- கலிவிருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- சங்க பாணியைச் சதுமு கத்தனைச்
- செங்கண் ஆயிரத் தேவர் நாதனை
- மங்க லம்பெற வைத்த வள்ளலே
- தங்க ருள்திருத் தணிகை ஐயனே.
- ஐய னேநினை அன்றி எங்கணும்
- பொய்ய னேற்கொரு புகல்இ லாமையால்
- வெய்ய னேன்என வெறுத்து விட்டிடேல்
- மெய்ய னேதிருத் தணிகை வேலனே.
- வேலன் மாதவன் வேதன் ஏத்திடும்
- மேலன் மாமயில் மேலன் அன்பர்உள்
- சால நின்றவன் தணிகை நாயகன்
- வால நற்பதம் வைப்பென் நெஞ்சமே.
- நெஞ்ச மேஇஃ தென்னை நின்மதி
- வஞ்ச வாழ்வினில் மயங்கு கின்றனை
- தஞ்சம் என்றருள் தணிகை சார்த்தியேல்
- கஞ்ச மாமலர்க் கழல்கி டைக்குமே.
- கிடைக்குள் மாழ்கியே கிலம்செய் அந்தகன்
- படைக்குள் பட்டிடும் பான்மை எய்திடேன்
- தடைக்குள் பட்டிடாத் தணிகை யான்பதத்
- தடைக்க லம்புகுந் தருள்செ ழிப்பனே.
- செழிக்கும் சீர்திருத் தணிகைத் தேவநின்
- கொழிக்கும் நல்லருள் கொள்ளை கொள்ளவே
- தழிக்கொண் டன்பரைச் சார்ந்தி லேன்இவண்
- பழிக்குள் ஆகும்என் பான்மை என்னையோ.
- என்னை என்னைஈ தென்றன் மாதவம்
- முன்னை நன்னெறி முயன்றி லேனைநின்
- பொன்னை அன்னதாள் போற்ற வைத்தனை
- அன்னை என்னும்நல் தணிகை அண்ணலே.
- அண்ணி லேன்நினை ஐய நின்அடி
- எண்ணி லேன்இதற் கியாது செய்குவேன்
- புண்ணி னேன்பிழை பொறுத்துக் கோடியால்
- தண்ணின் நீள்பொழில் தணிகை அப்பனே.
- அப்பன் என்னுடை அன்னை தேசிகன்
- செப்பன் என்குலத் தெய்வம் ஆனவன்
- துப்பன் என்உயிர்த் துணைவன் யாதும்ஓர்
- தப்பில் அன்பர்சேர் தணிகை வள்ளலே.
- வள்ளல் உன்அடி வணங்கிப் போற்றஎன்
- உள்ளம் என்வசத் துற்ற தில்லையால்
- எள்ளல் ஐயவோ ஏழைஎன் செய்கேன்
- தள்ள ரும்பொழில் தணிகை வெற்பனே.
- வெற்ப னேதிருத் தணிகை வேலனே
- பொற்ப னேதிருப் போரி நாதனே
- கற்ப மேல்பல காலம் செல்லுமால்
- அற்ப னேன்துயர்க் களவு சாற்றவே.
- சாறு சேர்திருத் தணிகை எந்தைநின்
- ஆறு மாமுகத் தழகை மொண்டுகொண்
- டூறில் கண்களால் உண்ண எண்ணினேன்
- ஈறில் என்னுடை எண்ணம் முற்றுமோ.
- முற்று மோமனம் முன்னி நின்பதம்
- பற்று மோவினைப் பகுதி என்பவை
- வற்று மோசுக வாழ்வு வாய்க்குமோ
- சற்றும் ஓர்கிலேன் தணிகை அத்தனே.
- அத்த னேதணி காச லத்தருள்
- வித்த னேமயில் மேற்கொள் வேலனே
- பித்த னேன்பெரும் பிழைபொ றுத்திடில்
- சுத்த அன்பர்கள் சொல்வர் ஏதமே.
- ஏதி லார்என எண்ணிக் கைவிடில்
- நீதி யோஎனை நிலைக்க வைத்தவா
- சாதி வான்பொழில் தணிகை நாதனே
- ஈதி நின்அருள் என்னும் பிச்சையே.
- பிச்சை ஏற்றவன் பிள்ளை நீஎனில்
- இச்சை ஏற்றவர்க் கியாது செய்குவாய்
- பச்சை மாமயில் பரம நாதனே
- கச்சி நேர்தணி கைக்க டம்பனே.
- கடப்ப மாமலர்க் கண்ணி மார்பனே
- தடப்பெ ரும்பொழில் தணிகைத் தேவனே
- இடப்ப டாச்சிறி யேனை அன்பர்கள்
- தொடப்ப டாதெனில் சொல்வ தென்கொலோ.
- பிச்சை ஏற்றவன் பிள்ளை நீஎனில்
- இச்சை ஏற்றவர்க் கியாது செய்குவாய்
- பச்சை மாமயில் பரம நாதனே
- கச்சி நேர்தணி கைக்க டம்பனே.
- கடப்ப மாமலர்க் கண்ணி மார்பனே
- தடப்பெ ரும்பொழில் தணிகைத் தேவனே
- இடப்ப டாச்சிறி யேனை அன்பர்கள்
- தொடப்ப டாதெனில் சொல்வ தென்கொலோ.
- என்சொல் கேன்இதை எண்ணில் அற்புதம்
- வன்சொ லேன்பிழை மதித்தி டாதுவந்
- தின்சொ லால்இவண் இருத்தி என்றனன்
- தன்சொல் செப்பரும் தணிகைத் தேவனே.
- தேவ நேசனே சிறக்கும் ஈசனே
- பாவ நாசனே பரம தேசனே
- சாவ காசனே தணிகை வாசனே
- கோவ பாசனே குறிக்கொள் என்னையே.
- குறிக்கொள் அன்பரைக் கூடு றாதஇவ்
- வெறிக்கொள் நாயினை வேண்டி ஐயநீ
- முறிக்கொள் வாய்கொலோ முனிகொள் வாய்கொலோ
- நெறிக்கொள் வோர்புகழ் தணிகை நித்தனே.
- தணிகை மேவிய சாமி யேநினை
- எணிகை விட்டிடேல் என்று தோத்திரம்
- அணிகை நின்அடிக் கயர்ந்து நின்றுவீண்
- கணிகை போல்எனைக் கலக்கிற் றுள்ளமே.
- உள்ளம் நெக்குவிட் டுருகும் அன்பர்தம்
- நள்அ கத்தினில் நடிக்கும் சோதியே
- தள்அ ருந்திறல் தணிகை ஆனந்த
- வெள்ள மேமனம் விள்ளச் செய்வையே.
- செய்வ தன்றவன் சிறிய னேன்றனை
- வைவர் அன்பர்கள் என்னில் மத்தனேன்
- உய்வ தெவ்வணம் உரைசெய் அத்தனே
- சைவ நாதனே தணிகை மன்னனே.
- மன்னும் நின்அருள் வாய்ப்ப தின்றியே
- இன்னும் இத்துயர் ஏய்க்கில் என்செய்கேன்
- பொன்னின் அம்புயன் போற்றும் பாதனே
- தன்னில் நின்றிடும் தணிகை மேலனே.
- மேலை வானவர் வேண்டும் நின்திருக்
- காலை என்சிரம் களிக்க வைப்பையோ
- சாலை ஓங்கிய தணிகை வெற்பனே
- வேலை ஏந்துகை விமல நாதனே.
- வேத மாமுடி விளங்கும் நின்திருப்
- பாதம் ஏத்திடாப் பாவி யேன்தனக்
- கீதல் இன்றுபோ என்னில் என்செய்கேன்
- சாதல் போக்கும்நல் தணிகை நேயனே.
- நேயம் நின்புடை நின்றி டாதஎன்
- மாய நெஞ்சினுள் வந்தி ருப்பையோ
- பேய னேன்பெரும் பிழைபொ றுத்திடத்
- தாய நின்கடன் தணிகை வாணனே.
- வாணு தல்பெரு மாட்டி மாரொடு
- காணு தற்குனைக் காதல் கொண்டனன்
- ஏணு தற்கென தெண்ணம் முற்றுமோ
- மாணு தற்புகழ்த் தணிகை வண்ணனே.
- வண்ண னேஅருள் வழங்கும் பன்னிரு
- கண்ண னேஅயில் கரங்கொள் ஐயனே
- தண்ண னேர்திருத் தணிகை வேலனே
- திண்ணம் ஈதருள் செய்யும் காலமே.
- கால்கு றித்தஎன் கருத்து முற்றியே
- சால்வ ளத்திருத் தணிகை சார்வன்என்
- மால்ப கைப்பிணி மாறி ஓடவே
- மேல்கு றிப்பனால் வெற்றிச் சங்கமே.