- முட்டீச் சுரத்தின் முயலா வகையருளும்
- பட்டீச் சரத்தெம் பராபரமே - துட்டமயல்
- முற்றேமம் வாய்ந்த முனிவர் தினம்பரவும்
- சிற்றேமம் வாய்ந்த செழுங்கதிரே - கற்றவர்கள்
- முச்சுடராய் முச்சுடர்க்கும் முன்னொளியாய்ப் பின்னொளியாய்
- எச்சுடரும் போதா இயற்சுடராய் - அச்சில்
- முன்னகையா நின்றதொரு முப்புரத்தை அன்றொருகால்
- சின்னகையால் தீமடுத்த சித்தனெவன் - முன்னயன்மால்
- முன்னை மறைக்கும் முடிப்பொருளென் றாய்பவர்க்கும்
- தன்னை மறைக்கும் சதுரனெவன் - உன்னுகின்றோர்
- முந்த மறையின் முழுப்பொருளை நான்முகற்குத்
- தந்த அருட்கடலாம் சாமியெவன் - தந்தமக்காம்
- முத்துச்சிவிகையின்மேல் முன்காழி ஓங்குமுழு
- முத்தைத் தனிவைத்த முத்தனெவன் - பத்திபெறு
- முப்பாழ் கடந்த முழுப்பாழுக் கப்பாலைச்
- செப்பாது செப்புறுநம் தேசிகன்காண் - தப்பாது
- முன்னம் எடுத்தணைத்து முத்தமிட்டுப் பாலருத்தும்
- அன்னையினும் அன்புடைய அப்பன்காண் - மன்னுலகில்
- முல்லை முகையாம் முறுவலழ கும்பவள
- எல்லை வளர்செவ் விதழழகும் - நல்லவரைத்
- முல்லையென்றாய் முல்லை முறித்தொருகோல் கொண்டுநிதம்
- ஒல்லை அழுக்கெடுப்ப துண்டேயோ - நல்லதொரு
- முன்னுமலர்க் கொம்பென்பாய் மூன்றொடரைக் கோடியெனத்
- துன்னு முரோமத் துவாரமுண்டே - இன்னமுதால்
- முட்டூறும் கைகால் முடங்கூன் முதலாய
- எட்டூறுங் கொண்டவரை எண்ணிலையோ - தட்டூறிங்
- முன்னவனே யானை முகத்தவனே முத்திநலம்
- சொன்னவனே தூய்மெய்ச் சுகத்தவனே - என்னவனே
- சிற்பரனே ஐங்கரனே செஞ்சடையஞ் சேகரனே
- தற்பரனே நின்தாள் சரண்.
- முன்மணத்தில் சுந்தரரை முன்வலுவில் கொண்டதுபோல்
- என்மணத்தில் நீவந் திடாவிடினும் - நின்கணத்தில்
- ஒன்றும் ஒருகணம்வந் துற்றழைக்கில் செய்ததன்றி
- இன்றும் ஒருமணஞ்செய் வேன்.
- முத்தேவர் போற்று முதற்றேவ நின்னையன்றி
- எத்தேவர் சற்றே எடுத்துரைநீ - பித்தேன்செய்
- குற்றமெலாம் இங்கோர் குணமாகக் கொண்டென்னை
- அற்றமிலா தாள்கின் றவர்.
- முன்னஞ்ச முண்ட மிடற்றர சேநின் முழுக்கருணை
- அன்னஞ் சுகம்பெற உண்டும்உன் பால்அன் படைந்திலதால்
- கன்னெஞ்ச மோகட்டை வன்னெஞ்ச மோஎட்டிக் காய்நெஞ்சமோ
- என்னெஞ்சம் என்னெஞ்ச மோதெரி யேன்இதற் கென்செய்வதே.
- முன்மழை வேண்டும் பருவப் பயிர்வெயில் மூடிக்கெட்ட
- பின்மழை பேய்ந்தென்ன பேறுகண் டாய்அந்தப் பெற்றியைப்போல்
- நின்மழை போற்கொடை இன்றன்றி மூப்பு நெருங்கியக்கால்
- பொன்மழை பேய்ந்தென்ன கன்மழை பேய்ந்தென்ன பூரணனே.
- முலைக்கலங் கார மிடுமட வார்மயல் மூடிஅவர்
- தலைக்கலங் கார மலர்சூடு வார்நின் றனைவழுத்தார்
- இலைக்கலங் காரவ் வியமன்வந் தாலென் இசைப்பர்வெள்ளி
- மலைக்கலங் கார மணியேமுக் கண்கொண்ட மாமருந்தே.
- முப்போதும் அன்பர்கள் வாழ்த்தொற்றி யூர்எம் முதல்வர்மகிழ்
- ஒப்போ தருமலைப் பெண்ணமு தேஎன்று வந்துநினை
- எப்போதும் சிந்தித் திடர்நீங்கி வாழ எனக்கருள்வாய்
- மைப்போ தனையகண் மானே வடிவுடை மாணிக்கமே.
- முத்தேவர் விண்ணன்37 முதல்தேவர் சித்தர் முனிவர்மற்றை
- எத்தே வருநின் அடிநினை வார்நினைக் கின்றிலர்தாம்
- செத்தே பிறக்கும் சிறியர்அன் றோஒற்றித் தேவர்நற்றா
- மத்தேவர் வாம மயிலே வடிவுடை மாணிக்கமே.
- முந்தை மறையோன் புகழொற்றி முதல்வ ரிவர்தம் முகநோக்கிக்
- கந்தை யுடையீ ரென்னென்றேன் கழியா வுன்றன் மொழியாலே
- யிந்து முகத்தா யெமக்கொன்றே யிருநான் குனக்குக் கந்தையுள
- திந்த வியப்பென் னென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- முடியா வளஞ்சூ ழொற்றியுளீர் முடிமே லிருந்த தென்னென்றேன்
- கடியா வுள்ளங் கையின்முதலைக் கடிந்த தென்றார் கமலமென
- வடிவார் கரத்தி லென்னென்றேன் வரைந்த வதனீ றகன்றதென்றே
- யிடியா நயத்தி னகைக்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- முத்தி நீறிடார் முன்கையால் தொடினும்
- முள்ளு றுத்தல்போல் முனிவுடன் நடுங்க
- பத்தி நீறிடும் பத்தர்கள் காலால்
- பாய்ந்து தைக்கினும் பரிந்ததை மகிழ்க
- புத்தி ஈதுகாண் என்னுடை உடம்பே
- போற்ற லார்புரம் பொடிபட நகைத்தோன்
- சத்தி வேற்கரத் தனயனை மகிழ்வோன்
- தன்னை நாம்என்றும் சார்ந்திடற் பொருட்டே.
- முத்தி வேண்டுமேல்
- பத்தி வேண்டுமால்
- சத்தி யம்இது
- புத்தி நெஞ்சமே.
- முதல்இ லாமல்ஊ தியம்பெற விழையும்
- மூடன் என்னநின் மொய்கழல் பதமேத்
- துதல்இ லாதுநின் அருள்பெற விழைந்தேன்
- துட்ட னேன்அருட் சுகம்பெறு வேனோ
- நுதலில் ஆர்அழல் கண்ணுடை யவனே
- நோக்கும் அன்பர்கள் தேக்கும்இன் அமுதே
- சிதல்இ லாவளம் ஓங்கிஎந் நாளும்
- திகழும் ஒற்றியூர்த் தியாகநா யகனே.
- முட்டியே மடவார் முலைத்தலை உழக்கும்
- மூடனேன் முழுப்புலை முறியேன்
- எட்டியே அனையேன் பாவியேன் என்னை
- என்செய்தால் தீருமோ அறியேன்
- ஒட்டியே அன்பர் உளத்தெழும் களிப்பே
- ஒளிக்குளாம் சோதியே கரும்பின்
- கட்டியே தேனே சடையுடைக் கனியே
- காலமும் கடந்தவர் கருத்தே.
- முன்னிய மறையின் முடிவின்உட் பொருளே
- முக்கணா மூவர்க்கும் முதல்வா
- மன்னிய கருணை வாரியே முல்லை
- வாயில்வாழ் மாசிலா மணியே
- அன்னியன் அல்லேன் தொண்டனேன் உன்தன்
- அருட்பெரும் கோயில்வந் தடைந்தால்
- என்இது சிவனே பகைவரைப் போல்பார்த்
- திருப்பதுன் திருவருட் கியல்போ.
- முள்ளளவு நெஞ்ச முழுப்புலைய மாதர்களாம்
- கள்ளளவு நாயில் கடைப்பட்ட என்றனக்கு
- உள்ளளவும் அன்பர்க் குதவும்உன்தாட் கன்பொருசிற்
- றெள்ளளவும் உண்டோ எழுத்தறியும் பெருமானே.
- முன்னம் காழி வள்ளலுக்கு முத்துச் சிவிகை குடையொடுபொன்
- சின்னம் அளித்தோன் சிவபெருமான் தியாகப் பெருமான் திருவடியைக்
- கன்னின் றுருகா நெஞ்சுருகக் கண்டேன் கண்ட காட்சிதனை
- என்என் றுரைப்பேன் அம்மாநான் என்ன தவந்தான் செய்தேனோ.
- முத்தி முதலே முக்கணுடை மூரிக் கரும்பே நின்பதத்தில்
- பத்தி முதலே இல்லாதேன் பரம சுகத்தில் படிவேனோ
- எத்தி அழைக்கும் கருங்கண்ணார் இடைக்குள் பிளந்த வெடிப்பதனில்
- தத்தி விழுந்தேன் எழுவேனேல் தள்ளா நின்ற தென்மனமே.
- முன்னை மாதவ முயற்சிஒன் றில்லா
- மூட னேன்தனை முன்வர வழைத்துப்
- பிள்னை ஒன்றும்வாய்ப் பேச்சிலீ ரானால்
- பித்தர் என்றுமைப் பேசிட லாமே
- என்னை நான்பழித் திடுகின்ற தல்லால்
- இகழ்கி லேன்உமை எழில்ஒற்றி உடையீர்
- புன்னை அஞ்சடை யீர்எனை உடையீர்
- பொய்யன் என்னில்யான் போம்வழி எதுவோ.
- முறைப்படி நினது முன்புநின் றேத்தி முன்னிய பின்னர்உண் ணாமல்
- சிறைப்படி வயிற்றில் பொறைப்பட ஒதிபோல் சென்றுநின் முன்னர்உற் றதனால்
- கறைப்பட ஓங்கும் கண்டனே எவர்க்கும் கருத்தனே ஒருத்தனே மிகுசீர்
- தறைப்படர்ந் தோங்கும் ஒற்றியில் உன்னால் தண்டிக்கப் பட்டனன் அன்றே.
- முன்னைவல் வினையால் வஞ்சக மடவார் முழுப்புலைக் குழிவிழுந் திளைத்தேன்
- என்னையோ கொடியேன் நின்திரு வருள்தான் எய்தில னேல்உயி‘க் குறுதிப்
- பின்னைஎவ் வணந்தான் எய்துவ தறியேன் பேதையில் பேதைநான் அன்றோ
- கன்னலே தேனே ஒற்றிஎம் அமுதே கடவுளே கருணையங் கடலே.
- முத்தி நேர்கிலாத் தேவர்கள் தமைநான்
- முந்து றேன்அவர் முற்பட வரினும்
- சுத்தி யாகிய சொல்லுடை அணுக்கத்
- தொண்டர் தம்முடன் சூழ்த்திடீர் எனினும்
- புத்தி சேர்புறத் தொண்டர்தம் முடனே
- பொருந்த வைக்கினும் போதும்மற் றதுவே
- துத்தி யார்பணி யீர்ஒற்றி உடையீர்
- தூய மால்விடைத் துவசத்தி னீரே.
- முத்திக்கு வித்தே முழுமணியே முத்தர்உளம்
- தித்திக்கும் தேனே சிவமே செழுஞ்சுடரே
- சத்திக்கும் நாதத் தலங்கடந்த தத்துவனே
- எத்திக்கும் இல்லேன் இளைப்பொழித்தால் ஆகாதோ.
- முன்னேசெய் வெவ்வினைதான் மூண்டதுவோ அல்லதுநான்
- இன்னே பிழைதான் இயற்றியதுண் டோஅறியேன்
- பொன்னேர் புரிசடைஎம் புண்ணியனே என்நோயை
- அன்னேநீ நீக்காயேல் ஆர்நீக்க வல்லாரே.
- முன்னை நான்செய்த வல்வினை இரண்டின்
- முடிவு தேர்ந்திலன் வடிவெடுத் துலகில்
- என்னை நான்கண்ட தந்தநாள் தொடங்கி
- இந்த நாள்மட்டும் இருள் என்ப தல்லால்
- பின்னை யாதொன்றும் பெற்றிலேன் இதனைப்
- பேச என்னுளம் கூசுகின் றதுகாண்
- உன்னை நம்பினேன் நின்குறிப் புணரேன்
- ஒற்றி ஓங்கிய உத்தமப் பொருளே.
- முன்னை நான்செய்த வல்வினைச் சிமிழ்ப்பான்
- மோக வாரியின் மூழ்கின னேனும்
- அன்னை போலும்என் ஆருயிர்த் துணையாம்
- அப்ப நின்அருள் அம்பியை நம்பி
- தன்னை நேர்சிவ ஞானமென் கரையைச்
- சார்கு வேம்எனும் தருக்குடன் உழன்றேன்
- இன்னும் நின்அருள் ஈந்திலை அந்தோ
- என்செய் கேன்நர கிடைஇடும் போதே.
- முந்தோகை கொண்டுநின் தண்ணருள் வாரியின் மூழ்குதற்கிங்
- கந்தோஎன் துன்பம் துடைத்தரு ளாய்எனில் ஆங்குலகர்
- வந்தோ சிவவிர தாஎது பெற்றனை வாய்திறஎன்
- றிந்தோர் தருசடை யாய்விடை யாய்என்னை ஏசுவரே.
- முப்பொருளு மொன்றதென்பார் வெண்ணிலா வே - அந்த
- மூன்றுமொன்றாய் முடிந்ததென்ன வெண்ணிலா வே.
- முன்னம் பிழைபொறுத்தா யின்னம் பொறாதுவிட்டால்
- முறையோ - முறையோ - முறையோவென் றலறவும் இன்னந்
- முன்னவனே சிறியேன்நான் சிறிதும்அறி யாதே
- முனிந்துரைத்த பிழைபொறுத்துக் கனிந்தருளல் வேண்டும்
- என்னவனே என்துணையே என்உறவே என்னை
- ஈன்றவனே என்தாயே என்குருவே எனது
- மன்னவனே என்னுடைய வாழ்முதலே என்கண்
- மாமணியே மணிமிடற்றோர் மாணிக்க மலையே
- அன்னவனே அம்பலத்துள் ஆடுகின்ற அமுதே
- ஆறணிந்த சடையாய்யான் வேறுதுணை இலனே.
- முன்னறியேன் பின்னறியேன் முடிபதொன்று மறியேன்
- முன்னியுமுன் னாதும்இங்கே மொழிந்தமொழி முழுதும்
- பன்னிலையில் செறிகின்றோர் பலரும்மனம் உவப்பப்
- பழுதுபடா வண்ணம்அருள் பரிந்தளித்த பதியே
- தன்னிலையில் குறைவுபடாத் தத்துவப்பேர் ஒளியே
- தனிமன்றுள் நடம்புரியஞ் சத்தியதற் பரமே
- இந்நிலையில் இன்னும்என்றன் மயக்கமெலாந் தவிர்த்தே
- எனைஅடிமை கொளல்வேண்டும் இதுசமயங் காணே.
- முன்னைமறை முடிமணியாம் அடிமலர்கள் வருந்த
- முழுதிரவில் நடந்தெளியேன் முயங்கமிடத் தடைந்து
- அன்னையினும் பரிந்தருளி அணிக்கதவந் திறப்பித்
- தங்கையில்ஒன் றளித்தெனையும் அன்பினொடு நோக்கி
- என்னைஇனி மயங்காதே என்மகனே மகிழ்வோ
- டிருத்திஎன உரைத்தாய்நின் இன்னருள்என் என்பேன்
- மின்னைநிகர் செஞ்சடைமேன் மதியம்அசைந் தாட
- வியன்பொதுவில் திருநடஞ்செய் விமலபரம் பொருளே.
- முழுதும்உணர்ந் தவர்முடிமேல் முடிக்குமணி யாகி
- முப்பொருளு மாகியநின் ஒப்பில்அடி மலர்கள்
- கழுதும்உணர் வரியநடுக் கங்குலிலே வருந்தக்
- கடிதுநடந் தடிநாயேன் கருதுமிடத் தடைந்து
- பழுதுபடா வண்ணம்எனைப் பரிந்தழைத்து மகனே
- பணிந்திதனை வாங்கெனஎன் பாணியுறக் கொடுத்துத்
- தொழுதெனைப்பா டுகஎன்று சொன்னபசு பதிநின்
- தூயஅருட் பெருமையைஎன் சொல்லிவியக் கேனே .
- முத்திஒன்று வியத்திஒன்று காண்மின்என்றா கமத்தின்
- முடிகள்முடித் துரைகின்ற அடிகள்மிக வருந்தப்
- பத்திஒன்றும் இல்லாத கடைப்புலையேன் பொருட்டாப்
- படிற்றுளத்தேன் இருக்கும்இடந் தனைத்தேடி நடந்து
- சித்திஒன்று திருமேனி காட்டிமனைக் கதவம்
- திறப்பித்தங் கெனைஅழைத்தென் செங்கையிலே மகிழ்ந்து
- சத்திஒன்று கொடுத்தாய்நின் தண்ணருள்என் என்பேன்
- தனிமன்றுள் ஆனந்தத் தாண்டவஞ்செய் அரசே.
- முத்தேவர் அழுக்காற்றின் மூழ்கியிடத் தனித்த
- முழுமணிபோன் றொருவடிவென் முன்கொடுவந் தருளி
- எத்தேவர் தமக்குமிக அரியஎனும் மணப்பூ
- என்கரத்தே கொடுத்தனைநின் எண்ணம்இதென் றறியேன்
- சித்தேஎன் பவரும்ஒரு கத்தேஎன் பவரும்
- தேறியபின் ஒன்றாகத் தெரிந்துகொள்ளும் பொதுவில்
- அத்தேவர் வழுத்தஇன்ப உருவாகி நடஞ்செய்
- ஆரமுதே என்னுயிருக் கானபெருந் துணையே.
- முன்புறு நிலையும் பின்புறு நிலையும் முன்னிநின் றுளமயக் குறுங்கால்
- அன்புறு நிலையால் திருநெறித் தமிழ்கொண் டையநீத் தருளிய அரசே
- என்புபெண் ணுருவோ டின்னுயி ரதுகொண் டெழுந்திடப் புரிந்துல கெல்லாம்
- இன்புறப் புரிந்த மறைத்தனிக் கொழுந்தே என்னுயிர்க் குயிர்எனுங் குருவே.
- முன்அருந் தவத்தோன் முற்கலன் முதலா முனிவர்கள் இனிதுவீ டடைய
- இன்னருள் புரியும் நின்அருட் பெருமை இரவினும் பகலினும் மறவேன்
- என்அரும் பொருளே என்உயிர்க் குயிரே என்அர சேஎன துறவே
- மன்அரு நெறியில் மன்னிய அறிவே வல்லபைக் கணேசமா மணியே.
