- மெய்த்தான நின்றோர் வெளித்தான மேவுதிரு
- நெய்த்தானத் துள்ளமர்ந்த நித்தியமே - மைத்த
- மெச்சி நெறிக்கார்வ மேவிநின்றோர் சூழ்ந்ததிருக்
- கச்சி நெறிக்காரைக் காட்டிறையே - முச்சகமும்
- மெய்யடிய னென்றுரைக்க வித்தகநின் பொன்னடிக்குப்
- பொய்யடிமை வேடங்கள் பூண்டதுண்டு - நையமிகு
- மெய்வைத்த வேர்வையினும் வீழ்நிலத்தும் அண்டத்தும்
- செய்வித்தங் கூட்டுவிக்கும் சித்தனெவன் - உய்விக்கும்
- மெய்க்குமிழே நாசியென வெஃகினையால் வெண்மலத்தால்
- உய்க்குமிழுஞ் சீந்த லுளதேயோ - எய்த்தலிலா
- மெல்லியலார் என்பாய் மிகுகருப்ப வேதனையை
- வல்லியலார் யார்பொறுக்க வல்லார்காண் - வில்லியல்பூண்
- மெய்த்தாவும் செந்தோல் மினுக்கால் மயங்கினைநீ
- செத்தாலும் அங்கோர் சிறப்புளதே - வைத்தாடும்
- மென்றீயும் மிச்சில் விழைகின்றாய் நீவெறும்வாய்
- மென்றாலும் அங்கோர் விளைவுண்டே - முன்றானை
- மெய்கொடுத்த தென்பாய் விருத்தர்கட்கு நின்போல்வார்
- கைகொடுத்துப் போவதனைக் கண்டிலையோ - மெய்கொடுத்த
- மெய்யுலர்ந்து நீரின் விழியுலர்ந்து வாயுலர்ந்து
- கையுலர்ந்து நிற்பவரைக் கண்டிலையோ - மெய்யுலர்ந்தும்
- மெய்யென்கோ மாய விளைவென்கோ மின்னென்கோ
- பொய்யென்கோ மாயப் பொடியென்கோ - மெய்யென்ற
- மெய்யொழுக்கத் தார்போல் வெளிநின் றகத்தொழியாப்
- பொய்யொழுக்கத் தார்பால் பொருந்தியுறேல் - பொய்யொழுக்கில்
- மெய்தான் உடையோர் விரும்புகின்ற நின்அருளென்
- செய்தால் வருமோ தெரியேனே - பொய்தாவு
- நெஞ்சினேன் மன்றுள் நிருத்தா நினைக்கேட்க
- அஞ்சினேன் அன்பின்மை யால்.
- மெய்யாக நின்னைவிட வேறோர் துணையில்லேன்
- ஐயா அதுநீ அறிந்ததுகாண் - பொய்யான
- தீதுசெய்வேன் தன்பிழையைச் சித்தங் குறித்திடில்யான்
- யாதுசெய்வேன் அந்தோ இனி.
- மெய்ஞ்ஞான விருப்பத்தில் ஏறிக் கேள்வி
- மீதேறித் தெளிந்திச்சை விடுதல் ஏறி
- அஞ்ஞான மற்றபடி ஏறி உண்மை
- அறிந்தபடி நிலைஏறி அதுநான் என்னும்
- கைஞ்ஞானங் கழன்றேறி மற்ற எல்லாம்
- கடந்தேறி மவுனவியற் கதியில் ஏறி
- எஞ்ஞானம் அறத்தெளிந்தோர் கண்டுங் காணேம்
- என்கின்ற அநுபவமே இன்பத் தேவே.
- மெய்யுணர்ந்த வாதவூர் மலையைச் சுத்த
- வெளியாக்கிக் கலந்துகொண்ட வெளியே முற்றும்
- பொய்யுணர்ந்த எமைப்போல்வார் தமக்கும் இன்பம்
- புரிந்தருளும் கருணைவெள்ளப் பொற்பே அன்பர்
- கையுறைந்து வளர்நெல்லிக் கனியே உள்ளம்
- கரைந்துகரைந் துருகஅவர் கருத்தி னூடே
- உய்யுநெறி ஒளிகாட்டி வெளியும் உள்ளும்
- ஓங்குகின்ற சுயஞ்சுடரே உண்மைத் தேவே.
- மெய்விட்ட வஞ்சக நெஞ்சால் படுந்துயர் வெந்நெருப்பில்
- நெய்விட்ட வாறிந்த வாழ்க்கையின் வாதனை நேரிட்டதால்
- பொய்விட்ட நெஞ்சுறும் பொற்பதத் தைய இப் பொய்யனைநீ
- கைவிட் டிடநினை யேல்அருள் வாய்கரு ணைக்கடலே.
- மெய்யகத் தேகணப் போதும் விடாது விரும்புகின்றோர்
- கையகத் தேநின் றொளிர்கனி யேநுதற் கட்கரும்பே
- வையகத் தேநினை அல்லாமல் நற்றுணை மற்றிலைஇப்
- பொய்யகத் தேன்செயும் தீங்கா யிரமும் பொறுத்தருளே.
- மெய்ந்நீ ரொற்றி வாணரிவர் வெம்மை யுளநீர் வேண்டுமென்றா
- ரந்நீ ரிலைநீர் தண்ர்தா னருந்தி லாகா தோவென்றேன்
- முந்நீர் தனையை யனையீரிம் முதுநீ ருண்டு தலைக்கேறிற்
- றிந்நீர் காண்டி யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- மெல்லி தாயவி ரைமலர்ப் பாதனே
- வல்லி தாயம ருவிய நாதனே
- புல்லி தாயஇக் கந்தையைப் போர்த்தினால்
- கல்லி தாயநெஞ் சம்கரை கின்றதே.
- மெய்மையே அறிகிலா வீண னேன்இவன்
- உய்மையே பெறஉனை உன்னி ஏத்திடாக்
- கைமையே அனையர்தம் கடையில் செல்லவும்
- பொய்மையே உரைக்கவும் புணர்த்த தென்கொலோ.
- மெச்சு கின்றவர் வேண்டிய எல்லாம்
- விழிஇ மைக்குமுன் மேவல்கண் டுனைநான்
- நச்சு கின்றனன் நச்சினும் கொடியேன்
- நன்மை எய்தவோ வன்மையுற் றிடவோ
- இச்சை நன்றறி வாய்அருள் செய்யா
- திருக்கின் றாய் உனக் கியான்செய்த தென்னே
- செச்சை மேனிஎம் சிவபரஞ் சுடர்நின்
- சித்தம் அன்றியான் செய்வதொன் றிலையே.
- மெய்விளக்கே விளக்கல்லால் வேறுவிளக் கில்லைஎன்றார் மேலோர் நானும்
- பொய்விளக்கே விளக்கெனஉட் பொங்கிவழி கின்றேன்ஓர் புதுமை அன்றே
- செய்விளக்கும் புகழுடைய சென்னநகர் நண்பர்களே செப்பக் கேளீர்
- நெய்விளக்கே போன்றொருதண்ணீர்விளக்கும் எரிந்ததுசந் நிதியின் முன்னே.
- மெய்யர்உள் ளகத்தின் விளங்கும்நின் பதமாம்
- விரைமலர்த் துணைதமை விரும்பாப்
- பொய்யர் தம் இடத்திவ் வடியனேன் புகுதல்
- பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய்
- ஐயரும் இடப்பால் அம்மையும் வருந்தி
- அளித்திடும் தெள்ளிய அமுதே
- தையலார் மயக்கற் றவர்க்கருள் பொருளே
- தணிகைவாழ் சரவண பவனே.
- மெய்யாவோ நற்றணிகை மலையைச் சார்ந்து
- மேன்மையுறும் நின்புகழை விரும்பி ஏத்தேன்
- உய்யாவோ வல்நெறியேன் பயன்ப டாத
- ஓதிஅனையேன் எட்டிதனை ஒத்தேன் அன்பர்
- பொய்யாஓ டெனமடவார் போகம் வேட்டேன்
- புலையனேன் சற்றேனும் புனிதம் இல்லேன்
- ஐயாவோ நாணாமல் பாவி யேன்யான்
- யார்க்கெடுத்தென் குறைதன்னை அறைகு வேனே.
- மெய்யோர் தினைத்தனையும் அறிகிலார் பொய்க்கதை
- விளம்பஎனில் இவ்வுலகிலோ
- மேலுலகில் ஏறுகினும் அஞ்சாது மொழிவர்தெரு
- மேவுமண் ணெனினும்உதவக்
- கையோ மனத்தையும் விடுக்கஇசை யார்கள்கொலை
- களவுகட் காமம்முதலாக்
- கண்டதீ மைகள்அன்றி நன்மைஎன் பதனைஒரு
- கனவிலும் கண்டறிகிலார்
- ஐயோ முனிவர்தமை விதிப்படி படைத்தவிதி
- அங்கைதாங் கங்கைஎன்னும்
- ஆற்றில் குளிக்கினும் தீமூழ்கி எழினும்அவ்
- வசுத்தநீங் காதுகண்டாய்
- மையோர் அணுத்துணையும் மேவுறாத் தவசிகா
- மணிஉலக நாதவள்ளல்
- மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற
- வளர்வைத் தியநாதனே.
- மெய்யோர் சிறிதுமிலேன் வீண்மொழியா லூடியதை
- ஐயோ நினைக்கிலெனக் கஞ்சுங் கலங்குதடா.
- மென்மையின் மென்மையும் மென்மையில் வன்மையும்
- அன்மையற் றமைத்த வருட்பெருஞ் ஜோதி
- மெய்வைத் தழியா வெறுவெளி நடுவுறு
- தெய்வப் பதியாஞ் சிவமே சிவமே
- மெய்யெலாங் குளிர்ந்திட மென்மார் பசைந்திடக்
- கையெலாங் குவிந்திடக் காலெலாஞ் சுலவிட
- மெய்ச்சுகமும் உயிர்ச்சுகமும் மிகுங்கரணச் சுகமும்
- விளங்குபதச் சுகமும்அதன் மேல்வீட்டுச் சுகமும்
- எச்சுகமும் தன்னிடத்தே எழுந்தசுகம் ஆக
- எங்கணும்ஓர் நீக்கமற எழுந்தபெருஞ் சுகமே
- அச்சுகமும் அடையறிவும் அடைந்தவரும் காட்டா
- ததுதானாய் அதுஅதுவாய் அப்பாலாம் பொருளே
- பொய்ச்சுகத்தை விரும்பாத புனிதர்மகிழ்ந் தேத்தும்
- பொதுநடத்தென் அரசேஎன் புகலும்அணிந் தருளே.
- மெய்யனைஎன் துயர்தவிர்த்த விமலனைஎன்
- இதயத்தே விளங்கு கின்ற
- துய்யனைமெய்த் துணைவனைவான் துரியநிலைத்
- தலைவனைச்சிற் சுகந்தந் தானைச்
- செய்யனைவெண் நிறத்தனைஎன் சிவபதியை
- ஒன்றான தெய்வந் தன்னை
- அய்யனைச்சிற் றம்பலத்தென் அருட்பெருஞ்சோ
- தியைப்பெற்றேன் அச்சோ அச்சோ.
- மெய்ம்மையே கிடைத்த மெய்ம்மையே ஞான
- விளக்கமே விளக்கத்தின் வியப்பே
- கைம்மையே தவிர்த்து மங்கலம் அளித்த
- கருணையே கரிசிலாக் களிப்பே
- ஐம்மையே அதற்குள் அதுஅது ஆகும்
- அற்புதக் காட்சியே எனது
- பொய்ம்மையே பொருத்துப் புகலளித் தருளிப்
- பொதுநடம் புரிகின்ற பொருளே.
- மெய்யா மெய்யரு ளே - என்று - மேவிய மெய்ப்பொரு ளே
- கையா ருங்கனி யே - நுதற் - கண்கொண்ட செங்கரும் பே
- செய்யாய் வெண்ணிறத் தாய் - திருச் - சிற்றம்ப லநடஞ் செய்
- ஐயா தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே.
