- திருவொற்றியூர்
- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- ஆக்கல் ஆதிய ஐந்தொழில் நடத்த
- அயன்முன் ஆகிய ஐவரை அளித்து
- நீக்கம் இன்றிஎவ் விடத்தினும் நிறைந்த
- நித்த நீஎனும் நிச்சயம் அதனைத்
- தாக்க எண்ணியே தாமதப் பாவி
- தலைப்பட் டான்அவன் தனைஅகற் றுதற்கே
- ஊக்கம் உற்றநின் திருவருள் வேண்டும்
- ஒற்றி ஓங்கிய உத்தமப் பொருளே.
- கணத்தில் என்னைவிட் டேகுகின் றவன்போல்
- காட்டு கின்றனன் மீட்டும்வந் தடுத்துப்
- பணத்தும் மண்ணினும் பாவைய ரிடத்தும்
- பரவ நெஞ்சினை விரவுகின் றனன்காண்
- குணத்தி னில்கொடுந் தாமதன் எனும்இக்
- கொடிய வஞ்சகன் ஒடியமெய்ப் போதம்
- உணர்த்து வார்இலை என்செய்கேன் எளியேன்
- ஒற்றி ஓங்கிய உத்தமப் பொருளே.
- இமைக்கும் அவ்வள வேனும்நெஞ் சொடுங்கி
- இருக்கக் கண்டிலேன் இழிவுகொள் மலத்தின்
- சுமைக்கு நொந்துநொந் தையவோ நாளும்
- துயர்கின் றேன்அயர் கின்றஎன் துயரைக்
- குமைக்கும் வண்ணம்நின் திருவருள் இன்னும்
- கூடப் பெற்றிலேன் கூறுவ தென்னே
- உமைக்கு நல்வரம் உதவிய தேவே
- ஒற்றி ஓங்கிய உத்தமப் பொருளே.
- சென்ற நாளில்ஓர் இறைப்பொழு தேனும்
- சிந்தை ஓர்வகை தெளிந்ததன் றதுபோய்
- நின்ற நாளினும் நிற்கின்ற திலைகாண்
- நெடிய பாவியேன் நிகழ்த்துவ தென்னே
- என்றன் ஆருயிர்க் கொருபெருந் துணையாம்
- எந்தை யேஎனை எழுமையும் காத்த
- உன்ற னால்இன்னும் உவகைகொள் கின்றேன்
- ஒற்றி ஓங்கிய உத்தமப் பொருளே.
- கோடி நாவினும் கூறிட அடங்காக்
- கொடிய மாயையின் நெடியவாழ்க் கையினை
- நாடி நெஞ்சகம் நலிகின்றேன் உனையோர்
- நாளும் எண்ணிலேன் நன்கடை வேனே
- வாடி னேன்பிழை மனங்கொளல் அழியா
- வாழ்வை ஏழையேன் வசஞ்செயல் வேண்டும்
- ஊடி னாலும்மெய் அடியரை இகவா
- ஒற்றி மேவிய உத்தமப் பொருளே.
- அன்ப தென்பதைக் கனவினும் காணேன்
- ஆடு கின்றனன் அன்பரைப் போல
- வன்ப வத்தையும் மாய்த்திட நினைத்தேன்
- வஞ்ச நெஞ்சினை வசப்படுக் கில்லேன்
- துன்ப வாழ்க்கையில் சுழல்கின்றேன் நின்னைத்
- தொழுது வாழ்த்திநல் சுகம்பெறு வேனே
- ஒன்ப தாகிய உருவுடைப் பெரியோய்
- ஒற்றி ஓங்கிய உத்தமப் பொருளே.
- முன்னை நான்செய்த வல்வினை இரண்டின்
- முடிவு தேர்ந்திலன் வடிவெடுத் துலகில்
- என்னை நான்கண்ட தந்தநாள் தொடங்கி
- இந்த நாள்மட்டும் இருள் என்ப தல்லால்
- பின்னை யாதொன்றும் பெற்றிலேன் இதனைப்
- பேச என்னுளம் கூசுகின் றதுகாண்
- உன்னை நம்பினேன் நின்குறிப் புணரேன்
- ஒற்றி ஓங்கிய உத்தமப் பொருளே.
- கண்ணி லான்சுடர் காணிய விழைந்த
- கருத்தை ஒத்தஎன் கருத்தினை முடிப்பத்
- தெண்ணி லாமுடிச் சிவபரம் பொருள்நின்
- சித்தம் எப்படி தெரிந்திலன் எளியேன்
- பண்ணி லாவிய பாடலந் தொடைநின்
- பாத பங்கயம் பதிவுறப் புனைவோர்
- உண்ணி லாவிய ஆனந்தப் பெருக்கே
- ஒற்றி ஓங்கிய உத்தமப் பொருளே.
- உண்மை நின்அருட் சுகம்பிற எல்லாம்
- உண்மை அன்றென உணர்த்தியும் எனது
- பெண்மை நெஞ்சகம் வெண்மைகொண் டுலகப்
- பித்தி லேஇன்னும் தொத்துகின் றதுகாண்
- வண்மை ஒன்றிலேன் எண்மையின் அந்தோ
- வருந்து கின்றனன் வாழ்வடை வேனோ
- ஒண்மை அம்பலத் தொளிசெயும் சுடரே
- ஒற்றி ஓங்கிய உத்தமப் பொருளே.
- நையு மாறெனைக் காமமா திகள்தாம்
- நணுகி வஞ்சகம் நாட்டுகின் றதுநான்
- செய்யு மாறிதற் கறிந்திலன் எந்தாய்
- திகைக்கின் றேன் அருள் திறம்பெறு வேனே
- வையு மாறிலா வண்கையர் உளத்தின்
- மன்னி வாழ்கின்ற மாமணிக் குன்றே
- உய்யு மாறருள் அம்பலத் தமுதே
- ஒற்றி ஓங்கிய உத்தமப் பொருளே.