- வெய்யாற்றி னின்றவரை மெய்யாற்றி னேற்றுதிரு
- ஐயாற்றின் மேவியஎன் னாதரவே - பொய்யாற்றி
- வெப்புங் கலையநல்லோர் மென்மதுரச் சொன்மாலை
- செப்புங் கலயநல்லூர்ச் சின்மயனே - செப்பமுடன்
- வெய்ய வலிவலத்தை வீட்டியன்பர்க் கின்னருள்செய்
- துய்ய வலிவலத்துச் சொன்முடிபே - நையுமன
- வெங்கருவூர் வஞ்ச வினைதீர்த் தவர்சூழ்ந்த
- நங்கருவூர்ச் செய்யுள் நவரசமே - தங்களற்றின்
- வெற்றியூ ரென்ன வினையேன் வினைதவிர்த்த
- ஒற்றியூர் மேவியஎன் உள்ளன்பே - தெற்றிகளில்
- வெண்மைமுதல் ஐவணமு மேவிஐந்து தேவர்களாய்த்
- திண்மைபெறும் ஐந்தொழிலுஞ் செய்வோனே - மண்முதலாம்
- வெஞ்சலஞ்செய் மாயா விகாரத்தி னால்வரும்வீண்
- சஞ்சலமெல்லா மெனது சம்பந்தம் - அஞ்செழுத்தை
- வெளியாய்ப் பரவெளியாய் மேவுபர விந்தின்
- ஒளியாய்ச் சிவானந்த ஊற்றாய்த் - தெளியாதி
- வெம்பாம்பை மேலணிந்தோர் வெம்புற்றின் உள்ளிருந்தே
- செம்பாம்பை ஆட்டுகின்ற சித்தனெவன் - தம்பாங்கர்
- வெண்மை கிழமாய் விருத்தமந்த வெண்மையதாய்த்
- திண்மை பெறச்செய்யும் சித்தனெவன் - ஒண்மையிலா
- வெம்புலியை வெண்பால் விளைபசுவாய் அப்பசுவைச்
- செம்புலியாச் செய்யவல்ல சித்தனெவன் - அம்புலியை
- வெண் றணிந்து விதிர்விதிர்த்து மெய்பொடிப்பக்
- கண்ர் அருவி கலந்தாடி- உண்ர்மை
- வெம்பிணியும் வேதனையும் வேசறிக்கை யும்துயரும்
- நம்பசியும் தீர்த்தருளும் நற்றாய்காண் - அம்புவியில்
- வெந்நீரில் ஆட்டிடிலெம் மெய்நோகும் என்றருளாம்
- நன்னீரில் ஆட்டுகின்ற நற்றாய்காண் - எந்நீரின்
- வென்னடைசேர்96 மற்றை விலங்கென்பேன் எவ்விலங்கும்
- மன்னவன்சேர் நாட்டில் வழங்காதே - நின்னையினி
- வெம்மால் மடந்தையரை மேவவொணா தாங்கவர்கள்
- தம்மாசை இன்னும் தவிர்ந்திலையே - இம்மாய
- வெற்பென்றால் ஏற விரைந்தறியாய் மாதர்முலை
- வெற்பென்றால் ஏற விரைந்தனையே - பொற்பொன்றும்
- வெவ்வினைக்கீ டாகஅரன் வெம்மைபுரி வானென்றால்
- இவ்வெகுளி யார்மாட் டிருத்துவதே - செவ்வையிலாய்
- வெள்ளத்தி னால்முழுகி விட்டதென்றால் சென்றுகடை
- கொள்ளத் திரிபவர்போல் கூடினையே - கொள்ளவிங்கு
- வெல்லுகின்றோர் போன்று விரிநீர் உலகிடையே
- சொல்லுகின்றோர் சொல்லும் சுகமன்று - சொல்லுகின்ற
- வெஞ்சஞ் சலமா விகாரம் எனும்பேய்க்கு
- நெஞ்சம் பறிகொடுத்து நிற்கின்றேன் - அஞ்சலென
- எண்தோள் இறையே எனையடிமை கொள்ளமனம்
- உண்டோ இலையோ உரை.
- வெங்கோடை ஆதபத்தின் வீழ்நீர் வறந்துலர்ந்து
- மங்கோடை யாதல் வழக்கன்றோ - எங்கோநின்
- சீர்சிந்தாச் சேவடியின் சீர்கேட்டும் ஆனந்த
- நீர்சிந்தா வன்கண் நிலை.
- வெள்ளமுதும் தேனும் வியன்கரும்பும் முக்கனியின்
- உள்ளமுதும் தெள்ளமுதும் ஒவ்வாதால் கள்ளமிலா
- நின்னன்பர் தம்புகழின் நீள்மதுரந் தன்னைஇனி
- என்னென்ப தையா இயம்பு.
- வெள்ளைப் பிறைஅணிந்த வேணிப் பிரானேநான்
- பிள்ளைப் பிராயத்தில் பெற்றாளை - எள்ளப்
- பொறுத்தாள்அத் தாயில் பொறுப்புடையோய் நீதான்
- வெறுத்தால் இனிஎன்செய் வேன்.
- வெள்ளமணி சடைக்கனியே மூவ ராகி
- விரிந்தருளும் ஒருதனியே விழல னேனைக்
- கள்ளமனக் குரங்காட்டும் ஆட்ட மெல்லாம்
- கண்டிருந்தும் இரங்கிலையேல் கவலை யாலே
- உள்ளமெலிந் துழல்கின்ற சிறியேன் பின்னர்
- உய்யும்வகை எவ்வகையீ துன்னுந் தோறும்
- பொள்ளெனமெய் வியர்க்கஉளம் பதைக்கச் சோபம்
- பொங்கிவழி கின்றதுநான் பொறுக்கி லேனே.
- வென்றே முதலையும் மூர்க்கரும் கொண்டது மீளவிடார்
- என்றே உரைப்பரிங் கென்போன்ற மூடர்மற் றில்லைநின்பேர்
- நன்றே உரைத்துநின் றன்றே விடுத்தனன் நாணில்என்மட்
- டின்றேயக் கட்டுரை இன்றேஎன் சொல்வ திறையவனே.
- வெப்பிலை யேஎனும் தண்விளக் கேமுக்கண் வித்தகநின்
- ஒப்பிலை யேஎனும் சீர்புக லார்புற்கை உண்ணுதற்கோர்
- உப்பிலை யேபொரு ளொன்றிலை யேஎன் றுழல்பவர்மேல்
- தப்பிலை யேஅவர் புன்தலை ஏட்டில் தவமிலையே.
- வெம்பெரு மானுக்குக் கைகொடுத் தாண்ட மிகுங்கருணை
- எம்பெரு மானுக்கு விண்ணப்பம் தேவர் இளம்பிடியார்
- தம்பெரு மானுக்கும் சார்மலை மானுக்கும் சாற்றுமைங்கைச்
- செம்பெரு மானுக்கும் எந்தாய்க்கும் நான்பணி செய்யச்செய்யே.
- வெள்ளம் குளிரும் சடைமுடி யோன்ஒற்றி வித்தகன்தன்
- உள்ளம் குளிரமெய் பூரிப்ப ஆனந்தம் ஊற்றெடுப்பத்
- தெள்ளம் குளிர்இன் அமுதே அளிக்கும்செவ் வாய்க்குமுத
- வள்ளம் குளிர்முத்த மானே வடிவுடை மாணிக்கமே.
- வெளியாய் வெளிக்குள் வெறுவெளி யாய்ச்சிவ மேநிறைந்த
- ஒளியாய் ஒளிக்குள் ஒளியாம் பரைநினை ஒப்பவரார்
- எளியார்க் கெளியர் திருவொற்றி யார்மெய் இனிதுபரி
- மளியாநின் றோங்கு மருவே வடிவுடை மாணிக்கமே.
- வெய்ய வினையின் வேர்அறுக்கும் மெய்ம்மை ஞான வீட்டிலடைந்
- துய்ய அமல நெறிகாட்டும் உன்னற் கரிய உணர்வளிக்கும்
- ஐயம் அடைந்த நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
- செய்ய மலர்க்கண் மால்போற்றும் சிவாய நமஎன் றிடுநீறே.
- வெள்ளி மாமலை வீடென உடையீர்
- விளங்கும் பொன்மலை வில்எனக் கொண்டீர்
- வள்ளி யீர்என நும்மைவந் தடைந்தால்
- வாய்தி றந்தொரு வார்த்தையும் சொல்லீர்
- எள்ளில் எண்ணெய்போல் எங்கணும் நின்றீர்
- ஏழை யேன்குறை ஏன்அறி யீரோ
- ஒள்ளி யீர்உமை அன்றிஒன் றறியேன்
- ஓங்கு சீர்ஒற்றி யூர்உடை யீரே.
- வெங்கொளித்தேள் போன்ற வினையால் வெதும்பிமனம்
- அங்கொளிக்கா துன்னை அழைத்தழுது வாடுகின்றேன்
- இங்கொளிக்கா நஞ்சமுண்ட என்அருமை அப்பாநீ
- எங்கொளித்தாய் ஒற்றி எழுத்தறியும் பெருமானே.
- வெற்றிப் படைவேல் பிள்ளை யோடும் வெற்பா ளொடும்தான் அமர்கின்ற
- மற்றிக் கோலம் கண்டு களிப்பான் வருந்தும் எமக்கொன் றருளானேல்
- கற்றைச் சடையான் கண்மூன் றுடையான் கரியோன் அயனும் காணாதான்
- பெற்றத் திவர்வான் ஒற்றித் தியாகப் பெருமான் பிச்சைப் பெருமானே.
- வெறிபி டிக்கினும் மகன்தனைப் பெற்றோர்
- விடுத்தி டார்அந்த வெறியது தீரும்
- நெறிபி டித்துநின் றாய்வரென் அரசே
- நீயும் அப்படி நீசனேன் தனக்குப்
- பொறிபி டித்தநல் போதகம் அருளிப்
- புன்மை யாவையும் போக்கிடல் வேண்டும்
- செறிபி டித்தவான் பொழில்ஒற்றி அமுதே
- தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே.
- வெள்விடை மேல்வரும் வீறுடை யானை
- வேதமு டிவினில் வீற்றிருந் தானைக்
- கள்விரை யார்மலர்க் கொன்றையி னானைக்
- கற்பகந் தன்னைமுக் கண்கொள்க ரும்பை
- உள்வினை நீக்கிஎன் உள்ளமர்ந் தானை
- உலகுடை யானைஎன் உற்றது ணையை
- எள்வினை ஒன்றும்இ லாதவன் தன்னை
- இன்றைஇ ரவில்எ திர்ந்துகொள் வேனே.
- வெண்மை சேர்அகங் காரமாம் வீணா
- விடுவி டென்றனை வித்தகம் உணராய்
- தண்மை இன்றிதற் கிதுஎனத் துணிந்தென்
- தனையும் சாய்ப்பது தகவென நினைத்தாய்
- அண்மை நின்றிடேல் சேய்மைசென் றழிநீ
- அன்றி நிற்றியேல் அரிமுதல் ஏத்தும்
- உண்மை ஒற்றியூர்ச் சிவன்அருள் வாளால்
- உன்னை வெட்டுவல் உண்மைஎன் றுணரே.
- வெல்லு கின்றனர் வினைப்புல வேடர்
- மெலிகின் றேன்இங்கு வீணினில் காலம்
- செல்லு கின்றன ஐயவோ சிவனே
- செய்வ தென்னைநான் சிறியருள் சிறியேன்
- சொல்லு கின்றனன் கேட்கின்றாய் கேட்டும்
- தூர நின்றனை ஈரமில் லார்போல்
- புல்லு கின்றசீர் ஒற்றியம் பரனே
- போற்றும் யாவர்க்கும் பொதுவில்நின் றவனே.
