- திருவொற்றியூரும் திருத்தில்லையும்
 - எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
 - திருச்சிற்றம்பலம்
 - இச்சை உண்டெனக் குன்திரு மலர்த்தாள்
 - எய்தும் வண்ணம்இங் கென்செய வல்லேன்
 - கொச்சை நெஞ்சம்என் குறிப்பில்நில் லாது
 - குதிப்பில் நின்றது மதிப்பின்இவ் வுலகில்
 - பிச்சை உண்டெனிற் பிச்சரிற் சீறும்
 - பேய ருண்மனை நாயென உழைத்தேன்
 - செச்சை மேனிஎம் திருவொற்றி அரசே
 - தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே.
 - ஐய நின்னுடை அன்பர்கள் எல்லாம்
 - அழிவில் இன்பமுற் றருகிருக் கின்றார்
 - வெய்ய நெஞ்சகப் பாவியேன் கொடிய
 - வீண னேன்இங்கு வீழ்கதிக் கிடமாய்
 - வைய வாழ்க்கையின் மயங்குகின் றனன்மேல்
 - வருவ தோர்ந்திலன் வாழ்வடை வேனோ
 - செய்ய வண்ணனே ஒற்றியம் பொருளே
 - தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே.
 - மடிகொள் நெஞ்சினால் வள்ளல்உன் மலர்த்தாள்
 - மறந்து வஞ்சக வாழ்க்கையை மதித்தேன்
 - துடிகொள் நேர்இடை மடவியர்க் குருகிச்
 - சுழல்கின் றேன்அருள் சுகம்பெறு வேனோ
 - வடிகொள் வேல்கரத் தண்ணலை ஈன்ற
 - வள்ள லேஎன வாழ்த்துகின் றவர்தம்
 - செடிகள் நீக்கிய ஒற்றியம் பரனே
 - தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே.
 - இருக்க வாவுற உலகெலாம் உய்ய
 - எடுத்த சேவடிக் கெள்ளள வேனும்
 - உருக்கம் ஒன்றிலேன் ஒதியினில் பெரியேன்
 - ஒண்மை எய்துதல் வெண்மைமற் றன்றே
 - தருக்க நின்றஎன் தன்மையை நினைக்கில்
 - தமிய னேனுக்கே தலைநடுக் குறுங்காண்
 - திருக்கண் மூன்றுடை ஒற்றிஎம் பொருளே
 - தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே.
 - எண்பெ றாவினைக் கேதுசெய் உடலை
 - எடுத்த நாள்முதல் இந்தநாள் வரைக்கும்
 - நண்பு றாப்பவம் இயற்றினன் அல்லால்
 - நன்மை என்பதோர் நாளினும் அறியேன்
 - வண்பெ றாவெனக் குன்திரு அருளாம்
 - வாழ்வு நேர்ந்திடும் வகைஎந்த வகையோ
 - திண்பெ றாநிற்க அருள்ஒற்றி அமுதே
 - தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே.
 - பேதை நெஞ்சினேன் செய்பிழை எல்லாம்
 - பேசி னால்பெரும் பிணக்கினுக் கிடமாம்
 - தாதை நீஅவை எண்ணலை எளியேன்
 - தனக்கு நின்திருத் தண்அளி புரிவாய்
 - கோதை நீக்கிய முனிவர்கள் காணக்
 - கூத்து கந்தருள் குணப்பெருங் குன்றே
 - தீதை நீக்கிய ஒற்றிஎம் பெருமான்
 - தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே.
 - வஞ்ச நெஞ்சர்தம் சேர்க்கையைத் துறந்து
 - வள்ளல் உன்திரு மலரடி ஏத்தி
 - விஞ்சு நெஞ்சர்தம் அடித்துணைக் கேவல்
 - விரும்பி நிற்கும்அப் பெரும்பயன் பெறவே
 - தஞ்சம் என்றருள் நின்திருக் கோயில்
 - சார்ந்து நின்றனன் தருதல்மற் றின்றோ
 - செஞ்சொல் ஓங்கிய ஒற்றிஎம் பெருமான்
 - தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே.
 - புல்ல னேன்புவி நடையிடை அலையும்
 - புலைய நெஞ்சினால் பொருந்திடும் கொடிய
 - அல்லல் என்பதற் கெல்லைஒன் றறியேன்
 - அருந்து கின்றனன் விருந்தினன் ஆகி
 - ஒல்லை உன்திருக் கோயில்முன் அடுத்தேன்
 - உத்த மாஉன்தன் உள்ளம்இங் கறியேன்
 - செல்லல் நீக்கிய ஒற்றியம் பொருளே
 - தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே.
 - எளிய னேன்பிழை இயற்றிய எல்லாம்
 - எண்ணி னுட்படா வேனும்மற் றவையை
 - அளிய நல்லருள் ஈந்திடும் பொருட்டால்
 - ஆய்தல் நன்றல ஆதலின் ஈண்டே
 - களிய நெஞ்சமாம் கருங்கலைக் கரைத்துக்
 - கருணை ஈகுதல் கடன்உனக் கையா
 - தெளிய ஓங்கிய ஒற்றிஎன் அமுதே
 - தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே.
 - வெறிபி டிக்கினும் மகன்தனைப் பெற்றோர்
 - விடுத்தி டார்அந்த வெறியது தீரும்
 - நெறிபி டித்துநின் றாய்வரென் அரசே
 - நீயும் அப்படி நீசனேன் தனக்குப்
 - பொறிபி டித்தநல் போதகம் அருளிப்
 - புன்மை யாவையும் போக்கிடல் வேண்டும்
 - செறிபி டித்தவான் பொழில்ஒற்றி அமுதே
 - தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே.