- தலைவி இரங்கல்
- திருவொற்றியூர்
- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- நன்று புரிவார் திருவொற்றி நாதர் எனது நாயகனார்
- மன்றுள் அமர்வார் மால்விடைமேல் வருவார் அவரை மாலையிட்ட
- அன்று முதலாய் இன்றளவும் அந்தோ சற்றும் அணைந்தறியேன்
- குன்று நிகர்பூண் முலையாய்என் குறையை எவர்க்குக் கூறுவனே.
- தகைசேர் ஒற்றித் தலத்தமர்ந்தார் தரியார் புரங்கள் தழலாக்க
- நகைசேர்ந் தவரை மாலையிட்ட நாளே முதல்இந் நாள்அளவும்
- பகைசேர் மதன்பூச் சூடல்அன்றிப் பதப்பூச் சூடப் பார்த்தறியேன்
- குகைசேர் இருட்பூங் குழலாய்என் குறையை எவர்க்குக் கூறுவனே.
- தோடார் குழையார் ஒற்றியினார் தூயர்க் கலது சுகம்அருள
- நாடார் அவர்க்கு மாலையிட்ட நாளே முதல்இந் நாள்அளவும்
- சூடா மலர்போல் இருந்ததல்லால் சுகமோர் அணுவுந் துய்த்தறியேன்
- கோடா ஒல்குங் கொடியேஎன் குறையை எவர்க்குக் கூறுவனே.
- அண்டர் எவர்க்கும் அறிவொண்ணார் அணியார் ஒற்றி யார்நீல
- கண்டர் அவர்க்கு மாலையிட்ட கடனே அன்றி மற்றவரால்
- பண்டம் அறியேன் பலன்அறியேன் பரிவோ டணையப் பார்த்தறியேன்
- கொண்டன் மணக்குங் கோதாய்என் குறையை எவர்க்குக் கூறுவனே.
- பாடல் கமழும் பதம்உடையார் பணைசேர் ஒற்றிப் பதிஉடையார்
- வாடல் எனவே மாலையிட்ட மாண்பே அன்றி மற்றவரால்
- ஆடல் அளிசூழ் குழலாய்உன் ஆணை ஒன்றும் அறியனடி
- கூடல் பெறவே வருந்துகின்றேன் குறையை எவர்க்குக் கூறுவனே.
- துடிசேர் கரத்தார் ஒற்றியில்வாழ் சோதி வெண்ற் றழகர்அவர்
- கடிசேர்ந் தென்னை மாலையிட்ட கடனே அன்றி மற்றவரால்
- பிடிசேர் நடைநேர் பெண்களைப்போல் பின்னை யாதும் பெற்றறியேன்
- கொடிநேர் இடையாய் என்னடிஎன் குறையை எவர்க்குக் கூறுவனே.
- ஒற்றி நகர்வாழ் உத்தமனார் உயர்மால் விடையார் உடையார்தாம்
- பற்றி என்னை மாலையிட்ட பரிசே அன்றிப் பகைதெரிந்து
- வெற்றி மதனன் வீறடங்க மேவி அணைந்தார் அல்லரடி
- குற்றம் அணுவும் செய்தறியேன் குறையை எவர்க்குக் கூறுவனே.
- வானும் புவியும் புகழ்ஒற்றி வாணர் மலர்க்கை மழுவினொடு
- மானும் உடையார் என்றனக்கு மாலை யிட்ட தொன்றல்லால்
- நானும் அவருங் கூடியொரு நாளும் கலந்த தில்லையடி
- கோனுந் தியவேற் கண்ணாய்என் குறையை எவர்க்குக் கூறுவனே.
- தெறித்து மணிகள் அலைசிறக்கும் திருவாழ் ஒற்றித் தேவர்எனை
- வறித்திங் கெளியேன் வருந்தாமல் மாலை யிட்ட நாள்அலது
- மறித்தும் ஒருநாள் வந்தென்னை மருவி அணைய நானறியேன்
- குறித்திங் குழன்றேன் மாதேஎன் குறையை எவர்க்குக் கூறுவனே.
- மின்னோ டொக்கும் வேணியினார் விமலர் ஒற்றி வாணர்எனைத்
- தென்னோ டொக்க மாலையிட்டுச் சென்றார் பின்பு சேர்ந்தறியார்
- என்னோ டொத்த பெண்களெலாம் ஏசி நகைக்க இடருழந்தேன்
- கொன்னோ டொத்த கண்ணாய்என் குறையை எவர்க்குக் கூறுவனே.