- மெய்வைப் பழியா நிலைக்கேற்றி விளங்கும் அமுதம் மிகஅளித்தே
- தெய்வப் பதியே சிவமேநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
- ஐவைப் பறிந்தேன் துரிசெல்லாம் அறுத்தேன் நின்பால் வளர்கின்றேன்
- பொய்வைப் படையேன் இவ்வுலகில் புரியும் பணியைப் புகன்றருளே.
- மெலிந்தஎன் உளத்தை அறிந்தனை தயவு
- மேவிலை என்னையோ என்றாள்
- நலிந்தபோ தின்னும் பார்த்தும்என் றிருத்தல்
- நல்லவர்க் கடுப்பதோ என்றாள்
- மலிந்த இவ்வுலகர் வாய்ப்பதர் தூற்ற
- வைத்தல்உன் மரபல என்றாள்
- வலிந்தெனைக் கலந்த வள்ளலே என்றாள்
- வரத்தினால் நான்பெற்ற மகளே.
- மெய்க்குலம் போற்ற விளங்கு மணாளர்
- வித்தகர் அம்பலம் மேவும் அழகர்
- இக்குல மாதரும் யானும்என் நாதர்
- இன்னருள் ஆடல்கள் பன்னுறும் போது
- பொய்க்குலம் பேசிப் புலம்பாதே பெண்ணே
- பூரண நோக்கம் பொருந்தினை நீதான்
- எக்குலம் என்கின்றார் என்னடி அம்மா
- என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா.
- மெய்தழைய உள்ளங் குளிர்ந்துவகை மாறாது
- மேன்மேற் கலந்துபொங்க
- விச்சைஅறி வோங்கஎன் இச்சைஅறி வனுபவம்
- விளங்கஅறி வறிவதாகி
- உய்தழை வளித்தெலாம் வல்லசித் ததுதந்
- துவட்டாதுள் ஊறிஊறி
- ஊற்றெழுந் தென்னையும் தானாக்கி என்னுளே
- உள்ளபடி உள்ளஅமுதே
- கைதழைய வந்தவான் கனியே எலாங்கண்ட
- கண்ணே கலாந்தநடுவே
- கற்பனைஇ லாதோங்கு சிற்சபா மணியே
- கணிப்பருங் கருணைநிறைவே
- துய்தழை பரப்பித் தழைந்ததரு வேஅருட்
- சுகபோக யோகஉருவே
- சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
- சோதிநட ராஜபதியே.
- மெச்சிஅப் பாவலர் போற்றப் பொதுவில் விளங்கியஎன்
- உச்சிஅப் பாஎன் னுடையஅப் பாஎன்னை உற்றுப்பெற்ற
- அச்சிஅப் பாமுக்கண் அப்பாஎன் ஆருயிர்க் கானஅப்பா
- கச்சிஅப் பாதங்கக் கட்டிஅப் பாஎன்னைக் கண்டுகொள்ளே.
- மெய்ப்பொரு ளென்னு மருந்து - எல்லா
- வேதா கமத்தும் விளங்கு மருந்து
- கைப்பொரு ளான மருந்து - மூன்று
- கண்கொண்ட என்னிரு கண்ணுள் மருந்து. ஞான
- மெய்யேமெய் யாகிய ஜோதி - சுத்த
- வேதாந்த வீட்டில் விளங்கிய ஜோதி
- துய்ய சிவானந்த ஜோதி - குரு
- துரியத் தலத்தே துலங்கிய ஜோதி. சிவசிவ
- மெய்யொன்று சன்மார்க்க மேதான் - என்றும்
- விளங்கப் படைப்பாதி மெய்த்தொழில் நீதான்
- செய்யென்று தந்தது பாரீர் - திருச்
- சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
- மெல்லியல் சிவகாம வல்லி யுடன்களித்து
- விளையா டவும்எங்கள் வினைஓ டவும்ஒளித்து
- எல்லையில் இன்பந்தரவும் நல்லசம யந்தானிது
- இங்குமங்கும் நடமாடி இருக்கலாம் என்றபோது
- வருவார ழைத்துவாடி வடலூர் வடதிசைக்கே
- வந்தாற் பெறலாம்நல்ல வரமே.