப் பிறவில்
- சேர்ப்பிலதாய் எஞ்ஞான்றும் திரிபிலதாய் உயிர்க்கே
- தினைத்தனையும் நோய்தரும்அத் தீமைஒன்றும் இலதாய்ப்
- பார்ப்பனையேன் உள்ளகத்தே விளங்கிஅறி வின்பம்
- படைத்திடமெய்த் தவப்பயனால் கிடைத்ததனிப் பழமே
- ஓர்ப்புடையார் போற்றமணி மன்றிடத்தே வெளியாய்
- ஓங்கியபே ரரசேஎன் உரையும்அணிந் தருளே.
- தெற்றியிலே நான்பசித்துப் படுத்திளைத்த தருணம்
- திருஅமுதோர் திருக்கரத்தே திகழ்வள்ளத் தெடுத்தே
- ஒற்றியிற்போய்ப் பசித்தனையோ என்றெனையங் கெழுப்பி
- உவந்துகொடுத் தருளியஎன் உயிர்க்கினிதாந் தாயே
- பற்றியஎன் பற்றனைத்தும் தன்அடிப்பற் றாகப்
- பரிந்தருளி எனைஈன்ற பண்புடைஎந் தாயே
- பெற்றியுளார் சுற்றிநின்று போற்றமணிப் பொதுவில்
- பெருநடஞ்செய் அரசேஎன் பிதற்றும்உவந் தருளே.
- தாய்முதலோ ரொடுசிறிய பருவமதில்282 தில்லைத்
- தலத்திடையே திரைதூக்கத் தரிசித்த போது
- வேய்வகைமேல் காட்டாதே என்றனக்கே எல்லாம்
- வெளியாகக் காட்டியஎன் மெய்உறவாம் பொருளே
- காய்வகைஇல் லாதுளத்தே கனிந்தநறுங் கனியே
- கனவிடத்தும் நனவிடத்தும் எனைப்பிரியாக் களிப்பே
- தூய்வகையோர் போற்றமணி மன்றில்நடம் புரியும்
- சோதிநடத் தரசேஎன் சொல்லும்அணிந் தருளே.
- தனிச்சிறியேன் சிறிதிங்கே வருந்தியபோ ததனைத்
- தன்வருத்தம் எனக்கொண்டு தரியாதக் கணத்தே
- பனிப்புறும்அவ் வருத்தமெலாம் தவிர்த்தருளி மகனே
- பயம்உனக்கென் என்றென்னைப் பரிந்தணைத்த குருவே
- இனிப்புறுநன் மொழிபுகன்றென் முடிமிசையே மலர்க்கால்
- இணைஅமர்த்தி எனையாண்ட என்னுயிர்நற் றுணையே
- கனித்தநறுங் கனியேஎன் கண்ணேசிற் சபையில்
- கலந்தநடத் தரசேஎன் கருத்தும்அணிந் தருளே.
- ஒருமடந்தை வலிந்தணைந்து கலந்தகன்ற பின்னர்
- உளம்வருந்தி என்செய்தோம் என்றயர்ந்த போது
- பெருமடஞ்சேர் பிள்ளாய்என் கெட்டதொன்றும் இலைநம்
- பெருஞ்செயல்என் றெனைத்தேற்றிப் பிடித்தபெருந் தகையே
- திருமடந்தை மார்இருவர் என்எதிரே நடிக்கச்
- செய்தருளிச் சிறுமைஎலாம் தீர்த்ததனிச் சிவமே
- கருமடம்தீர்ந் தவர்எல்லாம் போற்றமணி மன்றில்
- காட்டும்நடத் தரசேஎன் பாட்டும்அணிந் தருளே.
- இருள்இரவில் ஒருமூலைத் திண்ணையில்நான் பசித்தே
- இளைப்புடனே படுத்திருக்க எனைத்தேடி வந்தே
- பொருள்உணவு கொடுத்துண்ணச் செய்வித்தே பசியைப்
- போக்கிஅருள் புரிந்தஎன்றன் புண்ணியநற் றுணையே
- மருள்இரவு நீக்கிஎல்லா வாழ்வும்எனக் கருளி
- மணிமேடை நடுஇருக்க வைத்தஒரு மணியே
- அருள்உணவும் அளித்தென்னை ஆட்கொண்ட சிவமே
- அம்பலத்தென் அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.
- நான்பசித்த போதெல்லாம் தான்பசித்த தாகி
- நல்உணவு கொடுத்தென்னைச் செல்வம்உற வளர்த்தே
- ஊன்பசித்த இளைப்பென்றும் தோற்றாத வகையே
- ஒள்ளியதெள் ளமுதெனக்கிங் குவந்தளித்த ஒளியே
- வான்பதிக்கும் நெடுமாற்கும் நான்முகற்கும் அரிதாம்
- வாழ்வெனக்கே ஆகியுற வரம்அளித்த பதியே
- தேன்பரித்த மலர்மணமே திருப்பொதுவில் ஞானத்
- திருநடஞ்செய் அரசேஎன் சிறுமொழிஏற் றருளே.
- கையாத தீங்கனியே கயக்காத அமுதே
- கரையாத கற்கண்டே புரையாத கரும்பே
- பொய்யாத பெருவாழ்வே புகையாத கனலே
- போகாத புனலேஉள் வேகாத காலே
- கொய்யாத நறுமலரே கோவாத மணியே
- குளியாத பெருமுத்தே ஒளியாத வெளியே
- செய்யாத பேருதவி செய்தபெருந் தகையே
- தெய்வநடத் தரசேஎன் சிறுமொழிஏற் றருளே.
- நான்அளக்குந் தோறும்அதற் குற்றதுபோல் காட்டி
- நாட்டியபின் ஒருசிறிதும் அளவில்உறா தாகித்
- தான்அளக்கும் அளவதிலே முடிவெனத் தோற்றித்
- தன்அளவுங் கடந்தப்பால் மன்னுகின்ற பொருளே
- வான்அளக்க முடியாதே வான்அனந்தங் கோடி
- வைத்தபெரு வான்அளக்க வசமோஎன் றுரைத்துத்
- தேன்அளக்கும் மறைகளெலாம் போற்றமணி மன்றில்
- திகழுநடத் தரசேஎன் சிறுமொழிஏற் றருளே.
- விழுக்குலத்தார் அருவருக்கும் புழுக்குலத்தில் கடையேன்
- மெய்யுரையேன் பொய்யுரையை வியந்துமகிழ்ந் தருளி
- முழுக்குலத்தோர் முடிசூட்டி ஐந்தொழில்செய் எனவே
- மொழிந்தருளி எனையாண்ட முதற்றனிப்பே ரொளியே
- எழுக்குலத்தில் புரிந்தமனக் கழுக்குலத்தார் தமக்கே
- எட்டாத நிலையேநான் எட்டியபொன் மலையே
- மழுக்குலத்தார் போற்றமணி மன்றில்நடம் புரியும்
- மாநடத்தென் அரசேஎன் மாலைஅணிந் தருளே.
- தன்அரசே செலுத்திநின்ற தத்துவங்கள் அனைத்தும்
- தனித்தனிஎன் வசமாகித் தாழ்ந்தேவல் இயற்ற
- முன்அரசும் பின்அரசும் நடுஅரசும் போற்ற
- முன்னும்அண்ட பிண்டங்கள் எவற்றினும்எப் பாலும்
- என்அரசே என்றுரைக்க எனக்குமுடி சூட்டி
- இன்பவடி வாக்கிஎன்றும் இலங்கவைத்த சிவமே
- என்அரசே என்உயிரே என்இருகண் மணியே
- இணைஅடிப்பொன் மலர்களுக்கென் இசையும்அணிந் தருளே.
- பரவெளியே நடுவெளியே உபசாந்த வெளியே
- பாழ்வெளியே முதலாக ஏழ்வெளிக்கப் பாலும்
- விரவியமா மறைகளெலாம் தனித்தனிசென் றளந்தும்
- மெய்யளவு காணாதே மெலிந்திளைத்துப் போற்ற
- உரவில்அவை தேடியஅவ் வெளிகளுக்குள் வெளியாய்
- ஓங்கியஅவ் வெளிகளைத்தன் னுள்அடக்கும் வெளியாய்க்
- கரையறநின் றோங்குகின்ற சுத்தசிவ வெளியே
- கனிந்தநடத் தரசேஎன் கருத்தும்அணிந் தருளே.
- வெய்யலிலே நடந்திளைப்பு மேவியஅக் கணத்தே
- மிகுநிழலும் தண்ணமுதும் தந்தஅருள் விளைவே
- மையல்சிறி துற்றிடத்தே மடந்தையர்கள் தாமே
- வலிந்துவரச் செய்வித்த மாண்புடைய நட்பே
- கையறவால் கலங்கியபோ தக்கணத்தே போந்து
- கையறவு தவிர்த்தருளிக் காத்தளித்த துரையே
- ஐயமுறேல் என்றெனையாண் டமுதளித்த பதியே
- அம்பலத்தென் அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.
- கொலைபுரிவார் தவிரமற்றை எல்லாரும் நினது
- குலத்தாரே நீஎனது குலத்துமுதல் மகனே
- மலைவறவே சுத்தசிவ சமரசசன் மார்க்கம்
- வளரவளர்ந் திருக்கஎன வாழ்த்தியஎன் குருவே
- நிலைவிழைவார் தமைக்காக்கும் நித்தியனே எல்லா
- நிலையும்விளங் குறஅருளில் நிறுத்தியசிற் குணனே
- புலையறியாப் பெருந்தவர்கள் போற்றமணிப் பொதுவில்
- புனிதநடத் தரசேஎன் புகலும்அணிந் தருளே.
- உயிர்க்கொலையும் புலைப்பொசிப்பும் உடையவர்கள் எல்லாம்
- உறவினத்தார் அல்லர்அவர் புறஇனத்தார் அவர்க்குப்
- பயிர்ப்புறும்ஓர் பசிதவிர்த்தல் மாத்திரமே புரிக
- பரிந்துமற்றைப் பண்புரையேல் நண்புதவேல் இங்கே
- நயப்புறுசன் மார்க்கம்அவர் அடையளவும் இதுதான்
- நம்ஆணை என்றெனக்கு நவின்றஅருள் இறையே
- மயர்ப்பறுமெய்த்284 தவர்போற்றப் பொதுவில்நடம் புரியும்
- மாநடத்தென் அரசேஎன் மாலைஅணிந் தருளே.
- வன்புடையார் கொலைகண்டு புலைஉண்பார் சிறிதும்
- மரபினர்அன் றாதலினால் வகுத்தஅவர் அளவில்
- அன்புடைய என்மகனே பசிதவிர்த்தல் புரிக
- அன்றிஅருட் செயல்ஒன்றும் செயத்துணியேல் என்றே
- இன்புறஎன் தனக்கிசைத்த என்குருவே எனைத்தான்
- ஈன்றதனித் தந்தையே தாயேஎன் இறையே
- துன்பறுமெய்த் தவர்சூழ்ந்து போற்றதிருப் பொதுவில்
- தூயநடத் தரசேஎன் சொல்லும்அணிந் தருளே.
- கொடியவரே கொலைபுரிந்து புலைநுகர்வார் எனினும்
- குறித்திடும்ஓர் ஆபத்தில் வருந்துகின்ற போது
- படியில்அதைப் பார்த்துகவேல் அவர்வருத்தம் துன்பம்
- பயந்தீர்ந்து விடுகஎனப் பரிந்துரைத்த குருவே
- நெடியவரே நான்முகரே நித்தியரே பிறரே
- நின்மலரே என்கின்றோர் எல்லாரும் காண
- அடியும்உயர் முடியும்எனக் களித்தபெரும் பொருளே
- அம்பலத்தென் அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.
- தயைஉடையார் எல்லாரும் சமரசசன் மார்க்கம்
- சார்ந்தவரே ஈங்கவர்கள் தம்மோடுங் கூடி
- நயமுறுநல் அருள்நெறியில் களித்துவிளை யாடி
- நண்ணுகஎன் றெனக்கிசைத்த நண்புறுசற் குருவே
- உயலுறும்என் உயிர்க்கினிய உறவேஎன் அறிவில்
- ஓங்கியபே ரன்பேஎன் அன்பிலுறும் ஒளியே
- மயலறுமெய்த் தவர்சூழ்ந்து போற்றும்மணி மன்றில்
- மாநடத்தென் அரசேஎன் மாலைஅணிந் தருளே.
- அருளுடையார் எல்லாரும் சமரசசன் மார்க்கம்
- அடைந்தவரே ஆதலினால் அவருடனே கூடித்
- தெருளுடைய அருள்நெறியில் களித்துவிளை யாடிச்
- செழித்திடுக வாழ்கஎனச் செப்பியசற் குருவே
- பொருளுடைய பெருங்கருணைப் பூரணமெய்ச் சிவமே
- போதாந்த முதல்ஆறும் நிறைந்தொளிரும் ஒளியே
- மருளுடையார் தமக்குமருள் நீக்கமணிப் பொதுவில்
- வயங்குநடத் தரசேஎன் மாலையும்ஏற் றருளே.
- கொள்ளைவினைக் கூட்டுறவால் கூட்டியபல் சமயக்
- கூட்டமும்அக் கூட்டத்தே கூவுகின்ற கலையும்
- கள்ளமுறும் அக்கலைகள் காட்டியபல் கதியும்
- காட்சிகளும் காட்சிதரு கடவுளரும் எல்லாம்
- பிள்ளைவிளை யாட்டெனநன் கறிவித்திங் கெனையே
- பிள்ளைஎனக் கொண்டுபிள்ளைப் பெயரிட்ட பதியே
- தள்ளரிய மெய்யடியார் போற்றமணி மன்றில்
- தனிநடஞ்செய் அரசேஎன் சாற்றும்அணிந் தருளே.
- எவ்விடத்தும் எவ்வுயிர்க்கும் இலங்குசிவம் ஒன்றே
- என்னாணை என்மகனே இரண்டில்லை ஆங்கே
- செவ்விடத்தே அருளொடுசேர்த் திரண்டெனக்கண் டறிநீ
- திகைப்படையேல் என்றெனக்குச் செப்பியசற் குருவே
- அவ்விடத்தே உவ்விடத்தே அமர்ந்ததுபோல் காட்டி
- அங்குமிங்கும் அப்புறமும் எங்குநிறை பொருளே
- ஒவ்விடச்சிற் சபைஇடத்தும் பொற்சபையின் இடத்தும்
- ஓங்குநடத் தரசேஎன் உரையும்அணிந் தருளே.
- இயல்வேதா கமங்கள்புரா ணங்கள்இதி காசம்
- இவைமுதலா இந்திரசா லங்கடையா உரைப்பார்
- மயல்ஒருநூல் மாத்திரந்தான் சாலம்என அறிந்தார்
- மகனேநீ நூல்அனைத்தும் சாலம்என அறிக
- செயல்அனைத்தும் அருள்ஒளியால் காண்கஎன எனக்கே
- திருவுளம்பற் றியஞான தேசிகமா மணியே
- அயல்அறியா அறிவுடையார் எல்லாரும் போற்ற
- ஆடுகின்ற அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.
- நான்முகர்நல் உருத்திரர்கள் நாரணர்இந் திரர்கள்
- நவில்அருகர் புத்தர்முதல் மதத்தலைவர் எல்லாம்
- வான்முகத்தில் தோன்றிஅருள் ஒளிசிறிதே அடைந்து
- வானகத்தும் வையகத்தும் மனம்போன படியே
- தேன்முகந்துண் டவர்எனவே விளையாடா நின்ற
- சிறுபிள்ளைக் கூட்டம்என அருட்பெருஞ்சோ தியினால்
- தான்மிகக்கண் டறிகஎனச் சாற்றியசற் குருவே
- சபையில்நடத் தரசேஎன் சாற்றும்அணிந் தருளே.
- சிற்பதமும் தற்பதமும் பொற்பதத்தே காட்டும்
- சிவபதமே ஆனந்தத் தேம்பாகின் பதமே
- சொற்பதங்கள் கடந்ததன்றி முப்பதமும் கடந்தே
- துரியபத முங்கடந்த பெரியதனிப் பொருளே
- நற்பதம்என் முடிசூட்டிக் கற்பதெலாங் கணத்தே
- நான்அறிந்து தானாக நல்கியஎன் குருவே
- பற்பதத்துத் தலைவரெலாம் போற்றமணி மன்றில்
- பயிலும்நடத் தரசேஎன் பாடல்அணிந் தருளே.
- இருந்தஇடந் தெரியாதே இருந்தசிறி யேனை
- எவ்வுலகில் உள்ளவரும் ஏத்திடமேல் ஏற்றி
- அருந்தவரும் அயன்முதலாம் தலைவர்களும் உளத்தே
- அதிசயிக்கத் திருவமுதும் அளித்தபெரும் பதியே
- திருந்துமறை முடிப்பொருளே பொருள்முடிபில் உணர்ந்தோர்
- திகழமுடிந் துட்கொண்ட சிவபோகப் பொருளே
- பெருந்தவர்கள் போற்றமணி மன்றில்நடம் புரியும்
- பெருநடத்தென் அரசேஎன் பிதற்றும்அணிந் தருளே.
- பால்வகை ஆணோ பெண்கொலோ இருமைப்
- பாலதோ பால்உறா அதுவோ
- ஏல்வகை ஒன்றோ இரண்டதோ அனாதி
- இயற்கையோ ஆதியின் இயல்போ
- மேல்வகை யாதோ எனமறை முடிகள்
- விளம்பிட விளங்கும்ஓர் தலைவன்
- மால்வகை மனத்தேன் உளக்குடில் புகுந்தான்
- வள்ளலைத் தடுப்பவர் யாரே.
- வரம்பெறும் ஆன்ம உணர்ச்சியும் செல்லா
- வருபர உணர்ச்சியும் மாட்டாப்
- பரம்பர உணர்ச்சி தானும்நின் றறியாப்
- பராபர உணர்ச்சியும் பற்றா
- உரம்பெற உணர்வார் யார்எனப் பெரியர்
- உரைத்திட ஓங்கும்ஓர் தலைவன்
- கரம்பெறு கனிபோல் என்னுளம் புகுந்தான்
- கடவுளைத் தடுப்பவர் யாரே.
- உள்ளபடி உள்ளதுவாய் உலகமெலாம் புகினும்
- ஒருசிறிதும் தடையிலதாய் ஒளியதுவே மயமாய்
- வெள்ளவெளி நடுவுளதாய் இயற்கையிலே விளங்கும்
- வேதமுடி இலக்கியமா மேடையிலே அமர்ந்த
- வள்ளன்மலர் அடிசிவப்ப வந்தெனது கருத்தின்
- வண்ணமெலாம் உவந்தளித்து வயங்கியபே ரின்பம்
- கொள்ளைகொளக் கொடுத்ததுதான் போதாதோ அரசே
- கொடும்புலையேன் குடிசையிலும் குலவிநுழைந் தனையே.
- தடையறியாத் தகையினதாய்த் தன்னிகரில் லதுவாய்த்
- தத்துவங்கள் அனைத்தினுக்கும் தாரகமாய் அவைக்கு
- விடையறியாத் தனிமுதலாய் விளங்குவெளி நடுவே
- விளங்குகின்ற சத்தியமா மேடையிலே அமர்ந்த
- நடையறியாத் திருவடிகள் சிவந்திடவந் தெனது
- நலிவனைத்துந் தவிர்த்தருளி ஞானஅமு தளித்தாய்
- கொடையிதுதான் போதாதோ என்னரசே அடியேன்
- குடிசையிலும் கோணாதே குலவிநுழைந் தனையே.
- இறையளவும் துரிசிலதாய்த் தூய்மையதாய் நிறைவாய்
- இயற்கையதாய் அனுபவங்கள் எவைக்கும்முத லிடமாய்
- மறைமுடியோ டாகமத்தின் மணிமுடிமேல் முடியாய்
- மன்னுகின்ற மெய்ஞ்ஞான மணிமேடை அமர்ந்த
- நிறையருட்சீ ரடிமலர்கள் சிவந்திடவந் தடியேன்
- நினைத்தஎலாம் கொடுத்தருளி நிலைபெறச்செய் தனையே
- குறைவிலதிப் பெருவரந்தான் போதாதோ அரசே
- கொடும்புலையேன் குடிசையிலும் குலவிநுழைந் தனையே.
- மணமுளதாய் ஒளியினதாய் மந்திரஆ தரமாய்
- வல்லதுவாய் நல்லதுவாய் மதங்கடந்த வரைப்பாய்
- வணமுளதாய் வளமுளதாய் வயங்கும்ஓரு வெளியில்
- மணிமேடை அமர்ந்ததிரு அடிமலர்கள் பெயர்த்தே
- எணமுளஎன் பால்அடைந்தென் எண்ணமெலாம் அளித்தாய்
- இங்கிதுதான் போதாதோ என்னரசே ஞானக்
- குணமலையே அருளமுதே குருவேஎன் பதியே
- கொடும்புலையேன் குடிசையிலும் குலவிநுழைந் தனையே.
- சிரம்பெறுவே தாகமத்தின் அடிநடுவும் முடியும்
- செல்லாத நிலைஅதுவாய் எல்லாம்வல் லதுவாய்
- பரம்பரமாய்ப் பரம்பரமேற் பரவுசிதம் பரமாய்ப்
- பதிவெளியில் விளங்குகின்ற மதிசிவமே டையிலே
- தரங்குலவ அமர்ந்ததிரு வடிகள்பெயர்த் தெனது
- சார்படைந்தென் எண்ணமெலாம் தந்தனைஎன் அரசே
- குரங்குமனச் சிறியேனுக் கிங்கிதுபோ தாதோ
- கொடும்புலையேன் குடிசையிலும் குலவிநுழைந் தனையே.
- பற்றியபற் றனைத்தினையும் பற்றறவிட் டறிவாம்
- பான்மைஒன்றே வடிவாகிப் பழுத்தபெரி யவரும்
- உற்றறிதற்273 கரியஒரு பெருவெளிமேல் வெளியில்
- ஓங்குமணி மேடைஅமர்ந் தோங்கியசே வடிகள்
- பெற்றறியப் பெயர்த்துவந்தென் கருத்தனைத்துங் கொடுத்தே
- பிறவாமல் இறவாமல் பிறங்கவைத்தாய்274 அரசே
- கொற்றமுளேன் தனக்கிதுதான் போதாதோ கொடியேன்
- குடிசையிலும் கோணாதே குலவிநுழைந் தனையே.
- கருவியொடு கரணமெலாம் கடந்துகடந் ததன்மேல்
- காட்சியெலாம் கடந்ததன்மேல் காணாது கடந்து
- ஒருநிலையின் அனுபவமே உருவாகிப் பழுத்த
- உணர்ச்சியினும் காணாமல் ஓங்கும்ஒரு வெளியில்
- மருவியதோர் மேடையிலே வயங்கியசே வடிகள்
- மலர்த்திவந்தென் கருத்தனைத்தும் வழங்கினைஇன் புறவே
- குருமணியே என்னரசே எனக்கிதுபோ தாதோ
- கொடும்புலையேன் குடிசையிலும் குலவிநுழைந் தனையே.
- முளையானைச் சுத்தசிவ வெளியில் தானே
- முளைத்தானை மூவாத முதலா னானைக்
- களையானைக் களங்கமெலாம் களைவித் தென்னைக்
- காத்தானை என்பிழையைக் கருதிக் கோபம்
- விளையானைச் சிவபோகம் விளைவித் தானை
- வேண்டாமை வேண்டல்இவை மேவி என்றும்
- இளையானை மூத்தானை மூப்பி லானை
- எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
- புயலானை மழையானை அதிர்ப்பி னானைப்
- போற்றியமின் ஒளியானைப் புனித ஞானச்
- செயலானைச் செயலெல்லாந் திகழ்வித் தானைத்
- திருச்சிற்றம் பலத்தானைத் தெளியார் உள்ளே
- அயலானை உறவானை அன்பு ளானை
- அறிந்தாரை அறிந்தானை அறிவால் அன்றி
- இயலானை எழிலானைப் பொழிலா னானை
- எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
- திருத்தமிகு முனிவர்களும் தேவர்களும் அழியாச்
- சித்தர்களும் சிருட்டிசெயும் திறத்தர்களும் காக்கும்
- அருத்தமிகு தலைவர்களும் அடக்கிடல்வல் லவரும்
- அலைபுரிகின் றவர்களும்உள் அனுக்கிரகிப் பவரும்
- பொருத்துமற்றைச் சத்திகளும் சத்தர்களும் எல்லாம்
- பொருள்எதுவோ எனத்தேடிப் போகஅவர் அவர்தம்
- கருத்தில்ஒளித் திருக்கின்ற கள்வனைஎன் கண்ணால்
- கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.
- நீட்டாய சித்தாந்த நிலையினிடத் தமர்ந்தும்
- நிகழ்கின்ற வேதாந்த நெறியினிடத் திருந்தும்
- ஆட்டாய போதாந்தம் அலைவறுநா தாந்தம்
- ஆதிமற்றை அந்தங்கள் அனைத்தினும்உற் றறிந்தும்
- வேட்டாசைப் பற்றனைத்தும் விட்டுலகம் போற்ற
- வித்தகராய் விளங்குகின்ற முத்தர்கட்கும் தன்னைக்
- காட்டாமல் ஒளித்திருக்குங் கள்வனைஎன் கண்ணால்
- கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.
- உணர்ந்தவர் உளம்போன் றென்னுளத் தமர்ந்த
- ஒருபெரும் பதியைஎன் உவப்பைப்
- புணர்ந்தெனைக் கலந்த போகத்தை எனது
- பொருளைஎன் புண்ணியப் பயனைக்
- கொணர்ந்தொரு பொருள்என் கரத்திலே கொடுத்த
- குருவைஎண் குணப்பெருங் குன்றை
- மணந்தசெங் குவளை மலர்எனக் களித்த
- வள்ளலைக் கண்டுகொண் டேனே.
- புன்னிக ரில்லேன் பொருட்டிருட் டிரவில்
- போந்தருள் அளித்தசற் குருவைக்
- கன்னிகர் மனத்தைக் கரைத்தெனுட் கலந்த
- கருணையங் கடவுளைத் தனது
- சொன்னிகர் எனஎன் சொல்எலாங் கொண்டே
- தோளுறப் புனைந்தமெய்த் துணையைத்
- தன்னிக ரில்லாத் தலைவனை எனது
- தந்தையைக் கண்டுகொண் டேனே.
- கலைநிறை மதியைக் கனலைச்செங் கதிரைக்
- ககனத்தைக் காற்றினை அமுதை
- நிலைநிறை அடியை அடிமுடி தோற்றா
- நின்மல நிற்குண நிறைவை
- மலைவறும் உளத்தே வயங்குமெய் வாழ்வை
- வரவுபோக் கற்றசின் மயத்தை
- அலையறு கருணைத் தனிப்பெருங் கடலை
- அன்பினிற் கண்டுகொண் டேனே.
- பொன்வணப் பொருப்பொன் றதுசகு ணாந்தம்
- போந்தவான் முடியதாங் கதன்மேல்
- மன்வணச் சோதித் தம்பம்ஒன் றதுமா
- வயிந்துவாந் தத்ததாண் டதன்மேல்
- என்வணச் சோதிக் கொடிபர நாதாந்
- தத்திலே இலங்கிய ததன்மேல்
- தன்வணம் மணக்கும் ஒளிமல ராகத்
- தழுவினன் திருவடி நிலையே.
- எப்பொருளும் எவ்வுயிரும் எவ்வுலகும்
- விளங்கவிளக் கிடுவான் தன்னைச்
- செப்பரிய பெரியஒரு சிவபதியைச்
- சிவகதியைச் சிவபோ கத்தைத்
- துப்புரவு பெறஎனக்கே அருளமுதம்
- துணிந்தளித்த துணையை என்றன்
- அப்பனைச்சிற் றம்பலத்தென் அருட்பெருஞ்சோ
- தியைப்பெற்றேன் அச்சோ அச்சோ.
- 323. சிவபோகத்தே - முதற்பதிப்பு. பொ. சு. பதிப்பு.
- 324. தருகின்றாம் - பி. இரா. பதிப்பு.
- அருட்சோதித் தெய்வம்எனை ஆண்டுகொண்ட தெய்வம்
- அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்தத் தெய்வம்
- பொருட்சாரும் மறைகளெலாம் போற்றுகின்ற தெய்வம்
- போதாந்தத் தெய்வம்உயர் நாதாந்தத் தெய்வம்
- இருட்பாடு நீக்கிஒளி ஈந்தருளுந் தெய்வம்
- எண்ணியநான் எண்ணியவா றெனக்கருளுந் தெய்வம்
- தெருட்பாடல் உவந்தெனையும் சிவமாக்கும் தெய்வம்
- சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.
- அணிவளர் திருச்சிற் றம்பலத் தாடும்
- ஆனந்த போகமே அமுதே
- மணிவளர் ஒளியே ஒளியினுள் ஒளியே
- மன்னும்என் ஆருயிர்த் துணையே
- துணிவுறு சித்தாந் தப்பெரும் பொருளே
- தூயவே தாந்தத்தின் பயனே
- பணிவுறும் உளத்தே இனித்திட எனக்கே
- பழுத்தபே ரானந்தப் பழமே.
- தாகமுள் எடுத்த போதெதிர் கிடைத்த
- சர்க்கரை அமுதமே என்கோ
- மோகம்வந் தடுத்த போதுகைப் பிடித்த
- முகநகைக் கணவனே என்கோ
- போகமுள் விரும்பும் போதிலே வலிந்து
- புணர்ந்தஓர் பூவையே என்கோ
- ஆகமுட் புகுந்தென் உயிரினுட் கலந்த
- அம்பலத் தாடிநின் றனையே.
- யோகமெய்ஞ் ஞானம் பலித்தபோ துளத்தில்
- ஓங்கிய காட்சியே என்கோ
- ஏகமெய்ஞ் ஞான யோகத்திற் கிடைத்துள்
- இசைந்தபே ரின்பமே என்கோ
- சாகலைத் தவிர்த்தென் தன்னைவாழ் விக்கச்
- சார்ந்தசற் குருமணி என்கோ
- மாகமும் புவியும் வாழ்வுற மணிமா
- மன்றிலே நடிக்கின்றோய் நினையே.
- இரவிலா தியம்பும் பகலிலா திருந்த
- இயற்கையுள் இயற்கையே என்கோ
- வரவிலா வுரைக்கும் போக்கிலா நிலையில்
- வயங்கிய வான்பொருள் என்கோ
- திரையிலா தெல்லாம் வல்லசித் தெனக்கே
- செய்ததோர் சித்தனே என்கோ
- கரவிலா தெனக்குப் பேரருட் சோதி
- களித்தளித் தருளிய நினையே.
- இணைஏதும் இன்றிநின்ற இறையவனே மறைசொல்
- ஏகமுமாய் அனேகமுமாய் இலங்குபரம் பரனே
- அணையேதும் இன்றிநிறை பெரும்புனலே அதன்மேல்
- அனலேஎன் அப்பாஎன் அவத்தைஎலாம் கடத்தும்
- புணையேமெய்ப் பொருளேமெய்ப் புகழேமெய்ப் புகலே
- பொதுவேஉள் ளதுவேதற் போதமிலார்க் குதவும்
- துணையேசத் துவமேதத் துவமேஎன் னுளத்தே
- சுத்தநடம் புரிகின்ற சித்தசிகா மணியே.
- உடுத்ததுகில் அவிழ்த்துவிரித் தொருதரையில் தனித்தே
- உன்னாதும் உன்னிஉளத் துறுகலக்கத் தோடே
- படுத்தயர்ந்த சிறியேன்றன் அருகணைந்து மகனே
- பயமுனக்கென் என்றென்னைப் பரிந்துதிருக் கரத்தால்
- அடுத்தணைத்துக் கொண்டெடுத்துப் போய்ப்பிறிதோர் இடத்தே
- அமர்த்திநகைத் தருளியஎன் ஆண்டவனே அரசே
- தொடுத்தணிஎன் மொழிமாலை அணிந்துகொண்டென் உளத்தே
- சுத்தநடம் புரிகின்ற சித்தசிகா மணியே.
- ஆற்றாத அடிச்சிறியேற் காற்றல்மிகக் கொடுத்தே
- அம்மையுமாய் அப்பனுமாய் ஆதரித்தன் புடனே
- போற்றாத குற்றமெலாம் பொறுத்தருளி எனைஇப்
- பூதலத்தார் வானகத்தார் போற்றிமதித் திடவே
- ஏற்றாத உயர்நிலைமேல் ஏற்றிஎல்லாம் வல்ல
- இறைமையும்தந் தருளியஎன் இறையவனே எனக்கே
- தோற்றாத தோற்றுவித்த துரையேஎன் உளத்தே
- சுத்தநடம் புரிகின்ற சித்தசிகா மணியே.
- பணிந்தறியேன் அன்புடனே பாடுதலும் அறியேன்
- படித்தறியேன் கேட்டறியேன் பத்தியில்பூ மாலை
- அணிந்தறியேன் மனம்உருகக் கண்களின்நீர் பெருக
- அழுதறியேன் தொழுதறியேன் அகங்காரம் சிறிதும்
- தணிந்தறியேன் தயவறியேன் சத்தியவா சகமும்
- தான்அறியேன் உழுந்தடித்த தடியதுபோல் இருந்தேன்
- துணிந்தெனக்கும் கருணைசெய்த துரையேஎன் உளத்தே
- சுத்தநடம் புரிகின்ற சித்தசிகா மணியே.
- தாங்காதே பசிபெருக்கிக் கடைநாய்போல் உலம்பித்
- தவம்விடுத்தே அவந்தொடுத்தே தனித்துண்டும் வயிறு
- வீங்காதேல் எழுந்திருக்கேன் வீங்கிவெடித் திடல்போல்
- விம்மும்எனில் எழுந்துடனே வெறுந்தடிபோல் விழுந்தே
- வாங்காது தூங்கியதோர் வழக்கம்உடை யேனை
- வலிந்தடிமை கொண்டருளி மறப்பொழித்தெந் நாளும்
- தூங்காதே விழிக்கவைத்த துரையேஎன் உளத்தே
- சுத்தநடம் புரிகின்ற சித்தசிகா மணியே.
- தண்ணிய மதியே தனித்தசெஞ் சுடரே
- சத்திய சாத்தியக் கனலே
- ஒண்ணிய ஒளியே ஒளிக்குள்ஓர் ஒளியே
- உலகெலாந் தழைக்கமெய் உளத்தே
- நண்ணிய விளக்கே எண்ணிய படிக்கே
- நல்கிய ஞானபோ னகமே
- புண்ணிய நிதியே கண்ணிய நிலையே
- பொதுநடம் புரிகின்ற பொருளே.
- மேல்வெளி காட்டி வெளியிலே விளைந்த
- விளைவெலாம் காட்டிமெய் வேத
- நூல்வழி காட்டி என்னுளே விளங்கும்
- நோக்கமே ஆக்கமும் திறலும்
- நால்வகைப் பயனும் அளித்தெனை வளர்க்கும்
- நாயகக் கருணைநற் றாயே
- போலுயிர்க் குயிராய்ப் பொருந்திய மருந்தே
- பொதுநடம் புரிகின்ற பொருளே.
- வேதமும் பொருளும் பயனும்ஓர் அடைவும்
- விளம்பிய அனுபவ விளைவும்
- போதமும் சுகமும் ஆகிஇங் கிவைகள்
- போனது மாய்ஒளிர் புலமே
- ஏதமுற் றிருந்த ஏழையேன் பொருட்டிவ்
- விருநிலத் தியல்அருள் ஒளியால்
- பூதநல் வடிவம் காட்டிஎன் உளத்தே
- பொதுநடம் புரிகின்ற பொருளே.
- பொறிவே றின்றி நினை - நிதம் - போற்றும் புனிதரு ளே
- குறிவே றின்றி நின்ற - பெருஞ் - சோதிக் கொழுஞ்சுட ரே
- செறிவே தங்களெ லாம் - உரை - செய்ய நிறைந்திடும் பே
- ரறிவே தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே.
- முன்பே என்றனை யே - வலிந் - தாட்கொண்ட முன்னவ னே
- இன்பே என்னுயி ரே - எனை -ஈன்ற இறையவ னே
- பொன்பே ரம்பல வா - சிவ - போகஞ்செய் சிற்சபை வாழ்
- அன்பே தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே.
- ஏதும் தெரியா தகங்கரித்திங் கிருந்த சிறியேன் தனைவலிந்தே
- எல்லா உலகும் அதிசயிக்க எல்லாம் வல்ல சித்தெனவே
- ஓதும் பொருளைக் கொடுத்தென்றும் உலவா இன்பப் பெருநிலையில்
- ஓங்கி உறவைத் தனையேஎன் னுடைய ஒருமைப் பெருமானே
- ஈதுன் கருணைக் கியல்போநீ என்பால் வைத்த பெருங்கருணை
- இந்நாட்புதிதே அந்நாளில் இலையே இதனை எண்ணியநான்
- தாதும் உணர்வும் உயிரும்உள்ளத் தடமும் பிறவாந் தத்துவமும்
- தாமே குழைந்து தழைந்தமுத சார மயமா கின்றேனே.
- ஊற்றை உடம்பில் இருட்டறைவாய் உறங்கி விழித்துக் கதைபேசி
- உண்டிங் குடுத்துக் கருத்திழந்தே உதவா எருதின் ஊர்திரிந்து
- நேற்றை வரையும் வீண்போது போக்கி இருந்தேன் நெறிஅறியேன்
- நேரேஇற்றைப் பகல்அந்தோ நெடுங்கா லமும்மெய்த் தவயோக
- ஆற்றை அடைந்தோர் எல்லோரும் அச்சோ என்றே அதிசயிப்ப
- அமுதுண் டழியாத் திருஉருவம் அடைந்தேன் பெரிய அருட்சோதிப்
- பேற்றை உரிமைப் பேறாகப் பெற்றேன் பெரிய பெருமான்நின்
- பெருமை இதுவேல் இதன் இயலை யாரே துணிந்து பேசுவரே.
- புரைசேர் வினையும் கொடுமாயைப் புணர்ப்பும் இருளும் மறைப்பினொடு
- புகலும் பிறவாம் தடைகளெலாம் போக்கி ஞானப் பொருள்விளங்கும்
- வரைசேர்த் தருளிச் சித்தியெலாம் வழங்கிச் சாகா வரங்கொடுத்து
- வலிந்தென் உளத்தில் அமர்ந்துயிரில் கலந்து மகிழ்ந்து வாழ்கின்றாய்
- பரைசேர் வெளியில் பதியாய்அப் பால்மேல் வெளியில் விளங்குசித்த
- பதியே சிறியேன் பாடலுக்குப் பரிசு விரைந்தே பாலித்த
- அரைசே அமுதம் எனக்களித்த அம்மே உண்மை அறிவளித்த
- அப்பா பெரிய அருட்சோதி அப்பா வாழி நின்அருளே.
- போதுதான் வீணே போக்கிப் புலையனேன் புரிந்த பொல்லாத்
- தீதுதான் பொறுத்த உன்றன் திருவருட் பெருமைக் கந்தோ
- ஏதுதான் புரிவேன் ஓகோ என்என்று புகழ்வேன் ஞான
- மாதுதான் இடங்கொண் டோங்க வயங்குமா மன்று ளானே.
- மையரி நெடுங்க ணார்தம் வாழ்க்கையின் மயங்கி இங்கே
- பொய்யறி வுடையேன் செய்த புன்மைகள் பொறுத்தாட் கொண்டாய்
- ஐயறி வுடையார் போற்றும் அம்பலத் தரசே நின்சீர்
- மெய்யறி வறியேன் எந்த விளைவறிந் துரைப்பேன் அந்தோ.
- எந்தாய்உனைக் கண்டு களித்தனன் ஈண்டிப்போதே
- சிந்தாநல மும்பல மும்பெற்றுத் தேக்குகின்றேன்
- அந்தாமரை யான்நெடு மாலவன் ஆதிவானோர்
- வந்தார்எனை வாழ்த்துகின் றார்இங்கு வாழ்கஎன்றே.
- தாழாதெனை ஆட்கொண் டருளிய தந்தையேநின்
- கேழார்மணி அம்பலம் போற்றக் கிடைத்துளேன்நான்
- ஏழாநிலை மேல்நிலை ஏறி இலங்குகின்றேன்
- ஊழால்வந்த துன்பங்கள் யாவும் ஒழிந்ததன்றே.
- ஓவா இன்ப மயமாகி ஓங்கும் அமுதம் உதவிஎனைத்
- தேவா சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
- பூவார் மணம்போல் சுகந்தருமெய்ப் பொருளே நின்பால் வளர்கின்றேன்
- நாவால் அடியேன் நினைப்பாடி ஆடும் வண்ணம் நவிலுகவே.
- துற்குண மாயைபோய்த் தொலைந்தது ஞானம்
- தோன்றிடப் பொன்னொளி தோற்றிய கதிர்தான்
- சிற்குண வரைமிசை உதயஞ்செய் ததுமா
- சித்திகள் அடிப்பணி செய்திடச் சூழ்ந்த
- நற்குணச் சன்மார்க்க சங்கத்தார் எல்லாம்
- நண்ணினர் தோத்திரம் பண்ணிநிற் கின்றார்
- எற்குண வளித்தஎன் அருட்பெருஞ் சோதி
- என்னம்மை யேபள்ளி எழுந்தருள் வாயே.
- நிலந்தெளிந் ததுகண மழுங்கின சுவண
- நீடொளி தோன்றிற்றுக் கோடொலிக் கின்ற
- அலர்ந்தது தாமரை ஆணவ இருள்போய்
- அழிந்தது கழிந்தது மாயைமால் இரவு
- புலர்ந்தது தொண்டரோ டண்டரும் கூடிப்
- போற்றியோ சிவசிவ போற்றிஎன் கின்றார்
- இலங்குரு வளித்தஎன் அருட்பெருஞ் சோதி
- என்குரு வேபள்ளி எழுந்தரு ளாயே.
- சினைப்பள்ளித் தாமங்கள் கொணர்ந்தனர் அடியார்
- சிவசிவ போற்றிஎன் றுவகைகொள் கின்றார்
- நினைப்பள்ளி உண்ணத்தெள் ளாரமு தளிக்கும்
- நேரம்இந் நேரம்என் றாரியர் புகன்றார்
- முனைப்பள்ளி பயிற்றாதென் தனைக்கல்வி பயிற்றி
- முழுதுணர் வித்துடல் பழுதெலாம் தவிர்த்தே
- எனைப்பள்ளி எழுப்பிய அருட்பெருஞ் சோதி
- என்னப்ப னேபள்ளி எழுந்தருள் வாயே.
- மருளொடு மாயைபோய்த் தொலைந்தது மதங்கள்
- வாய்மூடிக் கொண்டன மலர்ந்தது கமலம்
- அருள்ஒளி விளங்கிய தொருதிருச் சபையும்
- அலங்கரிக் கின்றனர் துலங்கிவீற் றிருக்கத்
- தெருளொடு பொருளும்மேன் மேல்எனக் களித்துச்
- சித்தெலாஞ் செய்திடத் திருவருள் புரிந்தே
- இருள்அறுத் தெனையாண்ட அருட்பெருஞ் சோதி
- என்வள்ள லேபள்ளி எழுந்தருள் வாயே.
- பிச்சங் கவரி நிழற்றியசைத் திடமால் யானைப் பிடரியின்மேல்
- நிச்சம் பவனி வருகின்ற நிபுணர் எல்லாம் தொழுதேத்த
- எச்சம் புரிவோர் போற்றஎனை ஏற்றா நிலைமேல் ஏற்றுவித்தென்
- அச்சந் தவிர்த்தே ஆண்டுகொண்டோய் அடியேன் உன்றன் அடைக்கலமே.
- தப்படி எடுத்துக்கொண் டுலகவர் போலே
- சாற்றிட மாட்டேன்நான் சத்தியம் சொன்னேன்
- செப்படி வித்தைசெய் சித்தர்என் றோதும்
- தேவரீர் வல்லபத் திருச்சமு கத்தே
- இப்படி வான்முதல் எங்கணும் அறிய
- என்னுடல் ஆதியை ஈந்தனன் உமக்கே
- எப்படி ஆயினும் செய்துகொள் கிற்பீர்
- எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே.
- பொருணற் கொடியே மாற்றுயர்ந்த பொன்னங் கொடியே போதாந்த
- வருணக் கொடியே எல்லாஞ்செய் வல்லார் இடஞ்சேர் மணிக்கொடியே
- தருணக் கொடியே என்தன்னைக் தாங்கி ஓங்குந் தனிக்கொடியே
- கருணைக் கொடியே ஞானசிவ காமக் கொடியே அருளுகவே.
- மணங்கொள் கொடிப்பூ முதல்நான்கு வகைப்பூ வடிவுள் வயங்குகின்ற
- வணங்கொள் கொடியே ஐம்பூவும் மலிய மலர்ந்த வான்கொடியே
- கணங்கொள் யோக சித்திஎலாம் காட்டுங் கொடியே கலங்காத
- குணங்கொள் கொடியே சிவபோகக் கொடியே அடியேற் கருளுகவே.
- புலங்கொள் கொடிய மனம்போன போக்கில் போகா தெனைமீட்டு
- நலங்கொள் கருணைச் சன்மார்க்க நாட்டில் விடுத்த நற்கொடியே
- வலங்கொள் ஞான சித்திஎலாம் வயங்க விளங்கு மணிமன்றில்
- குலங்கொள் கொடியே மெய்ஞ்ஞானக் கொடியே அடியேற் கருளுகவே.
- மாயையாற் கலங்கி வருந்திய போதும்
- வள்ளல்உன் தன்னையே மதித்துன்
- சாயையாப்244 பிறரைப் பார்த்ததே அல்லால்
- தலைவவே245 றெண்ணிய துண்டோ
- தூயபொற் பாதம் அறியநான் அறியேன்
- துயர்இனிச் சிறிதும்இங் காற்றேன்
- நாயகா எனது மயக்கெலாம் தவிர்த்தே
- நன்றருள் புரிவதுன் கடனே.
- பார்த்தேன் பணிந்தேன் பழிச்சினேன் மெய்ப்புளகம்
- போர்த்தேன்என் உள்ளமெலாம் பூரித்தேன் - ஆர்த்தேநின்
- றாடுகின்றேன் பாடுகின்றேன் அன்புருவா னேன்அருளை
- நாடுகின்றேன் சிற்சபையை நான்.
- மாலிலே மயங்கி மண்ணிலே அநித்த
- வாழ்விலே வரவிலே மலஞ்சார்
- தோலிலே ஆசை வைத்துவீண் பொழுது
- தொலைக்கின்றார் தொலைக்கநான் உனது
- காலிலே ஆசை வைத்தனன் நீயும்
- கனவினும் நனவினும் எனைநின்
- பாலிலே வைத்தாய் எனக்கிது போதும்
- பண்ணிய தவம்பலித் ததுவே.
- மதத்திலே சமய வழக்கிலே மாயை
- மருட்டிலே இருட்டிலே மறவாக்
- கதத்திலே மனத்தை வைத்துவீண் பொழுது
- கழிக்கின்றார் கழிக்கநான் உன்பூம்
- பதத்திலே மனத்தை வைத்தனன் நீயும்
- பரிந்தெனை அழிவிலா நல்ல
- பதத்திலே வைத்தாய் எனக்கிது போதும்
- பண்ணிய தவம்பலித் ததுவே.
- குலத்திலே சமயக் குழியிலே நரகக்
- குழியிலே குமைந்துவீண் பொழுது
- நிலத்திலே போக்கி மயங்கிஏ மாந்து
- நிற்கின்றார் நிற்கநான் உவந்து
- வலத்திலே நினது வசத்திலே நின்றேன்
- மகிழ்ந்துநீ என்உளம் எனும்அம்
- பலத்திலே நின்றாய் எனக்கிது போதும்
- பண்ணிய தவம்பலித் ததுவே.
- கூடவும் பின்னே பிரியவும் சார்ந்த
- கொழுநரும் மகளிரும் நாண
- நீடஎன் உளத்தே கலந்துகொண் டென்றும்
- நீங்கிடா திருந்துநீ என்னோ
- டாடவும் எல்லாம் வல்லசித் தியைப்பெற்
- றறிவுரு வாகிநான் உனையே
- பாடவும் பெற்றேன் எனக்கிது போதும்
- பண்ணிய தவம்பலித் ததுவே.
- உயத்திடம் அறியா திறந்தவர் தமைஇவ்
- வுலகிலே உயிர்பெற்று மீட்டும்
- நயத்தொடு வருவித் திடும்ஒரு ஞான
- நாட்டமும் கற்பகோ டியினும்
- வயத்தொடு சாகா வரமும்என் தனக்கே
- வழங்கிடப் பெற்றனன் மரண
- பயத்தைவிட் டொழித்தேன் எனக்கிது போதும்
- பண்ணிய தவம்பலித் ததுவே.
- நாடல்செய் கின்றேன் அருட்பெருஞ் சோதி
- நாதனை என்உளே கண்டு
- கூடல்செய் கின்றேன் எண்ணிய எல்லாம்
- கூடிடக் குலவிஇன் புருவாய்
- ஆடல்செய் கின்றேன் சித்தெலாம் வல்லான்
- அம்பலம் தன்னையே குறித்துப்
- பாடல்செய் கின்றேன் எனக்கிது போதும்
- பண்ணிய தவம்பலித் ததுவே.
- துதிபெறும் அயனோ டரிஅரன் முதலோர்
- சூழ்ந்துசூழ்ந் திளைத்தொரு தங்கள்
- விதியைநொந் தின்னும் விழித்திருக் கின்றார்
- விழித்திருந் திடவும்நோ வாமே
- மதியிலேன் அருளால் சுத்தசன் மார்க்க
- மன்றிலே வயங்கிய தலைமைப்
- பதிபதம் பெற்றேன் எனக்கிது போதும்
- பண்ணிய தவம்பலித் ததுவே.
- புரிசைவான் உலகில் பூவுல கெல்லாம்
- புண்ணிய உலகமாய்ப் பொலிந்தே
- கரிசெலாம் தவிர்ந்து களிப்பெலாம் அடைந்து
- கருத்தொடு வாழவும் கருத்தில்
- துரிசெலாம் தவிர்க்கும் சுத்தசன் மார்க்கம்
- துலங்கவும் திருவருட் சோதிப்
- பரிசெலாம் பெற்றேன் எனக்கிது போதும்
- பண்ணிய தவம்பலித் ததுவே.
- வேதமே விளங்க மெய்ம்மையே வயங்க
- வெம்மையே நீங்கிட விமல
- வாதமே வழங்க வானமே முழங்க
- வையமே உய்யஓர் பரம
- நாதமே தொனிக்க ஞானமே வடிவாய்
- நன்மணி மன்றிலே நடிக்கும்
- பாதமே பிடித்தேன் எனக்கிது போதும்
- பண்ணிய தவம்பலித் ததுவே.
- கட்டமும் கழன்றேன் கவலைவிட் டொழித்தேன்
- கலக்கமும் தீர்ந்தனன் பிறவிச்
- சட்டமும் கிழித்தேன் தூக்கமும் துறந்தேன்
- சாவையும் நோவையும் தவிர்ந்தேன்
- சிட்டமும் அடைந்தேன் சிற்சபை உடையான்
- செல்வமெய்ப் பிள்ளைஎன் றொருபேர்ப்
- பட்டமும் தரித்தேன் எனக்கிது போதும்
- பண்ணிய தவம்பலித் ததுவே.
- சாதிமதம் சமயமுதற் சங்கற்ப விகற்பம்எலாம் தவிர்ந்து போக
- ஆதிநடம் புரிகின்றான் அருட்சோதி எனக்களித்தான் அந்தோ அந்தோ.
- சிற்சபையும் பொற்சபையும் சித்தி விளக்கத்தால்
- நற்சகமேல் நீடூழி நண்ணிடுக - சற்சபையோர்
- போற்றிவரம் பெற்றுவகை பூரிக்க வாழ்ந்திடுக
- நாற்றிசையும் வாழ்க நயந்து.
- அச்சந் தவிர்த்தே அருளிற் செலுத்துகின்ற
- விச்சை அரசே விளங்கிடுக - நச்சரவம்
- ஆதிக் கொடியஉயிர் அத்தனையும் போய்ஒழிக
- நீதிக் கொடிவிளங்க நீண்டு.
- புல்லொழுக்கம் எல்லாம் புணரியிடைப் போய்ஒழிக
- நல்லொழுக்கம் ஒன்றே நலம்பெறுக - இல்லொழுக்கில்
- செத்தார்கள் எல்லாம் திரும்ப எழுந்துமனம்
- ஒத்தாராய் வாழ்க உவந்து.
- செத்தார் எழுக சிவமே பொருள்என்றே
- இத்தா ரணியில் இருந்தொளிர்க - சுத்தசிவ
- சன்மார்க்கம் ஒன்றே தழைக்க தயவறியாத்
- துன்மார்க்கம் போக தொலைந்து.
- செத்தவர்கள் எல்லாம் திரும்ப எழுந்துவரச்
- சித்தம்வைத்துச் செய்கின்ற சித்தியனே - சுத்தசிவ
- சன்மார்க்க சங்கத் தலைவனே நிற்போற்றும்
- என்மார்க்கம் நின்மார்க்க மே.
- நோவாது நோன்பெனைப்போல் நோற்றவரும் எஞ்ஞான்றும்
- சாவா வரம்எனைப்போல் சார்ந்தவரும் - தேவாநின்
- பேரருளை என்போலப் பெற்றவரும் எவ்வுலகில்
- யார்உளர்நீ சற்றே அறை.
- வேதமும் வேதத்தின் அந்தமும் போற்ற விளங்கியநின்
- பாதமும் மாமுடி யும்கண்டு கொள்ளும் படிஎனக்கே
- போதமும் போதத் தருள்அமு தும்தந்த புண்ணியனே
- நாதமும் நாத முடியும் கடந்த நடத்தவனே.
- நாதாந்த நிலையொடு போதாந்த நிலைக்கு
- நடுவாம் பொதுநடம் நான்காணல் வேண்டும்
- சூதாந்தற் போதத்தைச் சுடுவாயோ தோழி
- துட்டநெறியில் கெடுவாயோ தோழி.
- துரியத்திற் கப்பாலுந் தோன்றும் பொதுவில்
- ஜோதித் திருநடம் நான்காணல் வேண்டும்
- கரியைக்கண் டாங்கது காண்பாயோ தோழி
- காணாது போய்ப்பழி290 பூண்பாயோ தோழி.
- அஞ்சல்என் றெனைஇத் தருணநீ வந்தே
- அன்பினால் அணைத்தருள் என்றாள்
- பஞ்சுபோல் பறந்தேன் அய்யவோ துன்பம்
- படமுடி யாதெனக் கென்றாள்
- செஞ்செவே எனது கருத்தெலாம் உனது
- திருவுளம் அறியுமே என்றாள்
- வஞ்சகம் அறியா வள்ளலே என்றாள்
- வரத்தினால் நான்பெற்ற மகளே.
- தடுத்திடல் வல்லார் இல்லைநின் அருளைத்
- தருகநற் றருணம்ஈ தென்றாள்
- கொடுத்திடில் ஐயோ நின்னருட் பெருமை
- குறையுமோ குறைந்திடா தென்றாள்
- நடுத்தய விலர்போன் றிருத்தலுன் றனக்கு
- ஞாயமோ நண்பனே என்றாள்
- வடுத்தினும் வாயேன் அல்லன்நான் என்றாள்
- வரத்தினால் நான்பெற்ற மகளே.
- மெலிந்தஎன் உளத்தை அறிந்தனை தயவு
- மேவிலை என்னையோ என்றாள்
- நலிந்தபோ தின்னும் பார்த்தும்என் றிருத்தல்
- நல்லவர்க் கடுப்பதோ என்றாள்
- மலிந்த இவ்வுலகர் வாய்ப்பதர் தூற்ற
- வைத்தல்உன் மரபல என்றாள்
- வலிந்தெனைக் கலந்த வள்ளலே என்றாள்
- வரத்தினால் நான்பெற்ற மகளே.
- அம்மதவேள் கணைஒன்றோ ஐங்கணையும் விடுத்தான்
- அருள்அடையும் ஆசையினால் ஆருயிர்தான் பொறுத்தாள்
- இம்மதமோ சிறிதும்இலாள் கலவியிலே எழுந்த
- ஏகசிவ போகவெள்ளத் திரண்டுபடாள் எனினும்
- எம்மதமோ எக்குலமோ என்றுநினைப் புளதேல்
- இவள்மதமும் இவள்குலமும் எல்லாமும் சிவமே
- சம்மதமோ தேவர்திரு வாய்மலர வேண்டும்
- சபையில்நடம் புரிகின்ற தனிப்பெரிய துரையே.
- அங்கலிட்ட285 களத்தழகர் அம்பலவர் திருத்தோள்
- ஆசையெனும் பேய்அகற்றல் ஆவதிலை எனவே
- பொங்கலிட்ட தாயர்முகம் தொங்கலிட்டுப் போனார்
- பூவைமுகம் பூமுகம்போல் பூரித்து மகிழ்ந்தாள்
- எங்களிட்டம் திருவருள்மங் கலஞ்சூட்டல் அன்றி
- இரண்டுபடா தொன்றாக்கி இன்படைவித் திடவே
- தங்களிட்டம் யாதுதிரு வாய்மலர வேண்டும்
- சபையில்நடம் புரிகின்ற தனிப்பெரிய துரையே.
- பனம்பழமே எனினும்இந்தப் பசிதவிர்த்தால் போதும்
- பாரும்எனப் பகர்கின்ற பாவையர்போல் பகராள்
- இனம்பழமோ கங்கலந்தாள் சிவானுபவத் தல்லால்
- எந்தஅனு பவங்களிலும் இச்சைஇல்லாள் அவர்தம்
- மனம்பழமோ காயோஎன் றறிந்துவர விடுத்தாள்
- மற்றவர்போல் காசுபணத் தாசைவைத்து வருந்தாள்
- தனம்பழமோ தேவர்திரு வாய்மலர வேண்டும்
- சபையில்நடம் புரிகின்ற தனிப்பெரிய துரையே.
- புல்லவரே பொய்உலக போகம்உற விழைவார்
- புண்ணியரே சிவபோகம் பொருந்துதற்கு விழைவார்
- கல்லவரே மணிஇவரே என்றறிந்தாள் அதனால்
- கனவிடையும் பொய்யுறவு கருதுகிலாள் சிறிதும்
- நல்லவரே எனினும்உமை நாடாரேல் அவரை
- நன்குமதி யாள்இவளை நண்ணஎண்ணம் உளதோ
- வல்லவரே நுமதுதிரு வாய்மலர வேண்டும்
- வயங்குதிரு மணிமன்றில் வாழ்பெரிய துரையே.
- அம்பலத்தே நடம்புரியும் எனதுதனித் தலைவர்
- அன்புடன்என் உளங்கலந்தே அருட்பெருஞ்சோ தியினால்
- தம்பலத்தே பெரும்போகந் தந்திடுவார் இதுதான்
- சத்தியஞ்சத் தியமதனால் சார்ந்தவர்தாம் இருக்க
- எம்பலத்தே மலரணையைப் புனைகஎனப் பலகால்
- இயம்புகின்றாள் இவள்அளவில் இசைந்துநும தருளாம்
- செம்பலத்தே உறுதருணம் வாய்மலர வேண்டும்
- சிற்சபைபொற் சபைஓங்கித் திகழ்பெரிய துரையே.
- அதுபா வகமுகத் தானந்த நாட்டில்
- அம்பலம் செய்துநின் றாடும் அழகர்
- விதுபா வகமுகத் தோழியும் நானும்
- மெய்ப்பா வனைசெய்யும் வேளையில் வந்து
- பொதுபா வனைசெய்யப் போகாதோ பெண்ணே
- பொய்ப்பா வனைசெய்து கைப்பானேன் ஐயோ
- இதுபாவம் என்கின்றார் என்னடிஅம்மா
- என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா.
- அறங்காதல் செய்தேனை ஆண்டுகொண் டிங்கே
- அருட்பெருஞ் சோதியாய் ஆடும் அழகர்
- உறங்காத வண்ணஞ்சிற் றம்பலம பாடி
- உதிக்கின்ற ஒண்மையில் துதிக்கின்ற போது
- புறங்காதல் செய்வார்போல் செய்யாதே பெண்ணே
- பொற்கம்பம் ஏறினை சொர்க்கம்அங் கப்பால்
- இறங்காதே என்கின்றார் என்னடி அம்மா
- என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா.
- அந்நாள்வந் தென்றனை ஆண்டருள் செய்த
- அய்யர் அமுதர்என் அன்பர் அழகர்
- நன்னாள் கழிக்கின்ற நங்கைய ரோடு
- நான்அம் பலம்பாடி நண்ணுறும் போது
- பின்னாள்என் றெண்ணிப் பிதற்றாதே பெண்ணே
- பேரருட் சோதிப் பெருமணம் செய்நாள்
- இந்நாளே என்கின்றார் என்னடி அம்மா
- என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா.
- தப்போது வார்உளம் சார்ந்திட உன்னார்
- சத்தியர் உத்தமர் நித்தம ணாளர்
- ஒப்போத ஒண்ணாத மெய்ப்போத மன்றின்
- உண்மையைப் பாடிநான் அண்மையில் நின்றேன்
- அப்போதென் றெண்ணி அயர்ந்திடேல் பெண்ணே
- அன்புடை நின்னையாம் இன்புறக் கூடல்
- இப்போதே என்கின்றார் என்னடி அம்மா
- என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா.
- மெய்க்குலம் போற்ற விளங்கு மணாளர்
- வித்தகர் அம்பலம் மேவும் அழகர்
- இக்குல மாதரும் யானும்என் நாதர்
- இன்னருள் ஆடல்கள் பன்னுறும் போது
- பொய்க்குலம் பேசிப் புலம்பாதே பெண்ணே
- பூரண நோக்கம் பொருந்தினை நீதான்
- எக்குலம் என்கின்றார் என்னடி அம்மா
- என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா.
- வெம்மத நெஞ்சிடை மேவுற உன்னார்
- வெம்பல மாற்றும்என் அம்பல வாணர்
- சம்மத மாமட வார்களும் நானும்
- தத்துவம் பேசிக்கொண் டொத்துறும் போது
- இம்மதம் பேசி இறங்காதே பெண்ணே
- ஏகசி வோகத்தை எய்தினை நீதான்
- எம்மதம் என்கின்றார் என்னடி அம்மா
- என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா.
- பாரொடு விண்ணும் படைத்தபண் பாளர்
- பற்றம் பலத்தார்சொல் சிற்றம் பலத்தார்
- வாரிடு கொங்கையர் மங்கைய ரோடே
- மன்றகம் பாடி மகிழ்கின்ற போது
- ஏருடம் பொன்றென எண்ணேல்நீ பெண்னே
- எம்முடம் புன்னை366 இணைந்திங் கெமக்கே
- ஈருடம் பென்கின்றார் என்னடி அம்மா
- என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா.
- மறப்பற்ற நெஞ்சிடை வாழ்கின்ற வள்ளல்
- மலப்பற் றறுத்தவர் வாழ்த்து மணாளர்
- சிறப்புற்ற மங்கையர் தம்மொடு நான்தான்
- சிற்றம் பலம்பாடிச் செல்கின்ற போது
- புறப்பற் றகற்றத் தொடங்காதே பெண்ணே
- புலைஅகப் பற்றை அறுத்தாய் நினக்கே
- இறப்பற்ற தென்கின்றார் என்னடி அம்மா
- என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா.
- ஆறெனும் அந்தங்கள் ஆகிஅன் றாகும்
- அம்பலத் தாடல்செய் ஆனந்த சித்தர்
- தேறறி வாகிச் சிவானு பவத்தே
- சின்மய மாய்நான் திளைக்கின்ற போது
- மாறகல் வாழ்வினில் வாழ்கின்ற பெண்ணே
- வல்லவள் நீயேஇம் மாநிலை மேலே
- ஏறினை என்கின்றார் என்னடி அம்மா
- என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா.
- எல்லாஞ்செய் வல்லதுரை என்கணவர் என்றால்
- எனக்கும்ஒன்று நினக்கும்ஒன்றா என்றஅத னாலோ
- இல்லாமை எனக்கில்லை எல்லார்க்குந் தருவேன்
- என்றுசொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன்
- கல்லார்போல் என்னைமுகம் கடுத்துநின்றாள் பாங்கி
- களித்தெடுத்து வளர்த்தவளும் கலந்தனள்அங் குடனே
- செல்லாமை சிலபுகன்று சிரிக்கின்றார் மடவார்
- சித்தர்நட ராயர்திருச் சித்தமறிந் திலனே.
- இச்சைஎலாம் வல்லதுரை என்னைமணம் புரிந்தார்
- ஏடிஎனக் கிணைஎவர்கள் என்றஅத னாலோ
- எச்சமயத் தேவரையும் இனிமதிக்க மாட்டேன்
- என்றுசொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன்
- நச்சுமரக் கனிபோலே பாங்கிமனங் கசந்தாள்
- நயந்தெடுத்து வளர்த்தவளும் கயந்தெடுப்புப் புகன்றாள்
- அச்சமிலாள் இவள்என்றே அலர்உரைத்தார் மடவார்
- அண்ணல்நட ராயர்திரு எண்ணம்அறிந் திலனே.
- வஞ்சமிலாத் தலைவருக்கே மாலையிட்டேன் எல்லா
- வாழ்வும்என்றன் வாழ்வென்றேன் அதனாலோ அன்றி
- எஞ்சலுறேன் மற்றவர்போல் இறந்துபிறந் துழலேன்
- என்றுசொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன்
- அஞ்சுமுகங் காட்டிநின்றாள் பாங்கிஎனை வளர்த்த
- அன்னையும்அப் படியாகி என்னைமுகம் பாராள்
- நெஞ்சுரத்த பெண்களெலாம் நீட்டிநகைக் கின்றார்
- நிருத்தர்நட ராயர்திருக் கருத்தைஅறிந் திலனே.
- பொதுநடஞ்செய் துரைமுகத்தே தளதளஎன் றொளிரும்
- புன்னகைஎன் பொருள்என்றேன் அதனாலோ அன்றி
- இதுவரையும் வரக்காணேன் தடைசெய்தார் எவரோ
- எனப்புகன்றேன் இதனாலோ எதனாலோ அறியேன்
- புதுமுகங்கொண் டெனதுதனித் தோழிமனந் திரிந்தாள்
- புரிந்தெடுத்து வளர்த்தவளும் புதுமைசில புகன்றாள்
- மதுவுகந்து களித்தவர்போல் பெண்கள்நொடிக் கின்றார்
- வள்ளல்நட ராயர்திரு வுள்ளமறிந் திலனே.
- கண்கலந்த கள்வர்என்னைக் கைகலந்த தருணம்
- கரணம்அறிந் திலன்என்றேன் அதனாலோ அன்றி
- எண்கலந்த போகமெலாம் சிவபோகந் தனிலே
- இருந்ததென்றேன் இதனாலோ எதனாலோ அறியேன்
- விண்கலந்த மதிமுகந்தான் வேறுபட்டாள் பாங்கி
- வியந்தெடுத்து வளர்த்தவளும் வேறுசில புகன்றாள்
- பண்கலந்த மொழிமடவார் பழிகூற லானார்
- பத்தர்புகழ் நடராயர் சித்தம்அறிந் திலனே.
- மன்னுதிருச் சபைநடுவே மணவாள ருடனே
- வழக்காடி வலதுபெற்றேன் என்றஅத னாலோ
- இன்னும்அவர் வதனஇள நகைகாணச் செல்வேன்
- என்றுசொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன்
- மின்னும்இடைப் பாங்கிஒரு விதமாக நடந்தாள்
- மிகப்பரிவால் வளர்த்தவளும் வெய்துயிர்த்துப் போனாள்
- அன்னநடைப் பெண்களெலாம் சின்னமொழி புகன்றார்
- அத்தர்நட ராயர்திருச் சித்தம்அறிந் திலனே.
- கள்ளுண்டாள் எனப்புகன்றீர் கனகசபை நடுவே
- கண்டதலால் உண்டதிலை என்றஅத னாலோ
- எள்ளுண்ட மற்றவர்போல் என்னைநினை யாதீர்
- என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
- உள்ளுண்ட மகிழ்ச்சிஎலாம் உவட்டிநின்றாள் பாங்கி
- உவந்துவளர்த் தவளும்என்பால் சிவந்தகண்ணள் ஆனாள்
- துள்ளுண்ட பெண்களெலாம் சூழ்ந்துநொடிக் கின்றார்
- சுத்தர்நட ராயர்திருச் சித்தம்அறிந் திலனே.
- காரிகையீர் எல்லீரும் காணவம்மின் எனது
- கணவர்அழ கினைஎன்றேன் அதனாலோ அன்றி
- ஏரிகவாத் திருவுருவை எழுதமுடி யாதே
- என்றுசொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன்
- காரிகவாக் குழல்சோரக் கடுத்தெழுந்தாள் பாங்கி
- கண்பொறுத்து வளர்த்தவளும் புண்பொறுத்தாள் உளத்தே
- நேரிகவாப் பெண்கள்மொழிப் போர்இகவா தெடுத்தார்
- நிருத்தர்நட ராயர்திருக் கருத்தைஅறிந் திலனே.
- கற்பூரம் கொணர்ந்துவம்மின் என்கணவர் வந்தால்
- கண்ணெச்சில் கழிக்கஎன்றேன் அதனாலோ அன்றி
- எற்பூத நிலையவர்தம் திருவடித்தா மரைக்கீழ்
- என்றுசொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன்
- வற்பூத வனம்போன்றாள் பாங்கியவள் தனைமுன்
- மகிழ்ந்துபெற்றிங் கெனைவளர்த்தாள் வினைவளர்த்தாள் ஆனாள்
- விற்பூஒள் நுதல்மடவார் சொற்போர்செய் கின்றார்
- விண்ணிலவு நடராயர் எண்ணம்அறிந் திலனே.
- மனைஅணைந்த மலரணைமேல் எனைஅணைந்த போது
- வடிவுசுக வடிவானேன் என்றஅத னாலோ
- இனைவறியேன் முன்புரிந்த பெருந்தவம்என் புகல்வேன்
- என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
- புனைமுகம்ஓர் கரிமுகமாய்ப் பொங்கிநின்றாள் பாங்கி
- புழுங்குமனத் தவளாகி அழுங்குகின்றாள் செவிலி
- பனையுலர்ந்த ஓலைஎனப் பெண்கள்ஒலிக் கின்றார்
- பண்ணவர்என் நடராயர் எண்ணம்அறிந் திலனே.
- தனித்தலைவர் வருகின்ற தருணம்இது மடவீர்
- தனிக்கஎனை விடுமின்என்றேன் அதனாலோ அன்றி
- இனித்தசுவை எல்லாம்என் கணவர்அடிச் சுவையே
- என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
- பனித்தகுளிர் காலத்தே சனித்தசலம் போன்றாள்
- பாங்கிஎனை வளர்த்தவளும் தூங்குமுகங் கொண்டாள்
- கனித்தபழம் விடுத்துமின்னார் காய்தின்னு கின்றார்
- கருத்தர்நட ராயர்திருக் கருத்தைஅறிந் திலனே.
- கூடியஎன் கணவர்எனைக் கூடாமற் கலைக்கக்
- கூடுவதோ நும்மாலே என்றஅத னாலோ
- ஏடிஎனை அறியாரோ சபைக்குவரு வாரோ
- என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
- நாடியஎன் பாங்கிமன மூடிநின்று போனாள்
- நண்ணிஎனை வளர்த்தவளும் எண்ணியவா றிசைத்தாள்
- தேடியஆ யங்களெலாம் கூடிஉரைக் கின்றார்
- திருத்தர்நட ராயர்திருக் கருத்தைஅறிந் திலனே.
- உணர்ந்தவர் தமக்கும் உணர்வரி யான்என்
- உள்ளகத் தமர்ந்தனன் என்றாள்
- அணிந்தனன் எனக்கே அருண்மண மாலை
- அதிசயம் அதிசயம் என்றாள்
- துணிந்துநான் தனித்த போதுவந் தென்கை
- தொட்டனன் பிடித்தனன் என்றாள்
- புணர்ந்தனன் கலந்தான் என்றுளே களித்துப்
- பொங்கினாள் நான்பெற்ற பொன்னே.
- திருமணிப் பொதுவில் ஒருபெரும் பதிஎன்
- சிந்தையில் கலந்தனன் என்றாள்
- பெருமையில் சிறந்தேன் என்பெருந் தவத்தைப்
- பேசுதல் அரிதரி தென்றாள்
- இருமையும் என்போல் ஒருமையில் பெற்றார்
- யாண்டுளர் யாண்டுளர் என்றாள்
- மருமலர் முகத்தே இளநகை துளும்ப
- வயங்கினாள் நான்பெற்ற மகளே.
- ஏலுநன் மணிமா மன்றருட் சோதி
- என்னுளத் தமர்ந்தனன் என்றாள்
- பாலும்இன் சுவையும் போன்றென தாவி
- பற்றினன் கலந்தனன் என்றாள்
- சாலும்எவ் வுலகும் தழைக்கஎன் தனக்கே
- சத்தியை அளித்தனன் என்றாள்
- மேலும்எக் காலும் அழிவிலேன் என்றாள்
- மிகுகளிப் புற்றனள் வியந்தே.
- செம்பவளத் திருமலையோ மாணிக்க விளக்கோ
- செழுஞ்சோதித் தனிப்பிழம்போ செவ்வண்ணத் திரளோ
- அம்பதுமத் திருவிளங்கும் அகலத்தான் பிரமன்
- அரன்முதலோர் ஐவர்களும் அப்பால்நின் றோரும்
- எம்பரம்என் றெம்பெருமான் புறவண்ணம் எதுவோ
- என்பாரேல் அகவண்ணம் யார்உரைக்க வல்லார்
- தம்பரம்என் றென்னைஅன்று மணம்புரிந்தார் கனக
- சபைநாதர் அவர்பெருமை சாற்றுவதென் தோழி.
- வெடித்தளிந்த முக்கனியின் வடித்தரசந் தனிலே
- விரும்புறநின் றோங்கியசெங் கரும்பிரதம் கலந்து
- தடித்தசெழும் பாற்பெய்து கோற்றேன்விட் டதனைத்
- தனித்தபரா அமுதத்தில் தான்கலந்துண் டாற்போல்
- இடித்திடித்தென் உளமுழுதும் தித்திக்கும் வார்த்தை
- இனிதுரைத்து மணம்புரிந்த என்னுயிர்நா யகர்வான்
- பொடித்திருமே னியர்நடனம் புரிகின்றார் அவர்தம்
- புகழ்உரைக்க வல்லேனோ அல்லேன்காண் தோழி.
- நாதவரை சென்றுமறை ஓர்அனந்தம் கோடி
- நாடிஇளைத் திருந்தனஆ கமங்கள் பரநாத
- போதவரை போந்துபல முகங்கொண்டு தேடிப்
- புணர்ப்பறியா திருந்தனஎன் றறிஞர்புகல் வாரேல்
- பாதவரை வெண்று படிந்திலங்கச் சோதிப்
- படிவம்எடுத் தம்பலத்தே பரதநடம் புரியும்
- போதவரைக் காண்பதலால் அவர்பெருமை என்னால்
- புகலவச மாமோநீ புகலாய்என் தோழி.
- காற்றுருவோ கனல்உருவோ கடவுள்உரு என்பார்
- காற்றுருவும் கனல்உருவும் கண்டுரைப்பீர் என்றால்
- வேற்றுருவே புகல்வர்அதை வேறொன்றால் மறுத்தால்
- விழித்துவிழித் தெம்போல்வார் மிகவும்மருள் கின்றார்
- தோற்றும்அந்தத் தத்துவமும் தோற்றாத்தத் துவமும்
- துரிசாக அவைகடந்த சுகசொருபம் ஆகி
- மாற்றமனம் உணர்வுசெல்லாத் தலத்தாடும் பெருமான்
- வடிவுரைக்க வல்லவரார் வழுத்தாய்என் தோழி.
- ஓங்கியஐம் பூஇவைக்குள் ஒன்றின்ஒன்று திண்மை
- உற்றனமற் றதுஅதுவும் பற்றுவன பற்றத்
- தாங்கியமா சத்திகளின் பெருங்கூட்டம் கலையாத்
- தன்மைபுரிந் தாங்காங்குத் தனித்தனிநின் றிலங்கித்
- தேங்கியபோ தவைகலையச் செய்கைபல புரிந்து
- திகழ்ஒளியாய் அருள்வெளியாய்த் திறவில்ஒளி364 வெளியில்
- பாங்குறநேர் விளங்குகின்ற திருவடியின் பெருமை
- பகுத்துரைத்து வல்லவரார் பகராய்என் தோழி.
- வளம்பெறுவின் அணுக்குள்ளேஒரு மதிஇரவி அழலாய்
- வயங்கியதா ரகையாய்இவ் வகைஅனைத்தும் தோற்றும்
- தளம்பெறுசிற் சொலிதபரா சத்திமயம் ஆகித்
- தனித்தசத்தி மான்ஆகித் தத்துவம்எல் லாம்போய்
- உளம்புகுத மணிமன்றில் திருநடம்செய் தருளும்
- ஒருதலைவன் சேவடிச்சிர் உரைப்பவர்எவ் வுலகில்
- அளந்தறியும் எனமறைகள் அரற்றும்எனில் சிறிய
- அடிச்சியுரைத் திடப்படுமோ அறியாய்என் தோழி.
- உறவே எனதின் னுயிரேஎன் உள்ளத்தில் உற்றினிக்கும்
- நறவே அருட்பெருஞ் சோதிமன் றோங்கு நடத்தரசே
- இறவேன் எனத்துணி வெய்திடச் செய்தனை என்னைஇனி
- மறவேல் அடிச்சிறி யேன்ஒரு போது மறக்கினுமே.
- அருள்அளித்தான் அன்பளித்தான் அம்பலத்தான் உண்மைப்
- பொருள்அளித்தான் என்னுட் புணர்ந்தான் - தெருள்அளித்தான்
- எச்சோ தனையும் இயற்றாமல் ஆண்டுகொண்டான்
- அச்சோ எனக்கவன்போல் ஆர்.
- இணைஎன்று தான்தனக் கேற்றது போற்றும் எனக்குநல்ல
- துணைஎன்று வந்தது சுத்தசன் மார்க்கத்தில் தோய்ந்ததென்னை
- அணைஎன் றணைத்துக்கொண் டைந்தொழில் ஈந்த தருளுலகில்
- திணைஐந்து மாகிய துத்தர ஞான சிதம்பரமே.
- புண்ணியந்தான் யாது புரிந்தேனோ நானறியேன்
- பண்ணியதுன் போடே படுத்திருந்தேன் - நண்ணிஎனைத்
- தூக்கி எடுத்தெனது துன்பமெலாந் தீர்த்தருளி
- ஆக்கியிடென் றேயருள்தந் தாய்.
- நீர்க்கிசைந்த நாம நிலைமூன்று கொண்டபெயர்
- போர்க்கிசைந்த தென்றறியாப் புன்னெஞ்சே - நீர்க்கிசைந்தே
- ஒன்றுஒன்றுஒன்று ஒன்றுஒன்றுஒன்று ஒன்றுஒன்று தில்லைமணி
- மன்றொன்று வானை மகிழ்ந்து.
- கல்லோ மணலோ கனியோ கரும்போஎன்(று)
- எல்லோமும் இங்கே இருக்கின்றோம் - சொல்லோம்
- அதுவாய் அதன்பொருளாய் அப்பாலாய் யார்க்கும்
- பொதுவாய் நடிக்கின்ற போது.
- நடிப்பார் வதிதில்லை நற்கோ புரத்தின்
- அடிப்பாவை யும்286 வடக்கே ஆர்ந்து - கொடிப்பாய
- நின்று வளர்மலைபோல் நெஞ்சேபார்த் தால்தெரியும்
- இன்றெவ்விடத் தென்னிலிப்பாட் டில்.
- மண்ணுள் மயங்கிச் சுழன்றோடு மனத்தை அடக்கத் தெரியாதே
- பெண்ணுள் மயலைப் பெருங்கடல்போல் பெருக்கித் திரிந்தேன் பேயேனை
- விண்ணுள் மணிபோன் றருட்சோதி விளைவித் தாண்ட என்னுடைய
- கண்ணுள் மணியே நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.
- புலந்த மனத்தை அடக்கிஒரு போது நினைக்க மாட்டாதே
- அலந்த சிறியேன் பிழைபொறுத்தே அருளா ரமுதம் அளித்திங்கே
- உலந்த உடம்பை அழியாத உடம்பாப் புரிந்தென் உயிரினுளே
- கலந்த பதியே நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.
- பெண்ணுக் கிசைந்தே பலமுகத்தில் பேய்போல் சுழன்ற பேதைமனத்
- தெண்ணுக் கிசைந்து துயர்க்கடலாழ்ந் திருந்தேன் தன்னை எடுத்தருளி
- விண்ணுக் கிசைந்த கதிர்போல்என் விவேகத் திசைந்து மேலும்என்தன்
- கண்ணுக் கிசைந்தோய் நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.
- பொய்யிற் கிடைத்த மனம்போன போக்கில் சுழன்றே பொய்உலகில்
- வெய்யிற் கிடைத்த புழுப்போல வெதும்பிக் கிடந்த வெறியேற்கு
- மெய்யிற் கிடைத்தே சித்திஎலாம் விளைவித் திடுமா மணியாய்என்
- கையிற் கிடைத்தோய் நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.
- போதல் ஒழியா மனக்குரங்கின் போக்கை அடக்கத் தெரியாது
- நோதல் புரிந்த சிறியேனுக் கிரங்கிக் கருணை நோக்களித்துச்
- சாதல் எனும்ஓர் சங்கடத்தைத் தவிர்த்தென் உயிரில் தான்கலந்த
- காதல் அரசே நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.
- இன்னுரைஅன் றென்றுலகம் எல்லாம் அறிந்திடுக
- என்னுரையும் பொன்னுரைஎன் றேஅணிந்தான் - தன்னுரைக்கு
- நேர்என்றான் நீடுலகில் நின்போல் உரைக்கவல்லார்
- ஆர்என்றான் அம்பலவன் ஆய்ந்து.
- பொன்னொப்ப தாம்ஒருநீ போற்றியசொன் மாலைஎன்றே
- என்னப்பன் என்சொல் இசைந்தணிந்தான் - தன்ஒப்பில்
- வல்லான் இசைந்ததுவே மாமாலை அற்புதம்ஈ
- தெல்லாம் திருவருட்சீ ரே.
- படைத்தல்முதல் ஐந்தொழில்செய் பணிஎனக்கே பணித்திட்டாய்
- உடைத்தனிப்பே ரருட்சோதி ஓங்கியதெள் ளமுதளித்தாய்
- கொடைத்தனிப்போ கங்கொடுத்தாய் நின்அடியர் குழுநடுவே
- திடத்தமர்த்தி வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய்.
- அருளே உணர்த்த அறிந்துகொண்டேன் அடுத்த தருணம் இதுஎன்றே
- இருளே தொலைந்த திடர்அனைத்தும் எனைவிட் டகன்றே ஒழிந்தனவால்
- தெருளே சிற்றம் பலத்தாடும் சிவமே எல்லாம் செய்யவல்ல
- பொருளே இனிநான் வீண்போது போக்க மாட்டேன் கண்டாயே.
- உலகுபுகழ் திருவமுதம் திருச்சிற்றம் பலத்தே
- உடையவர்இன் றுதவினர்நான் உண்டுகுறை தீர்ந்தேன்
- இலகுசிவ போகவடி வாகிமகிழ் கின்றேன்
- இளைப்பறியேன் தவிப்பறியேன் இடர்செய்பசி அறியேன்
- விலகல்இலாத் திருவனையீர் நீவிர்எலாம் பொசித்தே
- விரைந்துவம்மின் அம்பலத்தே விளங்குதிருக் கூத்தின்
- அலகறியாத் திறம்பாடி ஆடுதும்நாம் இதுவே
- அருள்அடையும் நெறிஎனவே தாகமம்ஆர்ப் பனவே.
- மாதவத்தால் நான்பெற்ற வானமுதே எனது
- வாழ்வேஎன் கண்ணமர்ந்த மணியேஎன் மகிழ்வே
- போதவத்தால் கழித்தேனை வலிந்துகலந் தாண்ட
- பொன்னேபொன் னம்பலத்தே புனிதநடத் தரசே
- தீதவத்தைப் பிறப்பிதுவே சிவமாகும் பிறப்பாச்
- செய்வித்தென் அவத்தையெலாம் தீர்த்தபெரும் பொருளே
- பூதலத்தே அடிச்சிறியேன் நினதுதிரு வடிக்கே
- புகழ்மாலை சூட்டுகின்றேன் புனைந்துகலந் தருளே.
- வாக்கொழிந்து மனம்ஒழிந்து மதிஒழிந்து மதியின்
- வாதனையும் ஒழிந்தறிவாய் வயங்கிநின்ற இடத்தும்
- போக்கொழிந்தும் வரவொழிந்தும் பூரணமாய் அதுவும்
- போனபொழு துள்ளபடி புகலுவதெப் படியோ
- நீக்கொழிந்த நிறைவேமெய்ந் நிலையேஎன் னுடைய
- நேயமே ஆனந்த நிருத்தமிடும் பதியே
- ஏக்கொழிந்தார் உளத்திருக்கும் இறையேஎன் குருவே
- எல்லாமாய் அல்லதுமாய் இலங்கியமெய்ப் பொருளே.
- என்இயலே யான்அறியேன் இவ்வுலகின் இயல்ஓர்
- எள்அளவும் தான்அறியேன் எல்லாமும் உடையோய்
- நின்இயலை அறிவேனோ அறிந்தவனே போல
- நிகழ்த்துகின்றேன் பிள்ளைஎன நிலைப்பெயர்பெற் றிருந்தேன்
- தன்இயலாம் தனிஞான சபைத்தலைமைப் பதியே
- சத்தியனே நித்தியனே தயாநிதியே உலகம்
- பின்இயல்மா னிடப்பிள்ளை பேச்சினும்ஓர் பறவைப்
- பிறப்பின்உறும் கிளிப்பிள்ளைப் பேச்சுவக்கின் றதுவே.
- அருளோங்கு தண்ணமுதம் அன்பால் அருந்தி
- மருள்நீங்கி நான்களித்து வாழப் - பொருளாந்
- தவநேயர் போற்றும் தயாநிதியே எங்கள்
- சிவனே கதவைத் திற.
- வானோர்க் கரிதெனவே மாமறைகள் சாற்றுகின்ற
- ஞானோ தயஅமுதம் நானருந்த - ஆனாத்
- திறப்பா வலர்போற்றும் சிற்றம் பலவா
- சிறப்பா கதவைத் திற.
- கையின் நெல்லிபோல் விளங்குசிற் றம்பலங் கலந்தருள் பெருவாழ்வே
- மெய்யி லேவிளைந் தோங்கிய போகமே மெய்ப்பெரும் பொருளேநான்
- ஐய மற்றுரைத் திட்டவிண் ணப்பம்ஏற் றளித்தனை இஞ்ஞான்றே
- செய்யும் இவ்வுடல் என்றுமிங் கழிவுறாச் சிவவடி வாமாறே.
- வாதித்த மாயை வினையா ணவம்எனும் வன்மலத்தைச்
- சேதித்தென் உள்ளம் திருக்கோயி லாக்கொண்டு சித்திஎலாம்
- போதித் துடம்பையும் பொன்னுடம் பாக்கிநற் புத்தமுதும்
- சாதித் தருளிய நின்னருட் கியான்செயத் தக்கதென்னே.
- ஈனமெலாம் தீர்ந்தனவே இன்பமெலாம் எய்தினவே
- ஊனமெலாம் கைவிட் டொழிந்தனவே - ஞானமுளோர்
- போற்றும்சிற் றம்பலத்தும் பொன்னம்ப லத்துநடம்
- போற்றும் படிப்பெற்ற போது.
- உள்ளக் கவலையெலாம் ஓடி ஒழிந்தனவே
- வள்ளற் பெருஞ்சோதி வாய்த்தனவே - கள்ளக்
- கருத்தொழிய ஞானக் கருத்தியைந்து நாதன்
- பொருத்தமுற்றென் உள்ளமர்ந்த போது.
- ஓத உலவா ஒருதோழன் தொண்டருளன்
- சாதல் ஒழித்தென்னைத் தானாக்கிப் - பூதலத்தில்
- ஐந்தொழில்செய் என்றே அருட்சோதிக் கோலளித்தான்
- வெந்தொழில்போய் நீங்க விரைந்து.
- துன்பமெலாம் தீர்ந்த சுகமெல்லாம் கைதந்த
- அன்பரெலாம் போற்ற அருள்நடஞ்செய் - இன்பன்
- அருட்பெருஞ்சிற் சோதிதிரு அம்பலத்தான் வேதப்
- பொருட்பெருஞ்சித் தென்னுட் புகுந்து.
- உடல்எலாம் உயிர்எலாம் உளம்எலாம் உணர்வெலாம்
- உள்ளனஎ லாங்கலந்தே
- ஒளிமயம தாக்கிஇருள் நீக்கிஎக் காலத்தும்
- உதயாத்த மானம்இன்றி
- இடல்எலாம் வல்லசிவ சத்திகிர ணாங்கியாய்
- ஏகமாய் ஏகபோக
- இன்பநிலை என்னும்ஒரு சிற்சபையின் நடுவே
- இலங்நிறை கின்றசுடரே
- கடல்எலாம் புவிஎலாம் கனல்எலாம் வளிஎலாம்
- ககன்எலாம் கண்டபரமே
- காணாத பொருள்எனக் கலைஎலாம் புகலஎன்
- கண்காண வந்தபொருளே
- தொடல்எலாம் பெறஎனக் குள்ளும் புறத்தும்மெய்த்
- துணையாய் விளங்கும்அறிவே
- சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
- சோதிநட ராஜபதியே.
- மெய்தழைய உள்ளங் குளிர்ந்துவகை மாறாது
- மேன்மேற் கலந்துபொங்க
- விச்சைஅறி வோங்கஎன் இச்சைஅறி வனுபவம்
- விளங்கஅறி வறிவதாகி
- உய்தழை வளித்தெலாம் வல்லசித் ததுதந்
- துவட்டாதுள் ஊறிஊறி
- ஊற்றெழுந் தென்னையும் தானாக்கி என்னுளே
- உள்ளபடி உள்ளஅமுதே
- கைதழைய வந்தவான் கனியே எலாங்கண்ட
- கண்ணே கலாந்தநடுவே
- கற்பனைஇ லாதோங்கு சிற்சபா மணியே
- கணிப்பருங் கருணைநிறைவே
- துய்தழை பரப்பித் தழைந்ததரு வேஅருட்
- சுகபோக யோகஉருவே
- சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
- சோதிநட ராஜபதியே.
- அண்டஒரு மைப்பகுதி இருமையாம் பகுதிமேல்
- ஆங்காரி யப்பகுதியே
- ஆதிபல பகுதிகள் அனந்தகோ டிகளின்நடு
- அடியினொடு முடியும்அவையில்
- கண்டபல வண்ணமுத லானஅக நிலையும்
- கணித்தபுற நிலையும்மேன்மேல்
- கண்டதிக ரிக்கின்ற கூட்டமும் விளங்கக்
- கலந்துநிறை கின்றஒளியே
- கொண்டபல கோலமே குணமே குணங்கொண்ட
- குறியே குறிக்கஒண்ணாக்
- குருதுரிய மேசுத்த சிவதுரிய மேஎலாம்
- கொண்டதனி ஞானவெளியே
- தொண்டர்இத யத்திலே கண்டென இனிக்கின்ற
- சுகயோக அனுபோகமே
- சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
- சோதிநட ராஜபதியே.
- நாதாந்த போதாந்த யோகாந்த வேதாந்த
- நண்ணுறு கலாந்தம்உடனே
- நவில்கின்ற சித்தாந்தம் என்னும்ஆ றந்தத்தின்
- ஞானமெய்க் கொடிநாட்டியே
- மூதாண்ட கோடிக ளொடுஞ்சரா சரம்எலாம்
- முன்னிப் படைத்தல்முதலாம்
- முத்தொழிலும் இருதொழிலும் முன்னின் றியற்றிஐம்
- மூர்த்திகளும் ஏவல்கேட்ப
- வாதாந்தம் உற்றபல சத்திக ளொடுஞ்சத்தர்
- வாய்ந்துபணி செய்யஇன்ப
- மாராச்சி யத்திலே திருவருட் செங்கோல்
- வளத்தொடு செலுத்துமரசே
- சூதாண்ட நெஞ்சினில் தோயாத நேயமே
- துரியநடு நின்றசிவமே
- சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
- சோதிநட ராஜபதியே.
- வாட்டமொடு சிறியனேன் செய்வகையை அறியாது
- மனமிக மயங்கிஒருநாள்
- மண்ணிற் கிடந்தருளை உன்னிஉல கியலினை
- மறந்துதுயில் கின்றபோது
- நாட்டமுறு வைகறையில் என்அரு கணைந்தென்னை
- நன்றுற எழுப்பிமகனே
- நல்யோக ஞானம்எனி னும்புரிதல் இன்றிநீ
- நலிதல்அழ கோஎழுந்தே
- ஈட்டுகநின் எண்ணம் பலிக்கஅருள் அமுதம்உண்
- டின்புறுக என்றகுருவே
- என்ஆசை யேஎன்றன் அன்பே நிறைந்தபே
- ரின்பமே என்செல்வமே
- வேட்டவை அளிக்கின்ற நிதியமே சாகாத
- வித்தையில் விளைந்தசுகமே
- மெய்ஞ்ஞான நிலைநின்ற விஞ்ஞான கலர்உளே
- மேவுநட ராஜபதியே.
- பேருற்ற உலகிலுறு சமயமத நெறிஎலாம்
- பேய்ப்பிடிப் புற்றபிச்சுப்
- பிள்ளைவிளை யாட்டென உணர்ந்திடா துயிர்கள்பல
- பேதமுற் றங்கும்இங்கும்
- போருற் றிறந்துவீண் போயினார் இன்னும்வீண்
- போகாத படிவிரைந்தே
- புனிதமுறு சுத்தசன் மார்க்கநெறி காட்டிமெய்ப்
- பொருளினை உணர்த்திஎல்லாம்
- ஏருற்ற சுகநிலை அடைந்திடப் புரிதிநீ
- என்பிள்ளை ஆதலாலே
- இவ்வேலை புரிகஎன் றிட்டனம் மனத்தில்வே
- றெண்ணற்க என்றகுருவே
- நீருற்ற ஒள்ளிய நெருப்பே நெருப்பினுள்
- நிறைந்திருள் அகற்றும்ஒளியே
- நிர்க்குணா னந்தபர நாதாந்த வரைஓங்கு
- நீதிநட ராஜபதியே.
- எய்ப்பற எனக்குக் கிடைத்தபெரு நிதியமே
- எல்லாஞ்செய் வல்லசித்தாய்
- என்கையில் அகப்பட்ட ஞானமணி யேஎன்னை
- எழுமையும் விடாதநட்பே
- கைப்பறஎன் உள்ளே இனிக்கின்ற சர்க்கரைக்
- கட்டியே கருணைஅமுதே
- கற்பக வனத்தே கனிந்தகனி யேஎனது
- கண்காண வந்தகதியே
- மெய்ப்பயன் அளிக்கின்ற தந்தையே தாயேஎன்
- வினைஎலாந் தீர்த்தபதியே
- மெய்யான தெய்வமே மெய்யான சிவபோக
- விளைவேஎன் மெய்ம்மைஉறவே
- துய்ப்புறும்என் அன்பான துணையேஎன் இன்பமே
- சுத்தசன் மார்க்கநிலையே
- துரியவெளி நடுநின்ற பெரியபொரு ளேஅருட்
- சோதிநட ராஜகுருவே.
- சாகாத தலைஇது வேகாத காலாம்
- தரம்இது காண்எனத் தயவுசெய் துரைத்தே
- போகாத புனலையும் தெரிவித்தென் உளத்தே
- பொற்புற அமர்ந்ததோர் அற்புதச் சுடரே
- ஆகாத பேர்களுக் காகாத நினைவே
- ஆகிய எனக்கென்றும் ஆகிய சுகமே
- தாகாதல் எனத்தரும் தருமசத் திரமே
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- மனம்எனும்ஓர் பேய்க்குரங்கு மடைப்பயலே நீதான்
- மற்றவர்போல் எனைநினைத்து மருட்டாதே கண்டாய்
- இனமுறஎன் சொல்வழியே இருத்தியெனில் சுகமாய்
- இருந்திடுநீ என்சொல்வழி ஏற்றிலைஆ னாலோ
- தினையளவுன் அதிகாரம் செல்லவொட்டேன் உலகம்
- சிரிக்கஉனை அடக்கிடுவேன் திருவருளால் கணத்தே
- நனவில்எனை அறியாயோ யார்எனஇங் கிருந்தாய்
- ஞானசபைத் தலைவனுக்கு நல்லபிள்ளை நானே.
- பன்முகஞ்சேர் மனம்எனும்ஓர் பரியாசப் பயலே
- பதையாதே சிதையாதே பார்க்கும்இடம் எல்லாம்
- கொன்முகங்கொண் டடிக்கடிபோய்க் குதியாதே எனது
- குறிப்பின்வழி நின்றிடுநின் குதிப்புநட வாது
- என்முனம்ஓர் புன்முனைமேல் இருந்தபனித் துளிநீ
- இம்மெனும்முன் அடக்கிடுவேன் என்னைஅறி யாயோ
- பின்முன்என நினையேல்காண் சிற்சபையில் நடிக்கும்
- பெரியதனித் தலைவனுக்குப் பெரியபிள்ளை நானே.
- விரிந்தமனம் எனும்சிறிய விளையாட்டுப் பயலே
- விரிந்துவிரிந் தலையாதே மெலியாதே விடயம்
- புரிந்தநெறி புரிந்தவமே போகாதே பொறிவாய்ப்
- புரையாதே விரையாதே புகுந்துமயங் காதே
- தெரிந்துதெளிந் தொருநிலையில் சித்திரம்போல் இருநீ
- சிறிதசைந்தால் அக்கணமே சிதைத்திடுவேன் கண்டாய்
- பரிந்தெனைநீ யார்என்று பார்த்தாய்சிற் சபைவாழ்
- பதிதனக்கே அருட்பட்டம் பலித்தபிள்ளை நானே.
- கலையறியாச் சித்தம்எனும் கனமோசப் பயலே
- கால்அறியாய் தலைஅறியாய் காண்பனகண் டறியாய்
- நிலையறியாய் ஒன்றைஒன்றா நிச்சயித்திவ் வுலகை
- நெறிமயங்க மயக்குகின்றாய் நீயோஇங் குறுவாய்
- அலையறியாக் கடல்போலே அசைவறநின் றிடுநீ
- அசைவாயேல் அக்கணத்தே அடக்கிடுவேன் உனைத்தான்
- அலைவறிவாய் என்றனைநீ அறியாயோ நான்தான்
- ஆண்டவன்தன் தாண்டவங்கண் டமர்ந்தபிள்ளை காணே.
- மாமாயை எனும்பெரிய வஞ்சகிநீ இதுகேள்
- வரைந்தஉன்தன் பரிசனப்பெண் வகைதொகைகள் உடனே
- போமாறுன் செயல்அனைத்தும் பூரணமாக் கொண்டு
- போனவழி தெரியாதே போய்பிழைநீ இலையேல்
- சாமாறுன் தனைஇன்றே சாய்த்திடுவேன் இதுதான்
- சத்தியம்என் றெண்ணுதிஎன் தன்னைஅறி யாயோ
- ஆமாறு சிற்சபையில் அருள்நடனம் புரிவார்
- அருள்அமுதுண் டருள்நிலைமேல் அமர்ந்தபிள்ளை காணே.
- கன்மம்எனும் பெருஞ்சிலுகுக் கடுங்கலகப் பயலே
- கங்குகரை காணாத கடல்போலே வினைகள்
- நன்மையொடு தீமைஎனப் பலவிகற்பங் காட்டி
- நடத்தினைநின் நடத்தைஎலாம் சிறிதும்நட வாது
- என்முன்இருந் தனைஎனில்நீ அழிந்திடுவாய் அதனால்
- இக்கணத்தே நின்இனத்தோ டேகுகநீ இலையேல்
- இன்மையுற மாய்த்திடுவேன் என்னையறி யாயோ
- எல்லாஞ்செய் வல்லவனுக் கினியபிள்ளை நானே.
- எத்துணையும் காட்டாத ஆணவம்என் றிடும்ஓர்
- இருட்டறைக்கோர் அதிகாரக் குருட்டுமுடப் பயலே
- இத்தனைநாள் பிடித்ததுனைக் கண்டுதுரத் திடவே
- இன்னும்அரைக் கணந்தரியேன் இக்கணத்தே நினது
- பொத்தியசுற் றத்துடனே போய்விடுதி இலையேல்
- பூரணமெய் அருள்ஒளியால் பொன்றுவிப்பேன் நினையே
- சத்தியஞ்சொன் னேன்எனைநீ அறியாயோ ஞான
- சபைத்தலைவன் தருதலைமைத் தனிப்பிள்ளை நானே.
- பெருமாயை என்னும்ஒரு பெண்பிள்ளை நீதான்
- பெற்றவுடம் பிதுசாகாச் சுத்தவுடம் பாக்கி
- ஒருஞானத் திருவமுதுண் டோங்குகின்றேன் இனிநின்
- உபகரிப்போர் அணுத்துணையும் உளத்திடைநான் விரும்பேன்
- அருளாய ஜோதிஎனக் குபகரிக்கின் றதுநீ
- அறியாயோ என்னளவில் அமைகஅயல் அமர்க
- தெருளாய உலகிடைஎன் சரிதமுணர்ந் திலையோ
- சிற்சபைஎன் அப்பனுக்குச் சிறந்தபிள்ளை நானே.
- தூக்கம்எனும் கடைப்பயலே சோம்பேறி இதுகேள்
- துணிந்துனது சுற்றமொடு சொல்லும்அரைக் கணத்தே
- தாக்கு332 பெருங் காட்டகத்தே ஏகுகநீ இருந்தால்
- தப்பாதுன் தலைபோகும் சத்தியம்ஈ தறிவாய்
- ஏக்கமெலாம் தவிர்த்துவிட்டேன் ஆக்கமெலாம் பெற்றேன்
- இன்பமுறு கின்றேன்நீ என்னைஅடை யாதே
- போக்கில்விரைந் தோடுகநீ பொற்சபைசிற் சபைவாழ்
- பூரணர்க்கிங் கன்பான பொருளன்என அறிந்தே.
- கோபமெனும் புலைப்பயலே காமவலைப் பயலே
- கொடுமோகக் கடைப்பயலே குறும்புமதப் பயலே
- தாபஉலோ பப்பயலே மாற்சரியப் பயலே
- தயவுடன்இங் கிசைக்கின்றேன் தாழ்ந்திருக்கா தீர்காண்
- தீபம்எலாம் கடந்திருள்சேர் நிலஞ்சாரப் போவீர்
- சிறிதுபொழு திருந்தாலும் திண்ணம்இங்கே அழிவீர்
- சாபமுறா முன்னம்அறிந் தோடுமினோ என்னைத்
- தான்அறியீர் தனித்தலைவன் தலைப்பிள்ளை நானே.
- 331. எனவே - சாலையிலுள்ள மூலம். முதற்பதிப்பு., பொ. சு. பி. இரா.
- 332. 'தாக்கு' என்றே எல்லாப் படிகளிலும் முதல் அச்சிலும் காண்கிறது. மூலத்தில் இது'தணிந்த' என்பதுபோலும் தெளிவற்றுத் தோன்றுகின்றது. - ஆ. பா.ஆ. பா. மூலத்தில் என்று சொல்வது அடிகள் கையெழுத்து மூலத்தையே. முதற்பதிப்பு.பொ. சு., பி. இரா. ச. மு. க. பதிப்புகளில் தாக்கு என்ற பாடமே காணப்படுகிறது.சாலையில் உள்ள அடிகள் கையெழுத்துப் படியில் 'தணிந்த' என்றே உள்ளது.மிகத் தெளிவாகவும் காணப்படுகிறது.
- ஈதுகேள் மகனே மெய்யருள் திருவை
- இரண்டரைக் கடிகையில் நினக்கே
- ஊதியம் பெறவே மணம்புரி விப்பாம்
- உண்மைஈ தாதலால் இனிவீண்
- போதுபோக் காமல் மங்கலக் கோலம்
- புனைந்துளம் மகிழ்கநீ என்றார்
- தீதுதீர்த் தென்னை இளந்தையில் தானே
- தெருட்டிய சிற்சபை யவரே.
- கலங்கிடேல் மகனே அருள்ஒளித் திருவைக்
- களிப்பொடு மணம்புரி விப்பாம்
- விலங்கிடேல் வீணில் போதுபோக் காமல்
- விரைந்துநன் மங்கலக் கோலம்
- நலங்கொளப் புனைந்து மகிழ்கஇவ் வுலகர்
- நவிலும்அவ் வுலகவர் பிறரும்
- இலங்கநின் மணமே ஏத்துவர் என்றார்
- இயலுறு சிற்சபை யவரே.
- அருட்பெ ருந்தனிச் சோதிஅம் பலத்திலே நடிக்கும்
- பொருட்பெ ருந்திரு நடமது போற்றுவீர் புலவீர்
- மருட்பெ ரும்பகை நீக்கிமெய் வாழ்வுபெற் றிடலாம்
- தெருட்பெ ரும்பதத் தாணைஈ தறிமினோ தெளிந்தே.
- கதிஇ ருக்கின்ற திருச்சிற்றம் பலத்திலே கருணை
- நீதிஇ ருக்கின்ற தாதலால் நீவீர்கள் எல்லாம்
- பதிய இங்ஙனே வம்மினோ கொலைபயில் வீரேல்
- விதியை நோமினோ போமினோ சமயவெப் பகத்தே.
- கட்டோடே கனத்தோடே வாழ்கின்றோம் என்பீர்
- கண்ணோடே கருத்தோடே கருத்தனைக் கருதீர்
- பட்டோடே பணியோடே திரிகின்றீர் தெருவில்
- பசியோடே வந்தாரைப் பார்க்கவும் நேரீர்
- கொட்டோடே முழக்கோடே கோலங்காண் கின்றீர்
- குணத்தோடே குறிப்போடே குறிப்பதைக் குறியீர்
- எட்டோடே இரண்டுசேர்த் தெண்ணவும் அறியீர்
- எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே.
- ஆறாமல் அவியாமல் அடைந்தகோ பத்தீர்
- அடர்வுற உலகிடை அஞ்சாது திரிவீர்
- மாறாமல் மனஞ்சென்ற வழிசென்று திகைப்பீர்
- வழிதுறை காண்கிலீர் பழிபடும் படிக்கே
- நாறாத மலர்போலும் வாழ்கின்றீர் மூப்பு
- நரைதிரை மரணத்துக் கென்செயக் கடவீர்
- ஏறாமல் வீணிலே இறங்குகின் றீரே
- எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே.
- ஆயாமை யாலேநீர் ஆதிஅ னாதி
- ஆகிய சோதியை அறிந்துகொள் கில்லீர்
- மாயாமை பிறவாமை வழியொன்றும் உணரீர்
- மறவாமை நினையாமை வகைசிறி தறியீர்
- காயாமை பழுக்கின்ற கருத்தையும் கருதீர்
- கண்மூடித் திரிகின்றீர் கனிவொடும் இரப்போர்க்
- கீயாமை ஒன்றையே இன்துணை என்பீர்
- எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே.
- வட்டிமேல் வட்டிகொள் மார்க்கத்தில் நின்றீர்
- வட்டியை வளர்க்கின்ற மார்க்கத்தை அறியீர்
- பெட்டிமேல் பெட்டிவைத் தாள்கின்றீர் வயிற்றுப்
- பெட்டியை நிரப்பிக்கொண் டொட்டியுள் இருந்தீர்
- பட்டினி கிடப்பாரைப் பார்க்கவும் நேரீர்
- பழங்கஞ்சி ஆயினும் வழங்கவும் நினையீர்
- எட்டிபோல் வாழ்கின்றீர் கொட்டிபோல் கிளைத்தீர்
- எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே.
- காடுவெட்டி நிலந்திருத்திக் காட்டெருவும் போட்டுக்
- கரும்பைவிட்டுக் கடுவிரைத்துக் களிக்கின்ற உலகீர்
- கூடுவிட்டுப் போயினபின் எதுபுரிவீர் எங்கே
- குடியிருப்பீர் ஐயோநீர் குறித்தறியீர் இங்கே
- பாடுபட்டீர்356 பயன்அறியீர் பாழ்க்கிறைத்துக் கழித்தீர்
- பட்டதெலாம் போதும்இது பரமர்வரு தருணம்
- ஈடுகட்டி வருவீரேல் இன்பம்மிகப் பெறுவீர்
- எண்மைஉரைத் தேன்அலன்நான் உண்மையுரைத் தேனே.
- ஆற்றுவெள்ளம் வருவதன்முன் அணைபோட அறியீர்
- அகங்காரப் பேய்பிடித்தீர் ஆடுதற்கே அறிவீர்
- கூற்றுவருங் கால்அதனுக் கெதுபுரிவீர் ஐயோ
- கூற்றுதைத்த சேவடியைப் போற்றவிரும் பீரே
- வேற்றுரைத்து வினைபெருக்கி மெலிகின்ற உலகீர்
- வீணுலகக் கொடுவழக்கை விட்டுவிட்டு வம்மின்
- சாற்றுவக்க எனதுதனித் தந்தைவரு கின்ற
- தருணம்இது சத்தியஞ்சிற் சத்தியைச்சார் வதற்கே.
- பொய்விளக்கப் புகுகின்றீர் போதுகழிக் கின்றீர்
- புலைகொலைகள் புரிகின்றீர் கலகலஎன் கின்றீர்
- கைவிளக்குப் பிடித்தொருபாழ்ங் கிணற்றில்விழு கின்ற
- களியர்எனக் களிக்கின்றீர் கருத்திருந்தும் கருதீர்
- ஐவிளக்கு மூப்புமர ணாதிகளை நினைத்தால்
- அடிவயிற்றை முறுக்காதோ கொடியமுயற் றுலகீர்
- மெய்விளக்க எனதுதந்தை வருகின்ற தருணம்
- மேவியதீண் டடைவீரேல் ஆவிபெறு வீரே.
- கனமுடையேம் கட்டுடையேம் என்றுநினைத் திங்கே
- களித்திறுமாந் திருக்கின்றீர் ஒளிப்பிடமும் அறியீர்
- சினமுடைய கூற்றுவரும் செய்திஅறி யீரோ
- செத்தநும தினத்தாரைச் சிறிதும்நினை யீரோ
- தினகரன்போல் சாகாத தேகமுடை யவரே
- திருவுடையார் எனஅறிந்தே சேர்ந்திடுமின் ஈண்டே
- மனமகிழ்ந்து கேட்கின்ற வரமெல்லாம் எனக்கே
- வழங்குதற்கென் தனித்தந்தை வருதருணம் இதுவே.
- அய்யாஎன் றோர்கால் அழைக்கின்றேன் அப்பொழுதே
- எய்யேன் மகனேஎன் றெய்துகின்றான் - ஐயோஎன்
- அப்பன் பெருங்கருணை யார்க்குண் டுலகத்தீர்
- செப்பமுடன் போற்றுமினோ சேர்ந்து.
- வஞ்சவினை எல்லாம் மடிந்தனவன் மாயைஇருள்
- அஞ்சிஎனை விட்டே அகன்றனவால் - எஞ்சலிலா
- இன்பமெலாம் என்றனையே எய்தி நிறைந்தனவால்
- துன்பமெலாம் போன தொலைந்து.
- சாத்திரங்கள் எல்லாம் தடுமாற்றம் சொல்வதன்றி
- நேத்திரங்கள் போற்காட்ட நேராவே - நேத்திரங்கள்
- சிற்றம் பலவன் திருவருட்சீர் வண்ணமென்றே
- உற்றிங் கறிந்தேன் உவந்து.
- பொய்உரைஎன் றெண்ணுதிரேல் போமின் புறக்கடையில்
- மெய்யுரைஎன் றெண்ணுதிரேல் மேவுமினோ - ஐயனருள்
- சித்திஎலாம் வல்ல திருக்கூத் துலவாமல்
- இத்தினந்தொட் டாடுகிற்பான் இங்கு.
- இவ்வுலகில் செத்தாரை எல்லாம் எழுகஎனில்
- எவ்வுலகும் போற்ற எழுந்திருப்பார் - செவ்வுலகில்
- சிற்றம் பலத்தான் திருவருள்பெற் றார்நோக்கம்
- உற்றவரை உற்றவர்கள் உற்று.
- யான்புரிதல் வேண்டுங்கொல் இவ்வுலகில் செத்தாரை
- ஊன்புரிந்து மீள உயிர்ப்பித்தல் - வான் புரிந்த
- அம்பலத்தான் நல்லருளால் அந்தோநான் மேற்போர்த்த
- கம்பலத்தால் ஆகும் களித்து.
- போற்றி உரைக்கின்றேன் பொய்என் றிகழாதீர்
- நாற்றிசைக்கண் வாழும் நமரங்காள் - ஆற்றலருள்
- அப்பன்வரு கின்றான் அருள்விளையாட் டாடுதற்கென்
- றிப்புவியில் இத்தருணம் இங்கு.
- அடைந்திடுமின் உலகீர்இங் கிதுதருணம் கண்டீர்
- அருட்சோதிப் பெரும்பதிஎன் அப்பன்வரு தருணம்
- கடைந்ததனித் திருவமுதம் களித்தருத்தி எனக்கே
- காணாத காட்சிஎலாம் காட்டுகின்ற தருணம்
- இடைந்தொருசார் அலையாதீர் சுகம்எனைப்போல் பெறுவீர்
- யான்வேறு நீர்வேறென் றெண்ணுகிலேன் உரைத்தேன்
- உடைந்தசம யக்குழிநின் றெழுந்துணர்மின் அழியா
- ஒருநெறியாம் சன்மார்க்கத் திருநெறிபெற் றுவந்தே.
- முயன்றுலகில் பயன்அடையா மூடமதம் அனைத்தும்
- முடுகிஅழிந் திடவும்ஒரு மோசமும்இல் லாதே
- இயன்றஒரு சன்மார்க்கம் எங்குநிலை பெறவும்
- எம்மிறைவன் எழுந்தருளல் இதுதருணம் கண்டீர்
- துயின்றுணர்ந்தே எழுந்தவர்போல் இறந்தவர்கள் எல்லாம்
- தோன்றஎழு கின்றதிது தொடங்கிநிகழ்ந் திடும்நீர்
- பயின்றறிய விரைந்துவம்மின் படியாத படிப்பைப்
- படித்திடலாம் உணர்ந்திடலாம் பற்றிடலாம் சுகமே.
- சுகமறியீர் துன்பம்ஒன்றே துணிந்தறிந்தீர் உலகீர்
- சூதறிந்தீர் வாதறிந்தீர் தூய்மையறிந் திலிரே
- இகம்அறியீர் பரம்அறியீர் என்னேநுங் கருத்தீ
- தென்புரிவீர் மரணம்வரில் எங்குறுவீர் அந்தோ
- அகமறிந்தீர்359 அனகமறிந் தழியாத ஞான
- அமுதவடி வம்பெறலாம் அடைந்திடுமின் ஈண்டே
- முகமறியார் போலிருந்தீர் என்னைஅறி யீரோ
- முத்தரெலாம் போற்றும்அருட் சித்தர்மகன் நானே.
- செய்தாலும் தீமைஎலாம் பொறுத்தருள்வான் பொதுவில்
- திருநடஞ்செய் பெருங்கருணைத் திறத்தான்அங் கவனை
- மெய்தாவ நினைத்திடுக சமரசசன் மார்க்கம்
- மேவுகஎன் றுரைக்கின்றேன் மேதினியீர் எனைத்தான்
- வைதாலும் வைதிடுமின் வாழ்த்தெனக்கொண் டிடுவேன்
- மனங்கோணேன் மானம்எலாம் போனவழி விடுத்தேன்
- பொய்தான்ஓர் சிறிதெனினும் புகலேன்சத் தியமே
- புகல்கின்றேன் நீவிர்எலாம் புனிதமுறும் பொருட்டே.
- பொருட்டலநும் போகம்எலாம் பொய்யாம்இங் கிதுநான்
- புகலுவதென் நாடொறும் புந்தியிற்கண் டதுவே
- மருட்டுலகீர் இருட்டுலகில் மடிவதழ கலவே
- மரணமிலாப் பெருவாழ்வில் வாழவம்மின் இங்கே
- பொருட்டிறஞ்சேர் சுத்தசிவ சன்மார்க்க நிலையில்
- பொருந்துமின்சிற் சபைஅமுதம் அருந்துமின்அன் புடனே
- அருட்டிறஞ்சேர்ந் தெண்ணியவா றாடுமினோ நும்மை
- அடுப்பவரே அன்றிநின்று தடுப்பவர்மற் றிலையே.
- இறந்தவரை எடுத்திடும்போ தரற்றுகின்றீர் உலகீர்
- இறவாத பெருவரம்நீர் ஏன்அடைய மாட்டீர்
- மறந்திருந்தீர் பிணிமூப்பில் சம்மதமோ நுமக்கு
- மறந்தும்இதை நினைக்கில்நல்லோர் மனம்நடுங்கும் கண்டீர்
- சிறந்திடுசன் மார்க்கம்ஒன்றே பிணிமூப்பு மரணம்
- சேராமல் தவிர்த்திடுங்காண் தெரிந்துவம்மின் இங்கே
- பிறந்தபிறப் பிதிற்றானே நித்தியமெய் வாழ்வு
- பெற்றிடலாம் பேரின்பம் உற்றிடலாம் விரைந்தே.
- சார்உலக வாதனையைத் தவிர்த்தவர்உள் ளகத்தே
- சத்தியமாய் அமர்ந்தருளும் உத்தமசற் குருவை
- நேர்உறவே எவராலும் கண்டுகொளற் கரிதாம்
- நித்தியவான் பொருளைஎலா நிலைகளுந்தான் ஆகி
- ஏர்உறவே விளங்குகின்ற இயற்கைஉண்மை தன்னை
- எல்லாம்செய் வல்லபத்தை எனக்களித்த பதியை
- ஓர்உறவென் றடைந்துலகீர் போற்றிமகிழ்ந் திடுமின்
- உள்ளமெலாம் கனிந்துருகி உள்ளபடி நினைந்தே.
- சோற்றாசை யொடுகாமச் சேற்றாசைப்
- படுவாரைத் துணிந்து கொல்லக்
- கூற்றாசைப் படும்எனநான் கூறுகின்ற
- துண்மையினில் கொண்டு நீவீர்
- நேற்றாசைப் பட்டவருக் கின்றருள்வார்
- போலும்அன்றி நினைத்த வாங்கே
- பேற்றாசைக் கருள்புரியும் ஞானசபா
- பதிப்புகழைப் பேசு வீரே.
- அணங்கெழுபே ரோசையொடும் பறையோசை
- பொங்கக்கோ ரணிகொண் டந்தோ
- பிணங்கழுவி எடுத்துப்போய்ச் சுடுகின்றீர்
- இனிச்சாகும் பிணங்க ளேநீர்
- கணங்கழுகுண் டாலும்ஒரு பயனுண்டே
- என்னபயன் கண்டீர் சுட்டே
- எணங்கெழுசாம் பலைக்கண்டீர் அதுபுன்செய்
- எருவுக்கும் இயலா தன்றே.
- புலைத்தொழிலே புரிகின்றீர் புண்ணியத்தைக்
- கருங்கடலில் போக விட்டீர்
- கொலைத்தொழிலில் கொடியீர்நீர் செத்தாரைச்
- சுடுகின்ற கொடுமை நோக்கிக்
- கலைத்தொழிலில் பெரியர்உளம் கலங்கினர்அக்
- கலக்கம்எலாம் கடவுள்நீக்கித்
- தலைத்தொழில்செய் சன்மார்க்கம் தலைஎடுக்கப்
- புரிகுவதித் தருணம் தானே.
- எத்துணையும் பேதமுறா தெவ்வுயிரும்
- தம்உயிர்போல் எண்ணி உள்ளே
- ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்
- யாவர்அவர் உளந்தான் சுத்த
- சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும்
- இடம்எனநான் தெரிந்தேன் அந்த
- வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திடஎன்
- சிந்தைமிக விழைந்த தாலோ.
- கருணைஒன்றே வடிவாகி எவ்வுயிரும்
- தம்உயிர்போல் கண்டு ஞானத்
- தெருள்நெறியில் சுத்தசிவ சன்மார்க்கப்
- பெருநீதி செலுத்தா நின்ற
- பொருள்நெறிசற் குணசாந்தப் புண்ணியர்தம்
- திருவாயால் புகன்ற வார்த்தை
- அருள்நெறிவே தாகமத்தின் அடிமுடிசொல்
- வார்த்தைகள்என் றறைவ ராலோ.
- மெச்சிஅப் பாவலர் போற்றப் பொதுவில் விளங்கியஎன்
- உச்சிஅப் பாஎன் னுடையஅப் பாஎன்னை உற்றுப்பெற்ற
- அச்சிஅப் பாமுக்கண் அப்பாஎன் ஆருயிர்க் கானஅப்பா
- கச்சிஅப் பாதங்கக் கட்டிஅப் பாஎன்னைக் கண்டுகொள்ளே.
- மேவிஎன் உள்ளகத் திருந்து மேலும்என்
- ஆவியிற் கலந்திவன் அவன்என் றோதும்ஓர்
- பூவியற் பேதமும் போக்கி ஒன்றதாய்த்
- தேவியற் புரிந்தனன் சிதம்ப ரேசனே.
- போற்றிச் சந்த விருத்தம்
- போற்றி நின்அருள் போற்றி நின்பொது
- போற்றி நின்புகழ் போற்றி நின்உரு
- போற்றி நின்இயல் போற்றி நின்நிலை
- போற்றி நின்நெறி போற்றி நின்சுகம்
- போற்றி நின்உளம் போற்றி நின்மொழி
- போற்றி நின்செயல் போற்றி நின்குணம்
- போற்றி நின்முடி போற்றி நின்நடு
- போற்றி நின்அடி போற்றி போற்றியே.
- போற்றி நின்இடம் போற்றி நின்வலம்
- போற்றி நின்நடம் போற்றி நின்நலம்
- போற்றி நின்திறம் போற்றி நின்தரம்
- போற்றி நின்வரம் போற்றி நின்கதி
- போற்றி நின்கலை போற்றி நின்பொருள்
- போற்றி நின்ஒளி போற்றி நின்வெளி
- போற்றி நின்தயை போற்றி நின்கொடை
- போற்றி நின்பதம் போற்றி போற்றியே.
- போற்று கின்றஎன் புன்மை யாவையும்
- பொறுத்த நின்பெரும் பொறுமை போற்றிஎன்
- ஆற்று வேன்உனக் கறிகி லேன்எனக்
- கறிவு தந்தபே ரறிவ போற்றிவான்
- காற்று நீடழல் ஆதி ஐந்துநான்
- காணக் காட்டிய கருத்த போற்றிவன்
- கூற்று தைத்துநீத் தழிவி லாஉருக்
- கொள்ள வைத்தநின் கொள்கை போற்றியே.
- பொருட்பெருந் தனிமெய்ப் போகமே என்னைப்
- புறத்தினும் அகத்தினும் புணர்ந்த
- தெருட்பெருஞ் சிவமே சுத்தசன் மார்க்கச்
- செல்வமே நான்பெற்ற சிறப்பே
- மருட்பெருங் கடலைக் கடத்திஎன் தன்னை
- வாழ்வித்த என்பெரு வாழ்வே
- அருட்பெருஞ் சோதி அம்பலத் தரசே
- அம்மையே அப்பனே அபயம்.
- பொருட்பெரு மறைகள் அனந்தம்ஆ கமங்கள்
- புகலும்ஓர் அனந்தம்மேற் போந்த
- தெருட்பெரு வெளிமட் டளவிலாக் காலம்
- தேடியும் காண்கிலாச் சிவமே
- மருட்பெரும் பகைதீர்த் தென்னைஆட் கொண்ட
- வள்ளலே தெள்ளிய அமுதே
- அருட்பெருஞ் சோதி அம்பலத் தரசே
- அம்மையே அப்பனே அபயம்.
- பொருட்பெருஞ் சுடர்செய் கலாந்தயோ காந்தம்
- புகன்றபோ தாந்த நாதாந்தம்
- தெருட்பெரு வேதாந் தம்திகழ் சித்தாந்
- தத்தினும் தித்திக்கும் தேனே
- மருட்பெரு இருளைத் தீர்த்தெனை வளர்க்கும்
- மாபெருங் கருணையா ரமுதே
- அருட்பெருஞ் சோதி அம்பலத் தரசே
- அம்மையே அப்பனே அபயம்.
