- வடிக்குந் தமிழ்த்தீந் தேன்என்ன வசனம் புகல்வார் ஒற்றிதனில்
- நடிக்குந் தியாகர் திருமுன்போய் நாராய் நின்று நவிற்றாயோ
- பிடிக்குங் கிடையா நடைஉடைய பெண்க ளெல்லாம் பிச்சிஎன
- நொடிக்கும் படிக்கு மிகுங்காம நோயால் வருந்தி நோவதுவே.
- வட்ட மதிபோல் அழகொழுகும் வதன விடங்கர் ஒற்றிதனில்
- நட்ட நவில்வார் அவர்முன்போய் நாராய் நின்று நவிற்றாயோ
- கட்ட அவிழ்ந்த குழல்முடியாள் கடுகி விழுந்த கலைபுனையாள்
- முட்ட விலங்கு முலையினையும் மூடாள் மதனை முனிந்தென்றே.
- வடியாக் கருணை வாரிதியாம் வள்ளல் உன்தாள் மலர்மறந்தே
- கொடியா ரிடம்போய்க்குறையிரந்தேன் கொடியேன் இனிஓர் துணைகாணேன்
- அடியார்க் கெளிய முக்கணுடை அம்மான் அளித்த அருமருந்தே
- முடியா முதன்மைப் பெரும்பொருளே முறையோ முறையோ முறையேயோ.
- வடுவுறு மசுத்த வாதனை யனைத்தையும்
- அடர்பற வடக்கு மருட்பெருஞ் ஜோதி
- வட்டியே பெருக்கிக் கொட்டியே ஏழை மனைகவர் கருத்தினேன் ஓட்டைச்
- சட்டியே எனினும் பிறர்கொளத் தரியேன் தயவிலேன் சூதெலாம் அடைத்த
- பெட்டியே நிகர்த்த மனத்தினேன் உலகில் பெரியவர் மனம்வெறுக் கச்செய்
- எட்டியே மண்ணாங் கட்டியே அனையேன் என்னினும் காத்தருள் எனையே.
- வட்டவான் சுடரே வளரொளி விளக்கே
- வயங்குசிற் சோதியே அடியேன்
- இட்டமே இட்டத் தியைந்துளே கலந்த
- இன்பமே என்பெரும் பொருளே
- கட்டமே தவிர்த்திங் கென்னைவாழ் வித்த
- கடவுளே கனகமன் றகத்தே
- நட்டமே புரியும் பேரரு ளரசே
- நம்பினேன் கைவிடேல் எனையே.
- வட்டிமேல் வட்டிகொள் மார்க்கத்தில் நின்றீர்
- வட்டியை வளர்க்கின்ற மார்க்கத்தை அறியீர்
- பெட்டிமேல் பெட்டிவைத் தாள்கின்றீர் வயிற்றுப்
- பெட்டியை நிரப்பிக்கொண் டொட்டியுள் இருந்தீர்
- பட்டினி கிடப்பாரைப் பார்க்கவும் நேரீர்
- பழங்கஞ்சி ஆயினும் வழங்கவும் நினையீர்
- எட்டிபோல் வாழ்கின்றீர் கொட்டிபோல் கிளைத்தீர்
- எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே.