- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- சொல்லும் பொருளு மாய்நிறைந்த சுகமே அன்பர் துதிதுணையே
- புல்லும் புகழ்சேர் நல்தணிகைப் பொருப்பின் மருந்தே பூரணமே
- அல்லும் பகலும் நின்நாமம் அந்தோ நினைந்துன் ஆளாகேன்
- கல்லும் பொருவா வன்மனத்தால் கலங்கா நின்றேன் கடையேனே.
- கடையேன் வஞ்ச நெஞ்சகத்தால் கலுழ்கின் றேன்நின் திருக்கருணை
- அடையேன் அவமே திரிகின்றேன் அந்தோ சிறிதும் அறிவில்லேன்
- விடையே றீசன் புயம்படும்உன் விரைத்தாள் கமலம் பெறுவேனோ
- கொடைஏர் அருளைத் தருமுகிலே கோவே தணிகைக் குலமணியே.
- மணியே அடியேன் கண்மணியே மருந்தே அன்பர் மகிழ்ந்தணியும்
- அணியே தணிகை அரசேதெள் அமுதே என்றன் ஆருயிரே
- பிணிஏய் துயரால் வருந்திமனப் பேயால் அலைந்து பிறழ்கின்றேன்
- தணியேன் தாகம் நின்அருளைத் தருதல் இலையேல் தாழ்வேனே.
- தாழ்வேன் வஞ்ச நெஞ்சகர்பால் சார்வேன் தனக்குன் அருள்தந்தால்
- வாழ்வேன் இலையேல் என்செய்கேன் வருத்தம் பொறுக்க மாட்டேனே
- ஏழ்வே தனையும் கடந்தவர்தம் இன்பப் பெருக்கே என்உயிரே
- போழ்வேல் கரங்கொள் புண்ணியனே புகழ்சேர் தணிகைப் பொருப்பரசே.
- அரைசே அடியர்க் கருள்குகனே அண்ணா தணிகை ஐயாவே
- விரைசேர் கடம்ப மலர்ப்புயனே வேலா யுதக்கை மேலோனே
- புரைசேர் மனத்தால் வருந்திஉன்றன் பூம்பொற் பதத்தைப் புகழ்கில்லேன்
- தரைசேர் வாழ்வில் தயங்குகின்றேன் அந்தோ நின்று தனியேனே.
- தனியே துயரில் வருந்திமனம் சாம்பி வாழ்க்கைத் தளைப்பட்டிங்
- கினிஏ துறுமோ என்செய்கேன் என்றே நின்றேற் கிரங்காயோ
- கனியே பாகே கரும்பேஎன் கண்ணே தணிகைக் கற்பகமே
- துனிஏய் பிறவி தனைஅகற்றும் துணையே சோதிச் சுகக்குன்றே.
- குன்றே மகிழ்ந்த குணக்குன்றே கோவே தணிகைக் குருபரனே
- நன்றே தெய்வ நாயகமே நவிலற் கரிய நல்உறவே
- என்றே வருவாய் அருள்தருவாய் என்றே புலம்பி ஏங்குற்றேன்
- இன்றே காணப் பெறில்எந்தாய் இறவேன் பிறவேன் இருப்பேனே.
- இருப்பேன் துயர்வாழ் வினில்எனினும் எந்தாய் நினது பதங்காணும்
- விருப்பேன் அயன்மால் முதலோரை வேண்டேன் அருள வேண்டாயோ
- திருப்பேர் ஒளியே அருட்கடலே தெள்ளார் அமுதே திருத்தணிகைப்
- பொருப்பே மகிழ்ந்த புண்ணியமே புனித ஞான போதகமே.
- போதா நந்த அருட்கனியே புகலற் கரிய பொருளேஎன்
- நாதா தணிகை மலைஅரசே நல்லோர் புகழும் நாயகனே
- ஓதா தவமே வருந்துயரால் உழன்றே பிணியில் உலைகின்றேன்
- ஏதாம் உனதின் அருள்ஈயா திருந்தால் அந்தோ எளியேற்கே.
- எளியேன் நினது திருவருளுக் கெதிர்நோக் குற்றே இரங்குகின்ற
- களியேன் எனைநீ கைவிட்டால் கருணைக் கியல்போ கற்பகமே
- அளியே தணிகை அருட்சுடரே அடியர் உறவே அருள்ஞானத்
- துளியே அமையும் எனக்கெந்தாய் வாஎன் றொருசொல் சொல்லாயே.