- திருவொற்றியூர்
- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- உலக வாழ்க்கையின் உழலும்என் நெஞ்சம்
- ஒன்று கோடியாய்ச் சென்றுசென் றுலைந்தே
- கலக மாயையில் கவிழ்க்கின்ற தெளியேன்
- கலுழ்கின் றேன்செயக் கடவதொன் றறியேன்
- இலகும் அன்பர்தம் எய்ப்பினில் வைப்பே
- இன்ப வெள்ளமே என்னுடை உயிரே
- திலக மேதிரு ஒற்றிஎம் உறவே
- செல்வ மேபர சிவபரம் பொருளே.
- எண்ணி லாநினைப் புற்றதின் வழியே
- இன்ப துன்பங்கள் எய்திஎன் நெஞ்சம்
- கண்ணி லாக்குரங் கெனஉழன் றதுகாண்
- கடைய னேன்செயக் கடவதொன் றறியேன்
- பெண்நி லாவிய பாகத்தெம் அமுதே
- பிரமன் ஆதியர் பேசரும் திறனே
- தெண்நி லாமுடி ஒற்றியங் கனியே
- செல்வ மேபர சிவபரம் பொருளே.
- ஊண்உ றக்கமே பொருள்என நினைத்த
- ஒதிய னேன்மனம் ஒன்றிய தின்றாய்க்
- காணு றக்கருங் காமஞ்சான் றதுகாண்
- கடைய னேன்செயக் கடவதொன் றறியேன்
- மாணு றக்களங் கறுத்தசெம் மணியே
- வள்ள லேஎனை வாழ்விக்கும் மருந்தே
- சேணு றத்தரும் ஒற்றிநா யகமே
- செல்வ மேபர சிவபரம் பொருளே.
- யாது சொல்லினும் கேட்பதின் றந்தோ
- யான்செய் தேன்என தென்னும்இவ் இருளில்
- காது கின்றதென் வஞ்சக நெஞ்சம்
- கடைய னேன்செயக் கடவதொன் றறியேன்
- ஓது மாமறை உபநிட தத்தின்
- உச்சி மேவிய வச்சிர மணியே
- தீது நீக்கிய ஒற்றியந் தேனே
- செல்வ மேபர சிவபரம் பொருளே.
- சொல்லும் சொல்லள வன்றுகாண் நெஞ்சத்
- துடுக்க னைத்தும்இங் கொடுக்குவ தெவனோ
- கல்லும் பிற்படும் இரும்பினும் பெரிதால்
- கடைய னேன்செயக் கடவதொன் றறியேன்
- அல்லும் எல்லும்நின் றகங்குழைந் தேத்தும்
- அன்பருள் ஊறும் ஆனந்தப் பெருக்கே
- செல்லு லாம்பொழில் ஒற்றியங் கரும்பே
- செல்வ மேபர சிவபரம் பொருளே.
- இம்மை இன்பமே வீடெனக் கருதி
- ஈனர் இல்லிடை இடர்மிக உழந்தே
- கைம்மை நெஞ்சம்என் றனைவலிப் பதுகாண்
- கடைய னேன்செயக் கடவதொன் றறியேன்
- மும்மை யாகிய தேவர்தம் தேவே
- முக்கண் மூர்த்தியே முத்தியின் முதலே
- செம்மை மேனிஎம் ஒற்றியூர் அரசே
- செல்வ மேபர சிவபரம் பொருளே.
- நின்ன டிக்கண்ஓர் கணப்பொழு தேனும்
- நிற்ப தின்றியே நீசமங் கையர்தம்
- கன்ன வில்தனம் விழைந்தது மனம்காண்
- கடைய னேன்செயக் கடவதொன் றறியேன்
- அன்ன ஊர்தியும் மாலும்நின் றலற
- அடியர் தங்களுள் அமர்ந்தருள் அமுதே
- தென்இ சைப்பொழில் ஒற்றிஎம் வாழ்வே
- செல்வ மேபர சிவபரம் பொருளே.
- புலைய மங்கையர் புணர்முலைக் குவட்டில்
- போந்து ருண்டெனைப் புலன்வழிப் படுத்திக்
- கலைய நின்றதிக் கல்லுறழ் மனந்தான்
- கடைய னேன்செயக் கடவதொன் றறியேன்
- விலையி லாஉயர் மாணிக்க மணியே
- வேத உச்சியில் விளங்கொளி விளக்கே
- சிலைவி லாக்கொளும் ஒற்றிஎம் மருந்தே
- செல்வ மேபர சிவபரம் பொருளே.
- தந்தை தாய்மனை மக்கள்என் றுலகச்
- சழக்கி லேஇடர் உழக்கும்என் மனந்தான்
- கந்த வாதனை இயற்றுகின் றதுகாண்
- கடைய னேன்செயக் கடவதொன் றறியேன்
- எந்தை யேஎனை எழுமையும் தொடர்ந்த
- இன்ப வெள்ளமே என்உயிர்க் குயிரே
- சிந்தை ஓங்கிய ஒற்றிஎந் தேவே
- செல்வ மேபர சிவபரம் பொருளே.
- கொடிய வஞ்சக நெஞ்சகம் எனும்ஓர்
- குரங்கிற் கென்உறு குறைபல உரைத்தும்
- கடிய தாதலின் கசிந்தில தினிஇக்
- கடைய னேன்செயக் கடவதொன் றறியேன்
- அடிய னேன்பிழை உளத்திடை நினையேல்
- அருளல் வேண்டும்என் ஆருயிர்த் துணையே
- செடிகள் நீக்கிய ஒற்றிஎம் உறவே
- செல்வ மேபர சிவபரம் பொருளே.