- திருவொற்றியூர்
- கட்டளைக் கலித்துறை
- திருச்சிற்றம்பலம்
- நின்போன்ற தெய்வம்ஒன் றின்றென வேதம் நிகழ்த்தவும்நின்
- பொன்போன்ற ஞானப் புதுமலர்த் தாள்துணைப் போற்றுகிலேன்
- என்போன்ற ஏழையர் யாண்டுளர் அம்பலத் தேநடஞ்செய்
- மின்போன்ற வேணிய னேஒற்றி மேவிய வேதியனே.
- வேதிய னேவெள்ளி வெற்பிடை மேவிய வித்தகனே
- நீதிய னேமன்றில் நிட்கள ஆனந்த நிர்த்தமிடும்
- ஆதிய னேஎமை ஆண்டவ னேமலை யாள்மகிழும்
- பாதிய னேஎம் பராபர னேமுக்கட் பண்ணவனே.
- பண்ணவ னேபசு பாசத்தை நீக்கும் பரம்பரனே
- மண்ணவ னேனை மகிழ்ந்தவ னேமலம் மாற்றுகின்ற
- விண்ணவ னேவெள் விடையவ னேவெற்றி மேவுநெற்றிக்
- கண்ணவ னேஎனைக் காத்தவ னேஒற்றிக் காவலனே.
- காவல னேஅன்று மாணிக்குப் பொற்கிழிக் கட்டவிழ்த்த
- பாவல னேதொழும் பாணன் பரிசுறப் பாட்டளித்த
- நாவல னேதில்லை நாயக னேகடல் நஞ்சைஉண்ட
- மாவல னேமுக்கண் வானவ னேஒற்றி மன்னவனே.
- மன்னவ னேகொன்றை மாலைய னேதிரு மாலயற்கு
- முன்னவ னேஅன்று நால்வர்க்கும் யோக முறைஅறந்தான்
- சொன்னவ னேசிவ னேஒற்றி மேவிய தூயவனே
- என்னவ னேஐயம் ஏற்பவ னேஎனை ஈன்றவனே.
- ஈன்றவ னேஅன்பர் இன்னுயிர்க் கின்புறும் இன்னமுதம்
- போன்றவ னேசிவ ஞானிகள் உள்ளுறும் புண்ணியனே
- ஆன்றவ னேஎம துள்ளும் புறம்பும் அறிந்துநின்ற
- சான்றவ னேசிவ னேஒற்றி மேவிய சங்கரனே.
- சங்கர னேஅர னேபர னேநற் சராசரனே
- கங்கர னேமதிக் கண்ணிய னேநுதல் கண்ணினனே
- நங்கர மேவிய அங்கனி போன்றருள் நாயகனே
- செங்கர னேர்வண னேஒற்றி மேவிய சின்மயனே.
- சின்மய னேஅனல் செங்கையில் ஏந்திய சேவகனே
- நன்மைய னேமறை நான்முகன் மாலுக்கு நாடரிதாம்
- தன்மைய னேசிவ சங்கர னேஎஞ் சதாசிவனே
- பொன்மய னேமுப் புராந்தக னேஒற்றிப் புண்ணியனே.
- புண்ணிய னேஎமைப் போல்வார்க்கும் இன்பப் பொருள்அளிக்கும்
- திண்ணிய னேநற் சிவஞான நெஞ்சில் தெளிந்தஅருள்
- அண்ணிய னேகங்கை ஆறமர் வேணியில் ஆர்ந்தமதிக்
- கண்ணிய னேபற் பலவாகும் அண்டங்கள் கண்டவனே.
- கண்டவ னேசற்றும் நெஞ்சுரு காக்கொடுங் கள்வர்தமை
- விண்டவ னேகடல் வேம்படி பொங்கும் விடம்அனைத்தும்
- உண்டவ னேமற்றும் ஒப்பொன் றிலாத உயர்வுதனைக்
- கொண்டவ னேஒற்றிக் கோயிலின் மேவும் குருபரனே.