- கோயில்
- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- திருவார் பொன்னம் பலநடுவே தெள்ளார் அமுதத் திரள்அனைய
- உருவார் அறிவா னந்தநடம் உடையார் அடியார்க் குவகைநிலை
- தருவார் அவர்தம் திருமுகத்தே ததும்பும் இளவெண் ணகைகண்டேன்
- இருவா தனைஅற் றந்தோநான் இன்னும் ஒருகால் காண்பேனோ.
- பொன்நா யகனும் புரந்தரனும் பூவாழ் பவனும் புகழ்ந்தேத்த
- மின்னார் பொன்னம் பலநடுவே விளங்கும் கருணை விழிவழங்கும்
- அன்னார் அறிவா னந்தநடம் ஆடும் கழல்கண் டகங்குளிர்ந்தேன்
- என்நா யகனார் அவர்கழலை இன்னும் ஒருகால் காண்பேனோ.
- தாயிற் பெரிய கருணையினார் தலைமா லையினார் தாழ்சடையார்
- வாயிற் கினிய புகழுடைய வள்ளல் அவர்தந் திருஅழகைக்
- கோயிற் கருகே சென்றுமனம் குளிரக் கண்டேன் பிரிவுற்றேன்
- ஈயில் சிறியேன் அவர் அழகை இன்னும் ஒருகால் காண்பேனோ.
- புன்கண் அகற்றும் மெய்யடியார் போற்றும் பொன்னம் பலநடுவே
- வன்கண் அறியார் திருநடஞ்செய் வரதர் அமுதத் திருமுகத்தை
- முன்கண் உலகில் சிறியேன்செய் முழுமா தவத்தால் கண்டேன்நான்
- என்கண் அனையார் அவர்முகத்தை இன்னும் ஒருகால் காண்பேனோ.
- அன்புற் றடியார் தொழுதேத்த அணியார் மணிப்பொன் அம்பலத்தே
- வன்புற் றழியாப் பெருங்கருணை மலையார் தலையார் மாலையினார்
- மன்புற் றரவார் கச்சிடையின் வயங்க நடஞ்செய் வதுகண்டேன்
- இன்புற் றடியேன் அவர்நடத்தை இன்னும் ஒருகால் காண்பேனோ.
- இம்மா நிலத்தில் சிவபதமீ தென்னும் பொன்னம் பலநடுவே
- அம்மால் அறியா அடிகள்அடி அசைய நடஞ்செய் வதுகண்டேன்
- எம்மால் அறியப் படுவதல என்என் றுரைப்பேன் ஏழையன்யான்
- எம்மான் அவர்தந் திருநடத்தை இன்னும் ஒருகால் காண்பேனோ.
- சிறியேன் தவமோ எனைஈன்றாள் செய்த தவமோ யான்அறியேன்
- மறியேர் கரத்தார் அம்பலத்தே வாழும் சிவனார் தமைக்கண்டேன்
- பிறியேன் எனினும் பிரிந்தேன்நான் பேயேன் அந்தப் பிரிவினைக்கீழ்
- எறியேன் அந்தோ அவர்தம்மை இன்னும் ஒருகால் காண்பேனோ.
- அருளே வடிவாய் அம்பலத்தே ஆடும் பெருமான் அடிகள்தமைத்
- தெருளே வடிவாம் அடியவர்போல் சிறியேன் கண்டேன் சீர்உற்றேன்
- மருளே வடிவேன் ஆதலினால் மறந்தே பிரிந்தே மதிகெட்டேன்
- இருளேர் மனத்தேன் அவர்தமைநான் இன்னும் ஒருகால் காண்பேனோ.
- அன்னோ திருஅம் பலத்தேஎம் ஐயர் உருக்கண் டேன்அதுதான்
- பொன்னோ பவளப் பொருப்பதுவோ புதுமா ணிக்க மணித்திரளோ
- மின்னோ விளக்கோ விரிசுடரோ மேலை ஒளியோ என் உரைப்பேன்
- என்னோ அவர்தந் திருஉருவை இன்னும் ஒருகால் காண்பேனோ.
- பொன்என் றுரைக்கும் அம்பலத்தே புனித னார்தம் அழகியலை
- உன்என் றுரைப்பேன் என்னேஎன் உள்ளம் சிறிதும் உணர்ந்ததிலை
- மின்என் றுரைக்கும் படிமூன்று விளக்கும் மழுங்கும் எனில்அடியேன்
- என்என் றுரைப்பேன் அவர்அழகை இன்னும் ஒருகால் காண்பேனோ.