- வெருட்சி யேதரும் மலஇரா இன்னும்
- விடியக் கண்டிலேன் வினையினேன் உள்ளம்
- மருட்சி மேவிய தென்செய்கேன் உன்பால்
- வருவ தற்கொரு வழியும்இங் கறியேன்
- தெருட்சி யேதரும் நின்அருள் ஒளிதான்
- சேரில் உய்குவேன் சேர்ந்தில தானால்
- உருட்சி ஆழிஒத் துழல்வது மெய்காண்
- ஒற்றி மேவிய உலகுடை யோனே.
- வெண்மை நெஞ்சினேன் மெய்என்ப தறியேன்
- விமல நும்மிடை வேட்கையும் உடையேன்
- உண்மை ஓதினேன் வஞ்சக வாழ்க்கை
- உவரி வீழ்வனேல் உறுதிமற் றறியேன்
- கண்மை உள்ளவர் பாழ்ங்குழி வீழக்
- கண்டி ருப்பது கற்றவர்க் கழகோ
- நண்மை ஒற்றியீர் திருச்சிற்றம் பலத்துள்
- ஞான நாடகம் நவிற்றுகின் றீரே.
- வெள்ள மருவும் விரிசடையாய் என்னுடைய
- உள்ள விரிவும் உடல்மெலிவும் கண்டிருந்தும்
- தள்ளரிய நின்னருள்ஓர் சற்றும் புரியாமே
- கள்ளவினைக் கென்உளத்தைக் கைகாட்டி நின்றனையே.
- வெள்ளங்கொண் டோங்கும் விரிசடை யாய்மிகு மேட்டினின்றும்
- பள்ளங்கொண் டோங்கும் புனல்போல்நின் தண்ணருட் பண்புநல்லோர்
- உள்ளங்கொண் டோங்கும் அவமே பருத்த ஒதிஅனையேன்
- கள்ளங்கொண் டோங்கும் மனத்துறு மோஉறிற் காண்குவனே.
- வெட்டை மாட்டி விடாப்பெருந் துன்பநோய்
- விளைவ தெண்ணிலர் வேண்டிச்சென் றேதொழுக்
- கட்டை மாட்டிக் கொள்வார்என வேண்டிப்பெண்
- கட்டை மாட்டிக் கொள்வார்தங் கழுத்திலே
- துட்டை மாட்டின் கழுத்தடிக் கட்டையோ
- துணிக்கும் கட்டைய தாம்இந்தக் கட்டைதான்
- எட்டை மாட்டி உயிர்விடக் கட்டைமேல்
- ஏறும் போதும் இழுக்கின்ற கட்டையே.
- வெவ்வினைக் கீடான காயம்இது மாயம்என
- வேத முதல்ஆ கமம்எலாம்
- மிகுபறைஅ றைந்தும்இது வெயில்மஞ்சள் நிறம்எனும்
- விவேகர் சொற்கேட் டறிந்தும்
- கவ்வைபெறு கடலுலகில் வைரமலை ஒத்தவர்
- கணத்திடை இறத்தல் பலகால்
- கண்ணுறக் கண்டும்இப் புலைஉடலின் மானம்ஓர்
- கடுஅளவும் விடுவ தறியேன்
- எவ்வம்உறு சிறியனேன் ஏழைமதி என்னமதி
- இன்னமதி என்று ணர்கிலேன்
- இந்தமதி கொண்டுநான் எந்தவகை அழியாத
- இன்பநிலை கண்டு மகிழ்வேன்
- அவ்வியம்அ கற்றிஅருள் தில்லையம் பதிமருவும்
- அண்ணலார் மகிழும் மணியே
- அகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி
- வானந்த வல்லி உமையே.
- வெறுத்துரைத்தேன் பிழைகளெலாம் பொறுத்தருளல் வேண்டும்
- விளங்கறிவுக் கறிவாகி மெய்ப்பொதுவில் நடிப்போய்
- கறுத்துரைத்தார் தமக்கும்அருள் கனிந்துரைக்கும் பெரிய
- கருணைநெடுங் கடலேமுக் கண்ணோங்கு கரும்பே
- மறுத்துரைப்ப தெவன்அருள்நீ வழங்குகினும் அன்றி
- மறுத்திடினும் உன்னையலால் மற்றொருசார் பறியேன்
- செறுத்துரைத்த உரைகளெலாம் திருவருளே என்று
- சிந்திப்ப தல்லாமல் செய்வகைஒன் றிலனே.