- உணிக்கும் மூட்டுக்கும் கொதுகுக்கும் பேனுக்கும் உவப்புறப் பசிக்கின்றீர்
- துணிக்கும் காசுக்கும் சோற்றுக்கும் ஊர்தொறும் சுற்றிப்போய் அலைகின்றீர்
- பிணிக்கும் பீடைக்கும் உடலுளம் கொடுக்கின்றீர் பேதையீர் நல்லோர்கள்
- பணிக்கும் வேலைசெய் துண்டுடுத் தம்பலம் பரவுதற் கிசையீரே.
- பூவார் கொன்றைச் செஞ்சடை யாளர் புகழாளர்
- ஈவார் போல்வந் தென்மனை புக்கார் எழில்காட்டி
- தேவார் தில்லைச் சிற்சபை மேவும் திருவாளர்
- ஆவா என்றார் என்னடி அம்மா அவர்சூதே.
- இயங்காளி புலிகரடி எனப்பெயர்கேட் டுளம்நடுங்கி இருந்தேன் ஊரில்
- சயங்காளிக் கோயிலைக்கண் டஞ்சிமனம் தழுதழுத்துத் தளர்ந்தேன் இந்தப்
- பயங்காளிப் பயல்போலப் பயந்தவர்கள் எங்குளர்காண் பதியே என்னை
- வயங்காளில் ஒருவன்என நினையேல்கைப் பிள்ளைஎன மதித்தி டாயே.
- சிறுசெயலைச் செயும்உலகச் சிறுநடையோர் பலபுகலத் தினந்தோ றுந்தான்
- உறுசெயலை அறியாஇச் சிறுபயலைப் பிடித்தலைத்தல் உவப்போ கண்டாய்
- தெறுசெயலைத் தவிர்த்தெல்லாச் சித்தியும்பெற் றிடஅழியாத் தேகன் ஆகப்
- பெறுசெயலை எனக்களித்தே மறுசெயலைப் புரிகஎனைப் பெற்ற தேவே.
- அங்கே உன்றன் அன்பர்கள் எல்லாம் அமர்கின்றார்
- இங்கே நீதான் என்னள வின்னும் இரங்காயேல்
- எங்கே போகேன் யாரொடு நோகேன் எதுசெய்கேன்
- செங்கேழ் வேணித் திங்கள் அணிந்தருள் சிவனேயோ.
- கோது கொடுத்த மனச்சிறியேன் குற்றம் குணமாக் கொண்டேஇப்
- போது கொடுத்த நின்அருளாம் பொருளை நினைக்கும் போதெல்லாம்
- தாது கொடுத்த பெருங்களிப்பும் சாலா தென்றால் சாமிநினக்
- கேது கொடுப்பேன் கேட்பதன்முன் எல்லாம் கொடுக்க வல்லாயே.
- கன்றுடைய பசுப்போலே கசிந்துருகும் அன்பரெலாம் காணக் காட்டும்
- என்றுடைய நாயகனே எல்லாஞ்செய் வல்லவனே இலங்குஞ் சோதி
- மன்றுடைய மணவாளா மன்னவனே என்னிருகண் மணியே நின்னை
- அன்றுடையேன் இன்றுவிடேன் ஆணைஉன்மேல் ஆணைஉன்மேல் ஆணை ஐயா.
- திருநி லைத்துநல் அருளொடும் அன்பொடும் சிறப்பொடும் செழித்தோங்க
- உருநி லைத்திவண் மகிழ்வொடு வாழ்வுற உவந்துநின் அருள்செய்வாய்
- இருநி லத்தவர் இன்புறத் திருவருள் இயல்வடி வொடுமன்றில்
- குருநி லைத்தசற் குருஎனும் இறைவநின் குரைகழற் பதம்போற்றி.
- அருளா ரமுதே என்னுடைய அன்பே என்றன் அறிவேஎன்
- பொருளாய் அகத்தும் புறத்தும்என்னைப் புணர்ந்த கருணைப் பொருப்பேமெய்த்
- தெருளாம் ஒளியே வெளியாகச் சிற்றம் பலத்தே நடிக்கின்றோய்
- இருளா யினஎல் லாம்தவிர்த்தென் எண்ணம் முடிப்பாய் இப்போதே.
- பண்டு நின்திருப் பாதம லரையே
- பாடி யாடிய பத்திமை யோரைப்போல்
- தொண்டு கொண்டெனை ஆண்டனை இன்றுதான்
- துட்டன் என்றுது ரத்திடல் நன்றுகொல்
- குண்டு நீர்க்கடல் சூழுல கத்துளோர்
- குற்றம் ஆயிரங் கோடிசெய் தாலும்முன்
- கொண்டு பின்குலம் பேசுவ ரோஎனைக்
- குறிக்கொள் வாய்எண் குணந்திகழ் வள்ளலே.
- கொழுந்தேனும் செழும்பாகும் குலவுபசும் பாலும்
- கூட்டிஉண்டாற் போல்இனிக்குங் குணங்கொள்சடைக் கனியே
- தொழுந்தேவ மடந்தையர்க்கு மங்கலநாண் கழுத்தில்
- தோன்றவிடம் கழுத்தினுளே தோன்றநின்ற சுடரே
- எழுந்தேறும் அன்பருளத் தேற்றுதிரு விளக்கே
- என்உயிர்க்குத் துணையேஎன் இருகண்ணுள் மணியே
- அழுந்தேற அறியாதென் அவலநெஞ்சம் அந்தோ
- அபயம்உனக் கபயம்எனை ஆண்டருள்க விரைந்தே.
- போதோ விடிந்த தருளரசேஎன் பொருட்டுவந்தென்
- தாதோர் எழுமையும் நன்மையுற் றோங்கத் தருவதுதான்
- மாதோட நீக்கும் கனிரச மோவந்த வான்கனியின்
- கோதோ அறிந்திலன் யாதோ திருவுளம் கூறுகவே.
- மாதோர் புடைவைத்த மாமருந் தேமணி யேஎன் மட்டில்
- யாதோ திருவுளம் யானறி யேன்இதற் கென்னசெய்வேன்
- போதோ கழிகின்ற தந்தோநின் தன்னைப் பொருந்துகின்ற
- சூதோர் அணுவும் தெரியேன்நின் பாதத் துணைதுணையே.
- மதிக்களவா மணிமன்றில் திருநடஞ்செய் திருத்தாளை வழுத்தல் இன்று
- பதிக்களவா நலந்தருவல் என்றுநினை ஏத்துதற்குப் பணிக்கின் றேன்நீ
- விதிக்களவாச் சித்திகள்முன் காட்டுகஇங் கென்கின்றாய் விரைந்த நெஞ்சே
- பொதிக்களவா முன்னர்இங்கே சத்தத்துக் களவென்பார் போன்றாய் அன்றே.
- கலைவளர் முடிய தென்னைஆட் கொண்ட
- கருணையங் கண்ணது ஞான
- நிலைவளர் பொருள துலகெலாம் போற்ற
- நின்றது நிறைபெருஞ் சோதி
- மலைவளர் கின்றது அருள்வெளி நடுவே
- வயங்குவ தின்பமே மயமாய்த்
- தலைவளர் திருச்சிற் றம்பலந் தனிலே
- தனித்தெனக் கினித்ததோர் கனியே.
- சேய்போல் உலகத் துயிரைஎல் லாம்எண்ணிச் சேர்ந்துபெற்ற
- தாய்போல் உரைப்பர்சன் மார்க்கசங் கத்தவர் சாற்றும்எட்டிக்
- காய்போல் பிறர்தமைக் கண்டால் கசந்து கடுகடுத்தே
- நாய்போல் குரைப்பர்துன் மார்க்கசங் கத்தவர் நானிலத்தே.
- சிற்சபைக் கண்ணும் பொற்சபைக் கண்ணும்
- திருநடம் புரியும் திருநட ராஜ
- எனக்கருள் புரிந்த நினக்கடி யேன்கைம்
- மாற்றை அறிந்திலன் போற்றிநின் அருளே.
- உலகமெலாம் போற்ற ஒளிவடிவ னாகி
- இலகஅருள் செய்தான் இசைந்தே - திலகன்என
- நானேசன் மார்க்கம் நடத்துகின்றேன் நம்பெருமான்
- தானே எனக்குத் தனித்து.
- நாட்பாரில் அன்பரெலாம் நல்குகஎன் றேத்திநிற்ப
- ஆட்பாரில் அன்போர் அணுத்துணையும் இல்லேற்கே
- நீட்பாய் அருளமுதம் நீகொடுத்தாய் நின்னை இங்கே
- கேட்பார் இலைஎன்று கீழ்மேல தாக்கினையே.
- கருணை யாம்பெருங் கடல்அமு தளித்தனை எனக்கே
- தருண வாரிச மலர்ப்பதம் தந்தனை நின்னை
- அருண வண்ணஒண் சுடர்மணி மண்டபத் தடியேன்
- பொருள்ந யப்புறக் கண்டுகண் டுளமகிழ் போதே.
- அடிவிளங்கக் கனகசபைத் தனிநடனம் புரியும்
- அருட்சுடரே என்உயிருக் கானபெருந் துணையே
- துடிவிளங்கக் கரத்தேந்தும் சோதிமலை மருந்தே
- சொற்பதம்எல் லாம்கடந்த சிற்சொருபப் பொருளே
- பொடிவிளங்கத் திருமேனிப் புண்ணியனே ஞானப்
- போனகரைச் சிவிகையின்மேல் பொருந்தவைத்த புனிதா
- படிவிளங்கச் சிறியேன்நின் பதமலர்கண் டுவந்தேன்
- பரிவொழிந்தேன் அருட்செல்வம் பரிசெனப்பெற் றேனே.
- ஓங்கார அணைமீது நான்இருந்த தருணம்
- உவந்தெனது மணவாளர் சிவந்தவடி வகன்றே
- ஈங்காரப் பளிக்குவடி வெடுத்தெதிரே நின்றார்
- இருந்தருள்க எனஎழுந்தேன் எழுந்திருப்ப தென்நீ
- ஆங்காரம் ஒழிஎன்றார் ஒழிந்திருந்தேன் அப்போ
- தவர்நானோ நான்அவரோ அறிந்திலன்முன் குறிப்பை
- ஊங்கார இரண்டுருவும் ஒன்றானோம் அங்கே
- உறைந்தஅனு பவம்தோழி நிறைந்தபெரு வெளியே.
- சொல்லுகின்றேன் பற்பலநான் சொல்லுகின்ற வெல்லாம்
- துரிசலவே சூதலவே தூய்மையுடை யனவே
- வெல்லுகின்ற வார்த்தைஅன்றி வெறும்வார்த்தை என்வாய்
- விளம்பாதென் ஐயர்நின்று விளம்புகின்ற படியால்
- செல்லுகின்ற படியேநீ காண்பாய்இத் தினத்தே
- தேமொழிஅப் போதெனைநீ தெளிந்துகொள்வாய் கண்டாய்
- ஒல்லுகின்ற வகைஎல்லாம் சொல்லுகின்றே னடிநான்
- உண்மைஇது உண்மைஇது உண்மைஇது தானே.
- என்உடலும் என்உயிரும் என்பொருளும்
- நின்னஎன இசைந்தஞ் ஞான்றே
- உன்னிடைநான் கொடுத்தனன்மற் றென்னிடைவே
- றொன்றும்இலை உடையாய் இங்கே
- புன்னிகரேன் குற்றமெலாம் பொறுத்ததுவும்
- போதாமல் புணர்ந்து கொண்டே
- தன்னிகர்என் றெனவைத்தாய் இஞ்ஞான்றென்
- கொடுப்பேன்நின் தன்மைக் கந்தோ.
- ஆணை ஆணைநீ அஞ்சலை அஞ்சலை
- அருள்ஒளி தருகின்றாம்
- கோணை மாநிலத் தவரெலாம் நின்னையே
- குறிக்கொள்வர் நினக்கேஎம்
- ஆணை அம்பலத் தரசையும் அளித்தனம்
- வாழ்கநீ மகனேஎன்
- றேணை பெற்றிட எனக்கருள் புரிந்தநின்
- இணைமலர்ப் பதம்போற்றி.
- எல்லா உலகமும் என்வசம் ஆயின
- எல்லா உயிர்களும் என்உயிர் ஆயின
- எல்லா ஞானமும் என்ஞானம் ஆயின
- எல்லா வித்தையும் என்வித்தை ஆயின
- எல்லா போகமும் என்போகம் ஆயின
- எல்லாஇன்பமும் என்இன்பம் ஆயின
- எல்லாம் வல்லசிற் றம்பலத் தென்னப்பர்
- எல்லாம் நல்கிஎன் உள்ளத்துள் ளாரே.
- சன்மார்க்க சங்கத்தீர் சிற்றடியேன் உமது
- தாள்வணங்கிச் சாற்றுகின்றேன் தயவினொடும் கேட்பீர்
- என்மார்க்கத் தெனைநுமக்குள் ஒருவனெனக் கொள்வீர்
- எல்லாம்செய் வல்லநம திறைவனையே தொழுவீர்
- புன்மார்க்கத் தவர்போலே வேறுசில புகன்றே
- புந்திமயக் கடையாதீர் பூரணமெய்ச் சுகமாய்த்
- தன்மார்க்க மாய்விளங்கும் சுத்தசிவம் ஒன்றே
- தன்ஆணை என்ஆணை சார்ந்தறிமின் ஈண்டே.
- வாது பேசிய மனிதர் காள்ஒரு
- வார்த்தை கேண்மீன்கள் வந்துநும்
- போது போவதன் முன்ன ரேஅருட்
- பொதுவி லேநடம் போற்றுவீர்
- தீது பேசினீர் என்றி டாதுமைத்
- திருவு ளங்கொளும் காண்மினோ
- சூது பேசிலன் நன்மை சொல்கின்றேன்
- சுற்றம் என்பது பற்றியே.
- 346. இத்தலைப்பின் கீழ்த் தொகுக்கப்பெற்றுள்ள 161 பாக்களும் தனிப்பாடல்கள்.ஆறாந் திருமுறைக் காலத்தில் பல சமயங்களிற் பாடப் பெற்றவை. முன் பதிப்புகளில்இவை தனிப்பாடல்கள் என்ற தலைப்பில் ஆறாந் திருமுறையின் பிற்பகுதியில்உள்ளன. ஆ. பா. இவற்றைத் தனித்திருஅலங்கல், தனித்திருத் தொடை,தனித்திரு மாலை என மூன்று கூறாக்கி முறையே ஆறாந்திருமுறை முன், இடை,முடிந்த பகுதிகளின் ஈற்றில் வைத்துள்ளனர். இப்பதிப்பில் இவை ஒருவாறு பொருள்வரிசையில் முன் பின்னாக அமைக்கப்பெற்று இவண் வைக்கப்பட்டுள்ளன.
- 347. இஃதும் இதுபோன்று பின்வரும் சிறுதலைப்புகளும் யாம் இட்டவை.
- 348. பிரட்டறிவீர் - பொ. சு. பதிப்பு.
- 349. குழைக்கறியே - முதற்பதிப்பு., பொ. சு., பி. இரா., ச. மு. க.
- 350. வலப்பால் - முதற்பதிப்பு., பொ. சு. ச. மு. க.
- 351. தாழைப்பழம் - தேங்காய்.
- தனக்கு நிகரிங் கில்லா துயர்ந்த தம்பம் ஒன்ற தே
- தாவிப் போகப் போக நூலின் தரத்தில் நின்ற தே
- கனக்கத் திகைப்புற் றங்கே நானும் கலங்கி வருந்த வே
- கலக்கம் நீக்கித் தூக்கி வைத்தாய் நிலைபொ ருந்த வே.
- எனக்கும் உனக்கும்
- இங்கோர் மலையின் நடுவில் உயர்ந்த தம்பம் நணுக வே
- ஏறிப் போகப் போக நூலின் இழைபோல் நுணுக வே
- அங்கே திகைத்து நடுங்கும் போதென் நடுக்கம் நீக்கி யே
- அதன்மேல் உயர்ந்த நிலையில் வைத்தாய் அடிமை ஆக்கி யே.
- எனக்கும் உனக்கும்
- இரவில் பெரிய வெள்ளம் பரவி எங்கும் தயங்க வே
- யானும் சிலரும் படகில் ஏறி யேம யங்க வே
- விரவில் தனித்தங் கென்னை ஒருகல் மேட்டில் ஏற்றி யே
- விண்ணில் உயர்ந்த மாடத் திருக்க விதித்தாய் போற்றி யே.
- எனக்கும் உனக்கும்
- அரசே உன்னை அணைக்க எனக்குள் ஆசை பொங்கு தே
- அணைப்போம் என்னும் உண்மை யால்என் ஆவி தங்கு தே
- விரைசேர் பாதம் பிடிக்க என்கை விரைந்து நீளு தே
- மேவிப் பிடித்துக் கொள்ளுந் தோறும் உவகை ஆளு தே.
- எனக்கும் உனக்கும்
- உன்பே ரருளை நினைக்குந் தோறும் உடம்பு பொடிக்கு தே
- உண்டு பசிதீர்ந் தாற்போல் காதல் மிகவும் தடிக்கு தே
- அன்பே அமையும் என்ற பெரியர் வார்த்தை போயிற் றே
- அன்போர் அணுவும் இல்லா எனக்கிங் கருளல் ஆயிற் றே.
- எனக்கும் உனக்கும்
- ஏறா நிலையில் விரைந்து விரைந்திங் கென்னை ஏற்றி யே
- இறங்கா திறங்கும் படிகள் முழுதும் எடுத்தாய் போற்றி யே
- மாறாக் கருணை என்மேல் வைக்க வந்த தென்னை யோ
- மதியி லேன்நின் அருட்குச் செய்த தவந்தான் முன்னை யோ.
- எனக்கும் உனக்கும்
- கருணா நிதிநின் தன்னைக் காணக் கண்கள் துடிக்கு தே
- காண்போம் என்று நினைக்குந் தோறும் உடம்பு பொடிக்கு தே
- அருள்நா டகஞ்செய் பதங்கள் பாடி ஆட விரைவ தே
- ஆடும் பொதுவை நினைக்க நினைக்க நெஞ்சம் கரைவ தே.
- எனக்கும் உனக்கும்
- வேதா கமங்கள் புகன்ற விரிவை ஒன்றொன் றாக வே
- விளங்க விரைந்து தெரித்தாய் பயிலும் ஆசை போக வே
- பூதா திகளைப் பொருத்தும் பகுதிப் பொருத்தம் முற்று மே
- பொய்மை நீக்கிக் காணக் காட்டித் தெரித்தாய் மற்று மே.
- எனக்கும் உனக்கும்
- இறைவா நின்னைக் கனவி லேனும் யான்ம றப்ப னோ
- எந்தாய் உலகத் தவர்கள் போல்நான் இனி இறப்ப னோ
- மறைவா சகமும் பொருளும் பயனும் மதிக்கும் மதியி லே
- வாய்க்கக் கருணை புரிந்து வைத்தாய் உயர்ந்த பதியி லே.
- எனக்கும் உனக்கும்
- தலைவா எனக்குக் கருணை அமுதம் தரஇத் தலத்தி லே
- தவம்செய் தேன்அத் தவமும் உன்றன் அருள்வ லத்தி லே
- அலைவா ரிதியில் துரும்பு போல அயனும் மாலு மே
- அலைய எனக்கே அளிக்கின் றாய்நீ மேலும் மேலு மே.
- எனக்கும் உனக்கும்
- உடையாய் எனக்குப் புரிந்த தயவை உன்ன உன்ன வே
- உடம்பு பூரிக் கின்ற தொளிர்பொன் மலைய தென்ன வே
- தடையா தினிஉள் மூல மலத்தின் தடையும் போயிற் றே
- சமய விகற்பம் எல்லாம் நீங்கிச் சமம தாயிற் றே.
- எனக்கும் உனக்கும்
- எனக்கும் நின்னைப் போல நுதற்கண் ஈந்துமதனை யே
- எரிப்பித் தாய்பின் எழுப்பிக் கொடுத்தாய் அருவ மதனை யே
- சினக்குங் கூற்றை உதைப்பித் தொழித்துச் சிதைவு மாற்றி யே
- தேவர் கற்பம் பலவும் காணச் செய்தாய் போற்றி யே.
- எனக்கும் உனக்கும்
- பூத வெளியின் நடமும் பகுதி வெளியின் ஆட்ட மும்
- போக வெளியில் கூத்தும் யோக வெளியுள் ஆட்ட மும்
- நாத வெளியில் குனிப்பும் பரம நாத நடமு மே
- நன்று காட்டிக் கொடுத்தாய் என்றும் நலியாத் திடமு மே.
- எனக்கும் உனக்கும்
- அருளாம் பெரிய வெளிக்குள் சோதி வடிவ னாகி யே
- அரசு செலுத்தும் தனித்த தலைமைப் பரம யோகி யே
- பொருளாய் எனையும் உளங்கொண் டளித்த புனித நாத னே
- போற்று நாத முடிவில் நடஞ்செய் கமல பாத னே.
- எனக்கும் உனக்கும்
- இறுகப் பிடித்துக் கொண்டேன் பதத்தை இனிநான் விடுவ னோ
- எந்தாய் பாதம் பிடித்த கையால் வேறு தொடுவ னோ
- குறுகப் பயந்து கூற்றும் ஓடிக் குலைந்து போயிற் றே
- கோவே உன்றன் அருட்சிற் சோதி என்ன தாயிற் றே.
- எனக்கும் உனக்கும்
- சாதல் பிறத்தல் என்னும் அவத்தைத் தவிர்த்துக் காலை யே
- தனித்துன் அருளின் அமுதம் புகட்டிக் கொடுத்தாய் மேலை யே
- ஓதல் உணர்தல் உவத்தல் எனக்கு நின்பொற் பாத மே
- உலக விடயக் காட்டில் செல்லா தெனது போத மே.
- எனக்கும் உனக்கும்
- தாங்கல் விடுதல் இரண்டும் எனக்குச் சமம தாயிற் றே
- சகத்தில் வழங்கும் மாயை வழக்குத் தவிர்ந்து போயிற் றே
- ஏங்கல் சலித்தல் இரண்டும் இன்றி இளைப்பு நீங்கி னேன்
- எந்தாய் கருணை அமுதுண் டின்பப் பொருப்பில் ஓங்கி னேன்.
- எனக்கும் உனக்கும்
- உறவு பகைஎன் றிரண்டும் எனக்கிங் கொன்ற தாயிற் றே
- ஒன்றென் றிரண்டென் றுளறும் பேதம் ஓடிப் போயிற் றே
- மறவு நினைவென் றென்னை வலித்த வலிப்பு நீங்கி னேன்
- மன்றில் பரமா னந்த நடங்கண் டின்பம் ஓங்கி னேன்.
- எனக்கும் உனக்கும்
- அயனும் மாலும் தேடித் தேடி அலந்து போயி னார்
- அந்தோ இவன்முன் செய்த தவம்யா தென்ப ராயி னார்
- மயனும் கருத மாட்டாத் தவள மாடத் துச்சி யே
- வயங்கும் அணைமேல் வைத்தாய் சிறிய நாயை மெச்சி யே.
- எனக்கும் உனக்கும்
- புழுவில் புழுத்த புழுவும் நிகரப் போதா நாயி னேன்
- பொதுவில் நடிக்கும் தலைவ நினக்கே அடிமை ஆயி னேன்
- தழுவற் கரிய பெரிய துரியத் தம்பத் தேறி னேன்
- தனித்தப் பாலோர் தவள மாடத் திருந்து தேறி னேன்.
- எனக்கும் உனக்கும்
- ஐவ ராலும் நின்னை அறிதற் கருமை அருமை யே
- ஆரே அறிவர் மறையும் அறியா நினது பெருமை யே
- பொய்வ ராத வாய்கொண் டுன்னைப் போற்றும் அன்ப ரே
- பொருளே நின்னை அறிவர் அவரே அழியா இன்ப ரே.
- எனக்கும் உனக்கும்
- அண்ட கோடி அனைத்தும் காணும் கண்கள் எய்தி யே
- அறிந்தேன் அங்கைக் கனிபோல் அவற்றில் உள்ள செய்தி யே
- பிண்ட கோடி முழுதும்காணப் பெற்று நின்னை யே
- பேசிப் பேசி வியக்கின் றேன்இப் பிறவி தன்னை யே.
- எனக்கும் உனக்கும்
- சுத்த சிவசன் மார்க்க நீதிச் சோதி போற்றி யே
- சுகவாழ் வளித்த சிற்றம் பலத்துச் சோதி போற்றி யே
- சுத்த சுடர்ப்பொற் சபையில் ஆடும் சோதி போற்றி யே
- சோதி முழுதும் விளங்க விளங்கும் சோதி போற்றி யே.
