- திருவொற்றியூர்
- எழுசீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- வஞ்சக வினைக்கோர் கொள்கலம் அனைய மனத்தினேன் அனைத்தினும் கொடியேன்
- தஞ்சம்என் றடைந்தே நின்திருக் கோயில் சந்நிதி முன்னர்நிற் கின்றேன்
- எஞ்சலில் அடங்காப் பாவிஎன் றெனைநீ இகழ்ந்திடில் என்செய்வேன் சிவனே
- கஞ்சன்மால் புகழும் ஒற்றியங் கரும்பே கதிதரும் கருணையங் கடலே.
- நிற்பது போன்று நிலைபடா உடலை நேசம்வைத் தோம்புறும் பொருட்டாய்ப்
- பொற்பது தவிரும் புலையர்தம் மனைவாய்ப் புந்திநொந் தயர்ந்தழு திளைத்தேன்
- சொற்பதங் கடந்த நின்திரு வடிக்குத் தொண்டுசெய் நாளும்ஒன் றுளதோ
- கற்பது கற்றோர் புகழ்திரு வொற்றிக் காவல்கொள் கருணையங் கடலே.
- முன்னைவல் வினையால் வஞ்சக மடவார் முழுப்புலைக் குழிவிழுந் திளைத்தேன்
- என்னையோ கொடியேன் நின்திரு வருள்தான் எய்தில னேல்உயி‘க் குறுதிப்
- பின்னைஎவ் வணந்தான் எய்துவ தறியேன் பேதையில் பேதைநான் அன்றோ
- கன்னலே தேனே ஒற்றிஎம் அமுதே கடவுளே கருணையங் கடலே.
- மண்ணினுள் மயங்கி வஞ்சக வினையால் மனந்தளர்ந் தழுங்கிநாள் தோறும்
- எண்ணினுள் அடங்காத் துயரொடும் புலையர் இல்லிடை மல்லிடு கின்றேன்
- விண்ணினுள் இலங்கும் சுடர்நிகர் உனது மெல்அடிக் கடிமைசெய் வேனோ
- கண்ணினுள் மணியே ஒற்றியங் கனியே கடவுளே கருணையங் கடலே.
- அளவிலா உலகத் தனந்தகோ டிகளாம் ஆருயிர்த் தொகைக்குளும் எனைப்போல்
- இளகிலா வஞ்ச நெஞ்சகப் பாவி ஏழைகள் உண்டுகொல் இலைகாண்
- தளர்விலா துனது திருவடி எனும்பொற் றாமரைக் கணியனா குவனோ
- களவிலார்க் கினிய ஒற்றிஎம் மருந்தே கனந்தரும் கருணையங் கடலே.
- ஞானம்என் பதிலோர் அணுத்துணை யேனும் நண்ணிலேன் புண்ணியம் அறியேன்
- ஈனம்என் பதனுக் கிறைஎனல் ஆனேன் எவ்வணம் உய்குவ தறியேன்
- வானநா டவரும் பெறற்கரு நினது மலரடித் தொழும்புசெய் வேனோ
- கானவேட் டுருவாம் ஒருவனே ஒற்றிக் கடவுளே கருணையங் கடலே.
- ஞாலவாழ் வனைத்தும் கானல்நீர் எனவே நன்கறிந் துன்திரு அருளாம்
- சீலவாழ் வடையும் செல்வம்இப் பொல்லாச் சிறியனும் பெறுகுவ தேயோ
- நீலமா மிடற்றுப் பவளமா மலையே நின்மல ஆனந்த நிலையே
- காலன்நாண் அவிழ்க்கும் காலனே ஒற்றிக் கடவுளே கருணையங் கடலே.
- மாலொடு நான்கு வதனனும் காணா மலரடிக் கடிமைசெய் தினிப்பாம்
- பாலொடு கலந்த தேன்என உன்சீர் பாடும்நாள் எந்தநாள் அறியேன்
- வேலொடு மயிலும் கொண்டிடுஞ் சுடரை விளைவித்த வித்தக விளக்கே
- காலொடு பூதம் ஐந்துமாம் ஒற்றிக் கடவுளே கருணையங் கடலே.
- சற்றும்நற் குணந்தான் சார்ந்திடாக் கொடியார் தந்தலை வாயிலுள் குரைக்கும்
- வெற்றுநாய் தனக்கும் வேறுநா யாக மெலிகின்றேன் ஐம்புலச் சேட்டை
- அற்றுநின் றவர்க்கும் அரியநின் திருத்தாட் கடிமைசெய் தொழுகுவ னேயோ
- கற்றுமுற் றுணர்ந்தோர்க் கருள்தரும் ஒற்றிக் கடவுளே கருணையங்கடலே.
- மறைகளும் இன்னும் தலைத்தலை மயங்க மறைந்துல குயிர்தொறும் ஒளித்த
- இறைவநின் திருத்தாட் கன்பிலாக் கொடியன் என்னினும் ஏழையேன் தனக்கு
- நிறைதரும் நினது திருவருள் அளிக்க நினைத்தலே நின்கடன் கண்டாய்
- கறைமணி மிடற்றுத் தெய்வமே ஒற்றிக் காவல்கொள் கருணையங் கடலே.