- உடுத்தும் அதளார் ஒற்றியினார் உலகம் புகழும் உத்தமனார்
- தொடுத்திங் கெனக்கு மாலையிட்ட சுகமே அன்றி என்னுடனே
- படுத்தும் அறியார் எனக்குரிய பரிவிற் பொருள்ஓர் எள்ளளவும்
- கொடுத்தும் அறியார் மாதேஎன் குறையை எவர்க்குக் கூறுவனே.
- உழைஒன் றணிகைத் தலம்உடையார் ஒற்றி உடையார் என்றனக்கு
- மழைஒன் றலர்பூ மாலையிட்டார் மறித்தும் வந்தார் அல்லரடி
- பிழைஒன் றறியேன் பெண்களெலாம் பேசி நகைக்கப் பெற்றேன்காண்
- குழைஒன் றியகண் மாதேஎன் குறையை எவர்க்குக் கூறுவனே.
- ஏடார் பொழில்சூழ் ஒற்றியினார் என்கண் அனையார் என்தலைவர்
- பீடார் மாலை இட்டதன்றிப் பின்னோர் சுகமும் பெற்றறியேன்
- வாடாக் காதற் பெண்களெலாம் வலது பேச நின்றனடி
- கோடார் கொங்கை மாதேஎன் குறையை எவர்க்குக் கூறுவனே.
- கஞ்சன் அறியார் ஒற்றியினார் கண்மூன் றுடையார் கனவினிலும்
- வஞ்சம் அறியார் என்றனக்கு மாலைஇட்ட தொன்றல்லால்
- மஞ்சம் அதனில் என்னோடு மருவி இருக்க நான்அறியேன்
- கொஞ்சம் மதிநேர் நுதலாய்என் குறையை எவர்க்குக் கூறுவனே.
- ஆலம் இருந்த களத்தழகர் அணிசேர் ஒற்றி ஆலயத்தார்
- சால எனக்கு மாலையிட்ட தன்மை ஒன்றே அல்லாது
- கால நிரம்ப அவர்புயத்தைக் கட்டி அணைந்த தில்லையடி
- கோல மதிவாண் முகத்தாய்என் குறையை எவர்க்குக் கூறுவனே.
- நெய்தல் பணைசூழ் ஒற்றியினார் நிருத்தம் பயில்வார் மால்அயனும்
- எய்தற் கரியார் மாலையிட்டார் எனக்கென் றுரைக்கும் பெருமைஅல்லால்
- உய்தற் கடியேன் மனையின்கண் ஒருநா ளேனும் உற்றறியார்
- கொய்தற் கரிதாங் கொடியேஎன் குறையை எவர்க்குக் கூறுவனே.
- போர்க்கும் உரியார் மால்பிரமன் போகி முதலாம் புங்கவர்கள்
- யார்க்கும் அரியார் எனக்கெளியர் ஆகி என்னை மாலையிட்டார்
- ஈர்க்கும் புகுதா முலைமதத்தை இன்னுந் தவிர்த்தார் அல்லரடி
- கூர்க்கும் நெடுவேற் கண்ணாய்என் குறையை எவர்க்குக் கூறுவனே.
- இறையார் ஒற்றி யூரினிடை இருந்தார் இனியார் என்கணவர்
- மறையார் எனக்கு மாலையிட்டார் மருவார் என்னை வஞ்சனையோ
- பொறையார் இரக்கம் மிகவுடையார் பொய்ஒன் றுரையார் பொய்யலடி
- குறையா மதிவாண் முகத்தாய்என் குறையை எவர்க்குக் கூறுவனே.
- உடுப்பார் கரித்தோல் ஒற்றிஎனும் ஊரார் என்னை உடையவனார்
- மடுப்பார் இன்ப மாலையிட்டார் மருவார் எனது பிழைஉரைத்துக்
- கெடுப்பார் இல்லை என்சொலினும் கேளார் எனது கேள்வர்அவர்
- கொடுப்பார் என்றோ மாதேஎன் குறையை எவர்க்குக் கூறுவனே.
- எருதில் வருவார் ஒற்றியுளார் என்நா யகனார் எனக்கினியார்
- வருதி எனவே மாலையிட்டார் வந்தால் ஒன்றும் வாய்திறவார்
- கருதி அவர்தங் கட்டளையைக் கடந்து நடந்தேன் அல்லவடி
- குருகுண் கரத்தாய் என்னடிஎன் குறையை எவர்க்குக் கூறுவனே.
- மாவென் றுரித்தார் மாலையிட்ட மணாளர் என்றே வந்தடைந்தால்
- வாவென் றுரையார் போஎன்னார் மௌனஞ் சாதித் திருந்தனர்காண்
- ஆவென் றலறிக் கண்ர்விட் டழுதால் துயரம் ஆறுமடி
- கோவென் றிருவேல் கொண்டாய்என் குறையை எவர்க்குக் கூறுவனே.
