- பொது
- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- நன்றி ஒன்றிய நின்னடி யவர்க்கே
- நானும் இங்கொரு நாயடி யவன்காண்
- குன்றின் ஒன்றிய இடர்மிக உடையேன்
- குற்றம் நீக்கும்நல் குணமிலேன் எனினும்
- என்றின் ஒன்றிய சிவபரஞ் சுடரே
- இன்ப வாரியே என்னுயிர்த் துணையே
- ஒன்றின் ஒன்றிய உத்தமப் பொருளே
- உனைஅ லால்எனை உடையவர் எவரே.
- தீது செய்தனன் செய்கின்றேன் செய்வேன்
- தீய னேன்கொடுந் தீக்குண இயல்பே
- ஏது செய்தன னேனும்என் தன்னை
- ஏன்று கொள்வதெம் இறைவநின் இயல்பே
- ஈது செய்தனை என்னைவிட் டுலகில்
- இடர்கொண் டேங்கென இயம்பிடில் அடியேன்
- ஓது செய்வதொன் றென்னுயிர்த் துணையே
- உனைஅ லால்எனை உடையவர் எவரே.
- சென்ற நாளினும் செல்கின்ற நாளில்
- சிறிய னேன்மிகத் தியங்குறு கின்றேன்
- மன்ற நான்இவண் இவ்வகை ஆனால்
- வள்ள லேநினை வழுத்துமா றெதுவோ
- என்ற னால்இனி ஆவதொன் றிலைஉன்
- எண்ணம் எப்படி அப்படி இசைக
- உன்ற னால்களித் துவகைகொள் கின்றேன்
- உனைஅ லால்எனை உடையவர் எவரே.
- மையல் வாழ்க்கையில் நாள்தொறும் அடியேன்
- வருந்தி நெஞ்சகம் மாழ்குவ தெல்லாம்
- ஐய ஐயவோ கண்டிடா தவர்போல்
- அடம்பி டிப்பதுன் அருளினுக் கழகோ
- செய்ய மேல்ஒன்றும் அறிந்திலன் சிவனே
- தில்லை மன்றிடைத் தென்முக நோக்கி
- உய்ய வைத்ததாள் நம்பிநிற் கின்றேன்
- உனைஅ லால்எனை உடையவர் எவரே.
- மண்ண கச்சிறு வாழ்க்கையின் பொருட்டால்
- வருந்தி மற்றதன் வன்மைகள் எல்லாம்
- எண்ண எண்ணஎன் நெஞ்சகம் பதைப்புற்
- றேங்கி ஏங்கிநான் இளைப்புறு கின்றேன்
- அண்ணல் நின்திரு அருட்டுணை அடைந்தால்
- அமைந்து வாழ்குவன் அடைவகை அறியேன்
- உண்ண நல்அமு தனையஎம் பெருமான்
- உனைஅ லால்எனை உடையவர் எவரே.
- அன்னை அப்பனும் நீஎன மகிழ்ந்தே
- அகங்கு ளிர்ந்துநான் ஆதரித் திருந்தேன்
- என்னை இப்படி இடர்கொள விடுத்தால்
- என்செய் கேன் இதை யாரொடு புகல்கேன்
- பொன்னை ஒத்தநின் அடித்துணை மலரைப்
- போற்று வார்க்குநீ புரிகுவ திதுவோ
- உன்னை எப்படி ஆயினும் மறவேன்
- உனைஅ லால்எனை உடையவர் எவரே.
- நீலம் இட்டகண் மடவியர் மயக்கால்
- நெஞ்சம் ஓர்வழி நான்ஒரு வழியாய்
- ஞாலம் இட்ட இவ் வாழ்க்கையில் அடியேன்
- நடுங்கி உள்ளகம் நலியும்என் தன்மை
- ஆலம் இட்டருள் களத்தநீ அறிந்தும்
- அருள்அ ளித்திலை ஆகமற் றிதனை
- ஓலம் இட்டழு தரற்றிஎங் குரைப்பேன்
- உனைஅ லால்எனை உடையவர் எவரே.
- கொடிய பாவியேன் படும்பரி தாபம்
- குறித்துக் கண்டும்என் குறைஅகற் றாது
- நெடிய காலமும் தாழ்த்தனை நினது
- நெஞ்சும் வஞ்சகம் நேர்ந்ததுண் டேயோ
- அடியர் தந்துயர் கண்டிடில் தரியார்
- ஐயர் என்பர்என் அளவஃ திலையோ
- ஒடிய மாதுயர் நீக்கிடாய் என்னில்
- உனைஅ லால்எனை உடையவர் எவரே.
- என்என் றேழையேன் நாணம்விட் டுரைப்பேன்
- இறைவ நின்றனை இறைப்பொழு தேனும்
- உன்என் றால்என துரைமறுத் தெதிராய்
- உலக மாயையில் திலகமென் றுரைக்கும்
- மின்என் றால்இடை மடவியர் மயக்கில்
- வீழ்ந்தென் நெஞ்சகம் ஆழ்ந்துவிட் டதனால்
- உன்அன் பென்பதென் னிடத்திலை யேனும்
- உனைஅ லால்எனை உடையவர் எவரே.
- அடிய னேன்மிசை ஆண்டவ நினக்கோர்
- அன்பி ருந்ததென் றகங்கரித் திருந்தேன்
- கொடிய னேன்படும் இடர்முழு தறிந்தும்
- கூலி யாளனைப் போல்எனை நினைத்தே
- நெடிய இத்துணைப் போதும்ஓர் சிறிதும்
- நெஞ்சி ரங்கிலை சஞ்சலத் தறிவும்
- ஒடிய நின்றனன் என்செய்கேன் சிவனே
- உனைஅ லால்எனை உடையவர் எவரே.