- முந்தைவினை யால்நினது வழியில் செல்லா
- மூடனேன் தனைஅன்பர் முனிந்து பெற்ற
- தந்தைவழி நில்லாத பாவி என்றே
- தள்ளிவிடில் தலைசாய்த்துத் தயங்கு வேனே
- எந்தைநின தருள்சற்றே அளித்தால் வேறோர்
- எண்ணமிலேன் ஏகாந்தத் திருந்து வாழ்வேன்
- சந்தனவான் பொழில்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- முற்று மோமனம் முன்னி நின்பதம்
- பற்று மோவினைப் பகுதி என்பவை
- வற்று மோசுக வாழ்வு வாய்க்குமோ
- சற்றும் ஓர்கிலேன் தணிகை அத்தனே.
- முன்னேனோ திருத்தணிகை அடைந்திடநின் சந்நிதியின் முன்னே நின்று
- மன்னேனோ அடியருடன் வாழேனோ நின்அடியை வாழ்த்தி டேனோ
- உன்னேனோ நன்னிலையை உலகத்தோர் எல்லீரும் உங்கே வாரும்
- என்னேனோ நின்பெயரை யார்கூறி னாலும்அவர்க் கிதங்கூ றேனோ.
- முலையைக் காட்டி மயக்கிஎன் ஆருயிர்
- முற்றும் வாங்குறும் முண்டைகள் நன்மதி
- குலையக் காட்டும் கலவிக்கி சைந்துநின்
- கோலங் காணக் குறிப்பிலன் ஆயினேன்
- நிலையைக் காட்டும்நல் ஆனந்த வெள்ளமே
- நேச நெஞ்சகம் நின்றொளிர் தீபமே
- கலையைக் காட்டும் மதிதவழ் நற்றணி
- காச லத்தமர்ந் தோங்கதி காரனே.
- முதுவோர் வணங்கு தணிகா சலத்து முதலேஇவ் வேழை முறியேன்
- மதுவால் மயங்கும் அளிபோல் மயங்கி மதியாது நின்ற பிழையால்
- விதுவாகி அன்பர் உளம்மேவும் நீகை விடில்ஏழை எங்கு மெலிவேன்
- இதுநீதி அல்ல எனஉன் றனக்கும் எவர்சொல்ல வல்லர் அரசே.
- முன்அறியேன் பின்அறியேன் மாதர் பால்என்
- மூடமனம் இழுத்தோடப் பின்சென் றெய்த்தேன்
- புன்னெறியேன் பொய்யரொடும் பயின்றேன் நின்றன்
- புனிதஅருட் கடலாடேன் புளகம் மூடேன்
- பொன்அரையன் தொழும்சடிலப் புனிதன் ஈன்ற
- புண்ணியமே தணிகைவளர் போத வாழ்வே
- என்அரைசே என்அமுதே நின்பால் அன்றி
- எவர்க்கெடுத்தென் குறைதன்னை இயம்பு கேனே.
- முலைஒருபால் முகம்ஒருபால் காட்டும் பொல்லா
- மூடமட வார்கள்தமை முயங்கி நின்றேன்
- இலைஒருபால் அனம்ஒருபால் மலஞ்சேர்த் துண்ணும்
- ஏழைமதி யேன்தணிகை ஏந்த லேபொன்
- மலைஒருபால் வாங்கியசெவ் வண்ண மேனி
- வள்ளல்தரு மருந்தேநின் மலர்த்தாள் ஏத்தேன்
- புலைஒருவா வஞ்சகநெஞ் சுடையேன் என்றன்
- புன்மைதனை எவர்க்கெடுத்துப் புகலு வேனே.
- முலைமுகங் காட்டி மயக்கிடும் கொடியார்
- முன்புழன் றேங்கும்இவ் எளியேன்
- நிலைமுகங் காட்டும் நின்திருப் பாத
- நீழல்வந் தடையும்நாள் என்றோ
- மலைமுகம் குழைய வளைத்திடும் தெய்வ
- மணிமகிழ் கண்ணினுள் மணியே
- கொலைமுகம் செல்லார்க் கருள்தருந் தணிகைக்
- குன்றமர்ந் திடுகுணக் குன்றே.
- முத்தனை முத்திக் கொருதனி வித்தை
- முதல்வனை முருகனை முக்கண்
- பித்தனை அத்தன் எனக்கொளும் செல்வப்
- பிள்ளையைப் பெரியவர் உளஞ்சேர்
- சுத்தனைப் பத்தி வலைப்படும் அவனைத்
- துரியனைத் துரியமும் கடந்த
- சத்தனை நித்த நின்மலச் சுடரைத்
- தணிகையில் கண்டிறைஞ் சுவனே.