- நாட்டும் புகழார் திருஒற்றி நகர்வாழ் சிவனார் நன்மையெலாம்
- காட்டும் படிக்கு மாலையிட்ட கணவர் எனஓர் காசளவில்
- கேட்டும் அறியேன் தந்தறியார் கேட்டால் என்ன விளையுமடி
- கோட்டு மணிப்பூண் முலையாய்என் குறையை எவர்க்குக் கூறுவனே.
- வெற்பை வளைத்தார் திருஒற்றி மேவி அமர்ந்தார் அவர்எனது
- கற்பை அழித்தார் மாலையிட்டுக் கணவர் ஆனார் என்பதல்லால்
- சிற்ப மணிமே டையில்என்னைச் சேர்ந்தார் என்ப தில்லையடி
- கொற்பை அரவின் இடையாய்என் குறையை எவர்க்குக் கூறுவனே.
- என்ன கொடுத்தும் கிடைப்பரியார் எழிலார் ஒற்றி நாதர்எனைச்
- சின்ன வயதில் மாலையிட்டுச் சென்றார் சென்ற திறன்அல்லால்
- இன்னும் மருவ வந்திலர்காண் யாதோ அவர்தம் எண்ணமது
- கொன்னுண் வடிவேற் கண்ணாய்என் குறையை எவர்க்குக் கூறுவனே.
- கரும்பின் இனியார் கண்ணுதலார் கடிசேர் ஒற்றிக் காவலனார்
- இரும்பின் மனத்தேன் தனைமாலை இட்டார் இட்ட அன்றலது
- திரும்பி ஒருகால் வந்தென்னைச் சேர்ந்து மகிழ்ந்த தில்லையடி
- குரும்பை அனைய முலையாய்என் குறையை எவர்க்குக் கூறுவனே.
- தீது தவிர்ப்பார் திருவொற்றித் தியாகர் அழியாத் திறத்தார்அவர்
- மாது மகிழ்தி எனஎன்னை மாலை யிட்டார் மாலையிட்ட
- போது கண்ட திருமுகத்தைப் போற்றி மறித்தும் கண்டறியேன்
- கோது கண்டேன் மாதேஎன் குறையை எவர்க்குக் கூறுவனே.
- வென்றிக் கொடிமேல் விடைஉயர்த்தார் மேலார் ஒற்றி யூரர்என்பால்
- சென்றிக் குளிர்பூ மாலையிட்டார் சேர்ந்தார் அல்லர் யான்அவரை
- அன்றிப் பிறரை நாடினனோ அம்மா ஒன்றும் அறியனடி
- குன்றிற் றுயர்கொண் டழும்எனது குறையை எவர்க்குக் கூறுவனே.
- தோளா மணிநேர் வடிவழகர் சோலை சூழ்ந்த ஒற்றியினார்
- மாளா நிலையர் என்றனக்கு மாலை இட்டார் மருவிலர்காண்
- கேளாய் மாதே என்னிடையே கெடுதி இருந்த தெனினும்அதைக்
- கோளார் உரைப்பார் என்னடிஎன் குறையை எவர்க்குக் கூறுவனே.
- வாடா திருந்தேன் மழைபொழியும் மலர்க்கா வனஞ்சூழ் ஒற்றியினார்
- ஏடார் அணிபூ மாலைஎனக் கிட்டார் அவர்க்கு மாலையிட்டேன்
- தேடா திருந்தேன் அல்லடியான் தேடி அருகிற் சேர்ந்தும்எனைக்
- கூடா திருந்தார் என்னடிஎன் குறையை எவர்க்குக் கூறுவனே.
- நலத்திற் சிறந்த ஒற்றிநகர் நண்ணும் எனது நாயகனார்
- வலத்திற் சிறந்தார் மாலையிட்டு மறித்தும் மருவார் வாராரேல்
- நிலத்திற் சிறந்த உறவினர்கள் நிந்தித் தையோ எனைத்தமது
- குலத்திற் சேரார் என்னடிஎன் குறையை எவர்க்குக் கூறுவனே.
- ஈர்ந்தேன் அளிசூழ் ஒற்றிஉளார் என்கண் மணியார் என்கணவர்
- வார்ந்தேன் சடையார் மாலையிட்டும் வாழா தலைந்து மனமெலிந்து
- சோர்ந்தேன் பதைத்துத் துயர்க்கடலைச் சூழ்ந்தேன் இன்னும் துடிக்கின்றேன்
- கூர்ந்தேன் குழலாய் என்னடிஎன் குறையை எவர்க்குக் கூறுவனே.