- மூதீச் சரமென்று முன்னோர் வணங்குதிருக்
- கேதீச் சரத்திற் கிளர்கின்றோய் - ஓதுகின்றோர்
- மூளும் பெருங்குற்றம் முன்னிமேல் மேற்செயினும்
- நாளும் பொறுத்தருளும் நற்றாய்காண் - மூளுகின்ற
- மூலை எறும்புடன்ஈ மொய்ப்பதஞ்சி மற்றதன்மேல்
- சீலையிடக் கண்டும் தெரிந்திலையே - மேலையுறு
- மூவுலகும் சேர்த்தொருதம் முன்றானை யின்முடிவர்
- ஆவுனையும் இங்கார் அடக்குவரே - மேவுபல
- மூட நெஞ்சம்என் மொழிவழி நில்லா
- மோக வாரியின் முழுகுகின் றதுகாண்
- தேட என்வசம் அன்றது சிவனே
- திருவ ருட்கடல் திவலைஒன் றுறுமேல்
- நாட நாடிய நலம்பெறும் அதனால்
- நானும் உய்குவேன் நல்கிடல் வேண்டும்
- ஆடல் ஒற்றியாய் பெரும்பற்றப் புலியூர்
- அம்ப லத்தினின் றாடல்செய் அமுதே.
- மூவரை அளித்த முதல்வனை முக்கண் மூர்த்தியைத் தீர்த்தனைப் பெரிய
- தேவரைக் காத்த செல்வனை ஒற்றித் தியாகனை நினைந்துநின் றேத்தாப்
- பாவரை வரையாப் படிற்றரை வாதப் பதடரைச் சிதடரைப் பகைசேர்
- கோவரைக் கொடிய குணத்தரைக் கண்டால் கூசுவ கூசுவ விழியே.
- மூட னேன்பிழை முற்றும் பொறுத்துனைப்
- பாட வேஅருட் பாங்கெனக் கீதியேல்
- நாட வேறும னையிடை நண்ணிநான்
- வாட வேண்டுவ தென்னைஎம் வள்ளலே.
- மூவர்க் கரிய மருந்து - செல்வ
- முத்துக் குமாரனை யீன்ற மருந்து
- நாவிற் கினிய மருந்து - தையல்
- நாயகி கண்டு தழுவு மருந்து.
- மூவருக்கும் எட்டாது மூத்ததிரு அடிகள்
- முழுதிரவில் வருந்தியிட முயங்கிநடந் தருளி
- யாவருக்கும் இழிந்தேன்இங் கிருக்கும்இடத் தடைந்தே
- எழிற்கதவந் திறப்பித்துள் எனைஅழைத்து மகனே
- தேவருக்கும் அரிதிதனை வாங்கெனஎன் கரத்தே
- சித்தமகிழ்ந் தளித்தனைநின் திருவருள்என் என்பேன்
- பூவருக்கும் பொழிற்றில்லை அம்பலத்தே நடனம்
- புரிந்துயிருக் கின்பருளும் பூரணவான் பொருளே.
- மூடர்கள் தமக்குள் முற்படுங் கொடிய
- முறியனேன் தனக்குநின் அடியாம்
- ஏடவிழ் கமலத் திருநற வருந்த
- என்றுகொல் அருள்புரிந் திடுவாய்
- ஆடர வணிந்தே அம்பலத் தாடும்
- ஐயருக் கொருதவப் பேறே
- கோடணி தருக்கள் குலவும்நற் றணிகைக்
- குன்றமர்ந் திடுகுணக் குன்றே
- மூவடி வாகி நின்ற முழுமுதற் பரமே போற்றி
- மாவடி அமர்ந்த முக்கண் மலைதரு மணியே போற்றி
- சேவடி வழுத்தும் தொண்டர் சிறுமைதீர்த் தருள்வோய் போற்றி
- தூவடி வேல்கைக் கொண்ட சுந்தர வடிவே போற்றி
- மூவகைச் சித்தியின் முடிபுகள் முழுவதும்
- ஆவகை யெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி
- மூவிடத் திருமையின் முன்னிய தொழிற்கரில்
- ஆவிடத் தடக்கு மருட்பெருஞ் ஜோதி
- மூவிட மும்மையின் முன்னிய தொழிற்கரில்
- ஆவிட மடக்கு மருட்பெருஞ் ஜோதி
- மூவிரு நிலையின் முடிநடு முடிமேல்
- ஓவற விளங்கு மொருமைமெய்ப் பொருளே
- மூர்த்தர்கள் பலவாய் மூர்த்திகள் பலவாய்
- ஏற்பட விளக்கிடு மென்றனிச் சித்தே
- மூவரு முனிவரு முத்தருஞ் சித்தருந்
- தேவரு மதிக்குஞ் சித்திசெய் மணியே
- மூவருந் தேவரு முத்தருஞ் சித்தரும்
- யாவரும் பெற்றிடா வியலெனக் களித்தனை
- மூர்த்திகளும் நெடுங்காலம் முயன்றாலும் அறிய
- முடியாத முடிவெல்லாம் முன்னியஓர் தினத்தே
- ஆர்த்தியுடன் அறியஎனக் களித்தருளி அடியேன்
- அகத்தினைத்தன் இடமாக்கி அமர்ந்தஅருட் குருவே
- பார்த்திபரும் விண்ணவரும் பணிந்துமகிழ்ந் தேத்தப்
- பரநாத நாட்டரசு பாலித்த பதியே
- ஏர்த்திகழும் திருப்பொதுவில் இன்பநடத் தரசே
- என்னுடைய சொன்மாலை இலங்கஅணிந் தருளே.
- மூவிரு முடிபின் முடிந்ததோர்262 முடிபே
- முடிபெலாம் கடந்ததோர் முதலே
- தாவிய முதலும் கடையும்மேற் காட்டாச்
- சத்தியத் தனிநடு நிலையே
- மேவிய நடுவில் விளங்கிய விளைவே
- விளைவெலாம் தருகின்ற வெளியே
- பூவியல் அளித்த புனிதசற் குருவே
- பொதுநடம் புரிகின்ற பொருளே.
- மூவிரு முடிபும் கடந்ததோர் இயற்கை முடிபிலே முடிந்தென துடம்பும்
- ஆவியும் தனது மயம்பெறக் கிடைத்த அருட்பெருஞ் சோதிஅம் பலவா
- ஓவுரு முதலா உரைக்கும்மெய் உருவும் உணர்ச்சியும் ஒளிபெறு செயலும்
- மேவிநின் றவர்க்குள் மேவிய உணர்வுள் மேயவா தூயவாழ் வருளே.
- மூவர்களும் செய்ய முடியா முடிபெல்லாம்
- யாவர்களுங் காண எனக்களித்தாய் - மேவுகடை
- நாய்க்குத் தவிசளித்து நன்முடியும் சூட்டுதல்எந்
- தாய்க்குத் தனிஇயற்கை தான்.