- வெற்பை வளைத்தார் திருஒற்றி மேவி அமர்ந்தார் அவர்எனது
- கற்பை அழித்தார் மாலையிட்டுக் கணவர் ஆனார் என்பதல்லால்
- சிற்ப மணிமே டையில்என்னைச் சேர்ந்தார் என்ப தில்லையடி
- கொற்பை அரவின் இடையாய்என் குறையை எவர்க்குக் கூறுவனே.
- வென்றிக் கொடிமேல் விடைஉயர்த்தார் மேலார் ஒற்றி யூரர்என்பால்
- சென்றிக் குளிர்பூ மாலையிட்டார் சேர்ந்தார் அல்லர் யான்அவரை
- அன்றிப் பிறரை நாடினனோ அம்மா ஒன்றும் அறியனடி
- குன்றிற் றுயர்கொண் டழும்எனது குறையை எவர்க்குக் கூறுவனே.
- வெள்ளச் சடையார் விடையார்செவ் வேலார் நூலார் மேலார்தம்
- உள்ளத் துறைவார் நிறைவார்நல் ஒற்றித் தியாகப் பெருமானர்
- வள்ளற் குணத்தார் திருப்பவனி வந்தார் என்றார் அம்மொழியை
- விள்ளற் குள்ளே மனம்என்னை விட்டங் கவர்முன் சென்றதுவே.
- வெற்றி யிருந்த மழுப்படையார் விடையார் மேரு வில்லுடையார்
- பெற்றி யிருந்த மனத்தர்தமுட் பிறங்குந் தியாகப் பெருமானார்
- சுற்றி யிருந்த பெண்களெல்லாஞ் சொல்லி நகைக்க வருகணைந்தார்
- ஒற்றி யிருமென் றுரைத்தேனோ னொற்றி யிருந்தே னென்றாரே.
- வெண்மை நீற்றர் வெள்ளேற்றர் வேத கீதர் மெய்உவப்பார்
- வண்மை உடையார் ஒற்றியினார் மருவ மருவி மனமகிழ்ந்து
- வண்மை அகலா தருட்கடல்நீ ராடு வேனோ ஆடேனோ
- உண்மை அறிந்தீர் சோதிடம்பார்த் துரைப்பீர் புரிநூல் உத்தமரே.
- வெய்யபவக் கோடையிலே மிகஇளைத்து மெலிந்த
- மெய்யடியர் தமக்கெல்லாம் விரும்புகுளிர் சோலைத்
- துய்யநிழ லாய்அமுதாய் மெலிவனைத்துந் தவிர்க்கும்
- துணையடிகள் மிகவருந்தத் துணிந்துநடந் தடியேன்
- உய்யநடு இரவினில்யான் இருக்குமிடத் தடைந்தே
- உயர்கதவந் திறப்பித்தங் குவந்தழைத்தொன் றளித்தாய்
- வையகமும் வானகமும் வாழமணிப் பொதுவில்
- மாநடஞ்செய் அரசேநின் வண்மைஎவர்க் குளதே.
- வெற்ப னேதிருத் தணிகை வேலனே
- பொற்ப னேதிருப் போரி நாதனே
- கற்ப மேல்பல காலம் செல்லுமால்
- அற்ப னேன்துயர்க் களவு சாற்றவே.
- வெயில்மேல் கீடம் எனமடவார் வெய்ய மயற்கண் வீழாமே.
- அயில்மேல் கரங்கொள் நினைப்புகழும் அடியார்சவையின் அடையும்வகைக்
- குயில்மேல் குலவும் திருத்தணிகைக் குணப்பொற் குன்றே கொள்கலப
- மயில்மேல் மணியே நின்திருத்தாள் அடியேன் முடிமேல் வைப்பாயே.