- முன்னைப் பொருட்கு முதற்பொருளே முடியா தோங்கும் முதுமறையே
- முக்கட் கரும்பீன் றெடுத்தமுழு முத்தே முதிர்ந்த முக்கனியே
- பொன்னைப் புயங்கொண் டவன்போற்றும் பொன்னே புனித பூரணமே
- போத மணக்கும் புதுமலரே புலவர் எவரும் புகும்பதியே
- மின்னைப் பொருவும் உலகமயல் வெறுத்தோர் உள்ள விளக்கொளியே
- மேலும் கீழும் நடுவும்என விளங்கி நிறைந்த மெய்த்தேவே
- தன்னைப் பொருவும் சிவயோகம் தன்னை உடையோர் தம்பயனே
- தணிகா சலமாம் தலத்தமர்ந்த சைவ மணியே சண்முகனே.
- முருகா எனநின் றேத்தாத மூட ரிடம்போய் மதிமயங்கி
- முன்னும் மடவார் முலைமுகட்டின் முயங்கி அலைந்தே நினைமறந்தேன்
- உருகா வஞ்ச மனத்தேனை உருத்தீர்த் தியமன் ஒருபாசத்
- துடலும் நடுங்க விசிக்கில்அவர்க் குரைப்ப தறியேன் உத்தமனே
- பருகா துள்ளத் தினித்திருக்கும் பாலே தேனே பகர்அருட்செம்
- பாகே தோகை மயில்நடத்தும் பரமே யாவும் படைத்தோனே
- தருகா தலித்தோன் முடிகொடுத்த தரும துரையே தற்பரனே
- தணிகா சலமாந் தலத்தமர்ந்த சைவ மணியே சண்முகனே.
- முத்தியின் முதல்வ போற்றி மூவிரு முகத்த போற்றி
- சத்திவேற் கரத்த போற்றி சங்கரி புதல்வ போற்றி
- சித்திதந் தருளும் தேவர் சிகாமணி போற்றி போற்றி
- பத்தியின் விளைந்த இன்பப் பரம்பர போற்றி போற்றி.
- முருகநின் பாதம் போற்றி முளரியங் கண்ணற் கன்பாம்
- மருகநின் கழல்கள் போற்றி வானவர் முதல்வ போற்றி
- பெருகருள் வாரி போற்றி பெருங்குணப் பொருப்பே போற்றி
- தருகநின் கருணை போற்றி சாமிநின் அடிகள் போற்றி.
- முருகா சரணம் சரணம்என் றுன்பதம் முன்னிஉள்ளம்
- உருகாத நாயனை யேற்குநின் தண்ணருள் உண்டுகொலோ
- அருகாத பாற்கடல் மீதே அனந்தல் அமர்ந்தவன்றன்
- மருகாமுக் கண்ணவன் மைந்தா எழில்மயில் வாகனனே.
- முடியா முதலே சரணம் சரணம்
- முருகா குமரா சரணம் சரணம்
- வடிவேல் அரசே சரணம் சரணம்
- மயிலூர் மணியே சரணம் சரணம்
- அடியார்க் கெளியாய் சரணம் சரணம்
- அரியாய் பெரியாய் சரணம் சரணம்
- கடியாக் கதியே சரணம் சரணம்
- கந்தா சரணம் சரணம் சரணம்
- முடியா வளஞ்சூ ழொற்றியுளீர் முடிமே லிருந்த தென்னென்றேன்
- கடியா வுள்ளங் கையின்முதலைக் கடிந்த தென்றார் கமலமென
- வடிவார் கரத்தி லென்னென்றேன் வரைந்த வதனீ றற்றதென்றார்
- அடியார்க் கெளியா ரென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே.
- முன்செய்த மாதவத்தால் அருணகிரி நாதர்முன்னே முறையிட் டேத்தும்
- புன்செயல்தீர் திருப்புகழை ஏற்றருளும் மெய்ஞ்ஞான புனிதன் என்றே
- என்செயலில் இரவுபகல் ஒழியாமல் போற்றியிட இரங்கா தென்னே
- தென்திசைசேர்ந் தருள்புரியும் சிங்கபுரி தனில்அமர்ந்த தெய்வக் குன்றே.
- முச்சுடர் களுமொளி முயங்குற வளித்தருள்
- அச்சுட ராஞ்சபை யருட்பெருஞ் ஜோதி
- முந்துறு மைந்தொழின் மூர்த்திகள் பலர்க்கும்
- ஐந்தொழி லளிக்கு மருட்பெருஞ் ஜோதி
- முத்திறல் வடிவமு முன்னியாங் கெய்துறு
- மத்திற லெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி
- முத்தியென் பதுநிலை முன்னுறு சாதனம்
- அத்தக வென்றவென் னருட்பெருஞ் ஜோதி
- முளையதின் முளையும் முளையினுண் முளையும்
- அளைதர வமைத்த வருட்பெருஞ் ஜோதி
- முடியினுண் முடியும் முடியினின் முடியும்
- அடர்தர வமைத்த வருட்பெருஞ் ஜோதி
- முட்டைவாய்ப் பயிலு முழுவுயிர்த் திரள்களை
- அட்டமே காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
- முச்சுட ராதியா லெச்சக வுயிரையும்
- அச்சறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
- முத்தர்கள் சித்தர்கள் சத்திகள் சத்தர்கள்
- எத்திறத் தவர்க்குமா மென்றனி யின்பே
- மும்மையுந் தருமொரு செம்மையை யுடைத்தாய்
- இம்மையே கிடைத்திங் கிலங்கிய பொன்னே
- முன்னுறு மலவிருள் முழுவது நீக்கியே
- என்னுள வரைமே லெழுந்தசெஞ் சுடரே
- முன்னுங் கொடுமை பலபுரிந்து முடுகிப் பின்னுங் கொடுமைசெய
- உன்னுங் கொடியர் தமக்கும்அருள் உதவுங் கருணை உடையானே
- மன்னும் பதமே துணைஎன்று மதித்து வருந்தும் சிறியேனுக்
- கின்னுங் கருணை புரிந்திலைநான் என்ன கொடுமை செய்தேனோ.
- முன்னொடு பின்னும் நீ தரு மடவார் முயக்கினில் பொருந்தினேன் அதுவும்
- பொன்னொடு விளங்கும் சபைநடத் தரசுன் புணர்ப்பலால்என்புணர்ப்பலவே
- என்னொடும் இருந்திங் கறிகின்ற நினக்கே எந்தைவே றியம்புவதென்னோ
- சொன்னெடு வானத் தரம்பையர் எனினும் துரும்பெனக் காண்கின்றேன் தனித்தே.
- முனித்தவெவ் வினையோ நின்னருட் செயலோ தெரிந்திலேன் மோகமே லின்றித்
- தனித்தனி ஒருசார் மடந்தையர் தமக்குள்ஒருத்தியைக்கைதொடச்சார்ந்தேன்
- குனித்தமற் றவரைத் தொட்டனன் அன்றிக் கலப்பிலேன் மற்றிது குறித்தே
- பனித்தனன் நினைத்த தோறும்உள் உடைந்தேன் பகர்வதென் எந்தைநீ அறிவாய்.
- முன்னுழைப்பால் உறும்எனவே மொழிகின்றார் மொழியின்
- முடிவறியேன் எல்லாம்செய் முன்னவனே நீஎன்
- தன்னுழைப்பார்த் தருள்வாயேல் உண்டனைத்தும் ஒருநின்
- தனதுசுதந் தரமேஇங் கெனதுசுதந் தரமோ
- என்னுழைப்பால் என்பயனோ இரங்கிஅரு ளாயேல்
- யானார்என் அறிவெதுமேல் என்னைமதிப் பவரார்
- பொன்னுழைப்பால் பெறலும்அரி தருள்இலையேல் எல்லாம்
- பொதுநடஞ்செய் புண்ணியநீ எண்ணியவா றாமே.
- முன்ஒருநாள் மயங்கினன்நீ மயங்கேல்என் றெனக்கு
- முன்னின்உருக் காட்டினைநான் முகமலர்ந்திங் கிருந்தேன்
- இன்னும்வரக் காணேன்நின் வரவைஎதிர் பார்த்தே
- எண்ணிஎண்ணி வருந்துகின்றேன் என்னசெய்வேன் அந்தோ
- அன்னையினும் தயவுடையாய் நின்தயவை நினைத்தே
- ஆருயிர்வைத் திருக்கின்றேன் ஆணைஇது கண்டாய்
- என்இருகண் மணியேஎன் அறிவேஎன் அன்பே
- என்னுயிர்க்குப் பெருந்துணையே என்னுயிர்நா யகனே.
- முளையானைச் சுத்தசிவ வெளியில் தானே
- முளைத்தானை மூவாத முதலா னானைக்
- களையானைக் களங்கமெலாம் களைவித் தென்னைக்
- காத்தானை என்பிழையைக் கருதிக் கோபம்
- விளையானைச் சிவபோகம் விளைவித் தானை
- வேண்டாமை வேண்டல்இவை மேவி என்றும்
- இளையானை மூத்தானை மூப்பி லானை
- எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
- மும்மையை எல்லாம் உடையபே ரரசை
- முழுதொருங் குணர்த்திய உணர்வை
- வெம்மையைத் தவிர்த்திங் கெனக்கரு ளமுதம்
- வியப்புற அளித்தமெய் விளைவைச்
- செம்மையை எல்லாச் சித்தியும் என்பால்
- சேர்ந்திடப் புரிஅருட் டிறத்தை
- அம்மையைக் கருணை அப்பனை என்பே
- ரன்பனைக் கண்டுகொண் டேனே.
- முத்தா முத்தரு ளே - ஒளிர் - கின்ற முழுமுத லே
- சித்தா சித்திஎ லாந் - தர - வல்ல செழுஞ்சுட ரே
- பித்தா பித்தனெ னை - வலிந் - தாண்ட பெருந்தகை யே
- அத்தா தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே.
- முன்பே என்றனை யே - வலிந் - தாட்கொண்ட முன்னவ னே
- இன்பே என்னுயி ரே - எனை -ஈன்ற இறையவ னே
- பொன்பே ரம்பல வா - சிவ - போகஞ்செய் சிற்சபை வாழ்
- அன்பே தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே.