- ஆதிஅ னாதிஎன் றாரணம் போற்றும்
- அரும்பெருஞ் ஜோதியீர் வாரீர்
- ஆனந்த நாடரே வாரீர். வாரீர்
- ஆபத்தை நீக்கிஓர் தீபத்தை ஏற்றிஎன்
- ஆணவம் போக்கினீர் வாரீர்
- காணவந் தேன்இங்கு வாரீர். வாரீர்
- இங்கங்கென் னாமலே எள்ளுக்குள் எண்ணெய்போல்
- எங்கும் நிறைந்தீரே வாரீர்
- இந்தெழில் வண்ணரே வாரீர். வாரீர்
- ஈசர் எனும்பல தேசர்கள் போற்றும்ந
- டேசரே நீர்இங்கு வாரீர்
- நேசரே நீர்இங்கு வாரீர். வாரீர்
- உறங்கி இறங்கும் உலகவர் போலநான்
- உறங்கமாட் டேன்இங்கு வாரீர்
- இறங்கமாட் டேன்இங்கு வாரீர். வாரீர்
- ஊக மிலேன்பெற்ற தேகம் அழியாத
- யோகம் கொடுத்தீரே வாரீர்
- போகம் கொடுத்தீரே வாரீர். வாரீர்
- ஐவணங் காட்டுநும் மெய்வணம் வேட்டுநின்
- றைவணர் ஏத்துவீர் வாரீர்
- பொய்வணம் போக்குவீர் வாரீர். வாரீர்
- சாதிமதந் தவிர்த்தவரே அணையவா ரீர்
- தனித்தலைமைப் பெரும்பதியீர் அணையவா ரீர்
- ஆதியந்தம் இல்லவரே அணையவா ரீர்
- ஆரணங்கள் போற்றநின்றீர் அணையவா ரீர்
- ஓதியுணர் வரியவரே அணையவா ரீர்
- உள்ளபடி உரைத்தவரே அணையவா ரீர்
- ஈதிசைந்த தருணமிங்கே அணையவா ரீர்
- என்னுடைய நாயகரே அணையவா ரீர். அணையவா ரீர்
- திருவாளர் போற்ற என்னோ டாடவா ரீர்
- திருவனையார் வாழ்த்தஇங்கே ஆடவா ரீர்
- பெருவாய்மைப் பெருந்தகையீர் ஆடவா ரீர்
- பேராசை பொங்குகின்றேன் ஆடவா ரீர்
- உருவாகி ஓங்குகின்றீர் ஆடவா ரீர்
- உத்தமரே இதுதருணம் ஆடவா ரீர்
- இருவாணர் ஏத்தநின்றீர் ஆடவா ரீர்
- என்னுடைய நாயகரே ஆடவா ரீர். ஆடவா ரீர்
- ஆசைகொண்டேன் ஆடஎன்னோ டாடவா ரீர்
- ஆசைவெட்கம் அறியாதால் ஆடவா ரீர்
- ஓசைகொண்ட தெங்குமிங்கே ஆடவா ரீர்
- உம்ஆணை உம்மைவிடேன் ஆடவா ரீர்
- காசுபணத் தாசையிலேன் ஆடவா ரீர்
- கைபிடித்தாற் போதும்என்னோ டாடவா ரீர்
- ஏசறல்நீத் தெனைஆண்டீர் ஆடவா ரீர்
- என்னுடைய நாயகரே ஆடவா ரீர். ஆடவா ரீர்
- இசையாமல் போனவர் எல்லாரும் நாண
- இறவாப் பெருவரம் யான்பெற்றுக் கொண்டேன்
- வசையாதும் இல்லாத மேற்றிசை நோக்கி
- வந்தேன்என் தோழிநீ வாழிகாண் வேறு
- நசையாதே என்னுடை நண்பது வேண்டில்
- நன்மார்க்க மாம்சுத்த சன்மார்க்கம் தன்னில்
- அசையாமல் நின்றங்கே ஆடேடி பந்து
- அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி
- சதுமறை335 ஆகம சாத்திரம் எல்லாம்
- சந்தைப் படிப்புநம் சொந்தப் படிப்போ
- விதுநெறி சுத்தசன் மார்க்கத்தில் சாகா
- வித்தையைக் கற்றனன் உத்தரம் எனுமோர்
- பொதுவளர் திசைநோக்கி வந்தனன் என்றும்
- பொன்றாமை வேண்டிடில் என்தோழி நீதான்
- அதுஇது என்னாமல் ஆடேடி பந்து
- அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி
- தப்பாலே சகத்தவர் சாவே துணிந்தார்
- தாமுளம் நாணநான் சாதலைத் தவிர்த்தே
- எப்பாலும் எக்காலும் இருத்தலே பெற்றேன்
- என்தோழி வாழிநீ என்னொடு கூடி
- துப்பாலே விளங்கிய சுத்தசன் மார்க்கச்
- சோதிஎன் றோதிய வீதியை விட்டே
- அப்பாலே போகாமல் ஆடேடி பந்து
- அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி
- சிவமே பொருள்என் றறிவால் அறிந்தேன்
- செத்தாரை மீட்கின்ற திண்மையைப் பெற்றேன்
- உவமேயம் இல்லாத ஒருநிலை தன்னில்
- ஒன்றிரண் டென்னாத உண்மையில் நின்றேன்
- தவமே புரிகின்றார் எல்லாரும் காணத்
- தயவால் அழைக்கின்றேன் கயவாதே தோழி
- அவமேபோ காதென்னோ டாடேடி பந்து
- அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி
- ஈரமும் அன்பும்கொண் டின்னருள் பெற்றேன்
- என்மார்க்கம் இறவாத சன்மார்க்கம் தோழி
- காரமும் மிகுபுளிச் சாரமும் துவர்ப்பும்
- கைப்போடே உப்போடே கசப்போடே கூட்டி
- ஊரமு துண்டுநீ ஒழியாதே அந்தோ
- ஊழிதோ றூழியும் உலவாமை நல்கும்
- ஆரமு துண்டென்னோ டாடேடி பந்து
- அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி
- அருட்பெருஞ் சோதி மருந்து - என்னை
- ஐந்தொழில் செய்தற் களித்த மருந்து
- பொருட்பெரும் போக மருந்து - என்னைப்
- புறத்தும் அகத்தும் புணர்ந்த மருந்து. ஞான
- நாதாந்த நாட்டு மருந்து - பர
- ஞான வெளியில் நடிக்கு மருந்து
- போதாந்தர்க் கெய்து மருந்து - என்னுள்
- பொன்னடி காட்டிப் புணர்ந்த மருந்து. ஞான
- கற்பூர ஜோதி மருந்து - பசுங்
- கற்பூர நன்மணங் காட்டு மருந்து
- பொற்பூவின் ஓங்கு மருந்து - என்தற்
- போதம் தவிர்த்தசிற் போத மருந்து. ஞான
- தன்னை அளித்த மருந்து - என்றும்
- சாகாத நல்வரம் தந்த மருந்து
- பொன்னடி ஈந்த மருந்து - அருட்
- போனகம் தந்த புனித மருந்து. ஞான
- ஐம்புல மும்தானாம் ஜோதி - புலத்
- தகத்தும் புறத்து மலர்ந்தொளிர் ஜோதி
- பொய்ம்மயல் போக்கும்உள் ஜோதி - மற்றைப்
- பொறிபுலன் உள்ளும் புறத்துமாம் ஜோதி. சிவசிவ
- வஞ்சமி லார்நாம்293 வருந்திடில் அப்போதே
- அஞ்சலென் பார்இதோ அம்பலத் திருக்கின்றார் அஞ்சா தே
- கோபமும் காமமும் குடிகெட்டுப் போயிற்று
- கொடியஓர் ஆங்காரம் பொடிப்பொடி ஆயிற்று
- தாபமும் சோபமும் தான்தானே சென்றது
- தத்துவம் எல்லாம்என் றன்வசம் நின்றது. இதுநல்ல
- பொருள்நான் முகனுமாலும் தெருள்நான்ம றையுநாளும்
- போற்றும்சிற் றம்பலத்தே ஏற்றும ணிவிளக்காய்
- அருள்நாட கம்புரியும் கருணாநி தியர்உன்னை
- ஆளவந்தார் வந்தார்என்றெக் காளநாதம் சொல்கின்றதே. என்ன
- பாடியநல் லோர்தமக்கே நாடியதெல் லாம்அளிப்பார்
- பத்திவலை யுட்படுவார் சத்தியர்நித் தியர்மன்றில்
- ஆடியபொற் பாதர்வேதம் தேடியசிற் போதர்உன்னை
- அணையவந்தார் வந்தார்என்றே இணையில்நாதம் சொல்கின்றதே. என்ன
- திருவார்பொன் னம்பலத்தே செழிக்குங்குஞ் சிதபாதர்
- சிவசிதம் பரபோதர் தெய்வச் சபாநாதர் வருவார்
- மெல்லியல் சிவகாம வல்லி யுடன்களித்து
- விளையா டவும்எங்கள் வினைஓ டவும்ஒளித்து
- எல்லையில் இன்பந்தரவும் நல்லசம யந்தானிது
- இங்குமங்கும் நடமாடி இருக்கலாம் என்றபோது
- வருவார ழைத்துவாடி வடலூர் வடதிசைக்கே
- வந்தாற் பெறலாம்நல்ல வரமே.
- அன்றிதோ வருகின்றேன் என்று போனவர்அங்கே
- யார்செய்த தடையாலோ இருந்தார்என் கையிற்சங்கை
- இன்றுதம் கையிற்கொண்டே வந்துநிற் கின்றார்இங்கே
- இந்தக் கதவைமூடு இவர்போவ தினிஎங்கே. இவர்க்கும்
- அவரவர் உலகத்தே அறிந்தலர் தூற்றப்பட்டேன்
- அன்றுபோ னவர்இன்று வந்துநிற் கின்றார்கெட்டேன்
- இவர்சூதை அறியாதே முன்னம் ஏமாந்துவிட்டேன்
- இந்தக் கதவைமூடு இனிஎங்கும் போகஒட்டேன். இவர்க்கும்
- சின்ன வயதில்என்னைச் சேர்ந்தார்புன் னகையோடு
- சென்றார் தயவால்இன்று வந்தார் இவர்க்கார்ஈடு
- என்னைவிட் டினிஇவர் எப்படிப் போவார்ஓடு
- இந்தக் கதவைமூடு இரட்டைத்தாட் கோலைப்போடு. இவர்க்கும்
- எச்சம யத்தும் இலங்கிய பாதம்
- எள்ளுக்குள் எண்ணெய்போல் எங்குமாம் பாதம்
- அச்சம் தவிர்த்தென்னை ஆட்கொண்ட பாதம்
- ஆனந்த நாட்டுக் கதிபதி பாதம். ஆடிய
- அருட்பெருஞ் ஜோதிய தாகிய பாதம்
- அம்மையும் அப்பனும் ஆகிய பாதம்
- பொருட்பெரும் போகம் புணர்த்திய பாதம்
- பொன்வண்ண மாகிய புண்ணிய பாதம். ஆடிய
- நாரண னாதியர் நாடரும் பாதம்
- நான்தவத் தாற்பெற்ற நற்றுணைப் பாதம்
- ஆரணம் ஆகமம் போற்றிய பாதம்
- ஆசைவிட் டார்க்கே அணிமையாம் பாதம். ஆடிய
- எண்ணிய எண்ணங்கள் எல்லா முடிக்குநம்
- புண்ணிய னார்தெய்வப் பொன்னடிப் போதுக்கே அபயம்
- மன்னம் பரத்தே வடிவில் வடிவாகிப்
- பொன்னம் பலத்தாடும் பொன்னடிப் போதுக்கே அபயம்
- நாத முடியில்297 நடம்புரிந் தன்பர்க்குப்
- போதம் அளிக்கின்ற பொன்னடிப் போதுக்கே அபயம்
- உச்சி தாழ்கின்ற உறவோர் உறவான
- சச்சி தானந்தத் தனிநடப் போதுக்கே அபயம்
- சித்தமும் உள்ளமும் தித்தித் தினிக்கின்ற
- புத்தமு தாகிய பொன்னடிப் போதுக்கே அபயம்
- புறங்கூறி னாரெல்லாம் புல்லெனப் போயினர்
- பொற்படிக் கீழ்ப்புற மீளவு மேயினர்
- மறங்கூறி னோம்என்செய் வோம்என்று கூயினர்
- வாழிய என்றுசொல் வாயினர் ஆயினர் அற்புதம்
- பொற்றம்பம் கண்டேறும் போதுநான் கண்ட
- புதுமைஎன் சொல்வன டி - அம்மா
- புதுமைஎன் சொல்வன டி. ஆணி
- ஏறும்போ தங்கே எதிர்ந்த வகைசொல
- என்னள வல்லவ டி - அம்மா
- என்னள வல்லவ டி. ஆணி
- சிற்சபையும் பொற்சபையும் சொந்தமென தாச்சு
- தேவர்களும் மூவர்களும் பேசுவதென் பேச்சு
- இற்சமய வாழ்வில்எனக் கென்னைஇனி ஏச்சு
- என்பிறப்புத் துன்பமெலாம் இன்றோடே போச்சு.
- ஐயர்அருட் சோதியர சாட்சிஎன தாச்சு
- ஆரணமும் ஆகமமும் பேசுவதென் பேச்சு
- எய்யுலக வாழ்வில்எனக் கென்னைஇனி ஏச்சு
- என்பிறவித் துன்பமெலாம் இன்றோடே போச்சு.
- துரியமலைமேல்உளதோர் சோதிவள நாடு
- தோன்றும்அதில் ஐயர்நடம் செய்யுமணி வீடு
- தெரியும்அது கண்டவர்கள் காணில்உயி ரோடு
- செத்தவர் எழுவார்என்று கைத்தாளம் போடு.
- சொல்லால் அளப்பரிய சோதிவரை மீது
- தூயதுரி யப்பதியில் நேயமறை ஓது
- எல்லாம்செய் வல்லசித்தர் தம்மைஉறும் போது
- இறந்தார்எழுவாரென்றுபுறந்தாரைஊது.
- சிற்பொதுவும் பொற்பொதுவும் நான்அறிய லாச்சு
- சித்தர்களும் முத்தர்களும் பேசுவதென் பேச்சு
- இற்பகரும்345 இவ்வுலகில் என்னைஇனி ஏச்சு
- என்பிறவித் துன்பமெலாம் இன்றோடே போச்சு.
- சிவசிவ சிவசிவ தத்துவ போதா
- சிவகுரு பரசிவ சண்முக நாதா.
- அந்தண அங்கண அம்பர போகா
- அம்பல நம்பர அம்பிகை பாகா.
- ஆனந்த நாடகம் கண்டோ மே - பர
- மானந்த போனகம் கொண்டோ மே.
- சபாபதி பாதம் தபோப்ர சாதம்
- தயாநிதி போதம் சதோதய வேதம்.
- போதாந்த புரேச சிவாகம
- நாதாந்த நடேச நமோநம.
- சிவஞானப தாடக நாடக
- சிவபோதப ரோகள கூடக.
- சத்வ போதக தாரண தன்மய
- சத்ய வேதக பூரண சின்மய.
- அம்போ ருகபத அரகர கங்கர
- சம்போ சிவசிவ சிவசிவ சங்கர.
- புத்தம்தரும் போதா வித்தம்தரும் தாதா
- நித்தம்தரும் பாதா சித்தம்திரும் பாதா.
- போகம் சுகபோகம் சிவபோகம் அதுநித்தியம்
- ஏகம் சிவம்ஏகம் சிவம்ஏகம் இதுசத்தியம்.
- அஞ்சோடஞ்சவை ஏலாதே அங்கோடிங்கெனல் ஆகாதே
- அந்தோவெந்துயர் சேராதே அஞ்சோகஞ்சுகம் ஓவாதே
- தஞ்சோபம்கொலை சாராதே சந்தோடம்சிவ மாம்ஈதே
- சம்போசங்கர மாதேவா சம்போசங்கர மாதேவா.
- எந்தாய் என்றிடில் இந்தா நம்பதம் என்றீ யும்பர மன்றா டும்பத
- என்றோ டிந்தன நன்றா மங்கண வெங்கோ மங்கள வெஞ்சா நெஞ்சக
- சந்தே கங்கெட நந்தா மந்திர சந்தோ டம்பெற வந்தா ளந்தண
- சம்போ சங்கர சம்போ சங்கர சம்போ சங்கர சம்போ சங்கர.
- நஞ்சோ என்றிடு நங்கோ பங்கெட நன்றே தந்தனை நந்தா மந்தண
- நம்பா நெஞ்சில் நிரம்பா நம்பர நம்பா நம்பதி யம்பா தம்பதி
- தஞ்சோ வென்றவர் தஞ்சோ பந்தெறு தந்தா வந்தன நுந்தாள் தந்திடு
- சம்போ சங்கர சம்போ சங்கர சம்போ சங்கர சம்போ சங்கர.
- சிவஞான நிலையே சிவயோக நிறைவே
- சிவபோக உருவே சிவமான உணர்வே
- நவநீத மதியே நவநாத கதியே
- நடராஜ பதியே நடராஜ பதியே.
- துதிவேத உறவே சுகபோத நறவே
- துனிதீரும் இடமே தனிஞான நடமே
- நதியார நிதியே அதிகார பதியே
- நடராஜ குருவே நடராஜ குருவே.
- நீடிய வேதம் தேடிய பாதம்
- நேடிய கீதம் பாடிய பாதம்
- ஆடிய போதம் கூடிய பாதம்
- ஆடிய பாதம் ஆடிய பாதம்.
- சாக்கிய வேதம் தேக்கிய பாதம்
- தாக்கிய ஏதம் போக்கிய பாதம்
- சோக்கிய வாதம் ஆக்கிய பாதம்
- தூக்கிய பாதம் தூக்கிய பாதம்.
- வேத சிகாமணியே போத சுகோதயமே
- மேதகு மாபொருளே ஓதரும் ஓர்நிலையே
- நாத பராபரமே சூத பராவமுதே
- ஞான சபாபதியே ஞான சபாபதியே.
- ஆகம போதகமே யாதர வேதகமே
- ஆமய மோசனமே ஆரமு தாகரமே
- நாக நடோதயமே நாத புரோதயமே
- ஞான சபாபதியே ஞான சபாபதியே.
- கண்கலந்த கணவர்எனைக் கைகலந்த தருணம்
- கண்டறியேன் என்னையும்என் கரணங்கள் தனையும்
- எண்கலந்த போகம்எலாம் சிவபோகம் தனில்ஓர்
- இறைஅளவென் றுரைக்கின்ற மறைஅளவின் றறிந்தேன்
- விண்கலந்த திருவாளர் உயிர்கலந்த தருணம்
- வினைத்துயர்தீர்ந் தடைந்தசுகம் நினைத்திடுந்தோ றெல்லாம்
- உண்கலந்த ஆனந்தப் பெரும்போகம் அப்போ
- துற்றதென எனைவிழுங்கக் கற்றதுகாண் தோழி.
- கற்பூரம் மணக்கின்ற தென்னுடம்பு முழுதும்
- கணவர்திரு மேனியிலே கலந்தமணம் அதுதான்
- இற்பூத மணம்போலே மறைவதன்று கண்டாய்
- இயற்கைமணம் துரியநிறை இறைவடிவத் துளதே
- பொற்பூவும் நறுமணமும் கண்டறியார் உலகர்
- புண்ணியனார் திருவடிவில் நண்ணியவா றதுவே
- நற்பூதி அணிந்ததிரு வடிவுமுற்றும் தோழி
- நான்கண்டேன் நான்புணர்ந்தேன் நான்அதுஆ னேனே.
- கள்ளுண்டாள் எனப்புகன்றார் கனகசபை நடுவே
- கண்டதுண்டு சிற்சபையில் உண்டதும்உண் டடிநான்
- எள்ளுண்ட பலவிடயத் திறங்குங்கள் அன்றே
- என்றும்இற வாநிலையில் இருத்துங்கள் உலகர்
- உள்ளுண்ட போதுமயக் குற்றிடுங்கள் அலவே
- உள்ளமயக் கனைத்தினையும் ஒழித்திடுங்கள் மடவாய்
- அள்ளுண்ட பிறரும்எனை அடுத்தடுத்துக் கண்டால்
- அறிவுதரும் அவர்க்கும்இங்கே யான்உண்ட கள்ளே.
- மனைஅணைந்து மலர்அணைமேல் எனைஅணைந்த போது
- மணவாளர் வடிவென்றும் எனதுவடி வென்றும்
- தனைநினைந்து பிரித்தறிந்த தில்லையடி எனைத்தான்
- சற்றுமறி யேன்எனில்யான் மற்றறிவ தென்னே
- தினைஅளவா யினும்விகற்ப உணர்ச்சிஎன்ப திலையே
- திருவாளர் கலந்தபடி செப்புவதெப் படியோ
- உனைஅணைந்தால் இவ்வாறு நான்கேட்பேன் அப்போ
- துன்னறிவும் என்னறிவும் ஓரறிவாம் காணே.
- தந்தைஎன்றாய் மகன்என்றாய் மணவாளன் என்றாய்
- தகுமோஇங் கிதுஎன்ன வினவுதியோ மடவாய்
- சிந்தைசெய்து காணடிநீ சிற்சபையில் நடிக்கும்
- திருவாளர் எனைப்புணர்ந்த திருக்கணவர் அவர்தம்
- அந்தநடு முதலில்லா அரும்பெருஞ்சோ தியதே
- அண்டசரா சரங்கள்எலாம் கண்டதுவே றிலையே
- எந்தவகை பொய்புகல்வேன் மற்றையர்போல் அம்மா
- வீறுமவர்369 திருமேனி நானும்என அறியே.
- என்கணவர் பெருந்தன்மை ஆறந்த நிலைக்கே
- எட்டிநின்று பார்ப்பவர்க்கும் எட்டாதே தோழி
- பொன்கணவர் கலைமடந்தை தன்கணவர் முதலோர்
- புனைந்துரைக்கும் கதைபோல நினைந்துரைக்கப் படுமோ
- புன்கணவர் அறியாதே புலம்புகின்றார் அவர்போல்
- புகல்மறையும் ஆகமமும் புலம்புகின்ற தம்மா
- உன்கணவர் திறம்புகல்என் றுரைக்கின்றாய் நீதான்
- உத்தமனார் அருட்சோதி பெற்றிடமுன் விரும்பே.
- ஈங்குசிலர் உண்ணுகஎன் றென்னைஅழைக் கின்றார்
- என்தோழி நான்இவர்கட் கென்புகல்வேன் அம்மா
- ஓங்குநிலா மண்டபத்தே என்கணவ ருடனே
- உவட்டாத தெள்ளமுதம் உண்டுபசி தீர்ந்தேன்
- தேங்குழல்இங் கினிஎனக்குப் பசிவரில்அப் போது
- செப்புகின்றேன் இப்போது சிலுகிழைத்தல் வேண்டா
- ஏங்கல்அற நீஅவர்க்குத் தெளிவிப்பாய் மற்றை
- இருந்தவரும் விருந்தவரும் இனிதுபுசித் திடற்கே.
- தன்வடிவம் தானாகும் திருச்சிற்றம் பலத்தே
- தனிநடஞ்செய் பெருந்தலைவர் பொற்சபைஎங் கணவர்
- பொன்வடிவம் இருந்தவண்ணம் நினைத்திடும்போ தெல்லாம்
- புகலரும்பே ரானந்த போகவெள்ளம் ததும்பி
- என்வடிவில் பொங்குகின்ற தம்மாஎன் உள்ளம்
- இருந்தபடி என்புகல்வேன் என்அளவன் றதுதான்
- முன்வடிவம் கரைந்தினிய சர்க்கரையும் தேனும்
- முக்கனியும் கூட்டிஉண்ட பக்கமும்சா லாதே.
- இவ்வுலகில் எனைப்போல்வார் ஓர்அனந்தம் கோடி
- என்னில்உயர்ந் திருக்கின்றார் எத்தனையோ கோடி
- அவ்வுலகில் சிறந்துநின்றார் அளவிறந்த கோடி
- அத்தனைபேர் களும்அந்தோ நித்தம்வருந் திடவும்
- எவ்வுலகும் உணர்வரிய திருச்சிற்றம் பலத்தே
- இனிதமர்ந்த தலைவர்இங்கே என்னைமணம் புரிந்தார்
- நவ்விவிழி மடமாதே கீழ்மேல்என் பதுதான்
- நாதர்திரு அருட்சோதி நாடுவதொன் றிலையே.
- செம்பவளத் திருமலையோ மாணிக்க விளக்கோ
- தெய்வமர கதத்திரளோ செழுநீலப் பொருப்போ
- பம்புமணி ஒளியோநற் பசும்பொன்னின் சுடரோ
- படிகவண்ணப் பெருங்காட்சி தானோஎன் றுணர்ந்தே
- எம்பரமன் றெம்பெருமான் புறவண்ணம் யாதோ
- என்பாரேல் அகவண்ணம் யார்உரைக்க வல்லார்
- தம்பரமென் றென்னைஅன்று மணம்புரிந்தார் ஞான
- சபைத்தலைவர் அவர்வண்ணம் சாற்றுவதென் தோழி.
- வெடித்தளிந்த முக்கனியின் வடித்தரசந் தனிலே
- விரும்புறஉட் பிழிந்தெடுத்த கரும்பிரதம் கலந்த
- தடித்தசெழும் பாற்பெய்து கோற்றேன்விட் டதனைத்
- தனித்தபர அமுதத்தில் தான்கலந்துண் டாற்போல்
- இடித்திடித்தென் உளமுழுதும் தித்திக்கும் வார்த்தை
- இனிதுரைத்து மணம்புரிந்த என்னுயிர்நா யகர்வான்
- பொடித்திருமே னியர்அவரைப் புணரவல்லேன் அவர்தம்
- புகழ்உரைக்க வல்லேனோ அல்லேன்காண் தோழீ.
- கன்னிஎனை மணந்தபதி கனிதருசிற் சபைக்கே
- கலந்ததனிப் பதிவயங்கு கனகசபா பதிவான்
- பன்னியருக் கருள்புரிந்த பதிஉலக மெல்லாம்
- படைத்தபதி காத்தருளும் பசுபதிஎவ் வுயிர்க்கும்
- அன்னியம்அல் லாதகத்தும் புறத்தும்அகப் புறத்தும்
- அருட்செங்கோல் செலுத்துகின்ற அதிபதியாம் அதனால்
- என்னியல்போல் பிறர்இயலை எண்ணியிடேல் பிறரோ
- என்பதிபால் அன்பதிலார் அன்புளரேல் எண்ணே.
- என்னியல்போல் பிறர்இயலை எண்ணேல்என் றுரைத்தேன்
- இறுமாப்பால் உரைத்தனன்என் றெண்ணியிடேல் மடவாய்
- பன்னியநான் என்பதியின் பற்றலது வேறோர்
- பற்றறியேன் உற்றவரும் மற்றவரும் பொருளும்
- உன்னியஎன் உயிரும்என துடலும்என துணர்வும்
- உயிர்உணர்வால் அடைசுகமும் திருச்சிற்றம் பலத்தே
- மன்னியதா தலில்நான்பெண் மகளும்அலேன் வரும்ஆண்
- மகனும்அலேன் அலியும்அலேன் இதுகுறித்தென் றறியே.
- நாதாந்த வரையும்எங்கள் நாயகனார் செங்கோல்
- நடக்கின்ற தென்கின்றார் நாதாந்த மட்டோ
- போதாந்த நிலையும்உயர் யோகாந்த நிலையும்
- புனிதகலாந் தப்பதியும் புகல்கின்றார் புகலும்
- வேதாந்த வெளியும்மிகு சித்தாந்த வெளியும்
- விளங்கும்இவற் றப்பாலும் அதன்மேல்அப் பாலும்
- வாதாந்தத் ததன்மேலும் அதன்மேல்அப் பாலும்
- மன்றாடி அருட்செங்கோல் சென்றாடல் அறியே.
- புண்ணியனார் என்உளத்தே புகுந்தமர்ந்த தலைவர்
- பொதுவிளங்க நடிக்கின்ற திருக்கூத்தின் திறத்தை
- எண்ணியநான் எண்ணுதொறும் உண்டுபசி தீர்ந்தே
- இருக்கின்றேன் அடிக்கடிநீ என்னைஅழைக் கின்றாய்
- பண்ணுறும்என் தனிக்கணவர் கூத்தடுஞ் சபையைப்
- பார்த்தாலும் பசிபோமே பார்த்திடல்அன் றியுமே
- அண்ணுறும்அத் திருச்சபையை நினைக்கினும்வே சாறல்
- ஆறுமடி ஊறுமடி ஆனந்த அமுதே.
- குலமறியார் புலமறியார் அம்பலத்தே நடிக்கும்
- கூத்தாடி ஐயருக்கே மாலையிட்டாய் எனவே
- புலமறியார் போல்நீயும் புகலுதியோ தோழி
- புலபுலஎன் றளப்பதெலாம் போகவிட்டிங் கிதுகேள்
- அலகறியாத் திருக்கூத்தென் கணவர்புரி யாரேல்
- அயன்அரியோ டரன்முதலாம் ஐவர்களும் பிறரும்
- விலகறியா உயிர்பலவும் நீயும்இங்கே நின்று
- மினுக்குவதும் குலுக்குவதும் வெளுத்துவிடும் காணே.
- தாழ்குழல்நீ ஆண்மகன்போல் நாணம்அச்சம் விடுத்தே
- சபைக்கேறு கின்றாய்என் றுரைக்கின்றாய் தோழி
- வாழ்வகைஎன் கணவர்தமைப் புறத்தணைந்தாள் ஒருத்தி
- மால்எனும்பேர் உடையாள்ஓர் வளைஆழிப் படையாள்
- ஆழ்கடலில் துயில்கின்றாள் மாமணிமண் டபத்தே
- ஆள்கின்றாள் ஆண்மகனாய் அறிந்திலையோ அவரைக்
- கேழ்வகையில் அகம்புணர்ந்தேன் அவர்கருணை அமுதம்
- கிடைத்ததுநான் ஆண்மகனா கின்றததி சயமோ.
- துடியேறும் இடைஉனக்கு வந்தஇறு மாப்பென்
- சொல்என்றாய் அரிபிரமர் சுரர்முனிவர் முதலோர்
- பொடிஏறு வடிவுடையார் என்கணவர் சபையின்
- பொற்படிக்கீழ் நிற்பதுபெற் றப்பரிசு நினைந்தே
- இடிஏறு போன்றிறுமாந் திருக்கின்றா ரடிநான்
- எல்லாரும் அதிசயிக்க ஈண்டுதிருச் சபையின்
- படிஏறித் தலைவர்திரு அடிஊறும் அமுதம்
- பருகுகின்றேன் இறுமாக்கும் பரிசுரைப்ப தென்னே.
- ஈற்றறியேன் இருந்திருந்திங் கதிசயிப்ப தென்நீ
- என்கின்றாய் நீஎனைவிட் டேகுதொறும் நான்தான்
- காற்றறியாத் தீபம்போல் இருந்திடும்அத் தருணம்
- கண்டபரி சென்புகல்வேன் அண்டபகி ரண்டம்
- தோற்றறியாப் பெருஞ்சோதி மலைபரநா தத்தே
- தோன்றியதாங் கதன்நடுவே தோன்றியதொன் றதுதான்
- மாற்றறியாப் பொன்ஒளியோ அவ்வொளிக்குள் ஆடும்
- வள்ளல்அருள் ஒளியோஈ ததிசயிக்கும் வகையே.
- நடம்புரிவார் திருமேனி வண்ணம்அதை நான்போய்
- நன்கறிந்து வந்துனக்கு நவில்வேன்என் கின்றாய்
- இடம்வலம்இங் கறியாயே நீயோஎன் கணவர்
- எழில்வண்ணம் தெரிந்துரைப்பாய் இசைமறையா கமங்கள்
- திடம்படநாம் தெரிதும்எனச் சென்றுதனித் தனியே
- திருவண்ணம் கண்டளவே சிவசிவஎன் றாங்கே
- கடம்பெறுகள் உண்டவென மயங்குகின்ற வாறு
- கண்டிலைநீ ஆனாலும் கேட்டிலையோ தோழீ.
- பொய்பிடித்தார் எல்லாரும் புறத்திருக்க நான்போய்ப்
- பொதுநடங்கண் டுளங்களிக்கும் போதுமண வாளர்
- மெய்பிடித்தாய் வாழியநீ சமரசசன் மார்க்கம்
- விளங்கஉல கத்திடையே விளங்குகஎன் றெனது
- கைபிடித்தார் நானும்அவர் கால்பிடித்துக் கொண்டேன்
- களித்திடுக இனியுனைநாம் கைவிடோம் என்றும்
- மைபிடித்த விழிஉலகர் எல்லாரும் காண
- மாலையிட்டோம் என்றெனக்கு மாலையணிந் தாரே.
- பொருத்தமிலார் எல்லாரும் புறத்திருக்க நான்போய்ப்
- பொதுநடங்கண் டுவந்துநிற்கும் போதுதனித் தலைவர்
- திருத்தமுற அருகணைந்து கைபிடித்தார் நானும்
- தெய்வமல ரடிபிடித்துக் கொண்டேன்சிக் கெனவே
- வருத்தமுறேல் இனிச்சிறிதும் மயங்கேல்காண் அழியா
- வாழ்வுவந்த துன்தனக்கே ஏழுலகும் மதிக்கக்
- கருத்தலர்ந்து வாழியஎன் றாழிஅளித் தெனது
- கையினில்பொற் கங்கணமும் கட்டினர்காண் தோழி.
- தமைஅறியார் எல்லாரும் புறத்திருக்க நான்போய்ச்
- சபைநடங்கண் டுளங்களிக்கும் தருணத்தே தலைவர்
- இமைஅறியா விழிஉடையார் எல்லாரும் காண
- இளநகைமங் களமுகத்தே தளதளஎன் றொளிர
- எமைஅறிந்தாய் என்றெனது கைபிடித்தார் நானும்
- என்னைமறந் தென்இறைவர் கால்பிடித்துக் கொண்டேன்
- சுமைஅறியாப் பேரறிவே வடிவாகி அழியாச்
- சுகம்பெற்று வாழ்கஎன்றார் கண்டாய்என் தோழி.
- ஐயமுற்றார் எல்லாரும் புறத்திருக்க நான்போய்
- அம்பலத்தே திருநடங்கண் டகங்களிக்கும் போது
- மைஅகத்தே பொருந்தாத வள்ளல்அரு கணைத்தென்
- மடிபிடித்தார் நானும்அவர் அடிபிடித்துக் கொண்டேன்
- மெய்அகத்தே நம்மைவைத்து விழித்திருக்கின் றாய்நீ
- விளங்குகசன் மார்க்கநிலை விளக்குகஎன் றெனது
- கைஅகத்தே ஒருபசும்பொற் கங்கணமும் புனைந்தார்
- கருணையினில் தாய்அனையார் கண்டாய்என் தோழி.
- மாதேகேள் அம்பலத்தே திருநடஞ்செய் பாத
- மலர்அணிந்த பாதுகையின் புறத்தெழுந்த அணுக்கள்
- மாதேவர் உருத்திரர்கள் ஒருகோடி கோடி
- வளைபிடித்த நாரணர்கள் ஒருகோடி கோடி
- போதேயும் நான்முகர்கள் ஒருகோடி கோடி
- புரந்தரர்கள் பலகோடி ஆகஉருப் புனைந்தே
- ஆதேயர் ஆகிஇங்கே தொழில்புரிவார் என்றால்
- ஐயர்திரு வடிப்பெருமை யார்உரைப்பார் தோழி.
- பார்உலகா திபர்புவனா திபர்அண்டா திபர்கள்
- பகிரண்டா திபர்வியோமா திபர்முதலாம் அதிபர்
- ஏர்உலவாத் திருப்படிக்கீழ் நின்றுவிழித் திருக்க
- எனைமேலே ஏற்றினர்நான் போற்றிஅங்கு நின்றேன்
- சீர்உலவா யோகாந்த நடம்திருக்க லாந்தத்
- திருநடம்நா தாந்தத்தே செயும்நடம்போ தாந்தப்
- பேர்உலவா நடங்கண்டேன் திருஅமுதம் உணவும்
- பெற்றேன்நான் செய்ததவம் பேருலகில் பெரிதே.
- தூங்குகநீ என்கின்றாய் தூங்குவனோ எனது
- துரைவரும்ஓர் தருணம்இதில் தூக்கமுந்தான் வருமோ
- ஈங்கினிநான் தனித்திருக்க வேண்டுவதா தலினால்
- என்னுடைய தூக்கம்எலாம் நின்னுடைய தாக்கி
- ஏங்கலறப் புறத்தேபோய்த் தூங்குகநீ தோழி
- என்னிருகண் மணிஅனையார் எனைஅணைந்த உடனே
- ஓங்குறவே நான்அவரைக் கலந்தவரும் நானும்
- ஒன்றான பின்னர்உனை எழுப்புகின்றேன் உவந்தே.
- ஐயமுறேல் காலையில்யாம் வருகின்றோம் இதுநம்
- ஆணைஎன்றார் அவராணை அருளாணை கண்டாய்
- வெய்யர்உளத் தேபுகுதப் போனதிருள் இரவு
- விடிந்ததுநல் சுடர்உதயம் மேவுகின்ற தருணம்
- தையல்இனி நான்தனிக்க வேண்டுவதா தலினால்
- சற்றேஅப் புறத்திருநீ தலைவர்வந்த உடனே
- உய்யஇங்கே நான்அவரைக் கலந்தவரும் நானும்
- ஒன்றான பின்னர்உனை அழைக்கின்றேன் உவந்தே.
- மன்றுடையார் என்கணவர் என்உயிர்நா யகனார்
- வாய்மலர்ந்த மணிவார்த்தை மலைஇலக்காம் தோழி
- துன்றியபே ரிருள்எல்லாம் தொலைந்ததுபன் மாயைத்
- துகள்ஒளிமா மாயைமதி ஒளியொடுபோ யினவால்
- இன்றருளாம் பெருஞ்சோதி உதயமுற்ற ததனால்
- இனிச்சிறிது புறத்திருநீ இறைவர்வந்த உடனே
- ஒன்றுடையேன் நான்அவரைக் கலந்தவரும் நானும்
- ஒன்றான பின்னர்உனை அழைக்கின்றேன் உவந்தே.
- வைகறைஈ தருளுதயம் தோன்றுகின்ற தெனது
- வள்ளல்வரு தருணம்இனி வார்த்தைஒன்றா னாலும்
- சைகரையேல் இங்ஙனம்நான் தனித்திருத்தல் வேண்டும்
- தாற்குழல்நீ ஆங்கேபோய்த் தத்துவப்பெண் குழுவில்
- பொய்கரையா துள்ளபடி புகழ்பேசி இருநீ
- புத்தமுதம் அளித்தஅருட் சித்தர்வந்த உடனே
- உய்கரைவாய் நான்அவரைக் கலந்தவரும் நானும்
- ஒன்றான பின்னர்உனை அழைக்கின்றேன் உவந்தே.
- காலையிலே வருகுவர்என் கணவர்என்றே நினக்குக்
- கழறினன்நான் என்னல்அது காதில்உற்ற திலையோ
- வேலைஇலா தவள்போலே வம்பளக்கின் றாய்நீ
- விடிந்ததுநான் தனித்திருக்க வேண்டுவதா தலினால்
- சோலையிலே மலர்கொய்து தொடுத்துவந்தே புறத்தில்
- சூழ்ந்திருப்பாய் தோழிஎன்றன் துணைவர்வந்த உடனே
- ஓலைஉறா தியானவரைக் கலந்தவரும் நானும்
- ஒன்றான பின்னர்உனை அழைக்கின்றேன் உவந்தே.
- மாலையிலே உலகியலார் மகிழ்நரொடு கலத்தல்
- வழக்கம்அது கண்டனம்நீ மணவாள ருடனே
- காலையிலே கலப்பதற்கிங் கெனைப்புறம்போ என்றாய்
- கண்டிலன்ஈ ததிசயம்என் றுரையேல்என் தோழி
- ஓலையிலே பொறித்ததைநீ உன்னுளத்தே கருதி
- உழல்கின்றாய் ஆதலில்இவ் வுளவறியாய் தருமச்
- சாலையிலே சமரசசன் மார்க்கசங்கந் தனிலே
- சற்றிருந்தாய் எனில்இதனை உற்றுணர்வாய் காணே.
- இரவகத்தே கணவரொடு கலக்கின்றார் உலகர்
- இயல்அறியார் உயல்அறியார் மயல்ஒன்றே அறிவார்
- கரவகத்தே கள்உண்டு மயங்கிநிற்கும் தருணம்
- கனிகொடுத்தால் உண்டுசுவை கண்டுகளிப் பாரோ
- துரவகத்தே விழுந்தார்போன் றிவர்கூடும் கலப்பில்
- சுகம்ஒன்றும் இல்லையடி துன்பம்அதே கண்டார்
- உரவகத்தே என்கணவர் காலையில்என் னுடனே
- உறுகலப்பால் உறுசுகந்தான் உரைப்பரிதாம் தோழி.
- பொன்பறியாப் புகல்வார்போல் மறைப்பதென்னை மடவாய்
- பூவையர்கா லையில்புணர நாணுவர்காண் என்றாய்
- அன்பறியாப் பெண்களுக்கே நின்உரைசம் மதமாம்
- ஆசைவெட்கம் அறியாதென் றறிந்திலையோ தோழி
- இன்பறியாய் ஆதலினால் இங்ஙனம்நீ இசைத்தாய்
- இறைவர்திரு வடிவதுகண் டிட்டதரு ணந்தான்
- துன்பறியாக் காலைஎன்றும் மாலைஎன்றும் ஒன்றும்
- தோன்றாது சுகம்ஒன்றே தோன்றுவதென் றறியே.
- அம்மாநான் சொன்மாலை தொடுக்கின்றேன் நீதான்
- ஆர்க்கணிய என்கின்றாய் அறியாயோ தோழி
- இம்மாலை அம்பலத்தே எம்மானுக் கன்றி
- யார்க்கணிவேன் இதைஅணிவார் யாண்டைஉளார் புகல்நீ
- செம்மாப்பில் உரைத்தனைஇச் சிறுமொழிஎன் செவிக்கே
- தீநுழைந்தால் போன்றதுநின் சிந்தையும்நின் நாவும்
- பன்மாலைத் தத்துவத்தால் அன்றிரும்பொன் றாலே
- படைத்ததுனைப் பழக்கத்தால் பொறுத்தனன்என் றறியே.
- வான்கொடுத்த மணிமன்றில் திருநடனம் புரியும்
- வள்ளல்எலாம் வல்லவர்நன் மலர்எடுத்தென் உளத்தே
- தான்கொடுக்க நான்வாங்கித் தொடுக்கின்றேன் இதனைத்
- தலைவர்பிறர் அணிகுவரோ அணிதரந்தாம் உளரோ
- தேன்கொடுத்த சுவைபோலே தித்தித்தென் உளத்தே
- திருக்கூத்துக் காட்டுகின்ற திருவடிக்கே உரித்தாம்
- யான்கொடுக்கும் பரிசிந்த மாலைமட்டோ தோழி
- என்ஆவி உடல்பொருளும் கொடுத்தனன்உள் இசைந்தே.
- என்மாலை மாத்திரமோ யார்மாலை எனினும்
- இறைவரையே இலக்கியமாய் இசைப்பதெனில் அவைதாம்
- நன்மாலை ஆகும்அந்தச் சொன்மாலை தனக்கே
- நான்அடிமை தந்தனன்பல் வந்தனம்செய் கின்றேன்
- புன்மாலை பலபலவாப் புகல்கின்றார் அம்மா
- பொய்புகுந்தாற் போல்செவியில் புகுந்தோறும் தனித்தே
- வன்மாலை நோய்செயுமே கேட்டிடவும் படுமோ
- மன்றாடி பதம்பாடி நின்றாடும் அவர்க்கே.
- எவ்வுலகில் எவ்வௌர்க்கும் அரும்பெருஞ்சோ தியரே
- இறைவர்என்ப தறியாதே இம்மதவா திகள்தாம்
- கவ்வைபெறு குருடர்கரி கண்டகதை போலே
- கதைக்கின்றார் சாகாத கல்விநிலை அறியார்
- நவ்விவிழி யாய்இவரோ சிலபுகன்றார் என்றாய்
- ஞானநடம் கண்டேன்மெய்த் தேன்அமுதம் உண்டேன்
- செவ்வைபெறு சமரசசன் மார்க்கசங்கந் தனிலே
- சேர்ந்தேன்அத் தீமொழியும் தேமொழிஆ யினவே.
- எப்பொருட்கும் எவ்வுயிர்க்கும் உள்ளகத்தும் புறத்தும்
- இயல்உண்மை அறிவின்ப வடிவாகி நடிக்கும்
- மெய்ப்பொருளாம் சிவம்ஒன்றே என்றறிந்தேன் உனக்கும்
- விளம்புகின்றேன் மடவாய்நீ கிளம்புகின்றாய்370 மீட்டும்
- இப்பொருள்அப் பொருள்என்றே இசைப்பதென்னே பொதுவில்
- இறைவர்செயும் நிரதிசய இன்பநடந் தனைநீ
- பைப்பறவே காணுதியேல் அத்தருணத் தெல்லாம்
- பட்டநடுப் பகல்போல வெட்டவெளி யாமே.
- நான்பசித்த போதெல்லாம் தான்பசித்தார் ஆகி
- நல்லதிரு அமுதளித்தே அல்லல்பசி தவிர்த்தே
- ஊன்பதித்த என்னுடைய உளத்தேதம் முடைய
- உபயபதம் பதித்தருளி அபயம்எனக் களித்தார்
- வான்பதிக்கும் கிடைப்பரியார் சிற்சபையில் நடிக்கும்
- மணவாளர் எனைப்புணர்ந்த புறப்புணர்ச்சித் தருணம்
- தான்பதித்த பொன்வடிவம் தனைஅடைந்து களித்தேன்
- சாற்றும்அகப் புணர்ச்சியின்ஆம் ஏற்றம்371 உரைப் பதுவே.
- அருட்சோதித் தலைவர்எனக் கன்புடைய கணவர்
- அழகியபொன் மேனியைநான் தழுவிநின்ற தருணம்
- இருட்சாதித் தத்துவங்கள் எல்லாம்போ யினவால்
- எங்கணும்பே ரொளிமயமாய் இருந்தனஆங் கவர்தாம்
- மருட்சாதி நீக்கிஎனைப் புணர்ந்தஒரு தருணம்
- மன்னுசிவா னந்தமயம் ஆகிநிறை வுற்றேன்
- தெருட்சார்பில் இருந்தோங்கு சமரசசன் மார்க்கத்
- திருச்சபைக்கண் உற்றேன்என் திருக்கணவ ருடனே.
- புறப்புணர்ச்சி என்கணவர் புரிந்ததரு ணந்தான்
- புத்தமுதம் நான்உண்டு பூரித்த தருணம்
- சிறப்புணர்ச்சி மயமாகி அகப்புணர்ச்சி அவர்தாம்
- செய்ததரு ணச்சுகத்தைச் செப்புவதெப் படியோ
- பிறப்புணர்ச்சி விடயமிலை சுத்தசிவா னந்தப்
- பெரும்போகப் பெருஞ்சுகந்தான் பெருகிஎங்கும் நிறைந்தே
- மறப்புணர்ச்சி இல்லாதே நான்அதுவாய் அதுஎன்
- மயமாய்ச்சின் மயமாய்த்தன் மயமான நிலையே.
- 367. இப்பதிகத்தில் அடிகளார் எழுத்து 'கண்ணாறு' என்பதுபோல் காண்கிறது. ஓர் அன்பர்படியில் உள்ளதும் 'கண்ணாறு'. திருத்தணிகைப் பகுதி ஜீவசாட்சி மாலையில்அவர்கள் எழுதி உள்ளது 'கண்ணேறு' என்பது. முதல் அச்சும் 'கண்ணேறு'.- ஆ. பா.
- 368. இப்பதிகத்தில் சிற்சில இடங்களில் "தோழீ" என்பதுபோல் காண்கிறது - ஆ. பா.
- 369. ஈங்கவர்தம் - முதற்பதிப்பு, பொ.சு., பி. இரா., ச. மு. க.
- 370. பரிச்சிக்கும் - பரிசிக்கும் என்பதன் விகாரம்.
- 371. கிளத்துகின்றாய் - முதற்பதிப்பு., பொ. சு., ச. மு. க.
- 372. புணர்ச்சியினோ வேற்றம் - முதற்பதிப்பு., பொ. சு., ச. மு. க.புணர்ச்சியினோ ரேற்றம் - பி. இரா. பதிப்பு.
- சிவம்எ னும்பெயர்க் கிலக்கியம் ஆகிஎச் செயலும்தன் சமுகத்தே
- நவநி றைந்தபேர் இறைவர்கள் இயற்றிட ஞானமா மணிமன்றில்
- தவநி றைந்தவர் போற்றிட ஆனந்தத் தனிநடம் புரிகின்றான்
- எவன்அ வன்திரு வாணைஈ திசைத்தனன் இனித்துய ரடையேனே.
- தனித்தலைமைப் பெரும்பதிஎன் தந்தைவரு கின்ற
- தருணம்இது சத்தியம்காண் சகதலத்தீர் கேண்மின்
- இனித்தநறுங் கனிபோன்றே என்னுளம்தித் திக்க
- இன்னமுதம் அளித்தென்னை ஏழுலகும் போற்ற
- மனித்தஉடம் பிதைஅழியா வாய்மைஉடம் பாக்கி
- மன்னியசித் தெல்லாம்செய் வல்லபமும் கொடுத்தே
- கனித்தசிவா னந்தமெனும் பெரும்போகம் தனிலே
- களித்திடவைத் திடுகின்ற காலையும்இங் கிதுவே.
- என்சாமி எனதுதுரை என்உயிர்நா யகனார்
- இன்றுவந்து நான்இருக்கும் இடத்தில்அமர் கின்றார்
- பின்சாரும் இரண்டரைநா ழிகைக்குள்ளே எனது
- பேருடம்பில் கலந்துளத்தே பிரியாமல் இருப்பார்
- தன்சாதி உடையபெருந் தவத்தாலே நான்தான்
- சாற்றுகின்றேன் அறிந்திதுதான் சத்தியம்சத் தியமே
- மின்சாரும் இடைமடவாய் என்மொழிநின் தனக்கே
- வெளியாகும் இரண்டரைநா ழிகைகடந்த போதே.
- ஆதிநீதி வேதனே ஆடல்நீடு பாதனே
- வாதிஞான போதனே வாழ்கவாழ்க நாதனே.