- வெதிர்உள் ளவரின் மொழிகேளா வீண ரிடம்போய் மிகமெலிந்தே
- அதிரும் கழற்சே வடிமறந்தேன் அந்தோ இனிஓர் துணைகாணேன்
- எதிரும் குயில்மேல் தவழ்தணிகை இறையே முக்கண் இயற்கனியின்
- முதிரும் சுவையே முதற்பொருளே முறையோ முறையோ முறையேயோ.
- வெற்றார்புரம் எரித்தார்தரும் மேலார்மயில் மேலே
- உற்றார்அவர் எழில்மாமுகத் துள்ளேநகை கண்டேன்
- பொற்றார்புயங் கண்டேன்துயர் விண்டேன்எனைப் போல
- மற்றார்பெறு வாரோஇனி வாழ்வேன்மனம் மகிழ்ந்தே.
- வெம்பு முயிருக் கோருறவாய் வேளை நமனும் வருவானேல்
- தம்பி தமையன் துணையாமோ தனையர் மனைவி வருவாரோ
- உம்பர் பரவுந் திருத்தணிகை உயர்மா மலைமே லிருப்பவர்க்குத்
- தும்பைக் குடலை எடுக்காமல் துக்க வுடலை எடுத்தேனே.
- வெய்ய னாய்உல கழித்தலின் விசுவசங் காரி
- பைய மேலெனப் படுவன பலவற்றின் மேலாம்
- ஐயன் ஆதலிற் பராபர னாம்எனப் பட்ட
- செய்ய னாகிய சிவபிரான் ஒருவனுண் டமரீர்.
- வெருவாம லையோ விளம்பியசொல் லெல்லாம்
- ஒருவா நினைக்கிலெனக் குள்ள முருகுதடா.
- வெப்பில் கருணை விளக்கனையா யென்பிழையை
- ஒப்பி நினைக்கிலெனக் குள்ள முருகுதடா.
- வெம்மான் மனத்து வினையேன் புகன்றதெலாம்
- அம்மா நினைக்கிலெனக் கஞ்சுங் கலங்குதடா.
- வெருவிக்கும் வஞ்ச வெறுஞ்சொலெலாம் நெஞ்சில்
- வருவிக்குந் தோறுமுள்ளே வாளிட் டறுக்குதடா.
- வெந்நரகில் வீழும் விளைவால் விளம்பியதை
- என்னரசே யெண்ணுதொறு மென்னை விழுங்குதடா.
- வெருள்மன மாயை வினையிருணீக்கியுள்
- அருள்விளக் கேற்றிய வருட்பெருஞ் ஜோதி
- வெளியிடைப் பகுதியின் விரிவிய லணைவியல்
- அளியுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
- வெளியிடைப் பூவெலாம் வியப்புறு திறனெலாம்
- அளியுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
- வெளியினி லொலிநிறை வியனிலை யனைத்தும்
- அளியுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
- வெளியிடைக் கருநிலை விரிநிலை யருநிலை
- அளிகொள வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- வெளியிடை முடிநிலை விளங்குற வகுத்தே
- அளிபெற விளக்கு மருட்பெருஞ் ஜோதி
- வெளியினிற் சத்திகள் வியப்புற சத்தர்கள்
- அளியுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- வெளியிடை யொன்றே விரித்ததிற் பற்பல
- அளியுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- வெளியிடை பலவே விரித்ததிற் பற்பல
- அளிதர வமைத்த வருட்பெருஞ் ஜோதி
- வெளியிடை யுயிரியல் வித்தியல் சித்தியல்
- அளிபெற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
- வெளியி னனைத்தையும் விரித்ததிற் பிறவும்
- அளியுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
- வெவ்வே றியலொடு வெவ்வேறு பயனுற
- அவ்வா றமைத்த வருட்பெருஞ் ஜோதி
- வெண்மைத் திரையான் மெய்ப்பதி வெளியை
- அண்மையின் மறைக்கு மருட்பெருஞ் ஜோதி
- வெளிப்பட விரும்பிய விளைவெலா மெனக்கே
- யளித்தளித் தின்புசெய் யன்புடைத் தாயே
- வெம்மல விரவது விடிதரு ணந்தனிற்
- செம்மையி லுதித்துளந் திகழ்ந்தசெஞ் சுடரே
- வெல்கநின் பேரருள் வெல்கநின் பெருஞ்சீர்
- அல்கலின் றோங்கிய வருட்பெருஞ் ஜோதி
- வெடிக்கப் பார்த்து நிற்கின்ற வெய்யர் தமையும் வினைத்துயர்கள்
- பிடிக்கப் பார்க்கத் துணியாத பெருமான் நினது திருவுளந்தான்
- நடிக்கப் பார்க்கும் உலகத்தே சிறியேன் மனது நவையாலே
- துடிக்கப் பார்த்திங் கிருந்ததுகாண் ஐயோ இதற்குந் துணிந்ததுவோ.