- முன்னவா திபர்க்கு முன்னவா வேத முடிமுடி மொழிகின்ற முதல்வா
- பின்னவா திபர்க்குப் பின்னவா எவர்க்கும் பெரியவா பெரியவர் மதிக்கும்
- சின்னவா சிறந்த சின்னவா ஞான சிதம்பர வெளியிலே நடிக்கும்
- மன்னவா அமுதம் அன்னவா எல்லாம் வல்லவா நல்லவாழ் வருளே.
- முத்தியைப் பெற்றேன்அம் முத்தியினால் ஞான
- சித்தியை உற்றேன்என்று உந்தீபற
- சித்தனும் ஆனேன்என்று உந்தீபற.
- முன்பின்அறி யாது மொழிந்தமொழி மாலைஎலாம்
- அன்பின் இசைந் தந்தோ அணிந்துகொண்டான் - என்பருவம்
- பாராது வந்தென் பருவரல்எல் லாம்தவிர்த்துத்
- தாரா வரங்களெலாம் தந்து.
- முத்தொழிலோ ஐந்தொழிலும் முன்னிமகிழ்ந் தெனக்களித்தாய்
- புத்தமுதம் உண்ணுவித்தோர் பொன்னணிஎன் கரத்தணிந்தாய்
- சித்தர்எனும் நின்னடியார் திருச்சபையில் நடுஇருத்திச்
- சித்துருவின் வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய்.
- முன்பாட்டுக் காலையிலே வருகுவர்என் கணவர்
- மோசம்இலை மோசம்என மொழிகின்றார் மொழிக
- பின்பாட்டுக் காலையிலே நினைத்தஎலாம் முடியும்
- பிசகிலைஇம் மொழிசிறிதும் பிசகிலைஇவ் வுலகில்
- துன்பாட்டுச் சிற்றினத்தார் சிறுமொழிகேட் டுள்ளம்
- துளங்கேல்நம் மாளிகையைச் சூழஅலங் கரிப்பாய்
- தன்பாட்டுத் திருப்பொதுவில் நடத்திறைவர் ஆணை
- சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே.
- முயன்றுலகில் பயன்அடையா மூடமதம் அனைத்தும்
- முடுகிஅழிந் திடவும்ஒரு மோசமும்இல் லாதே
- இயன்றஒரு சன்மார்க்கம் எங்குநிலை பெறவும்
- எம்மிறைவன் எழுந்தருளல் இதுதருணம் கண்டீர்
- துயின்றுணர்ந்தே எழுந்தவர்போல் இறந்தவர்கள் எல்லாம்
- தோன்றஎழு கின்றதிது தொடங்கிநிகழ்ந் திடும்நீர்
- பயின்றறிய விரைந்துவம்மின் படியாத படிப்பைப்
- படித்திடலாம் உணர்ந்திடலாம் பற்றிடலாம் சுகமே.
- முன்னுள மார்க்கங்கள் யாவும் முடிந்தன
- மன்னுள சுத்தசன் மார்க்கம் சிறந்தது
- பன்னுளந் தெளிந்தன பதிநடம் ஓங்கின
- என்னுளத் தருட்பெருஞ் சோதியார் எய்தவே.
- முன்பாடு பின்பயன்தந் திடும்எனவே உரைக்கின்றோர் மொழிகள் எல்லாம்
- இன்பாடும் இவ்வுலகில் என்னறிவில் இலைஅதனால் எல்லாம் வல்லோய்
- அன்பாடு திருப்பொதுவில் ஆடுகின்றோய் அருட்சோதி அளித்துக் காத்தல்
- உன்பாடு நான்உரைத்தேன் எனக்கொருபா டுண்டோநீ உரைப்பாய் அப்பா.
- முன்னாள்செய் புண்ணியம் யாதோ உலகம் முழுதும்என்பால்
- இந்நாள் அடைந்தின்பம் எய்திட ஓங்கினன் எண்ணியவா
- றெந்நாளும் இவ்வுடம் பேஇற வாத இயற்கைபெற்றேன்
- என்னாசை அப்பனைக் கண்டுகொண் டேன்என் இதயத்திலே.
- முந்தைநாள் அயர்ந்தேன் அயர்ந்திடேல் எனஎன்
- முன்னர்நீ தோன்றினை அந்தோ
- அந்தநாள் தொடங்கி மகிழ்ந்திருக் கின்றேன்
- அப்பனே அய்யனே அரசே
- இந்தநாள் கவலை இடர்பயம் எல்லாம்
- என்னைவிட் டொழிந்திடப் புரிந்தாய்
- எந்தநாள் புரிந்தேன் இப்பெரும் பேறிங்
- கெய்துதற் குரியமெய்த் தவமே.
- முக்குணமு மூன்றாம் ஜோதி - அவை
- முன்பின் இயங்க முடுக்கிய ஜோதி
- எக்குணத் துள்ளுமாம் ஜோதி - குணம்
- எல்லாம் கடந்தே இலங்கிய ஜோதி. சிவசிவ