- வெம்மதிக் கொடிய மகன்கொடுஞ் செய்கை விரும்பினும் அங்ஙனம் புரியச்
- சம்மதிக் கின்றார் அவன்றனைப் பெற்ற தந்தைதாய் மகன்விருப் பாலே
- இம்மதிச் சிறியேன் விழைந்ததொன் றிலைநீ என்றனை விழைவிக்க விழைந்தேன்
- செம்மதிக் கருணைத் திருநெறி இதுநின் திருவுளம் அறியுமே எந்தாய்.
- வெறுக்க மாட்டேன் நின்றனையே விரும்பிப் பிடித்தேன் துயர்சிறிதும்
- பொறுக்க மாட்டேன் உலகவர்போல் பொய்யிற் கிடந்து புரண்டினிநான்
- சிறுக்க மாட்டேன் அரசேநின் திருத்தாள் ஆணை நின்ஆணை
- மறுக்க மாட்டேன் வழங்குவன எல்லாம் வழங்கி வாழியவே.
- வெய்யலிலே நடந்திளைப்பு மேவியஅக் கணத்தே
- மிகுநிழலும் தண்ணமுதும் தந்தஅருள் விளைவே
- மையல்சிறி துற்றிடத்தே மடந்தையர்கள் தாமே
- வலிந்துவரச் செய்வித்த மாண்புடைய நட்பே
- கையறவால் கலங்கியபோ தக்கணத்தே போந்து
- கையறவு தவிர்த்தருளிக் காத்தளித்த துரையே
- ஐயமுறேல் என்றெனையாண் டமுதளித்த பதியே
- அம்பலத்தென் அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.
- வெம்மாலைச் சிறுவரொடும் விளையாடித் திரியும்
- மிகச்சிறிய பருவத்தே வியந்துநினை நமது
- பெம்மான்என் றடிகுறித்து பாடும்வகை புரிந்த
- பெருமானே நான்செய்த பெருந்தவமெய்ப் பயனே
- செம்மாந்த சிறியேனைச் சிறுநெறியில் சிறிதும்
- செலுத்தாமல் பெருநெறியில் செலுத்தியநற் றுணையே
- அம்மானே என்ஆவிக் கானபெரும் பொருளே
- அம்பலத்தென் அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.
- வெற்புறு முடியில் தம்பமேல் ஏற்றி
- மெய்ந்நிலை அமர்வித்த வியப்பே
- கற்புறு கருத்தில் இனிக்கின்ற கரும்பே
- கருணைவான் அமுதத்தெண் கடலே
- அற்புறும் அறிவில் அருள்ஒளி ஆகி
- ஆனந்த மாம்அனு பவமே
- பொற்புறு பதியே அற்புத நிதியே
- பொதுநடம் புரிகின்ற பொருளே.
- வெப்பார் உள்ளக் கலக்கமெலாம் இற்றைப் பொழுதே விலக்கிஒழித்
- திப்பா ரிடைஎன் கருத்தின்வண்ணம் எல்லாம் விரைவின் ஈந்தருள்க
- ஒப்பால் உரைத்த தன்றுண்மை உரைத்தேன் கருணை உடையானே
- அப்பா அரசே இனிச்சிறிதும் ஆற்ற மாட்டேன் கண்டாயே.
- வெறிக்கும் சமயக் குழியில்விழ விரைந்தேன் தன்னை விழாதவகை
- மறிக்கும் ஒருபே ரறிவளித்த வள்ளற் கொடியே மனக்கொடியைச்
- செறிக்கும் பெரியர் உளத்தோங்கும் தெய்வக் கொடியே சிவஞானம்
- குறிக்கும் கொடியே ஆனந்தக் கொடியே அடியேற் கருளுகவே.
- வெம்மத நெஞ்சிடை மேவுற உன்னார்
- வெம்பல மாற்றும்என் அம்பல வாணர்
- சம்மத மாமட வார்களும் நானும்
- தத்துவம் பேசிக்கொண் டொத்துறும் போது
- இம்மதம் பேசி இறங்காதே பெண்ணே
- ஏகசி வோகத்தை எய்தினை நீதான்
- எம்மதம் என்கின்றார் என்னடி அம்மா
- என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா.
- வெடித்தளிந்த முக்கனியின் வடித்தரசந் தனிலே
- விரும்புறநின் றோங்கியசெங் கரும்பிரதம் கலந்து
- தடித்தசெழும் பாற்பெய்து கோற்றேன்விட் டதனைத்
- தனித்தபரா அமுதத்தில் தான்கலந்துண் டாற்போல்
- இடித்திடித்தென் உளமுழுதும் தித்திக்கும் வார்த்தை
- இனிதுரைத்து மணம்புரிந்த என்னுயிர்நா யகர்வான்
- பொடித்திருமே னியர்நடனம் புரிகின்றார் அவர்தம்
- புகழ்உரைக்க வல்லேனோ அல்லேன்காண் தோழி.
- வெவ்வினையும் மாயை விளைவும் தவிர்ந்தனவே
- செவ்வைஅறி வின்பம் சிறந்தனவே - எவ்வயினும்
- ஆனான்சிற் றம்பலத்தே ஆடுகின்றான் தண்அருளாம்
- தேன்நான் உண் டோங்கியது தேர்ந்து.
- வெங்கேத மரணத்தை விடுவித்து விட்டேன்
- விச்சைஎ லாம்கற்றென் இச்சையின் வண்ணம்
- எங்கேயும் ஆடுதற் கெய்தினேன் தோழி
- என்மொழி சத்தியம் என்னோடும் கூடி
- இங்கே களிப்பது நன்றிந்த உலகோ
- ஏதக் குழியில் இழுக்கும் அதனால்
- அங்கேபா ராதேநீ ஆடேடி பந்து
- அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி
- வெளிக்குள் வெளியா மருந்து - எல்லா
- வெளியும் கடந்து விளங்கு மருந்து
- ஒளிக்குள் ஒளியா மருந்து - எல்லா
- ஒளியும்தா னாகிய உண்மை மருந்து. ஞான
- வெச்சென்ற மாயை வினையாதி யால்வந்த
- அச்சம் தவிர்க்குநம் ஐயர் பதத்திற்கே அபயம்
- வெவ்வினைக் காடெலாம் வேரொடு வெந்தது
- வெய்ய மாமாயை விரிவற்று நொந்தது
- செவ்விய ஞானம் சிறப்புற வந்தது
- சித்திகள் யாவையும் செய்திடத் தந்தது அற்புதம்
- வெய்யநொய்ய நையநைய மெய்புகன்ற துய்யனே
- ஐயர்ஐய நையும்வையம் உய்யநின்ற ஐயனே.
- வெடித்தளிந்த முக்கனியின் வடித்தரசந் தனிலே
- விரும்புறஉட் பிழிந்தெடுத்த கரும்பிரதம் கலந்த
- தடித்தசெழும் பாற்பெய்து கோற்றேன்விட் டதனைத்
- தனித்தபர அமுதத்தில் தான்கலந்துண் டாற்போல்
- இடித்திடித்தென் உளமுழுதும் தித்திக்கும் வார்த்தை
- இனிதுரைத்து மணம்புரிந்த என்னுயிர்நா யகர்வான்
- பொடித்திருமே னியர்அவரைப் புணரவல்லேன் அவர்தம்
- புகழ்உரைக்க வல்லேனோ அல்லேன்காண் தோழீ.